யன்னல் காட்சிகள் ரசிப்பதற்கு மிகவும் அழகானவை என்பதை எங்க புதிய வீட்டு யன்னலை முதல் நாள் திறந்து பார்த்த போதுதான் எனக்குத் தெரிந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இயற்கையை தினமும் ரசிக்க வேண்டும் என்றால், யன்னல்கள் காட்சிகள் அற்புதமானவை. வெளி உலகைப் பார்ப்பதற்கு எப்பொழுதும், முக்கியமாக எங்களைப் போன்ற பெண்களுக்கு உதவியாக இந்த யன்னல்கள்தான் இருந்திருக்கின்றன.
பள்ளிப்படிப்பு காரணமாக பள்ளிக்குக் கிட்டவாக புதிதாக ஒரு காணி வாங்கி ஆசையாசையாய் நாங்கள் ஒரு கல்வீடு கட்டிக் குடிபுகுந்தோம். எனது அறை யன்னலுக்குள்ளால் அப்படித்தான் பள்ளிப்பருவத்தில் அதிகாலை நேரத்தில் செவ்வானத்தையும்,
ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து ஒன்றாகக் கலக்கும் கருமேகக் கூட்டங்களையும், அணிலாடும் முன்றல்களையும் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன்.
அடுத்த வீட்டு மாமரமும் அதில் குலைகுலையாய் காய்த்துத் தொங்கும் மாங்காய்களும், அவற்றை ருசி பார்க்கக் கொப்புகள் தாவும் அணில்களும், குருவிகளும் அவ்வப்போது யன்னலுக்கால் கண்ணில் பட்டுத் தெறிப்பதுண்டு. இந்தக் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம், ‘மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை’ என்ற ஒளவையாரின் பாடல் அடிக்கடி ஞாபகம் வரும். சுதந்திரமாய்க் கீச்சுக்குரலிசைக்கும் பறவைகளின் இருப்பிடமாய் அந்த மாமரம் இருந்தது.
இதைவிட பக்கத்து வீட்டுக் காணியில் மாமரத்திற்குச் சற்றுத் தள்ளி உள்ள குடிசையில் ஒரு குடும்பம் குடியிருப்பதையும் இந்த யன்னலுக்குள்ளால்தான் முதன் முதலில் பார்த்தேன். இயற்கையை ரசித்த எனக்கு அங்கு தினமும் பார்க்கும் காட்சிகள் வித்தியாசமாக இருந்தன. நடுத்தர வயதுடைய கணவன், மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள், அவர்களின் உருவத்தை வைத்து வயது எட்டு, பத்து, பன்னிரண்டாய் இருக்கலாம் என்று மனசு கணக்குப் போட்டது.
அவர்கள் அனேகமாக மாமரநிழலில் இருந்துதான் படிப்பார்கள், தங்களுக்குள் கதை சொல்லி விளையாடுவார்கள். பெரியக்கா, சின்னக்கா என்று சின்னப்பெண் இவர்களை அழைப்பதைக் கேட்டிருக்கின்றேன். கணவன் குடிகாரனாக இருக்கலாம், காலையில் எழுந்து கணவனும், மனைவியும் வேலைக்குப் போக, பிள்ளைகள் பள்ளிக்கு நடந்து போவார்கள். மாலை நேரங்களில் அவன் வேலையால் வந்ததும் பெரிதாகச் சத்தம் போடுவதும் பின் அடங்கிப் போவதுமாய் இருக்கும். அந்தச் சத்தம்தான் சில நேரங்களில் என்னை யன்னலுக்கால் எட்டிப் பார்க்க வைப்பதுண்டு.
ஒருநாள் யன்னலுக்கால் நான் அடுத்த வீட்டைப் பார்ப்பதைக் கண்ட அம்மாவிடம் நான் ஏச்சு வாங்க வேண்டி வந்தது.
‘அவன் குடிகாரன், கண்டான் என்றால் கூடாத பாஷையில திட்டுவான். உனக்கென்ன அங்க விடுப்பு பாக்கக்கிடக்கு’ என்று கண்டிப்பாகச் சொன்ன அம்மா யன்னல் திரையை இழுத்து மூடிவிட்டுச் சென்றாள்.
அவர்கள் படித்த பாடசாலையில்தான் நான் உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். சைக்கிள் இருந்ததால் அதில்தான் நான் அருகே இருந்த பாடசாலைக்குச் செல்வேன். பாடசாலையால் திரும்பி வரும்போது சினேகிதிகளுடன் கதைத்துக் கொண்டு வருவதால் நானும் சயிக்கிளைத் தள்ளிக் கொண்டு அவர்களுடன் நடந்து வருவேன்.
சில சமயங்களில் இவர்களும் எங்களுடனேயே நடந்து வருவார்கள். பெரியக்கா முகத்தில் ஒருநாளும் நான் சிரிப்பைக் கண்டதில்லை. சின்னக்கா கலகலப்பாகச் சிரித்துப் பேசுவாள்.
