அம்மா பரலோக மாதாக் கோயிலுக்குப் பின்னேரம் ஆறுமணியளவில் போயிற்று வந்து எங்கள் வீட்டின் படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தாள். நான் அப்போது தான் பின்னேரக் கடனை கடற்கரையில் கழித்து விட்டு கடலிலேயே கழுவி விட்டு வீட்டிற்கு வந்து படிப்பதற்கு ஆயத்தப்படுத்தினேன். அம்மாவை உற்றுப் பார்த்தேன். கண்கள் அழுது வீங்கியிருந்தது. நேற்று முன் தினம் தான் நாங்கள் புதிதாக சிறகு வலை பின்னி இன்று மதியம்தான் பரவைக் கடலில் பாய்ந்து போட்டு வந்த அப்பா களைத்ததுப் போய் விறாந்தையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவருடைய மூச்சொலி காற்றில் கலந்து எங்கும் பரவியது. தூங்கிக் கொண்டிருந்தாலும் அவருடைய உடல் போர் வீரர்கள் போல் கம்பீரமாக இருந்தது.
அம்மாவின் முகம் எப்போதும் என் மனதில் ஓரத்தில் தெளிவாகத் தெரியும். கறுத்த தலைமுடியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளை முடி படர்ந்திருக்கும். இரண்டு காதின் ஓரமாகவும் சில முடிகள் கீழ் நோக்கிச் சுருண்டும் நெளிந்தும் கிடக்கும்.
மளையாளப் படமான செம்மீனில் வரும் செம்பன்குஞ்சுவின் மனைவி சக்கி போலவே தோற்றமும், உடையும் அணிந்து வீட்டில் இருப்பார். எங்க ஊரில் அப்படி யாரையும் நான் கண்டதில்லை. ஆனால் வெளியில் செல்லும் போது வழமையான சாறியும், சட்டையுடனுமே செல்வார். அம்மா என்னைப் பார்த்து அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
“மோன எறும்பு போல சுறு சுறுப்பாக இருக்க வேணும். வாழ்க்கை குறுகிய காலம்தான் . பிறருக்கு உதவி செய்ய விட்டாலும் தீங்கு செய்யாமல் கடவுளின் பிள்ளையாக வாழந்தாலே போதும். எனக்கு பசி வந்தால் தலையைச் சுற்றிக் கொண்டிருக்கும் கண் மங்கிக் கொண்டு வரும் அப்படி இருக்கும் பொழுது இந்த உலகமே இருண்டது போல உணர்வு இருக்கும் மோனை”என்று சொல்வார் என்னுடைய அம்மா. இப்போ எனக்கும் அந்த பசியில் அதே நிலமை வந்து விட்டது போல் உணர்ந்தேன். நேற்றுக் குடித்த புளி இலைக்கஞ்சி வயிற்றின் மேற்பரப்பில் எழுந்து என்னை படாத பாடு படுத்திக் கொண்டிருந்தது. இன்று இரவும் வீட்டில் சமைத்த மாதிரி எந்த மணத்தையும் காணவில்லை. பட்டினிதான் எங்க வீட்டில் என்று உறுதியாகி விட்டது.
பழைய சிறகுவலை பழுதாகியாதலே ஒரு கிழமைக்கு முன்னர் புதிய வலையும், நூலும், கயிறும் யாழ்ப்பாணத்திலுள்ள கடை ஒன்றில் வாங்கினோம். ஒரு கிழமை பிடித்தது அவற்றை ஒழுங்கு படுத்த.பின்னிய வலை நேற்று கடலில்பாயப்பட்டது. இன்னும் வலையினதும், நூலினதும்,கயிற்றினதும் வாசனை வீட்டைச்சுற்றி நிறைந்து கிடந்தது. இந்தப் பொருள்கள் வாங்குவதற்கு அம்மாவும்,அப்பாவும் பட்ட கஷ்டம் நிறையவே . முதலில் உறவினர்கள் கடன் உதவி செய்வார்கள் என்று எதிர் பார்த்திருந்தோம் கடசி நேரத்தில் அவர்கள் இல்லையென சொல்லி விட்டார்கள். அதன் பின்னர் தான் அக்காவின்ர தோடும் சங்கிலியும், அம்மாவின்ர தோடும் அடைவு வைத்துதான் இவற்றை வாங்கினோம்.
பசி கிடந்ததால் வயிற்றில் புண் வந்தது போன்ற ஒரு உள் உணர்வு என்னுள் எழுந்தது. கடற்பாசி உடலில் படர்ந்தது போல ஒரு வகையான அரிப்பும் பிசுபிசுப்பும் உடல் முழுவதும் விரவி நெளிவது போல் உணர்ந்தேன்.மறுகனமே அது என் மனம் வருந்தியதால் ஏற்பட்ட ஒரு பிரமை என்பதை உணர்ந்தேன்.
