'ஹலோ "
"குலன் இருக்கிறாரா?"
"கதைக்கிறன்"
"குலன் நான் இங்க பிரேம்" ...
"பிரேம்" ?
"பெல்ஜியம் பிரேம் ".
"சொல்லும் பிரேம் எப்படி இருக்கின்றீர் ? இப்பவும் பிரசல்ஸ் தானே " ?
"பிரேசெல்சில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கிராமத்திற்கு இடம் மாறிவிட்டேன் ,இப்ப கனடாவில் தான் நிற்கின்றேன் .சின்ன உதவி ஒன்று தேவை .யாரிடம் கேட்கலாம் என்ற போது உம்மிட நினைவுதான் வந்தது அது தான் போன் அடித்தேன்".
'எப்படி தொலைபேசி இலக்கம் கிடைத்தது ,என்ன விஷயம் சொல்லும் ?"
"சும்மா கூகிளில் உமது பெயரை போடவே தொலை பேசி இலக்கம் வந்துவிட்டது .நான் டொராண்டோ ஹில்டனில் நிற்கின்றேன் .நேரில் வந்து சந்தித்து கதைத்தால் நன்றாக இருக்கும் ".
"ஏதும் பெரிய பிரச்சனையோ ?"
"அப்படி பெரிதாய் ஒன்றுமில்லை , எனது அம்மாவும் தங்கச்சியும் இஞ்சை தான் இருக்கினம். நான் போய் சந்தித்தனான். அம்மாவிற்கு சில விடயங்கள் சொல்லவேண்டும் ,நான் அதை சொல்வதை விட முதலில் இன்னொரு ஆள் போய் கதைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றேன் ."
"சரி நாளைக்கு நாலு மணிக்கு நானே அங்கு வாறன் ."
பிரேமை குலன் சந்தித்தது ஒரே ஒரு தடவை தான் ,அதன் பின்பு தொலைபேசியில் இரண்டு மூன்று தரம் மட்டுமே பேசியிருக்கின்றான். அந்த சந்திப்பு கூட தற்செயலானதுதான் .
குலன் லண்டன் வந்து இரு வருடங்கள் ஆகிவிட்டது இருந்தும் அவனுக்கு லண்டன் வாழ்க்கை சிறிதேனும் ஒட்டவில்லை . ஐந்து நாள் படிப்பு ஏழு நாள் வேலை என்று உலகையே வெறுத்து நாட்டிற்கு திரும்ப ஓடுவமோ என்று மண்டையை உடைத்துக்கொண்டிருந்த நாட்களில் தான் இலங்கையில் இனக்கலவரம் வெடித்தது .தமிழர்களுக்கு ஏற்பட்ட அநியாயத்தைப் பார்த்து அவனுக்கு வந்த கோவத்தை விட தான் இனி நாட்டிற்கு திரும்பி போவது நடக்காத காரியமாக்கிய சிங்கள் இனவெறியர்கள் மீதுதான் அதிக கோவத்தில் இருந்தான் குலன் .
விசா என்ற விடயத்தில் மிக கட்டுப்பாடாக இருந்த இங்கிலாந்து இனக்கலவரத்துடன் நிறைய தமிழர்கள் இங்கிலாந்து வர அனுமதித்தது அப்படி வந்தவர்களில் ஒருவன் தான் விபுல் . இவன் குலனின் ஊர் ,பாடசாலை நண்பன் .
விபுல் நாலு ஐந்து வருடங்கள் ஜெர்மனியில் இருந்துவிட்டு விடுமுறைக்கு இலங்கைக்கு போனவன் அங்கு கலவரம் வெடிக்க உடனே பிளேன் ஏறி லண்டன் வந்துவிட்டான் .வந்ததும் அகதி நிலைக்கு விண்ணப்பித்துவிட்டு விபுலும் குலேனின் பாடசாலையில் அனுமதி எடுத்து படிக்க தொடங்கியிருந்தான் . வார இறுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் அது முடிய பார்ட்டி என்று விபுல் வந்த பின் குலனுக்கும் லண்டன் வாழ்க்கை சற்று ருசிப்பட ஆரம்பித்தது .
