-'பதிவுகளி'ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-
1. வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கு!
- திலகபாமா -
சின்னஞ்சிறிய வீடுதானென்றாலும் தனிமை வீட்டை நிறைத்து என்னையும் அழுத்திக் கொண்டிருந்தது. .தனிமை தவிர்க்க நினைத்து தொலைக்காட்சியைப் போட்டு விட நிகழ்ந்து கொண்டிருந்த எந்தவொரு நிகழ்வும் திருப்தி தராததால் தானியக்கி மூலமாக எல்லாவற்ரையும் ஓட விட்டேன். எல்லாவற்றிலும் கும்பல் கும்பலாக வந்து ஆடினார்கள் அழுதார்கள், சிரித்தார்கள் தேவையில்லாது பேசினார்கள். மொத்தத்தில் வெறுப்பு பற்ற ஓங்கி அழுத்தி நிறுத்தி விட்டு சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன். கவனத்துடன் செய்திருந்த சமையல் மேசை மேல் இருந்தது. நேற்று வரை வீட்டில் இருந்த விருந்தினர் கலவரம் நேற்று மாலையோடு காணாமல் போயிருக்க காலையிலெல்லாம் வீட்டை ஒதுங்க வைத்தபடி இருந்தேன். கல்யாண மண்டபத்திலிருந்து கொண்டு வந்து போட்டிருந்த சாமான்கள் அப்போதைக்கு என்று சம்பந்தமில்லாத இடங்களில் உட்கார்ந்திருந்தது.. அப்போதைக்கு எனறு தீர்மானிக்கப் படுகின்ற நிகழ்வுகளின் வலிகள் எனக்கு மட்டுமே தெரியும். என்பதால் உடனே சரிப்படுத்திவிட மனது துடித்தது.
இதையாவது சரிப்படுத்தலாமே என்றும். உறவினர்கள் உதவி செய்ததாய் சொல்லப் பட்டு மாறி மாறி திணிக்கப் பட்டிருந்தது எரிச்சல் தந்தது. சடாரென பார்க்கையில் பளீரென தெரிந்த வீடு , அலமாரிகளுக்குள் தெளிவில்லாது குழைந்து கிடந்தது.. எது எங்கே இருக்கு என்று கண்டு பிடிக்கவே குழப்பமாக இருந்தது. .இடம் மாறி இருந்தது பொருட்கள் மட்டுமல்ல. உதவிகள் என நினைத்தது உபத்திரவமாய் மாறி இருப்பது மீண்டும் மீண்டும் உறுத்தியது. எவர் சிலவர் பாத்திரங்களுக்கு இடையில் வைக்கப் பட்டிருந்த சீர் கொண்டு சென்ற தட்டுகள் எடுத்து தனியாக அதற்கென இருந்த உயர அலமாரியில் வைக்க, ஒரு மூடையில் எல்லா காய்கறிகளும் கலவையாக இருக்க பிரித்து ஒதுக்கி பைகளில் போட்டு பத்திரப் படுத்தினேன். இன்னொரு மூடையில் சமையலுக்கு பயன்படுத்திய பலசரக்குகள் ஒன்றோடொன்று கொட்டி கலந்து கிடக்க தனது ஆச்சியின் நினைவுகளோடு சொளகில் தட்டி கடுகு, உளுந்து ,சீரகம் எனப் பிரித்து அடுக்கினேன்.
ஐந்து குடும்பங்கள் ஒன்றாய் இருந்த கூட்டுக் குடித்தனத்தில் வசிக்க நேர்ந்த ஆச்சி வீட்டில் பெண்கள் சும்மா இருந்தால் பிரச்சனை வருமென்று அவரது மாமனார் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் எல்லாம் ஒன்றாய்த் தட்டி பிரித்து வைக்கச் சொல்லிப் போனதாய் ஆச்சி பேசியது நினைவுக்கு வந்ததை நினைத்துக் கொண்டாள். தனக்கும் அந்தப் பயிற்சி உதவும், தனியே இருப்பதை மறக்க அதுபோல் பலமுறை தானும் கலந்து பின் , பிரித்து வைக்கலாம். மாறிப் போன சூழலின் பின்னும் மாறாத நடவடிக்கைகள் காரணங்களோ வேறு, நினைக்க பெருமூச்சு உதிர்ந்தது .
நினைவுகளை தட்டி விடும் போது எல்லாம் ஒதுக்கி முடித்திருந்தேன் . வேலைகளில் மூழ்கி இருந்தவரை ஒன்றும் தோன்றவில்லை. இப்போ எல்லா வேலையும் முடிந்த பிறகு அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற மலைப்பில் தனிமை என்னுடனிருப்பதை உணரத் தொடங்கினேன். தொடங்கிய சில மணி நேரங்களிலேயே என்னுள் அவஸ்தை ஆரம்பமானது
குளிர்சாதனப் பெட்டியின் மேலேயிருந்த மகள் தீபாவின் படம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. இனிமேல் அதுதான் தீபா. இதுவரை படமாயிருந்த நிழற்படம் இனிமேல் அதுதான் மகளாயிருக்குமோ? படத்தில் இருந்த தீபா சிரிப்பது போல் தோன்றவே தலையை உலுக்கிக் கொண்டேன்.
“.சே இது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரிவில்லையே.” தீபாவின் திருமணம் பெரியதொரு பிரிவையோ, தனிமையையோ கொண்டு வந்து விட முடியாது என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும் ஏதேதோ நினைவுகள்.
நினைவுகள் 20 வருடங்களுக்கு பின்னால் என்னை இழுத்துச் செல்ல அந்த இருட்டு அறையில் இருந்து வந்த அழுகை ஒலியும் , தொடர்ந்து நான் தோள் தொட , வெளி வந்த மழலைக்குரல் இன்று போல் ஒலித்தது.
“கல்யாணம் பண்ணிக்கப் போறியா அம்மா ?" ஏற்கனவே நடந்து கொண்டிருந்த குழப்பங்களில் திணறிப் போயிருந்த நான் இப்போழுது சடாரென முடிவுக்கு வர இந்த கேள்வி ஒரு காரணமா ஆயிட்டது
“இல்லைம்மா , அம்மா கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை ‘
சொன்ன பதிலைத் தொடர்ந்து அவள் என் கழுத்தைக் கட்டிக் கொள்ள நான் திணறினேன்.
எல்லாவற்றையும் துறந்து விட்டதாய் மனசு வைராக்கியத்தைச் சுமந்து நின்றாலும் ஸ்பரிசங்களுக்காக ஏங்கிய உடல் ஒன்று விழித்துக் கொண்டு இருப்பதை மகளின் பிஞ்சு ஸ்பரிசங்கள் சொல்லிப் போக நானும் இழுத்து அணைத்துக் கொண்டேன். உள்ளே கொழுந்து விட்டெரிந்த ஜுவாலை ஒன்று என்னையே எரித்துக் கொண்டிருந்தது..
வீட்டில் எழுந்து கொண்டிருந்த விவாதங்களுக்கு மகளின் கேள்வி அப்போதைக்கு விடை தந்தது போல் தோன்றினாலும் , தொடர்ந்து நிறைய சிக்கல்கள் வரப் போவதை அறியாது அப்போதைக்கு அந்த பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தேன். கழுத்தை கட்டிக் கொண்டு மகள் தூங்கிப் போயிருந்தாள். ஏதேதோ மனம் தேடிக் கொண்டிருக்க தூங்க முடியாது நான் , தேடல்களின் நுனி கிடைக்காது தடுமாறியபடி இருந்தேன்.
ஓடிப் போயிருந்த காலங்கள் நினைவில் வந்து குத்தத் தொடங்கி இருந்தன .பாடங்கள் ,படிப்பு பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொண்டவளில்லை. நான். கல்லூரிப் படிப்பு கௌரவமாகக் கருதப் பட்டிருந்த கால கட்டத்தில் இருந்தேன் அப்போது. கல்யாண வரனோ, வயசோ வருகிற வரை காத்திருக்கும் இடமாக கல்லூரி மாறியிருந்தது. எனக்கே படிப்பு மீதான நம்பிக்கைகள் தொலைந்து போயிருந்தன.
கல்யாண வரனும் சரி, வயசும் சரி வந்து வந்து போய்க் கொண்டு இருந்தன. செவ்வாய் தோசமும் தோற்றப் பொலிவின்மையும் என் வயதைக் கூட்டிக் கொண்டிருந்தன. கல்யாணக் கவலை தோன்றாத என்னுள் தோன்ற வைக்க சுற்றியிருந்தவர்கள் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். துர்க்கையம்மன் கோவிலில் இட்ட எலுமிச்சை விளக்கோ, மார்கழி மாதத்தில் அரசரடிப் பிள்ளையாருக்கு எடுத்து ஊத்திய மஞ்சத் தண்ணியோ வரனை கூட்டி வந்ததாக எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்க, தந்தையின் பணம் எல்லாவற்றையும் சரிக்கட்டியது நிதர்சனமாய் தெரிந்தாலும், தெரியாததாய் எல்லோரும் காட்டிக்கொண்டார்கள். நானும் கல்யாணப் பெண்ணானேன் .என்ன காசுக்கேத்த நல்ல பொருள்தானா என்று ஒடித்தோ உரசியோ பார்க்க முடியாதிருந்தது. எல்லாரையும் போல எல்லாவித சந்தோசங்களும் கற்பனைகளும் நிறைந்த மனதுடன் திருமணம் முடிந்து மறுவீடு போய் வளைகாப்பு நடக்கும் வரை எல்லாம் சந்தோசமாகத்தானிருந்தது.
பிரசவத்திற்காக நான் வந்திறங்கிய அம்மாவீடே காலமெல்லாம் எனக்காக என்று மாறிப் போகும் என்று நினைத்திராது சந்தோசமாகத் தான் வந்து சேர்ந்திருந்தேன். பிள்ளை, கயிறு கட்டி, கையிலெடுத்து நான் வாசலில் நிற்க எடுத்த ஆரத்தியில் சூடு அப்போது நான் அறியாதிருந்தது. வைத்த பொட்டு கறையாக மாறுமென்பது உணராததாயிருந்தது. ஆரம்பத்தில் மாற்றங்கள் கண்ணில் புலப்படவில்லை என்றாலும் தொடர்ந்து என்னையும் அவர்களால் முட்டாளாக்க முடியாததாயிருந்தது வீட்டிற்கு அடிக்கடி வந்து போன அவரது அத்தை மகள் நான்கு மாதங்களில் நான் விட்டுச் சென்றிருந்த இடத்தை நிரப்பியிருந்தாள்
அதிர்ச்சியில் நான் அதிர்ந்து கேட்க “ ஆமாம் அனுசரிச்சு போகப் பழகிக்கோ” பதில்கள் நெருப்புத் துண்டங்களாய் விழுந்தன. நெருப்புத் துண்டங்களை அணைய விடாது ஊதி நெருப்பாக்கி எரிந்தாள். இருவீட்டார் மோதலில் எனக்கு அம்மா வீடே நிரந்தரமானது.. வசதிகளுக்கு குறைவில்லாத வாழ்வென்றாலும் எங்கோ தனிமை எனை வெறுமையாக்கிக் கொண்டிருந்தது. அவங்க வீட்டிலிருந்து எல்லாமும் எடுத்து வர என் வீட்டார் போராடி ஜெயித்தனர். ஜெயித்ததாக சொல்லிக் கொண்டனர். இடைஞ்சல்கள் இல்லாது எனது கணவராயிருந்தவரின் வாழ்க்கை ஆரம்பமாக என் வாழ்க்கை பற்றிய கேள்வி அண்ணன்களிடம்.
“ஏன் தங்கச்சி தனியா இருக்கனும். கல்யாணம் கட்டி வைக்க எங்களால முடியும்” முடியுமென நிரூபிக்க அவர்கள் களத்திலிறங்கிய போதுதான் தீபாவின் கேள்வி எல்லாரையும் நிராயுதபாணீயாக்கி அடித்து வீழ்த்தியது.. இல்லையென்றால் எனக்கும் திருமணமாகி இவர்கள் வீரத்தை காட்டி வென்றவர்களாயிருப்பார்கள். கல்யாணப் பேச்சு நின்று போக தீபாவோடு என் வாழ்க்கை பயணமாகியது
மூத்த தலைமுறைகள் சரிந்து இளைய தலைமுறைகள் பொறுப்புக்கு வர எனைப்பற்றிக் கவலைப் பட்டிருந்த தாத்தா என் மேல் சொத்துகள் எழுதி வைத்த திருப்தியில் போய்ச் சேர, தம்பிமார்களுக்கு கல்யாணமாகி அம்மா காலம் வரை அவர்களோடு இருந்து அம்மா காலத்திற்கு பிறகு தனியா வீடமர்த்தி , தீபா படிப்பில் கவனமாக இருக்க கற்பித்து காலங்கள் சென்றன.
அப்படித்தானொரு நாள் அம்மாவோடு இருந்த காலங்களில் தங்கையை காண வந்த அவளது தோழி. அவர்களுக்கு காப்பி போட அடுக்களை போனேன். திரும்பி வர எனைப் பற்றி பேச்சு ஓடிக் கொண்டிருந்தது, தெரிய கால்கள் ஸ்தம்பித்து நின்றன. வந்தவள் கேட்டுக் கொண்டிருந்தாள் “ அக்காவுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் தானே அதை பத்தி ஏன் நீங்கள் யாரும் நினைக்கவே இல்லை?”
“என்ன செய்யறது சாந்தி? . தீபா உடையுறதை எப்படி சமாளிக்க, ? இன்னைக்கு அக்காவுக்காக கல்யாணம் செய்யலாம். அடுத்த தலைமுறை பாதிக்கப் படாதா? அவளுக்காக வாழ்ந்த அம்மாவுக்காக அவள் என்றும் நன்றியோட இருப்பாள் காலமெல்லாம் நினைப்பாளே.”
“நினைப்பை வைத்து என்ன செய்ய? அக்காவை வேலைக்காவது அனுப்பலாம்தானே. வெளியே போய் வர பலபேரை சந்திக்கும் வாய்ப்பிருந்தாலாவது தனக்கான வாழ்வு பற்றிய சிந்தனை வருமே”
“வேலைக்கு போக வேண்டிய தேவை வரலியே. பார்ப்போம். பேசிக் கொண்டே வாசலில் என் நிழலாட என் சம்பந்த பேச்சை முடித்தனர். அவர்கள் முடித்த இடத்திலிருந்து என் சிந்தனை ஓடியது. எனக்கு ஆசாபாசங்கள் இருக்கிறதா? கேள்வியை சிந்திக்க விடாது குக்கர் சத்தம் கொடுத்து வைக்க இன்று நினைத்து பார்க்கிறேன் ஏன் மேற்கொண்டு அதை சிந்திக்காமல் போனேன்
அன்றொரு நாள் தீபாவிடம் நடத்திய விவாதங்களும் வந்து போனது . நினைவில். இதுவரை அடுத்தவரோட பிரச்சனையை விவாதிச்சோமுன்னு நினைச்சிருந்ததெல்லாம் இப்ப என்னுடையதாய் எனக்கானதாய் தோன்ற ஆரம்பிப்பது ஆச்சரியமாய் இருந்தது எனக்கு. தீபா கல்லூரி இரண்டாவது படித்த வருடம் சாப்பாட்டு மேசையில் வழக்கம் போல் பலதும் பரிமாறிக் கொண்டிருந்தோம்.
“இன்னைக்கு கல்யாண் குமாரை பார்த்தேன்மா.”
அவள் சாப்பாட்டை பார்த்தபடியே சொன்னாள் எனக்குள் ஒரு திடுக்கிடல். நடந்திருந்த விசயங்கள் எனக்கும் அரசல் புரசலாக காதில் விழுந்திருந்தது. எதுவுமறியாதது போல் “அப்படியா?” என்றேன்.
“ஆமாம்மா ரெண்டு வாரத்துல ரொம்ப ஒடைஞ்சு போயிட்டான். குடிக்க ஆரம்பிச்சுட்டதா அவன் நண்பர்கள் சொன்னாங்க.”
நேரில் பார்த்தவுடன் “ஏன் இப்படி ஆயிட்டேன்னு?” கேட்டேன்.
எனக்கு நடந்த விசயங்களும் , நடந்து கொண்டிருந்த விசயங்களும் தெரிந்திருந்தாலும் தீபாவுக்கு தெரிய வேண்டியதில்லாத விசயம்ன்னு நான் நினைச்சிருந்ததை நினைத்து “ முட்டாளே “ என்று மனசு சொல்லிக் கொண்டது.
என்ன சொன்னான்” அதே அழுத்தங்களூடன் கேட்டேன். ரொம்ப நேரம் அமைதியா இருந்தான். “அழுகிறான்மா’. அழுவதற்கு என்ன இருக்கிறது என்கிற தோரணையில் தீபா சொல்லவும் எனக்குள் பீறிட்டது.
“அழுகாம என்னமா செய்வான்? அவன் அம்மா ஓடிப் போனது தப்பில்லையாம்மா? . ஆம்பிள்ளை எவ்வளவு மனசு உடைஞ்சு போவான் ? தாங்க முடியுமா?”
தீபா தலை தூக்கி பார்த்தாள் இப்போழுது தான் எனை. என் கோபம் கண்களில் அவளுக்கு தெரிந்திருக்க வேண்டும். நெத்தி முடிச்சிட யோசனையுடன் தலை சாய்த்து நாடியில் கைவைத்து என்னையே பார்த்தாள்
“ஆம்பிள்¨ளை உடைஞ்சு போயிடுவான் அப்படிங்கறதுக்காக்க அந்தம்மா தன் மனக்காதலை மறைச்சு வச்சிருந்தா எல்லாருமே சந்தோசமா இருந்திருப்போம் . இருந்திருப்பாங்க இல்லையா?”
“இது காதலா? ரெண்டு பிள்ளைக்கப்புறம் அதுவும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைங்க.. .. .. ..”
‘உடம்பு திமிர் எடுத்து ஓடினா என்ன செய்ய?”
கோபத்தில் என் வார்த்தைக்கள் தடிக்க பேச்சை நிறுத்தினேன் அத்தோடு. எனக்குள்ளிருந்து வந்த பெருமூச்சு என் கோபத்தைப் பேசியது.
“பிறகு எதும்மா காதல்? காதல்னா கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் தான் வரணும்மாம்மா? கழுத்தில் தாலி போட்டவுடன் இனிமே காதலே வராதுன்னு எப்படி முடிவு பன்றது? காதல் ஒரு உணர்வு தானேம்மா. நேசம் கூடக் கூட வரத்தானே செய்யும் . ரெண்டு பிள்ளைக்கப்புறம் வராதா? வரக்கூடாதுன்னு ஏன் எப்படி நினைக்கிறிங்க?. மனசு சேர்ந்தப்புறம் உடல் பற்றிய பிரக்ஞை ஏன் வருது/ மனசு சேராம உடல் சேர முடியுமா”. அந்தம்மா தன் உணர்வுகளை மறைச்சு சாகடிச்சு வாழ்ந்திருந்தா எல்லாரும் சந்தோசமா இருந்திருப்போம். பத்தினின்னு சொல்லியிருப்போம் இல்லையா? உணர்வுகளை ஒளிக்காம சொல்லும் போது ஏன் சிதைஞ்சு போயிடறோம்? பெரிசு படுத்துறோம்.”
“அப்போ ஓடிப் போனது சரிங்கரியா?” கேள்விகளில் என் குழப்பம் எனக்கே தெரிந்தது
“தப்புன்னு சொல்றது சரியான்னு யோசிக்கிறேன். சரியா முடிவெடுக்க முடியாம போக நாமளும் காரணமோன்னு”
அவங்களோட உணர்வுகளை அந்த குடும்பத்தார் சரியா புரிந்து கொள்ள அல்லது பகிர்ந்து கொள்ள தவறிட்டாங்களோன்னு கோபத்தை , வருத்தத்தை பகிர்ந்து கொள்வது போல் காதலை ஏன் பகிர்ந்து கொள்ள முடியாது போகிறது.? காதல் ஒரு அதீத அன்புதானே அம்மா. உங்களால் பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனை அந்தரங்க உணர்வுகளை அழுத்தி வைத்திருப்பீங்க அதுதான் பத்தினித்தனம் என்று இருந்திருப்பிர்கள்? எல்லாவறையும் மறைத்து வைத்துக் கொண்டால் நல்லவர்களா? வெளிப்படையா கல்யாண்குமார் அம்மா மாதிரி சொல்றவங்க நல்லவங்களா எனக்கும் புரியலைம்மா?
“ ஏம்மா தனியாஇருந்த இத்தனை காலம் உங்களுக்கு யார் மேலேயும் காதலோ பிரியமோ வரவே இல்லையா? தாலி , உங்க காதல் உணர்வை தடுக்க முடிகிறதா?”
அவளுக்கு தெரிந்திருந்தது அவள் கேள்விகள் நான் தாங்கமாட்டேன் என்பதும் என்னிடம் பதில் இல்லை என்பதும். எழுந்து போய் விட்டிருந்தாள் நான் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன். கல்யாண்குமார் அம்மாவின் குணங்களுக்கு பொருந்தாத அவர் கணவர் முகம் , முக்க என்பது வெறும் கண் காது வாய் மட்டுமல்லவே . அந்த மனிதனை பிரதி பலித்த அவரது முகம் வந்து போனது தீபாவின் பேச்சை யோசிக்க வைக்க “ எனக்கு ஏன் காதல் வரலை? . தாலி !.. தங்கச் சங்கலியாயிருந்த தாலியா என் உணர்வுகளைத் தடுத்தது. இனி தடுக்காது. பதில் சொல்ல மனது இந்த தனிமையைப் தவிர்க்க முயற்சி எடுக்காமல் போனது. தன் தப்பா? ஒரு வேளை வேலைக்கென்று போயிருந்தால் பரந்த உலகில் என் நேசத்திற்குரியவர் இருந்திருக்கலாம் என்று தோன்றியிருக்கலாமோ? நான் எல்லாவற்றையும் தவிர்த்து சிறையிருந்துவிட்டேனோ? அறையுள்ளிருந்து வெளிவந்தாள் கண் கூசத் துவங்க கை நெற்றிப் பொட்டுக்கு போகப் போனதை தடுத்தாள் வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கென்று.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் அக்டோபர் 2004; இதழ் 58
எல்ஸாவின் தோட்டம்- பிரெஞ்சு சிறுகதை-ஷோவென் ழான்-ரொபெர்
- தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா
-1- -
தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் எல்ஸாவுக்கு வயது 5. சுருள் சுருளாக, பழுப்பு நிறத்தில் நீண்டமுடி. படிகம் போன்ற தெளிவான விழிகள். மண்ணில் விளையாடியதால் அழுக்கடைந்த கால்கள். எல்ஸாவின் தோட்டம் உயரமான மரங்களும், எண்ணிக்கையற்ற பூவகைகளும் நிறைந்த தோட்டம். எல்ஸாவின் சிறியக் கண்களுக்குள் அடங்காத மிகப்பெரியத் தோட்டம். ஆனால் அவள் கற்பனையில் விரிந்தக் கதைகளுக்கும், துடுக்கான விளையாட்டிற்கும், அவ்விளையாட்டுக்கெனவே கற்பனையில் உதிக்கின்ற அவளது தோழர்களுக்கும் ஏற்றத் தோட்டம்.
மரங்கள் தோறும் தாவிச் செல்லும் சித்திரக் குள்ளன். அழகான மலர்களிலிருந்து சுகந்தத்தை மட்டுமே சேகரிக்கின்ற குட்டி தேவதைகள். வழக்கம்போல வசிய மருந்துகக்காக கள்ளிச் செடிகளையும், அழுகியப் பழங்களையும் தேடுகின்ற சூனியக்காரிகள் என அவளது கற்பனைக் கேற்றவாறு தோட்டத்தின் பங்களிப்பு மாறும். மணல் நிரப்பப்பட்டத் தொட்டியில், அவள் கட்டுகின்ற மணற்கோட்டைகளில் சூரியனின் கதிர்களும், மேகத்தின் நிழல்களும் வாசம் செய்யும். பூமியில் காதினை வைத்து மண்ணில் வாழும் புழுக்களும் வண்டுகளும் இடும் இரைச்சலைக் கேட்டு, அவைகளை ஆச்சரியப் படுத்துவாள். சிறிது நேரம் அவள் ஆடுகின்ற ஊஞ்சலின் மூலம் உயரே பறக்கின்ற 'மேசான்ழ்' குருவியை பிடித்திட முயல்வாள். பின்னர் இறங்கி 'ராஸ்பெரி' பழங்களைப் பறித்து 'மாக்பை' குருவியோடு பங்குபோட்டுக் கொள்வாள். 'மாக்பை' குருவி அமர்ந்திருக்கும் சுவர்தான் வீதியிலிருந்தும், வெளி மனிதர்களிடமிருந்தும் தோட்டத்தைப் பாதுகாக்கிறது. தோட்டத்து அமைதியை எப்போதும் பூட்டி வைத்திருக்கிறது.
"உஸ்.. சத்தம் போடாதே!" அணிலிடம் ஏதாவது வேலையைப் பணிக்கும்போதுகூட இப்படித்தான் ஆரம்பிப்பாள். மழையில் நனைவதில் சந்தோஷமா? அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாது, மெதுவாகத்தான் சிரிப்பாள். அவளது கற்பனைக் கதைகளின் தோழர்களான நரி, பூனை எறும்புகளைப்போல, மெள்ள, ஊர்ந்து நடப்பதெல்லாம் கூட அப்படித்தான். கற்பதித்தத் தோட்டத்து பாதைகளில் விழுந்து அவள் முழங்காலிலோ, முழங்கையிலோ சிராய்த்துக்கொள்ள நேரும்போது கூட கண்ணீரை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவள். அப்படி அழுவதால் ஒருவேளை ஜன்னலை மூடிக்கொண்டு கீழ்த்தள அறைக்குள் களைப்பாலுறங்கும் அவள் அம்மாவை எழுப்பிவிடக் கூடும். அதற்கடுத்தவறையில் இருக்கும் அப்பாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கோபக்காரர். கண்டிப்பானவர். எல்ஸாவிற்கு அடக்கமில்லை என்றும், பெரியவர்கள் பேசும்போது குறுக்கிடுகிறவள் எனவும் கூச்சலிட்டு பயமுறுத்திக் கொண்டிருப்பவர்.
-2-
தோட்டத்தில் படித்துக் கொண்டிருக்கும் எல்ஸாவிற்கு வயது 10. சுருள் சுருளாக தலை முடி ஆனால் கண்களில் முன்பிருந்த ஒளியும், தெளிவும் தொலைந்திருந்தன.
கைவிரல்கள் புத்தகத்தை அழுந்தப் பிடித்திருந்தன. இப்போதெல்லாம் படிப்பதென்பது ஒருவகையில் அவளுக்கான புகலிடம். அவளது விருப்பமானத் தோட்டத்தைப் போலவே வெளிமனிதர்களிடமிருந்தும் அவர்களிடும் கூச்சல்களிடமிருந்தும் அடைக்கலம் தரும் புகலிடம். அலுவலக அ¨றையினின்று அப்பா கூச்சலிடுகின்ற நேரங்களில் புத்தகங்கள் மட்டுமே அவளுக்கான ஒளிப்பிடம். புத்தகத்திலிருந்து விடுபட்டு எல்ஸா வானத்தை பார்க்கிறாள். பிறகு 'திய்யேல்' மரத்தருகேச் சென்று, அதன் நிழலில் குப்புறப் படுக்கிறாள். தலையை உயர்த்தி பின்னோக்கிச் சாய்த்து கதிரவனை நேராகப் பார்க்கிறாள். பிறகதன் வண்ணத் துகள்கள் செய்யும் ஜால வித்தையை கண்ணிமைகளை இறுக மூடி அனுபவிக்கிறாள். மேகத்தின் குளிர் நிழல் முகத்தில் படவே, கண்களை மெள்லத் திறக்கிறாள். அப்பாவின் அலுவலக அறையிலிருந்து, கூடுதலாக இ¢ந்த முறை இன்னொரு குரல் - பெண்குரல். அந்த குரல்கள் உரையாடலைப் பொறுத்து, உயர்ந்தும் தாழ்ந்தும் தோட்டம் வரை கேட்கின்றன. அப்பெண் எல்ஸாவின் வகுப்பாசிரியையாக இருக்க வேண்டும். 'எல்ஸாவின் அதிகப் படியான அமைதி' அந்தப் பெண்ணை கலவரபடுத்துகிறதாம். புகார் சொல்லிக்கொண்டிருக்கிறாள். எல்ஸா அவர்கள் பேசுவதை அமைதியாகவேக் கேட்டுக் கொண்டாள். அவளை பொறுத்தவரையில் கீழ்த்தளத்து அறையில் ஜன்னலை மூடிக்கொண்டு உறங்கும் அம்மாவுக்குத் தொந்தரவு நேர்ந்துவிடக்கூடாது. அப்பா "வாயை மூடிக்கொண்டிரு" என்று சொல்லியிருந்தார்.
