மழை தூறிக் கொண்டிருந்தது. காரில்,வானில் வந்த சகோதரங்களும்,சப்வேய்யில் ஏறி ,விரைவு பேருந்து எடுத்த வதனாவின் சினேகிதி சந்திரா, அவர் கணவர் தில்லையும்...என ‘பியரன் சர்வ தேச விமான நிலைய’த்திற்கு வந்தவர்கள், நேரத்தைப் போக்காட்ட …. கதைத்துக் கொண்டு கொண்டிருந்தார்கள். லண்டனிலிருந்து வதனாக் குடும்பம் கோடை விடுமுறையைக் கழிக்க கல்கறி நகரத்திற்கு பறக்கிறது.அந்த விமானம் கல்கறிக்கு நேரடியாகப் போகவில்லை. அவர்களை பியர்சனில் இறக்கி ,வேற விமானத்தில் மாற விட்டுப் போகிறது.
விமானம் ஏற்கனவே இறங்கி விட்டதை மேலே தெரிகிற ‘கணனி’த் திரை காண்பிக்கிறது.
பொதிகளை இறக்கிற போதான சுங்க சோதிப்பு போதுமானது தான்,ஆனால் திரும்ப ஏற்றுறதிற்கும் நடைபெறுகிறது.உள்ளே இருக்கிற போது முகநூலில் தொடர்பு கொள்ள முடியாது...போல… பிரச்சனைகள் இருக்க வேண்டும். அலை பேசி,மடிக்கணனிகளை 'டேர்ன் ஓவ்' பண்ண வைத்திருப்பார்களோ? பிறகு, 5 மணி நேரத்திலே அடுத்த விமானம் எடுக்க இருக்கிறார்கள். அடுத்த விமானம் எடுக்க இரண்டு மணி நேரத்திற்கு முதலும் உள்ளே சென்று விட வேண்டும் அந்த இடைப்பட்ட நேரத்திலேயே சந்திக்கவே ஆவலுடன் வருகிறார்கள். ..அந்த நேரமும் சுருங்கிறது என்ற கவலை.
ஒரு மணி நேரமும் பறந்து விட்டது. இன்னுமா...விடவில்லை? என கிருபா சலிக்கிறார்.பொறுமை இழப்பு சிறிது எட்டிப் பார்க்கிறது.
“இப்ப, இவர்களிற்கு இருக்கிற பயத்தாலே 2 மணி நேரம் எடுத்து தான் விடுகிறார்கள்" என தில்லை அனுபவத்தில் முணுமுணுக்கிறார்.
அவர்கள் வாகன தரிப்பு நிலையத்தில் நிறுத்தி விட்டு பயணிகள் விமானம் ஏறுகின்ற பகுதியியாலேயே வந்த போது, நிறைய இடத்தை கயிறுகள் கட்டிய 'லைன்'கள் பிடித்துக் கொண்டிருந்தன. பயங்கரவாதிகளின் கை ஓங்கி விட்டது போல ….பாதுகாப்புச் சோதனைகள். ‘இது ஒரு சர்வ தேச விமான நிலையமா?என நொடிச் சந்தேகம் கூட வருகிறது. தீமையிலும் ஒரு... நன்மை, அதனால் பொதிகளின் நிறைகள் குறைந்தது விமானத்திற்கு நல்லம் தான். உள்ளே , முந்திய மாதிரி அன்பளிப்புக் கடைகள் இல்லாதையும், உணவகங்கள் பல காணாமல் போனதையும், ஒரே ஒரு 'ரிம் ஹோற்றன்' கோப்பிக் கடை மட்டும் பாம்புக் கீயூவோடு இருப்பதையும் பார்த்து வந்தார்கள்.
ஆண்களும்,பெண்களும் குழந்தை குட்டிகளுமாய் விமான நிலையம் நிறைந்திருந்தது. பட்டாம்பூச்சியின் சந்தோசம் அவர்கள் முகத்தில்...இருந்தன.இவர்களில் எத்தனைப்பேர் உறவினர் ,அகதியாய் வருகின்றவர்கள் எத்தனைப் பேர்...,எல்லாக் கலாச்சாரமும் 'யாவரும் கேளிர்' என கலக்கிற இடமாகவும் இருக்கிறதே.
ஜனநாயக அரசியலில், வரட்டுத்தனமான வர்த்தகத்திற்காக வகை தொகையில்லாமல் மக்களை கொன்றொழிக்கிறதால் திமிங்கிலங்களும்,சுறாக்களும்,சிறு மீன்களாகவும் நாடுகள் அல்லாடுகின்றன மனிதநேயம், கைகோர்ப்புகள் சிதைந்துப் போய், இப்ப பல்லு குத்துற குச்சியையும் உள்ளே கொண்டு செல்ல முடியாதளவிற்கு பயத்தை வளர்த்து விட்டு...அதையும் விஞ்ஞானத்தால் வெல்லுவோம் என இறுமார்ப்பில் இருக்கிறார்கள். ஜக்கிய அமெரிக்கா,ஜக்கிய சோசலிச அமெரிக்காவாக மாறும் வரையில் இப்படியே தான் இருக்கப் போகிறது.
சோவியத் யூனியன் உடைந்து போய்யிருந்தாலும் கூட,அந்த கொள்கைகள் என்றோ ஒருநாள் முதலாளித்துவத்தை விழுங்கி விடும் என்ற அடிப்படைப்பயம் தான் எல்லா குளறுபடிகளிற்கும் காரணம். இன்னமும் பனிப்போர் ஒய்ந்து போய் பிடவில்லை.அதற்கிடையில் பிடுங்கிறதை பிடுங்கி விடுற வர்த்தகப் பதற்றம்,போட்டி...,அதனால்,எழும் பயங்கரவாதம்...மனிதர்களில் தேவர்கள் என்று தான் பிறந்தார்கள்?.
ஏற்கனவே ஒவ்வொரு சமூகத்திலும் முற்போக்காக சிந்திக்கிற ஒரு கூட்டம்,ஒரு அறிவுத் தளம் இருக்கவே செய்கிறது.எழுத்தாளப் பிறவிகளே அவர்கள் ! பிஞ்சிலே பழுக்கிறது தான்.எல்லா எழுத்தாளர்களும் சாண்டியன் போல எழுதுவதில்லை.19 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் அவரின் நூல்களை வாசிக்கலாம்.அவர் முறை தவறி எழுதவில்லை தான்.அந்த காலகட்டத்திற்கே உயிர் துடிப்புடன் கொண்டு சென்று விடக் கூடிய எழுத்து நடை.ஆனந்தன்,கல்கியின் நாவல்களை விட இவரின் நாவல்களிலிருந்தே பல சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டிருக்கிறான்.ஆரம்பத்தில் சாண்டில்யன் கல்கிக்கு சரித்திரச் சிறுகதைகளையே எழுதி வந்தாராம்.ஒரு தடவை சமூகச் சிறுகதை ஒன்றை அனுப்பிய போது,கல்கி,"நீ சமூகக் கதை எழுதுறதை விட்டு,சரித்திரக் கதையை நாவலாக ஏன் எழுதக் கூடாது"எனக் கேட்டாராம்.அதன் பிறகே நாவல்களாக எழுதிக் குவிக்கத் தொடங்கினார்....என்று இணையத்தில் ஆனந்தன் வாசித்திருக்கிறான்.
ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களை அறிவாளிகள் என கவனத்தில் எடுக்காததால்... நம் எழுத்தாளர்கள் இலக்கியத்தில் காதல் கதைகளை அதிகமாக எழுதி எழுதி தேவதாசாகப் போய் விடுகிறார்கள் . படைப்புக்களை எடை போடக் கூடிய ஒரு அமைப்பு ஏற்படுவது மட்டுமில்லாது...அவற்றை அச்சேற்றதுதையும்...அரசே பொறுபேற்க வேண்டும். இல்லா விட்டால்...நொந்து போய் சுயமாய் அச்சேற்றுறவன்...வியாபாரியாய்யும் இழிந்து போய் விடுகிறான். பொருளாதாரத்தை வளர்த்து வேலை வாய்ப்புக்களையும் அதிகரிக்கச் செய்வதோடு ,வாழ்க்கைச் செலவையும் குறைக்கிற புத்திசாலியாக அரசிருந்தாலும் கூட ஒரு தனிமனிதனுக்கு அச்சேற்றுற செலவு கூடியது தான்.
ஒரு புத்தகத்தை, பிள்ளையை பெறுவது மாதிரி வலியுடன் வெளி வர வைக்கக் கூடாது. செலவுகள் அதோடு நின்று விடுவதில்லை. வெளியீட்டு நிகழ்வு,நூலகங்களிற்கு வழங்குவது,தவிர விற்பனையும் சரிவர நடைபெறுகிறதா என கவனிப்பது என ஒரு தொகை வேலைக ளே இருக்கின்றன. அரசிடம் கட்டிடங்கள் இருக்கின்றன.தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.செலவே இல்லாமல் நடைமுறைப் படுத்தி விடுவார்கள்.தனி மனிதன் முயல்றதுக்கு அவனுடைய சம்பளப் பணமே போதாது.
அரசு மேற்கொள்கிற போது.. மேற் கூறிய சிரமங்கள் இல்லாமல் போய் குறைந்த செலவிலேயும் நடைபெற்று விடுகின்றன . சட்டங்களை ஏற்படுத்துறவர்கள் சொல்கிற போது எல்லாரும் கேட்பார்கள். ஜனநாயகத்திற்கு கறியில் உப்பு ,புளி..போல ஒரளவிற்கு சர்வாதிகாரமும் வேண்டி தான் இருக்கின்றது..இப்படி வெளியாகிற போது மனைவியும் அவ்வளவாக வெறுக்க மாட்டாள். அவளுக்கு அதன் அருமை தெரியாததால் வெறுக்கிறாள். இது ஒரு வேலை,ஒரு முயற்சி,ஒரு கோர்ஸ்வேர்க். இதற்கு உற்சாகப்படுத்தல் வேண்டும்.பெற்றோர்கள் தம் பிள்ளை களை கல்வியில் சிறக்க வேண்டும் என கண்ணை மூடிக் கொண்டு உற்சாகப் படுத்துகிறா ர்கள்.மனைவியிடம் அவ்வளவில்லாமல்.. ஒரு அளவிற்கு தார்மீக ஆதரவு இருந்தாலே போதுமானது. மனைவியின் ஆதரவு பலபேர்களின் ஆதரவிற்குச் சம னானது.ஈழத்தமிழனுக்கு விடுதலைக்காக கடந்தவைகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
,மண் பற்று,தேசியப் பற்று இயற்கைப்பற்றுடன்.. எழுதப்பட்டவை நிறையவே இருக்கின்றன. அவை இருப்பதையே தெரியாதவர்களாக , பல படைப்புக்கள் வாசகரகளற்றவையாய் இருக்கின்றன என்பது தான் நிலமை.
தற்போதைய இணையம்,யூ டியூப்..போன்றவை வர முதலே மூத்த குடிகள் தோன்றி விட்ட..காலத்திலே ரேடியோவும் தோன்றி விட்டிருக்கிறது. எந்த காலத்திலும் ஒலி அலைகளில் பதிவதும் நடை பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. புலம் பெயர்ந்தவர்களின் வாரிசுகளிற்கு தமிழ் பேச வருகிறது.ஆனால் எழுத,வாசிக்கத் தெரிவதில்லை.ஒலி அலைகளில் வார போது அவதானிப்பார்கள்.
.பள்ளிக்கூடங்களில் சிறு கோயில்கள் கட்டுவது, சேர்ச்சுகள் இருக்கிறது போல இலக்கியப் பாடத்திற்காக ஒரு ஸ்டுடியோ அறையை ஏற்படுத்துவது ஒன்றும் முடியாத காரியமில்லை. பழைய மாணவர்களின் உதவி,அரசின் உதவி...ஏன் அவ்விடத்தின் (மக்களின்) உதவிகள் கூட கிடைக்கப் பெறலாம்.
அதிலே ரேடியோ ரெக்கோடிங் கருவிகளை,கணனிகளை வைத்துக் கொள்ளலாம்.அவற்றை இயக்கக் கூடிய ஒரு கூட்டத்தையும் பழக்கி எடுக்கலாம்.ஆசிரியர் குழு ஒன்று நல்ல நாவல்களை, கதைகளை தெரிந்து, வகுப்புகளிற்கு போர்ட்டபிள் யூனிட்டுகளைக் கொண்டுச் சென்று அப்பாட வேளைகளில் ஒவ்வொரு மாணவர்களையும் ஒவ்வொரு அத்தியாமாக வாசிக்க,வாசிக்க வைத்து பதிவு செய்ய ஒரு நாவல் முழுதையுமே ஒலி வடிவில் பதிவு செய்திட முடியும்.
அம்முயற்சி ஒரு மாணவனை மேலும் தானாகவே வாசிக்கத் தூண்டும். இங்கே அனைத்து மாணவர்களையுமே(ஆண்,பெண்..என) வாசனைப் பகுதிக்கு இழுத்துச் செல்லும்.கல்வியை மட்டுமில்லை ,இப்படி பலதையும் கற்கிற சமூகமே விவேகமானதாக மெல்ல மெல்ல மாறி விடும்.
பசளை (இயற்கை) இட்ட வளர்ச்சியைக் காட்டும். தற்போதைய ஆசிரியர்களும் முந்தைய மாணவர்கள் தானே.முதலில் அவர்களுக்கு கதைப்புத்தகங்களை பழக்க வேண்டும். வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வாசித்திருக்க வேண்டும்.ஆனந்தன் படித்த சில பள்ளிகூடத்திலே தமிழ் வாத்தியைத் தவிர ,வேற ஆசிரியப் பெருந்தகைகளுக்கு வாசிக்கிற பழக்கமே இருக்கவில்லை.