இப்படியாக சில மாதங்கள் ஓடிக்கொண்டிருக்க ஒரு நாள் விபுல் குலேனை தான் ஒருவரை சந்திக்க கிங்ஸ்டன் செல்வதாகவும் விரும்பினால் நீயும் வரலாம் என்று குலனை அழைத்தான் .குலனும் சரி என்று விபுலுடன் புறப்பட்டு கிங்க்ஸ்டனில் இருக்கும் கார் பார்க் ஒன்றிற்குள் நுளைகின்றான். அங்கு பாகிஸ்தானியர் போன்ற நல்ல வெள்ளை உருவம் ,குறுந்தாடியுடன் முப்பது வயது வயது மிக்க ஒருவர் சிரித்தபடியே வந்து,
"வாரும் விபுல்" என்று அழைக்கின்றார் .
"இவன் எனது நண்பன் குலன் " என்று குலனை அவருக்கு அறிமுகப்படுத்திய விபுல் . குலனை பார்த்து
"இவர் தான் கண்ணன். இங்கிலாந்து ----அமைப்பின் பொறுப்பாளர்."
கண்ணன் குலனை பார்த்து சிரித்தபடியே
"படிப்பு எப்படி போகின்றது ? படிக்காவிட்டால் என்னை மாதிரி வாழ்க்கை முழுக்க கார் பார்க் தான் .கவனமாக படியும் " என்கின்றார் .
இப்போ அடிக்கடி விபுலுடன் குலனும் கண்ணனை சந்திக்க போகத்தொடங்கிவிட்டான் .கண்ணன் அமைப்பின் ஆரம்பகால கதைகளை நேரில் நின்று பார்த்தது போல சுவாரஸ்யமாக சொல்லுவார் .அவர் பேசும்போது உமா ,பிரபா ,நாகராசா என்ற பெயர்கள் அவரது நண்பர்கள் போல அடிக்கடி வந்துபோகும் .பஸ்தியாம்பிள்ளை கொலை பற்றி இலங்கை அரசிற்கு தெரிய முதல் தானே அதை உரிமை கோரியதாக சொன்னார் .பேஸ்வாரில் கைதுப்பாக்கியில் தொடங்கிய ஆயுத வியாபராம் இப்போ கப்பலில் வாங்கி கொண்டுபோகும் அளவிற்கு வந்துவிட்டதாக சொன்னார் . ஒவ்வொரு சந்திப்பின் போதும் ஒரு புதிய கதை சொல்ல சொல்ல குலனுக்கு போராட்டத்தில் தானும் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் மெல்ல முளை விடுகின்றது . இப்படி அடிக்கடி சந்திப்புகள் தொடர அடுத்த படிக்கு இருவருமே காலடி வைக்கின்றார்கள் .
ஐந்து பேர்களை முக்கிய பொறுப்பில் கொண்டு இயங்கி வந்த அந்த அமைப்பு லண்டனில் இலைமறைகாயாக ஒரு சிலரது தொடர்புகளுடன் இருந்தது . அதை விரிவாக்கி புதிய பல அங்கத்தவர்களை சேர்த்து அலுவலகம் திறந்து மக்களுடன் நேரடிதொடர்பை ஏற்படுத்துவதன் மூலம், அரசியல் கூட்டங்கள் ,பாடசாலைகளில் மாணவர்கள் சந்திப்புக்கள் ,கலை நிகழ்சிகள்,நிதி சேகரிப்பு நடத்துவது என முடிவிற்கு வருகின்றார்கள் .கிழக்கு லண்டனில் அலுவலம் திறந்து விபுல் குலேனுடன் இன்னும் சிலரும் அங்கே வசிக்கவும் தொடங்கிவிட்டார்கள் .
