வானம் பிரகாசமாக இருந்தது. அத்தனை வெயில். வெம்மை அதிகமாயிருந்ததாலோ என்னவோ ஒட்டுமொத்த சனமும் கிடைத்த நிழல்களில் பதுங்கிக் கொள்ள, அதையும் தாண்டி சிலர் வேகமாக பைக்குகளிலும், கார்களிலும் இடமும் வலமுமாக கடந்து போய்க்கொண்டிருந்தனர். கார்களில் சொல்வோர் பாடு பரவாயில்லை. ஏசி இருக்கும். பாவம், நடைராஜாக்கள் பாடி திண்டாட்டம்தான் என்று நினைத்துக்கொண்டே அன்னை பொறியியல் கல்லூரிக்கெதிரே இருந்த நிழற்குடையில் நின்றிருந்தார் வேதம்.
அவரைப் பற்றிய மேல்விவரங்கள் கொஞ்சம். அவர் ஒரு போலீஸ் அதிகாரி. வயது 42. உயரம் ஐந்தரை அடிக்கும் மேல். வாட்டசாட்டமான உடல்வாகு. கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர். அவர் அப்போது நின்றிருந்த இடத்துக்கு பக்கத்தில் தான் அவருக்கு வீடு. மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் ஆபீஸ் செல்வார். சாப்பிடும் நேரம் வரை, டிரைவர் ஜீப்பை பெட்ரோல் போல எடுத்துசெல்வார். சாப்பிட்டவுடன், வேதம் மெயின் ரோட்டிலுள்ள அந்த பேருந்து நிலைய நிழற்குடையில் காத்திருக்க, ஜீப் வந்ததும் ஏறிக்கொள்வார். இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படி அவர் அன்று காத்திருக்கையில் தான் அதை கவனித்தார்.
அவள் அழகாக இருந்தாள். உயரம் ஐந்தரை அடி. சுண்டினால் ரத்தம் வரும் நிறம். அவள் அந்தப் பொறியியல் கல்லூரி வாசலைத்தாண்டி வெளியே வருவதைப் பார்க்கையில் அவளுக்கு ஒரு பதினெட்டு வயதிருக்கலாமென்று தோன்றியது. அதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. அவள் கையில் இருந்தது ஒரு டிராஃப்டர். இது பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் இன்ஜினியரிங் டிராயிங் பாடத்துக்குப் பயன்படுத்துவது. பொதுவாக முலாமாண்டு மாணவர்கள் பதினெட்டு வயதானவர்களாகத்தான் இருப்பார்கள். கிட்டத்தட்ட அவரின் மகள் வயதுதான். ஆனால், இறுக்கமாய் கறுப்பு நிறத்தில் ஒரு டி & ஜி டிசர்ட், டெனிம் ப்ளூ நிறத்தில் அதைவிட இறுக்கமாய் ஒரு ஜீன்ஸ் பாண்ட் அவளின் அவயங்களை மிக மிக சத்தமாகக் கூவிக் காட்சிப்பொருளாக்கிக்கொண்டிருந்தன.
அந்த பஸ்ஸ்டாண்டில் அவரைப் போல் வெகு பலர் ஓரக்கண்களால் அவளையே நோட்டம் விடுவது தெரிந்தது. அதில் சிலர் அவளை விழுங்கிவிடுவது போல் பார்ப்பதையும் அவரால் கவனிக்கமுடிந்தது. இவர் கவனித்துக்கொண்டிருக்கையிலேயே சிலர் ரோட்டைக் கடந்து அவள் நின்ற பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்றுகொண்டனர். அவள் இது எதையும் கவனியாது தன்னுடைய மொபைலை நோண்டுவதும், அவ்வப்போது அதில் எதையோ படித்துவிட்டு சிரிப்பதுவுமாக இருந்தாள். வேதத்துக்கு நடப்பது எதுவும் சரியெனப் பட்டிருக்கவில்லை. அவர் ஆயாசம் கொண்டவராய் பக்கவாட்டில் திரும்ப அவர் கண்ணில் பட்டது அந்தக் காட்சி.