அவற்றை தொகுக்கிற வேலைகளை எல்லாம் ஸ்டுடியோ அறையிலே ஒரு ஆசிரியர் தலைமையில் மாணவர்களே செய்யலாம். செய்ய முடியும்.ராஜம் கிருஸ்ணனின் "அல்வாய்க் கரையில்"நாவல் மீனவ மக்களின் பேச்சு மொழியிலே திறம் பட எழுதப்பட்ட நாவல்.அதிலே நிறைய சமூக நீதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.அவரின் பல நாவல்கள் ...மாணவர்கள் மட்டுமில்லை பெற்றோரும் அறியப்பட வேண்டியவையே. பாடம் படிப்பதை விட கதையினூடாகச் சொல்லப்படுறவை மாணவர்க்கு நிறையப் பிடிக்கும். கதைப் புத்தகங்ககளை வாசிக்கிறவர்கள், காலப்போக்கில் பாடங்களையும் விருப்புடன் படிப்பார்கள். பள்ளிப்பாடங்களின் தொடர்ச்சியை வாழ்க்கையிலும் மெல்ல மெல்ல கட்டிக் எழுப்பி விடுவார்கள். முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடாது.
தொழிற்சாலைகளிற்கு என படிக்கிறதை விட்டு தொலைந்துப் போன சுய கல்வி யை தோண்டி எடுங்கள். காலனி ஆட்சியால்,சிங்கள ஆதிக்கத்தால் நாம் நிறையவற்றை இழந்து போய் இருக்கிறோம்.ஒரு அறிவாளியான சமூகமாகி விடுவோம் . ஏதாவது புரிகிறதா?கல்வியில் மாற்றம் வேண்டும் என்பதைத் தான் ஆனந்தன் வலியுறுத்துகிறான்.
மாணவர்களே அவர்களுக்கே தெரியாமல் புத்தகங்களை வாசிக்க பழகி விடுவார்கள் அவற்றை ...சினிமாப் பாட்டுக்களைப் கேட்பதைப் போல பொது இடங்களில் போட்டு கேட்க வைக்க... ஆரோக்கியமான சூழலும் கவிந்து விடும்.
பிரச்சனைகளை இதை விட இப்படிக் கையாண்டால் திறமாக இருந்திருக்கும்;இன்ன முடிவை எடுத்திருக்க வேண்டும்..என்ற பயிற்சிகள் ஆழ்மனப் பதிவுடன் பதிகிற போது...அவர்கள் நிச்சியமாக ஒரு இந்திரா காந்தியாக, அப்துல் கலாமாகவும் கூட மாறி விடலாம். அது மட்டுமில்லை.பெற்றோர்களும் பொது இடங்களில் தம் பிள்ளைகளின் வாய்மொழியால் கதைக்களை கேட்கிற போது ஈன்ற போது பெறும் சந்தோசத்தை விட சான்றோன் எனக் கேட்கிற உவகையைப் பெறுவார்கள். அவர்களும் கூட திருந்தி விடுறது இருக்கும். இந்த மாஜாயாலத்தோடு மாகாணவரசுகளால் ஒவ்வொரு நகரத்திலும் மீள் பாவிப்பு தொழிற்சாலைகளை நிறுவதன் மூலம் கூட வேலை வாய்ப்புக்களை கட்டி எழுப்பி விட முடியும்.கோழி மேய்த்தாலும் அரச உத்தியோகமாக இருக்க வேண்டும் என்ற மாயையிலிருந்து வெளிய வந்திறதே நல்லது. சிறிலங்காவில் எப்பவும் மத்திய அரசே,அரசாக இருக்கிறது.ஆனந்தன், எப்பவும் சட்டக்கல்லூரியில் படித்தவர்களே அதிகமாக அரசியல்வாதிகளாக வாரதாலே...நாடு இப்படி தேய்ந்து குட்டிச் சுவாராகிக் கொண்டிருக்கிறது என்று நினைப்பவன்.
இந்த முயற்சி (உப) ஆட்சியாளர்களிடமிருந்தே கீழே வர வேண்டும். ஏனெனில் அதில் சிறப்பாக செய்தவர்களிற்கு பரிசுகள்,பாராட்டுகள் அளிக்கப்பட வேண்டியதும் முக்கியமாக தொடர வேண்டி இருக்கின்றன.
இப்படியெல்லாம் தற்போது ஆனந்தனுக்கு கண்ணா பிண்ணாவென சிந்தனை பறக்கடிப்பதற்கு .. அவன் இயக்கத்தில் இருந்த போது அவனை இலக்கியப் பொறுப்பாளராக நியமித்ததும் ஒரு காரணம் தான். அதில் நாட்டுப்பாடல்களை கூத்து போன்றவற்றை எழுத்தில் சேகரிப்பதும்,ஏலும்மென்றால் கசெட்டுகளில் பதியிறதும்,...அவன் வேலைகளாக இருந்தன.அதில் என்ன பிரச்சனை என்றால் அவனுக்கு அவற்றைப் பற்றி ஒரு அச்சரமும் தெரியாதது தான்.அவன் கதைப் புத்தகங்கள் வாசிக்கிறவன் என்பதால் அவனை பொறுப்பாளராக்கி விட்டிருந்தார்கள்ர். பிறகு, அவன் அதில் விரிவான ஒரு உலகத்தையும் அதிசயமான மனிதர்களையும் கண்டான் என்பது மிச்சக் கதை.
தெரியாத விசயம் என்றாலும் தேவை, என்றால் இயங்கவே வேண்டும் என்பதைத் தான் சொல்ல வருகின்றான்.
பெண்கள் நேரத்தைப் பற்றி கவலைப்படாமல் ...கதைத்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களிற்கு தம் பிள்ளைகள் பற்றிக் சொல்லுறதுக்கே நேரம் போதாமல் இருக்கிறது.
அவன் எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.
அவ னுடன் பழகிய பெண்களிடமும்(இயக்கங்களில் பல மகளிர் அமைப்புகள் இருந்தன) கூட சகோதரப் பாசம் இருந்ததை உணர்ந்திருக்கிறான். அவனில் இருந்து ஒரு அலிபாவாவின் விளக்குப் புகைவது போல உணர்ந்தான்.அதில் பூதம் எல்லாம் தெரியவில்லை. சில சோகக் காட்சிகளே தெரிகின்றன.
அழுவதால் மட்டும் துயரங்கள் தீரவா போகின்றன?, என்ன !
அரசியலில் அவர்களிற்கு ஒரு காலம், என்றால் இவர்களிற்கும் ஒரு காலம் என புரட்டி யே போடப் போகிறது. இது தெரியாமல் எத்தனை பேர்கள் கொடியவர்களாக இருக்கிறார்கள்.