என்னுடைய அப்பாவுக்கு நான் பள்ளிக்கூடம் போவதில் பெரிதாக விரும்பம் இருக்கவில்லை என்று எனக்கு தெரியும். அதை அப்பாவின் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மூலம் நான் கண்டு கொண்டேன்.சிறு வயதில் இருந்து கடல் தொழிலுக்கு சென்று வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிலேயே பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைந்தவர்களை எங்கள் ஊரில், உறவில் பார்த்து இருக்கிறோம். அதனால் தன்னோடு வந்து தொழிலை பழகிக்கொள்ளவே அவருக்கு விருப்பமாக இருந்தது. ஆனால் அம்மா விடாப்பிடியாக என்னை படிப்பிக்க வேண்டும் என்று நின்றாள். அதனால் அப்பா தன்னுடைய விருப்பத்தில் இருந்து பின் வாங்கினார். பொதுவாக அவர் அப்படித்தான். அம்மாவை மீறி எதுவும் செய்வதில்லை. அம்மா அப்பா மீது கொண்ட பாசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. அவர் மீது காட்டுகின்ற அன்பையும் ஆதரவையும் என் கண்ணால் பார்க்கும் போதே பல தடவைகள் என் கண்கள் கலங்கிப் போனது.
அப்பா எங்களை வளர்ப்பதற்கு பெரும் கஷ்டப்படுகிறார் என்று எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.அவர் எங்களைக் கஷ்டப்பட்டு வளர்க்கின்றவர் என்று ஒரு நாளும் தன் வாயால் எங்களுக்கு அப்பா எங்களைப் பார்த்து சொல்லிக் கொள்ள மாட்டார். அதே நேரத்தில் தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்து எல்லோரையும் காப்பாற்றி வருகிறார் என்றும் ஒரு நாளும் வெளிக்காட்டவும் மாட்டார்
நாளைக் காலை தொழிலுக்குப் போய் வீடு திரும்பும் வரை தேத்தண்ணீரைக் கூட வைத்துக் குடிக்க வழியற்ற நிலைதான் எங்களுடைய குடும்ப நிலை.ஆனால் அம்மாவோ எங்களைப் பிடித்தாட்டுகிற கிரகமெல்லாம் நாளை அப்பா பிடித்து வருகிற மீன் சாதிகளோடு தொலைந்து போய் விடும் என்று அம்மா நினைத்துக் கொண்டே இருந்தாள்.
”பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே” என்ற செபத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். மாதா மீது அளவற்ற பற்று கொண்டவர்களாக எங்கள் வீட்டில் எல்லோரும் இருப்பார்கள். அம்மா அப்படி அழுது மன்றாடியதால்தான் பல தடவை மாதாவின் அருள் கிடைத்துப் பல ஆயிரம் ரூபாவிற்கு அப்பா இறால் பிடித்து விற்றவர் என்று அம்மா அடிக்கடி சொல்வது வழக்கம். அதே போல் நாளைக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவள் இருந்து மன்றாடிக் கொண்டிருக்கிறாள்.
அம்மாவின் வேண்டுதல் எல்லாம் பெரிதாகவே இருக்கும். ஆனால் கடவுளுக்கு கொடுப்பது மட்டுமே சிறிதாகவே இருக்கும். செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு வந்து பத்து மெழுகுவர்த்தி கொழுத்துவேன் அல்லது காசு உண்டியலில் காணிக்கை செலுத்த வருவேன். இதையும் தாண்டி கொஞ்சம் வேண்டுதல் பெரிதாக இருந்தால் அது இந்த முறை மடு அன்னைக்கு நான் வருவேன் என்பதாகவே இருக்கும். அம்மா இப்படியெல்லாம் சொல்வதும் அவற்றை வறுமையின் நிமித்தம் செய்யாமல் விடுவதும் வழக்கம்தான். ஆனால் எனக்கோ மாதா பழிவாங்கி விடுவாவோ என்று மனதிற்குள் ஒரு அச்சம் அவ்வப்போது தோன்றி மறையும் போது உடல் நடுங்கி பின் தானாக தணிந்து போகும். நான் சிறுவனாக இருந்த போது முத்துராசா பெரியப்பாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.