அந்த பஸ் ஸ்டாப்பின் அடுத்த முனையில் கால்களில் சப்பணிக்கால் போட்டு அமர்ந்திருந்த ஒருவன் அந்தப் பெண்ணையே வெறித்துக்கொண்டிருந்தான். வயது இருபத்தியிரண்டு இருக்கும். வெளுத்துப்போன சட்டை,அதில் ஆங்காங்கே நூல் வெளியே வந்திருந்தது, சில இடங்களில் பொத்தான்களே இல்லாமல் சேஃப்டி பின் போடப்பட்டிருந்ததை இங்கிருந்தே கவனிக்க முடிந்தது. புழுதிபட்ட தலைமுடி, சவரம் செய்யப்படாத முகம், ஒல்லியான உருவம், அடர் காப்பி நிறத்தில் ஒரு பாண்ட், அதுவும் கசங்கி சுருங்கி படுமோசமான நிலையில், காலில் செருப்பு கூட இருக்கவில்லை. அவன் கண்களைப் பார்க்கும் திசையை அவதானிக்கையில் அது அந்தப் பெண்ணின் கழுத்துக்குக் கீழே நிலைகுத்தியிருப்பதை அவரால் உணர முடிந்தது.
சற்று தொலைவில் ட்ராஃபிக் போல. கார்களும், சரக்கு லாரிகளும் விடாமல் ஹாரன் சத்தத்தை வைத்தே கூக்குரலிட்டுக்கொன்டிருந்தன. சிலர், கார் கண்ணாடி ஜன்னலைத் திறந்து எட்டிப்பார்த்து கத்தவும் செய்தனர். தவறாக எதையும் அனுமானித்துக்கொள்ளும் முன் ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துக்கொள்ளத்தோன்றியது. சற்றே அவர் பக்கவாட்டில் நடந்து அவனைக் கடந்து சிறிது தள்ளி நின்றுகொண்டு எதிரே பார்த்தார். அவள் இப்போதும் அவளின் மோபைலையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவர் திரும்பி அவனைப் பார்த்தார். அவன் பார்வை இப்போதும் அவள் மீதே. அதுவும் அவளின் கழுத்துக்கு கீழேயே. கொஞ்சம் விட்டாலும் ஓடிப்போய் அவள் கை பிடித்து இழுத்துவிடுவான் போலிருந்தது. அவருக்கு கோபம் வந்துவிட்டது. அவனை நோக்கி திரும்பி நடந்து அவன் முன்னே நின்றார். அவன் பார்வை இப்போது அவளிடமிருந்து திரும்பி அவரின் போலிஸ் பூட் ஷூவில் நிலைகுத்தி நின்றது. அவனை மிரட்டும் தோணியில் அவர் லேசான அடித்தொண்டையால் உரும, அவன் திரும்பி மேலே தலை திருப்பி அவரைப் பார்த்தான். அவன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தது அவர் கோபத்தை மேலும் கிளறி விட்டது.
'டேய், யார்ரா நீ?' அவனை அவர் அதட்ட, சில நொடிகள் அமைதி. பின்,
'ஸ்ஸ்.. ஸார், யாருங்க? என்னையா?' அவன் முகத்தில் இப்போதுதான் ஏதோ ஒன்றை புதியதாக கேள்விப்பட்டதான உணர்வு தெரிந்தது.
'என்னையே திருப்பி கேக்கறியா? நீ யார்ரா? இங்க என்ன பண்ற' இந்த முறை சற்று முரடாகவே கேட்டார் அவர்.
அவன் கேள்விகள் தெரிந்த காரத்தில் சற்று பயந்திருக்கவேண்டும் அல்லது வினோதமாக உணர்ந்திருக்கவேண்டும். எழுந்துகொண்டான். எழுகையில் அவன் பலவீனமாக இருப்பதாகத் தோன்றியது. அவன் உயரம் அப்போதுதான் தெளிவாகத் தெரிந்தது. ஆறு அடி இருக்கலாம். ஒல்லியாக இருந்தான். அவன் கைகள் நிதானமின்றி காற்றில் பலவீனமாக அலைவதாகத் தோன்றியது.