குலனுக்கு இப்போ பாடசாலை ,வேலை அதைவிட இயக்கபணி இடைக்கிடை பார்டியும் தொடர்ந்தது. அலுவலகதில் ரஷ்ய ,சீன,வியட்நாம் ,கியூபா புரட்சி பற்றிய போர் இலக்கியங்கள் குவிய தொடங்குகின்றது . மார்க்ஸ் ,ஏங்கல்ஸ்,லெனின் ,ரோட்ஸ்க்கி, மாவோ என்ற பெயர்கள் சர்வசாதாரணமாக பேச்சு வாக்கில் வந்துபோயின .உலக நாடுகளில் வென்ற ,தோற்ற புரட்சிகள் பற்றிய ஆய்வுகள் விடிய விடிய நடக்கும் .வார விடுமுறையில் லண்டன் பல்கலை கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்த ஆத்மன் என்பவர் மார்சிச வகுப்பெடுக்க மார்க்க்சின் மூலதனத்துடன் தொடங்கிவிட்டார் .முற்போக்கு அரசியல் என்று ஒன்று அங்கு உருவெடுக்கின்றது.
தமிழர்கள் பிரச்சனை அன்னியர் படையெடுப்பில் தொடங்கி இலங்கை சுதந்திரம் ,சோல்பரி ,மலையக தமிழர் பிரஜாஉரிமை பறிப்பு ,எம்மவர் சிங்களத்துடனான ஒப்பந்தங்கள், விட்டுகொடுப்புக்கள் ,துரோகங்கள் என்று கருத்து முரண்பாடுகளுடன் விவாதம் வேறு .
நாட்டிலும் ,தமிழ் நாட்டிலும் இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரிக்க லண்டனிலும் அங்கத்தவர்கள் அதிகரித்து இப்போ அமைப்பின் செயற்பாடுகள் லண்டனை விட்டு விரிந்து இங்கிலாந்தின் பல இடங்களுக்கும் ஸ்கொட்லாந்து வேல்ஸ் என்று கூ ட சில கருத்தரங்கள் நடந்ததன .பணம் சேர்ப்பதுதான் முக்கிய நோக்கம் என்றாலும் சிலர் அனைத்து அடக்கு முறையையும் உடைத்து எறிவோம் என்ற கருத்தியல் தான் முக்கியம் என்பதிலும் குறியாக இருந்தார்கள் .
இன்று இருக்கும் ஊடாக இணைய வசதிகள் அப்போது இல்லை .உலக அரசியல் ,வரலாறுகள் ,புரட்சிகள் பற்றி கருத்தரங்குகளுக்கு வருபவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை ,சிலவேளைகளில் யாரும் இசைக்கு பிசக்காக கேள்விகள் கேட்டால் விபுல் நிக்கராகுவா சண்டநிஸ்டா ,எல்சல்வடோர் ,சிலி அலன்டே என்று வாயில் வராத நாலு பேர்களை இழுத்து அவர்களை குழப்பிவிடுவான். நாட்டில் புலிகளும் டெலோவும் இலங்கை இராணுவத்தின் மீது தாக்குதல்களுக்கு மேல் தாக்குதலைகளை நிகழ்த்த தொடங்கிவிட்டார்கள் இவர்கள் எவ்வளவு காலத்திற்குத்தான் வெறும் வாயை மெல்லுவது , கோயிலில் நின்று இவர்கள் பிடிக்கும் உண்டியலை கூட சனம் எட்டிப்பார்க்காமல் போகத் தொடங்கிவிட்டார்கள் .
இந்த நேரத்தில் தமிழ்நாட்டு முகாம்களில் போராளிகள் பயிற்சியில் ஈடுபடும் ஒரு வீடியோ ஒன்று வந்து சேர்ந்தது .அதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் பலவித பயிற்சிகளில் ஈடுபடும் காட்சிகள் இருந்தது .அந்த வீடியோவை காட்டியே இன்னமும் சில மாதங்கள் ஓட்டிவிடலாம் என்ற சந்தோசத்தில் அலுவலகத்தில் அனைவரும் இருந்தனர் .அதைவிட குலனுக்கும் விபுலுக்கும் இரட்டை சந்தோசம் தரும் செய்தியும் காத்திருந்தது . குலனும் விபுலும் அமைப்பின் உத்தியோக பிரதிநிதிகளாக ஐரோப்பிய பயணம் சென்றுவர அனுமதி கிடைத்த செய்திதான் அது .வீடியோ காசட் லண்டனில் இருந்து தமிழ்நாட்டு முகாம்களுக்கு சென்றவரால் படம் பிடிக்கபட்டு தயாரிக்கபட்டது.அதை ஐரோப்பிய நாடுகளுக்கும் கொண்டு போய் காட்டவேண்டும்.ஜெர்மனியிலும் பிரான்சிலும் அமைப்பு ஏற்கனவே முறையாக செயற்பட்டு வந்ததால் அவர்கள் அலுவலங்களுக்கு சென்று அவர்களையும் சந்தித்து ஒரு கொப்பியையும் கொடுத்தால் காணும் ஆனால் நெதர்லாந்தில் அமைப்பு ஆரம்ப நிலையில் உள்ளதால் இவர்களே சில சந்திப்புகள் நடத்தவேண்டும் .
