நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை 'டொராண்டோ'வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு பிள்ளைகளும், அக்கா ரதியும் (அவள் மகன் கதிர்,"அம்மா நாளைக்கு வேலையிலே தூங்க வழிய நேரிடும் "என இறக்கி விட்டுப் போய்யிருக்கிறான்) பால்ய வயதில் குடும்பத்தில் ஒருத்தனாக அயலிலே இருந்த… யூரோப்பிலிருந்து வந்திருக்கிற நடேசனை சுமார் 25,30 வருசத்திற்குப் பிறகு சந்திக்க வந்திருக்கிறார்கள் .
அவன் தரப்பில் ,மனைவி... தரப்பில் சில உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள் தான்.யூரோப்பை விட வெளிநாடுகள் என்ன பெரிதாக வித்தியாசமாக இருக்கப் போகிறது என.. தாயகமான ஈழமாநிலத்தையே முக்கியமாக பார்க்க வேண்டியவர்கள் என அழைத்துச் செல்கிறவன். ‘இறுதி யுத்தம்’ என சிறிலங்காவில் மனிதப் படுகொலைகள் மோசமாக நடந்த போது எல்லா நாடுகளிலும் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வல்லரசு நாடுகள் பாகிஸ்தானில் காலூன்றியது போல சிறிலங்காவிலும் காலூன்றி விட்டன.நிறைகூடிய குண்டுகள், வகை தொகையின்றி சிதறி வெடிக்கும் குண்டுகளை எல்லாம் சிறிலங்காபடையினர் சரிவர கையாளுமா? என்பதே சந்தேகம், சிறிலங்கா அரசின் அனுமதியில்லாமல் கூட,தன்னிச்சையாகவும் ,போடப்பட்டே இந்த மனிதப் பேரவலம் நடந்தன. ஈழத்ததமிழர்கள் மேலும் அதே பாலஸ்தீனர்களின் தலைவிதி கவிந்து விட்டது.
பெரியநாடுகளே போரை நடத்தியது போன்ற தோற்றம். நைஜிரியா அரசாங்கமே 'பொக்ககராம் போராட்டக்குழுவிற்கு அமெரிக்காவை ஆயுதங்கள் விற்க வேண்டாம்'என கூறுகிறது.சிறிலங்காவிடம் 'கொத்துக் குண்டுகளை பாவிக்கும்படி,அமெரிக்கா கூறியதை விக்கிலீக்ஸ் 'லீக்' பண்ணியிருக்கிறது. அமெரிக்காவின் வியாபாரமே இரண்டு பக்கமும் ஆயுதங்கள் விற்பது தானே..போல இருக்கிறது. இரண்டு உலகப் போர்களிலும் அதிகளவு வியாபாரம் பார்த்தது அமெரிக்கா என்றே சொல்லப்படுகிறது.
'போர்கள்'ஒரு வகை ‘சூது’ போல. நடைபெறுகின்றன. பெரியநாடுகள் உறுதியற்ற நாடுகளில் எல்லாம் சூதாட்டக் காய்களை நகர்த்துகின்றன. அவர்களுக்கு வீடியோ விளையாட்டுப் போல, புதிய புதிய உத்திகளை கண்டு பிடிப்பதில் ஆர்வமாய்யிருக்கிறார்கள்.நீதி,நியாயங்களை எல்லாம் டெக்னொலொஜி புறம் தள்ளி விட,ஆட்டம் ஆடுகிறார்கள். சிறிலங்கா,அவசரகாலச் சட்டத்தையும்,பயங்கரவாதச் சட்டத்தையும் கையில் (ஏற்படுத்திக்) எடுத்துக் கொண்டு இன்னொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களை காலனிநாடுகளைப் போல படுகொலைகளைச் செய்து கொண்டிருந்தது. எல்லா சிறிய நாடுகளிலுமே 'ஒரினத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே வாழலாம்'என்ற 'சைக்கோ' பரவிக் கிடக்கின்றன.அவை,சொந்த நாடற்ற இஸ்ரேலியரைப் போல, மக்களை படுகொலை செய்து விரட்டி அடித்தும் அவர்கள் நிலங்களைப் பறிப்பதும், அவர்களை சிறைகளில் நிரப்புவதும், அகதிகளாய் விரட்டியடிப்பதும் ...என சண்டித்தனங்கள் செய்கின்றன.இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பெரிய நாடுகள்,தடுக்காமல் எண்ணெய் வார்பது மட்டுமில்லாமல் அரசியல் செய்வதாகவும் இருக்கின்றன.உலகத்தில் அமைதி நிலவ முடியாதது இல்லை. முடியும்! பொறுப்பற்ற தன்மைகளால்...காட்டுமிராண்டித் தனமான தலைவிதி மாறாமல் அப்படியே (நிம்மதியற்றுக்) கிடக்கின்றன.
