தில்லை,மதியத்திற்கு சாப்பிட சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் அடைட்ட உணவுப் பொட்டலம்,சப்வேயில் வாசிக்கிறதுக்காக இரவலாக எடுத்த நூலகப் புத்தகம், கொஞ்சம் சில்லறை தாள்களுடன் உள்ள இடுப்பிலே கட்டிக் கொள்கிற தோல்ப்பை... எல்லாத்தையும் உள்ளடக்கிய துணிப்பையை கழுத்தில் மாட்டிக் கொண்டு,கையிலே கையுறை,தலையிலே குளிரைத் தாங்கும் தொப்பி,கழுத்தைச் சுற்றிய கறுப்பு நிற மப்ளர் ...சகிதம் விறு விறு என இருள் பிரியாத அந்த காலை நேரம் நடந்து கொண்டிருந்தான். அந்த துணிப் பையை சப்வேயில் அல்லது வேறெங்கேயும் தவற விட்டால் 'பெ.. பெ'என விழிக்கக் கூடாது! என்பதற்காக 5 டொலர் தாளை எடுத்து கால்ச்சட்டையின் பிற்பொக்கற்றிலும் வைத்துக் கொள்கிறவன்.வேலையால் வருகிற போது வீதியில் கோப்பிக் கப்பை நீட்டிக் கொண்டு அங்காங்கே இருக்கிறவர்களில் இப்படி தவற விட்டவர்கள் சிலரும் இருக்கலாம் என்பது அவன் நினைப்பு .
“நாள், மாசம் போறதே தெரியிதில்லை.ஆனால், டாக்சி ஓடின பிறகு உடம்பு உலைச்சலாக இருக்கிறதடா” ராதாவிடம் சொன்ன போது,ஊரிலே தோழனாக இருந்தவன். இங்கேயும் தோழன் தான்."டேய்,நான் சம்மரிலே சைக்கிளிலே வாரது ஏன்?வேலை ஒன்றும் உடற்பயிற்சி கிடையாது, அதற்கென்று புறிம்பா செய்யவேண்டும்.ஊரிலே நெடுக சைக்கிளிலே திரியிறதிலே உடற் பயிற்சி நடக்கிறதே ...தெரியிறதில்லை. இங்கே பணத்தை குறியாய் வைத்து வேலையை செய்கிறோம். ‘ பயிற்சியே’ வலியை பலன்ஸ் பண்ணுறது. இது பலருக்கு தெரியாதபடியால் கொஞ்ச வயசிலே செத்துப் போறாங்கள் .கிடைக்கிற நேரத்தில் ஓடு அல்லது நட, நல்லதடா! "என்கிறான்.
கையிலே கிடக்கிற பையை என்ன செய்வது? அது தான் எடுத்து கழுத்திலே மாட்டியிருக்கிறான்.நகரக்காவலரின் கார் ஒன்று வீதியில் அவனை கடக்கையிலே, ஒரு மாதிரியாப் பார்த்துக் கொண்டு போனது. இவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம் தான்.கறுப்பு வெள்ளை தான் தோலிலே இருக்கிறதே! மெல்லிய குளிர்காற்று வீச கைகளை ஸ்சுவிங் பண்ணி நடக்க நல்லாய் தான் இருக்கிறது. அவனும் ராஜகுமாரன் தான்.நகரமே இன்னும் விடியவில்லை.வீதி ஒரிருவரைத்தவிர அமைதியாய் கிடந்தது.சப்வே கிடங்குள் படிகளில் இறங்கினான்.சப்வே என்கிற சிறிய ரயில் வர 3 நிமிசம் ஆகும் என மேலே தொங்கிற தொலக்காட்சிப் பெட்டியில் காட்டியது.அதிலே வந்து கொண்டிருந்த சிறிய சதுரத்தில் பேசுற செய்தியையும்,கீழே எழுத்தில் போற செய்தியையும் கவனித்தான்."ரஸ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது..."என்று போய்க் கொண்டிருந்தது. சிறிய திருப்பம்!இனி சிரியாப் போரில் உண்மைச் செய்திகள் கொஞ்சம் வெளியே வரலாம்.சிறிலங்கா துயரம் போய்,இப்ப சிரியாத் துயரம்.இந்த நாடு பெருந்தன்மையுடன் பெருமளவு சிரியா அகதிகளை ஏற்கிறது. எங்களையும் இப்படித் தான் ஏற்றது.