ஒரு நாள் பெரியப்பா பெரியம்மாவோடு வாய்த் தகராறு செய்து விட்டு வீட்டிலிருந்து கள்ளுத் தவறனைக்கு மதியம் போலப் போனவர் இரவு ஒன்பது மணிவரை குடி குடி என்டு குடித்திருக்கிறார். காலையிருந்து ஒன்னும் சாப்பிடாமல் இருந்த பெரியப்பா கள்ளுக்கடைக்குள் வழமையாக விற்கிற மரவள்ளிக் கிழங்கையும், செத்த மிளகாய்ச் சம்பலையும் நன்றாக வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்.கள்ளுத் தவறனை பூட்டிய பிறகு அவர் கடற்கரையால் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து கொண்டிருக்கும் போது காற்றும்,கடல் அலையும் உரத்திருந்தது. மெல்ல மெல்ல நடந்து வரும் போது பெண்களை இழிவாகவும்,கெட்ட வார்த்தைகளாலும் வசை பாடிக் கொண்டு குறுக்கு வழியாக அவருடைய வீட்டிற்கு வருவதற்காகக் கோயில் வளவுக்குள் வந்த போது யாரோ அவரை கடுமையாக முகத்திலும், உடம்பிலும் தாக்கியதால் சத்தி எடுத்தபடியே நிலத்தில் வீழ்ந்து விட்டார். அன்றிரவே “பெண்ணை இழிவாகவும்,கெட்ட வார்த்தையாலும் பேசியதால் வானத்திற்கும் பூமிக்கும் அண்மித்த பகுதியில் அந்தரத்தில் நின்று ஊருக்குக் காவலாக இருக்கும் மாதாதான் அவரை அடித்ததாக ஒரு கதை பரவத் தொடங்கியது. அந்தச் சப்பவத்தின் பின்னர் அவர் மூன்று நாளாக வீட்டை விட்டுவெளியில் வராமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இந்தச் சம்பவத்திற்கு பிறகு அவர் அவருடைய மனைவியை மட்டுமில்லை எந்தப் பெண்ணையும் இழிவாகக் கதைப்பதை நிறுத்தி விட்டார்.அன்றோடு குடிப்பதில்லை என்றும் முடிவெடுத்து விட்டார்.
நாட்காலியிருந்து கொண்டே அண்ணாந்து இடது பக்கமாகச் சுவரில் ஆணியிலிருந்து தொங்க விடப்பட்ட சிலுவையில் கண்கள் ஒரு கனம் நிலைத்து நின்றது.சிலுவை சுமந்து,சிலுவையில் அறையுண்டு,சிலுவையிலேயே மரணித்துப் போனாய். எல்லாச் சுமைகளையும் எங்களுக்காக ஏற்றுக் கொண்டாய். சிலுவையின் சுமை தோள்களைத் தாக்கியதில் நீர் மூன்று முறை விழுந்து எழுந்தாய் .ஆயினும் கல்வாரி வரை உன் பயணம் தொடர்ந்தது .திடீரென ஒரு நினைவு வந்தது. அம்மாவுக்கு ஏதாவது நடந்து பொட்டெனப் பூமியை விட்டு மறைந்து போனாள்..? எங்கள் குடும்பத்தின் நிலை என்னாவது? அப்பாவுக்கு ஒண்டு நடந்து விட்டால்..? நினைக்கவே பயமாக இருந்தது.
ஒரு வகையான மனச் சோர்வு என்னுள்ளே இறங்கி தாக்கியது. படித்துக் கொண்டிருந்த பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது.உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து படுப்பதற்காக பாயை விரித்தேன்.அப்படியே விழுந்து விட்டேன் தூங்கும் போது இரவு பதினோரு மணியைக் காட்டியது சுவரில் மாட்டியிருந்த கடிகாரம்.
விழிக்கும் போது அதி காலை ஆறு மணியாகிய இருந்ததால் கண்ணை கசக்கி கொண்டு அப்படியே எழுந்து படிப்பதற்காக உட்கார்ந்தேன்.மனம் என்றுமில்லாதவாறு அமைதியாகவும் உற்சாகமாகவும் இருந்தது.ஆனால் நேற்றுக் காலை துவர் வைத்து பாய்ந்த சிறகுவலை மனதில் வந்து அரித்துக் கொண்டே இருந்தது.வலைக்குள் மீன்சாதி ஏதாவது கிடைத்தால்தான் இன்றைய தினம் சந்தோஷமாக இருக்கும்.இல்லை என்றால் வழமையான சோகமான நாட்களைப் போல் நகரப்போகுதோ என்ற அச்சத்தால் மனதில் ஒரு இனம்புரியாத படபடப்பு தோற்றிக் கொண்டது.
