நான் அந்த விடுதிக்கு வந்து சில மாதங்கள் இருக்கும்.இன்னும் இந்த முப்பது நாட்களை கடந்தால் ஒரு வருடம் ஆகிவிடும்.நான் புதுவருடத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தேன்.
என்னை எல்லோரும் பொதுவாக சித்தர் என்றே அழைப்பர்.ஆனால் என் உண்மை பெயர் குமார்.பெயரை சூட்டியவர்கள் இன்று இல்லை அதனால் என்னவோ சமூகம் எனக்கு சித்தன் என பெயரிட்டிருந்தது.
என்னை சித்தன் என அழைப்பதால் நான் ஒன்றும் கவலைபட்டதும் இல்லை.எழுத்தை தொழிலாக கொண்டவன் நான்.இதுவரை என்னுடைய கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. சிலவற்றின் சன்மானம் என்னை அடைந்தும் பலவற்றின் சன்மானம் இன்னும் வந்தடையாமலுமுள்ள நிலை. நான் அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை.நான் அதை எடிட்டர்கள் நல்வாழ்வுக்கு என தியாகம் செய்துவிடுவேன்.
அவ்வப்போது நான் பாடுவது உண்டு.எனக்கு வீணையும் வாசிக்க தெரியும்.இதனால் எனக்கு ஒரு சில வயதான ரசிகர்கள் உள்ளனர். நான் வெகுதூர பயணத்தில் இருக்கும்போது சாலையின் ஓரத்தில் பாட ஆரம்பித்துவிடுவேன் நின்றுகொண்டே.சில்லறைகள் பல கொட்டும்.நோட்டுகள் சில விழும்.இது நான் எழுதி சம்பாதித்ததைவிட அதிகமாக இருந்தது.
நானும் மனிதன் தானே என நிருபிக்க ஒரு பெண்ணை காதலித்தேன்.அவள் பெயர் மாதவி.அவளுக்கு இப்போது இரு ஆண் குழந்தைகள்.நிச்சயம் நான் ஒரு துரதிருஷ்டசாலி.என் காதலியின் கல்யாணம் என் மனதின் முன்பே நடந்தேறியது.அன்றிலிருந்து தெரிந்தது நான் மனிதன் அல்ல.நாம் சிரிப்பதும்,சந்தோஷப்படுவது வீண் என.அவளின் கல்யாண நாளில் இருந்தே நான் என் மகிழ்ச்சியுடன் விவகாரத்து பெற்றிருந்தேன்.
வரவர என் தொழிலும் வீழ்ச்சி தான்.அனைத்து பத்திரிக்கைகளிலும் இருந்து உங்கள் படைப்பு நிராகரிக்கப்படுகிறது என்றே பதில் வந்தது.வேறு வழியில்லாமல் சிற்றிதழ்களுக்கு அனுப்பி பார்த்தேன்.ஒன்றும் நடக்கவில்லை.அவர்கள் அனைவரும் பெயர் பிரபலமானதா என்று பார்த்தார்களே ஒழிய படைப்பை பார்க்கவில்லை.
தரமான இலக்கியம் பிரசுரமான காலம் போய் நவீனத்துவம் என்ற பெயரின் பெயரில் நகைச்சுவை இலக்கியமும்,தனிநபர் விமர்சனமும் பத்திரிக்கைகளை கோலோச்சின.எனக்கு அந்த மாதிரியெல்லாம் எழுத தெரியாது.எனக்கு தெரிந்தது எல்லாம் ஜெயகாந்தனும்,நகுலனும்,பிரமிளும்,மெளனியும்,சுந்தர ராமசாமியும் ,ஆத்மாநாமும் தான்.இதனால் என்னவோ என் படைப்புக்கள் நிராகரிக்கப்பட்டது என்றே எனக்கு பொருள்கொள்ள தோன்றியது.
இதனால் எனக்கு ஒன்றும் கவலை இல்லை ஆனால் என் எழுத்துக்களுக்கு வருத்தம் அதிகம் தான்.அதை இதுவரை என்னால் சமாதானப்படுத்தவே முடியவில்லை.நான் என் எழுத்துக்களுக்கு உயிர் உண்டு என்றே நம்புகிறேன்.உயிர் இல்லாமல் உணர்ச்சி சாத்தியமா என கேட்டுக்கொண்டதால் எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை .
இதனால் நான் அடிக்கடி அவற்றுடன் பேச ஆரம்பித்துவிடுவேன்.இப்போது வரை என் சொத்து ஒரு 300 வெள்ளை தாள்களும்,இருபதுக்கும் மேற்பட்ட கைப்பிரதி நாவல்களும்.அந்த காகிதங்களில் குடியிருக்கும் எழுத்துகள் பதிப்பகம் போவோமா போகமாட்டோமா என ஏங்குவதே எனக்கு பெரும் கவலை தருவதாக இருந்தது.இதனால் தான் நான் குடிக்க ஆரம்பித்தேன்,புகைபிடிக்க ஆரம்பித்தேன்.