‘நீங்க கேம்ஸ் ஒன்றும் விளையாடுறதில்லையா?’ என்று கேட்டேன்.
‘ஆசைதானக்கா, ஆனால் லேட்டாய் போனால் மாமி ஏசுவா’ என்றாள் சின்னக்கா.
‘மாமியா, யாரைச் சொல்றாய்?’ என்றேன்.
‘எங்க வீட்ல இருக்கிற மாமியைத்தான் சொல்றன்’
‘நீங்க மாமியோடவா இருக்கிறீங்க, அவங்க உங்க அப்பா, அம்மா இல்லையா?’
‘இல்லயே, அவங்க எங்கட மாமா, மாமிதான்.’
‘மாமா என்றால்.. அம்மாவோட தம்பியா?’
‘ஓமக்க, அவர் அம்மாவோட தம்பிதான், எங்களைப் படிப்பிக்கிறன் என்று சொல்லி இங்கை கூட்டிக் கொண்டு வந்து வெச்சிருக்கிறார், ஆனால் எனக்கு இங்கை இருக்கப் பிடிக்கவே இல்லை.’ என்றாள் சின்னக்கா.
‘ஏன்?’ நான் கேட்ட கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல் சட்டென்று கதையை மாற்றினாள்.
‘உங்களுக்கு மாங்காய் சாப்பிடப் பிடிக்குமாக்கா?’ என்றாள்.
‘சாப்பிடுவேன், அனால் புளிக்குமே’
‘இருங்க நான் கொண்டு வர்றேன், உப்பும் மிளகும் சேர்த்து அரைத்து, தொட்டுச் சாப்பிட்டால் புளிக்காது” என்று சொன்னவள் படலையைத் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடினாள், அவளைத் தொடர்ந்து சின்னவளும் உள்ளே ஓடினாள். பெரியக்கா மட்டும் என்னோட அவங்க வீட்டு வாசல்ல நின்றாள். நான் சயிக்களைப் பிடித்தபடி நின்றேன். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவளுக்குக் கதை கொடுத்துப் பார்த்தேன்.
‘என்ன சுஜா, பேசாமல் நிக்கிறீங்க?’ என்றேன்.
‘ஒன்றுமில்லை..!’ என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
‘கதைக்க மாட்டீங்களா?’ என்று கேட்ட என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
‘எனக்குக் கதைக்க விருப்பமில்லையக்கா’ என்று சலித்துக் கொண்டாள்.
‘என்னோடயா?’ என்றேன்.
‘இல்லையக்கா, யார்கூடவும்’ என்றாள்.
‘அதுதான் ஏன் என்று கேட்கிறேன்?’
‘நான் என்ன சொன்னாலும் யாரும் கேட்கப் போறதில்லை, எங்க அம்மாவே என்னைத் திட்றா, ஏசுறா, மனசில இருக்கிறதை நான் யாரிட்ட போய்ச்சொல்றது..!’ என்றவள் விம்மினாள்.
‘பரவாயில்லை, நான் கேட்கிறேன் சொல்லு’ என்று அவளது கையைப்பற்றி ஆசுவாசப் படுத்தினேன்.
‘சாப்பாட்டுகடை குசுனிலைதான் மாமி வேலைசெய்யிறா, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாமி வேலைக்கு போயிடுவா, மாமா மதியம் சாப்பிட வருவார், நான்தான் அவருக்கு சாப்பாடு போட்டுக் கொடுப்பன், ஒரு நாள் குடிச்சிட்டு வந்தார், சாப்பிடேக்கை என்னைய ஒரு மாதிரிப் பார்த்தார், அப்புறம் சாப்பிட்ட கோப்பையை நான் எடுக்கப்போக என்னை இழுத்துக் கட்டிப்புடிச்சு.. கொஞ்சப் பார்த்தார்’ அவள் மேலே சொல்ல முடியாமல் விம்மினாள்.
அவள் சொன்னதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகவும், நம்பமுடியாமலும் இருந்தது. ஆனாலும் மனசில இருக்கிறதைக் கொட்டட்டும் என்று நான் பேசாமல் இருந்தேன்.
‘நான் அவரைப் பிடிச்சுத் தள்ளீட்டு வெளியே ஓடி வந்திட்டன். அதுக்கு அப்புறம் அவர் தனிய இருந்தால் குடிசைக்க போகவே பயமாயிருக்கக்கா’
‘இதைப்பற்றி நீ மாமீட்ட சொன்னியா?’
‘மாமீட்டயா..? எப்படியக்கா சொல்றது, மாமா சரியில்லை என்று சொன்னா நம்புவாங்களா? என்னைக் கட்டிவெச்சு அடிக்கமாட்டாங்க..?'