முந்திய அரசில் இந்த நாடும் உள்ளடக்கலாக ...நேட்டோ நாடுகள் அனைத்துமே,ஜேர்மனியைத் தவிர அகதிகளை ஏற்காததிற்குக் காரணம்,அகதிகள் திரையில் வந்து,தமது துயரங்களைச் சொல்வார்கள்.போரின் கோரம் அம்பலமாகும்.நிறை கூடிய குண்டுகளைப் போட்டு நகரங்களையும்,மக்களையும் அழிக்கிற இவர்களின் வீரத்தை, குரூரத்தை...இந்த நாட்டு மக்களே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.போரைத் தொடர முடியாது என்பதால் தான்.இனி மக்கள் தான் கதாநாயகர்கள் ;பேசப் போகின்றார்கள்.போர் வெறியர்களின் உடம்பு கதிரையில் இருந்து போது நெளியப் போகிறது.சிறிலங்காவில், புலிகள் போரில் வெல்லா விட்டாலும் செத்துக் கொண்டிருக்கிற போதிலும் இந்த காரியத்தை செப்பனாக செய்து விட்டிருக்கிறார்கள்.அது,இன்று போர்க் குற்றம் பேசுறளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.புதிய தொழினுட்பம் எங்களை அழிக்கிறதை மட்டும் செய்யவில்லை,விடியலையும் கொஞ்சம் கொண்டு வரவும் செய்கிறது. ஆனால், இந்த அகதிப்பிரச்சனைகளுக்கு பெரிதும் காரணமான ....அமெரிக்கா,’கனக்க’ கதைக்கிறது.அகதிகளை ஏற்கிறதில் பயப்படுகிறது என்றில்லை,தட்டிக் கழிக்கிறது. ஜேர்மனியை விட மற்ற நாடுகளிலும் அதே தொடர் தான்.
இனிமேல் போரை அவ்வளவாக தொடர முடியாது
குயின் சப்வேயில் இறங்கி வெளிய வந்து,பஸ்ஸிற்காக காத்து நின்றான்.
'பாபு' சினிமாவில் வருகிற சிவாஜி அணிகிற உடையில்,ஜமேக்கனாக இருக்க வேண்டும்,மூலையிலிருந்த பெரிய 'ஆடைக் கடையின் சோகேஸ் கண்ணாடியில் தன்னுடைய அசைவுகளைப் பார்த்துக் கொண்டு தீவிரமாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறான்.மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற கவலை இல்லாது,அந்த நாட்டில் இருக்கிற ஆளும் கட்சியை ஏசுகிறானோ?இப்படி மூளை சுகமில்லாத ஈழத்தமிழர்களைக் கூட தில்லை வீதிகளில் கண்டிருக்கிறான். நல்ல உருவம்.நல்லா இருக்க வேண்டியவன்.நீதியற்ற படையினரின் வதை முகாம்களிற்குள் கொண்டு செல்லப்பட்டவர்களை அல்லது கொடூர நிகழ்வுகளை நேரிலே பார்த்தவர்களை சொந்தங்கள் சிலர் வெளிய எடுத்து விட,தாக்கம் சிலோமோசனில் வெளிப்பட...பரிதாபமாக திரிகிறார்கள்.தொண்டைத் தண்ணீ வற்ற கதைக்கிறானே,இந்தக் குளிர் நேரத்தில் கோப்பி குடித்தான் என்றால் நல்லாயிருக்கும்.ம்! யாரிடமாவது கையை நீட்டுறானா?இல்லையே!அவன் உட்பட மேலும் 2 பேர்கள் நிற்கிறார்கள். பார்வையாளர்கள். கையை நீட்டிக் கேட்டால் மட்டுமே இவன் பின்பொக்கற்றிலே இருக்கிற காசை எடுத்து கொடுப்பான்.வருகிற போதோ,போகிற போதோ...ஒரு தடவை மட்டும் தான் இந்த தானம் கூட .
