'மிஸிஸ் கொஞ்சம்' என்பது எங்கள் பெண்கள் திலகத்துக்கு நான் நாளாந்தப் பாவனைக்காகச் சூட்டிக் கொண்ட ஜனரஞ்சிதமான பெயர். ஒரு நாட்டின் பொருளாதார மந்திரியாக இருந்திருக்க வேண்டியவர். அதை, நான் மட்டுமே சொல்லவில்லை. அவரே இருந்து இருந்திட்டு எனக்கும், தன் மக்கள், நண்பர் எல்லாருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் (கிடைக்காவிடின் அவரே சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியும் கொண்டு) அதை நேரில் சொல்லி அல்லது சொல்லாமற் சொல்லி ஞாபகமூட்டத் தவறியதில்லை. ஏதோ ஒரு உலக நாட்டின் துரதிஷ்டகரமான இழப்பு ― அதாவது இந்தப் பொருளாதார நிபுணி, நாங்கள் முற் பிறவிகளில் செய்த நற்பயனால் எமக்குக் கிடைத்திருக்கிறார்.
ஒருநாள் எம்வீட்டுக்குக் கரு, தயா என்னும் ஒரு சோடி இலக்கிய நண்பர்களை இரவுச் சாப்பாட்டுக்கு நானும் மிஸிஸ் கொஞ்சமும் அழைத்திருந்தோம்.
அவர்களும் இலங்கையில் பிறந்த இங்கிலாந்து வாசிகள் என்ற படியால் பழங்கால அனுபவங்களை மீளாய்வு செய்து ஆனந்தமாக அவ் இரவைக் கழிக்கலாம் என்னும் நோக்குடன், உறைப்பான கோழி இறைச்சிக் கறியும் குழம்பும், முட்டைப் பொரியலும் கீரைப் பிட்டும் சமைப்பது என முடிவு செய்யப் பட்டது. குசினித் தட்டுகளிலிருந்த பிட்டு மாச்-சரைகளை எடுத்து அளவுச்-சுண்டினுள் போட்டு மதிப்பிட்டால், மூன்றரைப் பேருக்குப் போதும், ஆனால் நாலு பேருக்குக் காணாது என்ற நிலை. என்ன, ஒரு கொஞ்சம் தானே குறைவு, எங்களில் ஒருவர் அன்றைய வீட்டுக்காரர் என்ற முறையில் கொஞ்சம் குறைச்சுச் சாப்பிடுவது என்ற முடிவும் எடுக்கப் பட்டது. ஆனால் எம் இருவரில் யார் கொஞ்சம், கொஞ்சமாய் உண்பது? என்பது மட்டும் பேசப் படவில்லை.
அடுத்து, கறித்தூள், மிளகாய்த் தூள்களின் நிலை ஆராயப் பட்டது. கறித்தூள், கொஞ்சம் மட்டும் பாவிப்பது என்றும், உறைப்புக் கறியே எம் நோக்கமென்ற படியால், மிளகாய் தூளில் கொஞ்சம் கூடப் போடுவதென்றும் எம் ஒருமித்த முடிவு. இந்த எம் திட்டத்தின் படி சமையல் இனிதே நடந்தேறியது.
சாப்பிடக் குந்தினோம். நாம் அண்மையில் நடந்த ஒரு இலக்கியவட்டக் கூட்டத்தில் நளவெண்பாவை அலசியபோது தமயந்தியின் அன்ன நடை எப்படியாய் இருந்திருக்கும் என ஒரு கோமாளி இலக்கிய ரசிகர் செய்து காட்டியதைக் கரு நடித்துக் காட்டி எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்ததால் பிட்டு குலுங்கிக் குலுங்கிக் கீழிறங்க, வீட்டுக் காரராகிய நாமும் எம் தெளிவற்ற முடிவைக் கூட நினைக்காது, பிட்டைப் போட்டுப் போட்டுச் சாப்பிட, பிட்டுக் கொஞ்சமல்ல, கூடவே காணாமல் போகலாம்! என்று உணர்ந்தவுடன் நாலு பேரும் கறியிலும் குழம்பிலும் கொஞ்சம் கூட எடுத்துச் சாப்பிட்டு, நிறைவுக்கு பாண் சரை ஒன்றையும் வெளியில் எடுத்துச் சாப்பிட்டு அதற்காகக் கொஞ்சம் கொஞ்சமென்று கூடக் கூட கறியும் குழம்பும் சுவைத்துச் சுவைத்து உண்டு, விருந்தினர் சந்தோசமாக வீடு சென்றபின், மிஸிஸ் கொஞ்சம் எனக்கு, குழம்பு கொஞ்சம் தான் மிஞ்சி இருக்கிறது, எனவே வைக்கேலாது, எனவே கொஞ்சம் பாணுடன் சாப்பிட்டு முடியுங்கோ என்று சடுதி அன்புக் கட்டளையிட, நானும் சாப்பிட்டு முடித்துவிட்டுப் படுத்தேன்.
