தன்னுடைய மனைவியோடும், குழந்தையோடும் அவன் அந்த மலை வெப்ப நீரூற்றுக்கு வந்துசேர்ந் திருந்தான். அது ஒரு பிரபல வெப்ப நீரூற்று. மனிதர்களிடம் பாலுணர்வையும் பிள்ளைப்பேற்றுத் திறனையும் பெருக்குவதாகக் கூறப்பட்டது. அதன் ஊற்று அசாதாரண வெப்பம் வாய்க்கப் பெற்றிருந்தது. எனவே, அது பெண்களுக்கு நிச்சயம் நல்லது செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு கூட, அருகாமையிலிருந்த குறிப்பிட்ட தேவதாரு மரமொன்றும், பாறையொன்றும் அங்கு வந்து குளிப்பவர்களுக்குக் குழந்தைப் பேற்றைத் தரும் என்ற மூடநம்பிக்கையும் அங்கு நிலவி வந்தது.
ஜப்பானிய அரிசி பானத்தில் காணப்படும் கசடில் பதப்படுத்தப்பட்டு ஊறுகாயாக்கப்பட்ட வெள்ளரித்துண்டத்தைப் போலிருந்த முகத்தையுடைய சவரத் தொழிலாளி ஒருவன் அவனுக்கு சவரம் செய்துகொண்டிருந்த போது அவன் அந்த தேவதாரு மரத்தைப் பற்றி விசாரித்தான். (இந்தக் கதையைப் பதிவு செய்யும்போது பெண் குலத்தின் நற்பெயரைக் காப்பதில் கவனமாக இருக்கவேண்டும் நான்).
“நான் சிறுவனாக இருந்தபோது, பெண்களைப் பார்க்கவேண்டும்போல் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக்கும். அவர்கள் அந்த தேவதாரு மரத்தைச் சுற்றித் தங்களைப் பிணைத்துக் கொள்வதைப் பார்ப்பதற்காய் விடியலுக்கு முன்பே எழுந்துவிடுவோம். எப்படியோ, குழந்தை வேண்டும் பெண்கள் பைத்தியம் பிடித்தவர்களாய் நடந்துகொள்கிறார்கள்.”
“அவர்கள் அப்படிச் செய்வதை இப்பொழுதும் நீங்கள் பார்ப்பதுண்டா?”
”ஆனால், அந்த மரம் பத்து வருடங்களுக்கு முன்பே வெட்டப்பட்டுவிட்டது. அதிலிருந்து கிடைத்த மரத்துண்டங்கள், துகள்களைக் கொண்டு அவர்கள் இரண்டு வீடுகள் கட்டினார்கள்.”
“ம்ம்ம், ஆனால், அதை யார் வெட்டினார்கள்? அதை வெட்டியவன் கட்டாயம் ஒரு தைரியசாலியாகத்தான் இருக்கவேண்டும்.”
“அப்படியில்லை. வெட்ட வேண்டும் என்பது மாவட்ட அலுவலகத்திலிருந்து வந்த ஆணை. எப்படியோ, அந்தப் பழைய நன்னாட்கல் போயே போய்விட்டன.”
இரவு உணவுக்கு முன்பாக, அவனுடைய மனைவி தங்களை அந்த மகோன்னத நீரூற்றில் முழுவதுமாக நனைத்தாள். அந்த நீரூற்று அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், பெண்களை பாக்கியசாலிகளாக்கும் ஊற்றாகக் கருதப்பட்டது அதுவே என்பதால் அந்த நிறுவனத்தின் விலைமதிப்பற்ற ஆபரணமாக அது விளங்கியது. அங்கு குளிக்க வருபவர்கள் முதலில் விடுதியிலுள்ளிருக்கும் நீரூற்றில் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு பிறகு மகோன்னத நீரூற்றுக்கான கற்படிகளில் கீழிறங்கிச் செல்வது நியதி. மூன்று பக்கங்களில் அந்த நீரூற்று மரப்பலகைகளால் ஒரு குளியல் தொட்டியின் வடிவில் வேலியிடப்பட்டிருந் தது. நீரூற்றின் அடிப்பகுதி இயற்கையான பாறை. வேலியிடப்படாத பக்கத்தில் ஒரு குளியல் தொட்டியின் வடிவொழுங்கைக் குலைப்பதாய் ஒரு பிரம்மாண்டமான வழுக்குப் பாறை யானையைப் போல் நின்றுகொண்டிருந்தது. அதனுடைய மினுமினுப்பான கருத்த மேற்பரப்பு, வெப்ப நீரூற்றினால் ஈரமாக இருந்தது. வழுவழுப்பாகவும், வழுக்குத்தன்மை வாய்ந்ததாகவும் விளங்கியது. இந்தப் பாறையின் உச்சியிலிருந்து நீரூற்றுக்குள் வழுக்கிக்கொண்டே வந்திறங்கினால் குழந்தை பிறக்கும் என்ற ஐதீகம் வழக்கிலிருந்ததால் அது வழுக்குப்பாறை என்று அழைக்கப்பட்டது.