டென்கக்கில் இரண்டு சந்திப்புகளும் அம்ஸ்ரடாமில் ஒரு சந்திப்பும் ஏற்பாடு செய்தாயிற்று . விபுல் அகதி நிலையில் இருந்ததால் எப்படி பயணம் செய்யப்போகின்றான் என்று குலேனுக்கு யோசனை . விபுல் தான் முன்னர் ஜெர்மனியில் பாவித்த பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதால் அதில் பயணிக்கலாம் பிரச்சனையில்லை என்றுவிட்டான். இந்த ஐரோப்பிய பயணம் முடிய பின்னர் அமைப்பிற்கு வேலை செய்ய இந்தியா போகவேண்டியும் வரலாம் அதன் பின் லண்டன் திரும்ப சந்தர்ப்பம் வருவமோ தெரியாது எனவே இந்த பயணத்தை ஒரு விடுமுறை போல கழிக்கவும் பழைய ஊர், பாடசாலை சந்திப்பது என்றும் இருவரும் திட்டமிட்டுவிட்டார்கள் .
ஜெர்மன் ,பிரான்ஸ் ,பெனலுக்ஸ் விசா எடுத்து நெதர்லாந்திற்கு பயணம் ஏறிவிட்டார்கள். லண்டனில் இருந்து நெதர்லாந்திற்கு பஸ்ஸில் ஏறினால் பஸ் டோவர் என்ற துறைமுகநகர் சென்று அங்கு பஸ் கூவர் கிராப்ட்டின் கீழ் தளத்திற்கு செல்லும். பயணிகள் பஸ்ஸை விட்டு இறங்கி கப்பலின் மேல்தளத்திற்கு போகவேண்டும். கூவர் கிராப்ட்டில் பயணம் செய்வது நல்லோதோர் அனுபவம் .ஏறக்குறைய ஐந்து மணித்தியால பயணம் அது .பொழுது போகாவிட்டால் உள்ளே தியேட்டர் இருக்கு படம் பார்க்கலாம் அல்லது பாரில் இருந்து தண்ணி அடிக்கலாம் .கடலை பார்த்தவாறு பாரில் இருந்து தண்ணியடித்தபடியே இந்தியாவிற்கு பயிற்சிக்கு போவது பின்னர் ஏ கே யை முதுகில் கொழுவியபடி மோட்டார் சயிக்கிளில் யாழ்பாணத்தை சுற்றி அடிப்பது என்று கதை வளர கரை வந்துவிட்டது .