எங்கள் இனிய இரவு விருந்தின் பலா பலன்கள் நள்ளிரவில் எனக்குத் தெரியத் தொடங்கின. கரு, என்னுடன் அடுத்த நாள் தொலைபேசிக் கதைத்த பாணியிலிருந்து அவர்களும் என்னைப் போல அன்று நள்ளிரவு பலா பலன்களை அனுபவித்திருக்க வேண்டுமென ஊகித்தேன். ஏன், மிஸிஸ் கொஞ்சமும் தான், (அதிகமில்லை, கொஞ்சம் தான்) பாதிக்கப் பட்டார்கள். அன்று பட்டுத் தெளிந்த பின்னரே எனக்குச் சில வசனங்கள் ஞாபகத்துக்கு வந்தன: முதலிரவு சமைக்கும் போது, மிளகாய்த் தூள் பைகளை நாம் பார்த்த பொழுதில், இதுக்குள்ளே கொஞ்சம் தான் இருக்குது. எண்டாலும் இண்டைக்குக் கொஞ்சம் கூடத் தான்! எண்டாலும் கொஞ்சத்தை வைச்சுப் பயனில்லை!! எனவே இருக்கிற முழுதையும் போடுவம். ஒரு கொஞ்சம் தானே கூட. அது பறுவாயில்லை. ஒண்டும் செய்யாது| என்று மிஸிஸ் சொல்லியது எனக்கு ஒன்றும் விடாமல் பின்னரே ஞாபகம் வந்தது.
அடுத்த உதாரணம்: மிஸிஸ் கொஞ்சமும் நானும் ஒருநாள் பஸ்ஸில் பிரயாணம் செய்தோம். உள்ளே, கடகங்களில் பனங்கிழங்கு அடுக்கியதைப் போல, இருக்கைகளில் இருக்கும் இடம் ஒன்றுமே இல்லை என்று நான் கணித்தேன். ஆனால் மிஸிஸ் கொஞ்சத்துக்கு ஆண்டவன் கழுகுக் கண்களைத் தான் கொடுத்திருக்கிறான் போலும்! நீண்ட, வாங்கு போன்ற பின்பக்க ஆசனத்தில் ஐந்து பேர் இருந்தனர். அவர்களில், ஒருவரோ இருவர், காலையும் மத்தியானமும் கொஞ்சமும் சாப்பிடாது, கொஞ்சம் மெலிந்திருந்தது போலக் காணப் பட்டனர். எனவே அந்த வாங்கில் கொஞ்சம் இடைவெளி இருக்கும் என்றும், ஓரிருவர் கொஞ்சம் தள்ளி இருந்தால் தானும் அதில் இருந்துசெல்ல முடியுமென்றும் மிஸிஸ் கொஞ்சம் எண்ணி, அவர்களுக்குக் கிட்டக் கிட்டக் கொஞ்சம்கொஞ்சமாய் நகர்ந்துசென்று, பேசத் தொடங்கினார்:
மன்னிக்க வேணும். நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் தள்ளி இருந்தால் நானும் கொஞ்சம் இருக்கலாம் என்றார்.
வெள்ளைக்காரர், மரியாதையான சனங்கள். கிட்டடியில் இருந்த மூவரும் நகர்ந்திருக்க, இவர் தன் வஞ்சகமில்லாது ஊதியிருந்த பின்புறத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி அமர்ந்தார். சடுதியாக இவர்களின் வலது பக்கத்திலிருந்து மரண வேதனைக் குழறல்! அம்பியூலன்ஸ் வண்டிகளின் அலறல் போல எனலாம்!!
ஐயோ, என் தொடை எலும்பு!, என்று கத்திக் கொண்டே அமர்ந்திருந்த மாணவன் ஒருவன் எழுந்து நின்று தன் தொடையைப்பினைந்து, நோவைக் குறைக்கத்தெண்டித்தான். எமது நாயகி, வெறி சொறி. யூ சிற். என்று கொஞ்சம் அரக்கி இருக்க, அவன், நோ. நோ. தாங்க் யூ, நோ. எனக் கத்திக் கொண்டு நொண்டிபடி முன்னேறி அடுத்த பஸ் நிலையத்தில் இறங்கி ஓடியே விட்டான்!
