”டியர் மிஸ். சுதா – பாரதி பாடல்கள் சிலவற்றைக் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதவேண்டியிருக்கிறது. அருங்காட்சியக இயக்குநருக்கு இத்துடன் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவர்களிடத்தில் பாரதி பாடல்களின் மூலப்பிரதிகள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவருடைய தனிப்பாடல்கள் சிலவற்றை அவர் கையெழுத்தில் உள்ளது உள்ளபடி ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தனுப்பி உதவ முடியுமா? சிரமத்திற்கு மன்னிக்கவும்.”
_ நேர்மையான எழுத்தாளர் என்று, எழுத்தின் மூலம் அறிந்து, முதியவராகவும், விழித்திறன் குறைந்துகொண்டே வரும் நிலையில் இருப்பவராகவும் உள்ளதை அறிந்து, என்னாலான எழுத்துதவி செய்வதாய் அறிமுகமாகி, பரிச்சய நிலையைக் கடந்த பிறகும் உதவியை அதிகாரமாகக் கேட்கும் உரிமையெடுத்துக்கொள்ளாத உயரிய பண்பு; எத்தனை நெருங்கியவராயிருந்தாலும் ‘take it for granted’ ‘ஆக நடத்தாமலிருக்கும் பெருந்தன்மை எத்தனை பேரிடம் இருக்கிறது? விரல் விட்டு எண்ணிவிடலாம்… அந்தப் பெரிய மனிதரிடம் இருந்தது. உண்மையிலேயே பெரிய மனிதர்தான் நான்கு மாடிகள் மரப்படிகளில் கால்கடுக்க ஏறி, கடிதத்தைக் காட்டி, அனுமதி பெற்று, பாரதியின் கவிதைகளடங்கிய நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்து, தேவைப்பட்ட கவிதைகளைச் சுட்டிக்காட்டி, ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்துத் தரச் சொல்லி, அவற்றை வாங்கிக்கொண்டுவந்த கையோடு தபாலில் பத்திரமாக அனுப்பிவைத்து…. தவறாமல் நன்றிக்கடிதம் வந்தது. குட்டிக் குட்டி எறும்புகள் வரிசை தவறாமல் சீராகச் செல்வதைப் போன்று அடித்தல் திருத்தல் அற்ற கையெழுத்து! ஆனால், சென்னை வந்த சமயம் அந்த மூலப்பிரதிகளைத் தானும் பார்க்கவேண்டுமென முதுமை மூச்சுவாங்கச் செய்ய, ஆமைவேகத்தில் நகரும் உடம்போடு அந்த மனிதர் என்னுடன் கைத்தடியோடு கிளம்பியபோது எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.
‘எத்தனை நம்பிக்கையின்மை…. நான் சரியாகப் பிரதியெடுத்திருப்பேனா, தேர்ந்தெடுத்திருப் பேனா என்ற சந்தேகம்… செ, எத்தனை உண்மையாய் அலுவலகத்திற்கு ‘லீவு’ போட்டு வேகாத வெய்யிலில் போய் பிரதி கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். எனக்கு இந்த அவமானம் தேவைதானா…?’
ஆட்டோவில் அவருக்கே இயல்பாக உள்ள பண்போடு, உரிய இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டவராய், வழக்கம்போல் நலம் விசாரித்துக்கொண்டே வந்தார். குரலே பரிவாய், பரிவே குரலாய் பொருந்திய தொனி மனதை எப்பொழுதும்போலவே நெகிழச் செய்தது. ‘தலைமுறை இடைவெளி’ என்பது ஒரு myth என்று அவரோடு பேசும்போதெல்லாம் தோன்றும். ஆறே வயது பெரியவளான சக ஊழியைக்கு தயிர் வடையை எப்படி விதம்வித மாகச் செய்வது (முக்கோண வடிவில், செவ்வக வடிவில், ஏன், அணுகுண்டு வடிவில் கூட!) என்று விலாவாரியாக நீட்டி முழக்கி போதிப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது. உறவுக்கார மேன்மக்கள் ஏராளமானோர்க்கு அத்தானுடைய மச்சானுடைய சகலையின் சித்தி பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்ததுதான் அகில உலக சதாசர்வகாலத் தலைப்புச் செய்தி….. தலைமுறை இடைவெளி என்ற பொதுத்தலைப்பின் கீழ் எல்லாவற் றையும் பகுத்துவிட முடியுமா என்ன…?’ - எப்போதும்போல் மனதில் பலவாறாய்க் கிளர்ந் தெழுந்த சிந்தனையோட்டத்தையும் மீறி உள்ளுக்குள் கனன்ற கோபத்தையும்,கசப்பையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், கொஞ்சமும் மரியாதை குறையாமல் பதிலளித்துக் கொண்டிருந்தேன்.
