இன்று சடுதியாக என் சுண்டெலிக்கு வலிப்பு! நேற்று மட்டும் நன்றாய்த் தான் இருந்தது. புதுமெருகூட்டப்பட்ட என் பழையகவிதைகளில் ஐந்தைக் கணினியில் தட்டெழுதிப் பிரசுரத்துக்கு அனுப்பிவிட்டே படுக்கச் சென்றேன். இன்று காலையில் நான் வழக்கமாக மேயும் இணையத் தளங்கள் மூன்றையும் தேடிப் பிடித்து ஈழத் தமிழர் உரிமைப்போரின் கடைசியான திருப்பு முனைகள் என்னவென்று அறிந்த பின்னர் என் எழுத்து வேலையை ஆரம்பிப்போம் என எண்ணிக் கணினியின் தொடங்கு குமிழ்களை அழுத்தினேன். கணினியும் விழித்து என்னைப் பார்த்துச் சிரித்துக் காலை வணக்கம் சொல்லி இன்முகத்துடன் வரவேற்றது.
ஒரு வினாடிகூட விரயம் செய்ய விரும்பாது, கணினியின் உள்ளே செல்ல எண்ணி, காத்திருந்த விநாயகரின் வாகனத்தை அதன் புறமுதுகின் முன்பக்க இடது முனையில் முதல்விரலால் அழுத்தி, முன்னே தள்ளினேன். சுண்டெலி அசைந்தது. ஆனால் கணினி, சிரித்த முகத்துடன் உறைந்தே காணப்பட்டது. சுண்டெலியைத் தலைகீழாகத் தூக்கி அதன் தொப்புளிலே எரிந்து சிகப்புநிற வெளிச்சம் வீசும் வட்டம் அணைந்து இருந்ததைக் கவனித்தேன். என் சுண்டெலி லேஸர்க் கதிர்ச் சத்திரசிகிச்சை பெற்றால்தான் இனி விழித்தெழுந்து இயங்கக் கூடும் என உணர்ந்தேன். அது என் சில தினங்களையும் பணப் பவுண்டுகளையும் ஏப்பம் விடக்கூடும் எனவும் சிந்தித்தேன். என் சட்டைப் பைக்குள் இருந்த உள்ளங்கைத் தொலைபேசியின் சிறு பொத்தான்களை மெதுவாக மாறிமாறி அழுத்தி ஹரோவிலிருந்த பீசீ-உலகக் கடையுடன் பேசினேன்.
என் சுண்டெலியை நான் குப்பைக்குள் வீசிவிட்டு வந்தால், அதை உயிர்ப்பிக்க வேண்டிய அதே பதினைந்து பவுண்டுக்கு ஒரு புதிய சுண்டெலியை விற்பதாக வலை விரித்தனர். நான் சிந்தித்தேன்:
இந்தச் சிணுங்கு மூஞ்சிச் சுண்டெலிக்குப் பதினைந்து பவுண்டுகள் ஏன்? இது இன்றைய ரகத்து லேஸர்ச் சுண்டெலி என்ற படியாலேயே! இது என் மேசைக் கணினியுடன் சேர்த்து வியாபாரப் பேரத்தில் கிடைத்தது.
ஏன், அன்றைய பாணியான குண்டோட்டச் சுண்டெலி ஒன்று என் கணினியை ஓட்டாதா? என விசாரித்து அது தாராளமாக ஓட்டும் என அறிந்தேன். அத்துடன் ஹரோவின் பவுண்டுக் கடையில், அதாவது ஒரு பவுண்டுக்கு, அப்படியான சுண்டெலிகள் விற்பனைக்கு உண்டெனவும் சொன்னார்கள். மனம் ஓரளவு ஆறியது. ஈழத்தில் அடைமழை பெய்கின்ற படியால் அங்கிருந்து ஒரு காத்திரமான செய்தியும் சில நாட்களுக்கு வரப் போவதில்லை. வந்தாலும் நான் இங்கிருந்து ஆக்கமாக ஒன்றுமே செய்ய முடியாது. இருந்து துக்கித்து முனகுவதே யதார்த்தம். எனவே ஒரு நாள் ஆறுதல் எடுத்து எனது பிரத்தியேக வீட்டு நூல்நிலையத்தில் உள்ள இன்றைய நிலையின் அறிவுத் தேட்டங்களை மீளாராய முடிவு செய்தேன்.