பட்டாம் பூச்சியொன்று அவளது திறந்திருந்த புத்தக ஏட்டில் மெள்ள காற்பதித்து உட்காருகிறது. எல்ஸா மூச்சினை அடக்கிக் கொண்டாள். தன் சுவாசம் பட்டாம்பூச்சியை எழுப்பிவிடுமென்கின்ற பயம். ஆசிரியையும், எல்ஸாவின் அப்பாவும் தோட்டத்திற்குள் நுழைந்து, இவள் படுத்திருக்கின்ற 'திய்யேல்' மரத்தை நோக்கி வருகிறார்கள். அவர்களின் காலடி சத்தத்தில் அதிர்ச்சியுற்ற பட்டாம் பூச்சி பறந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து சென்ற எல்ஸாவின் கண்கள் எதிர்பட்ட வகுப்பாசிரியைச் சந்திக்கின்றன. ஆசிரியை அளவாகப் புன்னகைக்கிறாள். எல்ஸாவின் அப்பா என்ன நினைத்தாரோ விலகிக் கொண்டார். ஆசிரியை எல்ஸாவில் பக்கத்திலமர்ந்து நிறைய பேசுகிறாள். எல்ஸா வழக்கம்போல அமைதியாகக் கேட்டுக்கொண்டாள். 'அவள் வாயை திறக்ககூடாது, குறுக்கிடக்கூடாது. எதைச் சொன்னாலும் அமைதியாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படித்தான் அவளப்பா வளர்த்திருக்கிறார்.
எல்ஸா எழுந்தாள். தோட்டத்தில் உள்ள நடைபாதையை எப்போதாகிலும் உபயோகிப்பாள். இந்த முறை அதில் நடக்கும் போது, கால்களை அழுந்தப் பதித்துத் தேய்த்து நடந்தாள். தோட்டத்துச் சுவரினை நெருங்கி ராஸ்பெரியை கை நிறையப் பறித்துக் கொண்டாள். அதில் கொஞ்சமெடுத்து அவளைத் தொடர்ந்து வந்திருந்த, ஆசிரியையிடம் கொடுத்தாள். இருவரும் அமைதியாகப் புன்னகைத்துக் கொண்டனர். அப்பாவிடம் 'அடக்கமாயிருப்பேன்' என்று சத்தியம் செய்திருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அதை மீறுவதில்லையெனத் தீர்மானித்தாள். ஆசிரியையிடம் பேசவில்லை.
-3-
தோட்டத்தில் அழுதுகொண்டிருக்கும் எல்ஸாவிற்கு வயது 15. குட்டையான முடி. சோகம் நிறைந்த விழிகள். ஒடுங்கிய உடல்.
முழங்கால்களை மார்புபட முடக்கி, முன் கைகளால் அவற்றை இறுகப் பிடித்து, தலையை வளைத்து, முகத்தைப் புதைத்து, அவளுக்குள்ளேயே அடைக்கலம் தேடி, அவளுக்குள்ளேயே கரைந்து, அவளை அவளே விழுங்க நினப்பதுபோல சுருண்டு கிடக்கிறாள். அவளது ஊமை அதிர்வுகளை அடக்க வேண்டி, சுவாசமே நின்று போகும் அளவிற்குத் தன்னை வருத்திக் கொள்கிறாள். அசையாமல் கிடக்கிறாள். சுற்றிலும் தோட்டத்தின் நிசப்தம். மலர்களின் சுகந்த வாசம். வீதியிலிருந்தும் வெளியுலகத்திலிருந்தும் தோட்டத்தைப் பிரித்து நிற்கும் சுவரில் மண்டிக்கிடக்கும் ராஸ்பெரி, அவற்றின் சர்க்கரை மணம். பிறகு தனிமை. அந்த நிலையிலிருந்து மீளவோ, ஒரு கைப்பிடி அளவு ராஸ்பெரியை பறிக்கவோ அவளுக்கு ஆர்வமில்லை. பசி கூட தோன்றவில்லை. சொல்லபோனால் எதன் மீதும் விருப்பமில்லை. நாளை மாலைவரை, விடுதிக்குத் திரும்பும்வரை இப்படித்தான் நேரத்தைப் போக்கியாகவேண்டும்.
பூமியில் முன்பு அவளுக்குக் கிடைத்த ஆறுதலை, மண்ணுயிர்களின் எதிரொலியை மறுபடியும் தேடினாள். கண்கள் குருடாகின்ற வகையில், மூச்சை நிறுத்திக் கொள்ளும் எண்ணத்துடன் முகத்தை பூமியில் பதித்து இறுகத் தேய்த்தாள். திடுமென்று எழுந்து கொண்டாள் ' தியல்' மரத்தின் முன்னே சென்று நின்றாள். மரப்பட்டைகளை மெள்ள வருடினாள். தனது துயரங்களை விட்டுச் செல்கின்ற வகையில் மரத்தை இறுகத் தழுவினாள். அதன் வேர்களிடமிருந்து அன்றைய மாலையைச் சந்திக்கப் போதுமான சக்தியைத் தேடிப் பெற்றுக் கொண்டாள்.
இப்போதெல்லாம் எல்ஸாவிற்கு மாலையைக் கண்டால் வெறுப்பு. இரவென்றால் அச்சம். அவளது பின் கழுத்தை சுவற்றுக்குப் பின்னால் மறையும் சூரியனின் கடைசிக் கதிர்கள் தொட்டுவிட்டு விலகிக் கொள்கின்றன. அந்தி நேரம் அவளுக்குள் காய்ச்சலை ஏற்படுத்தி உடலை நடுங்கச் செய்வதால் அதனிடமும் பயம். அப்பா அலுவலக அறையிலிலிருந்து வெளிப்பட்டு கூச்சலிடுகிறார். இனி, மேலும் கூச்சலிடலாம். எல்ஸாவின் அம்மா இரண்டாண்டுகளுக்கு முன்னால் ஏதோவொரு தீராத வியாதியால் இறந்திருந்தாள். அவளுக்கினி எவரும் தொந்தரவு கொடுத்துவிட இயலாது. அம்மாவிற்காக எல்ஸா அமைதியாக இருக்க வேண்டியதில்லை. விம்மி விம்மி அழுதாள். அவ்வழுகை கேட்பதற்கு ஆளின்றி ஒலித்து ஓய்ந்தது.
-4-
தோட்டத்து நினைவுகளில் ஆழ்ந்து கிடக்கும் எல்ஸாவிற்கு வயது 20. தலை முடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது.
நினைவுகளால் தேய்ந்து, உருக்குலைந்து, உணர்ச்சியற்று மரத்துப்போன உடல். இப்போதெல்லாம் ஊஞ்சலில் ஆடுவதற்கோ, 'தியேல்' மரத்தடியில் உட்காருவதற்கோ ஆளில்லை. சித்திரகுள்ளனுக்கும், தேவதைகளுக்கும், மண்ணில் வாழ்கின்ற இனத்திற்கும் உயிரூட்ட எவருமில்லை. சூரியனை முகத்திற்கு நேரே பார்ப்பதற்குக் ஒருவருமில்லை. எல்ஸா சன்னல் வழியே வெறித்து நோக்குகிறாள். இங்கே அவளைச் சுற்றியிருந்த சுவர் வானத்தையும் பூமியையும் அவளிடமிருந்து பிரித்திருந்தது. தோட்டத்தையும் அதன் அமைதியையும் பாதுகாத்த சுவர் ஞாபகத்தில் வந்து போனது. இந்தச் சுவர் அப்படியல்ல இவளிடமிருந்து வெளியுலகத்தைக் காக்கின்ற சுவர். இவளைச் சிறை பிடித்துள்ள சுவர். இங்குள்ள சன்னலை இவளது விருப்பபடி மூடவோ அல்லது திறக்கவோ இயலாது. விளையாடுவதற்கோ, படிப்பதற்கோ அல்லது அழுவதற்குமே கூட அவள் விரும்பிய நேரங்களில் வெளியில் சென்றிட முடியாது. அதிக பட்சமாக அவள் வெளியே அனுமதிக்கப் படுகின்ற நேரம் பதினைந்து நிமிடங்கள். அப்படி அனுமதிக்கப் படுகின்ற நேரங்களில் காங்க்ரீட் வெளி வாசலில் காதினைவைத்து எறும்புகளுக்கும் மண்புழுக்களுக்கும் காத்திருப்பதென்பது நடக்கின்ற காரியமா? எல்ஸா விளையாடுவதில்லை, படிப்பதில்லை ஏன் அழுவதைக் கூட நிறுத்தியாயிற்று. மாறாக தண்டனைக் கைதியாக மணிக் கணக்காக, நாட்கணக்காக, மாதக் கணக்காக, வருடக் கணக்காக அமைதியாகக் காத்திருக்கிறாள். இந்த அமைதி மட்டுமே அவளைவிட்டு நீங்காது, தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கிறது. அந்த அமைதியின் சுவாசத்தில் மட்டுமே அவளது ஜீவன் அடங்கிக் கிடக்கின்றது. இந்த வாழ்க்கையை மறுக்கவில்லை ஏற்றுக் கொண்டாள்.
மறுபடியும் அமைதி கண்களை மூடுகிறாள்: கற்பனையில் மீண்டும் அந்த சிறுமி. சுருள் சுருளாக முடி, பளபளக்கும் கண்கள். தோட்டத்து நடைபாதையைக் கடக்கும் போதெல்லாம் கால்களை அழுந்தப் பதித்து தேய்த்து நடக்கும் சிறுமி. அறையிலிருந்துகொண்டு திறந்திருக்கும் ஜன்னல்வழியாக பட்டாம்பூச்சியொன்றின் பறக்கும் அழகை ரசிக்கும் சிறுமி. ஜன்னலருகில் கையூன்றி புன்னகை செய்யும் அம்மாவிற்கு தன்னுடைய புன்னகையை மறுமொழியாக அளிக்கின்ற சிறுமி. உயரே பறந்துகொண்டிருக்கும் 'மேக்பை' குருவிக்கு இடையூறின்றி மெள்ள நடந்து கைநிறைய ராஸ்பெரியை பறித்து மென்று துப்புகின்ற சிறுமி. இறுதியாக, கால்களாள் குழிபறித்து அதில் எல்ஸாவின் தந்தையைப் புதைத்து அவளுக்கு விடுதலைவாங்கித் தரும் சிறுமி.
பதிவுகள் மே 2004; இதழ் 41
புலம்பெயர்ந்த காகம்
- நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) -
கா காகா கா.. என்ற சத்தம் அவர் வீட்டின் பின் பக்கமிருந்து வந்திருக்க வேண்டும். கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்துக் கொண்டார். மணி காலை 5.30 என்றது. தன்னிடமிருந்த மாற்றுத் திறப்பின் மூலம் கதவினைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். கா.. கா என்ற குரல் இந்தமுறை அதிக வன்மையுடன் அவரைத் தொட்டது. பின்புறம் சென்று பார்க்கலாமா? என்று நினைத்து மீண்டும் அந்த குரல் வந்தால் போய்ப் பார்க்கலாம் எனத் தீர்மானித்தார். உறங்கிக் கிடந்த வீட்டை எழுப்ப நினைத்து ஸ்விட்சைத் தட்டினார். வெளிச்சம் நிரம்பி வழிந்தது. ஜன்னல் கண்ணாடிகளுக்கு வெளியே இருந்த பிவிசி திரைகளை மின்சாரப் பொத்தானை அழுத்தி சுருட்டினார். உள்ளே இருந்த மெல்லிய பிரெஞ்சுத் திரைச் சீலைகளும் நீக்கபட்டன. வெளியே ஆரவாரமற்ற ஐரோப்பிய வைகறை. தலையில் ஒளியைச் சுற்றிய வண்ணம் மெல்லிய உறுமலோடு குப்பைக்கூடைகளை ஒரு பகாசூரனின் பசி ஆர்வத்தோடு வயிற்றில் இட்டுக் கொள்ளும் குப்பையள்ளும் லாரி. சிறிது நேரம் அந்தக் காட்சியில் லயிப்பற்றுக் கவனம் செலுத்த, மறுபடியும் பின்பக்கமிருந்து கா கா என்ற அந்தக் குரல். இந்தியாவில் மட்டுமே அவர் கேட்டிருக்கின்ற ஓசை. குரலா? ஓசையா? எப்படி இனம் பிரிப்பது என்ற கேள்வி தேவையில்லாமல் எழுந்தது. சற்று கவனமாகக் கேட்டார். ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு காகத்தின் குரல் தான். இங்கே எப்படி?
இந்தியாவிற்குப் போகும் போதெல்லாம் அந்த குரலின் அல்லது ஓசையின் சுகத்திற்காகவே வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் புழக்கடைப் பக்கம் சென்று படுப்பது வழக்கம். அதிகாலையில் எங்கேயோ ஒரு சேவல் "கொக்கரிக்கோ " எனத் தொண்டை கமறலோடு ஆரம்பித்துவைக்க அது ஊரெல்லாம் எதிரொலித்துவிட்டு இவரது சகோதரர் வீட்டு கோழிக்கூண்டில் வந்து முடியும். இந்த நிகழ்வுக்காகவே காத்திருந்தது போல, ஒரு காகம் கா.. கா என ஆரம்பித்துக் கொடுக்க, அதனைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்திற்கு கா.. கா என்ற கச்சேரி. " இந்தப் பாழாப்போன காக்கைகள், தூக்கத்தைக் கெடுக்குதே! உள்ளே வந்து படுக்கக் கூடாதா? என்று அங்கலாய்க்கும் அவரது அம்மாவிற்குத் தெரியுமா? இந்தியாவிற்கு அவரை இழுத்துவருகின்ற விஷயங்களில் இதுபோன்ற ஓசைகளும் உள்ளடக்கம் என்று.
இந்தியாவில் இருக்கும் வரை, அமாவாசை கிருத்திகை எனக் கடவுள்களுக்கோ, முன்னோர்களுக்கோ வீட்டில் படைக்கும் போதெல்லாம் காக்கைக்குச் சாதம் வைப்பது இவராகத்தான் இருக்கும். பூவரச இலையைக் கிள்ளி ஒரு கவளப் படையலை ஏந்தி பின்புறமிருக்கும் கிணற்றடிச் சுவரில் கையிலிருக்கும் குவளைநீரைத் தெளித்து, சோற்றுக் கவளத்தை வைத்துவிட்டுக் காகத்தைத் தேடி அது ஒன்று பத்தாகும் ரசவாதத்தை மெய்மறந்து கண்களை விரியவிட்டிருக்கிறார். கடைசியாக அவரது அப்பா இறந்தபோது,காரியப் பிண்டத்தைக் குளத்தங்கரையில் வைத்துவிட்டு துக்கத்தை மறந்து, காகங்களின் ஆள் சேர்ப்பில் சந்தோஷம் கண்டது ஞாபகத்திற்கு வந்து போனது..
இப்படி திடுமென்று பிரான்சில்,அதுவும் இவர் இருக்கின்ற குளிர்கூடிய நகரத்தில் காகத்தினை எதிர்பார்க்கவில்லை. படுக்கை அறையில் நுழைந்து பால்கனி வழியாக எட்டிப் பார்த்தார்.
அவருக்கு நம்புவது கடினமாக இருந்தது. அது ஒரு காகம் அல்லது காகத்தின் சாயலில் இருந்த ஒன்று. கண்ணாற் பார்த்ததும் காதாற் கேட்டதும் அது காகம் என்று ஊர்ஜிதம் செய்தாலும், மனம் நம்ப மறுத்தது. தீர விசாரிப்பதே மெய் என்பதின் முதற் கட்டமாக கீழே இறங்கி அதன் எதிரே சென்று கொஞ்ச நேரம் நின்றார். திரும்பக் கத்தும் என எதிர்பார்த்தார். ம்.. இல்லை. மாறாக இறக்கைகளைப் படபடத்து, கண்களில் பயத்தை இடுக்கிக் கொண்டு, குதித்துக் குதித்து அருகிலிருந்த பைன் மர மெல்லிய இருளில் ஒதுங்கிநின்று என்ன நினைத்ததோ மறுபடியும் கா கா கா... அந்தக் குரலுக்கு ஆறுதல் அளிக்க அல்லது துணையாக வேறு காக்கைகள் வருமோ? எனச் சில விநாடிகள் அவர் காத்திருக்க, அங்கே அசாதரண மெளனம். குரல் கொடுத்த காக்கையிடத்தும் அந்த எதிர்பார்ப்பு இருந்திருக்க வேண்டும். எல்லாத் திசைகளிலும், தலையை நான்கைந்து முறை வெட்டி வெட்டி இழுத்துப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் இவரைப் பார்த்தது. அதன் பதற்றத்தைத் தணிக்கின்ற வகையில் மெள்ள அதனை நெருங்கிக் கைகளைக் கொண்டுபோனார். அதற்குப் பயம் குறைந்ததா அல்லது மறுபடியும் குதித்து ஓட வழியில்லையா எனத் தெரியவில்லை. அமைதியாக அசையாமல் நின்றது. மெள்ளப் பற்றினார். இந்த முறை சற்று அதிகமாக கா.. கா. என்று கூச்சலிட்டு அவரிடம் இருந்து விடுபடமுயன்று தோற்றுப் பின்னர் சோர்ந்து அவரைப் பார்த்தது. உள்ளே கொண்டு போனால் சத்தம் போடுமே என்ற கேள்வி எழுந்தது. சந்தேகத்தோடு பார்த்தார். அதற்கு என்ன புரிந்ததோ மெளனமாய் நின்றது. கைகளில் அணைத்துக் கொண்டு உள்ளே கொண்டு வந்தார்.
படுக்கையில் புரண்டு படுத்த அவரது திருமதி "என்னங்க சத்தம் ? கொஞ்சம் கதவடைக்கிறீங்களா?" என்று சொல்லிவிட்டு புரண்டு படுத்தாள். காலை எட்டு மணிக்கு முன்னதாக அவள் எழுந்திருப்பதில்லை. அவரது இரண்டு பிள்ளைகளும் அவர்களுக்கு வேண்டிய காலை உணவை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதற்குப் பிறகு தங்களைத் தாங்களே தயார்படுத்திக்கொண்டு அவரவர் பள்ளிக்கோ அல்லது பல்கலைக்கழகத்திற்கோ சென்றார்களென்றால் திரும்பிவர, மாலையாகிவிடும். எட்டுமணிக்கு எழுந்து, பத்துமணிக்கு சமைக்க உட்கார்ந்து பதினோருமணிக்கு வீட்டைச் சுத்தப் படுத்துகிறேன் என ஆரம்பித்தால் பின்னேரம் வரை சுத்தம் செய்து கொண்டிருப்பாள். அவளுக்கு எல்லாம் பளிச்சென்று அந்தந்த இடத்தில் இருக்கவேண்டும். அவளைத் தவிர அந்த வீட்டில் யாருமே அசுத்தவாதிகள் என்பது அவளது கட்சி.
கொண்டுவந்த காகத்தைச் சமயலறையின் மேசையில் நிறுத்தி, குக்கரில் நேற்றைய சாதம் ஏதேனும் இருக்குமா என்றுபார்த்தார். இருந்தது. ஒரு பிடி எடுத்து ஆர்வத்தோடு அதன் முன் வைத்தார். கா கா.. எனச் சொல்ல நினைத்து வெட்கப்பட்டு ஆவலைத் தணித்துக் கொண்டார். இப்போது அவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது. எங்கேஅது தொண்டை கிழியக் கத்தி ஊரைக் கூட்டிவிடுமோ என்ற பயம். அப்படி ஏதும் நிகழ்ந்து விடவில்லை. மாறாக, உணவை ஆவலோடு அலகில் முடிந்த மட்டும் கொத்தி விழுங்க ஆரம்பித்தது. சந்தோஷம் நிறப்பிரிகையாய்த் தோகைவிரித்தது. அவருக்குள் இருந்த மன அழுத்தம் குறைந்திருந்தது
சம்தி அவரது குடும்பப்பெயர் அல்லது முதலாவது பெயர் எனச் சொல்லலாம். பெயருக்கு முன்னால் தகப்பன் பெயரைப் போட்டுக் கொள்ளுவதில் என்ன குழப்பமோ? பிரான்சில் எல்லோருக்குமே இந்த குடும்பப்பெயர்தான் முதற் பெயர். ஒருவரை அடையாளப் படுத்துவதற்கு உதவுவது என்னவோ இந்தக் குடும்பப்பெயர்தான். சொந்தப்பெயர்கள் வீட்டில் மட்டுமே பயன்படுத்தபடும். இந்தக் குடும்பப் பெயரை வைத்து வம்சாவளிகளை எத்தனை தலைமுறையானாலும் அடையாளப் படுத்தமுடியும். ஆனால் அவருக்கு சம்தி என்ற பெயர் வந்ததில் சுவாரஸ்யமான செய்தி உண்டு.
அப்போது புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களுக்கு அடிமைப் பட்டிருந்தநேரம். வியட்நாம் போருக்கு, பிரெஞ்சு ராணுவம் ஆட்சேர்த்துக் கொண்டிருந்தது. சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ தண்டிக்கப்பட்டிருந்தவர்கள் எல்லாம் கப்பல் ஏறினால் விமோசனம் கிடைக்கும் எனக் காத்திருந்த காலம். அப்படிக் காத்திருந்தவர்களிலே கோவிந்தசாமியும் ஒருவர். தமிழ்ப் பெயர்களை உச்சரிக்கச்சிரமப்பட்ட பிரெஞ்சுக்காரன் அவனுக்குத் தோன்றிய பெயர்களையெல்லாம் தமிழனுக்கு வைத்தான். அவருக்கு முன்னே வரிசையில் நின்றவர்களுக்கு வாரத்தின் நாட்களின் பெயர்களை வைத்துக் கொண்டு போக, இவருக்குக்கிடைத்தது 'சம்தி'. 'சம்தி' யென்றால் பிரெஞ்சில் சனிக்கிழமை. வேலுநாயக்கர் கோவிந்தசாமி சம்தி கோவிந்தசாமியாகி இருபது ஆண்டுகாலம் வியட்நாம் , அல்ஜ"ரியாஆகிய நாடுகளில் 'சொல்தா' வாகக் காலந் தள்ளிவிட்டு கணிசமான பணத்தோடு இந்தியாவிற்குத் திரும்பி கிராமத்தில் வீடு, நிலம் என வாங்கிப் போட்டு, பிரெஞ்சுக்காரன் கொடுத்த பென்ஷனில், ராஜ வாழ்க்கை. அதைத் தொடர வேண்டுமே, அவரது இரண்டாவது மகன் சம்தி பாஸ்கரனை பிரான்சுக்கு அனுப்பி வைத்தார்.
ஏதோ ஒர் ஆர்வத்தோடு வந்து, தாசி வீட்டின் ஆரம்பகால போகியாய்த் தொடர்ந்த சம்தி பாஸ்கரனின் பிரான்சு வாழ்க்கை, இந்த 30 ஆண்டுகளில் அவர் அறிந்தோ அறியாமலோ எதை எதையோ இழந்து கசந்து முடிந்திருக்கிறது. இங்கே வானும் மண்ணும், நீரும் காற்றும்கூட ஒருவித அன்னியத்துடன் பழகி வந்திருப்பதை உணரத் தலைப் பட்டபோது காலம் கடந்திருந்தது. பிரான்சுத்கு வந்தவுடன், பிரெஞ்சு ராணுவத்தில் ஒரு வருடக் கட்டாய சேவையை முடித்து வெளிவந்தவருக்கு ஏமாற்றங்கள் வரிசையாய்த் காத்திருந்தன. வேலைவாய்ப்பின்மை, பெருகிவரும் வன்முறை, எனத்தொடரும் பிரச்சனைகளுக்கு வெளிநாட்டினரே காரணம் என்று வலதுசாரித் தீவிரவாதக் கட்சிகள் குற்றஞ் சாட்ட, அதைக் ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக அவர் இன்றைக்குவரை வேலை செய்த தொழிற்சாலையில், பயணம் செய்யும் பஸ்ஸில், மருந்து வாங்கப்போன பார்மஸியில், ஏன் நேற்றுவரை இவர் எதிர்ப்படும்போதெல்லாம் "போன்ழூர்" சொல்வானே ழில்பெர் அவனிடத்திற்கூட அந்த மாற்றத்தின் இறுக்கம் தெரிந்தது.
ஆரம்பத்தில் ஏதேதோ வேலைகள் செய்துவிட்டு அந்த ரொட்டிகள் தயாரிக்கும் உசினில் இரவு நேர ஊழியராகப் பணியில் சேர்ந்தபோது சந்தோஷப்பட்டது வாஸ்த்தவம். கைநிறையச் சம்பளம், கூடுதலாக ஏதேதோ பெயரில் ஊக்கத் தொகைகள், கனிவான நிர்வாகம், என அனைத்தும் சேர்ந்து அவரை அதிஷ்டசாலி என்றது . கற்பனையில் விரிந்த அந்த வாழ்வுக்கும் கண்முன்னே தெரிந்த இந்த வாழ்வுக்கும் இடையிலான அகன்றவெளிக்கு யார் காரணம். அவர் பிறந்த மண்ணா? புலம் பெயர்ந்த மண்ணா?
பிரான்சுக்கு வந்த புதிதில் 'சம்தி என்ற தனது பெயர்குறித்து ஒரு வித அற்பசந்தோஷம். வித்தியாசமான அந்தப் பெயரும், இங்கே வந்து அவர் தழுவிய மதமும் சேர்ந்து, பிரெஞ்சுக் காரனோடு தன்னை நிகராக்கிவிடும் என்ற பேராசை அவருக்குள்ளும் இருந்தது. மாற்றத்தை மதமோ பெயரோ அழைத்து வராது, நல்ல மனங்கள்தான் அழைத்து வரவேண்டும் என்பது அவரைப் பொறுத்தவரையில் உண்மையாகிவிட்டது. இப்படித்தான் ஒரு நாள் தொழிற்சாலையில் புதிதாக பொறுப்பேற்றிருந்த உற்பத்தி இயக்குனர் இவரை "ஷேப் த எக்கிப்" ஆக பதவி உயர்வு செய்வதற்குக் கூப்பிட்டனுப்பினான். இவரை நேரில் பார்த்தவுடன் "அடடே நீ இந்தியனா? உன் பெயரை வைத்து ஏமாந்து விட்டேன்" என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டான். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பதவி ஒரு இத்தாலியனுக்குப் போய்ச் சேர்ந்தது.
இன்றைக்கும் அப்படித்தான் தொழிற்சாலையில் கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட நட்டத்தை சரிக் கட்ட ஆட்குறைப்பை நிருவாகம் அறிவித்தது. பாதிக்கப்பட்டிருந்த பதினைந்துபேருக்குள்ளும் அடிப்படையில் ஒர் ஒற்றுமை. சம்தி பாஸ்கரன் இந்தியா என்றால், போனிபாஸ் செனகலிலிருந்தும், தான் சூன் லாவோசிலிருந்தும், அஜ்மால் மொராக்கோவிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்தவர்கள், அந்நியர்கள் அதுதான் உண்மை.