நான் வழமையாகப் படிப்பதற்கு அதிகாலையில் விழித்துக் கொள்வேன். அதிகாலை வேளையில் தான் எனக்குப் படிப்பதற்கு அமைதியாகவும், வசதியாகவும் இருக்கும்.எனக்கு விஞ்ஞான பாடம் அவ்வளவாக ஓடாது.அந்தப் பாடத்தை மட்டும் நன்றாக சத்தம் போட்டு படிப்பேன்.சமய பாடத்தில் அதிக மதிப்பெண்களை எடுப்பேன்.வகுப்பில் சராசரிக்கும் கொஞ்சம் மேலாகவே என்னுடைய படிப்பு இருக்கும்.என்னுடைய தங்கச்சியை விட நான் நன்றாக படிப்பதால் வீட்டில் எனக்கு கூடுதல் கவனிப்பும் இருக்கும்.தங்கச்சி அவற்றை பெரிது படுத்துவதும் இல்லை. அவ்வப் போது ஏதேனும் சந்தர்ப்பத்தில் பகிடியாக சொல்வாள் அவ்வளவுதான்.
படிக்கும் அறையிலிருந்து கொண்டு ஜன்னல்கள் வழியாக வெளியே பார்த்தால் எங்கள் வீட்டின் பின்புறம் அப்படியே தெரியும். பின் பக்கமாக கழிப்பறையோ, கிணறோ கிடையாது. பொதுக் கழிப்பிடம், பொதுக் கிணறுகள் என்றே எங்களுடைய வீட்டாரின் வாழ்க்கை இருந்தது.
எங்கள் வீட்டைச் சுற்றி கிடுகு வேலிகளாலேயே அடைத்து இருக்கும். வீட்டின் பின் புறத்தில் நடக்கின்ற அத்தனை விடயங்களையும் ஜன்னல்கள் வழியாகப் பார்கலாம். பக்கத்து வீட்டுக் காரரின் எல்லை வேலியிலிருந்து ஜன்னல் கம்பியில் கயிறு எப்பொழுதும் கட்டப் பட்டிருக்கும். இந்த கொடியில் தான் எங்கள் வீட்டாரின் கையால் துவைக்கும் உடைகள் காயப் போடப்படும். நேற்றுப் பிற்பகல் தோய்த்துப் போட்ட அக்காவின் உடைகள் இன்னும் காய்ந்து கொண்டிருந்தன.
அப்பா காலையில் தொழிலுக்குப் போய் வந்த பின் மரக்கோல், பறி,அத்தாங்கு, கடிப்பு எல்லாவற்றையும் இந்த கொடிக்கு கீழேயே வைப்பார். கடிப்பை மட்டும் காயப்போடுவார். காயப் போடப்பட்ட கடிப்பு வலை சில சமயங்களில் ஒழுங்காகத் துப்பரவு செய்யப்படவில்லை என்றால் கடிப்பு வலைக்குள் காணப்படும் சாதளைகள்,தேரை மீன்களை .காகங்கள் போட்டி போட்டுக்கொண்டு கொத்தி எடுத்து சாப்பிட்டு விட்டு கா கா என்று கத்திகொண்டே இருக்கும். சில வேளைகளில் இவை எல்லாம் எனக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும். ஒரு வகையில் படிப்பதற்கு இவை இடையூறை விளைவிப்பதாக உணரும் போது அவற்றை சூ சூ என்று கலைத்தால் அவை எங்கட தங்கச்சியயைப் போல் அனைத்துமே காது கேட்காதது போல நின்று சாப்பிட்டுக்கொண்டே நிற்கும். ஒருக்க இரண்டு தடவைகள் நான் கத்திப்போட்டு அவற்றை கையை விட்டு விடுவேன்.
அப்பாவின் கால் சத்தம் கேட்டது. அப்பா இவ்வளவு நேரத்தோடு வருவது வழக்கமில்லை. கடிப்பை அப்படியே வேலியோடு சாத்தி வைத்தார். வழமையாகக் காயப் போடுவார் ஆனால் இன்று அப்படிச் செய்யவில்லை. கடிப்பில் ஈரமில்லை.. எல்லாம் வழமைக்கு மாறாகவே இருந்தது. ஒரு வித அச்சம் மனதில் பரவியது.
விறாந்தையிலிருந்து அப்பா பதற்றமாக கதைத்துக் கொண்டிருப்பது என் காதில் அரைகுறையாக விழுந்தது. என்ன நடந்திருக்கும்? அறிய ஆர்வம் மேல் எழுந்தது.வெளியே விறாந்தைக்கு வந்தேன்.அக்கா ,தங்கச்சி,அம்மா,அப்பா எல்லோரும் கண் கலங்கியபடி அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள்.
“அம்மா எந்நன நடந்தது..?”
“நேற்று பரவைக் கடலில பாஞ்ச புது வலையை யாரோ இரவோடு இரவாக களவெடுத்துக் கொண்டு போயீற்றாங்கலாம்” அம்மா அழுது கொண்டே சொன்னார். எனக்கு கண்ணீரோடு கவலை தொடங்கியது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.