முதலில், கணினிகள் அரசோச்சும் முன்னறை. ஈலாப் (ELAB) எனும் எம் இலக்கியவட்டம் வழக்கமாக மாதாமாதம் கூடிவரும் முன்னறை. கணினி-மேசைக்கு முன் காட்சியளிக்கும் திறந்த நாலடுக்கு அலுமாரிகள் நான்கு. மேற்தளத்திலும், மேலிருந்து இரண்டாம், மூன்றாம் தட்டுகளிலும் என் அன்புத் துணைவியாரால் கவனமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆங்கில, தமிழ் வீடியோப் படங்கள்! இன்றோ, வில்லை முறையான டீவீடீ இறுவெட்டுகளே சாதாரணமான பாவனையில் வந்துள்ளன. எனவே, காந்த-நாடா முறையில் அமைந்த 'அன்றைய நாகரீகச்' சாதனங்களாகிய எமது வீடியோப் படங்கள் இன்று அனேகமாக உறங்குகின்றன.
எனினும் என் லேஸர் சுண்டெலியை வீசுவது போல், இவைகளையும் வீசி விட முடியுமா? இவற்றில் சில, எத்தனையோ தினங்கள் பற்பல மணிக் கணக்கில் விழித்திருந்து, பல நாட்கள் ஆராய்ச்சி செய்து தெரிந்தெடுத்து, தொலைக் காட்சியிலிருந்து பதிவு செய்த உலகப் பிரசித்தி பெற்ற சினிமாச் சாதனைப் படங்களின் பிரதிகள் அல்லவா? எனக்கும் என் இனியாளுக்கும் எத்தனையோ தினங்கள், நாம் சென்று பார்க்காத உலகின் நாடுகளைப் பற்றி அவற்றின் மக்கள், கலாச்சாரங்கள், வரலாறு, இயற்கை வளங்கள் முதலிய அறிவுகளை ஊட்டிய களஞ்சியங்கள் அல்லவா? இவை எல்லாம் இன்றைய டீவீடீக்களின் உருவில் வந்ததாக அறியவில்லையே! அப்படி வரும் எனவும் கேள்விப்படவில்லையே! வந்தாலும் அவற்றை வாங்குவதற்குப் பணம்? எனவே இவைகளை எல்லாம், தொடர்ந்து காப்பாற்றவே வேண்டும்!!
இப்படியாக முடிவெடுத்து விட்டு, எழுந்து நின்று என் வலப் பக்கம் பார்த்தேன். ஒன்றின்மேல் ஒன்றாக இரு புத்தக நிலைப்-பெட்டிகள். அறையின் உட்கூரை மட்டும், எட்டுத் தட்டுகள். ஓர் எழுத்தாளனுக்கு வேண்டிய கடுதாசித் தாள், பேனாக்கள், கத்தரிகள், பிசின் போத்தல், தாளில் துவாரம் செய்யும் கருவி, விலாசக் கோவைகள், கடித உறைகள், முத்திரைகள், குண்டூசி, இப்படியாகப் பல பொருட்கள், குறித்த இடங்களில் காணப்பட்டன. அத்துடன், பல ஆங்கில அகராதிகளும், வெவ்வேறு கலைக் களஞ்சியங்களும் இருந்தன. ஆனால் என் கண்களோ, மனமோ சாதாரணங்களேயான அவற்றை மதிக்கும் நிலையிலில்லை.
என்னைப் பெருமூச்சு விட வைத்தவை என்னவெனில், மேல்த் தட்டுகளில் கம்பீரமாக வீற்றிருந்த, இரு துறைகளின் நூல்கள். இவ் இரண்டு கூட்டமுமே, தடித்து, அகல-உயரமாக, மிருகத் தோலாலான வெளியட்டைகளுடன், பொன் நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு, தைத்து அமைக்கப்பட்ட ஆங்கில நூல்கள்.