நினைவிலிருந்து மீண்டு காகத்தைப் பார்த்தார். அதற்குக் கவனம் முழுதும் சோற்றுருண்டைகள் மீது. இந்த மனிதர்களுக்கும் காக்கைக்கும் அதிக வித்தியாசமில்லை . "உபரி" என்கின்ற போது கூவி அழைப்பதும், இல்லை என்கின்றபோது எரிச்சல் படுவதும் இயற்கை என்றாகிவிட்டது.
"என்னங்க இது? காகம் மாதிரி இருக்கே?"
மனைவியின் குரல் தீண்ட, தன் மனோ அவஸ்தைகளிலிருந்து மீண்டு அவளைப் பார்த்தார்.
"ஆமாம் காகமேதான்." அமைதியாக பதிலிறுத்தார்.
"என்னாலெ நம்ப முடியலையே!"
"நம்பித்தான் ஆகணும். எப்படியோ வந்துட்டுது. ஏன் இப்படி வரணும்? இந்த மண்ணுல சாகணும்ணு அதுக்குத் தலையெழுத்தா?"
"என்ன பேசறீங்க நீங்க? பாவம். அதற்கு பழைய இடத்துல என்ன பிரச்சினையோ?"
"இருக்கலாம். புலம் பெயரும் உயிர்களுக்குப் பிறந்த இடத்திலும் பிரச்சினை, புகுந்த இடத்திலும் பிரச்சினை" சொல்லியவரிடமிருந்து நீண்டதொரு பெருமூச்சு.
பதிவுகள் பெப்ருவரி 2003; இதழ் 38
தூரம்
- நாகூர் ரூமி -
மூன்றாவது நாளாக சிவநேசன் வீட்டுக்கு தூரமாகிப் போயிருந்தான். முதல் நாள் நடந்தது இன்னும் பிசுபிசுவென மனம் பூரா ஒட்டிக்கொண்டிருந்தது. ஆபீஸ¤க்குக் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். கொடியில் வெறுப்போடு அதற்கு முதல் நாள் கழட்டி எறியப்பட்ட குழாயை எடுத்து, லுங்கியைத் தூக்கி தன் வலது காலை அதன் வலது காலுக்குள் செலுத்த முயன்று கொண்டிருந்த போதுதான் அது நடந்தது.
அடி வயிற்றில் திடீரென்று ஒரு இடி. ஒன்றும் புரியவில்லை. அது அடிவயிறென்றே முதலில் அவன் நினைக்கவில்லை. வலது பக்க இடுப்புப் பகுதியில் வலிப்பதாகத்தான் நினைத்தான்.
"அம்மா" என்று அவனையறியாமல் கீழே உட்கார்ந்துவிட்டான். அப்பென் டிசைடிஸாக இருக்குமோ? உள்ளேயே வெடித்துவிட்டதோ? ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ வெடித்துச் சிதறிய உணர்வுதான் இருந்தது. இதுவரை அப்படிப்பட்ட ஒரு வலி அவனுக்கு வந்ததேயில்லை. வேற்று கிரகத்து வேதனயாகத் தெரிந்தது அது.
அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு குழாயை பாதி மாட்டிய காலுடன் தரையில் உட்கார்ந்து விட்டான்.
அவன் போட்ட 'அம்மா' ரொம்ப புதுசாகவும் சற்று ராட்சசத்தனமாகவும் இருந்ததை உள்ளுணர்வால் உணர்ந்து கொண்ட பார்வதி சமையல் கட்டிலிருந்து ஓடோடி வந்தாள்.
"என்னங்க? என்னாச்சு?" பதறினாள். எப்போதும் போல. அப்படி தரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவன் உட்கார்ந்து அவளும் பார்த்ததில்லை. கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள்.
"சனியனே என்னன்னு தெரியலடி. நீ வேறெ உயிரெ வாங்காதெ" அவன் வழக்கம்போல பதில் சொன்னான். வயிற்றுப் பகுதியைப் பிடித்துக்கொண்டே. அப்போதுதான் அவள் கவனித்தாள்.
அடிவயிற்றுப் பகுதியில் 'அந்த' இடத்தில் லுங்கி பூராவும் ரத்தக்கறையாக இருந்தது.
எய்ட்ஸ் வந்த புள்ளிராஜாவாக தன் கணவன் மாறிவிட்டானா என்ற சந்தேகத்துடன், "என்னங்க, இது என்னங்க?" என்று அவன் கவனத்தை அந்தப்பகுதிக்குத் திருப்பினாள்.
"எங்கெயாவது அடி பட்டுச்சா?"
அப்போதுதான் அவனும் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
"சனியனெ, தெரியலெ. நீ வேறெ. அடிபட்டுச்சா கிடிபட்டுச்சான்னு. அதெல்லாம் ஒன்னுமில்ல. இது என்னன்னு பாரு"
அவள் அவனை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று பார்த்தாள்.
அதுதான்.
வெள்ளை வெள்ளையாக, திப்பி திப்பியாக, ரத்தக் கட்டிகளுடன் இருந்தது. உறுதியாகிவிட்டது. இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. வியப்பும் மௌனமும் இருவர் கண்களிலும் முகத்திலும் வந்து குடியேறிக்கொண்டன. சிவநேசனுக்கு வியர்த்துக் கொட்டியது. ஆள்மாறாட்டம் மாதிரி பால் மாறாட்டமா? பம்பாய்க்குப் போகாமல், ஊசி ஏதும் போடாமல், அறுவை ஏதும் செய்யாமல் என்ன இது? இது உண்மைதானா என்று சந்தேகமாக இருந்தது. இது சாத்தியமா?! பரமஹம்சரைத்தான் கேட்க வேண்டும். அவரும் இப்போது இல்லை. ஒரே குருதியாகவும் குழப்பமாகவும் குத்தலாகவும் இருந்தது.
பார்வதி அறையைச் சாத்தி வைத்தாள். பிள்ளைகள் பார்க்காதவாறு செய்தாள். என்றுமில்லாமல் திடீரென்று அப்பா ஆபீஸ¤க்குப் போகாமல் 'உட்கார்ந்து'விட்டதன் ரகசியம் புரியாமல் வளர்ந்த பிள்ளைகள் குழம்பினர்.
"மெடிகல் லீவு சொல்லிடவாங்க?" மெதுவாகக் கேட்டாள்.
"என்ன எழவு லீவாவது சந்தானத்துக்கு ·போன் பண்ணி சொல்லிடு"
தற்காலிகமாக ஒரு துணியைக் கொடுத்து வைக்கச் சொல்லியிருந்தாள். பாட்டி வைத்தியம். அவனும் வேறுவழியின்றி அவள் தொலைபேசச் சென்ற இடைவெளியில் அதை வைத்துக்கொண்டான். அவனுக்கே வெட்கமாக இருந்தது. சனியன், இதை வைத்துக்கொண்டு எப்படி வேலை செய்ய முடியும்? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. பார்வதி வந்து பார்த்துவிட்டு ஒழுங்காக வைத்துவிட்டாள்.
ரொம்ப களைப்பாக வந்தது. கால்களெல்லாம் வலியெடுத்தன. யாரோ அடித்துப் போட்டமாதிரி இருந்தது. அனிச்சையாக தன் கால்களைத் தானே பிடித்து விட்டுக்கொண்டான். மஸாஜ் செய்வது மாதிரி. அப்போது அவனுக்கு பார்வதியின் நினைவு வந்தது. அவளும் இப்படித்தான் அந்த ஏழு நாட்களும் செய்து கொண்டிருப்பாள்.
"சனியனே எப்பப்பாரு ஒரே மஸாஜ்தானா? ஊர் ஒலஹத்துல யாருக்கும் வர்றதில்லையா? போய் காப்பியெப் போடு"
பார்வதி ஒன்றும் சொல்வதில்லை.
திடீரென்று மறுபடியும் இடி இடித்தது.
"அம்மா" என்று மறுபடியும் வயிற்றைப் பிடித்துக்கொண்டான். படுக்கையில் புரண்டான். முடியவில்லை. வலி உயிர் போய்விடும் போலிருந்தது. பார்வதி மறுபடி வந்தபோதும் அவன் புரண்டு கொண்டிருந்தான். ஆனால் அவள் முன்னெச்சரிக்கையாக மாத்திரைகள் கொண்டுவந்திருந்தாள்.
"அம்மா வலிக்கிதே" மறுபடி கத்தினான். விட்டு விட்டு வலித்தது.
"இதெப் போட்டுக்குங்க. கொஞ்ச நேரத்துல வலி கொறையும்" என்று சொல்லி ஒரு அனுபவமிக்க கைனகாலஜிஸ்ட்டின் தோரணையில் ஒரு காப்ஸ¥லையும் தண்ணீர் டம்ளரையும் கொடுத்தாள்.
ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான். அந்த நாட்களில் பார்வதியின் வேதனையைக் குறைப்பதற்காக டாக்டர் வசந்தா 'ப்ரிஸ்க்ரைப்' பண்ணிய ஸ்பாஸ்மோ ப்ராக்ஸிவான் காப்ஸ்யூல்தான். சிவப்பு காப்ஸ்யூல். அதுவும் சிவப்பாகத்தானா இருக்க வேண்டும்? ஒன்றும் சொல்லாமல் போட்டுக் கொண்டான். எத்தனையோ முறை அவள் சொல்லிவிட்டும் அவன் வாங்க மறந்துபோகும் காப்ஸ்யூல்.
மறுநாளும் ஆபீஸ¤க்குப் போகமுடியவில்லை. வேதனை அதிகரித்திருந்தது. ரத்தப் போக்கும் அதிகமாக இருந்தது. அதோடு சில நிமிஷங்கள் இருந்தது வலி இப்போது சில மணி நேரங்கள் என மாறிவிட்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் தான் பார்வதியாகவும் பார்வதி மீசையுடன் கூடிய தானாகவும் மாறப்போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஒருவகையான ஆச்சரியமும் எதிர்பார்ப்பும்கூட அவனிடம் வளர ஆரம்பித்தது.
மூன்றாவது நாள் அவனுக்கு ஓரளவு பழகிப் போயிருந்தது. அந்த மாத்திரை வேலை செய்யத்தான் செய்தது. வலி குறைந்த மாதிரி இருந்தது. ஐந்தாம் நாள்தான் ரத்தப்போக்கு குறைந்தது இடியுடன் கூடிய மழை விட்டு தூரல் ஆரம்பித்திருந்தது.
அடிக்கடி யாருமில்லாதபோது லுங்கியை உயர்த்திப் பார்த்துக்கொண்டான். எல்லாம் எப்போதும்போல சரியாகத்தான் இருந்தது. மழையையும் அடிவயிற்று இடியையும் தவிர. அது ஒன்றுதான் புதுசு. அவனுக்கு ஆச்சரியம் கூடியது. சரி என்னதான் ஆகிறது பார்ப்போமே என்று ஆறாம் நாள் குளிர் விட்டுப் போனது.
இதில் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. இது தொடருமா? அப்படித் தொடர்ந்தால் அதன் விளைவுகளைப் பற்றிக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. எப்படி இதைத்தீர்ப்பது? டாக்டரிடம் காண்பிப்பதா? அதன் பிறகு தொலைக்காட்சிகள், தினசரிகள், வாராந்தரிகளில் ·போட்டோவுடன் கட்டுரை வரும். இந்தியாடுடே தமிழின் அட்டைப்படத்தை அலங்கரிக்க வேண்டிவரும். "ஒன்பதாகிப்போன உலகின் எட்டாவது அதிசயம்" என்று தலைப்பு போடுவார்கள். அதன் பிறகு நிலைமை என்னவாகும்? எப்படி ஆபீஸ் போவது? ஆபீஸை விடு. எப்படி வெளியில் போவது? எப்படி குழந்தைகளை சந்திப்பது தினமும்? சொந்தக்காரர்களை? நண்பர்களை?
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்றாகத்தான் இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வாழ்க்கையைத் தொடர முடியாது என்பது புரிந்தது. ஒரு வாரம் கழித்தும் மழை தொடர்ந்தால் அல்லது அடுத்த மாதமும் இதே நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்து யோசித்துப் பார்த்தான். தற்கொலை செய்துகொள்வதுதான் வழி என்பதாகத் தோன்றியது.
"என்ன சனியன் இது?" என்று தன்மீதே ஒரு வெறுப்பு தோன்றியது சிவநேசனுக்கு. அந்த 'சனியன்' அவனோடு கூடப்பிறந்த செல்லச் சனியன். அவனை எப்போதுமே அது விட்டுப்பிரிவதில்லை.
எல்லாக் கேள்விகளையும் அழிப்பதாக எட்டாவது நாள் இருந்தது. மழை சுத்தமாக நின்று நிலம் குளிர்ந்து போனது.
குளித்துவிட்டு அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன்னையே பரிசோதித்துப் பார்த்துக் கொண்டான். மறுபடியும் சுத்தமான ஆண்பிள்ளையாகிவிட்டதாகத்தான் தோன்றியது. 'அந்த ஏழு நாட்க'ளுக்கான எந்த அடையாளமும் இல்லை. சந்தோஷமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. வழக்கம் போல ஆபீஸ¤க்குக் கிளம்பினான். வருவது வரட்டும். ஆனால் தொடர்ந்து வந்த நாட்கள் அவன் பயம் தேவையற்றது என்பதை அவனுக்குப் புரியவைத்தது.
பார்வதி அவனுக்குக் காபி கொடுக்கும்போதுதான் கவனித்தான்.
"ஒடம்பு சரியில்லாயா பாரா?"
பார்வதியின் புருவங்கள் அகன்று மேல் நோக்கி வளைந்தன. அவன் 'பாரா'ன்னு அவளை அழைத்து எத்தனை வருஷங்களாகிவிட்டது! கல்யாணமான புதிதில் அழைத்தது! மறுபடியும் அதே கரிசனம், அதே தொனியுடன் பாரா!
"என்ன பாரா, பதிலையே காணோம்?"
"ஆமாங்க. இன்னிக்கிதான்..." சந்தோஷத்தால் அவளால் தொடர்ந்து சொல்லி முடிக்கக்கூட முடியவில்லை.
"ரெஸ்ட் எடுத்துக்க. ஒன்னும் சமைக்க வேணாம். நா வரும்போது ஒனக்கு ஸ்பாஸ்மோ வாங்கி வந்துர்றேன்"
அவள் கன்னத்தை தடவிவிட்டு கெஞ்சுவது போலச் சொல்லிவிட்டுப் போனான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் பெப்ருவரி 2004; இதழ் 50
நுடம்!
ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)
நேஹாவின் போக்கு எனக்குப் புரியவே வெகு நாட்கள் ஆயின. என் சொந்த மகளே எனக்குப் பல சமயங்களில் புரியாத புதிராய் தான் இருந்தாள். சமீபகாலமாய் சிறுமியின் போக்கில் அதிகமான தீவிரம். இத்தனையிலும் வேதனை என்னவென்றால் சிந்திக்கவும் சில நிமிடங்கள் கிடைக்காத என் வேலை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்டாயம். பொருளாதாரம் காரணமாய் இல்லாமல் படித்து விட்டதன் ஒரே காரணமாய், கிடைத்த நல்ல வேலையை விட மனம் இல்லாமல் நான் வேலையை உடும்புப்பிடியாய் பிடித்திருந்தேன். இயல்பாகவும் எனக்கு வீட்டு வேலைகள் செய்ய துளியும் பிடிக்காது. பணிக்குச் சென்று பொருளீட்டுவது என்பது எனக்குப்பேருவகை கொடுத்து வந்திருக்கிறது. நேஹாவின் நினைவில் ஆழ்ந்து விடும் இம்மாதிரித் தருணங்களில் மட்டும் நான் என் வேலையை வெறுப்பதுண்டு. இந்த மனவேதனையைக்கூட கணவருடன் பகிர்ந்துகொள்ள மனம் இடம் கொடாது. இதே சாக்காக வைத்துக்கொண்டு 'வேலையை விட்டுடு' என்ற பல்லவியை ரம்பித்து மூளைச் சலவை செய்து விட்டாலோ? என்ற பயம். அம்மாவிடமோ கேட்கவே வேண்டாம்.
ஆறு வயதிற்குச் சற்று அதிகமாக முரட்டுத்தனமும் பிடிவாதமும் நேஹாவிற்குச் சமீபகாலமாய் இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது. நேற்று அவள் வகுப்பு சிரியை அவசரமாய் அழைத்துத் தொலைபேசியில் பேசியதிலிருந்து இந்த நிமிடம் வரை மனதைக்குடைகிறது. யோசிக்கவென்று வலுவில் தேடிக்கொண்ட இந்தத் தனிமைக்கு நான் கொடுத்தவிலையோ என் மதிய உணவு. ¦அண்டன் வேயின் அந்த சந்தடி மிக்க உணவங்களில் என்னால் யோசிக்கவே முடியாது என்று தெரிந்து தான் தனிமையான அந்த மரத்தடியைத் தேடிச்சென்றேன்.
காலையில் நான் செய்த வேலைகளில் ஒரு தவறும் இல்லாமல் இருந்தால், நிச்சயம் அது இமாலையச் சாதனையே. கைகளும் கண்களும் தங்கள் வேலைகளைச் செய்த வண்ணமிருக்க மனம் மட்டும் தன் போக்கில் பிடிவாதமாய் அசை போட்டவண்ணம் இருந்தது. மதியம் போய் தான் சரி பார்க்கவேண்டும்.
குற்றம் குறைகளைக் கூறி விட்டு, அவள் நன்றாகப் பாடுகிறாள், பேசுகிறாள், மற்ற பிள்ளைகளோடு அருமையாகப் பழகுகிறாள் என்றெல்லாம் ஆசிரியை கூறிய போதிலும் முதலில் கூறிய குற்றப் பத்திரிக்கையைத் தானே என் மனம் மீண்டும் மீண்டும் அலசுகிறது. நிச்சயம் அது குற்றமாகச் சொல்லப்பட்டதால் அல்ல. தீர்வே காணாமல் மூன்று வருடங்களாய் என்னைக் குழப்பும் அவள் போக்கும் அது அடைந்திருக்கும் தீவிரம் தான் மனதைச் சஞ்சலப்படுத்துகிறது.
ஆசிரியையிடம் எதிர்த்து வாயாடுகிறாளாம். எது சொன்னாலும், தயாரான பதில். அதுவும் துடுக்கான இடக்கான பதில் தயராய் வைத்திருந்தாள்.நேற்று வகுப்பில் அவரவர் குடும்பத்தாரின் படத்தை வரைந்து வண்ணம் தீட்டச்சொல்லியிருக்கிறார் ஆசிரியை.இவள் எல்லாவற்றையும் செவ்வனே செய்து,வழக்கம் போல் தாயாருக்கு --அதாவது எனக்குக் கால்கள் வரையவில்லை. முழங்கால் வரை மிக அழகாக வைரைந்திருந்தாளாம்.
எல்லொரையும் தாத்தா,பாட்டி கமலா உள்பட எல்லோரையும் வரைந்து வண்ணமும் நன்றாகத்தீட்டி முடித்தவள், எவ்வளவு சொல்லியும் நேஹா கால்கள் வரைய மறுத்திருக்கிறாள்.அதன் பிறகு அவள் ' நான் எப்பொதுமே இப்பிடித்தான் வரைவேன், வேற மாதிரி வரைய மாட்டேன் ,' என்று பிடிவாதமாய் கூறியது தான் சிரியைக்கு எரிச்சலைத்தந்தது போலும். நேஹாவைப்பற்றி அவர் முழுமையாக இன்னும் அறியவில்லையே. வருடம் தொடங்கி ஓரி மாதங்களே ஆகியிருந்தன. பாலர் பள்ளி சிரியர்கள் புரிந்து கொள்ள இரண்டு வருடம் எடுத்தனரே, அதே போல தொடக்கப்பள்ளியிலும் ஆகுமல்லவா?!
பெற்ற தாயான எனக்கே அவளின் சில செயல்கள் பழகிவிட்ட போதிலும் புதிராய்த்தானே இருக்கிறது. னேஹா பிறந்ததிலிருந்து, வருடக்கணக்கில் வீட்டில் பணிபுரியும் கமலாவிற்கும் பழகிவிட்டது. ஆனால் புரிய மட்டும் இ¢ல்லை.நடுத்தர வயதான காரணத்தாலோ என்னவோ கமலா பொறுமையாக நேஹாவைச் சமாளிக்கிறார் இல்லையென்றால் வெகுவாகச் சிரமப்பட்டிருப்பேன்.
நேற்றிரவு பேசியதில் அவளை ஒரு மனோதத்துவரிடம் காண்பிக்கலாம் என்று கணவரின் லோசனை ஓரளவு சரியெனப்பட்டது. அதே சமயம் நிலைமையின் தீவிரமும் புரியவில்லை. மருத்துவரின் உதவிதேவையா என்றே புரியவில்லை. ஒரே குழப்பம்.
மூன்று வயதில் பாலர் பள்ளியிலேயே ஆங்கிலப்பாடமும் சரி தமிழ் பாடமும் சரி தானாய் அனாயாசமாய்ச் செய்யக் கூடிவள் தான். இருப்பினும் அம்மாவை வரைச்சொன்னால் காலில்லாமல் தான் வரைவாள். ஆரம்பத்தில் பெரிய விஅயமாகப்படாத போதிலும் தொடர்ந்து நேஹா அப்படியே வரைவது என் மனதை உறுத்தவே செய்தது. ' ஏம்மா அம்மாக்கு காலில்லேன்னா எப்பிடி நடப்பேன்? நேஹாக் குட்டி அம்மாவுக்கும் கால் வரையியாம்' என்று நைச்சியம் செய்தலோ போனால் போகிறதென்று சிறிது மனமிரங்கி, ஒரு சக்கர நாற்காலியில் என்னை உட்காரவைக்கத் தயாராய் இருந்தாளே தவிர எனக்குக்கால்கள் மட்டும் அவள் வரையத்தயாராய் இல்லை.
போன வருடம் டான் டோக் செங் மருத்துவமனையில் நண்பர் ஒருவரை காணச்சென்றிருந்தோம் நானும் என் கணவரும் நேஹாவும் எங்களுடன் வந்திருந்தாள்.அங்கு ஒரு பெண் காலில் எலும்பு முறிவால், நடக்க முடியாத காரணத்தால் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்த நேஹா அங்கேயே சில நிமிடங்கள் அதைப் பார்த்தபடி மேற்கொண்டு நடக்காமல் நின்று விட்டாள். வைத்தகண் வாங்காமல் அந்த சக்கர நாற்காலியையே பார்த்தபடி நின்றவளை கிட்டத்தட்ட உலுக்கி இழுத்துக்கொண்டு தான் நாங்கள் மேற்கொண்டு நடந்தோம். அவள் வெகு தூரம் சென்றும் கூட தன் பார்வையை அந்நாற்காலியை விட்டு அகற்றாமல் கழுத்தைத்திருப்பிப் பார்த்துக்கொண்டே வந்தாள்.
அன்று மாலை திடீரென்று நேஹா, 'அப்பா, நாம ஹொஸ்பிடல்ல பாத்தோமே வீல் சேர், அதே மாதிரி அம்மாவுக்கும் ஒண்ணு வாங்கிடலாம்பா ' என்ற போதும் எங்களுக்கு குழப்பம் தான்.அவள் முகத்தில் துளியும் சிரிப்போ சந்தேகமோ இல்லை. தீர்மானமான தொனி வார்த்தைகளில் இருந்தது. ' நடக்கமுடியாட்டாதான் வீல் சேர் வேணும்மா. அம்மாவுக்குதான் நடக்க முடியுமே,' என்று அவர் சமாளித்தாலும், எனகள் இருவர் மனங்களிலும் அடித்த குழப்ப அலைகளை அப்போது எங்கள் முகங்கள் காட்டின.
இதைப்பற்றி நிறைய பேசி அலசியிருக்கிறோம். கணவரும் சரி என் அம்மாவும் சரி என் வேலைக்கு உலை வைக்கத் தயாராய் இருந்தனர்.எல்லா பேச்சும் தீர்வில்லாமலேயே முடிந்து வந்தது. வேலையை விடத்தான் நான் தயாராய் இல்லையே. எத்தனை பெண்கள் வேலைக்குப்போகிறார்கள்.ஊருல உலகத்துல வேலைக்குப் போறவங்களுக்கெல்லாம் பிரச்சனையே வருவதில்லையா என்ன? சமாளிக்க வேண்டும் , சமாளிப்பேன் என்ற மன உறுதி என்னை வேலையுடன் வலுவாய் பின்னிவிட்டது.
மற்ற நேரங்களில் எல்லாப்பிள்ளைகளையும் போலவே தான் இருப்பாள் இந்த ஒரு விஅயம் தவிர. அம்மாவிடம் ஆசை, பாசம் எல்லாம் சற்று அதிகமாகவே உள்ளவள் தான். அப்பாவிடமும் ஒட்டுதல் அதிகம். இரக்க குணம் அதிகம். நாய் பூனை இவைகளைக்கண்டால் கண்களில் மகிழ்ச்சி மின்னும்.
' உங்களுக்கு நான் சமைக்கஹெல்ப் பண்ணவாம்மா ? ' என்று பெரிய மனுஅ¢யைப்போல் அடிக்கடி கேட்பாள். 'அப்பா உங்க காடிய நாம ரெண்டு பேருமா வாஷ் பண்ணுவோமா' என்றுஅப்பாவையும் கொஞ்சிக் கொஞ்சி அழகாய் கேட்பாள். அம்மா அப்பாவிடம் கோபமும் நேஹாவுக்கு வரும் அடிக்கடி.
காலில் செருப்பு அணியாமல் இருக்க அவளுக்கு ஏனோ ஆர்வம் அதிகம்.வெறும் காலுடன் நடக்க அவள் மிகவும் ஆசைப்படுவாள். நான் வீட்டில் காலணிகள்அணியாத நேரங்களில் என் கால்களை அவள் ரசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில் அவள் முகம் பிரகாசமாய் இருக்கும். கண்கள் னந்தத்தில் ஜொலிக்கும். நான் காலணியணிந்தால், உடனே அவள் முகம் மாறி விடும். அவளுடைய போக்கும் மாறும். என் காலணிகளைக் கண்டாலே அவள் செய்கை வினோதமாகி விடும். புத்தம் புதிய விலை உயர்ந்த காலணியை ஆசையாய் முதல் நாள் தான் வாங்கி வந்திருப்பேன். வீட்டுக்கு வந்து நான் போட்டுப்பார்த்துக் கொண்டிருக்கும் போது நேஹாவின் பார்வையில் தீவிரம் தெரியும்.
அதன் பொருள் புரியாமல் இந்நாள் வரை நானும் பலமுறை யோசித்துச் சலித்ததுண்டு. ' நேஹாவுக்கும் அம்மாவோட அ¥ மாதிரி வாங்கிடலாமா? உனக்கு என்ன கலர்ல வேணும்' என்று கேட்டாலும் பதில் ஒரு முறைப்பாய்த் தானிருக்கும். பேசவே மாட்டாள். மகத்தில் வேறு எந்த விதமான பாவமும் இருக்காது. இறுகிப் போன முறைப்பு மட்டுமே பிடிவாதமாய் படர்ந்திருக்கும்.
விசயம் அத்துடன் முடிந்துவிட்டால் பரவாயில்லை. ஆனால், சற்று நேரம் சென்று நேஹாவின் சத்தமே இல்லையே என்று தேடினால் என் புது காலணியை வைத்துத் தன் கத்தரிக்கோலால் பலம் கொண்டமட்டும் போராடிக் கிழித்துக் கொண்டிருப்பாள். முகத்தில் தீவிரம் பளிச்செனத் தெரியும். வாய்ப்பு கிடைத்தால் விடாமல் பயன் படுத்திக்கொண்டாள். கோபமும் எரிச்சலும் வந்தாலும் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டு விடுவேன். அதையும் மீறி ஓரிரு கடும் சொற்கள் வரவே செய்யும் என் வாயிலிருந்து. மற்ற சமயங்களில் சட்டென்று அழுது விடும் நேஹா இந்த மாதிரி நேரங்களில் சலனமே இல்லாமல் இருப்பது தான் ச்சரியம். சாதாரணமாய் ஏசுவதற்கும் முன்னால் அழுதுவிடும் நேஹாவா இவள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவள் கண்களில் வெற்றியின் பெருமிதம் தான் தெரியும்.