இந்த வழுக்குப்பாறையை அண்ணாந்து நோக்கிய ஒவ்வொரு முறையும், “இந்த அமானுஷ் யம் மானுடத்தியே கேலிப்பொருளாக்கிக்கொண்டிருக்கிறது. தங்களுக்குக் குழந்தைகள் இருந்தேயாகவேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள், இந்த வழுக்குப் பாறையில் வழுக்கிக்கொண்டுபோனால் தங்களுக்குக் குழந்தைகள் பிறக்கும் என்று நினைக்கும் மனிதர்கள் எல்லோரும் இந்த மிகப்பெரிய, சகதி அப்பிய முகத்தால் எள்ளிநகையாடப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்டான் அவன்.
அந்தப் பாறையின் கரிய, சுவரொத்த முகத்தைப் பார்த்து ஒரு கசந்த புன்னகையை வெளியேற்றினான்.
’ஹோ, பாறையே, நீ என்னுடைய ‘பழமை விரும்பி’ மனைவியின் தலையைக் கையி லெடுத்து அவளை நீரூற்றுக்குள் அமிழ்த்தினாய் என்றால் ஒருவேளை நான் சிறிது வியப்ப டைவேனாயிருக்கும்.’
திருமணமான தம்பதியரும், குழந்தைகளும் மட்டுமேயிருந்த அந்த வெப்ப நீரூற்றில் அவனுடைய மனைவி சற்றே வினோதமாக அவனுக்குக் காட்சியளித்தாள். பல நேரங்களில் தான் அவளை அறவே மறந்துபோயிருந்ததை நினைவுகூர்ந்தான் அவன்.
காதுகளை மூடும் நவீன பாணி சிகையலங்காரத்திலிருந்த ஒரு பெண், நிர்வாணமாகப் படிகளில் இறங்கிவந்தாள். ஸ்பானிய மோஸ்தரில் இருந்த ‘ஹேர்-பின்’களைக் கூந்தலிலிருந்து அகற்றி அவற்றை அங்கிருந்த அடுக்கொன்றில் வைத்தாள்.
’ஹப்பா, எத்தனை அழகான யுவதி!’ இதைச் சொல்லியவாறு அவன் தன்னை நீரூற்றுக்குள் அமிழ்த்திக்கொண்டான். மறுபடி அவள் வெளியே வந்தபோது புதிதாகக் கழுவித் தூய்மைப் படுத்தப்பட்ட அவளுடைய கூந்தல், இதழ்களனைத்தும் அகற்றப்பட்டு ஒரே ஒரு சூலகம் மட்டுமே எஞ்சியிருந்த அழகிய தோட்டப்பூ போல் காட்சியளித்தது.
தன் மனைவியல்லாத வேறொரு பெண் அவளது கணவனோடு குளியல் தொட்டியில் இருந்தது அவனை மிகவும் சங்கோஜமாக உணரவைத்தது. அதுவும், அந்தப் பெண் ஒரு யுவதியாக இருந்தது வேறு அவனது தர்மசங்கடத்தை அதிகரித்தது. அந்த இளம் பெண்ணைத் தன் மனைவியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் நிர்பந்ததிற்காளானவன் மனதில் சுயவெறுப்பு பெருக்கெடுத்தோட, வெறுமையுணர்வின் வெள்ளச்சுழலில் முற்றுமாக மூழ்கினான்.
“நானே அந்த தேவதாரு மரத்தை வெட்டி ஒரு வீடு கட்டிக்கொண்டிருப்பேன். இது என்னு டைய மனைவி. இது என்னுடைய குழந்தை – இந்த வார்த்தைகள் எல்லாவகையான மூட நம்பிக்கைகளையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிடுகின்றனவே? சொல்கிறதா, இல்லையா, பாறையே?”