மாடிப்படியில் ஏற முடியாமல் மூச்சு வாங்க ஏறியவரைப் பார்த்து மனதிற்குள் கோபம் மறைந்து வருத்தமே எஞ்சியது.
‘என்னை ஏன் நம்பவில்லை….? இவருடைய எழுத்தின் மீது, மனிதம் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறேன் நான்…. சொன்னபடிக்கு சரியாய் பிரதியெடுத்திருக்க மாட்டேன் என்று இந்த மனிதருக்கு எதனால் சந்தேகம் வரப்போயிற்று…? மனதின் புலம்பல் கண்ணுக்குள் வலித்தது…..
“இதுதான் சார் இயக்குனர் அறை.”
அனுமதி பெற்று உள்ளே நுழைந்ததும், “வாங்க சார்!” என்று எழுந்துநின்று வரவேற்றார் இயக்குநர். “மெட்டீரியல்ஸ் கேட்டிருந்தீங்களே, கிடைச்சுதா?”
”ஓ! இவங்க எல்லாத்தையும் பிரதியெடுத்து அனுப்பிச்சிருந்தாங்க. ரொம்ப நன்றி. அந்த மூலப் பிரதிகளை நான் கொஞ்சம் பார்க்க வேண்டும். தயவு செய்து தர முடியுமா?”
“தாராளமா! நோட்டுப்புத்தகத்தில்தான் எழுதியிருக்கிறார் பாரதியார். இதோ கொண்டுவரேன். தேவையான பிரதிகளை எடுக்கவில்லையா?”
_ கேட்டுக்கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் உள்ளறைக்குச் சென்றார் இயக்குனர். எனக்குள் அவமானமும்,துக்கமும் கவிந்தது.
“இதோ, இந்தாங்க சார்.”
வயோதிகத்தில் தளர்ந்து மெலிந்திருந்த கைகள் மௌனமாய் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டின.
“சரியாய்த்தானே சார் எடுத்தனுப்பியிருக்கிறேன்?” உள்ளடக்கிய அளவிலான ஒருவித கோபமும் கெஞ்சலும் கலந்த தொனியில் எழுந்த என் கேள்விக்கு மௌனமே பதில்.
அந்த மதிய நேரத்தில் சுற்றிலும் பளிங்கு நிசப்தம். நோட்டுப்புத்தகத் தாள்கள் புரட்டப்படும் ஓசை அறையெங்கும் ஓங்கரித்தது.
_”முத்து முத்தாய் எத்தனை அழகான கையெழுத்து! பார்த்தாயா சுதா!”
அந்தக் குரலில் ஒரு தழுதழுப்பு தளும்பி வழிந்தோடியது. பளிச்சென்று புதிர்முடிச்சவிழ்ந்ததாய் ‘அட! பாரதியின் கையெழுத்தை நேரில் தரிசிக்கத் தான் இந்த மனிதர் இத்தனைப் பிரயத்தனப்பட்டு இங்கே வந்திருக்கிறார்!’ என்பது புரிந்தது! அங்கே, அந்த வேளையில் கூடு விட்டு கூடு பாய்தல்போல் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது!
வெளியாளாய் நின்று வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது அன்று….
ஆனால், அதன்பிறகு வந்த நாட்களில், உள்ளாளாகிவிட்ட நிலைபோல் ஒன்றில் மூச்சுத் திணறும் நேரமெல்லாம், மீண்டும் ‘மியூஸிய’த்திற்குச் செல்லவேண்டும்போல் தோன்றுகிறது….! பார்க்கவேண்டும் பாரதியின் முத்துமுத்தான கையெழுத்தை…..! அந்தக் கையெழுத்தைக் கொண்டு ‘கண்ணன் மனநிலையைக் கண்டுவரச் சொன்னவனை…..! ‘ஆசை முகம் மறந்து போச்சே…..’ என்று ஆற்றாமையோடு அங்கலாய்த்தவனை…! ‘யாதுமாகி நின்றாய் காளீ! என்று கொண்டாடியவனை…! ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால், என் மூச்சை நிறுத்திவிடு!” என்று நெக்குருகிக் கேட்டவனை….! நிறையன்பின் ஒவ்வொரு அணுக்கணத்தையும் நிரந்தரமாக்கியவனை….!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.