பொதுவாய் எந்தப் பொருளையும் அழிக்கும் சுபாவம் அவளுக்கு இல்லை. காலணிகள், அதிலும் என் காலணிகள் தான் அவளை ஏனோ வெறுப்படைய வைத்தன. இது ஏனென்று நான் பல முறை யோசித்ததுண்டு. என் கேள்விகளுக்கு பதில் மட்டும் கிடைத்ததே இல்லை.
சரி,பெண் குழந்தைகளுக்கு ஆடை அணிகலன்களில் இருக்கும் மோகம் தான் போலும் நேஹாவிற்கும் என்று நினைத்தேன். தாயானாலும் என்ன, என்னிடம் பொறாமையோ என்று நினைத்து, நேஹாவுக்கும் அது போல காலணிகள் வாங்கிக் கொடுக்கலாம் என்றும் முயற்சித்தேனே. னால் அவற்றை அவள் பிடிவாதமாய் அணிய மறுத்துவிட்டாள்.ஏன் கையில் எடுத்துக்கூடப் பார்க்கவில்லை.
இதன் பலனாய் எங்கள் வீட்டில் காலணிகள் நேஹாவின் கைக்கு எட்டாத உயரத்தில் தான் வைப்பது வழக்கமாகிவிட்டது.என்னிடம் நேஹாவுக்குக்கோபம் வந்தால் நாற்காலியில் ஏறி எடுத்தாவது என் காலணிகளை கிழித்துவிடுவாள்.
யோசித்து யோசித்து யாசம் மட்டுமே மிஞ்சிய வேளையில், அம்மாவிடம் பேசினால் என்ன என்று தோன்றவே, கையடக்கத் தொலைபேசியை உயிரூட்டி,அ ஹலோ, அம்மா,எப்பிடி இருக்கீங்க, அப்பா எப்பிடியிருக்காரு.நேஹாவோட டீச்சர் கூப்பிட்டுப் பேசினாங்கம்மா. ஆமா, ஆமா அதே பழைய பிரச்சனையே தான்.ம்,,.. இல்ல இல்ல. ஐயோ அம்மா, இப்போ தானே ப்ரைமரி ஒன்ல இருக்கா. இப்பவே என்ன நீங்க இப்பவே அவ பீயெஸேல்ஈ எழுதப் போற மாதிரி பேசறீங்க? ஆமா,.. நாங்க அவள சைக்கியாட்ரிஸ்டு கிட்ட கூட்டிட்டுப்போகபோறோம். ம்ம்...மாம். அதுல என்னம்மா தப்பு. என்ன,..ம். சரி,.. .. ஐயோ,.அம்மா, அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம்? ம்ம்.....இல்ல, மத்த படி நல்லாதான் இருக்கா. சரி, சாயந்தரம் மறுபடி போன் அடிக்கிறேன் வச்சிடறேன்.அ
அம்மா அபிப்பிராயப்படி நான் வேலைக்குப்போவது நேஹாவுக்குப் பிடிக்கவில்லை. அதே அவளுக்கு மனதில் சொல்லத்தெரியாத வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால் நான் வேலையை விட்டுவிடுவது நல்லது. என்ன பிரச்சனை வந்தாலும் என் வேலையைக் காரணம் காட்டுவதே அம்மாவின் வழக்கம். இதே இந்த மூன்று வருடங்களாக விடாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அம்மாவிற்கு இப்போது ஒரு புதிய காரணம் கிடைத்திருக்கிறது. நாளிதழ்களில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்களே. வீட்டிலே இருக்கும் பிள்ளைகள் படிப்பில் சிறப்பாகச் செய்கிறார்கள் என்று. நாளிதழ்களுக்கும் விவஸ்தை என்பதே இல்லை. பள்ளிச் சிறார்களுக்கு நாளிதழ் வாசிக்கும் பழக்கம் பெறுகி இருக்கும் இச்சமயத்தில் இப்படிப்போட்டால் தேர்வில் அவர்கள் மோசமாய் செய்தால் அம்மாவைக் காரணமாக்கவே வழி செய்கிறார்கள்.
இதோ இப்போது அம்மாவே அதைச் சுட்டிக் காட்டித் தானே என்னை மடக்கப்பார்கிறார். நேஹா படிப்பது ஒன்றாம் வகுப்பு, ஆனால் நாளிதழைப் படித்து விட்டு அம்மா இப்போதே அவள் தொடக்க நிலை இறுதி ஆண்டில் படிப்பது போல பேசுகிறார்.
அடுத்த நாள் மனோதத்துவரீதியாய் பற்பல கேள்விகள் எங்களையும் அதி முக்கியமாக நேஹாவையும் கேட்ட மருத்துவர். அவளை சில படங்கள் வரைச்சொன்னார். மரம், வீடு என்று பல படங்கள். கடைசியில் அம்மாவை வரைச்சொன்னார். வழக்கம் போல நேஹா அம்மாவை நொண்டியாக்கினாள்.
"ரெண்டு மூணு வயசுல இருந்தத விட தீவிரம் கூடியற்கு காரணமே, அவள் வளர்வது தான். இத்தகைய பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எரிந்தால் எளிது. இல்லையென்றால் அவள் வளர வளர அதுவும் உடன் வளரும். இப்பவும் தாமதமாகல, நீங்க சரியான நேரத்துல தான் வந்திருக்கீங்க. இந்த நிலையை நாங்க டெலிஅன் பரேஅன்(deletion operation) என்றோ அரைகுறையாக காண்பது(incomplete seeing) என்றோ கூறுவோம். இதை சரி செய்வது சுலபம் தான்.செய்தால், நேஹா பள்ளியில் இன்னும் சிறப்பா செய்வா. இரண்டு நாட்களாய் பேப்பர் பார்த்திருப்பீர்களே. வீட்டிலிருக்கும் தாய்மார்களில் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாகச்செய்வதாய் கணக்கெடுப்பு காட்டுகிறது. இது கணக்கெடுப்புத் தானே தவிர முற்றிலும் ஏற்கக்கூடியதன்று. இருந்தாலும் ஓரளவு உண்மை இல்லாமலில்லை. இது உண்மையா பொய்யா என்று வாதிடல் அவசியமே இல்லை. அவரவர்கு அவரவர் குழந்தை சிறந்து விளங்கவே விருப்பம் இல்லையா? யாருமே அதை தவரென்று நிரூபிக்கவேனும் வேலையிலிருந்து கொண்டு சவாலாய் பிள்ளையை வளர்க்கலாம். ஆனால் அவர்கள் தோற்றால் அந்த வருடங்கள் திரும்ப அவர்களுக்குக்கிடைக்காது. அதை விட அந்தக் குழந்தைக்குக் கிடைக்காது. வென்றால் மகிழ்ச்சிதான்.
பெரும்பாலும் தாய் வேலைக்குப் போவது பிள்ளைகளைப் பாதிக்கலாம் என்றாலும் ஒரு சில குழந்தைக்கு அதிகமாகம் மனம் பாதிப்படைகிறது. இது விதிவிலக்கு தான். விதிவிலக்கு நம் வாழ்வில் வரும் பட்சத்தில் நாம் அதிக கவனமும் தியாகமும் செய்யவேண்டும் என்பதைத் தவிர வேறு வழில்லை. உண்மையை உணர்ந்த பின்னும் அதை விட்டு ஓட முற்படுவது மடமை. உண்மையைச்சந்திப்பது தான் புத்திசாலித் தனம். வயதாக ஆக நேஹாவின் தீவிரம் கூடும் என்பதால் இப்பவே இதை நாம குணப்படுத்தணும். கால்ல அ¥ போட்டுகிட்டு அம்மா போனா அப்பறம் ரொம்ப நேரம் கழிச்சுத்தான் அம்மாவப் பார்க்கமுடியும்னு அவமனசுல ஆழமாப் பதிஞ்சிடிச்சு. ரெண்டு வயசிலேயிருந்து அவங்கம்மாவ அவ மிஸ் பண்ணியிருக்கா.ஏங்கியிருக்கா.அதுனால அம்மவோட கால் மேலயும் காலணி மேலயும் நேஹாவுக்கு வெறுப்பு.காலும் காலணியும்இல்லாம அவ அவம்மாவ பார்க்க நினைச்சு அதையே தன் மனசுல ஆழமா பதிச்சு வச்சிருக்கா.இதனாலேயே அம்மாவ காலில்லாம அவ வரையறா. தவிர காலணிகளக் கண்டா கூட வெறுக்கறா. அப்படி வரையும் போது அவளுடைய ஏக்கத்துக்கு மருந்து கிடைக்கிது. இது ஒரு நிலை தானே ஒழிய வியாதி இல்லை. அதனால நீங்க பயப்படாம எப்பவும் போல அவ கிட்ட நடந்துக்குங்க. ஆறு வயசுல சுலபமா அவள மறக்க வைக்க முடியும். வேலைய நீங்க விட்டுட்டு அவகூடவே இருந்து, அவளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்க. நிச்சயம் அவ மறப்பா. மாறுவா. இத இப்பிடியே விட்டா பதின்ம வயது ஆக ஆக அவளுக்கே ஏன்னு தெரியாம சில வெறுப்புகள் அவளிடத்துல வளரும். உங்க மகள விட வேல ஒண்ணும் பெரிசுன்னு எனக்குத்தோணல. நிச்சயமா நீங்களும் அதேதான் நினைப்பீங்கன்னு தெரியும். அதிகம் யோசிக்காம வேலைய விட்டுட்டு ஆறு மாதம் தொடர்ந்து கண்காணிச்சுட்டு வந்து என்ன பாருங்க", விடை பெற்றுத் திரும்பிய என் மனம், வேலையை விடத் தீர்மானித்தது.
நேஹாவின் தேவைகளை மையமாய் வைத்து நான் யோசிக்கவில்லையோ. இத்தனை நாள் அவளை இரண்டாம் நிலையிலும் வேலையை முன்னிலையிலும் வைத்தே நான் யோசித்திருப்பது புரிய ஆரம்பித்தது. நேஹாவின் இடத்திலிருந்து நான் சிந்திக்கத் தவறி விட்டிருந்தது புரிந்தது. இதையே அம்மா சொன்னபோது ஏன் மனம் ஏற்க வில்லை? என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. மனோதத்துவம் என்று அறியாமலேயே அனுபவத்தில் அம்மா பற்பலவற்றைக் கற்றிப்பதை எண்ணி மனம் வியந்தது.
வீட்டிற்குச்சென்றதுமே முதல் வேலையாக அம்மாவைத் தொலை பேசியில் அழைத்தேன். தீர்மானத்தைக் கூறியதுமே அம்மா மகிழ்ச்சியில் மலர்ந்தது தொலைபேசியானாலும் என்னால் உணர முடிந்தது. குரலில் நெகிழ்ச்சியுடன் தன் சந்தோஅத்தை வெளிப்படுத்தினார். முழு மனதுடன் அடுத்ததாக என் ராஜினாமாக் கடிதத்தை கணினியில் தட்ட ஆரம்பித்தேன். நண்பர்களும் உடன் வேலை செய்பவர்களும் நிச்சயம் அருமையான வேலையை உதறுகிறாயே என்று தான் சொல்வார்கள். அதற்கெல்லாம் சலனமே படக் கூடாதென்று என் மனதிற்கு விடாமல் சொல்லிக்கொண்டிருந்தேன். வேலையை விட்டதும் மனதிற்கு வருத்தமாகத் தானிருக்கும். என் வருத்தத்தை மறக்க காலம் நிச்சயம் எனக்கு உதவும்.நேஹாவின் நினைவில் நான் நொண்டியாவதையோ இல்லை அவள் வாழ்க்கையையே நொண்டியாக்குவதையோ தாயான என் மனம் எப்படி ஏற்கும்?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56.
வடு!
- ரோஸாவசந்த் -
குப்பையை அளைந்தபடியே மறுபடியும் தலைதிருப்பி பார்த்தபோது, அவன் இன்னும் அதே மரத்தடிதிண்டில், காவி-வெள்ளையடித்த சிமெண்டுச் சிறுதெய்வத்தினருகில் அவளை பார்த்தபடி குந்தியிருப்பது தெரிந்தது. அவள் பார்பதை உணர்ந்ததும், பார்வையை விலக்கி வானத்தை பார்த்தபடி தன் மந்தமான தாடியை சொரிந்து விட்டு கொண்டான். எதிர்பக்கம் கூடியிருந்த செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து, தமிழ் சினிமா வசனம், சற்று தள்ளி இருவர் புகைத்து கொண்டிருந்த கஞ்சா புகைமணத்துடன் கலந்து, கேட்டுகொண்டிருந்தது. சாலையில் காய்கறி வண்டியுடன் சென்றுகொண்டிருந்த தமிழ் சிறுமியை பார்த்ததும் எழுந்து கைதட்டி அழைத்தான். அவள் இவனை பார்த்ததும் ஒரு கேரட்டை கொண்டு வந்து நீட்டினாள். கேரட்டை கடித்தபடியே, இயல்பானது போல் பவனை செய்தபடி மீண்டும் அவள் பக்கம் பார்வையை செலுத்தி, அவள் இன்னும் பார்த்து கொண்டிருப்பதை அறிந்து பழையபடி வானம்பார்கலானான்.
"பரதேசி நாய்க்கு ரோஷத்த பாரு!" முகத்தை அலட்சியமாய் வைத்தபடி கிளறுவதை தொடர்ந்தாள். சோம்பல் தரும் குளிர்காற்று சோம்பேரித்தனமாய் வீசிகொண்டிருந்தது. வெகுநேரமாய் தள்ளி நின்று யோசித்துகொண்டிருந்த தெருநாய், முகரும் நோக்கத்தோடு சோம்பலான உறுமலுடன் அவள் அருகில் வர, மடித்த காலி அட்டைபெட்டியால் அலட்சியமாய் அதன் முகத்திலடித்தாள். நாய் நொடிபொழுதில் தலையை பின்னுக்கிழுத்து, இரண்டடி பின்னகர்ந்து மீண்டும் புடவையருகே முகத்தை கொண்டுவந்தது.
"சீ.. போ..!" விழுந்த பலமான அடியில் `வவ்'வென்ற சத்தம் செய்துவிட்டு சாலை நடுவே சென்று, சிறிது யோசனைக்கு பின் தலையை உயர்த்தி குரைக்க தொடங்கியது.
"ஸனியனுங்க..! எழவு புடிச்சதுங்க..!" பின் அவள் முணுமுணுத்ததில் சில வசவு வார்த்தைகள் கலந்திருந்தன.
இவளை ரொம்ப நாட்களாக பார்த்து வருகிறேன். இந்த பக்கம் வரும்போதெல்லாம் இவள் கண்ணில் படுகிறாளா என்று பார்கவே, டீயும் சிகரெட்டும் குடித்தபடி காத்திருந்துவிட்டு போவதுண்டு. பார்க்க நேரிடும் போதெல்லாம் கந்தலான தோற்றத்துடனேயே இருந்தாலும், சிறு சிறு சகதிகட்டிகள் போல் முகத்திலும் கழுத்திலும் தெரிந்த வடுக்கள் இல்லையென்றால் அவள் ஒரு பேரழகியாகவே இருப்பாள் என்று தோன்றியது.
எழுந்து புடவையை சரி செய்து, சேகரித்த ப்ளாஸ்டிக் கழிவுகளை சாக்குபையில் அடைத்து, கிளம்புவதற்காக நிமிரும்போது அவன் அருகே அசட்டு புன்னகையை வரவழைக்க முயன்றபடி நின்றிருந்தான். "என்னா வேணும்?" முகத்தை திருப்பிகொண்டு உருவாக்கிய கோபத்துடன் கேட்டாள்.
"இன்னும் கோவமாவே இருக்கர போல!"
"உனுக்கின்னா வேணும் ஸொல்லு! காசு எதும் என்கிட்ட இல்லை."
"அய்ய... இதபாரு! யாருக்கு வேணும் காசு! காசுக்கா நான் பின்னாடி வரேன்!"
"அப்ப வேலையை பாத்துனு போ, எனக்கு போணம்."
தாடியை சொரிந்து, "இப்ப இன்னா பண்டேன்னு கோச்சுக்கற? ·பேட்ரி போறியான்னு கேக்கவந்தேன், அதுக்குள்ளே.."
"போறேன், போல! ஒனுகின்னா வந்த்சு? நாதான் எங்கிட்டக்க பேசவேணாம், உனுக்கும் எனக்கும் ஸம்பந்தமில்லேனு ஸொல்டேன்ல! இன்னும் இன்னா பண்ணனுன்னு பின்னாடி அலைஞ்சுனுக்கறே?"
"ஸ¤ம்மா பேசினேக்கிறியே, ஒனக்குதான் பேசதெரியுன்னு பேசறியே! நாதான் எல்லாந்தப்பு மன்னிச்சுருன்னு ஸொல்டேன்ல!"
"ஒண்ணும் ஸொல்லவேணாம் நீ, எதியும் கேக்க தயாராயில்ல நா!" குப்பை மூட்டையை முதுகில் ஏற்ற முயற்சித்தாள். அவன் அவளுக்கு உதவி, " ரெண்டு நாளா ஜொரம் வந்து குளிர்ல நோவுபட்னுக்கிறேன் தெரிமா! ஒரு வார்த்த கேட்டியா!"
" இன்னாத்துக்கு கேக்கணுன்றேன்? எனக்கு நீ பண்ணதுக்கு அன்னிக்கே உன்னைவிட்டு போயாச்சு நா! மேலெல்லா பத்த வச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறான் பாரு! என்னை ஒண்ணும் இல்லாத ஆக்கிட்டியே, பரதேசி!" மூட்டையை கீழே வைத்துவிட்டு கத்தினாள்.
"இன்னும் அதெயே பேசினிக்கிர பத்தியா! ஏதோ ஆயிபோச்சு. அன்னிக்கு மாத்ரம் தண்ணி அடிக்கலன்னா இப்டி ஆயிருக்குமா? இல்ல, நீதான் கண்ரோல்ல இருந்தினா ஆயிருக்குமா? எல்லாம் மறந்துட்டு நல்லா இருக்லான்னுதானே ஸொல்றேன். ஸரி, எங்க போற? ·பேட்ரிக்குதானே, வா, இப்டியே ஜல்தியா போய்ட்லாம்."
" நீ ஒண்ணும் வர தேவயில்ல, போறதுக்கு தெரியும் எனக்கு. இப்ப நீ இன்னாத்துக்கு ஒட்றேன்னு தெரிது எனக்கு. உன் கிட்டக்க படுக்க தயாராயில்ல நா, ஒனக்கு காசு குடுத்தும் என்னால ஆவாது... எங்கூட வராத நீ!"
"என்னா பேசற நீ! ம்.. எனுக்கு வேலை செய்ய தெரியாதா? கய்யும் காலும் இல்லியா?" அவள் இரக்கத்தை பெறும் முயற்சியாய் முகத்தை வைத்துகொண்டு, "ரெண்டு நாளா ஒடம்பு முடியல. மேலெல்லா நோகுது. கால்ல வேற காயமா போச்சு பாரு!" என்று முடி வளர்ந்த கல் போல் தோற்றமளித்த கால்புண்ணை காட்டினான்.
அவள் கவனியாமல் மீண்டும் மூட்டையை தூக்கி, " ஏன்யா மேலே பேசினே இருக்கற! மான ரோஷம் எதும் இல்லியா? உனுக்கு ஜொரன்னா எனிக்கின்னா வந்த்சு! போய் எவனுக்காவது ஊம்பி விடு! ஸரியா போகும்." என்று நகர தொடங்கினாள். அவன் புண்படும்படி தாக்கபட்டது ஒரு நொடி முகத்தில் தெளிவாக தெரிந்தது. முகமாற்றத்தை உடனே சாதாரணமாக்கிகொண்டு, " இதோ பார்! போகாத! நான் சொல்றேன் போகாத! உனுக்கு எதுனா வந்த்சுனா தெரியும்", என்று கையை பிடித்து தடுக்க, " விடு கய்ய, தொடாத என்னெ." கையை உதறி அவன் மேலே சொன்னது காதில் விழாதது போல் சென்றாள்.
திகைத்து போனவன்போல் சிறிது நேரம் அவள் போவதையே பார்த்து கொண்டிருந்தவன், திடீரென கோபம் கொண்டு தரையிலிருந்து காரைகட்டிகளை எடுத்து, "ஒரு நாளில்ல ஒரு நா எரிக்கதாண்டி போறேன் ஒன்ன, பேச்சா பேசர தேவ்டியா!" , என்று அவள்பால் எறிந்தான். சாலையை கடந்து கொண்டிருந்த அவளை தவிர்த்து, ஓடிக்கொண்டிருந்த காரினடியில் நோக்கமற்று சென்றன.
"தேவ்டியா! இவ தொழில் பண்ணினு இருந்தா நான் பாத்துட்டே இருக்கணுமா! மொகம் வெந்து போச்சாம், தொழில் பண்ண முடியலன்னு பாக்கறா! அன்னிக்கே எரிச்சிருக்கணும் இவளெ!" மரத்தடி செருப்பு தைப்பவர்களும், கஞ்சா புகைப்பவர்களும், இப்பொழுதுதான் கவனத்திற்கு வந்தது போல் பார்த்துவிட்டு, வசனம் கேட்பதை தொடர்ந்தனர். அவள் தொலைவில் எதுவும் நடவாதது போல் குப்பை மூட்டையுடன் போய் கொண்டிருந்தாள். அவனுக்கு குளிர்சியையும் மீறி வியர்த்தது.
*** *** ***
அனிச்சை செயலாய் இன்னொரு டீ சொன்னேன். பசி வயிற்றில் அமிலமாய் சுரந்து கொண்டிருந்தது. டீயும், சிகரெட்டும் அதை இன்னும் எரிய வைக்க போகிறது. சாலை முனையில் உள்ள தர்ஷினியில் பசியை தீர்த்துகொள்ள முடியும் என்றாலும், டீயை தவிர வேறு எதுவும் உள்ளே போகும் சாத்தியமில்லை. பசியை விட தலைக்குள்ளும், காலிலும் பூரான் ஓடுவது போன்ற இருப்புகொள்ளாமை பெஞ்சில் உட்கார்ந்தபடி காத்துகொண்டிருப்பதை பெரும் சித்ரவதையாய் ஆக்கிகொண்டிருந்தது. தூரத்தில் நின்றிருந்த கான்ஸ்டபிளுக்கு, சூழலுக்கு பொருந்தாமல் நான் இங்கே உட்கார்ந்திருப்பதன் காரணம் புரியும் என்றாலும் ஏனோ என்னை அணுகவில்லை. அவர் கடமையின் காரணமாக நிற்கிறாரா, மாமுலுக்காக நிற்கிறாரா என்று தெரியவில்லை. முருகன் என்ற காரணபெயரால் அழைக்கப்படும் சிறுவன் வரும் வழியாய் தெரியவில்லை. என்னை போலவே சாலையின் எதிர்பக்கம் காத்திருந்த இருவர் பீடிபற்ற வைப்பதை பார்த்து, தன்னிச்சையாய் சிகரெட் பாக்கெட்டை எடுத்தேன். டீ வந்தது.
அவன் என்னை பார்த்து "நமஸ்காரா ஸார்!" என்றான். நான் கண்டுகொள்ளவில்லை.
"ஒந்து பன்னு அரதா டீ கொடிரீ ஸ்வாமி."
கடைக்காரன் காதில் விழாதது போல் சில்லரை எண்ணிகொண்டிருந்தான். புது ஹிந்தி பாடல் ஒன்று இரைச்சலாய் அலறிகொண்டிருந்தது. இவன் சொன்னதையே மீண்டும் சொல்ல, தலைநிமிராமல் "காசு வச்சிருக்யா?" என்றான்.
"எல்லோஹ¤த்தேனே! கொட்தினி ஸ்வாமி, பன்னு மாத்ர கொடி."
"ஸ¤ம்மா கொடுக்கரதில்லே இங்கே, காசு கொடுத்து வாங்கு."
"ஆமெல கொட்தினி, நம்பிக்கெ இல்லுவா?"
" ஏ...ஹோகப்பா, ஸ¤ம்னே தொந்த்ரோ கொட்தாயிதானே...போ..போ.. இங்கே ஒண்ணும் இல்லே."
கடைக்காரனின் எரிச்சலில் மௌனமாகி, ஆயினும் நகாராமல் சுற்றிலும் பரிதாப பார்வையை படரவிட்டான். நான் திரும்பி முருகன் வருகிறானா என்று பார்தேன். கடைக்காரன் அவன் இருப்பை கவனிக்காமல் முடிந்திருந்த கேஸட்டை மாற்றி போட்டான். எதிர் பெஞ்சில் உட்கார்ந்திருந்த மூன்று பேர் அவனை பார்த்து கொண்டிருந்தனர். கருப்பாக இருந்தவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும். நடுவில் பிரதானாமாய் தெரியும் மீசையுடன் அமர்ந்திருந்தவன் நல்ல போதையில் இருப்பதை, தொடங்கியிருந்த பாடலுக்கு அவன் உடல் முழுவதையும் ஆட்டி தாளம் போடும் விதம் சொன்னது.
"ஏனு பேக்கு?" புருவத்தை உயர்த்தி தாளத்தை நிறுத்தாமல் கேட்டான்.
"பன்னு, டீ ஹேளி ஸார்" என்றான் பணிவான சிரிப்புடன்.
"நனகொந்து கெலஸ மாடுத்தியா? ஹேளுத்தினி." (எனக்கொரு வேலை செய்கிறாயா? சொல்கிறேன்.)
"ஹேளி ஸார்."
குரல் உயர்த்தி, ஏற்ற இறக்கமாய் நடிப்புடன், அவன் தன் வட்டார கன்னடத்தில் சொன்னது இவனுக்கு புரியவில்லை. சொல்லிவிட்டு குதிரைக்கு புரை ஏறியது போல் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தான். மற்ற இருவரும் தங்கள் கடமை போல் அவனுடன் சிரித்தனர். சிரித்ததில் அவர்களும் போதையிலிருப்பது தெரிந்தது. கடைக்காரன் கவனிக்கவில்லை.
"கொத்தாகில்லா ஸார்." (புரியவில்லை.)
மீண்டும் அதே போல ஏதோ சொல்லி திரும்பவும் சிரித்தான். என்ன செய்வதென்று விளங்காமல் அவர்களை பார்த்தபடி நின்றிருந்தான். தமிழன் போல் இருந்தவன் `இவனிடம் போய் கேட்கிறாயே' என்பதுபோல் தலையிலடித்து, 'போ!போ!' என்று சைகை செய்தான். போகவில்லை.
இரு மாநிற இளைஞர்கள் க்ரீஸ் எண்ணெய் படிந்த உடைகளுடன் உருதுவில் பேசியபடி வந்து, இவனை ஐயத்துடன் பார்த்தபடி, "தோ.. சாய்!" என்றான். விசாரித்த மீசை ஆசாமி பாட்டுக்கு உடலாட்டுவதில் மூழ்கியிருந்தான். இன்னும் சிறிது போதையேற்றினால் நடனமாடுவான் என்று தோன்றியது. எனது இருப்புகொள்ளாமை ஜுரம் தாக்குபிடிக்க முடியாத நிலைமைக்கு சென்றிருந்தது.