மேல் தட்டில், பல்லாண்டுகளின் இலக்கிய மதிப்பீட்டின் பின் ஒரு பிரபல நூலாக்க நிறுவனத்தினால் வெளியிடப் பட்ட, உலகின் வெவ்வேறு பகுதிகளில் எழுதப்பட்ட மிகச் சிறந்த, இன்றைய சிறுகதைத் தொகுதிகள். இவை, என் தெருப்பக்க அலுமாரியில் சொகுசாக உறங்கும், பழைய உலக வழக்கின் அன்றைய 1000 சிறுகதைக் களஞ்சியம் என்ற பத்து நூல்களின் பின்னோடித் தம்பிமார் எனலாம். கீழ்த்தட்டிலே, நோபல் பரிசுத் திட்டம் தொடங்கி நடக்கும் ஒரு நூற்றாண்டுக்குள் இலக்கியப் பரிசுகள் பெற்ற முக்கியவர்களின் பிரதான ஆக்கங்கள் அடங்கிய புத்தகப் பொக்கிசங்கள். இவற்றை எல்லாம் பற்பல கனவுகளுடன், எவ்வளவோ சிரமப்பட்டுத் தேடிப் பணச் செலவும் செய்து, ஆண்டுகளாகச் சேர்த்து வைத்தும், நான்என்றும் முழுமையாகப் படிக்க வில்லையே என்னும் துக்கம் மேலிட, பத்து நிமிடங்கள் இளைப்பாறி விட்டு, அதே சுவரின் வலப்பக்கம் நகர்ந்தேன்.
அங்கு நான் காண்பது என்ன? மேல் தட்டிலே, புதினப் பத்திரிகைகள் போன்ற, அன்றன்று வாசித்து விட்டு எறியும் பிரசுர ஆக்கங்களுள், எனக்கு ஆர்வமுள்ள கருப் பொருள்களிலே வெட்டி எடுத்துப் பிரித்துச் சேமித்த உபயோகமான கட்டுரைகள், கத்தரிப்புகளுடன் ஒரே வரிசையிலே, குத்தி-நிறுத்தி அடுக்கப் பட்டிருந்த 24 பெட்டிகள் பூரண கர்ப்பமுற்றுத் தெரிந்தன. கீழ்த்தட்டில், ஆங்கில 'வாசகர் மஞ்சரி' மாசிகையின் பழைய பிரதிகள், 50 ஆண்டுகளின் சேமிப்பாக, வருடம்-மாதம் வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டு உறங்கின.
இவ்விரண்டு தட்டுகளுக்கும் இடையே உள்ள ஐந்து தட்டுகளில், பிரபல ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு நூல்களும், தனிக் கவிஞர்களின் கவிக் கோவை நூல்களும், உலகின் பிரசித்தி பெற்ற நாவல்களின் பிரதிகளும் ஆசிரியரின் பெயர்களின் எழுத்து வரிசையில் நிம்மதியாகக் குறட்டை விட்டன.
அவற்றில் படிந்திருந்த தூசியையாவது, நேரம் கிடைத்தவுடன் தட்டித் துடைக்க வேண்டும் என மனதில் பதித்துக் கொண்டு, 90-பாகை திரும்பி, அடுத்த தட்டுகளைப் பரிசீலித்தேன்.
இவற்றில் இருப்பவை, முக்கியமாக, எமது எழுதும் தொழிலைப் பற்றிய நூல்களே. இன்றைய எழுத்தாளராகப் பயிற்சி பெற விரும்பும் இளையோருக்கும் புதியோருக்கும் பலன்தரும் முறையில், தம் அனுபவத்தையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக, தாராளமனம் படைத்த, முதிர்ச்சியடைந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. நாவலிலக்கியம், நாடகங்கள், சிறுகதைகள், கவிதைப் படைப்புகளாகிய எல்லாத் துறைகளிலும் இவை பரந்து அடங்கியன. இவற்றுடன், இந்த அடுக்குப் பலகைகளில், கேலிச் சித்திரங்கள் உட்பட, வெவ்வேறு ரகப் படக் கலையாக்க முறைகள் பற்றிய நூல்களும் உண்டு. பல அளவுகளிலிருந்த இந்நூல்கள் ஒழுங்கீனமாகக் காணப் பட்டன.
