“ நாட்டில நடக்கிற தப்புகளையெல்லாம் என்னால முடிஞ்சவரைக்கும் தடுக்கணும்…. சம்மந்தப்பட்டவங்களைப் புடிச்சு சட்டத்துக்கு முன்னால நிக்கவெச்சுத் தண்டிக்கணும்…. இந்த ஒரே நோக்கத்துக்காகத்தான் நான் இந்தப் போலீஸ் வேலையை விரும்புறேனே தவிர, வேற எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது ஐயா….” பணிவோடு பேசினேன் நான்.
என் பேச்சுக்குள் பொதிந்து கிடந்த கம்பீரத்தையும், எதிர்காலத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கப் போவதுபோல, அதன்மேல் தெரிந்த களையையும், அன்பழகன் ஐயா உள்ளூர எடைபோடுவதை என்னால் உணர முடிகின்றது.
அறுபது வயதைக் கடந்துவிட்டபோதும், இன்னமும் துடியாட்டமாய் செயல்படும் அன்பழகன் ஐயா முகத்திலே இலேசானதோர் புன்னகை தெரிந்தது.
“இந்த பாருப்பா…. என் வயசில பாதிக்கும் கம்மியானவன் நீ…. அத்தோட ஒலகத்தைப்பத்தி எம்புட்டு தெரிஞ்சுகிட்டிருக்கியோ எனக்கு தெரியாது…. கடமை, நேர்மை அப்பிடி இப்பிடீன்னு சொல்லிக்கிட்டு, இந்த உத்தியோகத்துக்கு போறவங்க ரொம்பப்பேரு, நாளைக்கு நாலு காசைக் காணுறப்போ, கையை அழுக்கு ஆக்கிடுராங்க…. நீ அப்பிடிச் செய்வேன்னு நான் சொல்ல வரல்ல…. நீயா விரும்பாவிட்டாலும், நீ இருக்கக்கூடிய சூழ்நிலை உன்னய செய்ய வெச்சிடும்….”
சூழ்நிலையின் நிதர்சனத்தை எண்ணி நொந்தபடி பேசினார்.
“ ஐயா…. நீங்க சொல்றது எனக்குப் புரியாமலில்லை…. அதே டயிம் அடுத்தவங்க கடமையில நான் குறுக்கை போகப்போறதும் இல்லை…. என் கடமையில யாரையும் கிராஸ்பண்ண விடப்போறதும் இல்லை…. மிஞ்சிப்போனா என்ன பண்ணிடுவாங்க…. தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திப்புடுவோம்னு மெரட்டுவாங்க…. மாத்திட்டுப் போகட்டுமே…. அதுக்குமேல என்ன பண்ணுவாங்க…. வெசத்தையா வெச்சுடுவாங்க…. அப்பிடீன்னாலும் பரவாயில்ல….”
என் பேச்சிலே தெரிந்த உறுதி, அன்பழகன் ஐயாவை சிறிது அதிர வைத்தது. தொடர்ந்து அவரது பேச்சிலே சிறிது கோபம் தெரிந்தது.
“ஏ…. என்னப்பா பேசுறே…. கொஞ்சம் நல்ல வார்த்தையாய் பேசுப்பா….”
நான் தொடர்ந்தேன்.
“ஐயா…. எனக்கிண்ணு ஒரு பாலிசி இருக்கு…. நான் இண்ணைக்குச் சாகிறேனோ, இல்ல நாளைக்குச் சாகிறேனோ எதுவும் என் கையில கெடையாது…. அதே வேளை, நான் செத்ததுக்கு அப்புறமும், ஜனங்க மனசில நிக்கணும்…. நிறையப்பேரு வீடுங்களிலையெல்லாம் என் போட்டோ தொங்கணும்…. நாலுபேராச்சும், அவங்க வீட்ல பொறக்கிற ஆம்புளைப் புள்ளைங்களுக்கெல்லாம் என் பேரை வெச்சுக் கூப்பிடணும்.... மொத்தத்தில சொல்லப்போனா, உண்மையான கடமை உணர்ச்சியோட வருங்காலத்தில இதே உத்தியோகத்துக்கு வர்ரவங்களுக்கு நான், “ரோல் மாடலா” இருக்கணும்….”