அவள் சொல்வதும் சரிதான், எப்படியும் ஒருவரும் நம்பமாட்டார்கள். அவளைத்தான் ஏசுவார்கள்.
'போனகிழமை நான் படிக்கணும் என்று சொல்லிச் சுஜியைத்தான் சாப்பாடு போட்டுக் குடுக்கச் சொன்னேன். அவள்தான் சாப்பாடு போட்டுக் கொடுத்தாள்.’
இந்த நேரம் பார்த்து சுஜி மாங்காயும், உப்புத்தூளும் கொண்டு அங்கே வந்தாள். பெரியக்கா சொன்னது அவளுக்கும் கேட்டிருக்க வேண்டும்.
‘நான் இனிமேல் சாப்பாடு போடப் போகமாட்டன், மாமா குடிச்சிட்டு வந்திருக்கிறார் போல, வெறியில என்னைப் பிடிச்சிழுத்து ‘என்ர மருமகளே’ எண்டு சொல்லிக் கொஞ்சினாரக்கா, அம்மாடி வாய் நாத்தம் தாங்கமுடியலை, எனக்கு வாந்தி வர்றமாதிரி இருந்திச்சு.’ என்றாள்.
சுஜி சொன்னதைக் கேட்டதும் ஒரு கணம் ஆடிப்போனேன். வேலியே பயிரை மேயுமா? இப்பதான் பெரியக்கா முறையிட்டாள், அதற்குள் சின்னக்காவுமா? சுஜி அந்த விடயத்தைப் பெரிதாக எடுத்ததாகத் தெரியவில்லை.
அவருடைய தப்பான தொடுகையை அவளால் புரிந்து கொள்ள முடியாத வயதாயிருக்கலாம், மாமன் பாசத்தோடு அணைப்பதாக நினைத்திருக்கலாம், இத்தனைக்கும் மாமனுடைய வாய் நாற்றத்தைத்தான் அவள் கவனித்திருக்கிறாள்.
பெரியக்காவின் மௌனத்தின் காரணம் என்ன வென்று எனக்குச் சட்டென்று புரிஞ்சு போச்சு. எல்லாமே எல்லை மீறிப் போவதைப் பெரியக்கா உணர்ந்திருக்க வேண்டும். அவள் கேட்டது போல, இதை யாரிட்ட போய்ச்சொல்ல?
‘சுஜா, உங்க ஊருக்குப் போகேக்க பயப்படாமல் அம்மாட்டை இதைச் சொல்லு’ என்றேன்.
‘மாமாவை குறை சொன்னால் அம்மா தோலை உரிச்சுப் போடுவா’ என்றாள்.
‘உண்மைதான் யாருமே நம்ப மாட்டார்கள். அந்தத் துணிவுதான் இப்படியானவர்களைத் தொடர்ந்தும் தப்புச் செய்ய வைக்கின்றது. நான்கூட முதல்ல நம்பலை, சுஜியும் சொன்னதற்கு அப்புறம்தான் நம்பினேன்.’
நான் அவளுக்கு ஏதாவது வழி சொல்வேன் என்று சுஜா எதிர்பார்த்து நிற்பது புரிந்தது.
‘சுஜா, உனக்கு இதெல்லாம் புரியக்கூடிய வயசு, ஆனால் சுஜியைப்பற்றி யோசித்துப் பார்த்தியா, ஏதாவது தப்பாய் நடந்தால் உன்னோட தங்கச்சியின்ர வாழ்க்கையே போச்சு, புரியுதா?’
சுஜா யோசித்தபடியே நின்று என்னைப் பார்த்தாள்.
‘என்னை என்ன செய்யச் சொல்றீங்கக்கா?’
‘பயப்படாமல் அம்மாகிட்ட சொல்லு, முதல்ல கத்திச் சத்தம் போட்டாலும் அம்மா புரிசுஞ்சுக்குவா, வேறவழியில்லை’ என்றேன்.
‘பயமாயிருக்கக்கா, இப்படி எல்லாம் நடந்தது என்று சொன்னா அம்மா நம்புவாவா?’
‘ஊருக்குப் போகும்வரையும் சமாளித்துக் கொள், எதையுமே காட்டிக் கொள்ளாதை. பயப்படாமல் அம்மாட்ட சொல்லு, நீங்க இரண்டு பேரும் சொன்னா அவா நம்புவா’ என்று சொல்லிவிட்டு நான் புறப்பட்டேன்.
அவர்கள் சொன்னதெல்லாம மனசை அரித்துக் கொண்டே இருந்தது. விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகி இருந்தது. அந்த விடுமுறைக்குத் தாயிடம் சென்றவர்கள் ஏனோ திரும்பி வரவில்லை. என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.
ஒருவேளை அவர்களுடைய படிப்பை நான் குழப்பிவிட்டேனோ என்று மனச்சாட்சி எனக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும் எல்லாம் நன்மைக்கே என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.