இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது.
”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!”
“பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி”
இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது.
“பல்லவி மாத்திரம் இதிலை நிக்கலாம். மற்ற மூண்டு பேரும் எங்களோடை வாருங்கள்” சொல்லிவிட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்த பூதங்களில் நான்கு போயின.
கருணா மாத்திரம் பல்லவியுடன் நின்றான். சந்தித்த முதல்நாளே கருணாவின் கண் அவள்மீது பட்டுவிட்டது.
ஹந்தான மலைச்சாரலில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக்கற்றைகள் பல்லவியின் மீது படர முகம் ஜோராக ஜொலித்தது. சினிமாப்படங்களில் வருவது போல தென்றல் அவள் கேசங்களைச் சிலிர்க்க வைத்தது. பல்லவி குள்ள உருவம் என்றாலும் அழகுராணிதான். இரட்டைப்பின்னலை முன்னாலே தூக்கி வாகாக வீசியிருப்பாள். அதில் கருணாவின் மனம் ஏறி இருந்து ஊஞ்சல் ஆடும்.
“என்னைத் திருமணம் செய்வாயா?” நிஜத்தைப் பகிடியாகத் திரித்து கேள்வியாக்கித் தூது விட்டான் கருணா.
“நான் என்ரை அப்பா அம்மா சொல்லுறபடிதான் கேட்பேன்” ஒவ்வொரு தடவையும் இப்படிச் சொல்லி சிரித்து மழுப்பி விடுவாள் அவள்.
“அப்ப உன்னுடைய பெற்றோர் என்னைத் திருமணம் செய்யச் சொன்னால் செய்வாயா?” இந்தத் தடவை ஒரு தீர்க்கமாகவே வந்திருந்தான் கருணா.
அவள் நிலத்தைக் கீறி பாலத்தை நோக வைத்தாள். இவன் மகாவலியைப் பார்த்து மகா வலியில் துடித்து நின்றான்.
“சரி… நீ யாரையாவது எப்பவாவது விரும்புவதாக இருந்தால், என்னிடம் தான் முதலில் சொல்ல வேண்டும்” அப்படியொரு திட்டத்தைப் போட்டுவிட்டு, அவளின் பெற்றோர்களைச் சந்திக்கலாம் என்பது கருணாவின் எண்ணம்.
”சரி என்றால் இந்த இடத்தைவிட்டுப் போகலாம். இல்லாட்டி பின்னேரம் உன்ரை கூட்டாளிகள் வரும்வரைக்கும் நானும் நீயும் இதிலைதான்.”
பல்லவிக்கு தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்ட புளுகம்.
பாலத்தின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்குத் தாவி, அந்த வழியே ஓடினாள். அவளின் ஓட்டத்தினால் ‘அக்பர்’ பாலம் குலுங்கியது.
இந்த ‘அக்பர்’ பாலம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. அது பொறியியல் பீடத்தையும் ஏனைய அனைத்துப் பீடங்களையும் இணைக்கும் பாலம். ‘அக்பர் ஹோலையும்’ ஏனைய அனைத்து விடுதிகளையும் இணைக்கும் பாலம்.
அடுத்த தடவை சந்திக்கும்போது, “இந்தா பிடி என்ரை அட்றஸ்” என அவளின் கையிற்குள் தனது முகவரி அடங்கிய துண்டொன்றைத் திணித்து அவளின் கையைத் தீண்டினான் கருணா. எப்பொழுதாவது காதல் கடிதம் எழுதுவாள் என்பது அதன் உள்நோக்கம்.
முதல் வருடம் ஜேம்ஸ்பீரிஸ் ஹோலில் இருந்த காலங்களில் கருணாவும் அவன் கூட்டாளிகள் தவராஜா, நேசன், குலம் போன்றவர்களும் செய்யும் சேஷ்டைகள் பலவாறாக இருந்தன. ஜேம்ஸ்பீரிஸ் ஹோல் மலையில் இருந்தது. அதன் ஒரு அந்தத்தில், கலஹா வீதியை நோக்கி சீமெந்தினால் ஆன ஒரு இருக்கை இருந்தது. அதில் இருந்து கீழே பார்த்தால் கிஷிங் பெண்டும் (kissing bend), எட்டத் தூரப் பார்த்தால் லவ்வேர்ஸ் பார்க்கும் (lovers park) தெரியும். மாலை வேளைகள் ப்ளஸ் விரிவுரைகள் இல்லாத சமயங்கள் இவை இரண்டும் போதை தரும். பைனாக்குலர் கொண்டு லவ்வேர்ஸ் பார்க்கை தரிசிக்கும் குறுகுறுப்பு சொல்லமுடியாதது.