அவனுக்குப் பக்கத்தில், நீரின் வெப்பத்தால் சிவந்துபோயிருந்த மேனியோடு மேனியோடு அவனுடைய மனைவி, ஓய்வாகக் கண்களை மூடிக்கொண்டிருந்தாள்.
அந்த நீரூற்றின் மேல் ஒரு மஞ்சள் நிற ஒளிவெள்ளம் அலைபாய்ந்தது. ஆவி, வெண்பனி மூட்டமாய் மேலுயர்ந்தது.
“ஹேய், உன்னைத்தானே பையா? விளக்கு போட்டாகிவிட்டது. இன்னும் எத்தனை பேர் அங்கேயிருக்கிறார்கள்?”
“இரண்டு பேர்.”
“இருவரா? ஒருவர் உச்சியில். மற்றொருவர் அடியில் ஹேய் பையா, அந்த விளக்கு மிகவும் வெளிச்சமாக இருக்கிறது. நான் மேலிருந்து அடிநோக்கிப் பாய்ந்து முழுகப் போகிறேன். இந்த விளக்கு உண்மையாகவே மிகவும் பிரகாசமாக இருக்கிறது.”
காது-மூடிய கூந்தலலங்காரத்தில் இருந்த அந்தப் பெண் தன் மகளை அரைக்கண்ணால் பார்த்தாள்.
கடவுளே, இந்தப் பெண் தான் எவ்வளவு புத்திசாலி.’ அன்று மாலை அவன் தனக்கு முன்பாகவே தன் மனைவியையும் மகளையும் தூங்கச் சொல்லி அனுப்பிவைத்துவிட்டு, பத்துப் பனிரெண்டு கடிதங்களை எழுதி முடித்தான்.
விடுதியினுள்ளிருந்த நீரூற்றின் உடைமாற்றும் அறையில் அவன் ஆச்சரியத்தால் சிலையாகி நிலத்தில் வேரோடியதாய் அசையாமல் நின்றான். வெள்ளைத் தவளை போல் தோற்றமளித்த ஒன்று அந்தப் வழுக்குப்பாறையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தது. முகம் கீழ்ப்புறமாயிருக்க அவள் தன் கைகளை அகற்றிக்கொண்டாள். தன் பாதங்களால் உதைத்தபடி அந்த வழுக்குப்பாறையில் சறுக்கிக்கொண்டே இறங்கினாள். அந்த நீரூற்று மஞ்சளாக இளித்தது. அவள் திரும்பவும் பாறையுச்சிக்காய் மேல்நோக்கி ஊர்ந்து சென்று பாறையை இறுகப் பிடித்துக்கொண்டாள். அந்தப் பெண் தான் அவள்.
இடுப்புத்துண்டைக் கைகளால் இறுகப்பற்றிய நிலையிலவன் படிகளில் விரைந்தோடி மேலேறினான். பின்னிரவின், அமைதியான இலையுதிர்காலப் படிகள்.
’அந்தப் பெண்மணி இன்றிரவு என் குழந்தையைக் கொல்லவரப்போகிறாள்.’
அவனுடைய மனைவி, கூந்தல் தலையணைக்கு மேல் அலைபாய்ந்தபடியிருக்க, குழந்தையைச் சுற்றிக் கையிட்ட நிலையில், உறங்கிக்கொண்டிருந்தாள்.
‘ஓ பாறையே, உன்னுடைய அபத்தமான மூடநம்பிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு பெண்ணால் கூட என்னை இந்த அளவுக்கு அச்சுறுத்த முடிகிறது. ஒருவேளை என்னுடையதேயான மூட நம்பிக்க _ அதாவது, இது என்னுடைய மனைவி, இது என்னுடைய குழந்தை என்பதாக _ எனக்கே தெரியாமல், நூற்றுக்கணக்கானவர்களை, ஒருவேளை ஆயிரக்கணக்கானவர்களைக் கூட அச்சத்தால் நடுங்கச்செய்துகொண்டிருக்கக் கூடும். அப்படித்தான் இல்லையா பாறையே?’
தன் மனைவியின் மீது ஒரு புதிய, ஆவல் ததும்பும் நேயத்தை அவன் மனம் உணர்ந்தது. அவள் கையைப் பற்றித் தன் பக்கமாய் இழுத்தவாறே அவளை எழுப்பினான் அவன்.
“யேய் _ விழித்துக்கொள்!”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.