டென் காக்கில் தோழர்கள் ஸ்டேசன் வரை வந்து வரவேற்று வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகின்றார்கள் .முகம் தெரியா உறவுகள் இயக்கம் என்ற புரிதலில் மட்டும் விருந்தோம்பலில் இருவரையும் அசத்திவிட்டார்கள் .தங்கியிருந்த வீட்டில் அன்று இரவு நித்திரை கொள்ளாமல் அமையப்போகும் தமிழ் ஈழம் பற்றிய விவாதம் தொடர்கின்றது . அடுத்தநாள் மாலை டென்காக்கில் முதலாவது சந்திப்பு நாற்பது பேர்கள் வரை இருந்தார்கள் .விபுல் குலனின் காதிற்குள் சொன்னான்,
"டேய் இதில இருக்கும் பலர் ஊரில பொல்லாத சண்டியர்கள், யாழ் பஸ் ஸ்டான்ட் முன்னால் கடை வைத்திருந்தவர்கள் . இயக்கம் என்றவுடன் இப்படி பவ்வியமாக நிற்பதை பார்க்க நம்பமுடியாமல் இருக்கு . எதற்கும் அழவோடு கதைத்து முடித்துவிடுவம் "
ஆர்ம்ஸ்டராமில் சுழிபுரத்தை சேர்ந்த பலர் சந்திப்பில் கலந்துகொண்டு இவர்கள் அமைப்பை பற்றி இவர்கள் அறியாத பல நல்லதும் கெட்டதுமான விடயங்களை சொன்னார்கள் . நெதர்லாந்தில் மூன்று கூட்டங்களும் திருப்தியாக முடிந்ததில் இருவருக்கும் பெரிய சந்தோசம் .உண்மையில் பயிற்சி முகாம்களில் எடுத்த வீடியோ கசட் தான் இவர்களுக்கு பெரிதும் உதவியது .
அடுத்து பிரான்சிற்கு போக முதல் இடையில் ஒருநாள் தங்கி பெல்ஜியத்தையும் பார்த்துவிடுவது என்று இருவரும் முடிவுசெய்தார்கள் .காலை பத்துமணி பிரசல்ஸ் ஸ்டேசனில் இறங்கி ஒரு மொட்டேலில் ரூம் எடுத்துவிட்டு நகருக்குளால் நடை போட ஆரம்பிக்கின்றார்கள் .பிரசெல்ஸ் மிக புராதன அழகிய நகரம் .லண்டன் மாதிரி பல்லின மக்களை காணமுடியவில்லை எங்கும் ஒரே வெள்ளைஇனத்தவர்களாக இருந்தார்கள் .
நாலு பக்கமும் தண்ணீரை வாரியடித்துக்கொண்டிருக்கும் ஒரு பவுண்டனில் முன்னால் உள்ள சீட்டில் அமர்ந்து சுற்றிவர வேடிக்கை பார்க்க தொடங்குகின்றார்கள் . நாய்களுக்கு அழகிய உடை உடுத்தி நடை பயில்பவர்களும் , சிறகு அடிக்கும் சத்தத்துடன் பறந்து திரியும் புறாக்களுக்கு தானியங்கள் போடுபவர்களும், கோப்பியுடன் சிகரட் சகிதம் இருந்து பேப்பர் வாசிப்பவர்களும் என்று அந்த காலை மிக அழகாக இருந்தது . படிப்பு ,வேலை, கூட்டம் என்று அலைந்ததில் இப்படி ஒரு பக்கத்தை எட்டி பார்க்காமல் இருந்து விட்டோம் என்று இருவரும் கதைத்துக்கொண்டு இருக்கையில் மறு பக்கம் இருந்த இளைஞர் கூட்டத்தில் இருந்து ஒருவர் இவர்களை நோக்கி வருகின்றார் .
வெளிர்பச்சை சேர்ட் ,பாண்ட்ஸ் ,தொப்பி ,தோடு ,கழுத்தை சுற்றி பாலஸ்தீன கொடி போல ஒரு மப்ளர் ,தடித்த பூட்ஸ், நீண்ட மயிர் ,தாடியும் வைத்து ஒரு ஆளைப்பார்க்க ஆமிக்காரன் போல இருக்கு,
இவர்கள் அருகில் வந்து " நீங்கள் தமிழா " என்றபடி கை குலுக்க கையை நீட்டுகின்றார் .