நடேசனும் அந்த ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றில் பங்குபற்றியிருந்தான். எல்லாமே வீடியோ பண்ணப் பட்டிருந்தன. தற்போது அவற்றை வைத்துக் கொண்டு சிறிலங்கா செல்பவர்க்கு வலை விரிக்கப் பட்டிருக்கிறதா? என அப்பப்ப வரும் செய்திகள் மிரட்டுகின்றன. வியாபார அரசியல் உலகத்தில் ,பெரிய நாடுகளின் அனுசரனையுடன் உலக அமைதியைக் காக்க எழுந்த அமைப்பு ஜக்கியநாடுகள்சபை.ஆனால் அந்நாடுகளே அச்சபையை பெரிதாக மதிக்காதது ஆச்சரிமில்லை தான்..உலகயுத்தத்தில் ஈடுபட்டவை, அவற்றில் 'ஈடுபடாத நாடுகளுக்கும் தாம் பெற்ற மனித துர்ப்பாக்கியத்தை சீரழிவை பெற வேண்டும்' என்ற ‘சைக்கோ’வில் வீழ்ந்து, கொலைவெறியுடன் செயல்படுகிறதா? என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. உறுதியற்ற சிறிலங்காவும் இவர்கள் கையில் வீழ்ந்து விட்டதாகப் படுகிறது. தம்மக்களைக் காப்பாற்ற கையாளாகத நாடுகளில் எல்லாம் கருமேகங்கள்.
தற்போது தாயகம் சென்றவர்கள் சிலர் சிறைகளில்,சிலரைக் காணவில்லை.தம் சக தோழமை நாடுகளையே புலனாய்கிறவை வீடியோவையும் சிறிலங்காவிடம் கையளித்திருப்பார்கள் போலவே படுகிறது.நடேசன் இம்முறையும் ஈழமாநிலத்திற்கே போக விரும்பினான்.பிள்ளைகள் பயந்ததால்"வேண்டாமப்பா"என மறித்ததால் இங்கே ..வந்திருக்கிறார்கள்.
கொஞ்ச நஞ்சமில்லை, நீண்ட காலத்திற்குப் பிறகு பார்க்கிறார்கள்.தற்போது,பேச்சில் ஐயாவைப் போல இழுத்து இழுத்துப் பேசுற அவன் உருவத்திலும் அவரைப் போலவே இருக்கிறான். ."நாங்க கொழும்பிலிருந்து வந்த போது..." என ரவியோட கதைத்துக் கொண்டிருந்தான். "என்ன நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அல்லவா வவுனியா வந்தனீர்கள்" என விஜயன் குறுக்கிட்டான். தொடர்ந்து ."ஓ!,அது தான் அப்பாவை ஐயா என கூப்பிடுறீர்களா ?"எனக் கேட்ட போது,"ரவி "ஐயா என்றது சிங்களச் சொல்லில்லை.. .காலனியாட்சியாளர்கள் ஆசியாவில் கால் பதிக்க முதலே தமிழர்மத்தியிலே அப்பாவை "ஐயா.."என அழைக்கிற வழக்கம் நிலவியிருக்கிறது.பிறகு நிலபுலன்களை உடைய பெரிய குடும்பங்களில் நிலவி,பிறகு சில ஊர்களில் மட்டுமாக அருகி விட்டது.” என்றான்.
அப்ப,அப்பாவை 'ஐயா'எனக் கூப்பிடுறது விஜயனுக்கு வித்தியாசமாகவே இருந்தது, தெளிவுபடவில்லை. அவனுடைய அம்மாவும் கூட அவருடைய அப்பாவை 'ஐயா'என கூப்பிடுறதே இருந்திருக்கிறது.அவனுக்கு தாத்தாவையே பெரிதாக தெரியாது.அவர் வேளைக்கே இறந்து விட்டவர்.
