அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம்.
தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர்.
ஒருநாள் மாலைநேரம் இரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்துவந்தது பூனை.. விறாந்தை முழுக்க ரத்தம்.
அப்படியே அனைத்துத் தூக்கிப்பிடிக்க அம்மா துணியால் துடைத்துவிட்டு இன்னொரு துணியால் இரத்தம் வந்த பகுதியை கட்டிவிட்டால்.வலியால் பூனை துடித்தது.
அம்மா அப்பாவைத் திரும்பிப்பார்த்தாள்.
'உடைஞ்சு போச்சு எண்டு தெரியும்..அதைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போறதுக்கு பொருட்காட்சிக்கு வைக்கபோற மாதிரி...'
அப்பா எதுவும் பேசவில்லை.
அந்தக் கண்ணாடியை தனது பதினைந்தாவது வயதில் தனது முதல் உழைப்பில் வாங்கியதாக பெருமையாகச்சொல்வார்.
முகச்சவரம் செய்வதற்கு சலூனுக்குப் போனதில்லை.முகச்சவரம் செய்யும் கருவிக்குள் பிளேட்டைப்பொருத்தி முகச்சவரம் ச்ய்வார்..அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்...
எங்களுக்கும் பழகிப்போயிற்று..அறைக்குள் கண்ணாடி இருந்தாலும் பவுடர் போடவும்,பொட்டுச் சரியோ எனப்பார்க்கவும் அம்மாவும் தங்கைகளும் முண்ணனியில் நிற்பார்கள்.நானும் தலையைச் சீவவும்,பவுடர் போடவும் தான் என்றாலும், அவ்வப்போது வளர்கிற தாடியை பார்த்து உள்ளுக்குள் குதூகலிக்கவும் அந்தக் கண்ணாடியின் உதவி தேவைப்பட்டது.
அடுக்களையிலிருந்து அம்மா தங்கைகளைக் கூப்பிட்டாலும், ம் ..ம் என்று வெகுநேரம் கண்ணாடியின் முன்னால் நிற்பதைக் காண அம்மாவிற்கு கோபமாக வரும்.விறகுக்கட்டையுடன் வர அம்மா.. என்றபடி அறைக்குள் நுழைந்துவிடுவார்கள்.
'முதலில உந்தக் கண்ணாடியைத் துலைச்சா எல்லாம் சரிவரும்'
அப்பா எதுவுமே நடக்காதது மாதிரி மாட்டிற்கு தண்ணிவைக்கபோய்விடுவார்..
'எஸ்கேப்'
நழுவி விடுவேன்..அறைக்குள் இருந்து கலகலவெண தங்கைகளின் சிரிப்பொலி
வந்துகொண்டே இருந்தன..
அப்பாவின் அந்தக் கண்ணாடி இடம் மாறி மாறி கடைசியில் கொஞ்சகாலம் வாழைமரத்தில் தொங்கும்..
முற்றத்து அரிநெல்லிமரத்தில் அல்லது கிணற்று மறைப்பு வேலியில் தொங்கும்...குளித்துவிட்டு வரும்போது சுவாமி அறைக்குப் போகமுன்னர் கண்ணாடியில் ஒருதரம் பார்த்துவிட்டே போவார்.
ஒருநாள் பேப்பரின் உட்பக்கம் தலைகீழாக அச்சிடப்பட்ட பக்கத்தை வாசிக்க வாசிக்க சங்கடப்பட, 'கண்ணாடியில் கொஞ்சம் பிடி..பிறகு கண்னாடியைப்பார்த்துவாசி'' அப்பா சொன்னார்.
கண்ணாடி கொஞ்சம் கொஞ்சமாக உடையத்தொடங்கியது.ஒவ்வொரு திருவிழாவிற்குப்போகும் போதும் அப்பா சொல்லுவார்..புதுக் கண்ணாடி வாங்கவேண்டும்...ஆனால் வாங்காமலேயே வந்துவிடுவார்..
இடப்பெயர்வு வந்த காலத்திலும் கண்ணாடியைப் பத்திரப்படுத்திவிடுவார்.
ஒரு முறை மறந்துவிட்டார்.
