பேரின்பத்தார் என்ற பேரின்பநாயகத்திற்கு தற்போது அந்த பொதுத்தொண்டின் மீது வெறுப்பு வந்துவிட்டது. அவர் சில பொதுப்பணிகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டர். ஆனால், குறிப்பிட்ட அந்தத் தொண்டின் மீதுதான் அவருக்கு மனக்குறை வந்துவிட்டது. அக்குறை வயிற்றில் அல்சர் வருமளவுக்கு மன அழுத்தம் கொடுத்துவிட்டது.
இரவில் தூக்கமும் அல்சரினால் அடிக்கடி கலைந்துவிடும். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மும்மொழியிலும் எழுதவும் பேசவும் மொழிபெயர்க்கவும் நல்ல ஆற்றல் உள்ளவர்.
ஊரில் வசதிபடைத்தவர்கள் இறந்துவிட்டால், பத்திரிகை, வானொலிக்கு மரண அறிவித்தல் எழுதிக்கொடுப்பது முதல், அந்தியேட்டி வரும் வேளையில் கல்வெட்டு எழுதிக்கொடுப்பதும் அவரது வேதனம் ஏதும் இல்லாத தொண்டு.
எண்பதுக்குப்பின்னர் அவரது ஊரைச்சேர்ந்தவர்கள், கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து சென்று வதிவிடம் பெற்று - எவரேனும் அங்கே இறந்துவிட்டால், பேரின்பத்தாரைத்தான் தொடர்புகொள்வார்கள்.
தேமதுரத் தமிழோசை அங்கெல்லாம் பரவினாலும், இந்த கல்வெட்டு கலாசாரத்தையும் தம்மோடு எடுத்துச்சென்ற ஈழத்து தமிழர்களுக்கு எவ்வாறு கல்வெட்டு எழுதுவது என்பதை அங்கே யாரும் பயிற்றுவிக்கவில்லையோ..? என்று தனது மனைவியிடம் அடிக்கடி சொல்லி வருந்துபவர்.
கடல் கடந்து சென்ற பலரது மரணச்சடங்குகளை ஊரிலிருந்து ஸ்கைப்பிலும், தபாலில் வந்த இறுவட்டிலிருந்தும் பார்த்திருப்பவர்.
“ அய்யா, இன்றைக்கு இரவைக்கு இலங்கை நேரத்திற்கு ஒரு மரணச்சடங்கை வந்து நீங்கள் பார்க்கவேண்டும் “ என்று கனடாவில் உறவினரை பறிகொடுத்துவிட்டு அழுது அரற்றிக்கொண்டிருக்கும் ஊரவர் எவரேனும் வீடு தேடி வந்து அழைத்தால் தட்டிக்கழிக்காமல் போய் பார்த்து, அந்த உறவுகளின் துயரத்தில் பங்கேற்று, கோப்பியோ, தேநீரோ அருந்திவிட்டுத்தான் வருவார்.
அவருக்கு உந்த கண்டறியாத தீட்டு - துடக்கு என்று எதுவும் இல்லை. அவர் ஒரு காலத்தில் சிவப்புச்சட்டை அணிந்து மேதின ஊர்வலம்போன இடது சாரி கட்சி ஒன்றின் ஆதரவாளராகவும் இருந்தவர்.
அது சர்வதேச ரீதியில் பிளவுற்று, இலங்கையில் பல கூறுகளாக பிரிந்ததும், ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி, இறுதியில் தம்பிமார் துப்பாக்கியும் சயனைற்றும் கையில் எடுத்ததும் ‘ எந்த இழவும் வேண்டாம் ‘ என்று செஞ்சட்டை அரசியலில் இருந்து ஒதுங்கியவர்.
இன்றைய இளவட்டங்கள் அவரை வாசிகசாலையடியில் கண்டால், சங்கானை சாதிக்கலவரம் முதல், ஆலயப் பிரவேசப்போராட்டாம் உள்ளடங்கலாக இடது சாரிகளில் சண் அணி, கார்த்திகேசன் அணி, மாஸ்கோவில் மழை பெய்தால் இலங்கையில் குடை பிடித்த விக்கிரமசிங்கா அணி, அதிலிருந்து சிறிது காலம் பிரிந்த பீட்டர் கெனமன் அணி என்று பல கதைகளை சொல்லியளப்பார்.