"அய்யா... பசிக்குது ஸ்வாமி! ஊட்டா மாடில்லா ஸார்....பசி தாங்க முடியலயே!" வயிற்றை பிடித்தபடி அடித்தொண்டையில் கத்தினான். கண்களில் அழுகைக்கு தயாராய் நீர் திரையிட்டிருந்தது.
"இன்னா பண்ரதுபா! என்கிட்டே கொடுக்கறதுக்கு ஒண்ணும் இல்லே." வந்தவர்களுக்கு தண்ணிர் வைத்தபடி சொன்னான். அவன் குத்துகாலிட்டு அமர்ந்து அழத்தயாரானான். "க்யா ஹ¤வா?" என்று உருது இளைஞன் விசாரித்தான்.
"அய்யோ.. பசிக்குது...நான் என்ன பண்ணுவேன், வயிறு நோகுதே..அம்மா...!" வார்த்தைகள் தெளிவற்று வெளிவராமல் உள்ளே போய், சத்தமற்ற அழுகையாய் பரிணமித்து, ஒரு எல்லையை தொட்டவுடன் பெரும் சத்தத்துடன் வெளிவந்தது. ஒரு பன்னிற்காக அழுவதை எப்படி விவரிப்பது? வந்த வேலைக்கு போக, தாராளமாய் என்னிடம் பணம் இருந்தது. என்னால் இவனுடைய பசியை தீர்த்துவைக்க முடியும்.
கடைக்காரன் வெளியே வந்து, "ஏய்... போடா! டெய்லி இதே பண்றே நீ, இன்னிக்கு கொடுக்கறதில்லே... போ!" கூஜாவிலிருந்து தண்ணீரை அவன் மேல் ஊற்றினான். விரட்டபட்ட ஆடு போல் சிறிது நகர்ந்தான்.
"அங்கே போ! அந்த பக்கம் போய் அளு! இங்கே கலீஜ் பண்ணாதே!" முழுசாய் நகற்றி அவனை பெஞ்சிற்கு பின்னால் இழுத்துவிட்ட பின்புதான் உள்ளே போனான். அழுக்கு வேட்டி விலகி அவன் உறுப்பு தெரிந்தது. முழங்கையில் தலை வைத்து, மண்ணில் படுத்த நிலையில், உடைந்த குரலில் குழப்பமான வார்த்தைகளால் அழுதுகொண்டிருந்தான்.
கடைக்காரன் இவன் தினமும் தரும் தொல்லை குறித்து, சிதைந்த ஹிந்தியில் உருது இளைஞர்களிடம் சொல்லிகொண்டிருந்தான். மூக்கை சிந்தி மடங்கியிருந்த கதவில் தடவி, ஒலியெழுப்பி கபம் துப்பிவிட்டு மீண்டும் அழுதான். கடையில் கூட்டம் சேர்ந்து, பல மொழிகள் கலந்த பேச்சு சத்தம், இன்னும் உற்சாகத்துடன் ஒலித்துகொண்டிருந்த பாடலுடன் கேட்டது. கொஞ்சம் கரிசனத்துடன் விசாரித்த உருது இளைஞர்களும் போய்விட்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் பயனற்ற அழுகை என்பது புரிந்தோ அல்லது அழ தெம்பு இல்லாமலோ, அழுவதை நிறுத்தி தரையில் கோடு போட்டுகொண்டிருந்தான். என்னை பார்த்தான். அவன் சிரிக்க முயற்சிப்பானோ என்று பார்வையை தாழ்தினேன். நிமிர்ந்த போது கோடு போட்ட குச்சியை வைத்தே பல் குத்தியபடி, பார்வையை சுழற்றியவன், மீசை ஆசாமியின் கால்சட்டை பையிலிருந்து எப்போழுதும் விழுந்துவிடும் நிலையிலிருந்த பர்ஸை பார்பதை நானும் பார்தேன். எதிர்பக்கம் காத்துகொண்டிருந்த இருவரும் அவசரமாய் பீடியை அணைத்துவிட்டு எழுந்திருப்பதை பார்த்து, நானும் உஷாராகி முருகன் வந்துவிட்டிருப்பதை அறிந்தேன்.
*** *** ***
தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் பனி தெரிந்தது. நடப்பதற்கும் ஆளற்று வெறிச்சோடிய சாலையில், தன் வர்கத்தை சேர்ந்த அவனைவிட இளையவன் ஒருவனுடன், சாவகாசமாய் வந்து கொண்டிருந்தான்.
"காபா கட மாத்றி யார்ரா ஷீக் குடுக்கறான்! குளிர்லே எப்டி உள்ளெ போச்சு! நாளிக்கு இப்டியே சிவாஜி நகர் போலாம், அங்க காட்றன் பார்."
உடலை சுற்றியிருந்த பழந்துணிகள் போதாதென்றாலும், மிதப்பில் குளிர் தெரியவில்லை. வேண்டுமென்றே முதுகில் எடை இருப்பது போல் கொஞ்சம் குனிந்து, கூட்டத்தை விலக்கி வருவது போன்ற குழம்பிய நடையில் வந்தனர்.
"ஆமா, ஏதுரா காசு உனுக்கு?"
"அப்டி கேளு, அதாண்டா.. காசு வரும் .. போகும்னு வள்ளுவர் சொல்லிகிறார் தெரிமா! தெவ்டியாபசங்க! சில தொறக்கவிடமாட்டேன்றான். பதினஞ்சாம் தேதி ஊர்வலன்னு எழுதி போட்டுக்கரான் பார்!"
"லாட்ரி எதுனா வுளுந்த்சா?"
"லாட்ரி! ஆமா லாட்ரிதான் வுளுந்த்சு!" என்று அட்டகாசமாய் வலிந்து கொண்டுவந்த போதை சிரிப்பு சிரித்து, விழப்போவது போல் போக்குகாட்டி, தெருமுக்கு திரும்பியவனின் சிரிப்பு நொடியில் உறைந்தது. மீசை ஆசாமி அதே சகாக்களுடன் நின்றிருந்தான். அவசரமாய் திரும்பும் முன் பார்த்துவிட்டிருந்தார்கள். சிரிப்பு சத்தம் முன்னமே கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.
"என்னாச்சு?"
"ஜல்தி வா. இப்டி போய்டலாம்."
"ஏன்? என்னாச்சு?"
ஓடத்துவங்கினான். ஆனால் அவர்களின் வலுவான ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் அகப்பட்டு, கால் தடுக்கபட்டு தாறுமாறாக சாலையில் விழுந்தான்.
"எல்லி ஹோகுத்தியா... நன் மகனே! நன் கை நல்லி ஆட்டா ஆடுத்தியா!" வயிற்றில் மிதித்தான். தடுத்த கைகளை பற்றி, மிக சாதாரணமாக அவனை தூக்கி, மீண்டும் கீழே போட்டு மிதித்தான். நிதானமான ஆர்வத்துடன், அவன் கைகளை அழுத்தி கொண்டு, தேர்ந்தெடுத்த இடத்தில் மிதித்தான். கூட வந்த இளையவயதினனை காணவில்லை.
"இல்லா ஸார், நானில்லா...!" அரைகுறையான கதறல்கள் விழுந்த அடிகளில் கரைந்தன. அவனை மீண்டும் தூக்கி நிறுத்தி, முரட்டுதனமாய் முகத்திலடித்து, வாசனையை உணர்ந்து, "குடிதுபிட்டு பந்திதானே, காஸ¤ நின் அம்மனா கொட்டது!". போதையையும் மீறி பல இடங்களில் வலி தெரிந்தது.
"தமிள்காரன் மானத்த வாங்க வந்திரிக்கியே, அவ்ளோதான் நீ! கவ்டா போலீஸ்ல விடாத போமாட்டான்!" கூடவந்த தமிழன் சொன்னான். மூன்றாமவன் வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்தான்.
அவன் தப்பிப்பதை மறந்து அடிகளை ஏற்றுகொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தான். தொடர்ந்து விழுந்துகொண்டிருந்த அடிகளை தடுக்க கூட முயலாமல் சூழ்நிலைக்கு தன்னை முழுமையாய் ஒப்படைத்திருந்தான். கண்கள் செருகி அப்படியே தூங்கவிடத் தோன்றியது. கௌடா விட்டால்தானே. அம்மாவின் நினைவு வந்தது. அப்பா ராயப்பன் செயலற்றுபோய் பார்த்து கொண்டிருக்க, தங்கராசு அம்மாவை நடு ரோட்டில் போட்டு மிதித்து கொண்டிருந்தான். பாலிஸ்டர் வேஷ்டி வ்¢லகும்படி தங்கராசு புல்லட்டிலிருந்து இறங்கும் காட்சி மனதில் தோன்றும் போதெல்லாம், எத்தனை முறை அவனை போட்டுதள்ளுவதை ஒத்திகை பார்த்திருக்கிறான். இந்த கௌடாவையாவது போட்டுதள்ளினால் என்ன? மனம் விரிவாகி, பெரும் சக்தி நிரம்பியது போல உணர்ந்தான். தன்னை இயல்புக்கு கொண்டு வந்து நிதானமாய் புலன்களை கூராக்கியபோது அடிகள் விழுவது நின்றிருப்பது தெரிந்தது. பேச்சு சத்தம் கேட்டது. அவள்தான்! முன் அனுபவித்தறியாத உணர்வு உடல் முழுவதும் அலையென பரவகண்டான். எப்போது, எப்படி இங்கு வந்தாள் என்று ஊகிக்க முடியவில்லை. மேகங்கள் விலகி திடீரென பெய்யும் வெயில் போல, அவள் அங்கே தோன்றியிருக்க கூடுமோவென எண்ண தோன்றியது.
கௌடா ஏதோ சத்தமாய் சொல்லிகொண்டிருந்தான். அவள் தமிழில் பதில் சொல்லிகொண்டிருப்பதால் கௌடாவிற்கு எரிச்சல் கிளம்புவதை உணர்ந்து தமிழன் அவளுக்கு விளக்க தொடங்கினான்.
"இப்ப இன்னா பண்ணணுன்றான்?" அவன் மெதுவாய் நிமிர்ந்து அவளை பார்த்தான். அவள் இதுவரை அவன் பார்த்திராத ஒரு பொலிவில் தெரிந்தாள். ஆழ்ந்த உறக்கத்திற்கு பின் விழித்து, குளித்து வந்தது போன்ற தெளிவுடன் அவள் கண்கள். அவள் முகத்தில் சிறு சிறு சகதிகட்டிகள் போன்ற அந்த வடுக்கள் இல்லை.
"காசக்கொடுத்தா விட்ருவான். இவன் கிட்டக்க எங்க காசு, அதான் எல்லா குடிச்சு தின்னுட்டு வந்திருக்கிறானே."
அவள் மார்பிலிருந்து பணமெடுத்து, "எவ்ளோ?" என்றாள்.
(1994-95இல் எழுதபட்டு, சுபமங்களாவிற்கு அனுப்பபட்டு வெளிவரவில்லை. சில திருத்தங்களுடன் தட்டச்சு செய்யபட்டு, பதிவுகளுக்கு அனுப்பபடுகிறது.)
rksvasanth@yahoo.
பதிவுகள் ஜூன் 2004; இதழ் 54.
வேட்கை!
- சுமதி ரூபன் -
காற்றின் ஓலம் அதன் வேகத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.. வெள்ளைப் புழுதியாய் பனிமணல் அலைந்து பறந்து ரோட்டில் கோலம் போட அதில் உருவங்கள் தேடித் தேடி நேரத்தைக் கொண்டுகொண்டிருந்தாள் வசந்தமலர்.. .வேலை முடியும் நேரத்திற்கு இன்னும் ஒருமணி நேரம் இருப்பது அலுப்பைத் தந்தது. நீண்ட நேரமாக காருக்குள் அடங்கியிருந்ததால் விறைத்துப்போன ஒற்றைக்காலை மேலே தூக்கி நீவி விட்டாள்..
முகுந்தன் சுருண்டு போய்க்கிடந்தான்.. சின்னதாய் ஒரு குறட்டை அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.. காதில் வெள்ளி வளையம்.. நெல்வரம்பாய் பின்னிவிடப்பட்ட தலைமயிர் உச்சியில் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது.. கன்னத்தின் ஓரத்தில் ஒற்றைவரியாய் கோடாய் கச்சிதமாய் வெட்டப்பட்ட மெல்லிய மயிர் மோவாயில் ஆட்டுத்தாடியாய் முடிவுகண்டது.. கழுத்தில் வெள்ளி ஆரம் கறுத்துப்போய் நெஞ்சு மயிரோடு சிக்கி அவன் மெல்லிய மூச்சிழுப்பில் மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்து.. கழன்று விழுமோ என்ற அச்சத்தை தந்த காற்சட்டை... ஆமிக்காரனை நினைவிற்குக் கொண்டு வந்த காலணி.. “அம்மா இது என்ர ப்ரெண்ட்” ஆரணி இப்பிடியொருவனை எனக்கு அறிமுகப்படுத்தினால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஏற்றுக்கொண்டாலும் குமார் கொண்டு போட்டுவிடுவார்.. வசந்தமலர் தனக்குள் சிரித்துக்கொண்டாள்..
குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து அவசர அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு அடுத்த வேலைக்குப் ஓடும் நேரம் இது..மீன் குழம்பு, மீன் பொரியல், கீரை, பருப்பு குமாரிற்குப் பிடித்த உணவு வகைகள். வசந்தமலருக்குத் திருப்தியாய் இருந்தது.. “அடடா கீழ் அலுமாரிக்குள் மாமா தந்த ஊர் ஊறுகாய் இருக்கே..ச்சீ சொல்லாமல் போயிட்டேனே கீரையோடு கொஞ்சம் ஊறுகாயைப் போட்டுப் பிசைந்து சாப்பிட குமாருக்கு நல்லாப் பிடிக்கும் .ம் பரவாயில்லை இரவு வந்ததும் எடுத்துக்குடுக்கலாம்.. ஆரணி தங்கையோடு வீடு வந்து சாப்பிட்டு விட்டு, ரீவி பார்க்கத் தொடங்கிருப்பாள்.. இல்லாவிடின் குப்புறப்படுத்து கால்களை மேலும் கீழும் ஆட்டியபடியே ரெலிபோணில் யாருடனாவது அரட்டை அடித்துக்கொண்டிருப்பாள்.. ஆண்களுடன் யாருடனாவது கதைக்கிறாளா என்பதைக் கண்காணிக்க வேணும்.. குட்டிப்பெட்டை நிஷாதான் அம்மா வரும் நேரத்தை அடிக்கடி மணிக்கூட்டில் பார்ப்பதும், பின் ரீவியைப் பார்ப்பதுமாக இருப்பாள்.. இன்றைக்கு எப்படியும் எட்டாம் வாய்பாட்டைப் பாடமாக்க வைக்கவேண்டும்.. பிள்ளைகளுக்கு ஏன்தான் இவ்வளவு வீட்டு வேலையைக் கொடுக்கிறார்களோ.. பாவங்கள் தூக்க முடியாமல் புத்தகங்களை கழுதைபோல் முதுகில் பொதியாய்.. முகுந்தன் அசைந்தான்..
வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில் ரோட்டில் வேகமாகச்சென்று கொண்டிருந்த கார்களின் அதிர்வு முகுந்தனின் நித்திரையைக் கெடுத்திருக்க வேண்டும்.. மெல்லக்கண் விழித்து ஒற்றைக்கையை வசந்தமலரின் கழுத்துப் பின்புறத்துக்குள் நீட்டி முகத்தோடிழுத்து வாய்பதித்து ஈரப்படுத்தினான்.. பின்னர் சின்னச் சிணுங்கலுடன் கண்களை மூடி மூடித்திறந்து “என்ன நேரம்?”
“ நாலரையாகுது”
“ சொறியக்கா”
“ எதுக்கு”
“நித்திரையாப் போயிட்டன்”
“பரவாயில்லை”
“உடம்பு சரியான அலுப்பாயிருந்துது” சுளி விழுந்த சிரிப்போடு கண்ணடித்தான்..
வசந்தமலர் மெளனமாய் கை விரல் நுனியில் எதையோ தேடியபடியிருந்தாள்
“ போர் அடிச்சுதா?”
“ இல்லை நான் காத்தோட அள்ளுப்பட்டுப் போற ஸ்னோவைப் பாத்துக்கொண்டிருந்தன்.. பிறகு கொஞ்சம் யோசிச்சன்”
“ என்னத்தை”
“ என்னை உன்னை என்ர வாழ்க்கைய”
“ ஏதாவது கிடைச்சுதா”
இச் வசந்தமலர் முகம் சுளித்து அலுத்துக்கொண்டாள்.. பின்னர் மெளனமாக முகுந்தனைப் பார்த்தாள்.. “ நான் செய்யிறது பிழையாடா?” கேட்ட படியே நெல் வரம்பில் விரல்களை அளையவிட்டாள்.. வியர்வையோடு கலந்து எண்ணெய் பிசுபிசுப்பில் இருந்தது அவன் தலை.. “ இப்ப ரெண்டு வருஷமாச்சு எத்தின தரம் இதைக் கேட்டிட்டீங்கள்..” வசந்தமலரின் கைவிரல்களை எடுத்து எண்ணிய படியே முகுந்தன் சிரித்தான்..
“ தெரியேலை சில நேரம் என்னை நினைச்சாலே எனக்கு வெறுப்பா இருக்கு” வசந்தமலரின் பார்வை தூர வெறிக்க முகம் வாடிப்போனது..
“ அக்கா இண்டைக்கு நீங்கள் சந்தோஷமாத்தானே இருந்தனீங்கள்.. அதுதான் முக்கியம் மற்றதுகளை விடுங்கோ..” அவள் கைவிரல்களை தன்னுக்குள் அடக்கி இறுக்கிக்கொண்டான்.. வியர்த்திருக்கும் அவன் கைகளின் ஈரம் பட்டு வசந்தமலர் உடல் சிலிர்த்துக்கொண்டது..
“ இல்லேடா” என்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான்
“ விடடா”
“ ஏனக்கா”
“ வீட்டை போற நேரம் வருகுது”
“ இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு”
“ அதுக்கு”
அன்று அவள் சிறிதும் எதிர்பாராத விதமாக ஒரு பரந்த வெளியில் முற்றிலும் பனிபடிந்திருக்கும் ஒரு பாலைவனப்பகுதில் தனது காரை நிறுத்திவிட்டு “இண்டைக்கு இஞ்சதான் நிக்கப்போறம்” என்று அவன் சொன்னபோது ஏதோ அவன் விளையாடுகிறான் என்று முதலி;;ல் வசந்தமலர் எண்ணினாள்.. அவன் தான் இருந்த சீட்டை சரிய விட்டு கைகளைப் பின்புறமாகப் போட்டு அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்த படியே “அப்புறம்” என்ற போது அவன் விளையாடவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் “உனக்கென்ன விசரா இந்த வெளியில நடுவுக்க காரை நிப்பாட்டிப்போட்டு.. ஆரும் கண்டாலும்” அவள் சுற்றுமுற்றும் பார்க்க.. அவளைத் தன் மேல் இழுத்துப் போர்த்துக்கொண்டான்.. “ஏன் எல்லாத்துக்கும் பயப்படுறீங்கள்.. பாருங்கோ. எவ்வளவு வடிவா இருக்கு.. சுத்திவர வெள்ளைப் போர்வை.. தூரத்தில சின்னதா ஊருற கார்கள் காத்துச் சத்தம்.. மேல நீலமாய் மேகம்.. அதுக்குக் கீழ நானும் நீங்களும் கட்டிப்பிடிச்சபடி” அவள் தலைமயிரை குலைத்து தன் முகத்தில் பரவவிட்டான்..
“ ம்.. உனக்கு விசர் முத்திப்போச்சு.. யாராவது பார்த்தால் நான் சரி.. வேலைக்கும்; போகாமல் உன்னோட வந்து கூத்தடிச்சுக்கொண்டு.. பேசாமல் வா.. நாங்கள் வழமையாப் போற இடத்துக்கே போவம்.. நான் காசு வைச்சிருக்கிறன்.. யோசிக்காதை..” தன்னை அவனிடமிருந்து விடுவிக்க முயன்று முயன்று தோற்றுப்போய்ப் புலம்பினாள்.. அவன் அவள் புலம்பலைப் பொருட்படுத்தாமல் தனது பற்களால் அவள் தாடைஇ காதுஇ மூக்கு என்று மெல்லஇ மெல்ல கெளவ. “ இப்ப என்ன செய்யிறாய்.. ஜயோ உனக்கு உண்மையிலேயே விசர்தான் பிடிச்சிட்டுது..” கைகளால் அவன் நெஞ்சைத் தள்ளித் தன்னை அவள் விடுவிக்க முயன்றாள். “தாலிக்கொடிய கழட்டுங்கோ” அவன் பார்வையில் பாசிஇ திடுக்கிட்ட வசந்தமலர்.. “என்னடா சொல்லுறாய்.. இந்த வெளிலிய காருக்க..ஜயோ நான் மாட்டன்” அவளின் கைகளைத் தன் ஒற்றைக் கையால் இழுத்துப் பிடித்தபடியே.. மறுகையால் அவளின் உடையைக் களையத்துடங்கினான். சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்தாள் வசந்தமலர்..கைகள் நடுங்கியது..இருந்தும் மறுக்கமுடியவில்லை.. நடுத்தெருவில் நிர்வாணமாய் நிற்பதான பயத்துடன் கூடிய கிளர்ச்சி அவளிற்குப் புது அனுபவமாகவும் பிடித்துமிருந்தது.. அவர்களின் அசைவினால் வினோதமாக ஒலி எழுப்பும் கார்.. இடையிடையே தவறுதலான அழுத்தத்தால் ஹோர் அடிக்க திடுக்கிட்டு பின் சிரித்து.. கோபப்பட்டுஇ வெட்கப்பட்டு.. அவன் மேல் சரிந்தாள்.. அகண்ட பரந்த வெளியில் மெல்லிய நீலத்தில் வானம்.. நிர்மலமாய் பனிப்படிவுகள்.. பொன் கீற்றாய் கதிரொளி காரின் கண்ணாடியில் தெறித்து மின்ன.. கண்கள் சொருகி, அனுங்கி குழந்தைகளும், குமாரும் கனவு போல் வந்து போக..
வசந்தமலர் முகுந்தனையே கண்வெட்டாமல் பார்த்தாள்.. இன்னும் என்னவெல்லாம் அதிசயங்கள் காட்டி என்னை திக்குமுக்காட வைக்கப்போகிறானோ..
“ சரி வா ஒரு கோப்பி வாங்கிக் குடிச்சிட்டு பஸ் கோல்ட்டில என்னை இறக்கிவிடு நான் கொஞ்சச் சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கவேணும்”
“ நானும் வாறன் பிறகு உங்கள வீட்டில இறக்கி விடுறன்”
“ அதெல்லாம் வேண்டாம்”
“ ம்.. உங்கட வீட்டையும் சொல்லமாட்டீங்கள், புது வேலை இடத்தையும் சொல்ல மாட்டீங்கள். நான் நினைச்சா எல்லாத்தையும் ஒரு நிமிஷத்தில கண்டு பிடிச்சிடுவன் உங்களுக்குப் பிடிக்கேலை அதுதான்..”
வசந்தமலர் முறைத்தாள்.. “ அந்தப் பக்கம் உன்ர காரைக் கண்டனோ மவனே நீ அதோட சரி..
“ கோவத்திலையும் நீங்கள் நல்ல வடிவா இருக்கிறீங்கள்”
“ வழியாதை வா போவம்” சீப்பை எடுத்து தலையைச் சரிசெய்தாள்.. முகத்தை தண்ணீர் சீலை கொண்டு ஒத்திவிட்டாள்.. கொஞ்சம் பவுடர் போட்டாள்
முகுந்தன் கண்வெட்டாமல் அவளையே பாத்துக்கொண்டிருந்தான்..“ பக்றறி வேலை முடிஞ்சு வீட்டை போகோக்கை யார் இப்பிடிக் கச்சிதமாப் போகப்போகீனம்.”
“ அதுக்கில்லை உன்ர மணம் அடிக்காமல் இருக்கவேணும்” சிரித்தாள். பின்னர் சீப்பை அவனிடம் நீட்டினாள்.. மீண்டும சிரித்தாள் “என்னடா உது கேயர் ஸ்டைல்.. கறுப்பங்களுக்குத் தலைமயிர் வளராது அதாலை அவங்கள் ஏதோ செய்யிறாங்கள்.. நீ எதுக்கு.. உனக்குத்தானே நல்ல மயிர் இருக்கு”
“ இல்லேக்கா இதுதான் இப்ப ஸ்டைல்..இது பழைய காலத்து கறுப்பங்களின்ர தலை பின்னிற முறையாம் திரும்ப வந்திட்டுது.. இப்ப எல்லாரும் செய்யீனம்..”
வசந்தமலர் கொட்டாவி விட்டாள்.. நேரத்தைப் பார்த்தாள்..” சரி என்னைக் கடையில இறக்கி விடு. வேலை முடியிற நேரமாகுது..” என்ற படியே கான்ட் பாக்கைத் திறந்து ஒரு இருபது டொலர் தாளை எடுத்து அவனிடம் நீட்டினாள்..
“ நானேல்லோ உங்களுக்கு காசு தரவேணும்”
“ உப்பிடிப் பகிடிகள் விடாதை எனக்குப் பிடிக்கேலை” கோபமாய்ச் சொன்னவள்.. “இவ்வளவு நேரமாக் கார் ஸ்டாட்டிலேயே இருந்தது போய்க் கொஞ்சம் பெட்றோல் அடி” அவன் கைக்குள் காசைத் திணித்தாள்.. பின்னர் தாலிக்கொடியை எடுத்து கழுத்தில் மாட்டி உள்ளே விட்டாள்.. மாட்டும் போது ஒரு முறை கண்ணை மூடிப்பிரார்த்தித்துக் கொண்டாள் போல் இருந்தது..
“ பதினொண்டுக்கு போன் அடிப்பீங்களே..” இந்த இரண்டு வருஷமாக முகுந்தனைச் சந்திக்காத நாட்களில் பதினொருமணிக்கு அவனுக்கு போன் அழைத்துக் சில நிமிடங்களாவது கதைப்பதை வசந்தமலர் ஒருநாளும் தவற விட்டதில்லை.. முகுந்தனின் நண்பர்கள் கூட உன்ர பதினொருமணிப் பெட்டை என்று பகிடியாகக் கதைப்பதுண்டு.. முகுந்தனும் நண்பர்கள் மத்தியில் வசந்தமலரை ஒரு பாடசாலை மாணவியாகவே பிரதிமை பண்ணி விட்டிருந்தான்..
“ பிள்ளைகள் படுத்தாப்பிறகு பாப்பம்”
“சரி பரவாயில்லை நாளைக்கு அடியுங்கோ” சொன்னபடியே காருக்குள் பாடல் ஒன்றை அதிர விட்டு ஒற்றைக் கையால் ஸ்டியரிங்கை சுளற்றிக் கோப்பிக் கடையை நோக்கி ஓட்டினான்.. வசந்தமலர் ஸ்கார்பால் தனது தலையைச் சுற்றி மூடியபடியே கார் சீட்டைப் பதித்து விட்டு தன்னை வெளி உலகத்திற்கு மறைக்க முயன்று கொண்டிருந்தாள்..
முகுந்தன் தனது தொடர் மாடிக்கட்டிடத்துக்குள் நுழைந்த போது கருவாட்டு மணம் மூக்கைத் தாக்கியது.. இரண்டு மூன்று நாளாகக் கழுவப்படாத பாத்திரங்கள்.. சப்பாத்துடன் ஒட்டி வந்து அங்கும் இங்கும் பதிந்து போயிருந்த பனிச்சேறு.. தாறு மாறாகப் போடபட்டிருந்த படக்கொப்பிகள்.. தண்ணீர் காணாமல் காய்ந்து போயிருந்த பூச்செடிகள்.. சிகரெட் துண்டுகள்.. பியர் போத்தல்கள்.. கஞ்சா உதிர்வுகள்.. தாண்டி உடைகளைக் களைந்து விட்டு சுடுநீரில் உடல் வலி தீரக்குளித்தான்.. சாரம் மாற்றிக் கட்டிலில் விழுந்த போது தொலைபேசி அனுங்கியது.. இலக்கத்தைப் பார்த்தான் சித்தன்.. எடுப்பமா விடுவமா என்று மனம் முடிவு செய்வதற்கு முன்பே கைகள் ரிசீவரை எடுக்க உதடுகள் “ ஹலோ” என்றது.. “ டேய் எங்கேடா போட்டாய்.. பகல் முழுத்தலும் அடி அடியெண்டு அடிச்சனான்..”