இவற்றையும் சீர்ப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன், அறையின் நான்காவது பக்கத்தின், பதிந்த அலுமாரியைத் திறந்து உற்று நோக்கினேன். இப்போ வேறுவகை அனுபவங்கள் காத்திருந்தன.
அதன் சறுக்குப்பலகை மூடியைத் தள்ளியவுடன் உள்ளேயிருந்த ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு விட்டத் தட்டுகள், அதாவது சீடீக்களும் டீவீடிக்களும், தலை நீட்டின. அத்துடன் எனது நிழற்படக் கமெராக் கருவிகளும், கணினிக்கு உதவக் கூடிய, முன்னர் பாவித்து, எறிய விருப்பமின்றிக் கருமிக் காத்து வைத்திருக்கும் பலவித உபகரணங்களும், மின்சார, மின்னணு உதிரிப் பாகங்களும், சீரான சிறு அடுக்குகளில் காட்சியளித்தன. வில்லைகளை, தமிழ், ஆங்கிலப் படங்கள், பாட்டுக்கள், என இனங்கண்டு வெவ்வேறு ஆன கட்டுக் கட்டுகளாக, கூட்டம் கூட்டமாக என் தருமபத்தினியார் (அவாள் நீடூழி வாழ்க!) அடுக்கி இருந்தார். வீடியோக்களை, என்றாவது, எமக்கு ஒருநாளில் 24-அல்ல, 48-மணிகள் என வரம் கிடைக்கும் காலம் வில்லைகளாக்கி, இங்கேதான் வைக்க வேண்டுமென எண்ணிக் கொண்டு அடுத்த அறைக்கு அசைந்து சென்றேன்.
அது எனது படுக்கையறை. நான் இரவிரவாக வாசித்த களைப்பில் கண்கள் தாமாகவே மூடும்போது தனித்து உறங்கும் அறை. எனினும் அங்கும் ஆறுசோடி நாற்தட்டு நிலைப் பெட்டிகளுள் நெருக்கமாகத் திணித்து நிற்கும் நூலழகிகள், நாயகரைத் தேடும் காதலிகள் போன்று தவம் செய்கின்றன. அண்மையில் எனது நவீன ஆங்கில இரணைக் குறள்களைச் சமைப்பதற்கு முன்னறைக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கீழ்த்தட்டு ஒன்றில் திரிசங்கின் சுவர்க்கத்தில் இருக்கும் என் திருக்குறள் இலக்கியத் திரவியங்கள் தவிர, எனது தமிழ் தேட்டங்களெல்லாம் இவ்வறையிலேயே வசித்து என் இன்ப இரவுகளைப் பகிர்கின்றன.
இவ்வழகிகளில் மூதாட்டிகள், கிழவிகள், நடுத்தர மங்கையர், குமர்களுடன் அழகிகளாக வரவிரும்பித் தாறுமாறான சில்லறைக் கடை நகைகளுடனும், பளிச்சிடும் பலவகையான புடவைகள், சட்டைகளை அரைகுறையாக அணிந்து கொண்டும் ஆடம்பரிக்கும் மயக்குக் கன்னிகைகளும் உண்டு. எனினும் தமிழ் என்றால் தள்ளி வைக்க ஏதோ ஒரு தயக்கம்! (அது என் நோய்களில் ஒன்றா?)
என் படுக்கைக்கு எதிர் நேரேயுள்ள மேற்தட்டிலேயே நான் தினமும் பல தடவை வணங்கி வரும் கடவுளர்கள் வீற்றிருக்கின்றனர். நான் விரும்பாத பாம்பு அவர் கழுத்திலிருந்து கண்சிமிட்டி நாக்கைநீட்ட, சிவன், நட்டுக்குநடுவில் நாயகனாக! அவரைச் சுற்றிப் புத்தர், இயேசு, வள்ளுவர், இஸ்லாமின் ஒளியுருவமாக ஒரு பிறையும் நட்சத்திரமும், ஒரு பித்தளை மணி, மெழுகுதிரிதாங்கி, முதலியவையே எனக்கு இன்று வாழ்வில் பலம் அளிக்கும் வழிகாட்டிகள்.
இவை இந்த இடத்தில் இருப்பது ஏன்? ஏனெனில் இவற்றின் கீழ்த் தட்டுகளிலேயே சமயம்சார்ந்த என் நூல்ச் சேமிப்புகள் எல்லாம் இடம் பெறுகின்றன.