பேசிக்கொண்டிருக்கும்போது, என் கண்கள் பனித்துக்கொள்வதை என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை.
“ நீ சொல்றமாதிரியெல்லாம் நடக்கணுமாயிருந்தா, நீ தலைவனாகவோ, இல்ல…. தியாகியாகவோ இருக்கணும்பா…. அதுக்கும் நீ பாத்துக்கிற உத்தியோகப் பதவிக்கும்……”
அவர் பேசிமுடிக்கவில்லை. நான் குறுக்கிட்டேன்.
“ஊடையில பேசிறத்துக்காக மன்னிச்சிடுங்கய்யா….. பதவியும், பெருமையும் இந்த இந்தத் தொழிலால மட்டுந்தான் வரும்ணு, ஒரு கட்டுப்பாடு இருக்கிறதா எனக்குத் தெரியல்லைய்யா…… எந்தப் பதவில இருந்தாலும், அந்தப் பதவிங்கிற மரத்துக்கு அப்பப்போ தியாகம்ங்கிற உரத்தையும் போட்டுக்கிட்டிருந்தாத்தான், கடமைங்கிற பழம் நல்லபடியா பழுக்க, பெருமைங்கிற வெளவால், தானாகத் தேடி வரும்…. அப்போ ஒரு தொண்டன்கூட தலைவன் ஆகிட முடியும் ஐயா….”
மிகவும் உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன் நான்.
அன்பழகன் ஐயாவின் வலதுகரம், என் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டது.
“உங்கப்பா எனக்கு ஒரு விசுவாசமான தொழிலாளியாக கடைசிக் காலம்வரைக்கும் இருந்திட்டுப் போனதால, அந்த விசுவாசத்துக்காக உன்னய நான் படிக்கவெச்சு, நீ விரும்பினபடியே போலீசு எஸ்.ஐ பதவி வரையில கொண்டுவந்து விட்டாச்சு…. இப்ப உம்மனசில எந்தளவு உறுதியிருக்கோ இதே உறுதி உனக்கு கடைசிவரைக்கும் இருக்கணும்…. சொந்த பந்தம், வேண்டியவங்க வேண்டாதவங்க எதுவுமே ஓங்கடமைக்கு கொடுமையா வந்திடக் கூடாது…. தப்புபண்ணினது நானாயிருந்தாக் கூட, நீ எடுத்துக்கிட்ட கடமைக்குத் துரோகம் பண்ணிக்காதை….”
அன்பழகன் ஐயா காலமாகி ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. அவர் கூறியவை, இன்னமும் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இன்று அன்பழகன் ஐயாவின் வீட்டுக்குள்ளே, அவரது மகன் குமாரின் கைகளிலே விலங்கு மாட்டத் தயாரான நிலையில் நான்.
பலதடவைகள் சிறுசிறு குற்றங்களுக்கெல்லாம் குமாரின் பெயர் இடம்பெற்றபோது, பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதானமாகப் பேசி, அவர்களது இழப்புக்களுக்கு ஏற்றளவு ஈடுசெய்து அனுப்பியிருக்கின்றேன்.
தனிப்பட்ட முறையில் குமாருடன் பலதடவை பேசியிருக்கின்றேன். என்னைப் பெற்ற தாய்க்கும் மேலாக மதிக்கும், அவனது தாயாரிடம்…. அதாவது அன்பழகன் ஐயாவின் துணைவியார், பரிமளம் அம்மாவிடம்…. காலில் விழாத குறையாகக் கெஞ்சிப் பார்த்திருக்கின்றேன்.
இவையெல்லாம் அன்பழகன் ஐயாவுக்காக….!
அதேவேளை, ஐயா மட்டும் உயிரோடு இருந்திருந்தால்…. இந்தளவுக்குக் கூட, குமாரை மன்னிக்கச் சம்மதிக்க மாட்டார் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும்.