அவர் வீட்டில் முன்னர் சேகரித்துவைத்திருந்த இடதுசாரிப்புத்தகங்களையும் பாரிய தென்மராட்சி இடப்பெயர்வின்போது இழந்துவிட்டார்.
முன்னாள் அரசு ஊழியரான பேரின்பத்தாருக்கிருந்த வெளித்தொடர்புகளினால், கடந்த சில வருடங்களாக திருமண தரகர் வேலையும் மேலதிக வேதனம் அற்ற தொழிலாகிவிட்டது. இந்தத் தொண்டினால்தான் அவருக்கு மனக்கசப்புடன் அல்சரும் வந்தது. சாவீட்டுக்காரர்களுக்கு மரண அறிவித்தலும் கல்வெட்டும் எழுதிக்கொடுத்ததிலிருந்த மன நிறைவு, இந்த கலியாண புரோக்கர் வேலையில் அவருக்கு கிட்டவில்லை.
தொடக்கத்தில் அவர் பேசிக்கொடுத்த திருமணங்கள் சிறப்பாக நடந்திருப்பதுடன், தம்பதிகள் மனமொத்து வாழ்ந்து பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கண்டிருக்கின்றனர்.
அவர்களில் ஒரு சிலர் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று அங்கேயே நிரந்தர வதிவிடமும், குடியுரிமையும், பின்னாளில் இலங்கையில் குடிவரவுச்சட்டங்களில் தோன்றிய மாற்றங்களையடுத்து, இரட்டைக்குடியுரிமையும் பெற்றுவிட்டனர். தாயகம் வரும் சமயத்தில், பேரின்பத்தாருக்கு புதிய வெளிநாட்டு சேர்ட்டுக்கள், ரீ சேர்ட்டுக்கள், சீஸ், சொக்கலேட், சூப் பெக்கட் முதலான பரிசுப்பொருட்களும் கொடுத்துவிட்டு, செல்ஃபி போட்டோவும் எடுத்துச்சென்று தங்கள் முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் பதிவேற்றி பரவசமடைந்துகொள்பவர்களும் இருக்கிறார்கள்.
அதற்கெல்லாம் அடிப்படைக்காரணம், பேரின்பத்தார், தான் பேசிச்செய்துவைத்த எந்தவொரு திருமணத்திற்கும் புரோக்கர் ஃபீஸ் வாங்காததுதான்.
அவரது மனைவி, அவரது தொண்டுழியத்திற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் கேட்குமாறு வற்புறுத்தினாலும் மறுத்துவிடுவார்.
“ உமக்கென்ன விசரா…? கலியணம் செய்து வைக்கிறது ஒரு புண்ணியம். ஒரு குமர்ப்பிள்ளையை கரை சேர்ப்பதற்கு உதவுவது ஒரு கோயிலில் கும்பாபிஷேகம் செய்து வைப்பதில் கிடைக்கும் புண்ணியத்திற்கு சமமானது. உமக்குத் தெரியுமே இஸ்லாம் சமயத்திலும் ஒரு விஷயம் சொல்லியிருக்கு…! மக்காவுக்கு புனித யாத்திரை சென்று புண்ணியம் தேடுவதை விட, ஒரு ஏழைக்குமர்ப்பிள்ளையை கரைசேர்ப்பதற்கு உதவி செய்வது பெரிய புண்ணியமாம். “
“ உதெல்லாம் யார் உங்களுக்கு சொல்லித்தந்தது….? “ மனைவி பாக்கிய லெட்சுமி கேட்டதற்கு,
“ அதுக்குத்தான் புத்தகம் பேப்பர் படிக்கவேண்டுமென்றது. நீர் எங்கே படிக்கிறீர்… எத்தனை மணிக்கு ரீ.வி. யில் எந்த நாடகம் போகுது…? எந்த மாமி எந்த மருமகளுக்கு கொடுமை செய்யிறாள்..? உந்தக்கதையில யாருக்கு இந்தப்பிள்ளை பிறந்திருக்கும்..? முதலான சர்வதேசப்பிரச்சினைகளைத்தானே தினமும் யோசிச்சுக்கொண்டிருக்கிறீர். “ என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு, வீட்டின் பின்புறம் வளர்ந்திருக்கும் மரக்கறி செடிகளை பராமரிக்கப்போய்விடுவார்.