என்ன நடந்ததென்று நினைக்கிறீர்கள்? எமது நாயகி தன் நிறையையும், இடுப்பின் அகலத்தையும் கொஞ்சம் குறைத்தும், பயணிகளின் இடைவெளியைக் கொஞ்சம் கூட்டியும் மதிப்பீடு செய்து விட்டார்கள்! இனி மூன்றாவது உதாரணம்:-
மிஸிஸ் கொஞ்சத்துக்குத் தையல் வேலை நல்லாயப் போகும். இதையறிந்த இனத்த பெண் ஒருத்தி தன்னுடைய மேற்சட்டைகள் சிறுத்து விட்டன எனவும் கலியாண வீடு ஒன்றுக்குப் போட, கூறைக்குச் சோடியாக ஒரு சட்டை புதிதாகத் தைக்க வேண்டும் என்றும், இருக்கும் சீலை போதுமோ என்பது கொஞ்சம் சந்தேகம் என்றும், மிஸிஸ் கொஞ்சம் எப்படியும் அச் சட்டையைத் தைத்துத்தர முடியுமா என்றும் கேட்க, இவர்கள் இணங்கித் தைத்துக் கொடுத்தார்கள். அந்தக் கலியாணத்துக்கு எமக்கும் அழைப்பு வந்ததால் நாமும் போயிருந்தோம். இடையிலே, அந்தப் பெண்ணுக்கு ஒரு பொறுப்புள்ள வேலை செய்ய வேண்டி வந்தது. அதாவது, பெண் வீட்டார் வரும் போது அப்பெண் நல்ல புதுச் சட்டை போட்டபடியால் ஆரத்தி எடுக்கவேண்டும் எனக் கேட்கப் பட்டு இன்னும் ஒரு பெண்ணுடன் தட்டினில் வழக்கமான சாமான்களுடனும் கற்பூரச் சுடருடனும் ஆரத்தி எடுத்து மூன்றாம் முறை தட்டு மேலே எழும் போது, படார் என்று ஒருசத்தம் எம் எல்லோருக்கும் கேட்டது. உடனே எம் புதுச்சட்டைக்காரி தன் கமக்கட்டு மயிர்கள் தெரியத் திகைத்து நிற்க, மற்றப் பெண்ணின் சாதுர்யத்தினால் எப்படியோ ஆரத்தி முடிந்தது.
எமது மிஸிஸ் கொஞ்சம், சட்டையின் அளவில் கொஞ்சம் குறைத்துவிட்டார்! அதுதான் நடந்தது! (இது கொஞ்சம் இரகசியம் பாருங்கோ!).
மிஸிஸ் கொஞ்சத்தைப் பற்றி எல்லாவற்றையும் எழுதுவதானால் இந்தச் சிறுகதை போதாது. ஒரு நாவல் தேவைப்படும். எனவே இன்னும் சில அடையாள உதாரணங்களை மட்டும் விளக்கி விட்டு, மிச்சத்தை வாசகர்களின் கற்பனா சக்திக்குக் கொஞ்சம் கூட, விட்டுவிட உத்தேசிக்கிறேன். சரி தானே?
நாங்கள் இருவருமே சேர்ந்து, கூட்டங்கள், விழாக்கள், கலியாணங்கள், செத்த வீடுகள், எனும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பை ஏற்றுப் போவதானால், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னரே, போவதென முடிவை எடுத்தவுடன், என்ன போக்கு வரத்துச் சாதனத்தில் போவது, என்ன உடுப்புப் போடுவது, கையில் ஏதும் பரிசுகளோ, அத்துடன் எமக்கு வழிச் சாப்பாடோ கொண்டு போவதா, என்னும் விவரங்கள் எல்லாம் முடிவு செய்த பின், கடைசியாக, என்ன நேரம் வீட்டிலிருந்து விடுவது எனும் முக்கிய முடிவைப் பரிசீலிப்போம். காரில் போவதானால் நான்தான் ஓட்டுவது. பொதுசனப் பிரயாணச் சேவைகளிலும், மிஸிஸிலும் பார்க்க எனக்குக் கொஞ்சம் கூடிய, பிரயாண அனுபவங்கள் உண்டு.
எனவே, எல்லா விபரங்கள், எதிர்பார்க்கும் சுணக்கங்கள், முதலியவற்றைக் கவனமாகச் சிந்தித்து, நான் கணக்குப் பார்த்து, இன்ன நேரம் வீட்டிலிருந்து வெளிச் செல்வது உசிதம் எனச் சொல்வேன், மிஸிஸ் கொஞ்சம் அவர்களுக்கு.
ஆனால், எப்பொழுதும், மிஸிஸ் கொஞ்சம், நான் சொல்லும் நேரத்திலும் கொஞ்சம் முன்னதாகவே வெளிக்கிடுதல் நல்லது என்று சொல்வார்கள்.
