ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) நினைவாக.....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய ராஜினி திரணகம ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காக இறுதிவரை போராடியவர். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திப் போராடியவர். வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கக் கூடியதொரு சூழலில் போர்ச்சூழலில் மூழ்கிக் கிடந்த சொந்த மண்ணுக்குத் திரும்பியவர். போராட்டச் சூழலில் தமிழ் மக்கள்மேல் அனைத்துப் பிரிவினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கெதிராகக் குரல்கொடுத்தவர். அவற்றை 'முறிந்த பனை' என்னும் நூலில் பதிவு செய்தவர். அதன் காரணமாகவே சுட்டுக்கொல்லப்பட்டவர். அவரைக்கொன்றவர்கள் யார் என்பது பற்றிப் பல்வேறு ஊகங்கள் , குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், இவை யாவும் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல என்பதால் எம்மாலும் அவ்விதம் குற்றஞ்சாட்ட முடியவில்லை. இவரை யார் படுகொலை செய்திருந்தாலும், ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் அதுவொரு களங்கமாகத்தானிருக்கும். நிராயுதபாணியான பெண்ணொருவர், இரு குழந்தைகளின் தாய், சொந்த மண்ணில் மக்களுக்காக இறுதிவரை குரல் கொடுத்த மனித உரிமைப் போராளி இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒருபோதுமே நியாயப் படுத்த முடியாது. இதுபோல் பலர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; அல்லது காணாமல் போயிருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைவரும், அமைப்புகளும் இக்காலகட்டத்தில் தமது கடந்த கால வரலாற்றைப் பாரபட்சமின்றிச் சுயபரிசோதனை செய்வது அவசியம். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அதன் மூலமே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் நேர்மை மேலும் வலுப்படும். தவறுகளுக்காக, தம்மைத்தாமே மீளாய்வு செய்வதென்பது ஆரோக்கியமானதொரு செயற்பாடு. எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதொன்று.