“ உந்த மனுஷனுக்கு பிழைக்கத் தெரியாது, இலட்சம் இலட்சமாக சீதனம் வாங்கி, வீடு வளவு, நகை என்று பேரம் பேசி இலட்சக்கணக்கில் செலவழித்து மண்டபம் பிடித்து கலியாணங்களை நடத்தும் உந்த சனத்திடமிருந்து புரோக்கர் ஃபீஸாக கொஞ்சம் வாங்கினால் என்னவாம்…. “ மனைவி பாக்கியலெட்சுமி புறு புறுத்துக்கொள்வாள். அந்தக்குரல் கூர்மையான அவரது காதுகளில் விழும்.
ஆனால்,பேரின்பத்தார் அதனை காதில் உள்வாங்கி சேமித்து வைக்கமாட்டார்.
தன்னை அவள் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் காதலித்தே மணம்முடித்தவள். அரச உத்தியோகம் பார்த்திருந்தபோதும், அரைநூற்றாண்டுக்கு முன்னர் சீதனம் ஏதும் வாங்காமல் புரட்சித்திருமணம் செய்தவர். அந்தத் திருமணம் அய்யர் மந்திரம் ஓதி நடக்கவில்லை.
சில இடது சாரித்தமிழ் தலைவர்கள் வந்து வாழ்த்துரை வழங்கி நடத்திவைத்த திருமணம். இந்தத் தம்பதிகளின் ஏகபுதல்வன், உயர்தரப்பரீட்சையில் சிறந்த சித்தியெடுத்ததும் நோர்வேக்கு படிக்க அனுப்பினார். இங்கிருந்தால், தம்பிமார் இழுத்துக்கொண்டு போயிருப்பார்கள் என்பதனால், நாலாம்பேருக்குத் தெரியாமல் அனைத்து ஏற்பாடுகளும் செய்து அனுப்பிவைத்தவர்.
சமாதான காலம் வந்தபோது, இவரும் மனைவியும் ஒரு தடவை நோர்வேக்கும் போய்வந்தார்கள். அதற்கும் காரணம் இருந்தது. மகன் செந்தில்குமரன், அங்கே ஒரு நோர்வேஜியப்பெண்ணை மணம்முடித்து, செட்டில் ஆகியிருந்ததும். அந்த காதல் தம்பதிக்குப்பிறந்த பெண்குழந்தையை பார்ப்பதற்குமாகத்தான் சென்றனர்.
மகனும் மருமகளும் அவர்களை அங்கேயே நிரந்தரமாக தங்கவைப்பதற்கும் ஏற்பாடுகளைச்செய்தனர். அதற்கும் ஒரு காரணம் இருந்தது.
சமாதான காலம் முடிந்து போர்க்காலம் தொடங்கியதுதான் அக்காரணம். எளிதாக பேரின்பத்தாருக்கும் மனைவி பாக்கிய லெட்சுமிக்கும் அங்கே குடியுரிமை கிடைத்தது. அங்கிருந்தவேளையில்தான் அவர் இந்த கல்வெட்டு கலாசாரத்திற்கும் துணைபோனார். அது போர் முடிந்த பின்னர் அவர் நாடு திரும்பியதும் தாயகத்திலும் தொடருகிறது.
அவருடைய தன்னலம் கருதாத சமூக சேவைகளைப்பார்த்துவிட்டு, அவரை சமாதான நீதிவானாக்கவும் ஊரில் சிலர் விரும்பினர். அதனையும் அவர் மறுத்துவிட்டார்.
கோயில் பரிபாலன சபை, சனசமூக நிலையம், வாசிக சாலை நிருவாக சபைகளுக்கும் அவரது பெயரை சிலர் முன்மொழிந்து பரிந்துரைத்தபோதிலும் அந்தப்பதவிகளையும் அவர் வெறுத்து ஒதுக்கிவிட்டவர்.
அவரது இயல்புகளை அவதானித்த சிலர், அவருக்கு “தொண்டரடிப்பொடியார் “ எனவும் பட்டம் சூட்டியிருப்பதும் அவருக்குத் தெரியும்.
அன்று மாலை பேரின்பத்தார், பின்வளவு மரம், செடி, கொடிகளுக்கு தண்ணீர் வார்த்துக்கொண்டிருக்கும் போது, தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் மூழ்கியிருந்த அவரது மனைவி, எழுந்து வந்து குரல் கொடுத்தாள்.
