பொறியியல் கல்லூரியில் உயிர்வேதியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த காலமது. என்னை விட ஏழு எட்டு வயது குறைவானவர்களுடனான கல்விப்பயணம். அதிகளவிலான நோர்வேஜியர்களையும் ஒரு சில வெளி நாட்டவர்களையும் கொண்டிருந்த அந்தப் பிரிவில் இலங்கையர்கள் என்று சொல்வதற்கு என்னோடு இன்னுமொரு இளம் மாணவி மட்டுமே.
இரசாயனவியல் தொழில்நுட்பம் என்னும் பாடம் தொடர்பாக ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்காக ஒரு மதுபானங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றிற்கு சென்றிருந்தோம். எங்களுக்கு விரிவுரையாளராக இருந்தவர் பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஒரு பெண்மணி. இரசாயனவியலில் முதுகலைமானிப்பட்டம் பெற்றவர். எல்லோரும் வரவேற்பறையில் எங்கள் வருகையை பதிவு செய்துவிட்டு காத்திருந்தோம். சரியாக குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு உயர்ந்த சற்று தடித்த தோற்றமுடைய மனிதர் அங்கு வந்தார். கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நாங்கள் தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்காக அந்த மனிதரை பின்தொடர்ந்து சென்றோம்.
ஒவ்வொரு கட்டங் கட்டமாக பார்வையிட்டோம். மாணவரின் கேள்விகளுக்கும், விரிவுரையாளரின் வினாக்களுக்கும் மிக சாதாரணமாக விளக்கம் கொடுத்தார் அந்த மனிதர். கணினியின்( computer )துணைகொண்டு தொழிற்சாலை இயந்திரங்களை ஒவ்வொரு படிவத்திற்கும் நகர்த்துவதையும்,கண்காணிப்பதையும் ( process technical ) அவதானிப்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. இங்கு 1500 இற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். இடையிடையே பேசிக்கொண்டதில் அந்த மனிதர்தான் அந்த நிறுவனத்தின் நிர்வாகி என்று தெரியவந்தது.
மூலப்பொருட்களைப்பிரித்தெடுத்தல், நொதியவைத்தல், வடிகட்டுதல், கலவையாக்குதல், கணினிக்கட்டுப்பாட்டு அறை என எல்லாவற்றையும் பார்வையிட்ட பிறகு, அந்த தொழிற்சாலையில் இருந்த திறந்த அறையான, தொழிலாளர்கள் பலரும் ஒன்று கூடி கலந்துரையாடும் இடத்திற்கு வந்து அமர்ந்தோம். எல்லோரும் பணியில் ஈடுபட்டு இருந்ததால் அந்த இடம் வெறுமையாகவே இருந்தது. எல்லோருக்கும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
மீண்டும் அந்த மனிதருடனான கலந்துரையாடல் தொடங்கியது. நாங்கள் அவதானித்த பல விடயங்களைப்பற்றியும், அங்கு நாம் காணும் குறை நிறைகள் பற்றியும் பல கேள்விகளைக் கேட்டார் அந்த மனிதர். மாணவர்களிடம் இருந்துதான் பல நல்ல முன்னோக்கு சிந்தனை கருத்துக்களைப் பெற முடியும் என்பது அந்த மனிதருக்கு தெரிந்திருக்கின்றது போலும்.
கலந்துரையாடலின் இறுதியில் “நீங்கள் யாராவது ஏதாவது என்னிடம் கேட்க விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார் அந்த மனிதர். உடனே சக மாணவி ஒருவர் கேட்டார் “ நீங்கள் என்ன படித்திருக்கின்றீர்கள்? அதாவது உங்கள் கல்வித்தகமை என்னவென்று நாங்கள் அறிந்து கொள்ள முடியுமா?” என்று. உடனே அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். “நான் உங்கள் விரிவுரையாளரைப்போல் முதுகலைமானிப்பட்டம் பெற்றவனல்ல. நான் இந்த தொழிற்சாலையில் வேலை செய்யத்தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பை கொடுத்த பின்பு சில சட்ட திட்ட நடைமுறைகளுக்காக தொழில் நுட்பகல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றேன். என் அனுபவம்தான் என் முதற்கல்வி” என்று முடித்தார் அந்த மனிதர்.
எத்தனை எத்தனை பொறியியலாளர்கள், தொழில் நுட்பவியலாளர்களுக்கெல்லாம் நிர்வாகியாக இருக்கின்றார் இந்த மனிதர் என்று ஆச்சரியப்பட்டதோடு, ஒரு புதிய அனுபவத்தைப்பெற்ற மன நிறைவோடு வீடு நோக்கிச்சென்றோம்.
“முயற்சிதான் அனுபவம்
அனுபவம்தான் கல்வி”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.