பல தடவைகள் வேலையால் வார போது அதே சந்தியில் ஒரு வயதான பொம்பிள்ளையைப் பார்க்கிறவன்.அதனுடைய கப்பில் சில்லறைகளாக, ...தானமளிப்பவர்களிற்கு இதயம் சின்னதாக கிடக்கிறது போல இருக்கிறது,பசியாற்ற பத்தாது.அவன் 5 ரூபாய்யைப் போட்டதும் "நன்றி"சொல்லிப் போட்டு உடனே எழும்பிப் போய் விடுவாள்.எல்லா நாளும் எதிர் பட மாட்டாள்.அவனை விட வேறு சிலரும் போடுகிறார்கள் தான்.கடைசியாக பார்க்கிற போது,கப் கீழே விழுந்து கிடக்க, அவளும் விழுந்து கிடந்தாள். பரிதாபமாக இருந்தது!
போகிற ஒரு தமிழ்ப் பெட்டை...அவளிற்குக் கிட்ட போய் "மம்.மம்"என எழுப்பிப் பார்த்தாள்.செத்து விட்டாள் போல இருக்கிறது.என்ன செய்யிறது எனத் தெரியாமல் அவளும் விட்டுட்டுப் போய் விட்டாள்.பிறகு நகரக் காவலருக்கு தெரிந்து எடுத்துச் செல்லப் போறாள் தான். அகதியாய் வார எல்லாருக்குமே இந்த நாடு மேலான நாடாக இருப்பதில்லையா?. அணில் ஒன்று வீதியில் குறுக்கே ஓடியது.இது எங்கே இருந்து வந்தது?கட்டிடங்களிற்கு தள்ளி மரங்களும் இருக்கின்றன தான்.
அவன், பசுமையான நினைவுகளுடன் இருக்கிற பிறந்த நாட்டை எவ்வளவு மிஸ் பண்ணுகிறான்."அங்கே இருக்கிற ஆளும் இனம் “கட்டாயம் பாடம் படிக்கவே போகிறது” "சாப மும் உடனே வருகிறது.நெஞ்சிலே இருந்து வெப்பக் காற்று வெளி வருகிறது.மனிதாபமற்றச் சட்டங்களில் காதல் கொண்டவர்களாய் இருக்கிறார்களே! இங்கேயும் கூட அப்படியான சட்டங்கள் சமயங்களில் எட்டிப் பார்த்து விடுகின்றன. அப்ப, தலையை எந்த சுவரிலே கொண்டு போய் மோதுறறென்று தெரியிறதில்லை.
இங்கேயிருந்து பஸ் ஏறி டக்சி எடுக்கிற கராஜ்ஜுக்கு சிறிது தொலைவிலே போய் இறங்கிறவன்.பக்கத்திலேயே இறங்கலாம் தான். ஆனால்,கொஞ்சம் திரும்பவும் ஓடினால் நல்லம் என்று...இறங்கி நடந்தும்,ஓடித்தான் போறான்.
உடற்பயிற்சி எடுக்க இதை விட்டால் ஏது நேரம்?
இருள் எங்கே பிரிகிறது.இறங்கிய பிறகு அதே மாதிரி கழுத்தில் மாட்டிக் கொண்டு ராஜநடை போட்டான்.ஒன்று இரண்டு நாய்களோடு திரிகிற சனங்கள் மட்டும் தான் எதிர்ப் பட்டனர்.பாலத்தடியை அடைந்த பிறகு மப்ளரை எடுத்து துணிப்பையின் கைவளையத்தில் சுற்றினான்.அப்படி சுற்றா விட்டால்...கைவளையம் கழுத்தில் அண்டச் செய்யும். பார்த்தீர்களா !,ஒன்றிலே இறங்கின பிறகே, அதிலுள்ள பிரச்சனைகளை எப்படி கையாளுறது என்றதும் தெரிய வருகிறது.
நம்மவர்கள், ஈழப்போராட்டத்தில் இறங்காவிட்டால் ‘விடுதலையே கிடைக்கவே மாட்டாது’ என்ற உண்மையும் உறைக்கிறது.
அவன் 16 வயசில் ஓடத் தொடங்கிய போது வழியில் பார்த்த அக்காட சினேகிதியிட தம்பிக்காரன் ஒருவன் தான் "ஓடு,ஓடு ...ஓடுறதை விடாதே,உடம்பு வைக்கும்"என்று இதிலே நிரந்தரமாகவே தள்ளி விட்டவன்.பிறகே, ‘ஓடுற என்ற ஒரு உலகம் இருக்கிறது’ ...தெரிய வந்தது. அங்கே சிறிலங்கா பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்து தட்டுப் பட்ட திருஞாவுகரசு, மரதன் வீரனாக நெடுகவே இருந்தான்.இந்தியனாமி (இருந்த காலத்தில் )அவன் மனைவி சுட்டுக் கொன்று விட்டது.