“துஷ்ட நிக்ரஹ…. இஷ்ட பரிபாலன….” என்ற அடிப்படையோடு அவதரித்த கிருஷ்ண பரமாத்மாகூட, துஷ்ட சிசுபாலனை…. அவனது தாயார் கேட்டுக்கொண்டபடி, அவன் நூறு பிழைகள் செய்யும்வரை தண்டிக்காமல் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
கடந்துபோன தவறுகள் இதுபோன்றவையே !
ஆனால், இன்றய சம்பவமோ மன்னிக்க முடியாதது.
“போலீசால என்னய என்ன பண்ண முடியும்…. அந்த எஸ்.ஐ எங்க வீட்டு உப்பைத் திண்ணுதான் வளந்த பயல் தெரியுமால….”
என்று தண்டோரா போடாக்குறையாக சத்தமிட்டபடி, விஷமிகளுடன் கூடி, பல வீடுகளுக்குத் தீவைத்து அராஜகம் புரி ந்துவிட்டு வந்திருக்கின்றான் குமார்.
பலமான ஆதாரங்களுடன் அவனைக் கைது செய்யும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டுள்ளது.
குமாரோ திமிறினான்.
“உன்னால என்னய அரெஸ்ட் பண்ண முடியுமால…. எங்கப்பன் போட்ட சோத்தை திண்ணுட்டு….. எங்கப்பன் துட்டில படிச்சு உத்தியோகத்துக்கு வந்திட்டு, இண்ணிக்கு எனக்கே விலங்கு மாட்ட வந்திட்டியா….. நன்றிகெட்ட……..”
தொடர்ந்து அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள், கேட்போரின் காதுகளைப் பொற்ற வைத்தன.
பரிமளம் அம்மையாரும்…. தனது பங்கினுக்கு அர்ச்சனையைச் செய்தார்கள்.
“எம்புள்ளை கையிலயாடா விலங்கு மாட்டப்போற…. அவங்கப்பா இல்லேன்னா, இன்னிக்கு நீ நடுத்தெருவில பிச்சையெடுத்துக்கிட்டு இருந்திருப்பே…. பாவி…. அவுங்க பெத்த புள்ளைய நீ ஜெயிலுக்கு அனுப்பிப்புட்டு, அவுங்களால கெடைச்ச பவுசை வெச்சு காலம் பூராவும் சந்தோசமா இருக்கப் போறியா….. எங்க வயிறு எரிய எரிய நீமட்டும் எப்பிடி சந்தோஷமா இருக்கப்போறேன்னு பாக்கிறேன்….”
கடைசியாக வெளிவந்த வார்த்தைகள் எனது நெஞ்சில் “நறுக்” கெனத் தைத்தது.
ஹாலிலே மாட்டப்பட்டிருந்த அன்பழகன் ஐயாவின் புகைப்படத்தின் அருகேபோய் நின்றேன். அன்றொரு நாள் அவரோடு பேசும்போது, தோன்றிய அதே உணர்ச்சிகள், மீண்டும் எனது நினைவிலே வந்தன.
“ஐயா…. நான் கடைசியா உங்ககிட்ட மனம்விட்டுப் பேசிறப்போ எம்மனசில எந்த உறுதி இருந்திச்சோ…. அதே உறுதி கடைசிவரைக்கும் இருக்கணும்னு நீங்க சொன்னீங்க…. அதை நான் மறக்கல்ல…. இப்ப நான் பண்ணப்போற கடமையால, உங்க குடும்பத்தில அமைதி கெட்டுப்போற சூழ்நிலை வர்ரத்துக்கு என்னால எதுவுமே பண்ண முடியாதையா…. இருந்தாலும், உங்க குடும்பத்த அந்த நெலைக்கு ஆக்கிப்புட்டு, உங்களால கெடைச்ச இந்த அந்தஸ்தை வெச்சு, நான் மட்டும் சந்தோசப்பட விரும்பல்லை…. எங்கடமையை ஒழுங்காகச் செஞ்சேங்கிற திருப்தியோட போறேன்…. என்னய ஆசீர்வதியுங்கையா..”
மறுகணம் துரிதமாகச் செயல்பட்டேன்.
அடம்பிடித்துக் கொண்டிருந்த குமாரைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்து, அவனது கைகளில் விலங்கு மாட்டி, ஜீப்பில் ஏற்றினேன்.