மறுபக்கத்தில் சித்தனின் குரல் அலறியது..
“ வேலை தேடி அலைஞ்சு போட்டு வாறன் மச்சான்.. அலுப்பா இருக்கு அதுதான் படுத்துக் கிடக்கிறன் “
“ கிடச்சுதோ”
“ எங்கை மச்சான் பாப்பன்.. ஒண்டு அம்பிடாமலே போப்போகுது.. அதுசரி உனக்கு இண்டைக்கு வேலை இல்லையே..”
“அதை ஏன் மச்சான் கேக்கிறாய்.. போனனான் லேஓவ் தந்து அனுப்பிப்போட்டான்கள்.. “
“ ஏனடா”
“ என்னவோ வேசைமக்கள் பிஸ்னஸ் லொஸ்ட்டில போகிது எண்டு கனபேரை வெட்டிப்போடான்கள்.. அதுதான் உனக்கு அடிச்சனான் மனசுக்கு ஆறுதலா ஒரு சுத்து அடிப்பம் எண்டு.. “
“ சுத்து இல்லேடா.. இருந்ததை ராத்திரி அடிச்சிட்டன்.. சிகரெட்டும் இல்லை.. கையில காசும் இல்லை..” அலுத்தான்..
“ என்னை வந்து ஏத்து காருக்கு காஸ் அடிச்சுப் போட்டு சுத்து வாங்கிப் பத்துவம்..”
வசந்தமலர் தந்த இருபது டொலரைப் பத்திரப்படுத்தியபடியே சித்தனைப் பாக்கக் கிளம்பினான் முகுந்தன்.
வசந்தமலர் வீட்டிற்குள் நுழைய “அம்மா” என்று ஓடிவந்து கட்டிக்கொண்டாள் குட்டிப்பெட்டை நிஷா.. “அம்மா பிள்ளைக்கு குக்கீஸ் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறன்” பெட்டியை எடுத்துக் கொடுத்துவிட்டு “ ஹாய் ஆரணி கோம் வேர்க் முடிச்சிட்டீங்களோ” மகளின் தலையை வருடி அவளுக்குப் பிடித்த சொக்லெட் பாரை எடுத்து நீட்டி உள்ளே சென்று உடைகளைக் கழைந்து துவைக்கப்போட்டு நன்றாக உடல் தேய்த்துக் குளித்தாள்.. முகுந்தனின் வியர்வையுடன் கூடிய சிகரெட் வாடை உடலில் ஒட்டி அவளை போதைக்குள்ளாக்கியது.. வெட்ட வெளியில் நிர்வாணமாய் காருக்குள் தான் இருந்ததை எண்ணி குற்ற உணர்வோடு சேர்ந்த திருப்பி மனதில் எழுந்து எழுந்து அவளை உலுக்கிப்போட்டது. குமார் அங்கும் இங்குமாகப் போட்டு வைத்த அவன் உடைகளை எடுத்து மடித்து வைத்து.. குழந்தைகளுக்குச் சாப்பிடக் குடுத்து.. பாடத்திற்கு உதவி செய்து.. குமாரிக்கு பிடித்ததை சமைத்து வைத்து.. கட்டிலில் வந்து விழுந்து கொண்டாள்.. விட்டத்தை விறைத்து மீண்டும் தன் வாழ்விற்கு அர்த்தம் காண முயன்று தோற்றுப் போனாள்..தான் யாரை ஏமாற்றுகின்றாள்.. குமாரையா? குழந்தைகளையா? முகுந்தனையா? இல்லை என்னை நானே ஏமாற்றுகின்றேனா என்பதில் பல காலமாக அவளிற்கு குழப்பம். முகுந்தனுடன் அவளுக்குண்டான உறவின் பின்னர் குழந்தைகளுடன் சிடுசிடுப்பதை..குமாருடன் குரல் உயர்த்தி அலுத்துக்கொள்வதை.. சொல்லப்போனாள் அவள் குடும்ப உறவு முன்பு இருந்ததை விட இறுக்கமாகிப்போயிருந்தது.. இது எல்லாம் தன் குற்ற உணர்விற்கு அவர்களுக்குக் கொடுக்கும் லஞ்சமா என்ற பரிதவிப்பும் இடையிடையே அவளை வாட்டுவதுண்டு.. இருந்துமென்ன எல்லோரும் சந்தோஷமாக இருப்பது தானே முக்கியம்..அவள் கண்கள் குழப்பங்களுடன் மெல்ல மெல்ல மூடிக்கொண்டது..
முதல் முதலில் முகுந்தனை வேலைத்தளத்தில் வசந்தமலர் சந்தித்தபோது அவளிற்கு வேடிக்கையாகவும் கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது.. ஈழத்தமிழன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் தோற்றத்தில் அவன் இல்லை.. எப்போதும் போதையில் காரணமின்ற சண்டை போடும்.. துப்பாக்கி தூக்கும்.. பத்திரிகைகளில் அன்றாடம் அடிபடும் பலரில் ஒருவன் என்பதை பாத்த மாத்திரத்தில் அவள் உணர்ந்து கொண்டாள்.. அவனைப் பார்ப்பதை பேசுவதை இயன்ற அளவிற்குத் தவிர்த்து வந்தும் அவள் போதாத வேளை என்று எண்ணும் வண்ணம் மகள் நிஷாவிற்கு உடம்பு சுகமில்லாமல் போய் பாடசாலையில் இருந்து அழைப்பு வர கொட்டும் பனிக்குள் பஸ் பிடித்து நேரத்திற்குப் போய்ச் சேரமுடியுமா என்று தவித்தபோது தானாக வந்து உதவுவதாக முன்நின்றான் முகுந்தன் சிந்திக்க நேரமின்றி அவனின் உதவியைப் பெற்றுக்கொண்டவள்.. பின்னர் காய்ந்து போன உணவை அவன் மென்று மென்று விழுங்கும் போது தன் உணவில் கொஞ்சமாகப் பகிர்ந்து.. பின்னர் கொஞ்சமாகக் கதைத்து.. காலப்போக்கில் அவன் மென்மையான பக்கங்கள் கண்டு அதிர்ந்து.. சகஜமாகப் பழகும் நிலை வந்த போது ஒருநாள்.. சமைத்துக்கொண்டு கொண்டு நின்ற வசந்தமலரின் காதில் படிக்கட்டால் உருண்டு கதறியபடி விழுந்த நிஷவின் குரல் கேட்டு பதறித்திரும்பியவளின் கண்ளை அருகே திறந்து விட்டிருந்த கதவின் மூலை தாக்க கண்டிப்போன கண்களுடன் ஓடிப்போய் நிஷாவை அவள் அனைக்க மனைவியையும் மகளையும் படியில் கிடத்தி ஜஸ் கட்டிகளால் மாற்றி மாற்றி ஒத்தடம் பிடித்த கணவனின் நகைச்சுவையை முகுந்தனுடன் பகிர்ந்து சிரிக்க எண்ணி அவன் அருகில் போய் அவள் அமர்ந்த போது பதட்டத்துடன் அவள் கைகளைப் பற்றி அழுத்திய படியே “உங்கட மனுஷன் உங்களுக்கு அடிக்கிறவரா அக்கா” என்றவனின் கைகளின் வியர்வை உடலை சிலிர்க் வைக்க அவன் பார்வையை மிக அருகில் சந்தித்த வசந்தமலரில் உடலில் ஈரம் கசிந்தது.. அவனில் இருந்து வந்த அந்த சிகரெட்டுடன் கூடிய வியர்வை மணம் சின்னதாக அவள் உடலை நடுங்கச் செய்ய மென்று விழுங்கித் தன்நிலை மறந்து அவன் தோளில் சாய்ந்தாள்.. அவள் தலையை வருடி “அழுங்கோ அக்கா அப்பதான் உங்கட வேதனை குறையும்” வருடியவனின் குரல் கேட்டு ஏனோ விம்மினாள் வசந்தமலர்..
அதன் பின்னர் பணத்திற்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு வேலைத்தளத்தில் மாய்ந்தவளிற்கு வேலைக்குப் போவது பிடித்துப் போனது.. பதினைந்து வருடதிருமண வாழ்வு மீண்டும் அர்த்தத்ததைத் தந்தது.. முகுந்தனின் அணைப்பு.. தொடுகை வெட்கமற்ற பேச்சு எல்லாமே அவளிற்கு புதிய அனுபவமாய் அவள் இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தியது.. குமாரை அவள் வெறுக்கவில்லை.. முகுந்தனை அவள் காதலிக்கவுமில்லை.. ஆனால்..குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்பதால் தன்னை வயதானவளாக உருமாற்றி உணர்வுகள் மெல்ல மெல்ல உறைந்து போய் விட்டதாக எண்ணி வாழ்ந்தவளை மீண்டும் உலுப்பி விட்டிருந்தான் முகுந்தன்..
கஞ்சா அடிச்ததில் இருவரின் கண்களும் சிவந்து போயிருந்தன.. குளிர்காய கோப்பிக்கடைக்குள் இருந்தபடியே வருவோர் போவோரை அளந்து கொண்டிருந்தார்கள்.. வசந்தமலரின் மணம் கிறக்கம் இடையிடையே முகுந்தனின் நினைவில் வந்து அலைந்து கொண்டிருந்தது.. தான் உறவு வைத்திருக்கும் அத்தனை பெண்களைப் பற்றியும் சித்தனிடம் கதை அளக்கும் முகுந்தனுக்கு ஏனோ வசந்தமலர் பற்றி வாய் திறக்க முடியவில்லை.. வசந்தமலர் மேல் தனக்கு உண்மையான காதலோ என்று அவனிற்கு அடிக்கடி பயமாக இருந்தது.. வசந்தமலரின் குரலை ஒருநாள் கேட்காவிட்டாலும் அவனிற்று எதுவோ போல் இருக்கும்.. மற்றைய பெண்களைப் போலில்லாமல் மணிக்கணக்காக அவளுடன் கதை அளக்க அவனுக்குப் பிடித்திருந்தது.. வசந்தமலருடனான தனது உறவைப் புனிதமானதாக எண்ணி வசந்தமலர் பற்றி எந்த ஒருமனிதனும் தவறாகக் கதைத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான்.. கணவனை இழந்தவளிற்கு வாழ்க்கை குடுத்தால் அது உத்தமம்.. கணவனால் துன்புறுத்தப்படும் ஒரு பெண்ணிற்கு வாழ்வில் சில இன்பங்களைக் காட்டினால்.. தன்னைத் தேற்றிக்கொண்டான் அவன்..
வேறு தமிழர் இல்லாததால் அக்கா அக்கா என்று வேலைதளத்தில் ஆரம்பித்த உறவு சாப்பாடு பகிர்வதில் தொடங்கி.. பஸ் தரிப்பில் இறக்கி விடுவதில் போய் ஒருநாள் கண்களுக்கு கீழே கட்டி பட்டுப்போயிருந்த இரத்தத்தைப் பார்த்தபோது நெருக்கம் கொண்டது.. கணவனிடம் காணாத அன்பு அரவணைப்பை வசந்தமலரிற்கு தான் கொடுப்பதாக எண்ணிப் பெருமை கொண்டான்.. மெல்ல மெல்ல தன்னுடன் பழகும் இளம் பெண்களிடமிருந்து விலகி நேரம் கிடைக்கும் போதெல்லாம் வசந்தமலருடன் உறவுகொள்ளத் தொடங்கினான்.. “டேய் என்னை விட்டிடாதை.. என்னை ஏமாத்திப்போடாதை.. வேற ஒரு பெட்டைகளோடையும் போகாதை..” அவள் கொஞ்சியபோது அந்த அன்புஇ காதல்இ மோகம் கண்டு விறைத்து துவண்டு குழந்தை போல் அவள் மடியில் முகம் புதைத்தான். “உன்னைக் கலியாணம் கட்டவேண்டாம் எண்டு நான் சொல்லேலை.. நீ கட்டிற நேரம் வரேக்க நானே விலகிப் போறன் ஆனால் இப்ப வேறை ஒண்டும் வேண்டாம்” அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டாள்..
மாதங்கள் நாட்களாகி மறைந்து போக..முகுந்தனின் மனதில் முற்றாக வசந்தமலர் இடம் பிடித்துக்கொண்டாள்.. சித்தன் வேறு வேலை எடுத்து பிஸியாகி விட வசந்தமலருடன் தொலைபேசியில் கதைப்பது, சந்திப்பது.. இப்படியாக..இப்படியாக..
இன்றுடன் ஒரு கிழமையாயிற்று வசந்தமலரின் குரலைக் கேட்டு.. முகுந்தனிற்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது.. அவள் தொலைபேசி இலக்கம் அவனிடம் இல்லை.. ஏன் வீண் பிரச்சனை நானே ஒவ்வொருநாளும் உன்னுடன் கதைக்கிறேன் என்று தொலைபேசி இலக்கத்தை கொடுக்க மறுத்திருந்தாள் வசந்தமலர்.. சித்தனிடம் மனம் விட்டுக் கதைக்கும் துணிவு அவனுக்கில்லை.. திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளிற்குத் தாயான ஒருத்தியுடன் தான் உறவு வைத்திருப்பது.. அதை உண்மையான காதலாக மனதுக்குள் பூஜித்து அவள் குரல் கேட்காது உடைந்து போவது பற்றி எவ்வளவுக்கு நண்பனாக இருப்பினும் சொல்ல முடியுமா? அவன் என்னைக் கேவலமாகப் பார்ப்பான் இல்லாவிட்டால் கிண்டல் அடிப்பான் இரண்டையும் தாங்கும் மனப்பக்குவம் முகுந்தனிடம் இருக்கவில்லை.. மூளை குழம்பிய நிலையில் சாப்பிட மனமின்றி கஞ்சாவைப் புகைத்துப் புகைத்துத் துவண்டு போனான். இன்றுடன் ஒரு கிழமையாயிற்று வேலையில்லை கையில் பணமில்லை.. இந்த நிலை தொடர்ந்தால் தான் மீள்ளாது போய் விடுவேனோ என்று பயந்து எழுந்து தன்னை திடப்படுத்த முயன்று தலையில் சுடுநீரை வாரி இறைத்துக் குளித்தான்.. பாவம் வசந்தமலர் வீட்டில் ஏதும் பிரச்சனையோ தெரியவில்லை.. அவள் மேல் அன்பை வைத்திருந்து என்ன பிரயோசனம்.. வேண்டிய நேரத்திற்கு ஆறதல் சொல்ல தன்னால் முடியவில்லையே..ஏக்கமாக இருந்தது அவனிற்கு.. இன்று அவள் அழைப்பாள் இன்று எப்படியும் வசந்தமலரின் குரலைத் தான் கேட்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் வயிறு புகைந்து போக கோப்பி;க் கடையை நோக்கிப்புறப்பட்டான்..
முகுந்தனின் கைகள் குளிர்ந்து போயின. வாய் விட்டுக்கதறுவதற்குக் கூட முடியாத நிலை.. பொங்கிப் பொங்கி வந்த அழுகையை தனக்குள்ளேயே மென்று, மென்று தோற்றுப்போய்க் கொண்டிருந்தான்.. அங்குலம், அங்குலமாகத் தான் அழகுபார்த்து முகர்ந்து, முத்தம் கொடுத்தவை எல்லாம் அடங்கிப்போயிருந்தது அவனுக்குக் கனவு போலிருந்தது.. 'முந்தி எங்களோட வேலை செய்த பிள்ளை வசந்தமலரெண்டு.. உனக்கு நினைவிருக்கோ என்னவோ.. அக்சிடென்ரில செத்திட்டுதாம்.. இண்டைக்கு பாக்கிறதுக்கு வைக்கினம் நாங்கள் வேலையாக்களெல்லாம் சேந்து போறம்.. நீ வரப்போறியே.." அந்த வயதான பெண்மணி கேட்டபோது.. முகுந்தன் சுருண்டு விட்டான்.. தலையை சுவரில் அடித்து, அடித்துக் கதறியாகி விட்டது.. கண்கள் வீங்கிப்போய் விட்டன.. ஆனால் அவன் இயல்பாக இருக்க வேணும் 'பாவம் அவ்வளவு வயசும் இல்லை.. ரெண்டு பொம்பிளப்பிள்ளைகள்.. புருஷன் தான் தனியக் கஷ்டப்படப்போகுது." என்று மற்றவர்களுடன் சேர்ந்து சப்புக்கொட்ட வேண்டும்.. தன்னால் முடியுமா.. கடைசியாக ஒருமுறை கைகளில் நடுக்கமின்றி.. பொங்கி வரும் கண்ணீர்த் துளிகளை சுரப்பிக்குள் திரும்பவும் தள்ளி தன்னால் முடியுமா? கட்டிலில் குப்புறப்புரண்டு கதறியவன்.. வசந்தமலரைக் கடைசியாகப் பார்க்கும் ஒரு சந்தர்ப்பத்தை இழக்க விரும்பாது அழுத்தி, அழுத்தி குளிர் தண்ணீரை முகத்தில் அடித்துக் கண்களின் வீக்கத்தையும் சிவப்பையும் போக்கமுயன்று மற்றவர்களுடன் கூடி வசந்தமலரின் உடல் பார்வைக்காக வைக்கப் பட்ட மண்டபத்திற்குள் நுழைந்து விட்டான்..
வசந்தமலரின் முகத்தில் புன்னகை தெரிந்தது.. மெல்லிய சிவப்பு நிறப்பட்டில் உயிர்ப்போடிருந்தாள் அவள்.. வரிசையில் நின்று மெல்ல நகர்ந்து வசந்தமலரைக் கடைசியாக ஒருமுறை சில நிமிடங்கள் பார்த்து விட்டு வாய்விட்டுக் கதறிக்கொண்டிருக்கும் குமாரையும், பிள்ளைகளையும் அணைத்து ஆறுதல் சொல்லிவிட்டுத் தமது கடமை முடிந்ததாய் போய்க்கொண்டிருந்தார்கள் பலர்.. முகுந்தன் அந்த வயதான பெண்மணியின் கைகளை இறுகப்பற்றிய படியே 'என்னைத் தனியாக விட்டுவிடாதே என்ற பாணியில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான்.. அவள் பார்வையில் தெரிந்த கேள்விக்குறியைப் பற்றிக் கவலைப்படும் நேரமல்ல அது.. புன்னகைக்கும் வசந்தமலரின் முகத்தில் ஒரு தெளிவு, நிம்மதி தெரிந்தது.. உடல் சிதறாமல் அழகோடிருந்தது முகுந்தனுக்கு ஆறுதலைத் தந்தது.. வயதான பெண்மணியின் கையை இறுக, இறுக அழுத்தித் வசந்தமலரிற்கு தனது கடைசி அஞ்சலியை மனதுக்குள் முணுமுணுத்தான்.. வசந்தமலரின் பெண்களை உரிமையோடு தலைவருடி ஆறுதல் சொன்னவன் குற்ற உணர்வோடு கடமைக்காக குமாரின் பக்கம் திரும்பியபோது குமாரின் கண்களின் தெரிந்த அந்தக் குரூரம் முகுந்தனை ஒருமுறை நடுங்கச் செய்தது.. கால்கள் தடுமாற பின்னே ஒரு அடி எடுத்து வைத்தனைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பை எவரும் பார்க்காத வகையில் வீசினான் குமார்..
ஊதல் காற்றுடன் கூடிய வெண்பனி மூடலில் வீதியோரம் விறைத்தபடியே நடந்து கொண்டிருந்தான் முகுந்தன். அவன் கண்களில் கண்ணீரில்லை எல்லாமே விறைத்துப் போயிருந்தன.
sbalaram@ieccan.
பதிவுகள் பெப்ருவரி 2005; இதழ் 62
பெற்றோர் பருவம்!
நாகூர் ரூமி
"புள்ளெ வந்துட்டாளா?"
தனது இரண்டு சக்கர லாரியை போர்ட்டிகோவில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக்கொண்டே கேள்வியை தூக்கி வீட்டுக்குள் வீசினார் அப்துல் காதிர். ஸ்கூலில் இருந்து ட்யூஷனெல்லாம் முடிந்து அருமை மகளார் ஆறுமணிக்கு மேல்தான் வருவாள் என்று அவருக்கும் தெரியும். ஆனால் அலுவலகம் விட்டு வந்து அவர் வீட்டுக்குள் புகுவதற்கு முன் 'புள்ளெ வந்துட்டாளா' என்ற கேள்வி புகுந்துவிடும். வீரபத்ரனின் கழுத்தில் லாவகமாக மாட்டியிருந்த அவரது தோள் பையை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார். அவர் கேள்விக்கு வீட்டிலிருந்த யாரும் பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும். அது ஒரு கேள்வியே அல்ல. அது ஒரு பழக்கம். வைத்த நேரத்துக்கு அலாரம் அடிப்பது மாதிரி, வீட்டுக்குள் நுழைந்ததும் அவர் வாயிலிருந்து அந்த கேள்வி புறப்பட்டுவிடும்.
"புள்ளெ வந்துட்டாளான்டு கேட்டேன்" என்று மனைவியைப் பார்த்துக் கொஞ்சம் கடுமையாகச் சொன்னார். அடுப்பங்கரையில் அவருக்காக டீ போட்டுக்கொண்டிருந்த ஹஸீனாவின் இதழோரம் கோணலாக ஒரு புன்னகை ஊர்ந்தது.
"அவ ஆரறை மணிக்கித்தான் வருவான்னு தெரியும்ல, ஏன் சும்மா கேட்டுக்கிட்டே இரிக்கிறீங்க? மணி இப்ப அஞ்சறெதானே ஆவுது?"
மனைவியின் பதில் கேள்வியில் அப்துல் காதிர் அமைதியாகிப் போனார். அவருக்கும் தெரியாமலில்லை. என்றாலும் இப்படி கேட்டு பதில் வாங்காவிட்டால் ஏதோ ஒரு கடமையை செய்யாமல் விட்டமாதிரி இருக்கும். ஏதோ புரிந்துவிட்ட மாதிரி தலையை லேசாக ஆட்டிக்கொண்டு அறைக்குள் சென்றார். பேண்ட் ஷர்ட்டைக் கழட்டி விட்டு கைலியும் கை வைத்த பனியனுமாக ம·ப்டிக்கு மாறி வெளியில் வந்தார். பின் கொல்லைப் புறம் சென்று முகம் கைகால் கழுவிவிட்டு வந்து ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். ஹஸீனா டீயைக் கொண்டுவந்து கொடுத்தாள். வாங்கியவர் அனிச்சையாக சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.
"மவள்னா என்னா பைத்தியமோ"
சொல்லிக்கொண்டே ஹஸீனா உள்ளே போனாள். போகும்போது அவள் முகத்தில் ஒரு பெருமை தெரிந்தது.
டீயை உறிஞ்சிக்கொண்டே மகளை நினைத்துக்கொண்டார். கல்யாணமாகி ஏழு வருஷம் காத்திருந்து பெற்ற மகள். ஆறு வருஷங்களாக ஹஸீனாவில் கருப்பையை அடைத்துக்கொண்டிருந்த கட்டியை இனம் கண்டு கொள்ளவே பல காலம் ஆனது. பின் அதை ஆபரேஷன் செய்த பிறகுதான் ஹஸீனாவால் சரியாக மூச்சு விட முடிந்தது. அதற்குள் ஊர் நாக்குகள் குறிபார்த்து வேறுவிதமான பெயர்களையெல்லாம் அப்துல்காதிருக்கு சூட்டிவிட்டிருந்தன.
"தபாரு பீவி, ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சுங்கறதுக்கு அடையாளமே நீ அடுத்த வருஷமே ஒரு கொழந்தையெ பெத்து காட்டுறதுதான். நாந்தான் ஒனக்கு பிரசவம் பாப்பேன். நீ போட்டிருக்கியே கல்லுவச்ச மோதிரம், அதே மாதிரி எனக்கு தங்கத்துல செஞ்சு போடணும். செய்வியா?" என்று டாக்டர் சுமதி கேட்டபோது உண்மையில் அவர்களுக்கு சந்தோஷமாகவே இருந்தது. அப்படிப் பிறந்தவள்தான் அர்ஷியா.
குழந்தை பிறந்தபோது பார்த்த எல்லார் கண்ணும் பட்டிருக்கும். ஆஸ்பத்திரி நர்ஸ¤கள், வார்டு பையன்கள் என எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டனர்.
"பீவி, ஒனக்கு எவ்வளவு கலரா, எவ்வளவு அழகா ஒரு பொம்புளப் புள்ளெ பொறந்திருக்கு தெரியுமா?" என்று டாக்டர் சுமதியே ஆச்சரியப் பட்டு சொன்னாள்.
அவள் சொன்னது உண்மைதான். அப்துல் காதிரும் ஹஸீனாவும் நல்ல சிவப்பு நிறம்தான் என்றாலும், அர்ஷியாவின் நிறம் பலமடங்கு பெற்றோரை மிஞ்சுவதாக இருந்தது. அகன்ற விழிகளும், நீண்ட மூக்கும், புசுபுசுவென கன்னமுமாக கொள்ளை அழகாக இருந்தாள். அவ்வளவு அழகு ஆபத்தாச்சே என்றுகூட பயப்பட வேண்டியதாக இருந்தது. சொல்லிவைத்த மாதிரி அர்ஷியாவின் அழகுக்குப் போட்டி போல அவள் அறிவும் பேச்சும் இருந்தது.
ஒரு முறை அப்துல்காதிர் ஒரு கல்யாணத்துக்கு மனைவியையும் அர்ஷியாவையும் கூட்டிப் போயிருந்தார். அர்ஷியாவுக்கு அப்போது ஆறு வயது. மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு செய்வதற்காக, மடியில் இருந்த அர்ஷியாவை ஒரு நண்பரின் பக்கத்தில் உட்காரவைத்துவிட்டு மேடைவரை போய்வந்தார் அப்துல் காதிர்.
"சார், உங்க பொண்ணுங்களா?" என்றார் நண்பர் பக்கத்தில் இருந்த ஒருவர். அவருக்கு நாற்பத்தைந்து இருக்கும்.
"ஆமா சார், ஏங் கேக்குறிங்க?"
"சார், என்னமா பேசுது சார்!" சொன்னபோது ஏதோ உலக அதிசயத்தைப் பார்த்துவிட்டு வந்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டார் அவர்.
"ஏன் சார், என்னா சொன்னா?"
"என்ன சார், நல்லா பேசிக்கிட்டிருக்குதேன்னு பிடிச்சுப்போயி, என்னாமா எங்க வீட்டுக்கு வந்துர்றியான்னு கேட்டேன். அதுக்கு என்னா சொல்லணும்? வர்றேன், வரமாட்டேன்னுதானே எல்லா புள்ளைங்களும் சொல்லும்?"
க்ளைமாக்ஸைச் சொல்லாமல் ஒரு சஸ்பென்ஸில் நிறுத்தினார் அவர். தன் மகள் என்ன பதிலைச் சொன்னாள் என்று தெரிந்து கொள்வதில் அப்துல் காதிருக்கு மிகுந்த ஆவல் உண்டானது.
"என்னா சார் சொன்னா?"
"ஏன், உங்களுக்கு புள்ளெ இல்லெயான்னு கேக்குது சார்!" என்று சொல்லிவிட்டு வாய் பிளந்தார். பக்கத்தில் இருந்த நண்பர்கள் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். அப்துல்காதிருக்கும் சிரிப்பாகத்தான் வந்தது. தன் மகளை நினைத்து பெருமையாகவும் இருந்தது.