“ என்ன… உங்களைத்தான்…. யாரோ ஒரு பெடியன் உங்களை பார்க்க வந்திருக்கிறான். வந்திட்டுப்போங்கோ.. “
“ யார்…? “
“ தெரியேல்லை. கல்வெட்டு எழுத வந்தானா, கலியாண வரன் பேசக்கேட்டு வந்திருக்கிறானா என்பது தெரியவில்லை. விறாந்தாவில் இருக்கச்சொல்லிவிட்டு வந்தேன். கெதியா வாரீங்களா. நாடகம் பாதியில் நிற்குது. “
“ சரி போம்… போம்… வாரன். “
பேரின்பத்தார், கைகால்களை கழுவிக்கொண்டு துண்டினால் துடைத்தவாறு வீட்டின் முன்விறாந்தவுக்கு வந்தார்.
அந்த இளைஞன் மரியாதை நிமித்தம் எழுந்து “ அய்யா வணக்கம். என்ர பெயர் குகனேஸ்வரன். குகன் என்று அழைப்பாங்க. பேங்கில் வேலை செய்யிறன். எனக்கு ஒரு அக்கா இருக்கிறா. பட்டதாரி ஆசிரியை. வயது முப்பத்தியைந்தாகப்போகுது. உங்களை சந்தித்தால், ஏதும் நல்ல வரன் தேடித்தருவீங்க என்று சொன்னாங்க. அதுதான் வந்தன் “
பேரின்பத்தார் முன்பின் தெரியாத அந்த இளைஞனை சைகையால் அமரச்செய்துவிட்டு, கையிலிருந்த துண்டினால் கழுத்து, முகம், கைகளை அழுத்தி வியர்வையைத் துடைத்துக்கொண்டு, அருகிலிருந்த கதிரையை அந்த இளைஞன் பக்கமாக நகர்த்தியவாறு அமர்ந்தார்.
அவருக்கு அப்போது தேநீர் அருந்தவேண்டும்போலிருந்தது. மனைவிக்கு குர
ல் கொடுத்து இரண்டு தேநீர் கேட்க நினத்தார். அந்த வேண்டுகோள் மனைவியின் தீவிர தொலைக்காட்சி ரசனைக்கு இடையூறு எற்படுத்திவிடலாம் என்ற தயக்கத்தினால், இதழ் வரையில் வந்த சொற்களை சொல்லாமல் விழுங்கிக்கொண்டார்.
“ எங்கேயிருந்து வாரீர்…? உம்மை முன்னர் பார்த்திருப்பதாக ஞாபகம் இல்லைத்தம்பி. யாருடைய மகன். எந்த ஊர் என்று சொன்னீர்…? “ முதல் கட்ட விசாரணையை தொடங்கினார்.
“ பக்கத்தில் அரியாலை. அய்யா. “
“ கிழக்கோ, மேற்கோ….. “
“ புங்கன்குளம் பக்கம்தான். “
“ என்னத்தில வந்தனீர். அது உம்மட ஸ்கூட்டரா…? “ வீட்டின் முற்றத்தில் நின்றதை காண்பித்து கேட்டார்.
“ ஓம் அய்யா. ஏதும் தெரிந்த இடமிருக்கோ…? சொல்லுங்கோ அய்யா. “
“ மாப்பிள்ளை உள்ளுரிலா, அல்லது கொழும்பு - கிழக்கு மலையகப்பக்கமிருந்து வேண்டுமா..? இல்லாட்டில் வெளிநாட்டு மாப்பிள்ளை தேடுறீர்களா..?
“ அக்காவுக்கு செவ்வாய்க்குற்றம் இருக்குது என்று அம்மா சொல்கிறாங்க. அதுதான் எதுவும் கூடி வருதில்லை. பல இடங்களில் பார்த்துவிட்டோம். இதோ அக்காவின்ர சாதகக்குறிப்பு கொப்பியும் கொண்டு வந்திருக்கிறன். “
குகன் நீட்டிய அந்தக் கொப்பியை கைநீட்டி வாங்காமலேயே, “ தம்பி… என்ன பெயர் சொன்னீர், சரி நினைவுக்கு வந்திட்டுது. குகன் - குகனேஸ்வரன், எனக்கு உந்த சாதகக்குறிப்புகள் – பொருத்தம் பார்ப்பதில் எல்லாம் நம்பிக்கையில்லைப் பாரும். உதெல்லாம் ஒரு காலத்தில் பார்த்த விஷயங்கள். இப்ப பாரும், தாய்மார் தகப்பன்மார் கலியாண புரோக்கர்மாரிடமும் சாத்திரிமாரிடமும் அலைந்துகொண்டிருக்கும்போது, உந்தக்கண்டறியாத ஃபேஸ் புக், வாட்ஸ் அப்பில் எங்கட பிள்ளைகள் செட்டிங் செய்து துணைகளை தேடிக்கொள்ளுதுகள். சிலது ஏதோ புண்ணியத்தில் நன்றாக பொருந்தி வருவதும் உண்டு. சிலது , சொல்வாங்களே… Love is blind, காதலுக்கு கண்ணில்லை என்றமாதிரி ஏமாற்றத்திலும் தோல்வியிலும் முடிந்துவிடுது. “ பேரின்பத்தார் பெருமூச்சொன்றை உதிர்த்தார்.