நிலைமை சரியாக வந்து பார்க்கையில் மூலையில் எறிந்துவிட்டிருப்பதைக் கண்டார்..குழந்தையை வாரி அணைப்பது போல தூக்கிப்பார்த்தார்.அதைச் சரிசெய்தபடி மறுபடியும் முற்றது முள்முருக்க மரத்தில் தொங்கவிட்டார்.
ஆமிக்காரர் வந்து போயிருக்கினம்.. கோழிகள் களவு போயிருந்தன..அப்பா ஆசையாய் வளர்த்த மாட்டைக்காணவில்லை.உடைந்து போனார்.
கண்ணாடியை மீண்டும் பார்த்தார்..மரத்தில் ஆடிக்கொண்டிந்தது அந்தக் கண்ணாடி.
அம்மா அடிக்கடி சொல்லுவாள்.
'ஒன்றில் கண்ணாடியை உயர்த்திக்கட்டவேணும் அல்லது கதிரையில் இருந்தபடி பார்க்கக்கூடியமாதிரி கட்டவேண்டும்..உப்படிக்கட்டிவிட்டு நிமிரவும் முடியாமல்...சொன்னால் கேட்கிறதும் இல்லை'
அப்பாவும் அப்படிச் சிந்தித்து கண்ணாடியை மாட்டியிருக்கலாம்..ஆனால் செய்யவில்லை.
அப்பா எப்போது நடு உச்சி பிரித்து மேவி இழுத்தே தலைவாருவார்.அது அவருக்குப்பிடித்தும் போயிற்று.அந்ததந்தக் காலத்திற்கேற்ப தலை இழுப்பு,மீசை வெட்டு,சைபான்ஸ் என மாறியிருந்தாலும் அப்பா தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
எனக்கும் அரும்புகின்ற வயசும் வந்த பின்னர் ஒருநாள் புதுபிளேட்டை வாங்கிவந்து,தனது சேவிங்செற்ரைக்காட்டி' இந்தா..இதால சேவெடு' என்றார்.
புதுப்பழக்கம்..
ஒருவாறு பொருத்தி..பெருவிரலையும் கீறி இரத்தம் வடிவதையும் பொறுத்துக்கொண்டு,முகத்தை சவரம் செய்யப்போய்...முகத்தைக் கீறத்தான் முடிந்தது..
என அனுபவமில்லையா? அல்லது உடைந்த கண்ணாடி முகத்தை சரிவரக் காட்டவில்லையா?
அப்பாவின் கோபம் அதிகரித்தது..எனினும் பொன்னையாவிட்ட வரச்சொல்லி ஆளை அனுப்பினார்.
பொன்னையா அண்ணை நேரத்திற்கு வரமாட்டார். அதோட பழைய ஆள்..நமக்கான ரேஸ்டில் வெட்டமாட்டார்.
அவர் வர முதலே முழுகிச் சாப்பிட்டுவிட அவரும் வந்து பார்த்துவிட்டு இன்னொருநாள் வருவதாகச் சொல்லிவிட்டுப்போய்விடுவார்.இன்னொருநாள் நமது கள்ளம் பிடிபட..அது தம்பி..பரவாயில்லை இப்ப வெட்டுறன்..ஈரச்சீலையால துடைச்சுவிடுதம்பி..நாளைக்குக் குளிக்கலாம்.
மாட்டியாயிற்று.
தங்கைகள் கெக்கட்டம் விட்டுச் சிரித்தனர்.
அப்பாவும் வெற்றிவீரனாய் நின்று பார்ப்பது போல இருந்தது.தலையைக் குனிந்துக்கொண்டேன்.
*
நண்பர்களிடையே வந்த போட்டியில் வசந்தி என்பவள் மாட்டிக்கொண்டாள்.ஊரில் இரண்டு மூன்று வசந்திகள் உண்டு..ஒரு வசந்தியை தான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஒருவன் ஒதுங்கிக்கொள்ள இன்னொரு வசந்திக்கு முதலில் கடிதம் கொடுப்பதென்று முடிவான பொழுதில் ஐயோ..எனக்கும் இந்தப் பலபரீட்சைக்கும் சரிவராது.அப்பா தோலை உரிச்சுப்போடுவார் என்று ஒதுங்கிவிட....ஒருவரும் கடிதம் கொடுக்காத நிலையே ஏற்பட்டது.ஏனெனில் பலசாலியான அவளது தமையனிடம் அடிவாங்க பயப்பட்டனர் என்றே சொல்லவேண்டும்.இது இப்படி இருக்க ஏப்ரல் முதல் நாள் அன்று யாரோ சாணியைக் கரைச்சு வசந்தியின் வீட்டு வாசலில் கொட்டிவிட்டனர்.வாச்கசாலைப்பொடியள்தான் செய்திருப்பினமென்று சனம் கதைத்திருந்தாலும், அன்று மாலை சித்தப்பா வந்து சொன்னபோதுதான் கலவரமே வெடித்தது..