பரிமளம் அம்மையாரது, “திட்டார்ச்சனை” தொடர்ந்தது.
குமாரைக் காவல் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றபோது, அவனைப் பிணையில் (ஜாமீனில்) எடுக்க வக்கீல் வந்திருந்தார். எனினும், பாதிக்கப்பட்டுக் குற்றம் சுமத்தியவர்கள், அதற்கு வலுவான ஆதாரங்கள் கொடுத்திருந்ததனால், அந்த முயற்சிக்கு உடனடி வெற்றி கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தன.
சூடுபட்ட கொதிப்போடும், தொங்கிய முகத்தோடும் அன்பழகன் ஐயா குடும்பத்தினர் அனைவரும், என்ன செய்வதெனத் தடுமாறிக்கொண்டிருந்த வேளை, அவர்களது வீட்டுக்குள்ளே மீண்டும் நடந்த எனது பிரவேசம், அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது.
ஆவேசத்துடன் கொதித்தெழுந்தார் பரிமளம் அம்மையார்.
“ஏன்டா அனாதைப் பயலே…. எதுக்குடா திரும்ப இங்க வந்தே…. ஓம்புட்டு உத்தியோகப் பவிசைக் காட்ட வந்திட்டியா…. இனி யாரை அரஸ்ட் பண்ணப்போறே…. இந்தா இப்பவே நான் உன்னய வெட்டிப் போட்டுடுறேன்…. அப்புறமா என்னையும் சேத்து அரெஸ்ட் பண்ணு….”
அவர்கள் எழுந்த வேகத்தில் வந்திருந்தால், ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும்.
அப்படி எதுவுமே நடந்துவிடாமல், அவர்களை இழுத்துப் பிடித்து, அமுக்கி உட்கார வைத்த வேறொரு அம்மையாருக்கு…. உள்ளூர நன்றி சொன்னேன் நான்.
ஆரவாரத்தை அடக்கியபடி, அங்கிருந்தோரில் ஒருவர் கேட்டார்.
“இப்ப எதுக்கப்பா வந்தே…. இன்னும் யாரையாச்சும் விசாரணை பண்ணணுமா….”
“இல்லை சார்…. இது எம்புட்டு பர்சனல் சமாச்சாரம்…. ஆனா அதுக்கான முடிவை அம்மாதான் தீர்மானிக்கணும்…. தயவு செய்து இந்த லெட்டரை அம்மா ஒருதடவை படிச்சுப் பாத்திட்டுக் குடுத்தாப் போதும்..”
என் கையிலிருந்த கடிதத்தை, அவரிடம் கொடுத்தேன்.
“லெட்டரா…. இதுக்கும் பரிமளத்துக்கும் என்ன தொடர்பு….” பக்கத்திலிருந்த அம்மையார் கேட்டார். பணிவோடு பதிலுரைத்தேன் நான்.
“இருக்கம்மா…. இதில ரண்டு லெட்டர் பின் பண்ணியிருக்கேன்…. முதல் லெட்டர் அம்மாவுக்கு…. அடுத்த லெட்டர் எங்க போலீஸ் டிப்பாட்மென்டுக்கு…. ரண்டையுமே என் கைப்பட எழுதியிருக்கேன்….”
நான் சொல்லி முடித்தபோது, வேறு ஒருவர் தனது பங்கினுக்கு குறுக்கிட்டார்.
“எதுக்கப்பா கேள்வியை கேட்டுக் கொழம்பிக்கிட்டு இருக்கணும்…. அப்பிடி என்னதான் பரிமளத்துக்கிட்ட சொல்ல வந்திருக்கான்னு, நம்ம எல்லாத்துக்குமே கேக்கிறமாதிரி யாராச்சும் சத்தமா படிங்கப்பா….”
கடிதத்தை வைத்திருந்த நபர் படிக்கத் தொடங்கினார்.