'ஸ்ஸ்..ஸார், நா.. நான் .. இங்க.. சும்ம்ம்மா...' என்றபடியே அவன் இழுக்க, அவர் கோபம் எல்லையை மீறியிருக்கவேண்டும். நாக்கைத் துறுத்தி பற்களுக்கிடையில் கடித்தவாறே சற்று சுளித்தபடி அவர் வலதுகையை தூக்கி அவனை அறைய ஓங்க, அவன் அப்போதும் ஏதொரு உணர்ச்சியும் அற்று நின்றிருந்தான். அவர் கையைத் தடுக்கவோ, அல்லது அடி மேலே படாமல் தவிர்க்கும் தன்னிச்சை முறுவலிப்போ கூட இல்லாமல் இருந்தது அவருக்கு வினோதமாய்ப் பட்டது.
ஓங்கிய கை அந்தரத்திலேயே நிற்க, அவர் புருவங்களைச் சுறுக்கி அவனை சந்தேகமாய் பார்க்க, அவன் குருடோ என்று முதன் முறையாகத் தோன்றியது. மெதுவாக உயர்த்திய கையை கீழிறக்கிக் கொண்டு அவனையே பார்த்தார் அவர். அவன் பார்வைக் கோணத்துக்கு நேர் எதிரே அவர் நின்றிருந்தபோதும், அவரின் கண்ணையோ, முகத்தையோ பார்க்கும் தோரணையில் இல்லாமல், எதையோ பார்த்த வகைக்கு அவன் நின்றிருந்தான்.
'ஒனக்கு கண்ணு தெரியாதா?'.
'காது தெரியும் சார்'.
'என்ன?'.
'எல்லாருக்கும் கண்ணுல குடுக்குற பார்வைய ஆண்டவன் எனக்கு காதுல குடுத்துட்டாரு சார். பெறவி குருடன் சார் நானு. சார், உங்க சூவுல லேஸு இல்லதானே சார். காலு வழுக்கும் சார் வெய்யில்ல. அதனால சீக்கிரம் லேஸூ போட்டுடுங்க சார்'. அவன் தன்னைப் பற்றி தானே அப்படிச் சொன்னது வித்தியாசமாயும், அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியாததாயும் இருந்தது. அத்தனை நேரம் அவன் தன் கண்களுக்கு பொறுக்கியாய் தெரிந்ததும், இப்போது சட்டென ஒரே நொடியில் அவன் அப்பாவியாய்த் தெரிவதும் அவரின் மேலோட்டப் பார்வைகளின் குறிப்புக்களை அவருக்கு எழுதித் தந்திருந்தன.
மேலும், அவர் காலில் இருந்த ஷூவில் லேஸூ இல்லை தான். இரண்டு நாட்களாகவே இல்லை. எங்காவது பாட்டா ஷூகடை இருந்தால் வாங்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் வேலை பலுவில் மறந்து போவார். லேஸூ இல்லாமல் நடந்து இந்த இரண்டு நாட்கள் பழகியும் விட்டது தான். லேஸூ இல்லாதது தெரியக்கூடாது என்றுதான் பாண்டால் மூடி கவர் செய்திருந்தார். பிறவிக்குருடன். ஷூ என்ன நிறம், எப்படி இருக்குமென்று கூடத்தெரியாது. அப்படியிருக்கையில் எப்படிக் கண்டுபிடித்தான். அந்த பேரிரைச்சலிலும் லேஸூ இல்லாத ஷூவை அதன் சப்தங்களை வைத்தே கண்டுகொண்டது ஆச்சர்யத்தை அளித்தது.
'நீ பிறவியிலேயே குருடு தானே. என் கால் ஷூ லேஸ் இல்லன்னு எப்படி கண்டுபுடிச்ச?'.