இவர்களும் சிரித்தபடி கை கொடுக்க,அவரே தொடர்கின்றார் ,
"எனது பெயர் பிரேம் .உங்களை கண்டது சந்தோசமாக இருக்கு ,நான் தமிழர்களை சந்தித்து இரண்டுவருடங்கள் ஆகின்றது "
குலனும் விபுலும் பிரேமிற்கு தங்களை அறிமுகப்படுத்த,
"வாங்கோ எனது நண்பர்களுக்கு உங்களை அறிமுகம் செய்து வைக்கின்றேன் .பின்னர் கதைத்தபடியே காலை உணவை சாப்பிடுவம் என்ரை கணக்கு தான் சாப்பாடு .தமிழ் கதைக்க வேண்டும் போல கிடக்கு"
தனது நண்பர்களை அறிமுகம் செய்துவிட்டு ஒரு ரேஸ்ரோண்டிற்குள் கூட்டிக்கொண்டு செல்கின்றார் .அங்கு பலருக்கு பிரேமை நன்கு தெரிந்திருக்கின்றது .பிரெஞ்சில் நன்கு உரையாடுகின்றார் .
தான் பதினாறு வயதில் ஏஜன்சி மூலம் பிரான்சில் இருக்கும் சித்தப்பாவிடம் வந்ததாகவும் அவர் பிரான்சில் இருப்பதை விட நெதர்லாந்தில் வசதிகள் கூட என்று நெதர்லாந்திற்கு அனுப்பிவிட்டாராம் .நெதர்லாந்திற்குள் செல்லும் போது போர்டரில் போலீஸ் பிடித்து தன்னை பெல்ஜியத்திற்குள்ளால் வந்த படியால் பெல்ஜிய இமிகிரேசனிடம் ஒப்படைத்துவிட்டார்களாம்.பெல்ஜியத்தில் ஜெயிலிற்குள் தான் எட்டு மாதங்கள் இருந்ததாகவும் பின்னர் அவர்களே தற்காலிக விசாவுடன் வெளியில் செல்ல அனுமதித்து படிக்கவும் உதவி செய்தார்களாம் .இப்போ பெல்ஜிய அரசு தரும் பணத்தில் இருந்து கொண்டு படித்துக்கொண்டு இருப்பதாக சொன்னார் .
அன்றைய பகல் குலேனும் விபுலும் பிரேமுடன் பிரெசெல்சில் கழித்து விட்டு நாளை காலை பிரான்சிற்கு ரெயின் ஏறவேண்டும் என்று மொட்டேலுக்கு திரும்பிவிட்டார்கள் .பிரேம் இலங்கையில் இளவாலையை சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் இளவாலை சற்றும் பரீட்சயம் இல்லாத ஊர் .பிரேமிற்கு இவர்களை விட வயதும் குறைவு,இலங்கை அரசியல் பற்றியும் ஆர்வம இல்லை எனவே பிரேமுடன் இவர்கள் அரசியல் கதைக்கவில்லை .
அடுத்த நாள் காலை பிரான்சிற்கு செல்லும் ரெயினுக்காக இருவரும் ஸ்டேசனில் நிற்கும் போது பிரேம் அங்கு வருகிறான் .
"என்ன தமிழ் கதைக்க காலமை எழும்பி வந்தனிரோ "
"ஞாயிறு தானே பாடசாலை இல்லை ,உங்கள் நினைவு வந்தது பின்ன வெளிக்கிட்டு வந்தனான் "
ரெயின் வந்து ஸ்டேசனில் நிற்க குலனும் விபுலும் பிரேமிற்கு கையை காட்டிவிட்டு ரெயினிற்குள் ஏறுகின்றர்கள்.
"ஏதோ என்னால் முடிந்தது " என்றபடி ஒரு என்வலைப்பை குலனின் கையில் திணிக்கின்றான் பிரேம் .பிரேம் அப்படி என்வலப்பை தந்தது இருவருக்கும் கண்ணில் கண்ணீரை வரவழைத்துவிட்டது .இருவரும் பிரேமை பார்த்து கையசைக்க ரெயின் விரைய தொடங்குகின்றது . ஐரோப்பிய பயணம் முடித்து லண்டன் திரும்பி சில மாதங்களின் பின் குலன் இந்தியா புறப்பட்டுவிட்டான். விபுல் அமைப்பு பிழையான வழியில் செல்கின்றது என்று அதிலிருந்து விலத்திவிட்டான் .சில வருடங்களில் போன மச்சான் திரும்பி வந்தார் கணக்கு குலனும் அமைப்பை விட்டுவிலகி மீண்டும் லண்டன் சேர்ந்துவிட்டான்.