என் விடுதியில் சில நாட்களாக பூனை ஒன்று சுற்றிகொண்டிருந்தது.அனைவரும் அதை அபசகுணமாகவே கருதினர் ஏனெனில் அது கறுப்பு நிறம் ஆனால் அப்படி ஒரு வசீகரம்.நான் மாமிசம் சாப்பிடும்போதெல்லாம் அந்த பூனைக்கு விருந்து தான்.அந்த பூனைக்கு மீன் குழம்பு என்றால் உயிர் போல.அது ஒரு பாவப்பட்ட மனிதன் போன்ற பாவனையில் அந்த மீன் முள்ளை சாப்பிடும் அதை காணும் போதெல்லாம் எனக்கு இது போன்று யாரும் இல்லை என தோன்றியது.
இதனால் என்னவோ எனக்கு அந்த பூனை மிகவும் பிடித்து போனது.அதற்கு நான் மாதவி என பெயரிட்டிருந்தேன்.அது பெண் பூனை ஆயிற்றே.பல நேரங்களில் அது காணாமல் போய்விடும்.எப்படி மாதவி மர்மமாக இருந்தாளோ அப்படியேதான் இந்த மாதவி என பெயரிடப்பட்ட பூனையும்.
காலப்போக்கில் மாதவி எனக்கு மிகவும் நெருக்கமாகி இருந்தது.என் அறையில் அதற்கும் உரிமை உண்டென முடிவெடுத்திருந்தேன்.நான் நள்ளிரவில் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பேன் மாதவி என் அருகில் அமர்ந்திருந்து உருளும்,புரளும்.செருப்பை நகர்த்தி விளையாடும்.பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.
இப்படி நான்,மாதவி,என்னிடம் பேசும் எழுத்துகள் சந்தோஷமாக சென்றுகொண்டிருந்தது எனக்கு அந்த கடிதம் வரும் வரை.என்னை ஒரு பிரபலமான இலக்கிய வட்டத்தின் சந்திப்பில் பங்கேற்று பேசுமாறு எழுதியிருந்தது.என்னை அவர்கள் ஒரு பிரபல எழுத்தாளரை பற்றி புகழ்ந்து பேச அழைத்திருந்தனர் என்பது சற்று தீவிரமாக அந்த கடிதத்தை படித்த போது புரிந்தது.நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்பதும் எனக்கு தெரியாது.பங்கேற்பது எளிய விஷயம் தான்.ஆனால் பேசுவது என்பது என்னை பொறுத்தவரை கடினமானதும்,கடினமாக்குவதும்.ஏனெனில் என்னை கட்டுபடுத்தும் பழக்கம் எனக்கு கிடைக்காது இது இருத்தலியத்தின் மீது இருந்த காதலால்.
நான் அப்போது சமீபத்தில் தான் ஒரு அரசியல் கட்சியால் எச்சரிக்கப்பட்டிருந்தேன் என் சமீபத்திய கட்டுரைக்காக.எனக்கு உள்ளுக்குள் பயம் இருள் போல பரவ ஆரம்பித்தது .நான் அந்த மேடையில் ஏதாவது பேசிவிட்டால் என்ன செய்ய? மேடையில் உள்ளவர்கள் எல்லோரும் பெரிய பெரிய எழுத்தாள பிரபலங்கள்.ஒருவேளை புறக்கணித்தால் எனக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரு பத்திரிக்கையையும் அவமானப்படுத்திய மாதிரி ஆகிவிடும் என தோன்றியது.மனதை தைரியமூட்டிக்கொண்டு அங்கு பேசுவது என முடிவெடுத்து கொண்டேன்.
அன்று இரவு வானம் இருளே மூச்சென கிடந்தது மற்றநாட்களை விட பயங்கரமாக.அவ்வளவாக நட்சத்திரங்களோ,நிலவோ இல்லை.கிறிஸ்துமஸ் காலம் என்பதாலே எல்லா வீடுகளிலும் அன்றைய நட்சத்திர பற்றாக்குறை தீர்க்கவே செயற்கை மின்சார நட்சத்திரங்கள் தொங்கியது.அன்றைய தினம் மாதவியை காலையில் இருந்தே காணவில்லை.இத்தனைக்கும் அன்று மாதவிக்கு பிடித்து மீன் குழம்பு.எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருந்தது.ஏதோ என் முன்னாள் காதலிக்கு அன்று தான் கல்யாணம் ஆன மாதிரி இருந்தது.உள்ளுக்குள் அழுதது வெளியில் சிரித்தது உள்ளிருந்த குரங்கு .