ஓட்டதில் பல சின்னச் சின்ன விசயங்கள் எல்லாம் அவனுக்குத் அத்துப்படி.'ஓடுவது அவசியமானது' என்று தெரிகிறதே! அதாலேயே ஊரிலே பல இடங்களைப் பார்த்திருக்கிறான்.நாய் விரட்ட குடல் தெறிக்கவும் ஓடி தப்பியிருக்கிறான். அவனுக்கு தெரியாத சிலர் இங்கேயும் கூட "நீ ஊரிலே மரதன் ஓடுறவனில்லையா?"என்று தோளிலே தட்டிக் கேட்டிருக்கிறார்கள்.
இங்கே ஒரே பகுதியை மட்டுமே பார்க்கோணும் என்று விதி இருக்கிறது
குளிருக்கு சிகரட் பத்திக் கொண்டு எதிரே வந்த கறுப்பன் "இ ட்ஸ் வெரி குட்"என்றான்.அதிக செரிவுடைய...குடியை பாவிக்கிறவர்,சிகரட் பத்துறவர்களால் பெரிதாக ஓட முடியாது.வேணுமென்றால் ஓடிப் பாருங்கள் ஓடுவது எவ்வளவு கஸ்டம் என்பது தெரிய வரும்.அவன் பள்ளி ஆசிரியனாக இருக்க வேண்டும்.நட்பாக சிரித்த முகத்துடன் அவனை என்கரேஜ் பண்ணி விட்டு போய்க் கொண்டிருந்தான்.
கராஜ்ஜில் நின்ற டக்சியில் பையை வைத்து விட்டு,வெளிப்புறம் ஊத்தையாய் இருக்கிறதா?எனச் சுற்றி வர பார்த்தான்.கதவுகளின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளை பூத்திருந்தது இன்னம் கறுப்பு பரவ வில்லை.பனிநாடு.ஒரு தடவை வீதியில் ஓடிப் போட்டு வந்தாலே வெள்ளைப் படிவு ஏற்பட்டு விடும்.கறுப்பு நிறம் ஊத்தை.அதுகூடி விட்டால் கழுவவே வேண்டும்.அல்லது கதவை திறக்கிற போது கையிலே சேர்ட்,கால்சட்டையிலே படுற பகுதியில் எல்லாம் பிரளும்.உள்ளேயும் ஒரு நோக்கு.காலுக்கு கீழேபோடுற றபர் விரிப்புகளில் மண் தெரிய எடுத்து ஒரு உதறல்.திரும்பப் போட்டான்.பரவாய்யில்லை.முன் சீட்டுக்குப் பின்னால் உள்ள செய்திப் பேப்பர்கள் வைக்கிற பையை தடவினான்.காலி சிகரட் பெட்டி,கசங்கிய கை துடைக்கிற பேப்பர்,டொபி உறை...என கிடந்த குப்பைகள். எடுத்து வெளியில் அதற்கென கிடந்த கூடையில் எறிந்தான். பையின் அடியில் என்னவோ நெருடின மாதிரி இருந்தது.திரும்ப கையை விட பொக்கற் பேர்ஸ் ஒன்று கிடைத்தது. திறக்க அந்த நாட்டிலே வேலை செய்ய கொடுக்கப்படுற சோசல் இன்சுரன்ஸ் நம்மர் அட்டை உட்பட நிறைய கார்ட்டுகளுடன் ...தம்பியன் முக்கியமான ஒன்றை தான் தவற விட்டிருக்கிறான்.தில்லைக்கு அனேகமாகஇரவு நேரம் ஓடுற ஓட்டியினுடையதாக தான் இருக்க வேண்டும் எனத் தோன்றியது.அதை ஏன் பயணிகள் பகுதியில் போய் செருகினான்?
அலட்சியம் தவிர வேற என்ன!