லவ்வேர்ஸ் பார்க்கிற்கு சோடி சோடியாக காதலர்கள் வந்து, ஒரு சோடிக்கு மற்றச் சோடி தெரியா வண்ணம் மரவேர்களில் அமர்வார்கள். ஒருவர் கையை மற்றவர் கோர்த்து ஊஞ்சலாடுவார்கள். செக்கியூரிட்டி கூடத் தேவைப்படும் காலங்களில் குடையும் கூடவரும். குடையின் கீழ் அவர்கள் காட்டில் மழைதான். இந்தக் காட்சிகளை பார்ப்பதற்கு, பைனாகுலர் சூடாகும்வரை அங்கு ஒரு போட்டி நடக்கும். லவ்வேர்ஸ் பார்க்கிற்குள் இனவிரோதம் மதவிரோதம் என்றெல்லாம் நடந்தமாதிரிப் பல்கைக்கழகச் சரித்திரத்தில் இல்லை. அங்கே எல்லாம் சமத்துவம்தான். சமரசம் உலாவும் இடம்தான் அது.
ஆறேழு மாதங்கள் கழிந்திருக்கும். ஒருநாள் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவனுடன், பாலத்தருகே சடைத்து வியாபித்திருக்கும் மரத்தின் பின்னால் பல்லவி ஒதுங்குவதை தவராஜா கண்டுவிட்டான். எட்டிப் பார்த்த தவராஜாவின் தவம் கலைந்து போனது. ஏகப்பட்ட சோடிகள் பட்டாம்பூச்சிகளாக சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தனர்.
கருணாவின் காதில் நெருப்பை ஊதிப் பற்ற வைத்தான்.
“எட விசரா…. அவள் யாரை விரும்பினாலும் என்னட்டைப் பெர்மிஷன் கேட்பேன் என்று சத்தியம் செய்து தந்திருக்கின்றாள்” என்றான் உள்ளூரப் பதட்டத்துடன்.
அவள் தன்னுடன் படிக்கும் சகமாணவன் குகநேசனுடன் சுற்றுகின்றாள் என்று ஒரு வதந்தி உலாவியது. சத்தியமா அது வதந்திதான் என கருணா அடித்துச் சத்தியம் செய்தான்.
ஒருநாள் குகநேசனை இடைமறித்து,
“உன்னுடன் படிக்கும் பெண்களில் யார் அழகு?” என்று அவனிடம் ஒரு கணிப்பீடு செய்தான் கருணா.
“பல்லவிதான் நல்ல முகவெட்டு” என்றான் அப்பாவித்தனமாக குகநேசன்.
“முகவெட்டோ? அவளுக்குப் பின்னாலை அலைஞ்சியோ உன்ரை முகத்தை வெட்டுவன்” என்றான் கருணா.
அதன்பின்னர் கொஞ்சக் காலம் அவன் அவள் பின்னால் சுற்றவில்லை.
ஒருநாள் குகநேசன் ஒரு பெண்ணைத் தள்ளிக் கொண்டு லவ்வேர்ஸ் பார்க்கிற்குள் பரபரவென மின்னி மறையும் வேகத்தில் நுழைந்ததை தவராஜா கண்டுவிட்டான். அன்று கருணாவிற்கு நல்ல காலம். கூட வரவில்லை. மறைந்து மறைந்து குலமும் தவராஜாவும் வேறும் சிலரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
“குகநேசன் போனாப் போகட்டும். பெம்பிளப்பிள்ள யாரெண்டு பார்க்க வேணுமல்லே!”
அவர்களுக்குத் தண்ணி காட்டியபடி சென்ற இவர்களில் குலம் ஒரு மரத்துடன் மோதிவிட்டான். குலம் போட்ட சத்தத்தில், மரத்தின் பின்னால் இருந்த ஒரு சிங்களச் சோடி மரணத்தின் வாசலுக்குச் சென்றுவிட்டது. அவன் கத்தத் தொடங்கினான். காதலி அருகில் இருந்தால் ஒரு ஆணுக்கு வரும் ஆக்ரோஷ உணர்வை அவர்கள் தரிசித்தார்கள்.
“இஞ்சை சோடியில்லாமல் தனியாகவோ கூட்டமாகவோ வரப்படாது” கல்லுகளைத் தூக்கி இவர்கள்மேல் வீசத் தொடங்கினான் அவன்.