மனிதர்களில் இவன் உட்பட … ஒருவரும் தெய்வீக பிறவிகள் இல்லை தான். விலங்கு தான் மனிதனாக மாறியது என்கிறார்கள். அவர்களிடமிருந்து வெளிப்பட்டது போல ஒருநாள் இவனிடமிருந்தும் கூட வெளிப்படலாம் தான். மனிதர்கள் மிருக உணர்ச்சியை கட்டுப்படுத்துவது நல்லது தான். காலம், மாற, காலத்தை மாற்ற நிறைய போராட… வேண்டியிருக்கிறது என்பதும் துரதிருஸ்டம் தான் . நடக்குமா? . நடக்காதென்பார்...நடந்து விடும்! "மனிதனுக்குள் உள்ள சக்தி அளப் பெரியது"என்கிறார் விவேகானந்தர். தன்னம்பிக்கையைத் தான் எந்த நிலைமையிலும் இழக்கக் கூடாது.பெருமூச்சு விட்டான்.இந்த விமான நிலையத்திற்கு அவனைப் போல வந்திருக்கிற மற்ற ‘ஈழத்தமிழர்’
களாலும் விட்ட பெருமூச்சுகளால் மேலே ‘மேகமூட்டம்’ ஏற்பட்டிருக்கிறதா? என்று பார்த்தான்.ஒன்றையும் காணவில்லை. சிந்தனைக் குருவி சுதந்திரமாக பறக்கிறது.ஒவ்வொரு ஈழத்தமிழனும் ஒரு மனநோயாளித் தான் இருக்கிறான் .
சந்திரா,வதனாவின் அக்கா விஜயாவின் மகள் ரூபியை பற்றி விசாரிக்கிறாள்.ரூபிற்கு அவளின் மூத்தவள் பவானியின் வயசு தான்.தங்கச்சி சித்தரா ,மகள் செல்வியுடனேயே வந்திருந்தாள். செல்வியிடம் கேள்விகளை நேரே கேட்கிறாள்.அவள்,இங்கே பிறந்தவள்.தமிழில் எழுத, வாசிக்க வராது. ஆனால், பேச வரும்.அவள் தமிழை ரசிக்க கேள்விகளாக கேட்டுக் கொண்டு இருக்கிறாள். அது,சிங்களப் பெண், தமிழ் பேசுவது போல … இருக்கிறது.
பெரியண்ணர் கிருபா, மனைவி ராணி,ரதி,கெளரி...இரண்டு பெண் பிள்ளைகளுடன் வந்திருந்தார்.அடுத்த அண்ணர் (அடியேன்) ஆனந்தன் தனிய வந்திருந்தான்.சந்திராவின் பிள்ளைகளிற்கு வர நேரம் இருக்கவில்லை. "பவானிக்கு ரீச்சர் வேலை கிடைத்து ,பயிற்சி வகுப்புகளிற்குப் போய்க் கொண்டிருக்கிறாள்."என்ற சந்திரா,"ரதி ,இப்ப எத்தனையாவது வருசம்?"என பாசத்தோடு கேட்கிறாள்.அவள் பல்கலைக்கழத்தில்)"கடைசி வருசம் "என்கிறாள். இப்படி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிற்கு நேரம் ஒரு பொருட்டில்லை.
“வாரவர்களிற்கு பசிக்கும்” என சந்திரா எச்சரித்ததால்..வடை,பற்றீஸ்,சன்விச்கள்..என பெண்கள் தரப்பு கொண்டு வந்திருந்தார்கள்
துயரங்களை காலம் நீறுபூக்கவே வைக்கின்றன.யாராவது கிளறினாலே அந்த காட்சிகள் மீள திரும்புகின்றன..எனவே கூடுமானவரையில் ...அதைப் பற்றி கதையாமல் விலத்தி சென்று விடுவதே நல்லது. ஆண்களிற்கு கைவராதது அவர்களிற்கு தெரிந்திருகிறது.
"இன்னும் ஆட்களைக் காணவில்லையே " என தில்லை சலிக்க அவருக்கு பின்னால் சத்தமில்லாமல் வந்த மகேஸ்,
"என்ன மச்சான், வி.ஐ.பி யாரையும் பார்த்துக் கொண்டு நிற்கிறாயா?”என பகிடியாக கேட்கிறான்.
வியப்படைந்த தில்லை" நீ எந்த கதவாலே வாராய்?"எனக் கேட்கிறார்.
“பொதிகளை மற்றதுக்கும் ஏற்ற முதலும் ‘செக்’ பண்ணுறாங்கள்.அந்த பயணிகளை (2வது வழியைக் காண்பித்து)அதாலே விடுறாங்கள் மச்சான் "என்றான்.
அவர்களும் மந்தையைப் போல ஒரு வழியையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்திருக்கிறார்கள்.இதைப் பற்றி துப்பரவாகவே நினைக்கவில்லை.அடிக்கடி வாரவர்களிற்கு தெரிந்திருக்கும். எப்பாலும் ஒரு தடவை விமான நிலையம் வாரவர்கள் கேட்டிருந்திருதாலும் மறந்து தான் விட்டிருவார்கள்.
வதனா, சினேகிதியின் கையைப் பற்றிக் கொண்டு… எல்லாரோடும் மகிழ்ச்சியாக கதைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரே நேரத்தில் சினேகிதிக்கும் பதிலளித்து விட்டு மற்றவர்களுடனும்... அவளால் எப்படி கதைக்க முடிகிறது. ஒரு நாட்டின் பிரதம மந்திரி தோற்று விட்டார். பெண்களாலும் ஒரு நாட்டை ஆள முடியுமோ தெரியாது,ஆனால்,அரசியல்க் கூச்சல்களை நிச்சியமாக சமாளிக்க முடியும். அவர்களிற்கு இவர்களோட கழிக்க 2 மணி நேரம் தான் இருக்கின்றன.
“அங்கால எங்கையும் கதிரைகள் இருக்கிற இடமாகப் பார்த்து ஆறுதலாக இருந்து கதைப்போம்"என்று தில்லை கூட்டிப் போகிறார்.அவர்கள் பின் தொடர்கிறார்கள்.பயணிகள் ஏறுற பகுதிக்கு மீள படிகள் ஏறி போகிறார்கள்.அதிகமாக கோடுகள் போட்ட மாதிரி கயிறுகள் கட்டிய பகுதிகள் அதிகமான இடத்தை பிடித்துக் கொண்டதால் கதிரைகள் அதிகமாக இருக்கவில்லை. இருந்தவற்றையும் மற்றவர்கள் பிடித்திருந்தார்கள்.அவர்ககளில் ஓரிருவர் எழ, அக்கதிரைகளை பிடிக்க ….பக்கத்தில் இருந்தவர்ககளும் எழுந்து மற்ற கதிரைகளிற்கு மாறி சின்னங்களை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு உற்கார்கிறார்கள். இவர்களும்."தாங்யூ"என வழிகிறார்கள்.