சைவம், புத்தம், இந்து ஆசாரம், கிறிஸ்துவங்கள், இஸ்லாம், அகமதியம், சாய்பாபா, மகரிஷி, காந்தி, போன்ற துறவிகளின் சிந்தனைகள் எல்லாம் இத் தட்டுகளிலிருந்து என்னை அழைத்தன. மேற்கூறிய கூட்டத்துக்கு வலது பக்கத்தில் உள்ள தட்டுகளில், எனது இடைக் காலத்து அன்றைய வாழ் நிலைக்குப் பலமளித்த திட-பாதங்களான எந்திரிகத் தொழில் நுட்பத்துக்கும் முகாமைத்துறைப் பரிபாலனத்து இயலுக்கும் ஆதாரமாய் இருந்தவையில், நான் பரிசளித்தோ, தாமாக மறைந்தோ போனவையை விட, மீதியானவையில் ஒரு சில ஞாபகார்த்த நூல்களும், என் ஆங்கிலக் கவிதைகள் தனித் தனியாக வெளிவந்த உலகக் கவிதைத் தொகுப்பு நூல்களும், என்னால் எழுதப்பட்ட மற்றைய தமிழ், ஆங்கில நூல்களும், ஈழத்தின் வரலாறும், அரசியலும், சம்பந்தமான ஆதார ஏடுகளும், பலமுறை நுகர்ந்த அடையாளங்களுடன் புன்னகித்தன.
அவ்வறையின் யன்னலுக்குக் கிட்டவுள்ள ஆறு அலுமாரிகளில், மேற் கூறியுள்ள என் தமிழிலக்கிய நூல்களுடன் கூட்டுக் குடித்தனம் நடத்துவது, ஆங்கில நாடகங்களும் முற்கால ஆங்கிலக் கவிகளில் மிகவும் புகழ்பெற்ற, நான் விரும்பிய, இருபது வரை கவியரசர்களின் முதற் பதிப்புத் தொகுப்பு நூல்களுமே.
அவற்றுடன், தமிழ் அரசியல், இலக்கிய மாசிகைகள் போன்ற பல பத்திரிகைகளின் ஆண்டு ரீதியான கட்டுக்களும், தனிமனிதர் தம் வாழ்வினில் முன்வர உதவக் கூடிய, நான் பின்பற்றி நலன்கண்ட, சுய-திருத்தத் துறை நூல்களும் அத் தட்டுகளில் இருந்தன.
இவற்றைப் பார்வையிட்ட பின், அந்த அறையில் உள்ள ஒரேயொரு மேசைக்கு எனது கண்கள் மேவின. இம்மேசை என் கட்டிலுக்கு அருகாமையில், படுத்திருந்து கொண்டே சாமான்களை வைத்தெடுக்க வசதியாக நிலைக்கப் பட்டுள்ளது. தலையணைக்குக் கிட்ட அமுக்குப் பொத்தானுடன் ஒரு மின்சார விளக்கு. நித்திரை வருமட்டும் வாசித்து, எழுந்து சிரமப்படாமல் அப்படியே அணைத்துவிட்டுத் தூங்குவதற்கு வசதியாக அமைந்துள்ளது. அத்துடன் அம் மேசையில், ஒரு பழைய கணினியும், ஒரு புதிய மடி-ரகக் கணினியும், ஒரு பழைய கைத்தட்டெழுத்து யந்திரமும், அண்மைத் தினங்களில் வாசித்து முடிக்காத ஓரிரண்டு நூல்களும் காணப்பட்டன. படுக்கையோ என்னை வா!, வா! என அழைத்தது.
இன்றைய காலத்தில் ஒவ்வொரு நாளும் அரைவாசி நேரம் இந்தத் துணைவியுடனும் (கழிப்பது அல்ல, உண்மையில்...) களிப்பது வழக்கமாகி விட்டதே! அந்தச் சொகுசுத் துணையையும் உதாசீனப் படுத்த முடியாது அல்லவா? எனவே அப்படியே சாய்ந்து, கண்களை மூடி இளைப்பாறினேன். என் மனத் திரையில், பழைய, அன்றைய, அறுபது வருடக் காட்சிகள் கடுகெதியில் ஓடத் தொடங்கின. அவற்றைப் பார்த்து மகிழவோ மனம் வருந்தி ஏங்குவதற்கோ ஆயத்தமானேன். முதற் காட்சியிலே நான் ஈழத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன். பன்னிரண்டு வயசு. கட்டைக் களிசான், புத்தகக் கட்டு, முதலியனவுடன்.