வேலை ,கிரிக்கெட் ,பார்ட்டி என்று மீண்டும் குலன் விபுல் சிநேகித வாழ்க்கை ஒரு சின்ன மாறுதலுடன் தொடருது . இருவருக்கும் இப்போ காதலிகள் இருக்கு .விபுல் தான் மீண்டும் ஒருமுறை நெதர்லாந்து சென்று வந்ததாக குலனுக்கு சொல்லிவிட்டு, பிரேம் தனக்கு பெல்ஜியத்தில் நிரந்தர வதிவுடமை கிடைத்துவிட்டதாக ஒருநாள் போன் பண்ணியதாகவும் சொன்னான் .
பின்னர் ஒருநாள் பிரேம் போனில் கதைக்கும் போது தான் படித்து முடித்து ஒரு பெல்ஜிய நண்பரின் உதவியால் லக்சம்பர்க் விமான நிலையத்தில் வேலை செய்வததாகவும், விபுல் தனக்கு எங்களது அமைப்பில் நடந்த பிரச்சனைகள் பற்றி சொல்ல தான் கவலைப்பட்டதாகவும் சொன்னான் . தான் நண்பனுடன் மிகவிரைவில் லண்டன் வர இருப்பதாகவும் அப்போ நேரில் சந்திப்போம் என்றான் .
ஒரு மாத இடைவெளியில் விபுல் ,குலன் கல்யாணம் நடந்தது . கல்யாணம் செய்த அடுத்த மாதமே குலன் கனடா சென்றுவிட்டான் . குலன் கனடா வந்து ஆறு வருடங்களின் பின் பிரேமின் அந்த தொலைபேசி அழைப்பு வருகின்றது . ரொராண்டோ ரிச்மன்ட் வீதியில் உள்ள கில்டன் ஹோட்டல் லாபியில் குலன் பிரேமிற்காக காத்திருக்கின்றான் .பிரேம் ஒரு வெள்ளையின நண்பனுடன் வந்து குலேனின் தோளை அமத்தி கட்டிப்பிடிக்கின்றான் .இருவரும் த்ரீ பீஸ் சூட்டில் மிக ஸ்டைலாக இருந்தார்கள் .
"உங்களை ஒருநாள் தான் சந்தித்தேன் இருந்தும் ரொம்ப நெருங்கி பழகியது போல ஒரு உணர்வு அண்ணை "
"நானும் அன்று ரெயினில் கை காட்டும் போது அப்படிதான் உணர்ந்தேன் "
"ஓ மறந்து போனன் இவர் பிநியுட் (Benoit) . இவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்ளபோகின்றேன் .அது விடயமாக கதைக்கத்தான் உங்களை கூப்பிட்டன் "
"என்ன பகிடியா "
"இல்லை அண்ணை உண்மை . ஒன்றாக படிக்கும் போது இருவருக்கும் இப்படி ஒரு விருப்பம் உருவாகிவிட்டது . அதை உங்களுக்கு விளங்கப்படுத்துவதே கஷ்டம் எப்படி எனது அம்மாவிற்கு விளங்கப்படுத்துவது என்றுதான் உங்களை கூப்பிட்டேன் ."
" எனக்கு விளங்குது பிரேம் ,கனடாவில சிலரை சந்தித்தும் இருக்கின்றேன் ஆனால் எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத உமது அம்மாவுடன் எப்படி பேசுவது என்றுதான் புரியவில்லை "
"நான் கனடா வந்தது அம்மாவையும் தங்கச்சியையும் சந்தித்துவிட்டு கனடாவையும் பார்த்துவிட்டுபோகத்தான் ஆனால் அம்மாவை சந்தித்த போது அவர் எந்த நேரமும் எனது கலியாணம் பற்றியே பேசுகின்றார், சில வேளைகளில் அழுவதை பார்க்க தாங்கமுடியவில்லை .அம்மா இப்படியே நெடுகிலும் எனது கலியாணம் பற்றி ஏங்குவதை விட உண்மையை சொன்னால் என்னவென்று யோசிக்கின்றேன் ."