அண்ணரும்,தில்லையும்,மகேஸும் பேசிக் கொண்டிருக்க,ஆனந்தனின் சிந்தனை பழையபடி எங்கெங்கையோவெல்லாம் ஓடுகின்றது
சிறிலங்காவிலிருக்கிறவர்களிடம் இல்லாத மனிதாபிமானம், இனம்,மதம், மொழியைக் ….கடந்து இங்கை இருக்கிறவர்களிடம் பிரகாசிக்கின்றனவே ! இங்கையிருக்கிற ஆங்கிலேயரிடமிருக்கிற மனிதாபிமானம் கூட நம்மவரிடம் இல்லை என்பது தான் துர்ப்பாக்கியம். ஆனால், இதற்காக அவர்கள் ஒரு காலத்தில் செய்த கொடூரங்களையும் மறக்க முடியாது தான். ஒரு காலத்தில், கனடா,அமெரிக்கா,அவுஸ்ரேலியா..முதலான நாடுகளை எல்லாம் இவர்களை விட பின் தங்கிய தேச மக்களை கொன்றொழித்தே, அவர்களுடைய நாடுகளாக்கி இருக்கிறார்கள். இலங்கையிற்கும்,இந்தியாவிற்கும் அதிருஸ்டம் அடித்ததாலே 'சுதந்திரம்' கிடைத்தன என்றே கருத வேண்டியிருக்கிறது.
காந்தி,உண்மையிலே பாகிஸ்தான்,இந்தியாவாக பிரிவதை விரும்பவில்லை...என்றே சொல்கிறார்கள். அவர், ஆங்கிலேயர்களின் குணத்தை, நன்கறிந்திருந்தவர்..அந்த பிரச்சனையை எழுப்பிய போது உடனேயே ஏற்றுக் கொண்டு விட்டார்.மறுத்தால்... எங்கே இழுத்தடித்து இந்தியாவிற்கு சுதந்திரம் கொடாமலே விட்டு விடுவார்களோ?எனப் பயந்தார்.
அந்த சமயம் எழுந்த பாலஸ்தீனப் பிரச்சனையை இழுத்தடித்து,இழுத்தடித்து, இன்னமும்,அமெரிக்காவும் சேர்ந்து இழுக்கிறதே!அரைவாசிற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்களை மிலேச்சத் தனமாக (இஸ்ரேல்) சிறைகளில் அடைத்தும்,கொலை செய்தும் விட்டார்களே.
இதை இஸ்ரேல் மட்டும் தான் செய்கிறதாக நினைக்கிறீர்களா?
சேர்ச்சில் , இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கு கடைசி வரையில் எதிரானவராகவே இருந்தார் என்கிறார்கள்.
இந்திய சுதந்திரம் , ஒன்றும் ஜனநாயக ஆட்சியில் கிடைத்தது அல்ல, ராஜ குடும்பம் தான் ..முடிவெடுத்தது (நீதி ) வழங்கியது.
அதற்கு இந்தியா கொடுத்த விலை,இந்து ,முஸ்லீம் கலவரம்.காந்தி தான் இந்த நிலைமையை ஏற்படுத்தினார் என பின்னர் கொலையும் செய்யப்பட்டு விட்டார்.
இந்த சுதந்திரம் ,ஈழத்தமிழர்களிற்கு மட்டுமில்லை வெளியில் இருக்கிற நிறைய இனங்களிற்கும் கிடைக்க வேண்டியும் இருக்கின்றன. சிறிலங்கா, ஓரளவு மேம்பட்ட ஈழமக்களை சீண்டியதால் அது விடுதலைப் போராட்டமாக வெடித்து சிறு வீதத்திலாவது பழி தீர்க்கப்பட்டு ….அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
பல உலகநாடுகள்” இனப்படுகொலை தான் ஈழமக்களிற்கு நேர்ந்தது” என்பதை தற்போது உத்தியோக பற்றற்ற முறையிலாவது ஏற்றுக் கொண்டு விட்டிருக்கின்றன. இனி, எஞ்சிய தமிழ் மக்கள் கூட்டமைப்பாக சேர்ந்து உடையாத இரும்பமைப்பாகி விவேகத்துடன் போராடுவதில் தான் விடுதலை இருக்கிறது .
பாலஸ்தீன மக்களும் ஒரு மேம்பட்ட இனம் தான். .அவர்களிற்கும் விடிவு கிடைக்க பிராத்திப்போம்.
ஆண் தரப்பு ஒரு குழுவாகவும்,பெண் தரப்பு ஒரு பிரிவாகவும் இருந்து கதைக்கிறார்கள்.
"தில்லை,உம்மட ஆளிட தம்பியிட நினைவு நாள் இந்த மாசம் தானே வந்திருக்க வேண்டும்?"என்று ஆனந்தன் கேட்கிறான்.
"அதை ஏன் கேட்பான், வீடு,அந்த கிழமை முழுக்க செத்த வீடு தான் மச்சான்"என்று மகேஸிடம் கூறுகிறான்.
“ நாங்கள் கம்பஸிலே படிக்கிற போது, அவன் செத்திருக்க வேண்டும்,என்ன மச்சான் நடந்தது?"என்று மகேஸும் கேட்கிறான்.
தில்லை,நினைவுகளை துலாவிக் கொண்டிருக்கிற போது மற்ற இருவரும் சாடையாக சந்திராவையும் பார்க்கிறார்கள்.அவள் இப்ப வதனாவின் பிள்ளைகளின் தமிழைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள்.பெண்ணின் தாய்மையில் அவர்களால் துயர அலைகள் தற்காலிகமாவது மறந்து விட முடிகிறது.
ஆண் தரப்பால் அப்படி இருக்க முடியிறதில்லை. எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கிற வரையில் அவன் அதை தலையிலே வைத்து ...பந்தாட்டம் ஆடிக் கொண்டே இருக்கிறான்.கல்யாணம் கட்டி பிள்ளைகள் பெருகினால் என்ன மனிசியால் பொறுப்பில்லை என பேசி, ஏசினால் என்ன அவனால் மறக்க முடிவதில்லை.இப்படி கண்ட சரக்குகளையும்(குப்பைகளையும்)தலையிலே வைத்திருப்பதால்... அவர்களிற்கு ம் அதிகமாக பையித்தியமும் பிடித்து விடுகின்றன
கல்வியில் தரப்படுத்தல் வந்த போது அதிகமாக குழம்பி ஆயுதங்களைத் தூக்கியவர்கள் சிவக்குமாரன் போன்ற மாணவர்கள் தான்.