“ அது அய்யா.. இந்தக்காலத்தில் யார்தான் இந்த ஃபேஸ்புக் கணக்கில்லாமல் இருக்கிறாங்க. வாட்ஸ் அப்பிலும் டுவிட்டரிலும்தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. “ என்றான் குகனேஸ்வரன்.
“ அது சரி, உதெல்லாம் உம்மிட்டையும் இருக்கோ, சொல்லும். “
“ ஓமய்யா. இருக்கிறது. அது இல்லாதஆட்கள்தான் இல்லை. “
“ அப்படிச்சொல்லப்படாது தம்பி, என்னிட்ட இல்லை. அது பொல்லாத சத்துரு. பல நட்புகளை குடும்பங்களை பிரிச்சிருக்குது பாரும். உதாரணத்துக்கு ஒன்று சொல்லுறன். வெளிநாட்டுக்குப்போன ஒரு பெடியன், அங்கே பொழுதுபோக்கிற்கு கடற்கரைக்குப்போய் தூண்டில் போட்டு மீன் பிடித்திருக்கிறான். அதனை படம் எடுத்து தன்ர முகநூலில் வெளியிட்டிருக்கின்றான். அதனைப்பார்த்த அவனுடைய நண்பன் ஒருத்தன் கொமண்ட்ஸ் போட்டிருக்கிறான்… எப்படித்தெரியுமே..? “ ஊரில் பார்த்த தொழிலைத்தான் இங்கே வந்தும் செய்கிறீரோ..? “ அதுக்குப்பிறகு என்ன நடந்திருக்கும்…? அந்த இரண்டு சிநேகிதமும் முறிந்துபோய்விட்டது.
எத்தனையோ குடும்பங்களுக்குள்ள உந்த ஃபேஸ் புக்கில் கண்டறியாத Requests கள் போட்டதாலும் பிரச்சினைகள் வந்திருக்கிறது.
தம்பி அண்மையில் நான் படித்த ஒரு பத்திரிகையில் கேள்வி – பதில் பகுதியில் ஒரு குறிப்பு வந்து அதிர்ந்துபோனன். அது என்ன தெரியுமா..? 2020 ஆம் ஆண்டில் உலகமெல்லாம் பரவப்போகும் பெரிய கொள்ளை நோய் எது தெரியுமா..? என்ற கேள்விக்கு, பதில், உந்த கொரோனாவும் இல்லை, டெங்கும் இல்லை, சிக்கின்குனியாவும் இல்லை, எய்ட்ஸ் இல்லை. மனச்சோர்வுதான் என்றிருந்தது. பார்க்கப்போனால் இப்போது பலரையும் சூழ்ந்திருப்பது மனச்சோர்வுதான்.
வெளிநாட்டுக்குப்போய் பணம் தேடினாங்கள், வீடு வாசல் சொத்து சுகம் தேடினாங்கள், ஒன்றுக்கு இரண்டு மூன்று கார் தேடினாங்கள். கண்டது என்ன…? மகிழ்ச்சியை தொலைச்சிட்டாங்கள். இங்கே ஒற்றுமையாக வாழ்ந்த ஒருதாய் மக்கள் சில, வெளிநாடுகளில் வாழ்வுக்கும் இல்லை சாவுக்கும் இல்லை என்று ஒற்றுமை குலைஞ்சு வாழுதுகள். உதெல்லாம் உந்த முகநூலில் தெரியவருவதில்லையா..? சொல்லும். “ பேரின்பநாயகத்தார் இவ்வாறு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, இதுபோன்ற பேச்சுக்களை வீட்டினுள்ளே கேட்டுக்கேட்டு சலித்துப்போன அவரது மனைவி தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எரிச்சலோடு எழுந்து வந்தாள்.