இதை அனுபவத்தில் கண்டு அறிந்த பின், நானே பத்தோ பதினைந்தோ நிமிடங்கள் என்உண்மையான கணிப்பிலிருந்து கழித்துச் சொல்வேன், அவர்களுடன் மனதார ஒத்துழைத்து இணங்கும் நோக்கத்துடன்! அதன் பலாபலன்? நாயின் வாலை என்றுமே, எவராலும் நேராக்க முடியாது, புலியின் வரிகளை அதேபோல் அழிக்கவே முடியாது, என்னும் பழமொழிகளின் படிப்பினைகளை நான் திரும்பத்திரும்பப் படிப்பதே!
உங்களில் சிலர், நேரத்தை வேண்டுமென்றே இன்னும் பத்துப் பதினைந்து நிமிடம் நானாகவே கூட்டிச் சொன்னால் பிரச்சினை தீராதா என்று கேட்கலாம். இதற்கு விடை நான் முன்னரே கூறியிருக்கிறேன்: பச்சைத் தண்ணி! நேர்வழி!! சுவர்!!! ஞாபகந்தானே? சுழலும் சரித்திரத்தை நான் நிறுத்த முடியுமா?
சும்மா சொல்லப்படாது. இவர்கள், எப்போதும் ஒரே பக்கத்தில் கொஞ்சம் கூட்டுவதோ குறைப்பதோ இல்லை. அப்படியாக நான் குறை கூறுவதாகவும் தயவு செய்து நினைக்க வேண்டாம்! அவர்களின் வழக்கத்தைப் பற்றியே கொஞ்சம் உங்களிடம் கூறி 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்னும் பாணியில் எனக்குப் பல தசாப்தங்களாக இடுப்பில் கூசிக்கிண்டிச் சிரிப்பூட்டிய விடயங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து இன்புறுவதே என் கண்ணியமான நோக்கம். இனி அவர்களின் நாணயத்தின் மறுபுறத்தைச் சிறிதாவது பார்ப்போமா?
நான் எம் பிள்ளைகளுக்குப் பிறந்த தினங்களுக்கோ வேறு ஏதும் விசேட சந்தர்ப்பங்களிலோ பணம் கொடுத்தால், இன்னும் கொஞ்சம் கூட்ட வேணும் என்னும் கோரிக்கை! (இல்லை, கட்டளை. எல்லை, முடிவு இல்லாத திறந்த கட்டளை! எவ்வளவு கூட்டவேண்டும்? கொஞ்சம்!). சுனாமி நிவாரணத்துக்குப் பணம் அனுப்பும் போது, பாவங்கள். இன்னும்கொஞ்சம் கூட்டி அனுப்புங்கோவன்! நான் சாப்பிடும் போது: இன்னும்கொஞ்சம் கூட போட்டுச் சாப்பிடுங்கோ! எவரும் நாம் அறியாத கலியாணத் தம்பதிகளுக்குப் பரிசாகக் காசோலை எழுதினால்கூட: கொஞ்சம் கூட்டலாம், என்னும் புத்திமதி. எவ்வளவு கூட்டலாம்? ஏன், உங்களுக்குத் தெரியுந்தானே? ஒரு கொஞ்சம்! இன்னும் எவ்வளவு? இன்னுங் கொஞ்சந்தான்!! மருந்து போல என்றாவது மது குடிப்பதற்கு ஏதும் நான் வார்க்கும் போது மட்டும்: இன்னும் கொஞ்சம் குறையுங்கோ! உது கூடிப் போச்சுது! என்னும் ஒப்பாரிகள், கட்டளைகள், புத்திமதிகள், கெஞ்சல்கள், கொஞ்சல்கள்!!
இவ்வளவும் போதும். இப்போ உங்களுக்கு திருமதி கொஞ்சம், அதாவது மிஸிஸ் கொஞ்சத்தைப் பற்றி நான்தொடங்கிய கட்டத்திலும் பார்க்கக் கொஞ்சம் கூடத் தெரிந்திருக்கும். அவர்கள் எனக்கு என்ன வேணும் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாய் கூடக் கூட விளங்கியிருக்கும். அவர் யார் என்று நானோ பெயர் சொல்ல மாட்டேன். அது என் வழக்கமும் இல்லை. எனவே நீடூழி வாழ்க, மிஸிஸ் கொஞ்சம்! கொஞ்சமாவது குறைக, அவர்களின் கொஞ்சம் கொஞ்சமாக, கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சிக் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி மண்டை இடியுடனேயே என்னை மோட்சம் செல்ல வழி கோலக் கூடிய வழக்கம்! என்று கொஞ்சம் பிரார்த்தித்து நான் விடைபெறுகிறேன்☻
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.