'உவன் செய்திருப்பான்' அப்பா சந்நதமாடினார்.
ஆனால் அம்மாவும் தங்கைகளும் மறுதலித்தனர்..நம்பிக்கையுடன் சொன்னார்கள்.அப்பாவிற்கு நம்பிக்கை ஏற்படவில்லை.சித்தப்பாவும் அப்பாவின் பக்கமே நின்றார்..
'ஒரு இடமும் போகாமல் இருந்தும் பழி வருகிறதே..இதற்கெல்லாம் அவன்களே காரணம்' கோபமாக வந்தது.
அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடித்துண்டு சாரத்திற்குள் ஒளிந்துகொண்டது..
அம்மா அழுதாள்.
தங்களும் மறித்தார்கள்.
அப்படியே ஆடிப்போய் உட்கார்ந்துகொள்ளவே முடிந்தது.அவர்களை மீறிப்போகமுடியவில்லை
**
அன்றிரவு எட்டு மணி இருக்கும்.
கடைசித்தங்கை பரபரத்தாள்.
'என்ர வட்டாரியை காணேல்ல..வீட்டுப்பாடம் செய்யவேணும்'
என்ன செய்யலாம்.அப்பா வீட்டில் இல்லை..
'பொறு' என்றபடி முற்றத்தில் தொங்கிய கண்ணாடியில் உடைந்த பகுதியைக் கழற்றிவந்து கொடுத்தேன்.
அவசரத்துக்குப் பாவி...அப்பாவுக்குச் சொல்லாதை'
அவளும் உள்ளுக்குள் சிரித்தபடி படம் கீற உடைந்த கண்ணாடியை வாங்கினாள்.
ஒரு முறை சந்தியில் நிற்கும் பெடியள்கள் தங்கையை கிண்டலடிக்கிறார்கள் என்று அழுதபடி தங்கை சொல்ல அப்பாவின் கண்ணாடித்துண்டை 'வைத்துக்கொள்.ஆக மிஞ்சினால் கீறிவிடு' என்று சொல்லிகொடுத்தாலும்,அப்பா கண்டுபிடித்துவிட்டால் என்கிற பயமும் எழுந்தது..சமாளிப்போம்.
அப்பா அகிம்சைவாதி..சண்டை சச்சரவுகளுகெல்லாம் போகமாட்டார்..ரேசிங்க் சைக்கிள் பிறேக் கேபிளையும் கவனமாகப் பத்திரப்படுத்திக்கொண்டேன்.பார்ப்போம்..
நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவர்களைக் காணவே முடியவில்லை..வேறு பிரச்சினைகளை அவர்கள் சந்தித்திருக்கலாம்..வீடுமாறியிருக்கலாம்...இயக்கத்திற்குப் போயிருக்கலாம்.கண்னாடித்துண்டிற்கு வேலை இருக்கவில்லை.மீண்டும் தன் இடத்திற்கு வந்துவிட்டது.அப்பா கண்டுபிடித்திருப்பார்.எதுவும் கேட்கவில்லை.
கடைசியாக மிஞ்சிய உடைந்த கண்ணாடித் துண்டுகளை கூட்டி அள்ளி அப்படியே பின்வளவு எலுமிச்சை மரத்துக்கடியில் ஆழக்குழி தோண்டிப் புதைத்துவந்தாள் அம்மா .புகைப்படச் சட்டத்தை துடைத்து அப்பாவின் புகைப்படத்தை செருகி சுவரில் மாட்டிவிட்டு சாம்பிராணிக் குச்சியை கொழுத்திவைத்தாள் தங்கை.
(யாவும் கற்பனை)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.