'சார், உங்களுக்கு கண்ணு இருக்கு. அதனால காதுக்கு கேக்குற சத்தங்கள நீங்கலாம் அதிகம் கவனிக்க மாட்டீங்க. என் பாட்டி விறகு வெட்றப்போ பாத்துக்கிட்டு நிக்கிற எனக்கு கால்ல சிலாம்பு குத்தக்கூடாதுன்னு பக்கத்து வீட்டு மிலிட்டரி மாமா குடுத்த ஷூ ரெண்ட என் காலுல மாட்டிவிட்டுச்சு. அதுல லேஸூ இருக்காதுசார். அத போட்டுக்கிட்டு இழுத்து இழுத்து நடப்பேன் நான். அந்த ஷூவையோ, இல்ல இப்போ நான் போட்டுக்கிட்டு இருக்குற டிரஸ்ஸையோ நான் என் காதால்தான் பாத்திருக்கேன். எனக்கு தெரியும் சார் அந்த சத்தம்' என்றான் அவன். அவன் பார்வை அவரின் கண்களை முட்டாமல், அவரின் பேச்சில் சத்தங்கள் பிறக்கும் திசையை குத்துமதிப்பாகத் தேடி நொடிக்கு நொடி அலைந்துகொண்டிருந்தது.
'ஹ்ம்ம் சரி.. உன் பேரன்ன?'
'பாண்டி சார்'.
'இங்க என்ன பண்றபா?'.
'தெரியல சார். எங்க போறதுன்னு தெரியல'. அவன் தலைகுனிந்துகொண்டான். வாழ்க்கையில் ஒரு மனிதன் செல்ல வேண்டிய திசை தெரியாமல் அல்லாடுகையில் அவன் இயலாமை அந்தத் தலைகுனிவில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
'ஏன், உனக்கு வீடு இல்லை?. அப்பா அம்மா?'.
'இல்ல சார், நான் பொறக்குறதுக்கு முன்னாடியே அப்பா செத்துட்டார். அம்மா என்னை பெத்துபோட்டுட்டு போய் சேர்ந்துட்டா சார்'.
'ஓஹ்... அப்ப சொந்த ஊரு? இவ்ளோ நாள் யாரோட இருந்த? உனக்கு வீடு எங்க?'.
'சொந்த ஊரு மாயாரம் பக்கம் பேரளம் சார். பாட்டி தான் வளத்துச்சு. வெறகு வெட்டும் சார். நான் தூக்கிட்டு வருவேன். வித்தா சில நேரம் சோறு பொங்குற அளவுக்கு காசு கிடைக்கும், சில நேரம் கடலமுட்டாய்க்குதான் மிஞ்சும். விக்கிலனா பட்டினிதான் சார். பட்டினி கெடந்தாலும் ஒறவுன்னு சொல்லிக்க அது இருந்துச்சி. போன வாரம் அதும் செத்துபோச்சி சார். ஒத்த ஆளால வாடகை குடுக்க முடியல. வீடுன்னு ஒண்ணும் இல்ல. குருட்டுப்பயன்னு யாரும் வேலையும் குடுக்கல சார். அக்கம்பக்கம் என்னை பிச்சக்காரனாக்க பாத்தானுவ. அங்க இருக்க புடிக்கல. இருக்குற பணத்தை வச்சு மெட்ராஸ் போய் பொழைக்கலாம்னு வந்தேன் சார். நான் குருடுன்னு யாரும் வேலை தரல சார். பிச்சையடுத்து பொழைக்கிறதுக்கு போய் சேர்ந்துடலாம்னு இங்கயே உக்காந்துட்டேன் சார்.'
கேட்டுக்கொண்டிருந்த வேதத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. குருடன். அதுவும் பிறவியிலிருந்தே. இறைவனாய்ப் பார்த்து தரும் வாழ்க்கை. அதை அப்படியே ஏற்கத்தான் வேண்டும். அதற்கு மறுப்பு சொல்ல யாராலும் முடியாது. ஆனால், அந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டுமென்று அவன் தான் முடிவுசெய்யவேண்டும். சொல்வது எளிது. செய்வது கடினம். அவர் தன் கண் பார்க்க பல பேர் பலவற்றை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் செய்ததில்லை. இவன் சொல்லவேயில்லை. ஆனால் சாகவும் துணிந்துவிட்டான்.