“உனக்கு நினைவிருக்கிறதா சுளிபுரம் செக்கிங்?அதற்கு 2 மாசத்திற்கு முதல் தான் இந்தியாவிற்கு பயிற்சிக்குப் போன இவட தம்பி 15 பேர்களோடு பயிற்சி முடித்து திரும்பி இருந்தான். அந்த மகிழ்ச்சி கனநாள் நீடிக்கவில்லை.அப்ப மச்சான் கோட்டையிலே பொலிஸ் நிலையம் இருந்தது. இயக்கங்கள் பொலிஸ்காரர்கள் பலரை மண்டையில் போட்டதால் அவர்களிற்கு ராணுவ பாதுகாப்பு தேவையாக இருந்ததால் கோட்டைக்கு போய்யிருந்தவயள்.தமிழ் பொலிஸும் அதில் இருந்தனர்.சிங்கள நண்பர்கள் இருப்பார்களில்லையா, அவர்கள் சுளிபுரத்தை பெரியளவில் செக் பண்ணப் போறார்கள் என்ற செய்தியை ரகசியமாக தெரியப் படுத்த , வீணாக.பெருமளவு பெடியள்களை பூசா முகாமிற்கு அள்ளிக் கொண்டு செல்லப் போறார்களே என்ற கவலையில் கேட்டவர்கள் ஊருக்குத் தெரியப்படுத்தி விட்டிருந்தார்கள்.
தெரிந்ததும் கலங்கி விட்டார்கள்
போற போது, தடிக்குச்சிகளைப் போல ஒல்லியாக இருந்தவர்கள் சிலர் இப்ப கமலைப் போல, விக்ரம் போல உடம்பு வைத்து வயசுக்கு மீறிய தோற்றத்தில், இயக்கப் பெடியள்கள் என்பதை இலகுவாக கண்டு பிடி க்க கூடிய தோற்றத்தில் இருந்தார்கள்..மற்ற இயக்கத்தைப் போல இவர்களிடம் போதியளவு ஆயுதங்கள் இருந்திருந்தால் இந்தளவிற்குப் பயந்திருக்க மாட்டார்கள்.எதிர்ப்பட்டால் அடிப்பட்டு,தப்பிப் பிழைத்து விடுவார்கள் என தைரியப்பட்டிருப்பார்கள்.இது ஏ.கே..க்குப் பதிலாக மரக்கட்டையை சாக்கால் சுற்றிக் கொண்டு திரியிற இயக்கம்.பதற்றம் தான் அதிகமாக பற்றிக் கொண்டு விட்டது (அவர்களிற்கு) மூளையே வேலை செய்யவில்லை மச்சான் .
"ஏண்டாப்பா இப்ப வந்தீர்கள்?செக்கிங் முடிந்த பிறகு வந்திருக்கக் கூடாதா?"என வீட்டார் அழுதார்கள்.
பெடியள்கள் இவ்வியக்கத்திற்குச் சென்றிருந்தாலும் இவர்களுடைய பெற்றோரில் வேற இயக்கங்களை நம்புறவர்களும் இருந்ததால் தீடீரென ஒரு அமைப்பை உருவாக்கி அதில் இருவரை அவர்களுடைய இயக்க அமைப்பிடம் உடனடியாக அனுப்பி."இவர்களைக் காப்பாற்ற ஏதாவது உதவி செய்யுங்கள்" எனக் கேட்டார்கள் .
. ஆனால், அவர்களே தடுமாற்றத்தில் இருந்தார்கள் மச்சான். காம்பில் இருக்கிற பேப்பர் குப்பையில் எதை எறியிறது ,எதை வைத்திருப்பது..என தெரியாதிருந்ததால் எல்லாவற்றை உரப்பையில் கட்டி நிலத்திற்கு கீழே மறைக்க வேண்டியிருந்தது. அங்கே மரவள்ளி,வெங்காயம்,மிளகாய் செய்கிறவர்கள் கணிசமாக இருந்ததால் காம்பாக பாவித்தது தெரியாமல் வெறும் வீடாக்கி,வெங்காயக்கட்டுக்களை கட்டி காய்யிறதுக்கு தொங்க விட்டு வீட்டுக்காரர் பாவனையில் வைத்திருக்கிறார் போலாக்க வேண்டி இருந்தது..விதைப்பதற்காக விதை வெங்காயம் வாங்கி வைத்திருப்பதாக சொல்லலாம்.வைத்திருக்கிற ஓரிரு ஆயுதங்களையும் வேறு காப்பாற்றியாக வேண்டும்."இவர்கள் எல்லாவற்றையும் நிலத்திற்கு கீழே மறைத்து வைத்து விட்டு ,எடுத்து பாவிக்கிற இயக்கம்"என்ற நிலைப்பாடு மற்ற இயக்கங்களிற்கு இருக்கின்றன. அதையும் இழந்து விட்டால் இன்னும் கேவலமாகி விடும்.தவிர காம்பிலே இருந்த வெளி மாவட்டப் பெடியள் சிலரை இங்கேயிருப்பவர்களின் தீடீர் மச்சான் மருமகனாக்கி விட வும் வேண்டியுமிருந்தது.ஆமிக்காரர் அடையாள அட்டைகளையே கேட்பார்கள்.அதிலுள்ள பேர்களை ,புதிய தாய்,தந்தையர் பேர்களை,வீட்டு விலாசத்தை எல்லாம் மனப்பாடமாக்கி றது மட்டுமல்ல...வீட்டிலே இருக்கிற உறவுகளையும் கூட தெரிந்து வைத்திருக்க வேண்டும்.அதற்கு மேலே கடவுள் விட்ட வழி.
இதோட இவர்களும் வயல் வெளியிலே, மரவள்ளித் தோட்டத்திலே எல்லாம் ஓடி ஓடி தப்ப வேண்டியிருந்தது. இந்த லட்சணத்திலே தோற்றத்திற்குப் பயந்து வார அவர்களையும் சேர்த்துக் கொண்டு ஓட முடியுமா? என்ன ?,
பொதுவாக பிரபல பாடசாலைகளில் படிக்கிற பெடியள்களிற்கு , எனக்கு, உனக்கு அவர்களிற்கு கிராமம், நகரம் பள்ளிக்குப் போற வழி,பள்ளிக்கூடம்...இவை மட்டுமே தெரியுமே.அந்த பையன்களும் அதைப் போல கிணற்றுத் தவளைகளாகவே இருந்தார்கள்.
இயக்கத்திற்கு வாரதாலே முதல் முதலாக வெளி உலகத்தைப் பார்க்கிறார்கள். கொஞ்ச நாள் அமைப்பிலே இருந்து வேலை செய்யாமல் ப்ரஸ்ஸாக பள்ளிக்கூடத்திலே இருந்து அப்படியே போனவர்கள் அவர்களிற்கு சுளிபுர குச்சொழுங்கைகள்,மற்ற கிராமப்பகுதிகள் எல்லாம் துப்பரவாகத் தெரிந்திருக்கவில்லை "ஓடுங்கடா"என்றால் நேரே ஆமிக்காரர்ரயே ஓடிப் போய் மாட்டிக் கொண்டு விடுகிற ….நிலமை!
" அப்படி என்றால் இவர்களை திரும்பி இந்தியாவிற்கே அனுப்பி ,எல்லாம் முடிய திருப்பி எடுத்தால் ..என்ன?"என அவர்களே யோசனை கூற..., பொருப்பாளர் சந்திரன் “பரவாய்யில்லையே!, ஆனால், இப்ப,எங்களால் அங்கே உள்ளவரை தொடர்பு கொள்ள முடியாது,வேணுமானால் எங்கட ஓட்டிகளை உங்களிற்கு அறிமுகப் படுத்தி வைக்கிறோம். ஒரு வருசத்திற்கு மேலே இந்தியாவிலே இருந்தவர்களிற்கு ஊரை விட இந்தியாவே நல்லாய் தெரிந்திருக்கும்.