“ இங்கே பாருங்க… தம்பி எதற்காகவோ உங்களைத்தேடி வந்திருக்கிறார். அதனைக்கேட்பதை விட்டு விட்டு உபதேசம் செய்து கொண்டிருக்கிறியள். தேத்தண்ணீர் ஊற்றப்போறன். தம்பி உமக்கும் சேர்த்துத்தான். வந்த வேலையை முடியும். “
“ தேங்ஸ் அன்ரி. “ என்றான் குகனேஸ்வரன்.
“ அடியடா புறப்படலையில, இந்தப்பேச்சு ஒரு காலத்தில் இங்கே ஃபேமஸ் தெரியுமே. நான் உமக்கு அய்யா. அவ உமக்கு அன்ரியாகிப்போனா என்ன…? சரி உம்மட விஷயத்திற்கு வருவோம். உம்மட அக்காவின் படம் ஏதும் எடுத்து வந்தீரா.. தாரும்.. “
“ ஓம் “ என்ற குகன், அய்யாவின் பார்வையை விழுங்கிக்கொண்டு, நீண்ட மஞ்சள் நிற உறையிலிருந்து மூன்று படங்களையும் அக்காவின் Biodata வையும் எடுத்து நீட்டினான்.
பேரின்பத்தார் கண்ணாடியை அணிந்தவாறு உற்றுப்பார்த்தார். “ இப்போது எங்கே பணியிலிருக்கிறா.? “
குகன் சொன்னான்.
பட்டதாரி ஆசிரியை, சம்பளத்திற்கும் குறையிருக்காது தோற்றமும் பரவாயில்லை. பேரின்பத்தாரின் மூளை தீவிரமாக இயங்கியது. எவரிடமும் கேட்கத்தயங்கும் இரண்டு விடயங்களையும் கேட்டார்.
அது சாதி, சீதனம். குகன் சொன்ன பதிலும் அவருக்கு திருப்தியாக இருந்தது. திடீரென அவனைப்பற்றி விசாரிக்கத்தொடங்கினார்.
“ நீர் கலியாணம் செய்திட்டீரா…? “
“ இல்லை. பார்த்து வைத்திருக்கிறேன். “
“ என்ன லவ்வில் விழுந்திட்டீரா… நல்லது, லவ் வந்தால், இனி என்ன..? இரண்டு தரப்பிலும் சம்மதம் கிடைச்சால் போதும்தானே. கண்ணுள்ள காதல்தானே. “
“ ஓம் கண்ணான காதல். “ குகனின் பதில்கேட்டு பேரின்பத்தார் கொஞ்சம் உரத்தே சிரித்தார்.
பால் தேநீர் வந்தது. பாக்கியலெட்சுமி எவர்சில்வர் தட்டத்தில் வைத்து நீட்டிய எவர்சில்வர் தம்ளர்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர். சூடாக இருந்தது. அண்ணாந்து குடிப்பதற்கு குகன் சிரமப்பட்டான்.
“ பரவாயில்லைத் தம்பி, வாய்வைத்து குடிக்கலாம். “ பாக்கியலெட்சுமியின் மனதில், குகனைப்பார்த்ததும், தனது தம்பி மகள், யுனிவர்சிட்டி முடித்துவிட்டு வீட்டிலிருந்து வேலை தேடிக்கொண்டிருக்கும்
வனிதாவின் முகம் நினைவுக்கு வந்தது.
வனிதாவுக்கு இந்தப்பெடியனை பேசிப்பார்ப்போமா என்ற எண்ணமும் வந்து, “ தம்பி உம்மட கலியாணம் எப்போது..? “ எனக்கேட்டாள்.
“ தம்பிக்கு பெண் ரெடி. தன்ர அக்காவுக்கு வரன் தேடி வந்துள்ளார். “ என கணவன் சொன்னதும் பாக்கியலெட்சுமிக்கு முகம் வாட்டம் கண்டது.
தட்டத்தையும் காலி தம்ளர்களையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றாள்.
பேரின்பத்தாருக்கு அன்று பொழுது தாராளமாக இருந்தது. பேச்சுத்துணைக்கும் ஆள் கிடைத்திருக்கிறது.