அம்மா அவர்களுக்கு,
என்னை வளர்த்து ஆளாக்கிய என் தெய்வமான ஐயாவுக்கு நான் என்றுமே விசுவாசம் உள்ளவன். கடைசிவரைக்கும் கொள்கை தவறாமல் வாழ்ந்து, அப்படியே என்னையும் வாழணும்னு வற்புறுத்திய அவர்களது எண்ணத்தை என் கடமைக்காலத்தில் இறுதிவரை நிறைவேற்றினேன் என்ற மனநிறைவுடன் இந்தப் பணியிலிருந்து விடைபெற எண்ணுகின்றேன்.
ஐயா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், என் ராஜிநாமாவைக் கடைசிவரைக்கும் ஒப்புக்கொள்ளவே மாட்டார் என்பது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தெரியும்.
அதேவேளை, அவர்கள் உயிரோடில்லாத இந்தச் சூழ் நிலையில், அவரது எண்ணப்படி நீதி, நேர்மையாக வாழ்ந்து அவரது ஆத்மாவைச் சாந்தப்படுத்தி, விசுவாசத்தைக் காட்டவேண்டிய வாழ்க்கைத் துணையான தாங்களே, அதை மீறிப் “பிள்ளைப் பாசம்” கண்ணை மறைக்க, ஐயாவுக்கு பிடிக்காத சமூகவிரோதச் செயல் புரியும் ஒருவருக்கு வக்காலத்து வாங்கி, இன்னும் அவரைக் குற்றவாளியாக்குவது என்னால் சகிக்க முடியாதது.
அத்துடன், ஐயாவால் எனக்குக் கிடைத்த அந்தஸ்தினை, ஐயா குடும்பத்தாருக்காக காணிக்கை ஆக்கிவிட்டேன். அடுத்த கடிதம் எனது டிப்பாட்மெண்டுக்கு கொடுப்பதற்காக எழுதிய ராஜிநாமாக் கடிதம். அதையும் தாங்கள் ஒருதடவை படித்துப் பார்த்துவிட்டுத் தரவும்.
ஐயாவின் அன்பு ஒன்றினைத் தவிர, இனி யாருக்கும் நான் கடமைப்பட்டவன் அல்ல. ஐயாவின் ஆத்மா என்னை மன்னிக்கட்டும்.
கடிதத்தைப் படித்து முடித்தவர், அதனைப் பரிமளம் அம்மையார் கையிலே கொடுத்ததும், அந்த அம்மையார் நிலை, சிலையைப்போல ஆகிவிட்டது.
ஐயாவின் எண்ணப்படி வாழாமல், அவரது ஆத்மாவைத் திருப்திப்பட வைக்கும் விசுவாசம் இல்லாமல், இருந்ததற்கான குற்ற உணர்ச்சி…. உள்ளூர உறுத்துவதை, முகமே காட்டிக் கொடுத்தது.
நிமிர்ந்து, அன்பழகன் ஐயாவின் புகைப்படத்தைப் பார்க்கக்கூட அவர்களால் முடியவில்லை.
மறு கணம் –
அந்தக் கடிதம் இரண்டையுமே தூள்தூளாக கிழித்த பரிமளம் அம்மையார்,
அன்பழகன் ஐயாவின் புகைப்படத்துக்கு நேராகத் தரையிலே போட்டுத் தீமூட்டிவிட்டார். அது சுவாலைவிட்டுச் சிரித்தது.
ஒன்றும் புரியாமல் விழித்து நின்றேன் நான். மற்றவர்கள் நிலையும் அப்படித்தான்.
மெதுவாகத் திரும்பி, என் முகத்தை நேருக்கு நேராக நோக்கினார் பரிமளம் அம்மையார்.
அவரது முகத்தில் மட்டுமல்ல. பேச்சில் கூட உறுதி தெரிந்தது.
“இதில எரிஞ்சுகிட்டிருக்கிறது, நீ எழுதிக்கிட்டு வந்த கடிதங்க இல்லைப்பா…. ஏங்கிட்ட இருந்த கண்மூடித்தனமான பிள்ளைப் பாசம்…. எரிச்சுக்கிட்டிருக்கிறது தீ இல்லை…. என் புருசன்மேல நான் வெச்சுக்கிட்டிருக்கிற விசுவாசம்….”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.