நீங்களே பேசி பாருங்கள்"என்றவர்,ஒரு தோழரைக் கூப்பிட்டு"டேய் ,இவர்களை ஓட்டிகளிடம் விட்டு விட்டு வா"என அனுப்பினார்.
ஓட்டிகளும் நியாயமான விலைக்கு உடன்பட்ட போது வசதியான பெற்றோர் தம் மகனின் வேண்டுதலால் மற்றவர்களையும் ஒன்றாய் ஏற்றிக் கொண்டு போக சம்மதித்து விட்டார்கள். அவர்களை ஏற்றிய போது, ஓட்டிகள் முதலில் "யார் யாருக்கு நீச்சல் தெரியும்"என கேட்டார்கள்.8 பேர்கள் .."தெரியும்"என்றார்கள்."படுத்து நீச்சலும் தெரிந்திருக்க வேண்டும்.களைத்தால் இளைப்பார அப்ப தான் முடியும்"என்ற ஓட்டி"ஏற்கனவே பயணம் சென்றவர்கள்,பெரிதாக உங்களிற்குச் சொல்ல ஒன்றுமில்லை"என மோட்டரை இயக்கினார். மற்றவர் முன் அணியத்தில் போய் உற்கார்ந்து கொண்டார்.
சந்திரன் அங்கால பக்கமும் செய்தியை எப்படியோ அனுப்பி இருந்தான்.இரண்டொருபேர்கள் இவர்களை ஏற்பதற்காக கரையில் காத்து நின்றார்கள்.அதில் விமலனும் ஒருவர்.விமலண்ணையை பெடியளிற்கு நல்லாய் தெரியும்.
எல்லாம் சுமூகமாய் முடிந்தது.
ஓட்டிகளும் தம் அலுவல்களையும் செய்து கொண்டு திரும்பி வந்து சேர்ந்தார்கள்.பிரச்சனைகளே இல்லாமல் செல்வது என்றால் பின்னாலே பிறகு என்னவோ நடைபெறப் போகிறது என்பதற்கு சமிக்ஞை அல்லவா.
திரும்பிய ஓட்டிகள் "பாதுகாப்பாய் சேர்ந்து விட்டார்கள்"என்றதைச் பெற்றோரிற்கு அறிவித்தார்கள். அப்ப தான் அவர்களிற்கு மன நிம்மதி ஏற்பட்டது.
வட்டுக்கோட்டை தேர்த்தல் தொகுதியின் (இதில் சுளிபுரம்,மாதகல்,சில்லாலை,சங்கானை உப அரசாங்கப் பிரிவு ...எல்லாமுமே அடக்கம்) அமைதியை குலைக்க ஆமி க்காரர்களும் பல வழிகளால் வந்து பல்வேறு இடங்களில் சிறுகாம் அடித்து தரித்து நின்றார்கள்.ஊரடங்கு உத்தரவுகளை வானொலிகள் மூலம் பிறப்பித்து விட்டு., இயக்கங்களின் கோட்டை யான சுளிபுரம் பிரதான இலக்காக இருந்தாலும் மற்ற இடங்களிலும் தேடுதல் வேட்டைகள் ஆரம்பமாகின.
அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பாவி இளைஞர்கள் சிலர் ,காது செவிடான கிழவர் ஒருவர் ... என சுடப்பட்டு இறந்து போக,.சுளிபுரப் பகுதியில் தாச்சி விளையாட்டு நடைப் பெற்றது.
எதிர்ப்பட்ட இடத்தில் இரண்டு பகுதியும் சுடுபட்டு காயப்பட அதில் ஒரிரு பெடியள் சாக ,ஆயுதமில்லாத பெரும் தோழர் சிலரும் பிடிபட்டும் போனார்கள்.அமைப்பின் பொருப்பாளர் சந்திரனும் ஒருவர். இயக்கத்தின் சார்ப்பான 50 பேர்கள் பிடிபட்டிருந்தால், பள்ளியில் படிக்கிற அப்பாவி மாணவர்கள்,படிப்பை விட்டு விட்ட அதே மட்ட இளைஞர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்களை லொரிகளில் ஏற்றி பூசாவிற்கு கொண்டு போனார்கள்.
சிறிலங்கா தமிழர்களின் வேலை வாய்ப்புகளை மட்டும் பறிக்கவில்லை.இப்படி கொண்டு செல்கிறவர்களையும் வெளிய விட அங்க,இங்க இருக்கிற சிங்கள அதிகாரிகளிற்கும் லஞ்சம் (பணத்தைக்) கொடுத்து பெறும் பண வாய்ப்ப்பையும் ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள் மச்சான்.
.கணிசமான பேர்கள் இப்படியான கை பண மாறுதல்களால் வெளியவும் வந்தார்கள் தான்.வஞ்சகமான வலை விரித்த இலங்கையின் இனவாத அரசு. அரசுக்கு
அடிக்கடி மைன்ட் மாறும்.அதற்கு முதலே காசைப் பிரட்டி ஏஜென்சிகளைப் பிடித்து அவர்களை உடனடியாகவும் நம்மவர்கள் வெளிநாடுகளிற்கும் அனுப்பியும் விடச் செய்தார்கள். பிறகு, இதெல்லாம் நடந்தது மச்சான்.
அமைப்பைச் சேர்ந்த . மற்ற பெடியள்கள் வயல் வெளியால்,மரவள்ளித் தோட்டத்தால் ஒளிந்து ஒளிந்து ஓடி மானிப்பாய்,சுன்னாகம்..என மற்றைய ஊர்களிற்குச் சென்று தப்பித்துக் கொண்டார்கள். அசுரர்கள் ஊரை நாசம் செய்து விட்டுப் போக கிடக்க,...இவர்களும், மீள புதிய பொருப்பாளர்களை நியமிக்க இயக்க ங்களும் இயங்க தொடங்கி விட்டன.
பெற்றோர், இந்தியாவிற்கு அனுப்பிய பெடியள்களை திருப்பி எடுக்கும் முயற்சிகளை எடுத்தார்கள்.அதே ஓட்டிகள் மனிதாபிமானமாக அரை விலையிலே அழைத்து வர ஒப்புக் கொண்டார்கள். 'படகு மக்கள்'என நாட்டுக்கு நாடு கடல் எடுத்துக் கொண்டு விடுற துயர வரலாறுகள் நிறைய இருக்கின்றன மச்சான். பெடியள்களை கூட்டி வரும் போது அமைதியாக இருந்த கடல் பாக்கு நீரணையில் கொந்தளிக்கத் தொடங்கி விட்டது.கடலினுள் சாத்தான் தான் புகுந்து விட்டது.திறமையான ஓட்டிகள் தான்.கவனமாக பார்த்து ஓட்டியும்..ஒரு கட்டத்திற்கு மேலே படகு கவிழ்ந்து விட்டது.