அவர்களுடைய பேச்சு தொடர... "வவுனியாவில் முதலில் உங்கட பெரியப்பாட குடும்பம் தான் இருந்தது.எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது "என்றான் ரவி.அப்ப,யாழ்ப்பாணத்திருந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வவுனியாவில் காட்டை அழித்து 'விவசாயப் பண்ணைகளை'அமைத்துக் கொள்றது இருந்தது.நடேசனின் பெரியப்பா,குடுபத்தோடு வந்து அப்படி ஒன்றை ஏற்படுத்துவதிலே ஈடுபட்டிருந்தார்.1958ம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் அவரைக் குழப்பி விட்டது.
நல்ல சிங்களவர்களால் கொழும்பில் இவர்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால்,பெரியப்பா பயந்து போனார். வீட்டிலே நடேசனின் அப்பா, கடைசித் தம்பி,செல்லம் கூட."டேய்,நீ இங்க வந்து இரு"என கூப்பிட்டு அவர்களை வவுனியா வீட்டில் அமர வைத்து விட்டு வெட்டிய காணியையும் கையளித்து விட்டு யாழ் திரும்பி இருக்கிறா ர்.அதன் பிறகு இவர்கள் காட்டில், மேலும் 2 ஏக்கர் காணியை வெட்டி விவசாயம் செய்தார்கள்.. முதலில், நிலக்கடலை,அவரை,நெல் என சேனைப்பயிர்கள் செய்தார்கள்.பிறகு கிணறும் வெட்டி விவசாயத்திலும் வெற்றி ஈட்டினார்கள்.
இதெல்லாம் நடக்கிற போது விஜயனுக்கு 2,3 வயசிருக்கலாம்.அவனுக்கு தெரியாதது அல்லது விளங்காதது ஆச்சரியமில்லை தான்.
அவனுக்கு யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த பிறகே, சரிவர அவர்கள் சென்ற கிராமத்தில் இருந்த அவனுடைய பெரியப்பா குடும்பம் தெரிய வந்தது. நடேசன் குடும்பம் போல அவர்களோடும் பழக்கம் ஏற்பட்டது
ரவிக்கும், நடேசனுக்கும் இடையில் 2,3 வயசு வித்தியாசமே இருந்தன. ரவி, வவுனியாவில் கூட படித்தவர்களின் பெயர்களை எல்லாம் மறக்காமல் தெளிவாக ஞாபகம் வைத்திருந்து...விசாரித்தான். தற்போது,'ஃபேஸ் புக்' மூலமாகவும் ஓரிருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தானிருக்கிறான். நடேசனுக்கும் ஞாபக சக்தி அதிகம். அவனும் மூளையை குடைந்து குடைந்து பதிலளித்துக் கொண்டிருந்தான். வன்னியில் சிறு கோபதாபங்களுக்கு, ஒ.லெவல் ஃபெயிலானால்... எல்லாம் ஓடுற ரயிலுக்கு முன்னால் பாய்ந்து விடுகிறவர்கள் அதிகம். விவசாயத்திற்கு வைத்திருக்கிற பூச்சி மருந்தை எடுத்து குடித்து விடுகிறவர்கள். அவர்களைக் கூட ...கதைத்தார்கள்.அவர்களில் சிலர் நண்பர்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது தான். "ஓ!,அவன்ர அக்கா இங்கே தான் இருக்கிறார்" என்றான் நடேசன்.
விஜயனுக்கு இருபது வருசத்திற்கு முதல் நடந்ததே நினைவுக்கு வர சிரமப்படுகிறது. இவர்கள் அனாவசியமாக கதைக்கிறார்கள்
விட்டால் இருவருமே அம்மாவின் வயிற்றுக்குள் இருந்த இருண்ட உலகத்தை பற்றியும் கதைப்பார்கள் போல இருந்தது.