அடுத்த வேளை உணவுக்குக் கூட வக்கில்லாமல் , ஆனால் நெஞ்சு நிறைய வைராக்கியத்துடன், வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் துணியும் ஒரு உலகம். அவர் அதுவரை பார்த்ததேயில்லை. சிக்னல்களிலும், கோயில்களிலும் குருட்டு மனிதர்கள் எத்தனையோ பேருக்கு ஐம்பது காசு, ஒரு ரூபாய் நாணயங்களை பிச்சை போடும்போது வராத கழிவிரக்கம், சிந்தனை, அனுசரனை, மரியாதை இப்போது இவனிடம் வந்தது அவருக்கு. அவன் ஒரு பரிசுத்தத்தை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு நிற்பது போன்றதான உணர்வு அவனைப் பார்க்கையில்.
'எப்போ கடைசியா சாப்பிட்ட?'.
'நாலஞ்சு நாளாவுது சார். அதும் கூட பாதி பச்சத்தண்ணி தான் சார்'.
'ஹ்ம்ம்... ' என்றுவிட்டு பாக்கேட்டில் கைவிட்டு ஒரு சின்ன ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை எடுத்து நீட்டினார் 'இந்தா இத சாப்பிடு'.
'சும்மா ஏதும் வேணாம்'. அவன் தலையை இடமும் வலமுமாக ஆட்டியபடி ஆணித்தரமாய்ச் சொன்னான். அவன் மறுப்பில், செயற்கை தெரியவில்லை. அதற்கான தேவையும் அவனிடம் இருக்கவில்லை என்பதாகத் தோன்றியது.
ஸ்திரமாக அவன் வேண்டாம் என்றது பாதையில் போக எத்தனித்து, கண்ணாடிக் கதவில் முட்டியது போன்றதான உணர்வைத்தந்தது. அவன் அத்தனை ஸ்திரமாக இருந்தது, அவனைப் பற்றிய அவரின் கணிப்பைத் தவறாக்கியிருந்தது. ஒன்றுமேயில்லாத இவனிடமும் இத்தனை வைராக்கியமா என்று நினைத்துக்கொண்டார். ஏன் கூடாது எனவும் தோன்றியது.
'சரிப்பா, இந்தா இத புடி..' என்றுவிட்டு கையிலிருந்த ஃபைலை அவனிடம் தந்துவிட்டு 'இத தூக்கிக்கிட்டு என் கூட வா. இந்த வேலைக்கு சம்பளமா இத வச்சிக்க' என்றார். ஆமோதிப்பாய் சரி என்றுவிட்டு இரண்டு கைகளையும் நீட்டினான் அவன். இடது கையில் ஃபைலையும் வலது கையில் அந்தச் சாக்லேட்டையும் வைத்தார் வேதம். ஃபைலை கக்கத்தில் வைத்து இடுக்கிக்கொண்டு, வலதுகையிலிருந்த சாக்லேட்டை வேகமாக உரித்து உண்ணத்துவங்கினான் அவன். அவன் உணடு முடிக்கக் காத்திருந்தார் வேதம்.
'என்னோட வரியா, வேலை தரேன், மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் தரேன், பண்றியா?'. அவன் சாக்லேட் கவரைக் கசக்கி உள்ளங்கையில் வைத்து அழுத்திக்கொண்டு கக்கத்தில் வைத்திருந்த ஃபைலை கைகளில் இறக்கிக் கொள்கையில் கேட்டார் அவர்.
'ஐயா....' என்று இழுத்தபடியே கண்ணீர் மல்க அவன் கீழே அவர் காலடியில் குனிந்து வலது கையால் துழாவ, அவசரமாய் தூக்கி நிறுத்தினார் வேதம்.
அவருக்குப் பின்னால், ஒரு போலீஸ் ஜீப் கிறீச்சிட்டு வந்து நின்றது.
'வா என்னோட' என்றுவிட்டு அவன் கையைப் பிடித்து ஜீப்புக்கு அழைத்துச்சென்று பின்னால் கான்ஸ்டபுள் கனகு என்கிற கனகராஜ் அருகில் அமரவைத்துவிட்டு, முன்னால் ஏறிக்கொண்டார்.
'செல்வம், ஜீப்ப வேளச்சேரி ஆபிஸுக்கு விடு'. டிரைவர் ஜீப்பை விரட்டத்துவங்க ஜீப் அவரின் ஆபிஸை நோக்கி விரையத் துவங்கியது.
