நீண்ட நாட்களின் பின் நண்பனைச் சந்தித்தேன். வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியுடனிருந்தான். இவனைக் கண்டதும் எனக்குப் பழைய ஞாபகங்கள் சில எழுந்தன. பதின்ம வயதினில் இவனொருத்தியின் மேல் காதல் மிகுந்திருந்தான். அதை அவளுக்கும் தெரியப்படுத்தியிருந்தான். அவளோ அதைத்தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டாள். ஆனால் அவள் மீதான காதலை மட்டும் இவன் விடவேயில்லை. அவளையே நினைத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும் அவனுடன் கதைக்கும்போதும் உரையாடலில் நிச்சயம் அவளது பெயரும் வரும். நீண்ட காலமாக அவளைப்பற்றிய தகவல்கள் கிடைக்காததால் அவன் பல்வேறு நினைவுகளில் மூழ்கியிருந்தான். யுத்தபூமியில் அவள் இன்னும் இருக்கின்றாளா என்றும் சந்தேகப்பட்டான். இந்நிலையில் யுத்தம் முடிந்தபின்னர் ஒரு சமயம் இவன் அவளை முகநூலில் சந்தித்தான். அவள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றான். அவளுடன் தொடர்பு கொண்டான். அவள் குடும்பம், பிள்ளைகள் என்று நன்றாக இருப்பதை அறிந்து உண்மையில் மகிழ்ச்சி கொண்டான். அதனைக்காணும் சமயங்களெல்லாம் கூறுவான். இளமையில்அவளது காதல்தான் கிடைக்கவில்லையென்றாலும் முதுமையில் அவளது நட்பு கிடைத்தது தன் பாக்கியமே என்றான்.
அவனைப்பற்றி இவ்வளவு நினைவுகளும் மீண்டும் நினைவிலாடின. "என்னடா இந்தப்பக்கம். எப்படியிருக்கிறாய்?' என்றேன்.
"எனக்கென்ன குறை. நல்லாத்தானிருக்கிறன்" என்றவன் தான் எழுதி வைத்திருந்த கவிதையொன்றினைத் தந்தான். வாசித்துப் பார்த்தேன். 'சந்திப்பு' என்னும் பெயரில் எழுதப்பட்டிருந்த சிறு கவிதை அது.
"எந்நேரமும் புயல்களால்,
பேரலைகளால் கொந்தளிக்கும்
இருப்புக் கடலில்
உனைப்பிரிந்து
தவித்த தவிப்பு
தாளமுடியாத சோகமது.
சொல்லவும் முடியாது,
மெல்லவும் முடியாது
உள்ளுக்குள் வைத்துப்
பூட்டிய உணர்வுகள்
தந்த வாதைகளில்
வெந்துகொண்டிருந்தேன்.
ஆயினும் காலம் மீண்டுமுனை
என் முன்
கொண்டு வந்து நிறுத்தியது
பொறுப்புள்ள ஆளுமையாய்.
இழப்பின் தவிப்பு நீங்கி உன்
இருப்பின் மகிழ்ச்சி கண்டு
இன்பமுற்றதென் நெஞ்சம்."
அவனது கதை ஏற்கனவே தெரிந்ததால் " என்ன உன் கதையையே கவிதையாக்கி விட்டாயே? " என்றேன் சிரித்துக்கொண்டே.
அதற்கவன் "உள்ளத்துணர்வுகளே உண்மைக்கவிதை" என்றான்.
"அதனால்தான் கவிதை இதயத்தைத் தொடுகிறது." என்றேன்.
"சொல்லவும் முடியாது,
மெல்லவும் முடியாது
உள்ளுக்குள் வைத்துப்
பூட்டிய உணர்வுகள்
தந்த வாதைகளில்
வெந்துகொண்டிருந்தேன்."
என்ற வரிகளைப்படித்தபோது எனக்கு அக்காலம் நினைவுக்கு வந்தது. எப்போதும் அவள் நினைவால் அவன் வாடிக்கொண்டிருந்த பருவத்து நினைவுகள் தோன்றின. சிறிது காலம் குடியைக் கூட நாடியிருந்தான். நல்ல காலம் அதற்கு அவன் அடிமையாகிப்போனதில்லை.
"ஆயினும் காலம் மீண்டுமுனை
என் முன்
கொண்டு வந்து நிறுத்தியது
பொறுப்புள்ள ஆளுமையாய்.
இழப்பின் தவிப்பு நீங்கி உன்
இருப்பின் மகிழ்ச்சி கண்டு
இன்பமுற்றதென் நெஞ்சம்."
என்னும் வரிகளைப்படித்தபோது அவன் மீது மதிப்பு ஏற்பட்டது. 'உண்மைக்காதல் அல்லது உண்மை நட்பு என்பது இதுவாகத்தானிருக்குமோ' என்று தோன்றியது. இருப்பில் இவை போன்ற உணர்வுகள் அற்புதமானவை என்றும் தோன்றியது. ஆனால் எல்லோருக்கும் இவை வாய்த்துவிடுவதில்லை என்றும் தோன்றியது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.