"சார், வீட்ல போயி, திருஷ்டி சுத்திப் போடுங்க சார்" என்று ஆலோசனை வேறு வழங்கினார் அவர்.
அவர் சொல்லாவிட்டாலும் ஹஸீனா நிச்சயம் அதை செய்திருப்பாள்தான். முதல் வேலையாக இந்த விஷயத்தை மனைவியிடம் சொல்லி வைத்தார். தன் நண்பர்களிடமும் சொன்னார். ஹஸீனாவும் தன் பங்குக்கு ஒரு ஆயிரம் பேர்களிடம் சொல்லிவைத்தாள். இப்படியாக பெற்றோர்கள் வாயிலாக அர்ஷியாவின் பெருமை பேசும் காண்டம் அந்த கல்யாண மண்டபத்தில் வைத்து எழுதப்பட்டது.
இவ்வளவையும் செய்துவிட்டு, காஞ்ச மிளகாயை எடுத்து அர்ஷியா தலையைச் சுற்றிவிட்டு, "துப்பு" என்று அர்ஷியாவை துப்பச் சொல்லி, ஆசையாக அர்ஷியா அதில் துப்பியவுடன் அதை அடுப்பில் போடுவாள். அது வெடித்து எரியும்போது, "பாவி கண்ணு, பரப்பா கண்ணு, கொள்ளி கண்ணு, எல்லாம் அவிஞ்சு போவணும். எம்புள்ளக்கி எத்தினி கண்ணு பாத்திங்களா? எப்புடி எரியுது பாத்திங்களா?" என்பாள்.
"டாடி, இது என்னா டாடி?" என்று ஒரு முறை ஸ்கூலில் இருந்து அவளை கூட்டி வரும் வழியில் தெருவோரம் கைகாட்டிக் கேட்டாள் அர்ஷியா. அவள் உட்காருவதற்காகவே தனது வீரபத்ரன் வண்டியில் ஒரு குட்டி சீட் முன்னால் போட்டு வைத்திருந்தார். அவள் கைகாட்டிய பக்கம் பார்த்தார். 'போர்' போட்டுக்கொண்டிருந்தார்கள். ராட்சச மிஷின்களிலிருந்து இறக்கப்பட்ட ஸ்டீல் ராடுகள் பூமியைத் துளைத்துக்கொண்டு செல்லும் சப்தம் தெருவையே கலக்கிக் கொண்டிருந்தது.
அவளுக்குச் சொன்னால் புரியுமா? யோசித்தார்.
"அது, ஒன்னுமில்ல கண்ணு, இந்த மிஷின்லேருந்து, பூமி உள்ளக்க தொளை போட்டு, ரொம்ப கீழே போயி, அங்கேருந்து தண்ணி எடுத்து மேலெ கொண்ட்டு வருவாங்க" என்று விபரமாகச் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு அவள் சொன்னாள்.
"ஓஹோ, போர் ·பிக்ஸ் பண்றாங்களா?"
அதிர்ந்து போனார் அப்துல்காதிர். "ஒனக்குத் தெரியுமா? அப்ப ஏன் எங்கிட்ட கேட்டே?" என்றார்.
"அதா, ஒனக்கு தெரியுமான்னு தெரிஞ்சுக்கத்தான்" என்றாள்.
"வாயாடி" என்று சொல்லி முத்தம் கொடுத்து விட்டு வாயை மூடிக்கொண்டார்.
"என்ன யோஸ்னையா இருக்கிறிங்க?" ஹஸீனாவின் குரல்தான் அவரைக் கலைத்தது.
"ஒன்னுமில்ல"
மேற்கொண்டு மனைவியும் எதுவும் கேட்கவில்லை. அவர் அசைபோடுகிறார் என்று அவளுக்குத் தெரியும்.
மளமளன்னு வளந்துட்டா! பதிமூனு வயசாகுது! இப்ப சுடிதார் போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு போய் பத்தாவது படிக்கிறா! நினைக்க நினைக்க அவருக்கே வியப்பாக இருந்தது. எவ்வளவு சீக்கிரம் பெண் குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள்! கடிகார ஒலி அவரை இந்த உலகத்து கொண்டு வந்தது. மணியைப் பார்த்தார்.
மணி ஏழு! இன்னும் ஆட்டோ வரவில்லை!
"மணி ஏழாவுது. இன்னும் ஆட்டோ வரலியே" என்று கத்தினார். அவர் கத்தலில் மிரண்ட ஹஸீனாவுக்கும் கொஞ்சம் பயம் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
"ஆமா, யா அல்லாஹ், மணி ஏலாவுதே... ஸ்கூலுக்கு ·போன் போட்டு பாருங்களேன்" என்று பதறினாள்.
தொலைபேசி பக்கத்தில் வைத்திருந்த சின்ன புத்தகத்தை எடுத்து ஸ்கூல் எண்ணைத் தேடினார். கிடைக்கவில்லை.
"என்ன எலவு நோட்டு இது? முக்கியமான ஸ்கூல் நம்பரெ மொதோ பக்கத்துல எலுதி வைக்க மாட்டிங்களா சனியனுவளா" என்று கத்தினார்.
ஹஸீனா வாங்கிப் பார்த்தாள். "இந்தோ இந்த நம்பருதான்" என்று எடுத்துக் கொடுத்தாள். உடனே சுற்றினார்.
"ஹலோ, ப்ரசன்டேஷன் கேர்ள்ஸ் ஹைஸ்கூலுங்களா? நா ட்டெந்த் படிக்கிற அர்ஷியாவோட ·பாதர் பேசுறேன். அர்ஷியா இன்னும் ஸ்கூல் வுட்டு வரலெ. ஆட்டோ வந்து கூட்டிட்டு வந்துதுங்களா? இல்லெ, இன்னும் ஸ்கூல்லதான் இருக்காளா? கொஞ்சம் கேட்டு சொல்றிங்களா சார், ப்ளீஸ்". வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. சொல்ல நினைத்ததை சரியாக சொல்லிவிட்டோமா என்று அவரால் தீர்மானிக்க முடியவில்லை.
"இல்லிங்களே, எல்லா ஆட்டோவும் வந்து புள்ளங்களை கூட்டிட்டி போயிடுச்சுங்களே. இன்னிக்கு ஸ்கூல் அஞ்சு மணிக்கே வுட்டாச்சு சார். ஸ்கூல்ல இப்ப யாரும் இல்லெ"
இடி விழுந்த மாதிரி இருந்தது. இதயத்தில் படபடப்பு அதிகரித்தது. சப்தம் வெளியில்கூட கேட்கும்போலிருந்தது.
"ஹஸீ, புள்ளெ போகும்போது ·பீ அமானில்லாஹ்னு (இறைவனுடைய பாதுகாவல்) சொல்லித்தானே அனுப்புனே?"
ஹஸீனா பயந்து போனாள். "ஏங்க, என்னா செய்யிது உங்களுக்கு? ஏன் பதட்டப்பட்றீங்க? நா எப்பவும் போல எல்லாம் சொல்லித்தான் அனுப்புனேன். 'லேட்'டாவுனா அவ '·போன்' போடுவா. பயப்புடாதிங்க. நீங்க 'பைக்'குல போயி அவ ஸ்கூல்ல விசாரிச்சுட்டு, பக்கத்துல் அவ தோலி வூடு இருக்கு. அவ பேரு மைவிலி. ஸ்கூலுக்குப் பக்கத்துல உள்ள மூனாவது சந்து. கொஞ்சம் விசாரிச்சிட்டு வர்றிங்களா? அவ வூட்டுல '·போன்' இல்லெ"
மறுபேச்சு பேசாமல் உடனே சட்டையை மட்டும் மாட்டிக்கொண்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டு பறந்தார் அப்துல் காதிர்.
"பாத்து போங்க" என்று சொல்லிவிட்டு வாசலையே கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஹஸீனா. '·பீ அமானில்லாஹ்' என்று தன் புருஷனுக்காகவும் ஒருமுறை மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
போனவர் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்தார்.
"ஸ்கூல்ல அவ இல்லெ. அங்கெ யாருமே இல்ல. ஸ்கூல் அஞ்சு மணிக்கே வுட்டுட்டாங்களாம். ஆட்டோக்கார நாயி இன்னக்கி வரலையாம். மைவிழி வூட்டுலயும் அவ இல்லை. எங்கெ போனான்னு தெரியலெயே" என்று சொல்லி தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். நிழல்படத்துடன் தினசரிச் செய்தி, தொலைக்காட்சி சிறப்புச் செய்தி என மனதில் என்னென்னவோ கற்பனைகள் வந்து போயின. ச்சே, நம்முடைய மகளைப் பற்றி நாமே இப்படி நினைப்பதா? என்ன மனசு இது? நினைக்கவே நடுக்கமாக இருந்தது. என் அழகுச் செல்லம் அர்ஷியா! உனக்கு ஒன்றும் ஆகக்கூடாது. யா அல்லாஹ், என் மகளைக் காப்பாற்று. வியர்த்தது அவருக்கு.
"ஏம் பயப்புடுறிங்க..பயப்புடாதீங்க.. அல்லாஹ் நம்பளுக்கு ஒரு கொறையும் வுட மாட்டான். வந்துடுவா" என்று அவர் நெஞ்சைத் தடவி விட்டாள் ஹஸீனா. ஆனால் தாரை தாரையாக விழிகளிலிருந்து வழிந்ததை ஏனோ அவளால் துடைக்கத் தோன்றவில்லை. நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் ·போன் பண்ணி விசாரிக்கலாமா? போலீஸில் சொல்லலாமா? பல கேள்விகளும் அழுகையின் ஊடே அலசப்பட்டன. எல்லா தோழிகள் வீட்டுக்கும் போய் பார்த்துவிடுவது என்று முடிவுக்கு வந்தபோது மணி ஏழரையைத் தாண்டிவிட்டிருந்தது.
மறுபடி வண்டியை எடுத்துக்கொண்டு கேட்டைத் திறந்தபோது சைக்கிளுடன் ஒரு பெண் வாசலில் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் ஹஸீனா அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள்.
"வாம்மா ப்ரியா வா. அர்ஷியாவை..."
"அர்ஷியா எங்க வீட்லதான் இருக்கா ஆன்ட்டி. அதெ சொல்லத்தான் நா வந்தேன்" என்று சொல்லிவிட்டு அப்துல்காதிரைப் பார்த்தவுடன் மேற்கொண்டு ஏதோ சொல்லவந்தவள் சொல்லாமல் தயங்கினாள்.
"அர்ஷியாவுக்கு ஒன்னுமில்லையே" என்று பதறினார் அப்துல்காதிர்.
"ஒன்னுமில்லை அங்கிள்" என்றாள் ப்ரியா. அவள் அப்படிச் சொன்னதும்தான் அவரின் இதயப் படபடப்பு அடங்கியது.
"உள்ளவாம்மா" என்று ப்ரியாவை அழைத்துப்போனாள் ஹஸீனா.
கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து இருவரும் திரும்பி வந்தனர்.
"என்ன விசயம்?" பரபரத்தார் அப்துல்காதிர்.
"இருங்க சொல்றேன். நீ பத்தரமா போவியாம்மா. இரு, நா அங்கிளெ கூடவரச் சொல்றேன்" என்றாள்.
"சரி ஆன்ட்டி" என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறினாள் ப்ரியா.
"இங்கெ வாங்க" என்று கணவனை அழைத்தவள், "ஒன்னுமில்லெ, ஸ்கூல் வுடுற நேரத்துல வய்சுக்கு வந்துட்டாளாம். யாருட்டயும் சொல்லாம, ப்ரியாட்ட மட்டும் சொல்லி, ஒடம்பு சரியில்லேன்னு அவ வூட்டுக்கு போய்ட்டாளாம். ரொம்ப வய்த்த வலிச்சுச்சாம். ப்ரியா வூட்டுலதான் கவனிச்சு வச்சிருக்காங்க. அவங்க வூட்டுல ·போனும் இல்லெ, வூட்ல யாரும் ஆம்புளயும் இல்லெயாம். அதுனால பாவம் கனியாப் புள்ளெ ப்ரியாவெ சைக்கிள்லெ அவங்க அம்மா இங்கெ தனியா அனுப்பி இருக்காங்க. நீங்க சட்னு போயி, ப்ரியாவெ பத்தரமா வூட்லெ சேத்துட்டு, அர்ஷியாவெ கூட்டிட்டி வாங்க. நா அதுக்குல்ல செய்யவேண்டிய ஏற்பாட்ட செய்யுறேன். அல்லாஹ் பெரியவன்" என்று முடித்தாள்.
வெளியே வந்த அப்துல்காதிர் ப்ரியாவின் பெற்றோரை நினைத்துக் கொண்டார். மனைவிக்கு பதிலாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அவர் மனம் பூரா நன்றியால் நிறைந்திருந்தது.
"அல்ஹம்துலில்லாஹ்" என்று அப்துல் காதிரின் வாய் முணுமுணுத்தது.
பதிவுகள் ஏப்ரில் 2005 ;இதழ் 65
***************************
உண்மையான ஆரியன்!
- மொஹமட் நாஸிகு அலி
(Mohammed Naseehu Ali)-
தமிழில்: அ.முத்துலிங்கம்
[ மொஹமட் நாஸிகு அலி (Mohammed Naseehu Ali) ஆப்பிரிக்காவின், கானாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது அவர் வசிப்பது நியூ யோர்க்கில். இளம் வயதில் எழுதத்தொடங்கி திடீரென்று புகழ் பெற்றவர். இவருடைய கதைகளும், கட்டுரைகளும் நியூயோர்க் டைம்ஸ், நியூ யோர்க்கர் போன்ற பிரபலமான பத்திரிகைகளில் பிரசுரமாயிருக்கின்றன. இவர் ஓர் இசைக்கலைஞரும்கூட. சமீபத்தில் இவர் எழுதிய 'மல்லம் சிலே' என்ற சிறுகதையை நியூ யோர்க்கரில் படித்துவிட்டு, ஆப்பிரிக்காவின் சினுவா ஆச்சிபி, பென் ஒக்ரி போல இன்னொருவர் தோன்றிவிட்டார் என்று நினைத்தேன். கடந்தமாதம் அவருடைய சிறுகதைத் தொகுதி The Prophet of Zongo Street வெளியானபோது அதை முதலாளாக நின்று வாங்கினேன். அதிலே வெளியான 'உண்மையான ஆரியன்' என்ற இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. உலகத்தின் இரு பாகங்களில் இருந்து புலம்பெயர்ந்து நியூ யோர்க்கில் வாழும் இருவருடைய கதை. இது இன்னும் மற்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொருந்தும். அதையே கீழே மொழிபெயர்த்திருக்கிறேன்.- -
நான் லிகுவிட் லவுஞ் கிளப்பில் இருந்து வெளியே வந்தபோது அதிகாலை மூன்றுமணி. வீதியில் ஒரு சிலரின் நடமாட்டமே இருந்தது. வீடற்றவர்கள் நிறை வண்டிகளைத் தள்ளினர்; சனங்கள் நெருக்கியடிக்கும், புகை சூழ்ந்த பார்களில் வேலைசெய்பவர்களும், சங்கீதக்காரர்களும் தங்கள் அன்றைய கடுமையான உழைப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். போதை நிறைந்த இன்னும் சிலர் வேறு எங்காவது சாப்பிடவோ, அல்ல மேலும் குடிக்கவோ அலைந்தனர். அந்த நேரம் கெட்ட நேரத்தில் வாடகைக்கு வாகனமொன்று பிடிப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. காலையிலோ அல்லது பரபரப்பான மாலையிலோ அல்லது வெள்ளி, சனி பின்னிரவுகளிலோ அது அத்தனை சுலபம் இல்லை. அதுவும் ஒரு கறுப்பு முகத்தை வாடகைக் காரோட்டிகள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள். இரண்டு வாடகைக் கார்கள் வசதியாக கிளப்புக்கு முன் தரித்து நின்றன. நான் என்னுடைய இரண்டு ஜிம்பே மேளங்களையும், பேசும் மேளத்தையும், அதன் உறைகளையும் சுமந்தபடி முதல் காரை அணுகினேன். அந்தக் காரின் சாரதி இரண்டாவது கார் சாரதியுடன் ஏதோ ஆவேசமாக பேசுவதை நிறுத்திவிட்டு கையைக் காட்டி 'ஓ, நண்பரே வாரும், வாரும்' என்றான். அவனுடைய பேச்சில் கிழக்கு மத்தியதரை வாடை வீசியது. கிரேக்கம், அல்பேனியா அல்லது துருக்கியாகக்கூட இருக்கலாம். யார் கண்டது? அவன் கொஞ்சம் தொக்கையாக, ஐம்பது வயது வாக்கில் இருந்தான்.
இத்தனை வருடங்களில் என்னைச் சவாரி ஏற்கும் சாரதிகளினுடனான என் உறவை வர்ணிப்பதானால் சண்டை - சமாதானம் என்று சொல்லலாம். சில வேளைகளில் அது மோசமான பகையாகவும் மாறுவதுண்டு. இந்த டிரைவர்கள், வீதி வெறிச்சோடி, அவர்கள் தொழில் மந்த நிலையில் இருக்கும் நேரங்களில் மட்டுமே என்னை ஏற்றுவார்கள். அவர்களுடன் சுமுகமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எனக்கில்லை. இன்றைய சாரதி கொஞ்சம் நல்லவன்போல தோன்றினாலும் என்னுடைய வழமையான தோரணையை உதறிவிடுவது கடினமாகவே இருந்தது.
நான் சாமான்களைத் தூக்கிக்கொண்டு காரின் ட்ரங்கை அணுகியதும் அவன் எனக்கு உதவ வந்தான். 'நான் இதைப் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் சிறிய பையுடன் உள்ளே ஏறுங்கள்' என்றான். அப்படியே என் ஜிம்பே மேளங்களை வாங்கி ட்ரங்கிலே வைத்து மூடினான்.
'புரூக்லினுக்கா போகிறீர்கள்?' அவன் கேட்டான்.
பின் கதவை நோக்கி நடந்தவாறு 'ஆம், பார்க் ஸ்லோப்' என்றேன்.
காரின் உள்ளே புதிதாகத் தெளித்த ஏதோ வாசனை நல்ல மணம் வீசியது. ஆனால் அது மறைக்க முயன்ற சிகரெட் நெடி இன்னும் அடிவாரத்தலிருந்து அகலவில்லை. வாரத்தில் ஒரு நாள் என்று ஆப்பிரிக்க ஜாஸ் வாத்தியக் குழுவுக்கு, காற்றோட்டம் இல்லாத நிலவறைக் கிளப்பில், மேளம் வாசித்ததில் எனக்கு கண்கள் எரிந்து நீர் கசிந்தது.
டிரைவருக்கு காத்திருக்கும்போது என் பகல் வேலையைப் பற்றி யோசித்தேன். அங்கே பத்து மணிக்கு நான் நிற்கவேண்டும். நாளாந்தம் ஒரு கம்புயூட்டர் திரைக்கு முன் உட்கார்ந்து மணிக்கணக்காக கம்பனி இணைய தளங்களை உண்டாக்குவதும், புதுப்பிப்பதுமாகிய என் வேலையை நினைத்த மாத்திரத்திலேயே சோர்வு இன்னும் கூடியது.
சாரதி காருக்குள் ஏறியதும் 'உங்கள் முகவரி என்ன?' என்றான்.
நியூயோர்க் சாரதிகள் அரசியல் விவாதங்களுக்கு பேர்போனவர்கள். பேச்சை வளர்த்த எனக்கு பிரியமில்லை என்பதை உணர்த்துவதற்காக வெடுக்கென்று பதில் கூறினேன். அது அவனுக்கு புரிந்ததாகத் தெரியவில்லை.
'நீங்கள் எங்கேயிருந்து?' அவன் கேட்டான்.
'புரூக்லின்' நான் கூறினேன்.
'இல்லை, இல்லை. எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டேன்.'
'ஓ, கானாவிலிருந்து.'
'எனக்கு கானா தெரியும். அங்கேயிருந்து எனக்கு அநேக கார் சாரதி நண்பர்கள் இருக்கிறார்கள்.'
'அப்படியா!'
'நான் ஆர்மினியன்.' அவனுடைய முகத்தில் தோன்றிய சிரிப்பில் அளவில்லாத பெருமிதம் தெரிந்தது.
'நல்லது.'
நாங்கள் அப்போது சமிக்ஞை விளக்குகளுக்கு முன்னால் நின்றிருந்தோம். இவன் என்னிடம் வேறு கேள்விகள் கேட்பதை நிறுத்துவதற்காக நான் கார் யன்னல் வழியால் பார்த்துக்கொண்டிருந்தேன்.
'அப்ப நீங்கள் ஓர் இசைக்கலைஞரா?'
நான் நீளமாக மூச்சை தயாரித்து பெருமூச்சு விட்டுக்கொண்டே 'ஆம்' என்றேன்.
'என்னுடன் பேச விருப்பமில்லையா, நண்பரே. எனக்கு சகமனிதரை மிகவும் பிடிக்கும்.'
எப்படியிருந்தாலும் எனக்கு என்ன என்று நினைத்தபடி திரும்பி 'இல்லை, நான் மிகவும் களைத்திருக்கிறேன்' என்றேன்.
'கேளும், நண்பரே.' அவன் திரும்பி கண்ணாடி தடுப்பு வழியால் என்னைப் பார்த்தான். 'இங்கே முன்னாலே வந்து உட்காருங்கள். பரவாயில்லை' என்றான்.
'இருக்கட்டும்' என்றேன் நான். ஆனால் நாங்கள் ஒன்பதாவது தெருவை கடந்ததும் அவன் திடீரென்று பிரேக் போட்டு காரை ஒரு பக்கத்தில் நிறுத்தினான். பின்னாலே வந்த கார்கள் விடாமல் ஹோர்ன் அடிக்கத் தொடங்கின.
'நாசமாய்ப் போகட்டும்.' அவன் சிரித்தபடி நகராமல் சாவகாசமாக 'முன்னுக்கு வாரும், நண்பரே' என்றான்.
நான் கதவைத் திறந்து வெளியே வந்தேன். முன் இருக்கையில் உட்கார்ந்து கதவைச் சாத்திய பிறகு சாரதி சொன்னான் 'இது எவ்வளவோ நல்லது, நண்பரே. என்னைப் பாருங்கள். எனக்கு உலகத்தவர் எல்லோரையும் பிடிக்கும். நீங்கள் எங்கேயிருந்து வந்தாலும் எனக்கு பரவாயில்லை.' அவன் சொன்னதற்கு என் முகத்தில் ஏதாவது மாற்றம் எதிர்பார்த்தான். ஆனால் நான் ஒருவித உணர்ச்சியையும் காட்டாது மறைத்துக்கொண்டேன்.
'எனக்கு தெரியும், எனக்கு தெரியும்.' விவாதத்தில் தோல்வியடைந்தவர் விட்டுக்கொடுப்பதுபோல பேசினான். 'எங்களில் பலர் கறுப்பர்களை ஏற்றுவது கிடையாது. நான் அப்படி இல்லை. என்னை அழைப்பவர் எவரையும் ஏற்றுவேன்.'
கறுப்பு மனிதரில் கரிசனை கொண்ட ஒரு குற்ற உணர்வுள்ள வெள்ளைக்காரன்போல இவன் நடப்பதாக எனக்குப் பட்டது. இவனுடைய கரிசனை உண்மையாகக்கூட இருக்கலாம். நான் சிலவேளைகளில் குணவானாக நடப்பதுபோல இவனும் மற்ற சாரதிகளின் நடத்தையை சரிக்கட்டுவதற்காக நல்லவன்போல நடக்கலாம். நான் அதைப் பொருட்படுத்தவில்லை, என்னை தனியாக விட்டால் போதும் என்று நினைத்தேன். ஆனால் பேசுவதற்கு வாயைத் திறந்தபோது மாத்திரம், 'நீங்கள் மிக நல்லவராக இருக்கிறீர்கள்,' என்றேன்.
'ஆம், நான் நல்லவன்தான்.' அவன் சிரித்தபடி சொன்னான், 'இங்கே புகை பிடிக்கலாம், தெரியுமா?' திடீரென்று ஒரு வெளிநாட்டு சிகரட் பக்கட்டை சேர்ட் பையிலிருந்து உருவி என்னிடம் நீட்டினான்.
'இல்லை, நன்றி. நான் புகைப்பதில்லை.'
'என்னவும் புகைக்கலாம். என்னிடம் கஞ்சாவும் உண்டு, வேணுமா?
'வேண்டாம். எதுவுமே நான் புகைப்பதில்லை.'
'உமக்கு என்ன நடந்தது? புகை பிடிக்காத இசைக்கலைஞன்,' கரகரத்த குரலில் சிரித்தான்.
அவன் சிகரெட்டை வாயில் பொருத்தி, லைட்டரை தேடியபடி, 'உங்களுக்கு பரவாயில்லையா?' என்றான்.
'இல்லை' என்றேன்.
அடுத்த சிக்னல் விளக்கில் சிகரெட்டை பற்றவைத்தான். நான் அவசரமாக என் வீட்டு நம்பரை அழைத்தேன். மூன்று முறை மணி அடித்தபின் பதிலி வந்துவிட்டது. என்னோடு வாசம் செய்யும் சிநேகிதி •பிரான்ஸிசுக்கு தகவல் விட்டேன். 'ஏ, இது நான். வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன். உன்னை எழுப்பவில்லை என்று நினைக்கிறேன். விரைவில் அங்கே நிற்பேன்.' இப்படி நடு இரவு தாண்டி நான் வேலை முடித்து வரும்போது என்னுடன் சேர்த்து வியர்வை மணமும், புகை மணமும் வந்துவிடும். அவள் அது தன்னை தொந்திரவு செய்வதில்லை, அப்படியே தன்னுடன் படுக்கலாம் என்று சொல்லியிருந்தாலும் நடு நிசியில் அவளை எழுப்புவது எனக்கு குற்ற உணர்வைக் கொடுத்தது. ஆனால் இன்றிரவு, என் நினைவிலிருக்கும் வேறு எந்த இரவைக் காட்டிலும், எனக்கு •பிரான்சிஸின் அன்பும், தொடுகையும் தேவையாக இருந்தது.
நான் செல்பேசியை சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு இந்த ஆர்மினியனிடம் இருந்து தப்பி என்னைச் சூழ்ந்திருந்த பிரச்சினைகளில் மூழ்கினேன். இரண்டு மாதம் முன்பு கானாவில் இருக்கும் என் பெற்றோர் தொலைபேசியில் என்னை அழைத்து தாங்கள் அங்கே நல்ல குடும்பத்தில், குணமான ஒரு பெண்ணை எனக்கு பார்த்திருப்பதாக கூறினார்கள். நான் அவர்களிடம் சண்டை போட்டேன். அதற்கு பிறகு அவர்களை அழைக்கவில்லை. அமைதியை தொலைத்து, மனம் சோர்ந்துபோய் இருந்தாலும் இந்த விசயத்தை நான் •பிரான்சிஸிடம் சொல்லவில்லை. மூன்று வருடங்களாக நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம்.
ஆனால் இந்த ஆர்மினியனை இலகுவில் திசை திருப்ப முடியாது.
நான் தொலைபேசியை முடித்தது தெரிந்ததும் அவன் தொடங்கினான். 'உமக்குத் தெரியுமா நாங்கள் கலைஞர்கள் வித்தியாசமானவர்கள்; ஒருவரையும் வெறுப்பது கிடையாது.'
நான் தலையை ஆட்டினேன். செல்பேசியில் இன்னொரு அழைப்பு செய்யாததையிட்டு என்னையே நான் திட்டிக்கொண்டேன்.
'நானும் ஒரு இசைக்கலைஞன்தான், உமக்கு தெரியுமா?'
'அப்படியா?'
'உமக்கு சுர்ணா தெரியுமா?'