நான் பெற்றோரை இழந்து தஞ்சம் புகுந்திருந்த என் தாய்மாமனார் வீட்டிலிருந்து, என் கல்லூரி மூன்றே கால் மைல்க்கட்டை தூரம். வெறுங்காலுடன் நடந்தே தான் போக வேண்டிய நிலை. அண்ணனார், மாணவர் கூட்டுறவுக் கடைக் கணக்குகளை ஓர் ஆசிரியரிடம் பாரம் கொடுத்த பின்னரே வரமுடியும். எனவே நான், மாணவர் சிலருடன் சங்கத்தானையின் யாழ்-கண்டி றோட்டால் நடந்து, சாவகச்சேரியை அடைந்து, வழக்கு மன்றத்துக்கு முன் இருந்த சரஸ்வதி புத்தகக் கடையில் பல நிமிடங்கள் கழித்த பின் அண்ணருடன் என் பயணத்தை முடிப்பேன். கடைச் சொந்தக்காரர், தாடிக்காரக் கனகசபை என்பவர்.
தன் காதலில் தோற்ற நாள் முதலே தாடி வளர்த்தார் என்பார்கள், பையன்கள். நான் ஒருநாள் அதைப்பற்றிக் கேட்டேன். அதனால் அன்று அவரின் கோபத்தின் சுவாலையால் சுடுபட்டதை இன்றும் என்னால் மறக்க முடியாது. ஆனால் அதன்பின்னர் நாம் நண்பர்கள். அவர், பல மாசிகைகளை இரவல் தருவார்.
நான், வீட்டில் அன்றன்று இரவில் வாசித்துவிட்டு அடுத்த நாள் காலை கல்லூரிக்குப் போகும் வழியில் தவறாமல் அவற்றைப் புதுச் சஞ்சிகைகளென விற்பதற்காக, திரும்பக் கொடுத்து விட்டே போக வேண்டும். தென் இந்தியத் தமிழ்நாட்டிலிருந்து அன்றும் இறக்குமதி செய்யப்பட்ட கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், பேசும்படம் எல்லாம் நான் அந்நாளில் கரைத்துக் குடித்தவை.
அவை, எனக்கு எழுதுவதில் ஒரு நெருப்பாசையை ஏற்றி விட்டன. அன்று, இலங்கையில் வெளிவந்த சஞ்சிகைகள் மிகக் குறைவு. வீரகேசரி ஞாயிறு இதழ், ஒரு விதிவிலக்கு. எனவே, என் சிறுவயதின் நாயகர்கள், பெரும்பாலும் இந்தியரே:- காந்தி, நேரு, ராஜாஜி, பாரதி, கல்கி, நேதாஜி, சுத்தானந்தர், விவேகானந்தர் முதலியோரே! ஈழத்தில், என் தந்தையாரும், தமிழாசிரியர் இணுவிலின் வித்துவான் சபா-ஆனந்தரும், கணக்கு மாஸ்டர் பாலசுப்பிரமணியமுமே என் நாயகர்கள்.
தந்தையாரோ, இந்தியாவில் இருந்து இராமாயணம் இரண்டு கட்டு, மகாபாரதம் நாலு கட்டு, விக்கரமாதித்தன் கதை, நல்லதங்காள் கதை போன்ற நூல்களை வாங்கி வந்து பெரியதொரு பெட்டகத்துள் அடுக்கி வைத்து, அதன் நூதனப் பூட்டை எப்படித் திறப்பது என்றும் காட்டித் தந்தார். தான் அதிகம் கற்கா விடினும், தனது உலகறிவுடன், தன் பையன்களுக்குக் கல்வியில் விருப்பையும், வாசிப்பதில் ஆர்வத்தையும், மேடைப் பேச்சு, எழுத்துக் கலையின் மகிமைகள், எல்லாம் சொல்லித் தந்து ஊக்கினார்.