அந்தச் சத்தம் கேட்டு பல்லவி எட்டிப் பார்த்தாள். இவர்கள் பல்லவியைக் கண்ட அதிர்ச்சியில், கழிவுச் சாக்கடைக்குள்ளால் ஓடி சரிவு மீது ஏறித் தப்பித்தார்கள்.
அன்று இரவு அவர்கள் அவசர அவசரமாக ஒரு கூட்டத்தைக் கூட்டினார்கள். மந்திராலோசனை செய்தார்கள். தவராஜாதான் கூட்டத்திற்கும் ராஜா. இதை எல்லாம் அறிந்தால் கருணா இப்ப தூக்கு மாட்டிச் சாகப் போறானே எனப் பயந்தார்கள். ஒரு திட்டம் தீட்டினார்கள். யாரின் கையெழுத்து ஒரு பெண்ணின் மணிமணியான கை எழுத்தைப் போல வரும் எனச் சோதனை செய்தார்கள்.
இரண்டுநாட்கள் கழித்து விசிலடியுடன் விரிவுரைக்கு வந்த கருணாவை காலை பதினொரு மணியின் பின்னர் ஒருவரும் பார்க்கவில்லை. மாலை விரிவுரைகள் முடித்து வந்த, அவனின் றூம்மேற் துஸ்யந்தன் கதவைத் திறந்தபோது அறை இருட்டாக இருந்தது. கட்டிலில் தலை வரைக்குப் போர்த்தபடி பேய்க் கோலத்தில் கருணா படுத்துக் கிடந்தான்.
“என்ன மச்சான் சுகமில்லையோ?” என நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான் துஸ்யந்தன்.
“அது உள் காய்ச்சல்” என்றான் கருணா.
அவனால் அந்தக் கொடுந்துயரத்தைத் தாங்க முடியவில்லை. கடைசியில் அந்தக் கடிதத்தை துஸ்யந்தனிடம் கொடுத்துவிட்டு ஓவென்று அழுதான்.
அன்புடன் கருணா அண்ணனுக்கு,
வணக்கம்.
உங்களுக்கு என்னுடன் படிக்கும் குகநேசன் என்பவரைத் தெரியும் என நினைக்கின்றேன். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்புகின்றோம். நீங்கள் முன்னர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தத் தகவலை உங்களுக்கு அறியத் தருகின்றேன்.
இனிமேல் என்னைப் பார்ப்பதற்கு விடுதிக்கு வரவேண்டாம். வழியில் தனியே கூப்பிட்டுக் கதைக்காதீர்கள். உங்கள் தங்கையாக ஏற்றுக்கொண்டு எங்கள் இருவரையும் வாழ்த்துங்கள்.
நன்றி அண்ணா.
அன்புள்ள
பல்லவி குகநேசன்.
”நாசங்கட்டு கலியாணம் முடிய முதலே அவனை கணவனாக்கிப் போட்டாள்” என்று சத்தமிட்டபடியே கருணாவிற்கு தேறுதல் சொல்லிவிட்டு கன்ரீனுக்கு சாப்பிடப் போனான்.
“உனக்கு ஏதாவது வேணுமா மச்சான்?”
”ஏதாவது பார்த்து ஒரு சாப்பாட்டுப் பார்சல் வாங்கி வா”
துஸ்யந்தன் கன்ரீனில் இருந்து வரும்போது பார்சலுடன் மட்டும் வரவில்லை, ஒரு பட்டாளத்துடன் வந்தான்.
எல்லாரும் செத்தவீடு கொண்டாடினார்கள். கடிதத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்தார்கள்.
“மச்சான் விடு. விட்டுத் தள்ளு. என்ன இருந்தாலும் உனக்கு மதிப்பு மரியாதை தந்திருக்கிறாள் பல்லவி. நீ கேட்டபடி கடிதம் போட்டிருக்கின்றாள். அதுவே உனக்குப் போதும்” என்றான் குலம். அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது தவராஜா குலத்தின் முதுகில் கிள்ளினான்.
“என்ன மச்சான் பல்லவியின்ரை கையெழுத்தும் உன்ரை கையெழுத்தும் ஒண்டாப் பொருந்துது போல கிடக்கு” என்று குலத்தின் காதிற்குள் கிசிகிசுத்தான் துஸ்யந்தன்.
குலம் தன் வாயில் சுட்டுவிரலை வைத்து ‘உஸ்’ என்றான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.