ஒருமுறை,வவுனியாவில்,விஜயனுக்கு 3 வயசிருக்கும் போது படுக்கையில் அவனுக்குப் பக்கத்தில் வீட்டுக்கூரையிலிருந்து ஓரளவான பாம்பொன்று தொப்பென்று விழுந்தது.ரவி தான் விழுந்தடித்துக் கொண்டு ஓடி அயலில் இருந்த தச்சுவேலைகள் செய்கிற சிங்கள பாஸ்ஸை கூட்டி வந்தான். அவர் ,சிங்கள தொனியில் தமிழ் நல்லாவே பேசுபவர்.விஜயனை எப்பவும் "விஜய் ஐயா ....." என செல்லமாக கூப்பிடுறவர்."தவளைக் குஞ்சுகள் என்ன விநோதம்,ஆடிப்பாடி,ஓடி..என்ன விநோதம்"என மகிழ்ச்சியாக பாடுவார். அவர் பாடிய மற்ற வரிகள் இவனுக்கு மறந்து விட்டன.அவர் செய்த தளபாடங்கள் தான் எல்லார் வீட்டிலேயும் இருக்கின்றன. அவர் நல்லவர்.என்ன பிரச்சனை என்றாலும் அங்கே தான் ஓடுறவர்கள். நடேசனுக்கு அந்த இடத்தில் நின்றது …நல்லாய் ஞாபகம் இருந்தது.இருவரும் அதை பற்றிப் பேசினார்கள்
அவர் நீண்ட தடியுடன் வந்து பாம்பை வெளியில் எடுத்துப் போட்டு அடித்தார்."குறை உயிரில் விட்டால் பழிவாங்கும்"எனக் கூறி மண்ணெண்னெய் ஊத்தி எரித்து நிலத்தில் தாட்டு விட்டும் சென்றவர்.காட்டுமுனி,பாம்பின்,மிருகங்களின் சோடி பழி வாங்கும் என்கிற ஜதிகங்கள் எல்லாம் எங்குமே கிடக்கின்றன. மனிதர்களின் ஆத்மா(உயிர்)அழியாதது.செத்த பிறகும் ...வெளியில் அலைந்து கொண்டிருக்கும் என்றால்,மற்ற உயிரினங்களிற்கும் அதே ஆத்மா இருக்கத் தானே செய்யும். அவையும் அலையும் தானே.பழிவாங்கும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் அதனோடு பின்னப்பட்டவையே.
அதனாலே பொதுவாக எல்லா உயிரிகளை அடிக்கிறதுக்கு கொல்றதுக்கு எல்லாரும் பயப்பட்டார்கள் ;தயங்கினார்கள். தமிழரை அடித்த சிங்களவர்களுக்குக் கூட அந்த நம்பிக்கைகள் இருக்கின்றன.அவர்களுடைய விகாரைகள் உள்ளேயும் 'இப்படி செய்தால் இன்ன தண்டனை'என கலர் கலராக சித்திரக் குப்தரின் சித்திரங்களை கீறி வைத்திருக்கிறார்கள்.அன்னியன் சினிமாவில் காட்டிய அத்தனை தண்டனை முறைகளும் அதிலே இருக்கின்றன.
சிங்கள மக்கள் அடிப்படையில் நல்லவர்கள் .ஆனால்,சிங்கள அரசியல்வாதிகள் தான் (அவர்களுள் இனத்துவேசத்தை ஏற்றி, ஏற்றி)அவர்களை நஞ்சாக்கி விட்டு இருக்கிறார்கள்.
பாம்படிக்கிறதுக்கு துணிச்சல் வேறு வேண்டும் . பாஸ் எதற்கும் துணிந்தவராக வீரராக பாம்பை அடித்தது எல்லாம் விஜயனுக்கு துப்பரவாய் நினைவில் ஒட்டவில்லை.நடந்தது போலவே இல்லை .
அக்கா, மறதிக்கு "பிறகு,பிறகு ஏற்படுற ஸ்ரோங்கான அனுபவங்கள் பழையவற்றை மறக்க வைத்து விடுகிறது,அல்லது மங்கலடைய வைத்து விடுகிறது'இல்லையா,என்ன?"என விளக்கம் கொடுத்தார். உண்மை தான்.கலவர நிகழ்வுகள் தான் எத்தனை பேரை பையித்தியம் பிடிக்க வைத்திருக்கிறன!"19,20 வயசிற்குள் நடைபெறுபவையே தாம் பசுமரத்தாணிப் போல பதிந்து கிடக்கின்றன"என்கிற பெரிசுகளின் பேச்சுக்களை எல்லாம் தற்போதைய நிலவரங்கள் உடைத்துக் கொண்டிருக்கின்றன
அக்காட சினேகிதி நடேசனின் அக்கா..