'சுர்ணா, அது என்ன? ஒருவித இசையா?'
'இல்லை, இல்லை. அது ஓர் இசைக் கருவி. சுர்ணாதான் என்னுடைய சனங்களின், உச்சக்குரலுக்கு ஏற்ற முதலாவது சக்ஸபோன்.' அவன் பேசும்போது 'ர்' உச்சரிப்பு உருண்டு உருண்டு வந்தது.
'அந்த வாத்தியத்தையா நீர் வாசிப்பீர்? சுர்ணா.'
'இல்லை, இல்லை, இல்லை, நண்பரே. நீங்கள் சரியாக உச்சரிக்கவில்லை. நாங்கள் அதை சுர்ர்ணாஹ் என்போம்.'
'ஓகே, சுர்ர்ணாஹ்.' அவன் சொன்னமாதிரியே 'ர்' க்கு அழுத்தம் கொடுத்து 'ஹ்' கில் முடித்தேன்.
'அதேதான், நண்பரே.' அவன் சந்தோசத்தில் கத்தினான்.
'என்னவோ. அப்படியானால் இந்த சுர்ர்ணாஹ்வை நீர் வாசிப்பீரா?'
'நான் அனைத்தையும் வாசிப்பேன். சுர்ர்ணாஹ், டூடுக், டாவுல், டோ•ல், சுலிச். எதைக் கொண்டுவந்தாலும் வாசிப்பேன்.' வலது கையை மேலும் கீழும் பெரிதாக ஆட்டியபடி ஆர்வமாகப் பேசினான். 'நான் கனூன் கூட வாசிப்பேன், உமக்கு கனூன் தெரியுமா?' என்றான்.
'இல்லை, கனூன் தெரியாது.'
'நீர் ஓர் இசைக்கலைஞன், ஆனால் உமக்கு கனூன் தெரியாது,' அவன் தொடர்ந்தான்.
'இங்கே பாரும். என் சனங்களின் சரித்திரத்தை மறைத்துவிட்டார்கள். கனூன்தான் உலகத்தின் முதல் ஹார்ப்பிஸ்கோட். அதைக் கண்டுபிடித்தது என் சனங்கள்தான்.'
நான் மனதுக்குள், ஆர்வம் குறையாத இவன் அடுத்ததாக என்னத்தை தன் சனங்கள் கண்டுபிடித்ததாக சொல்வான் என்று ஊகிக்கப் பார்த்தேன். என்றாலும் தலையை அசைத்து ஆமோதித்தேன். இந்தச் சாரதியின் அற்புதம் வாய்ந்த ஆர்மினிய முன்னோர்கள் கண்டுபிடித்த உச்சக்குரல் சக்ஸபோன், முதலாவது. அவர்கள் கண்டுபிடித்த ஹார்ப்பிஸ்கோட்டும், முதலாவது. ஆகவே முதலாவது பியானோவைக் கண்டுபிடித்ததும் அவர்களே என்று ஆகிறது. என் மூளையில் ஒரு பொறி தட்டியது. அவன் சொல்வது உண்மையில்லை. உலகத்தின் முதல் ஹார்ப்பிஸ்கோட் பல•பொன் அல்லவா?
'மன்னியுங்கள். கோறா உமக்கு தெரியுமா?' நான் கேட்டேன்.
'கோறா, இசைக்கருவியா?'
'ஆமாம். ஹார்ப்லூட், கீழே பெரிய குடுவையுடன், இருபது தந்திகள் கொண்டது. அது மேற்கு ஆப்பிரிக்காவச் சேர்ந்தது.'
'அதற்கென்ன?' அவன் கேட்டான்.
'எனக்கு தெரிந்த சரித்திரத்தின்படி கோறாதான் உலகத்தின் முதல் ஹார்ப்பிஸ்கோட். ஆகவே அதுவே உலகத்தின் முதல் பியானோவும்' என்றேன்.
'இல்லை. இல்லை. இல்லை. ஆர்மினியர்களின் நாகரிகத்தை தாண்டி ஒன்றுமே இல்லை,' அவன் கத்தினான். 'எல்லோருக்கும் தெரியும், நாங்கள்தான் முதல் ஹார்ப்பிஸ்கோட்டை கண்டுபிடித்தவர்கள் என்பது. ஆகவே பியானோவும் எங்களுடையதுதான்.'
'இதில் நாங்கள் வித்தியாசப்படுகிறோம் என்பதை ஒப்புக்கொள்வோம்,' என்றேன்.
நாங்கள் இப்பொழுது மான்ஹட்டன் வருவதற்கு முன்பாக உள்ள கடைசி சிக்னல் விளக்கில் நின்றோம். இது கனால் தெருவையும், பொவெரி தெருவையும் குறுக்கறுக்கும் சந்தி. என்னுடைய மறுப்பில் சாரதியின் உற்சாகம் வற்றிவிட்டது. விழுந்துபோன முகத்துடன், சிகரெட்டை மௌனமாக இழுத்து, அடுத்து என்ன பேசுவது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான். விளக்கு பச்சைக்கு மாறியது. அவன் காரை எடுத்ததும் அது துள்ளிப் பாய்ந்து பக்கத்து வீதியில் ஓடிய இரண்டு குப்பை வண்டிகளை ஏறக்குறைய இடித்துவிட்டது. 'நாசமாய்ப் போ' என்று அவர்களைப் பார்த்து இரைந்தபடியே ஓட்டினான். அவன் கொஞ்சநேரம் தாறுமாறாக வண்டியை செலுத்தியதில் இன்னொரு வேகமான காருடன் மோதுவது நூலிழையில் தவிர்க்கப்பட்டது. இவ்வளவுக்கும் அவன் என்னுடன் ஒரு வார்த்தையும் பரிமாறவில்லை. அதை நான் வரவேற்றேன். எங்கள் கருத்து வேற்றுமை கடைசியில் வேலை செய்துவிட்டது. எனக்கு கரைச்சல் கொடுக்காமல் என்னை தனியாக விட்டான். நான் முகத்தை திருப்பி யன்னல் வழியாகத் தெரிந்த மான்ஹட்டன் வான விளிம்பின் அழகை பருகினேன். அது ஒரு ஈரப்பிடிப்பான இருள் படிந்த இரவு. உலக வர்த்தக மைய கட்டிடங்கள் இரண்டு எரியும் வெள்ளிகள் போல தெரிந்தன. நகரத்தின் விளிம்பை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என்னவோ எனக்கு வெற்றியும், உற்சாகமும் ஏற்பட்டு, என்னுடைய அமெரிக்க இசைக் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை பிறக்கும்.
பாலத்தின் நடுவில் வண்டி போகும்போது சாரதி உளறினான், 'உமக்கு ஆர்மினியா தெரியுமா?' மறுபடியும் தொடங்கிவிட்டான் என்று நான் நினைத்தேன். சிறிது தாமதித்து 'என்ன கேட்கிறீர்?' என்றேன்.
'ஆர்மினியாவைப் பற்றி உமக்கு ஏதாவது தெரியுமா?'
'நிச்சயமாக. முந்திய சோவியத் யூனியனில் ஒரு பகுதி, ஜோர்ஜியாவுக்கு அருகில்.'
'உமக்கு உலக வரைபடம் நல்லாக, நல்லாக தெரியும்' என்றான். நான் ஒரு பொய்ப் புன்னகையை உதிர்த்தபடி இவன் இன்னும் என்ன செய்யப்போகிறான் என்று யோசித்தேன்.
எனக்கு தலை இடித்தது. என் கண்கள் சிகரெட் சாம்பலிலும், அவன் கைகளை அசைக்கும்போதும், ஊதும்போதும் எழும் புகையிலும் எரிந்தன.
'ஆனால் - ஆம், ஆம் - முந்திய சோவியத் யூனியன் என்று சொன்னது சந்தோசம். இனி ஒரு போதும் இல்லவே இல்லை.' சற்று நிறுத்தி சிகரெட் துண்டை யன்னலுக்கு வெளியே வீசினான். 'நூற்றாண்டுக் காலங்களாக பல இன மக்கள் எங்களை ஆளப்பார்த்தார்கள். ஆனால் நாங்கள் பலமான சனங்கள். நாங்களே முழு ஆசியாவின், மத்திய கிழக்கின் பூர்வ இனம்.' அவன் குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது.
'இங்கே பாருங்கள், துருக்கியை ஸ்தாபித்தவர்..'
'அட்டர்ருக்' நான் கூறினேன். தற்செயலாக Orhan Pamuk எழுதிய The Black Book என்ற புத்தகத்தை சில நாட்கள் முன்புதான் நான் படித்து முடித்திருந்தேன்.
'நண்பரே, உமக்கு அதிக விசயம் தெரிந்திருக்கிறது. நீர் ஒரு மிக மிக கெட்டிக்காரரான கறுப்பு அ...அ..' அப்படியே பாதி வசனத்தில் நின்றுவிட்டான். பிறகு 'இசைக்கலைஞன்' என்றான். இந்த ஆர்மினியன் என்னை கெட்டிக்காரக் கறுப்பன் என்று அழைத்த தன் மூடத்தனத்தை நினைத்துப் பார்த்திருப்பான் போல. எப்படி தொடருவது என்று தெரியாமல் சிறிது நேரம் அசௌகரியமான சிரிப்பில் கழிந்தது. சில மௌனமான தருணங்கள்.
'நீர் சொன்னது சரி. ஆனால் ஒரு திருத்தம் உண்டு. அட்டர்ருக்தான் நவீன துருக்கியின் பிதா. அட்டர்ருக்குக்கு முன்பு, ஏன் துருக்கிக்கு முன்பாகக்கூட நாங்கள்தான் இருந்தோம், ஆர்மினியர்கள். ஹாமிட்தான் உண்மையான ஆதி சுல்தான்.' அவன் குழறியபடி கூறினான்.
நான் எவ்வளவு அசுவாரஸ்யம் காட்டினாலும் சாரதி விரிந்து கொண்டே போகும் தன் கதைகளை என்னிடம் கூறுவதை நிறுத்துவதாகத் தெரியவில்லை. பல நூற்றாண்டுகளாக அசேரியர்களும், சியா துருக்கியர்களும், ரஸ்யர்களும் ஆர்மினியர்களை பூமியில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிக்க முயன்றிருக்கிறார்கள். ஆர்மினியர்களை இந்த ஆக்கிரமிப்புகளால் அடிபணிய வைக்க முடியவில்லை. வெல்லமுடியாத ஆத்மாக்கள் அவர்கள். சரித்திரம் ஒரு நாள் மறுபடியும் அவனுடைய சனங்களை வெற்றி பெறச் செய்யும். அவர்களை மறுபடியும் அரியணை ஏற்றும் - பிரபஞ்சத்தின் அரியணை.
இது எல்லாம் நடக்கும்போது •பிரான்சிஸ் பற்றி என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவளுடைய ஒரே விருப்பம் சரித்திரம் செக் மக்களை மறுபடியும் பலமுள்ளவர்களாக ஆக்கவேண்டும் என்பது. அப்படி என்றால்தான் அயலில் உள்ள போராசை பிடித்த நாடுகள் தங்கள் நாட்டுடன், முந்திய ஐரோப்பிய பிணக்குகளின் போது நடந்ததுபோல, செக் நாட்டை இணைக்க மாட்டார்கள்.
பாலத்தை கடந்து பிளாட்புஷ் தெரு வரும்போது சாரதி ஆர்மினியர்களைப் பற்றிய புகழ்ப் பிரசங்கத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தான். நான் அவன் பேசிய எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தேன் என்ற பாவனையில் தலையை அசைத்தேன்.
'நான் சொல்கிறேன், நண்பரே, துருக்கியில் இன்று ஒரு கலாச்சாரம் இருக்குமானால் அதற்கு காரணம் ஆர்மினியர்கள்தான். நாங்கள் உண்ணும் உணவை அவர்கள் உண்கிறார்கள். நாங்கள் சமைப்பது போலவே அவர்களும் சமைக்கிறார்கள். எங்களைப்போலவே அவர்கள் தோற்றத்திலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தாங்கள் ஆர்மினியர்கள்தான் என்பதை கேட்பதற்கு அடி ஆழத்தில் விருப்பமில்லை. அந்த ஆத்மாவைக் கொன்று உடம்பில் இருந்து வெளியே வீசவே பிரியப்படுகிறார்கள். ஆனால் அதை எப்படிச் செய்யமுடியும், நண்பரே.' பெரும் சிரிப்பு ஒன்றை ஆடம்பரமாகச் சிரித்தான்.
நான் தலையை ஆட்டியபடியே சொன்னேன், 'ஒருக்காலும் முடியாது.'
'நண்பரே, மிகச் சரி. ஒருக்காலும் முடியாது.' உரத்துச் சத்தமிட்டபடியே ஞாபகமறதியாக அடுத்த வரிசைக்குள் நுழைந்துவிட்டான். அந்த வரிசை சாரதிகள் உருது, கிரியோல், ஜமாய்க்கன், அரபு, ஆப்பிரிக்கன் என்று வசை மொழிகளை பிரவாகமாக எடுத்துவிட்டனர். ஆர்மினியன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு மேலும் தொடர்ந்தான். 'கிரேக்கம் ஒரு காலத்தில் ஆர்மினியாவாக இருந்தது. ஆதிகாலத்து கிரேக்கமும் அதைச் சுற்றியிருந்த பிரதேசங்களும் ஆர்மினியாதான்.'
'ம்'
'நம்பமுடியாது, அல்லவா.'
நான் தலையசைத்தேன். கார் ஓட்டுவதில் ஆர்மினியனின் கவனம் குறையக் குறைய, எனக்கு வரலாறு பாடம் புகட்டுவதில் அவன் காட்டிய ஆர்வம் கூடிக்கொண்டே வந்தது. அடிக்கடி என்னை திரும்பிப் பார்த்து நான் செவி மடுக்கிறேனா என்பதை உறுதி செய்தான்.
'இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் சூடானிலும், எத்தியோப்பியாவிலும் இருந்தது ஆர்மினியர்கள்தான்.'
ஏன் உலகம் முழுக்க ஆர்மினியர்களால் நிரம்பி வழிந்தது என்று சொல்வதற்கென்ன? நான் நினைத்தேன். சாரதியின்மேலும், அவன் சனங்களின் மேலும் எனக்கு ஒருவித அக்கறையும் கிடையாது. கறுப்பின மக்கள் பிரச்சினையில் அவன் ஏதாவது அக்கறை காட்டுகிறானா? அதுபோலத்தான் இதுவும். துருக்கியர்கள் ஆர்மினியர்களை அடக்கியாண்டு துன்பப்படுத்தியதற்கும், வெள்ளைக்காரர்கள் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தியதற்கும் இப்படியான மூட எண்ணமே காரணம் என்று நான் சொல்ல விரும்பினேன்.
ஆனால் என்னால் சொல்ல முடிந்ததெல்லாம், 'நீர் சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால் இப்படியான மனித கொடுமைகளுக்கு ஒருத்தர் என்ன செய்வது.' அவன் பதில் சொல்லவில்லை. இந்த பயம் தரும் மௌனத்தை குலைக்க நான் தொடர்ந்தேன். 'நான் என்ன சொல்கிறேன் என்றால், பாரும் அமெரிக்கா என்ன செய்தது? அமெரிக்க யப்பானியர்களைக் கொடுமைப் படுத்தியது. அதையே யப்பானியர்களும் இரண்டாம் உலக யுத்தத்தில் கொரியர்களுக்கு செய்தார்கள். வெள்ளைக்காரர்கள் எங்களை அடிமைகளாக ஆண்ட காலத்தில் செய்ததை பாருங்கள். இப்பொழுது நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் ஒருத்தரை ஒருத்தர் கொல்கிறார்கள். சேர்பியர்கள் பொஸ்னியர்களைக் கொல்கிறார்கள். ஹ்ட்டுக்கள் துட்ஸியரை ஒழிக்கிறார்கள். இதுதான் உலக நடப்பு, இதுதான் வாழ்க்கை.' சாரதி திடீரென்று ஒரு வார்த்தையும் உதிர்க்காமல் மௌனமாகியதில் கிடைத்த அசௌகரியமும், நான் வேறொரு போக்கில் போகிறேன் என்ற உணர்வும் என்னை மேலே பேசவிடாமல் நிறுத்தியது. அவனைப் பார்த்தபோது அவன் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் ஆழமாக யோசிப்பவன்போல காணப்பட்டான். கடைக்கண்ணால் என்னைப் பார்த்துவிட்டு ஆர்மினியன் மறுபடியும் தொடங்கினான். 'நண்பரே, நீர் முக்கியமான பல விடயங்களை சொன்னீர். ஆனால் அதில் அதிமுக்கியம் வாய்ந்த வாக்கியம் 'ஒருத்தர் என்ன செய்யமுடியும்?' என்பது.'
'உண்மைதான். இந்த நாட்டைப் பாருங்கள். கறுப்பின மக்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு இழப்பீடு கேட்கும்போது வெள்ளையாட்கள் 'மறந்துவிடு' என்கிறார்கள். உண்மை சிலவேளைகளில் கொடூரமானது. கடினமான வாழ்க்கையை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்,' நான் சொன்னேன்.
நான் இப்படி உணர்ச்சி வசப்பட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. 'நண்பரே நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது,' சாரதி மறுபடியும் தொடங்கினான். காரை வேகம் குறைத்து என்னுடைய தெருவுக்குள் இடப்பக்கமாகத் திருப்ப ஆயத்தப் படுத்தினான். 'நீங்கள் சொல்கிறீர்கள் மனிதர்கள் எப்பொழுதும் இன்னொரு மனிதரை வதைப்பார்கள்; சில சமயம் கொல்லக்கூடச் செய்வார்கள் என்று. நான் ஓர் உதாரணம் சொல்வேன். காடுகளில் புலியானது சிங்கத்தையோ, சிறுத்தையையோ உணவுக்காக தாக்காது. அது எப்பவும் வலிமையில்லாத, தன்னை பாதுகாக்க தெரியாத இன்னொரு மிருகத்தைத்தான் தாக்கும். வலிமை குறைந்த மிருகம் பலமுள்ளதாக மாறினால் அல்லது சண்டைபோட்டால் ஒழிய புலி எப்பொழுதும் அதையே சாப்பிடும். வாழ்க்கையிலும் அப்படியே. சில மனிதர் எப்பொழுதும் இன்னொருத்தரை விழுங்கியபடியே இருப்பார்கள். நீங்கள் செய்யவேண்டியது, மற்றவர்கள் சாப்பிடுவது நீங்களாக இல்லாமல் பார்த்துக்கொள்வது.' சாரதி சொன்னதை நான் அசை போட்டுக்கொண்டு இருக்கும்போது அவன் மறுபடியும் தொடங்கினான்.
'ஆர்மினியன் சனங்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் போன்று இனிமேல் ஒன்று நடக்க நாங்கள் விடமாட்டோம். எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்பதற்கு குரல் எழுப்புவோம். ஆனால் நண்பரே, கறுப்பர்களான உங்கள் பிரச்சினை அதுதான்.'
'எப்படி?' நான் கேட்டேன்.
'ஏனென்றால் நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள்; ஏனென்றால் போராடுவதை நிறுத்திவிட்டீர்கள். ஏனென்றால் உங்களுக்கு பசியில்லை. ஏனென்றால் நீங்கள் மன்னிக்கிறீர்கள். ஆனால் அது பெரிய பிழை. நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் மறுபடியும் அவர்கள் உங்களை சாப்பிட்டு விடுவார்கள்.' சாரதி கட்டியெழுப்பிய வாதத்தை தகர்க்க திட்டமிட்டு நான் இப்படி கூற நினைத்தேன். 'யார் யாரை ஆண்டாலும் இறுதியில் மனிதர்கள் வரலாற்றின் கைப்பொம்மைகளே. ஒரு கழுதையில் தங்க நாணயங்களை ஏற்றி வந்து பொதியை இறக்கிவைத்துவிட்டு கழுதையை விரட்டுவதுபோலத்தான் வரலாறும் எங்களை நடத்தும்.' ஆனால் அதை நான் கூறவில்லை. சாரதி கடைசியாக சொன்ன வார்த்தையில் சிறிது என்னுடைய இன மக்கள் பற்றிய உண்மையும் இருந்ததால் மௌனம் சாதித்தேன்.
நான் யன்னல் வழியாகப் பார்த்தபோது எங்கள் கட்டிடத்துக்கு வந்துவிட்டிருந்தோம்.
'கட்டிட நம்பர் 823' என்றேன்.
'இடமோ, வலமோ?'
'வலது பக்கம், கடைசி.'
'பிரச்சினை இல்லை, நண்பரே. ஆனால் நான் ஒன்று கேட்கவேண்டும்.'
'ஓகே.'
காரை வாசலில் நிற்பாட்டும்போது அவன் கேட்டான், 'சரத்துஸ்ற்றா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?' அப்படியே திரும்பி என்னைப் பார்த்தான். மிக சமீபமாக இருந்தபடியால் அவன் மூக்கில் இருந்து வெளிப்பட்ட காற்று என் நெற்றியில் அடித்தது.
நாசமாய்ப் போச்சு.
நான் நீட்சேயின் Thus Spake Zarathustra வையும், இன்னும் ஆதி புராண இறைதூதர் பற்றிய இலக்கியத்தையும் என்னுடைய பல்கலைக் கழக பழைய கிரேக்க தத்துவ பாட வகுப்பில் கற்றிருந்தேன். ஆனால் அவரிடம் 'இல்லை' என்றேன். 'கடவுள் என்பவருக்கு முன்பு வந்த அஹ்ரா மஸ்டா தான் முதற் கடவுள். அவருடைய தூதர்தான் 'சரத்துஸ்ற்றா,' என்றான்.
நான் தலையை அசைத்தேன். 'ஆர்மினியர்களாகிய நாங்கள் இன்றும் அஹ்ரா மஸ்டாவையும், அவருடைய தூதரான சரத்துஸ்ற்றாவையும் வணங்குகிறோம். அவர் காக்கசஸ் மலைப்பகுதியை சேர்ந்தவர், ஆகவே நாங்கள்....' என் எதிர்பார்ப்பைக் கூட்டுவதற்காக நிறுத்தி என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான். 'ஆர்மினியர்கள்தான் உண்மையான காக்கசஸ்காரர்கள், ஆகவே நாங்களே உண்மையான ஆரியர்.' அவனுடைய தொனியில் வெற்றி ஒலித்தது.
சாரதி எப்படி சரத்துஸ்ற்றாவில் ஆரம்பித்து, அவர்கள் கடவுளான அஹ்ரா மஸ்டாவிடம் சென்று அதிலிருந்து தொன்மையான காக்கசஸ் ஆர்மினியர்கள்தான் ஆரியர்கள் என்ற விடயத்தை கண்டுபிடித்தான் என்பது எனக்கு புரியவே இல்லை. ஆனாலும் நான் ஏதாவது சொல்லப்போய் அது மீண்டும் அவனை தூண்டிவிடும் என்ற பயத்தில் வாய் பொத்தியிருந்தேன். திடீரென்று அவன் சிந்தனையிலும், மௌனத்திலும் ஆழ்ந்துவிட்டான்; அவனுடைய ஒலிவ் நிற நெற்றித் தோல் வாய்க்கால்போல சுருங்கியிருந்தது. ஒரு சில செக்கண்டுகள் அவனிடம் இருந்து ஒரு வார்த்தையும் பெயரவில்லை. நான் இருக்கையில் அடித்து வைத்ததுபோல அமர்ந்திருந்தேன். ஒரு சிரிப்புடன் இருக்கைக்கு கீழே குனிந்து மெதுவாக திறப்பானை இழுத்தான்; ட்ரங் கதவு பட்டென்று திறந்தது. நான் சவாரிக் கணக்கை தீர்ப்பதற்கு பணப்பையை எடுத்தேன். ஆனால் அந்த ஆர்மினியன் என்னுடைய மணிக்கட்டைப் பிடித்து, கண்களை நேராக நோக்கியபடி 'கவலையை விடுங்கள், நண்பரே, பணம் வேண்டாம்' என்றான். அவனுடைய சிரிப்பு பிரகாசித்து வரிசையான பற்களை - சிகரெட் கறை ஒன்றே குறை - காட்டியது.
'நிசமாகவா.'
'நிசமாக,' அவன் தொடர்ந்து சிரித்தான்.
அந்த செய்கையில் நான் அசௌகரியமாக உணர்ந்தேன். எனக்கு காரைவிட்டு வெளியேறுவது அவசரம். நான் தலையைக் குனிந்து 'நன்றி' என்றேன். அவன் ஒரு ரசீது அச்சடித்து கொடுத்தான். 'உங்கள் வருமானவரிக்கு உதவும்.'
'இதை செய்திருக்கவேண்டிய தேவை இல்லை,' என்றேன்.
'ஒரு கலைஞருக்கு என்னாலான சிறு உதவி.'
என்னவாயினும்.ஓட்டு வளையத்தில் நெஞ்சு படுத்திருக்க, அந்த ஆர்மினியன் காரின் உள் அறையில் எதையோ தேடினான். சிறிது நேரத்தில் அவன் தன் முகவரி அட்டையை கண்டுபிடித்து எடுத்து என்னிடம் கொடுத்து 'எப்பொழுது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள்' என்றான். அவன் கண்கள் மிருதுவாகி கலங்கியிருந்தன.
'நன்றி' என்று சொல்லி அட்டையைப் பெற்றுக்கொண்டேன். அதில் 'சார்கிஸ்' என்று பேர் மட்டுமே எழுதியிருந்தது.
'நண்பரே, பிரச்சினையில்லை.' ஆர்மினியாவில் வணக்கம் கூறும்போது நாங்கள் 'சானெட் ரானெம்' என்று சொல்வோம். ஆகவே நான் உங்களுக்கு கூறுகிறேன் 'சானெட் ரானெம்'.
எனக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் என் உள்ளுணர்வு காரைவிட்டு சீக்கிரம் இறங்கச் சொன்னது. நான் இடம் பெயர முன்னர் சார்கிஸ் கேட்டான், 'சானெட் ரானெம்' என்றால் என்ன பொருள் என்று தெரியுமா?'
'இல்லை' நான் வியப்படைந்திருந்தேன். 'சானெட் ரானெம்' என்றால் என்னவென்று எனக்கு எப்படித் தெரியக்கூடும்.
அவன் சொன்னான், 'சானெட் ரானெம்' என்றால் 'உன் வேதனைகளை நான் எடுத்துக் கொள்கிறேன்.'
அந்த மனிதன் சொன்ன வார்த்தைகளின் ஆழத்தை உணருவதற்கு எனக்கு சில விநாடிகள் பிடித்தன. நான் கையை நீட்டினேன். அவன் அதை ஒரு ஐந்து செக்கண்டுகள் விடாமல் பிடித்தபடி என் கண்களை உற்று நோக்கினான். எனக்கு அவனின்மேல் பரிவு உண்டாகியது. தன் சனங்களின் கனத்த வரலாற்றை தன் இருதயத்திலும், ஆத்மாவிலும் காவித் திரியும் ஒருவனின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.
ஒரு நோய்ப் பறவையை போசித்து, இறகுகளை மீண்டும் வலியதாக முளைக்க வைத்து, ஆகாயத்தை இன்னொரு முறை துளாவிப் பறக்கச் செய்வதற்கு அவன் முயல்வதுபோல அந்த செய்கை இருந்தது. சாரதி என் கையை விட்டான். அவன் தன் பேரைச் சொன்னதுபோல நான் என் பேரைச் சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் ஒரு காலை தரையிலே ஊன்றியபடி அந்தச் சமயம் சார்க்கிசுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்றுதான் இருந்தது. நான் அவருடைய கண்களைப் பார்த்தேன். திடீரென்று ஏற்பட்ட மரியாதையுடன் சொன்னேன், 'உம்முடைய வேதனையை நானும் எடுத்துக்கொள்கிறேன்.'
amuttu@gmail.
பதிவுகள் ஏப்ரில் 2005 ;இதழ் 65