வழியெங்கும் அவருக்கு சிந்தனையாகவே இருந்தது. கடவுள் கொடுத்த வாழ்க்கை. குருட்டு வாழ்க்கை. அது பாதி தூரத்திலேயே அஸ்தமனத்தில். ஆனால், நெஞ்சில் அவனுக்கு இருக்கும் வைராக்கியம் இருக்கிறதே. கொலைப் பசிக்குக் கூட விட்டுக்கொடுக்க முடியாத வைராக்கியம். தன் கண்ணில் இவன் இன்றைக்குப் பட்டிருக்கவில்லையெனில் ரோட்டோரமாய் அனாதைப் பிணம் என்று தனக்கு வாக்கிடாக்கியில் மெசேஜாகியிருப்பான் இவன். ஆனால் அதைப் பற்றி இவன் துளியும் கவலைப்படவில்லை. சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் உழைப்பின் ஊதியமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன். இரண்டு கை, இரண்டு கால், கண், காது, மூக்கு என இருந்தும் ஊனமில்லாத உடல்கள், ரயில் நிலையங்களிலும், பேருந்துகளிலும் பிக்பாக்கேட் என ஊரை அடித்து உலையில் போடுவது இருக்க, இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஊனமுற்ற யாருக்கும் மனம் ஊனமாயிருப்பதில்லை. ஆனால், உடலில் ஊனமில்லாத அனேகம் பேருக்கு மனம் ஊனமுற்றுத்தானிருக்கிறது. விந்தை உலகம்.
ஜீப் கிறீச்சிட்டு ஒரு வீட்டின் வாசலில் நின்றது. அது ஒரு இரண்டடுக்கு வீடு. வாசலில் பெரிய போர்டு. வேதம் சிஸ்டம்ஸ். வேதம் இறங்கிக்கொண்டு பின்னால் சென்று கான்ஸ்டபிளை விட்டு அவனை இறங்கச் சொல்லி இருவரையும் வீட்டிலுள்ளே அழைத்துப்போனார்.
ஒற்றை அறைதான் இருந்தது. வெளியே பார்த்த வீட்டின் ஒரு பகுதியை நிரந்தரமாகத் தடுத்து ஒரு கடைக்கு வாடகைக்கு விடும் நோக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. அது இப்போது வேதத்தின் ஆதாரங்களை அலசிஆராயும் இடமாக இருக்கிறது. அறையில் ஒரு ஓரத்தில் ஒரு பெரிய மேஜையில், கேஸட் போட்டு கேட்கும் ஆடியோ செட் ஆடையில்லாமல் எலும்புக்கூடாய் கிடந்தது. அதனருகே ஒரு கம்ப்யூட்டரும் பக்கத்தில் அனேகம் பத்திரிக்கைகளும் சில தஸ்தாவேஜ்களும் கிடக்க, அவைகளைத்தாண்டி ஒரு பெரிய ஸ்டீல் பெட்டி இழுத்தால் வெளிவரக்கூடிய பல்வேறு பெட்டிகளைக் கொண்டிருந்தது. சில பெட்டிகள் திறந்திருக்க, உள்ளே வரிசையாய் அடுக்கப்பட்ட கேஸட்களும் அவற்றின் மேல் சில பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. Local, Vizuppuram, Thindivanam இன்னும் என்னென்னவோ. அந்த மேஜைக்கும் முன்னே நீளவாக்கில் ஒரு சோபாவும், பக்கவாட்டில் இரண்டும் சேர்களும் கிடக்க, மேஜையை ஒட்டினாற்போல் ஒரு கதவு மூடப்பட்டிருந்தது. பாத்ரூமாக இருந்திருக்கலாம்.
'உக்காரு கனகு. உக்காருப்பா பாண்டி' என்று சொல்லிவிட்டு அந்த நீண்ட சோபாவில் அமர்ந்துகொண்டார். பாண்டியை ஒரு சேரில் உட்கார வைத்துவிட்டு தானும் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார் கனகு என்கிற கனகராஜ்.