மோட்டாரோடு படகு அலைகளில் அள்ளுண்டு போக ஒரிரு பெடியள்களையாவது காப்பாற்ற முயன்றார்கள்.நீச்சல் தெரியும் என்றவர்கள் வெறும் தத்து நீச்சல்காரர்களாக இருந்தார்கள்.கடலலையில் நீந்திய அனுபவம் துப்பரவாக இல்லை. கடற்கரைக் கிராமத்தவர்கள் என்ற பேர் தான் ஒரு எழவும் தெரியாது. இதுவும் கல்வியிலே கிடக்கிற குறைபாடுகளில் ஒன்று மச்சான்.கற்பிக்க வேண்டியதை கற்பிக்காமல் எதை எதையோ கற்பிக்கிறது.இது போதாதென்று சிங்கள (மத்திய) அரசும் வேறு,'நான் தான் கல்வியில் மாறுதல்களை செய்வேன்,நீ செயேலாது 'என பிராண்டுத்துகிறது.
அங்கே,மிதந்து கொண்டிருக்கிற அவர்கள் தாழ்கின்ற நண்பர்களைக் காப்பாற்ற கையைக் கொடுத்து அவர்களோடு சேர்ந்து உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள்.
ஓட்டிகளிற்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. ஒரு பெடியளைக் கூட காப்பாற்ற முடியவில்லை.நீந்தி வந்தடைந்த இவர்கள் துயரச் செய்தியை உடனேயே பெற்றோரிற்கு அறிவித்து விட்டார்கள். அதிலே இவவுடைய தம்பியும் ஒருத்தன்
தில்லை ஒரேயடியாய் உடைந்த குரலில் "விதி, சதி செய்து விட்டது மச்சான்"என்கிறார். அழுது விடுவார் போல இருக்கிறது.
ஊரிலே இச்செய்தி பரவிய போது... தம் பள்ளிக்கூடத்தில் ஒரே வகுப்பிலிருந்து போன பெடியள்கள் என்பதை அறிந்த அதிபர்,"அனைவரும் குழந்தைப் போராளிகள்(அரசியலே என்ன எனத் தெரியாதவர்கள்) அநியாயமாக போய் விட்டார்களே"என தனது அருமை நண்பரான ஈழநாடு பத்திரிகை நிருபருடன் வெகுவாக கவலைப்பட்டு கதைத்திருக்கிறார்.
அந்த நிருபரும் அவருடன் வகுப்பிற்குச் சென்று மற்ற மாணவர்களுடன் கதைத்த போது , ஒரு விசயம் தெரிய வந்தது.அதிலே உண்மையிலே இயக்கத்திற்கு போக முடிவெடுத்தவர்கள் ஐந்து பேர்கள் தானாம்.நண்பர்களை ஏற்றி விடச்சென்றவர்களே படகுகளில் இடம் இருக்கவே நண்பர்களை பிரிய மனமில்லாமல் கூடவே படகேறி விட்டவர்கள்.
அப்ப, அந்நிருபர்....ஈழநாடு பேப்பரில் “யாழ்பாணத்தின் சோகம்” என எழுதிய விரிவான செய்திகளை ஆனந்தனுக்கு வாசிச்ச ஞாபகம் நல்லாய் இருக்கிறது.
தில்லை "மச்சான், இணைய நூலகத்தில் ஈழநாடு பேப்பர்களை எல்லாம் ஸ்கேன் பண்ணி வைத்திருக்கிறார்கள்.85ம் ஆண்டு இந்த மாசத்துப் பேப்பரைத் தேடிப்பார்.ஒருவேளை உன்னுடைய கண்ணிலே ….அகப்படலாம் "என்கிறார். ஆனந்தனும் தேடிக் கொண்டேயிருக்கிறான். இன்னமும் அகப்படவில்லை. அகப்படாமலா போய் விடப் போகிறது?
வட்டுக்கோட்டையில் அவர்களிற்கு என்று ஒரு நினைவு தூபி நிறுவப்பட வேண்டும் என்பது அவனுடைய ஆசை.
முற்
முப்பது வருடங்களிற்கு முதல் நடந்த விசயம்.அது, இப்ப உக்கி மறைந்து போய் விடக் கூடியது. இயற்கைப் பசளைப் போல உரமாக வேண்டும். ஒருவேளை திரும்பவும் என வீறு கொண்டு எழுகிற போது அவசியமானது தானே .
எத்தனையோ விசயங்கள் நடக்காதென்பார், நடந்து விட்டிருக்கின்றன.பொறுத்தார் பூமி ஆள்வார் என்று ஏன் சொன்னார்களாம்? நாம் விடுதலைப் பாதையை சரிவர தெரியாதலாலே அரைவாசிக்கு மேலே இழந்து கலங்கிய நிலையில் இருக்கிறோம். தெளிவடைய வேண்டும்.
வந்தவர்களிற்கு கோப்பி, டீ' குடுக்காமல் அனுப்புவதா? சே!,என்ன நினைப்பார்கள்?"யார் யாருக்கு கோப்பி,டீ வேணும்" என்று ஆனந்தன் கேட்கிறான். "ஒரு சீனி,டபிள் சீனி டீ,ஒரு பால்,ஒரு சீனி கோப்பி..."இப்படி ஆளுக்கு ஆள் தாளம் போட்டுச் சொல்ல,தில்லை"இது சரிப்பட்டு வராது,சந்திரா, ஒரு துண்டு பேப்பரிலே எழுதும் "என்கிறார். சந்திராவும் எழுதிக் கொடுக்கிறார்.
சனம் வடிந்திருக்கும் என்று போனால் அங்கே கீயூ பாம்பு கணக்கிலே நிற்கிறது.இனி என்ன செய்வது?ஊறும் வரைக்கும் நிற்க வேண்டியது தானே.இடையில் மகேஸ் தொலைபேசியில் அழைக்கிறான்." ,எங்கே மச்சான் நிற்கிறாய்?"."கியூவிலே நிற்கிறேன்"என்கிறான்."ஒன்றும் வேணாம் வா மச்சான்,கொஞ்ச நேரம் தான் இருக்கிறது "என்கிறான்.
"மூன்றாவதிற்கு வந்து விட்டோம்.வாங்கி கொண்டே வாரோம்". போய்… கொடுத்த போது தில்லைக்கும்,மகேஸுக்கும் மிஸ்சிங்.பரவாய்யில்லை, போறபோது பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
அவர்கள் ஆறுதலாக கதைக்க முதலே நேரம் ஆகி விட்டது."முக நூலிலே பார்ப்போமடா,பாய்" என உள்ளே போய் விட்டார்கள்.
இனி வரும் காலங்களில் கொஞ்சம் 'சுமார்ட்'டாக சந்திப்பார்கள்.
(உண்மைச் சம்பவத்தோடு புனையப் பட்ட கதை)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.