“ குகன் கொஞ்சம் இரும் வாரன். ஒரு வெளிநாட்டு சம்பந்தம் இருக்கிறது. மாப்பிள்ளை லண்டனில். இலங்கை யாழ்ப்பாணப்பக்கம், அதுவும் நன்கு படித்துள்ள பெண்தான் வேண்டுமாம். சீதனம் வேண்டாம், சாதி, சமயம் பார்க்கவேண்டாம், ஆனால், நல்ல குணமுள்ள அழகான பெண் வேண்டுமாம். யாருடைய தொடர்பினாலோ எனது மின்னஞ்சலுக்கு ஒரு வரன் சில கேள்விகளுடன் வந்திருக்கிறது. " எனச்சொல்லியவாறு பேரின்பத்தார் ஆசனத்தை விட்டு எழுந்தார்.
“ அய்யாவிட்ட கம்பியூட்டர், மின்னஞ்சல் எல்லாம் இருக்கிறதா..? ஆச்சரியம்தான். “ என்றான் குகன்.
“ ஏன்..? இருக்கக்கூடாதா..? பொறும் வாரன். அந்தக்கேள்விகள்தான் சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டுது. “ அவர் உள்ளே சென்று ஒரு பிரிண்டரில் அச்சிடப்பட்ட ஒரு வெள்ளைக்காகிதத்தை எடுத்துவந்து நீட்டினார்.
அதில் நேர்முகத்தேர்வுக்கு கேட்கப்படும் கேள்விகள் போன்று சில அச்சாகியிருந்தன.
பெண்ணின் வயது - கல்விப்பின்னணி – தற்போது செய்யும் தொழில் - குடும்பத்தில் எத்தனைபேர்- சகோதர சகோதரிகள் - எத்தனை பேர் ? அவர்களில் எவரேனும் வெளிநாடுகளில் இருந்தால், எந்தெந்த நாடுகளில்..?
இந்தக்கேள்விகளுக்கு எளிதாக பதில் சொல்லிவிடலாம்.
இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகள்தான் குகனுடைய விழிகளை உயர்த்தின. அந்த வரிகளில் அவனது பார்வை நிலைகுத்தியிருந்ததை பேரின்பத்தார் அவதானித்தார்.
பெண்ணுக்கு முகநூல் கணக்கிருக்கிறதா…?
ட்விட்டர், வாட்ஸ் அப் பாவனயில் இருக்கிறதா..?
யாருடனாவது செட்டிங் செய்பவளா..?
குகன் இந்த மூன்று கேள்விகளையும் இரண்டு தடவை மனதிற்குள் படித்துவிட்டு, இறுதியாக கேட்டிருந்த வேண்டுகோளைப் பார்த்து துணுக்குற்றான்.
அண்மையில் எடுத்த மூன்று படங்கள். ( சாரியுடன் – சுடிதாருடன் – சோட்டியுடன் ) இவற்றுடன் பெண்ணின் தாயாரின் படமும் தேவை.
“ இது என்னய்யா… ? இப்படியெல்லாம் பெண் கேட்கிறார்களா? முதல் கேள்விகள் ஓரளவுக்குச் சரி. அது என்ன பெண்ணின் தாயின் படம்..? “
பேரின்பத்தாருக்கு சிரிப்பு வந்தது. “ நல்லவேளை, தமன்னா, எமி ஜெக்ஸன், ஸ்ரேயா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ரேஞ்சில் உவன் கேட்கவில்லை. எதற்கு தாயின் படம் தேவை என்று மெயில் போட்டுக்கேட்டேன். தாமதமில்லாமல் பதிலும் வந்தது.
குகனுக்கு அந்த அய்யா புதிராகத் தென்பட்டார். கார்ல் மார்க்ஸ், லெனின், ஏங்கள்ஸ், மா ஓ சேதுங், சேகுவேரா, ஃபிடல் காஸ்ரோ பற்றியெல்லாம் பேசுவார் என்று இவரைப்பற்றி ஊரில் சொன்னார்களே. இவருக்கு இந்தக்காலத்து நடிகைகளின் பெயர்களும் தெரிந்திருக்கிறது. குகன் ஆச்சரியமுற்றான். அதனை வெளிக்காண்பிக்காமல், அடுத்து அவர் சொல்வதை கூர்ந்து கேட்டான்.