எடுத்துக் கொண்டு போய் கராஜ்காரனிடம் கொடுத்தான்.அவன் பெயரைப் பார்த்து விட்டு "இங்கே ஓடுற ஓட்டியினுடையதில்லை"என்றான்.' சொலமன்'என்று முடியிறது எந்த நாட்டுப் பெயர்? தேவையில்லாத ஆராய்ச்சி.உள்ளே அவனுடைய மனைவியின் ,மகளின் சிறிய படங்களும் இருந்தன.வங்கி அட்டைகள் ...எல்லாத்திலும் எண்கள் இருந்தன தவிர வீட்டு விலாசம் இருக்கவில்லை.தொலைபேசி நம்பராவது இருக்கிறதா?மேலும் குடைந்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை."நீ வேலையைப் போய் பார்,நான் இன்னொரு தடவை பார்க்கிறேன்"என்று சொல்ல டக்சிற்கு வந்தான். வேலையில் காம் வானொலிக்கூடாக கதைக்கிற டிப்பாஜ்ஜர் 'யாரும் தவற விட்டிருக்கிறார்?'என்று அறிவிக்கவில்லை.பொதுவாக அவனுடைய தாமரை ட்க்சிக் கொம்பனிக்கூடாக வார ஓடர்களில் தவற விட்டவர் தொடர்பு கொண்டு கேட்கிறது வழக்கம்.கொண்டு போய் கொடுப்பார்கள்.தூரமாக இருந்தால் மினக்கெட்டு வாறதுக்கான டக்சிக்கட்டணத்தில் அரைவாசியாவது கொடுப்பார்கள்.
இது இப்ப தொலையவில்லை.கனகாலமாக கிடந்திருக்கிறது. யார் போட்டிருப்பார்கள்?.இவனுடன் இரவு கேளிக்கைக்கு கூட வந்த நண்பனே,'சிறைச்சாலை...' என்ற வசனம் குழப்ப அவனுக்குத் தெரியாமல் எடுத்து போட்டிருப்பானோ?உள்ளே பணம் நிச்சியமாக இருந்திருக்க வேண்டும்.காணனேல்லை.யாரும் பிக்பொக்கற்காரன் ஒருத்தன் அதை அடித்து பணத்தை எடுத்து விட்டு,டக்சியில் ஏறி அதை செருகி விட்டு போய்யிருப்பான்?இது தான் சரி வருகிறது.
“இந்த நகரத்தில் பிக்பொக்கற்காரன் இருகிறானா?!”
இங்கே யாரும் பேர்ஸ் திருடறதாக செய்திகள் வருவதில்லை.கீழே விழுந்து கிடந்து எடுக்கிறது....நடந்திருக்கலாம். அடித்தால் பெரிய கொள்ளை,போதைப் பொருள் வர்த்தகம் தாம் நடைபெறுகின்றன.ஒவ்வொரு நாளும் துவக்குச்சூடுகளுடனே விடிகின்றன.வங்கிக் கார்ட்டுகளில் கை வைக்கவில்லை என்பதால் போதிய பணம் இருந்திருக்க வேண்டும்.நிறைய கமராக்கள் பாவிக்கிற இடங்களிலே இருக்கிறதாலும்... தவிர்த்திருக்கலாம்.அல்லது பாவித்து பார்க்க வேலை செய்யாதும் விட்டிருக்கலாம்.
அடியில் பார்த்தலால் தான் தில்லைக்கு கிடைத்திருக்கிறது. எப்படியோ போய்ச் சேர வேண்டும்.வேலை முடிந்து போன போது கராஜ்காரன் மேசையில் ஒரு ஓரத்தில் போட்டிருந்தான்."ஒரு துப்பும் கிடைக்கவில்லை.நீ இதை தாமரை டக்சி ஒபிசிலேயே நாளைக்கு கொண்டு போய் கொடுத்து விடு"என்றான். "எதற்கும் ஒரு தடவை பார்த்து விடுகிறேன்"என்று தில்லையும் அட்டைகளை விட்டு தடவினான்.இரண்டு மூன்று மடியலில் சிறிய பேப்பர்த் துண்டு கிடைத்தது.விரித்தான்..இது மூன்று அங்குல சதுர துண்டில். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம். இந்த அளவில் பார்த்தேயில்லை.
அவனுடையதே புல் சைஸ் பேப்பரில்.
அப்பா,அம்மாட பெயர்,பிறந்த இடம்.....சிறைச்சாலையில் 1972இல் என இருந்தது.உடனே கராஜ் காரனிடம் காட்ட "அடடா, இவன் நோட்டட்டான ஆள்!,நல்ல காலம் அவசரப்பட்டு டக்சி ஒபிசில் கொடுக்காதது"என்றான்.