இதுவே, பிஞ்சில் விளைந்த ஒரு புத்தகப் பூச்சியாகி, பூச்சியாகவே நான் தொடர்ந்து வாழ்வதன் மர்மம்.
அன்று நான் விரும்பிப் படித்த சஞ்சிகைகளில் பேசும்படமும் ஒன்று. நான் முதன்முதல் பிரசுரிக்கப் பட்ட பத்திரிகை, பேசும்படமே. அதன் பின்னர் வீரகேசரி. பேசும்படத்துக்கு ஒரு விகடத் துணுக்கையே அனுப்பினேன். அடுத்த மாதம் அதைப் பிரசுரித்தது மட்டுமல்ல, அதன் பரந்த-மன முன்னோடி ஆசிரியர், இரண்டு ரூபாவுக்கு ஒரு போஸ்டல் ஓடரையும் அனுப்பி இருந்தார்! பதினான்கு வயதில், பணம்உழைத்த எழுத்தாளனானேன்! என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்!!
அதற்கு முதல், 30-01-1948 அன்று மகாத்மா காந்தி சுடப்பட்ட செய்தியை, தில்லைநாயகம் எனும் என் அண்ணன் தன் கையாலேயே உருவாக்கிய சிறு 'படிகைக்கல்' வானொலியில் கேட்டு, அழுதுகொண்டே, தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒவ்வொரு கவிதைகள் எழுதியதும் நினைவில் வந்தது. அதேஆண்டு என் 14-ம் வயதில் நூல்நிலையங்களில் பெற்ற அறிவுடன் எழுதி, வீரகேசரியில் வெளியிடப் பட்ட, வான்வெளி வாயுமண்டலங்கள் பற்றிய கட்டுரையே, என் பிரசுரிக்கப்பட்ட முதல் முழுநீளக்கட்டுரை. பின்னர் அதே கருவில் 2-3 வெளிவந்தன.
அதன்பின், கொழும்பு பல்கலைக் கழகத்துக்குப் பொறியியல் படிக்கத் தெரிவு செய்யப் பட்டது, குடிசார் பொறியியல் கற்றுச் சேவையாற்றிப் பட்டயம் பெற்றது, இங்கிலாந்தில் மேற்படிப்பும் ஆராய்ச்சியும் செய்து மேலும் பல பட்டங்களையும் பட்டயங்களையும் பெற்றது, மணம் முடித்து நான்கு பிள்ளைகளைப் பெற்றது, பேராசிரியராக இளைப்பாறி, பல்லாண்டுகளின் பின், திரும்பவும் எழுத்தில் காலடி வைத்தது, எல்லாம் என் மனதிலே படங்களாக ஓடி ஓடி என்னைக் களைக்கச் செய்து, எழுதி எழுதி இந்த மட்டில் என்னதான் சாதித்து விட்டேன் என்ற விரக்திக் கேள்வியுடன் சோர்ந்து உறங்கவே வைத்து விட்டன.
"என்ன, இண்டைக்கு ஆறுதலே எடுக்கிறியள்? எல்லாம் சுத்திச் சுத்திப் பாத்தியள். கண்டியளே புத்தகங்களாலை வீட்டுக்குள்ளை வந்து சேருற தூசியும் ஊத்தையும்! இருந்திட்டு ஒரு நாள் எண்டாலும், இதுகளைத் தட்டித் துடைச்சு, அடுக்கி வைக்க வேண்டாமே? விடிஞ்சால் பொழுது பட்டால் எழுத்து, எழுத்து, எழுத்து எண்டு மாரடிக்கிறியள். இதாலை கடைசியிலை என்ன பலன் வரப் போகுது? யோசியுங்கோ! அதுசரி, உங்கடை சுண்டெலி செத்தே விட்டுதோ?"
இப்படியான கூக்குரல் அரிச்சனைக்குப் பின் தன்மானமுள்ள கணவர்கள் எவரும் படுத்திருக்க முடியுமா? எழுந்து ஓடினேன், நான், ஹரோவின் பவுண்டுக் கடையை நோக்கி, ஒரு குண்டோட்டச் சுண்டெலி வாங்கி வருவதற்கு!☻
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.