“ தனக்கு வரும் மனைவி வயது போன காலத்தில் எப்படி இருப்பாள் என்பதை பார்ப்பதற்குத்தான் மணமகளின் தாயின் படமும் கேட்டிருப்பான் “
“ அதற்கு நீங்கள் என்ன சொன்னீங்க…? “
“ உம்முடைய கொப்பர்ட படத்தையும் அனுப்பிவையும். உமக்கு பார்த்திருக்கும் பெண், நீர் வயது போனால் எப்படி இருப்பீர் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறாள் - என்று சும்மா ஒரு பதிலை வம்புக்குப்போட்டுவிட்டன். அதன்பிறகு பதிலேதும் இல்லை. “ என்றார் பேரின்பத்தார்.
குகன் அந்தக்காகிதத்தை மெளனமாக சில செக்கண்டுகள் பார்த்தான்.
அவனது மௌனத்தை பேரின்பத்தார் கலைத்தார்.
“ தம்பி, தெல்லிப்பளைப்பக்கமிருந்து ஒரு வரன் வந்தது. வெளிநாட்டு மாப்பிள்ளை. அவர் அங்கே அக்கவுண்டனாக வேலை செய்யிறாராம். அவருக்கு டொக்டர் வேலை செய்யும் பெண் தேவையாம். இதுபற்றி சில இடங்களில் விசாரித்துப்பார்த்தேன். ஒரு வீட்டிலிருந்த திருமணமாகாத டொக்டர் பெண் ஒருத்தி கேட்ட கேள்வி இருக்குப்பாரும்… எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் என்ன கேட்டாள் தெரியுமே…? அந்த மாப்பிள்ளைக்கு ஏதும் சுகவீனமா என்று கேட்டுச்சொல்லுங்க அங்கிள். அதற்கான சிகிச்சை செய்யும் துறையில் நான் மருத்துவம் படித்திருக்கிறேனா என்பதை பார்த்துச்சொல்கின்றேன் என்றாள். அதற்குப்பிறகு நான் அந்த வீட்டுப்பக்கமே போகவில்லைத்தம்பி.
உந்தக்காலத்துப்பெடியளும் பெட்டையளும் தங்களுக்கு எத்தகைய துணை தேவை என்பதில் இப்போது வெகு உஷாராக இருக்கிறாங்க தம்பி. உமக்கு உந்தப்பிரச்சினை ஏதும் இல்லாமல் பெண்ணை பார்த்து ரெடி பண்ணிவிட்டீர். கொடுத்துவைத்தவர். உம்மட அக்காவுக்கு முடிந்துவிட்டால், அடுத்து உம்மடதானாக்கும். சரி பார்ப்போம். நீர் தந்திருக்கும் உம்மட அக்காவின்ர விபரங்கள், படங்களை வைத்திருக்கின்றேன். “ எனச்சொல்லிவிட்டு, மீண்டும் அந்தப்படங்களை அவர் பார்த்தார்.
குகனின் அக்கா, சாரி அணிந்தும் சுடிதார் அணிந்தும் இரவில் அணியும் சோர்ட்டி அணிந்தும் மூன்று போஸ்களில் அழகாக காட்சியளித்தாள்.
பேரின்பத்தார், ஒரு விண்ணப்பத்தை குகனிடம் தயக்கத்துடன் முன்வைத்தார்.
“ தம்பி குகன், கேட்கிறன் என்று குறைவிளங்கக்கூடாது, உம்மட அம்மாவின் படம் ஒன்று எடுத்துத்தரமுடியுமே… இந்த வெளிநாட்டு சம்பந்தத்தை பேசி முற்றாக்குவோம். அக்காவுக்கு செவ்வாய் குற்றம் இருப்பதாகவும் வேறு சொல்கிறீர்… என்ன நினைக்கிறீர்..? “ பேரின்பத்தார், குகனை ஏறிட்டுப்பார்த்தே கேட்டார்.
குகனுக்கு வேதனையான சிரிப்பு உதட்டோரம் கசிந்தது.
“ அய்யா, அம்மாவுக்கு ஆஸ்த்மா உபாதை இருக்கிறது. அதனை நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று சொல்வாங்க. அம்மா பாவம் நன்றாகத்தான் வாடிப்போனாங்க. அவவின்ர படம் அனுப்பிறது சரியில்லை. “
“ ஓகே தம்பி. வேண்டாம். கேட்க மறந்திட்டன். அப்பா என்ன செய்யிறார்..? “
கால் செக்கன்ட் மெளனத்திற்குப்பிறகு குகன் சொன்னான்:
“ அப்பா… முல்லைத்தீவில் வேலைக்குப்போனவிடத்தில் 2009 இல் காணாமல் போய்விட்டார்