'பாரு பாண்டி, என்கிட்ட வர கேஸ்கள்ல சில ஆதாரங்கள் கிடைக்கும். அதுல பலது டேப். அத ஓடவிட்டு அதுல என்னென்ன குரல் பதிவாகியிருக்கோ அதையெல்லாம் நீதான் பிரிச்சி சொல்லனும். சில நேரங்கள்ல சில குத்தவாளிங்களோட குரல் அந்த டேப்புல இருக்கான்னு நீ கண்டுபுடிச்சி சொல்லனும். அதான் உன் வேலை. அதுக்கு தான் உனக்கு இங்கே சம்பளம். ரொம்ப கவனமா செய்யனும். நீ சொல்றத வச்சித்தான் ஒரு நிரபராதி குற்றவாளி ஆகுறதும், ஒரு குற்றவாளி நிரபராதி ஆகுறதும். மாசம் சம்பளம் ஆயிரம் ரூபாய். வீட்டு மொட்டை மாடில கொட்டா போட்டுத்தாரேன். நீ அங்க தங்கிக்கோ'
'சரி சார்' என்றபடியே ஆமோதிப்பாய் தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டான் பாண்டி.
கூடவே அமர்ந்திருந்த கனகு என்கிற கனகராஜ் ஏதோ சொல்ல எத்தனித்தவராய்த் தொடங்கி, பாண்டியை நினைத்து சற்று தயங்கியவராய் வேதத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் தன்னிடம் ஏதோ சொல்ல நினைப்பதை அவரின் பார்வையிலேயெ புரிந்துகொண்டார் அவர்.
'சரி, கனகு ..அந்த தாம்பரம் கொடவுன் திருட்டு கேஸ் என்னாச்சு?' என்றபடியே அந்த அறையை விட்டு வெளியே வந்தார். அதையே எதிர்பார்த்தவர்போல் உடனே கனகு எழுந்துகொண்டு வேதத்தை தொடர்ந்து அவரும் வெளியே வந்தார்.
'சார், என்ன சார், அவன் ப்ளைன்ட் சார், அவனப்போயி இங்க...' என்றுவிட்டு இழுத்தார் கனகு.
'கனகு, ரெண்டு நாளா என் ஷூல லேஸூ இல்ல. உங்களுக்குத் தெரியுமா?' கேட்டார் வேதம்.
'அப்படியா, தெரியாதே சார்'.
'ஆனா, இவன் கண்டுபுடிச்சிட்டான். அதுவும் ஜி.எஸ்.டி ரோட்ல இருந்த ட்ராஃபிக் சத்தத்துல. பொதுவா மாற்றுத்திறன் இருக்கறவங்க எல்லாருக்கும் அந்த ஊனத்த பாலன்ஸ் பண்ண வேற ஏதாவது திறமை இருக்கும் கனகு. இவனுக்கு அசாத்தியமா கேக்குற சக்தி இருக்கு. சத்தங்கள மொழிபெயர்க்கத்தெரிஞ்சிருக்கு. நமக்கெல்லாம் கண்ணு இருக்குறதுனாலயே காது சொல்றத நாம நம்ப மாட்டேங்குறோம். அதுல சில நேரம் தவறுகள் நடக்கலாம்தான். இந்த ரெண்டு நாளா நீங்க என் கால் ஷூ லேஸ கண்டுபிடிக்காம விட்டா மாதிரி. பாண்டி மாதிரி ஒரு புலன் இல்லாதவன் இன்னும் அதிகமா உண்ணிப்பா கவனிப்பான். அதனால அவன் நமக்கு நிறைய பயன்படுவான்னு தோணுது. அத ஏன் நமக்கு சாதகமா நம்ம இன்வெஸ்டிகேஷன்ஸ்க்கு யூஸ் பண்ணக் கூடாது? அவனுக்கும் அவனோட கவுரவத்தை விட்டுக்கொடுக்காம வாழ ஒரு வாழ்க்கை கிடைக்கும். நான் இன்னிக்கு இவன பாக்கலன்னா இவன் செத்தே போயிருக்கலாம். இந்த வேலை அவனுக்கு ஒரு மறுவாழ்வ நிச்சயமா தரும் கனகு'. சொல்லிக்கொண்டே இருந்தவரை வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார் கனகு. அங்கே ஒரு மறுவாழ்வுக்கான விதை ஆழமாக விதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
- (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)