அக்கா வெளிநாடு வந்ததிற்கு ஒருமுறை யாழ்ப்பாணம் போய்யிருந்தார். அப்ப ,வவுனியாவில் பயணம் தடைப்பட்டு ஒரிரவு நின்று தான் தொடர்ந்தது. அப்ப, குருமண்காட்டுக்குக்கு போக முடியாமல் போனதை குறித்து வெகுவாக கவலைப்பட்டார். அவரைப் பற்றி விசாரித்தார்.
யாழ்ப்பாணத்தில், ஒ.லெவல் வரையில், எ.லெவல் வரையில் படித்து,அதற்கு மேல் படிக்கிற 'சிமார்ட்'அற்றுப் போற போது.. பெடியள் எல்லாருக்கும் கொழும்பிற்கு வேலை தேடி போறது மரதன் ஓட்டமாகவே இருந்தன ஆனால்.எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடவில்லை. அவனுக்கு முந்திய சந்ததியில் ,சிறிமாட காலம் வரையில்... பொதுவாக எல்லாருக்கும் நிம்மதியான காலமாகவே இருந்தது.அவர்,எப்ப சிறிலங்காவை 'குடியரசா'க்கி அறிவித்து,கல்வியில் சிங்களவருக்குச் சார்ப்பாக மாற்றங்களைச் செய்தாரோ...அப்ப இருந்து சனி தொடர ஆரம்பித்து விட்டதுஅது மட்டுமில்லை சிறிமா,குடியரசாக்கிய பிறகு பல வஞ்சகக் கொள்கைகளை புகுத்திற சிங்கள நிபுணர்களின் கைப்பாவையாகி விட்டார்.
58ம் ஆண்டு கலவரம் நடந்து கனகாலமாகி விட்டதால்,1ம் உலகப் போர் நடந்த பிறகு "இனி நடக்காது"என நம்பிக்கை அங்கிருக்கும் மக்களுக்கு ஏற்பட்டது போல.. இங்கே நம்மவர்களிற்கும் "இனி ஒரு கலவரம் ஏற்படாது"என்ற நம்பிக்கையும் எந்த கொழுகொம்பற்றும் வளர்ந்து விட்டிருந்தது.நாமாக கற்பனை பண்ணிக் கொண்டோம்,அவ்வளவு தான்!
யாழ்ப்பாணம் வரட்சியான பிரதேசம் மட்டுமில்லை,வேலை வாய்ப்பிலும் வரண்டு போய்யிருந்தது.அங்கே..எங்கே வேலைகள் கிடைத்தன?யாழ்ப்பாண வர்த்தகம் குறுகியது.அதில்கிடைத்தாலும் கொத்தடிமைத் தனமான வேலைகளே கிடைத்தன.போதிய சம்பளம் கிடையாது.அவற்றை விட நகரப்புறத்தில்,பெறுகிற கூலி வேலைகள் பரவாய்யில்லையாய் இருந்தன.
கொழும்பில் உத்தியோகம் எடுப்பதே'வாழ்க்கையாக கிடந்தது அதாவது.நாம் திரும்பவும் கொழும்பின் கால்களில் வீழ்ந்து விட்டோம்.
அரசாங்க வேலை கிடைப்பதாக இருந்தால் கொழும்பிற்கே போய் குத்துக்கரணம் அடித்தே அந்த வேலையை பெறுவதாகவும் இருந்தது. அவை லஞ்சம் கொடுக்கக் கூடியவர்கள்,செல்வாக்காக இருந்தவர்களின் தயவைப் பெற்றவர்களால் மட்டுமே முடியக் கூடியவை
இதற்கெல்லாம், சிங்கள அரசாங்கம்,ஈழத்தமிழரின் வேலை வாய்ப்பில் 'மேலும்,மேலும் பட்ஜெட்டில் கட்' போல கை வைத்து கொண்டிருந்ததே காரணம். ஏற்கனவே குறைந்தளவிலேயே தான் வேலைகள் கிடைத்துக் கொண்டிருந்தன . அதிலேயும், அதிலேயும் கை வைக்க ,வேலையற்றுப் போறக் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிக் கொண்டே போனது.தமிழ்ப் பெடியள்கள் மத்தியில் விரக்தி,வெறுப்பு,கோபம் எல்லாம் காட்டுத் தீ போல அதிகமாக பற்றிப். படர்ந்தன .இவற்றிலிருந்து விடுதலைப் பெற அவை கிடைக்க வேண்டுமானால் ‘ஆயுதப் போராட்டம்’ தான் ஓரே வழி என்று நம்பத் தொடங்கி விட்டார்கள்.