எப்படி ஆசைபட்டது கிடைக்காமல் ஆசைபடாதது கிடைக்குமோ அப்படி கிடைத்தது தான் இந்த வாழ்க்கை என எனக்கு நினைக்க தோன்றியது.நான் மெளனியின் சிறுகதையில் படித்திருக்கிறேன் இயற்கையின் இழந்ததை பெறும் முயற்சி நடந்தே தீரும் என்பது.எனக்கு அந்த இரவில் அப்படியெல்லாம் யோசிக்க தோன்றியது.எனக்கு அந்த ஐந்து நிமிடத்தில் என் வாழ்க்கையில் ஏற்பட்ட அத்தனை தோல்விகளும் நினைவுக்கு வந்தது.
என்னை பிடிக்காமல் அனாதை ஆசிரமத்தில் சேர்த்த பெற்றோர் ,படிக்க லாயிக்கில்லாதவன் என சொன்ன ஆசிரியர்,திருடன் என சொன்ன காவல்துறை அதிகாரி ,பைத்தியம் என சொன்ன பக்கத்து அறைக்காரன்,பாராட்டுக்கு தானே எழுதுற என சொன்ன எடிட்டர்,என்னை பிடிக்கவில்லை என சொன்ன மாதவி,என்னை விட்டு சென்ற என் நேசத்திற்குரிய பூனை என நினைவில் ஓடியது.இப்படி வாழ்வே துயரமாக மாறிவிட்டதே என என்னை அறியாமல் கண்ணீர் வந்தது .
வாசலில் வானம் பார்த்து நின்றுகொண்டிருந்ததை நிறுத்தி விட்டு அறைக்குள் போனேன்.அங்கு என் அலமாரியில் பிரமிளின் கவிதை புத்தகத்தின் அருகில் ஒரு குப்பி பிராந்தி இருந்தது.அதை எடுத்துக்கொண்டேன்.எங்கேயாவது போகவேண்டும் போல இருந்தது.என் தோல்விகளை நினைத்துகொண்டே இருந்தேன்.அந்த சம்பவங்கள் இப்போது நடந்தது போல இருந்தது.
நான் என் அறையை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து அறையில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டு வெளியே கிளம்பினேன்.எனக்கு அந்த நகரத்தின் சத்தமான மெளனமில்லா சூழல் பிடிக்கவே இல்லை.என் விடுதிக்கு பின்னால் ஒரு அடர்ந்த வனம் இருந்தது.என் மனம் என்னை அங்கே போ அங்கே போ என பிடித்துதள்ளியது.
அப்போது தான் நினைவுக்கு வந்தது இன்று தான் அந்த இலக்கிய வட்ட சந்திப்பு என.இது என்னை மேலும் கவலைப்பட செய்தது.குப்பியில் இருந்த பிராந்தியை முழுவதும் குடித்து அந்த காலி குப்பியை வீசினேன்.அது அநேகமாக நொறுங்கி போனது.மெதுவாக கால்களும்,கண்களும் ,மனதும் தடுமாற ஆரம்பித்திருந்தது அதை கூட என்னால் உணர முடிந்தது.எனக்கு எதையோ தேடுவது போல தோன்றியது.மறுபடியும் தள்ளாடி தள்ளாடி விடுதியை நோக்கி செல்ல ஆரம்பித்திருந்தேன்.கடைசி வரை மாதவியும் கிடைக்கவில்லை, மாதவியும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக்கு.அப்போது தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்னை விட்டால் என் எழுத்துக்களுக்கு யாருமில்லை என்பது.அதனால் நான் அப்போது தற்கொலை முடிவை எடுக்க வில்லை.
அப்படி தள்ளாடிக்கொண்டே விடுதி வரை வந்தாயிற்று.உள்ளே நுழைந்தேன்.ஒரளவு அமைதியாக இருந்தது.நான் என் பக்கத்து அறையை தட்டினேன் உள்ளே என் பிரியத்திற்குரிய பூனை அவனுடைய செருப்பை உருட்டி விளையாடிகொண்டிருந்தது.ஆனால் உள்ளே இருந்து மீன் குழம்பு வாடை வந்து கொண்டிருந்தது.நான் சாவியை வாங்கி கொண்டு என் அறையை துறந்தேன்.அந்த விநாடியில் காலச்சாவி என்னுள் எதையோ திறந்து விட்டது போன்ற உணர்வு.அப்போது கூட என் தோல்விகள் பெரிதாக படவில்லை.
எனக்கு அப்போது ஒரே ஒரு சிந்தனை தான். ஒரு மீன் முள்ளுக்காக என்னை விட்டுப்போன பூனையும்,வெறும் பிரபலத்துவத்துக்காக தரமிழந்து விலை போன இலக்கியத்தை பற்றி தான்.பின்னதை விட முன்னதே எப்போதுமே வருத்தம் தருகிறது எப்போதும்.இதிலும் வாழ்க்கையிலும்.காலத்தின் உதட்டை இழுத்து வைத்து முத்தமிட்டால் உணர்வு பெருகி காலம் நகராமல் நின்றுவிடுமா என்ன? காலம் ஓடுகிறது நானும் கூட ஓடத் தயாராகிவிட்டேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.