தற்போது இந்த அரசு மனிதாபிமானத்துடன் சிரிய அகதிகளை ஏற்றாலும் இதற்கு முதல் கடும் போக்குடைய அரசாங்கமே இருந்தது.அது "அகதிகளில் பயங்கரவாதிகளும் இருக்கிறார்கள்"என்று சொல்லி ஏற்காமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தது. சிரியப் பிரச்சனை தொடங்கி கனகாலமாகி விட்டிருந்தது.நிறைய படகுகள் கவிழ்ன்ற சோகங்கள் நடந்தேறி விட்டன.பத்தாற்குறைக்கு கடும் சட்டங்களை இயற்றி ஏற்கப் பட்டு சமபிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிற தில்லை போன்றவர்களுக்கும் கிடைத்திருக்கிற சமபிரஜா உரிமையிலே கூட கை வைத்து விட்டிருந்தார்கள். அதை இரண்டு வகைகளாகவே பிரித்து விட்டார்கள்.அந்த அரசு பெரும்பான்மையாக இருந்தாலே அந்த ஆட்டம்.
.தற்போதைய பிரதமரின் தந்தையார்,இந்த நாட்டின் சரித்திரத்தையே ஒரு காலத்தில் மாற்றி எழுதியவர்.1972 இல் சிறிலங்கா சிங்கள குடியரசான போது,இவருடைய தந்தை,இங்கே "பிரெஞ்சு,ஆங்கில நாடு"என இந்த நாட்டை பிரகடனப்படுத்தினார்.அங்கே ஈழத்தமிழர்களின் நெஞ்சிலே கத்தி பாய்ந்த போது இங்கே பிரெஞ்சுக்காரர்களின் கைகளில் பூக்கொத்துக்கள் கொடுக்கப்பட்டன.அதற்கு முதல் பிரெஞ்சுமொழி பேசுகிற மக்கள் ,ஆங்கிலேயர்களால் ஈழத்தமிழர்களைப் போலவே இங்கேயும் அல்லல்பட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
இந்த நாடு அதற்கு முதலேயே பல்வேறு அகதிகளை ஏற்றும் கொண்டே..தான் இருந்தது. சிறிலங்காவைப் போல சேற்றிலே குளிக்கிற யானையாக அல்ல,லேக்கிலே குளித்து மெல்ல,மெல்ல அழுக்குகளை கழுவுற மேபிள் மரமாக இருக்கிறது.
பிரெஞ்சு மொழி பேசுகிற பெரிய மாநிலமும் முதலில் தனிநாடாகவே இருந்தே இதனுடன் இணைந்தது. நாடு முழுவதற்கும் ஒரு ராணுவம் என ஏற்பட்ட பிறகே பிரெஞ்சு மக்களை அடக்கி ஒடுக்கவும் முற்பட்டது. எல்லாம் பார்ளிமெண்ட் கதிரைகள் தந்த தைரியத்தால்(ஜனநாயகத்தால்..) தான்.இவருடைய தந்தையார் தான் துணிச்சலாக செயல்பட்ட கதாநாயகர் அதோடு, இதை பல்கலாச்சாரநாடு என அறிவித்தார் கடவுள் சில பேர்களிற்குத் தான் விரிந்த மனதை அளிக்கிறார்.
எல்லாருக்கும் சமபிரஜாவுரிமையும் கிடைத்தன.
இதே போலில்லாமல் வேறு வலத்தில் மெக்சிக்கோ நாட்டின் பெரிய மாகாணங்களான டக்சஸ்,கலிபோர்னியா,நியூஇங்கிலாண்ட் ..ஆகிய மாநிலங்களை சேர்த்துக் கொண்ட அமெரிக்கா, இன்று வரையும் கூட அந்த இடத்தில் வாழ்கிற இஸ்பானிய மக்களின் மொழியான இஸ்பானிஸை இங்கே அறிவித்தது போல அங்கே தேசியமொழிகளில் ஒன்றாக அறிவிக்கவில்லை. பரந்த உலகத்தில் சிங்களவர்களிற்கு தோழர்களும் இருக்கிறார்கள்.நல்லாய் வெடி கொளுத்தலாம்.
தற்போதைய அரசு பெரும்பான்மையுடன் வென்றவுடனேயே கடந்த அரசு ஏற்கத்தவறிய அகதிகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டு இரண்டு,மூன்று மாசங்களிலேயே இருபத்தையாயிரம் பேர்களை ஏற்பதாகக் கூறி,செயலிலும் இறங்கி விட்டது. வரும் காலத்தில்.இரண்டு பிரஜாவுரிமைச் சட்டத்தையும் செப்பனிட ப் போவதாகவும் சொல்லி இருக்கிறது.