இங்கேயிருப்பவர்கள்,அங்கேயிருப்பவர்கள் இயக்கத்திற்குப் போய்யிருப்பார்களோ?என்றும்,அங்கேயிருப்பவர்கள் இங்கேயிருப்பவர்கள் போய்யிருப்பார்களோ?என்றும் ...குழம்ப காலம் எவ்வளவு மாறிப் போய் விட்டிருந்தது.
சகோதரக் கொலைகள்,படுகொலைகள்..என ரத்தச்சரித்திரமே கடந்து போய் விட்டிருக்கிறது. இதில் மக்கள் வேறு,பெடியள் வேறு என்றில்லை.முந்திய சந்ததியான அவர்கள் விடுதலைக்காக போராடாடு விட்டதன் பயன்,பெடியளின் போராட்டம் குறைப்பிரசவமாகி...இன்று ரத்தச்சகதியில் அனைவரும்.
பொதுவாக, இப்ப , ஒருத்தருக்கு ஒருத்தர் ‘உயிருடன் (தப்பி) இருக்கிறார்களா?’என்று அறிவதில் ஆர்வம் இருந்தது.
சந்தோசமாக குருமண்காட்டு நினைவுகளை பேசி களைத்தார்கள். .அடுத்து, படம் எடுப்பதில் கவனம் சென்றது.தற்போதைய டிஜிட்டல் கமரா அதிகளவு பேர்களை அடக்க சிரமப்பட்டது.
விஜயன்"பெடியள்கள் எல்லாரும் ஒன்றாக,பெண்கள் எல்லாரும் ஒன்றாக எடுக்கலாம்"என்று கூறினான்.
"பெடியள்களா...?"என்ற சிரிப்பு பெண்கள் மத்தியிலிருந்து எழுந்தது.
காதோரம் மட்டுமில்லை தலைமயிர் முழுதும் நரைகள் பரவ ,நெற்றியில்,பின் தலையில்..எல்லாம் வலுக்கை விழ பெருப்பாலான ,பிள்ளைகள்...இருபது (வயசு)க்கு மேலே வளர்ந்து,சிலர் யூனிவெர்சிட்டியும் கூட படித்து முடித்தவர்களாக இருக்க…அட, நாம கிழவர்கள் என்பது எப்படி மறந்து போயிற்று?
நாமெல்லாம் போர்க் காலங்களில் அகப்பட்டு தப்பி வந்ததில் இருந்து. வெளிய வர முடியவில்லை அந்நினைவுகள் 'ஸ்ரோங்கானதாக இருந்து நம் மூளையை ஃபிரீஸ் பண்ணி விட்டது. நம் பிள்ளைகள் கிழவர்கள் ஆனாலும் கூட "நாம் அந்த நிலையிலே இருந்து விடுபடுவது,ஃபீல் பண்ணுவதிலிருந்து வெளிய வருவது முடியாது போல இருக்கிறது.
"நாம் எல்லாம் கிழவர்கள்"ரவியும்,நடேசனும் தங்கட கையை ஒருதரம் கிள்ளிப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தார்கள்.
இரவுணவு சாப்பிட்டு விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்.
.இனி எப்ப மறுபடியும் சந்திப்பார்களோ?அல்லது சந்திக்காமலேயே மேலே போய் விடுவார்களோ யாருக்குத் தெரியும்?மேலே யாரோ ஒருவரும் இருந்து சிரிக்கிறார். யார் இவர்?'ஒ!,அவர் தான் கடவுளா? அவர் சிரிக்கிறதை விட்டு விட்டு , எங்களுக்கு சுதந்திரமான ஒரு ஈழமாநிலம் கிடைக்க வழி செய்யலாமே!செய்வாரா...?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.