"இப்ப நான் என்ன செய்யவேண்டும் "
"நாளைக்கு நான் அம்மாவை சந்திக்க போகமுதல் நீங்கள் அங்கு போய் பிரேம் தன்னை சந்திக்க இங்கே வரசொன்னவர் என்று விட்டு அம்மாவிடம் முடிந்தால் பேசிப்பாருங்கள் ,அதை விட இவரும் எனது குடும்பத்தை சந்திக்க ஆசைப்படுகின்றார் "
குலன் அடுத்த நாள் ஸ்காபோரோவில் உள்ள பிரேமின் தங்கையின் வீட்டிற்கு சென்று அழைப்புமணியை அமத்த ஒரு ஐம்பது வயதுடைய பெண்மணி கதவை திறக்கின்றார் .
"வாங்கோ தம்பி ,நீங்கள் குலன் தானே ,பிரேம் போன் அடித்து சொன்னவன் நீங்கள் வருவீர்கள் என்று "
இளவாலையில் உள்ள கிறிஸ்தவ பாடசாலையில் ஆசிரியராக இருந்த தான், இள வயதில் கணவனை இழந்து பிரேமையும் அவனது தங்கையும் வளர்க்க பட்ட கஷ்டங்களையும் சொல்லி, பின்னர் தான் பிரேமை சிறு வயதில் வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டதால் அவனுடன் ஆன தொடர்புகள் குறைந்துவிட்டதாகவும் இப்போ அவன் தன்னிடம் இருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகின்றான் போல இருக்கு என்றும் அழத்தொடங்கிவிட்டார் .கனடாவிற்கு வந்து இருக்கசொன்னாலும் கேட்கின்றானில்லை அங்கு நல்ல வேலை அதைவிடமுடியாது என்று அதையும் தட்டிக்கழிக்கின்றான்.
"அம்மா பிரேமுடன் ஒரு வெள்ளையின நண்பனும் வந்ததாக சொன்னான் அவரை இங்க கூட்டிக்கொண்டு வந்தவரோ ?"
"இல்லை தம்பி ,அப்படி எதுவும் சொல்லவில்லையே "
"எனக்கு அப்படிதான் சொன்னான் . ஏன் உங்களுக்கு அதை மறைத்துவிட்டான் . நான் அவனுடன் ஒரு முறை போனில் கதைக்கும் போது ஏதோ அந்த மாதிரி நட்பு ஒன்று இருப்பதாக சொன்னான் "
"அவனுக்கு அப்படி ஏதும் இருந்தால் என்னிடம் நேர சொல்லாம் தானே ,இனி நான் என்ன செய்வது ,சின்ன வயதில வெளிநாட்டிற்கு வந்ததில் அப்படி மாறிவிட்டானோ தெரியவில்லை தம்பி .எனக்கு அவன் எப்படியாவது சந்தோசமாக இருந்தால் காணும்"
"அம்மா நீங்கள் கத்தி குளறி இந்த விடயத்தை பெரிது படுத்துவீர்கள் என்றுதான் பிரேம் பயந்தான் ,நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் நல்ல தெளிவான அம்மாவாக இருக்கின்றீர்கள் "
"இல்லை தம்பி ,உள்ளுக்குள் சற்று மனவருத்தமாக இருந்தாலும் பிள்ளையை பதினாறு வயதில் வெளிநாடு அனுப்பிவிட்டு இப்ப வந்து அப்படி செய் இப்படி செய் என்று சொல்ல எனக்கு உரிமையில்லை ,அவனை நண்பனுடன் வீட்டை வரசொல்லு எனக்கு பிரச்சனையில்லை "
தான் வந்த விடயம் இப்படி இலகுவாகமுடியும் என்று குலன் கற்பனையிலும் நினைக்கவில்லை .பிரேமிற்கு தொலைபேசியை போடுகின்றான் .
"பிரேம் உன்ரை ஆளையும் கூட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்கு வரட்டாம் ,என்ரை வேலை முடிந்துவிட்டது நான் வாறன் . BYE BYE " .