அப்பருக்கு தப்பாமல் பிறந்த மகன்.
இனிவரும் நாலு வருசங்களில் இந்த நாட்டில் மனிதநேயங்கள் பலதை பார்க்கத் தான் போகிறோம்.ஆனால், மெல்ல மெல்ல தானே விடியும்!
மேலும் பேர்ஸைக் குடைந்ததில் சிகரட் மட்டைத் துண்டில் இரண்டு தொலைபேசி நம்பர்களும் கிடைத்தன.
'முக்கியமான கார்ட்டுகள் இருக்கின்றன 'அவனிடம் சேர்ப்பித்து விடவே விரும்புகிறார்கள்.சிறைச்சாலையில் பிறந்தது ...என்றது தான் குழப்புறது.
சோசல் இன்சுரன்ஸ் நம்மர் இருக்கிறது.எனவே வேலை செய்து கொண்டிருக்கிறவன்.
மனைவி பிள்ளை என இருக்கிற சந்தோசமான குடும்பஸ்தன்.
சிறைச்சாலையில் இருந்த பெற்றோருக்கு அல்லது கருப்பிணியான தனிப்பெண் ஒருத்திக்கு.. பிறந்ந்திருக்க வேண்டும்.இந்தப் பேரைப் போலவே இந்த ‘அகதி’ப் பெரும் வரும் சந்ததியிலும் ஒட்டிக் கொண்டு கிடக்கப் போகிறதோ?.
அவர்களும் அகதிகளாய் வந்து பிடிபட்டு ,சிறிலங்காச்சிறைச்சாலையில் இருக்கிறமாதிரி பிரச்சனைகளிற்குள்ளாகியவர்களாக ....இருந்திருக்கலாம். .1972இற்குப் பிறகே மேலும் மாறின சூழல்.அதற்கு முதல் இந்த நாடும் சிறிதளவு சிறிலங்கா தான்!
கடந்த கால அரசு, நகரக்காவருக்கு அளவுக்கதிகமான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றன. அதையும்... தற்போதைய அரசு கவனிக்க வேண்டும். அவர்கள் கடிநாய்கள் போலவே இருக்கப் போகிறார்கள். ரேசிசமும் கலந்தவர்கள்.
உதவி செய்யப் போய் உபத்திரவத்தை தேடிக் கொண்டதாகி விடும். சந்தேகக் கண் கொண்டு பார்த்து அலுப்புகள் தரவே சாத்தியம் அதிகமாக இருக்கின்றன.
டக்சி ஒபிசிலே கொடுத்தாலும் அவர்களும் காவலரிடமே கொடுக்கப் போறார்கள்.இரண்டு பேர்களிடமும் கொடுக்கிறதும் ஒன்று தான்.
கராஜ்காரன், புத்திசாலித்தனமாக முடிவெடுத்தான் ."இந்த பேர்ஸைப் பற்றிக் கவலைப் படுறதை விட்டு விடு.நாளை தபால் பெட்டி ஒன்றிலே போட்டு விடுகிறேன்"என்றான்.
அவர்களும் நகரக்காவலரிடமே சேர்ப்பிக்கப் போகிறார்கள். இனி அதிலே கைரேகையை வைத்து ...என்ற ஆராய்ச்சிகள் எல்லாம் எதற்கு. திரைந்து போன சட்டங்கள் முட்களாகவே நாடுகளில் எல்லாம் குத்துகின்றன. ஒரு பிரஜை, தொலைத்தவனிடம் போய்ச் சேர்பிப்பதற்கு எவ்வளவு கஸ்டப்பட வேண்டியிருக்கிறது.
வீட்ட வருகிற போது சப்வே நிலையத்தில் தூண் ஓரமாக சிமார்ட்டான இளம் ஆண் ஒருத்தன் கோப்பிக்கப்பை முன்னால் வைத்து விட்டு நிலத்தில் இருந்தான்.பார்வையில் ஒரு பரிதாபம்.நிச்சியமாக இவன் இப்படி பிச்சை எடுக்கிறவன் இல்லை.இவன் எதை தொலைத்து விட்டு இங்கே இப்படி இருக்கிறானோ?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.