அப்போது அப்பாவிடம் ஒரு துவக்கு இருந்தது. துவக்குகளைப் பற்றிய பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் பெரிதாக ஏற்படாதிருந்த காலம் அது. அரசாங்கத்திலிருந்து உரிய முறையில் லைசன்ஸ் பெற்றவர்கள்தான் துவக்கு வைத்திருக்கலாம். அவ்வாறு அந்த வட்டாரத்திலேயே அப்பாவிடம் மட்டும்தான் துவக்கு இருந்தது. வீட்டினுள் அவனது கைக்கு எட்டாத உயரமாக சுவரில் துவக்கு மாட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அது அப்பாவுக்கு எட்டும் உயரம். அதற்காகவென்றே சுவரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு பெரிய ஆணிகளில்… ஒன்றில் அதன் விசைப்பகுதியைக் கொழுவி, சற்று உயரமாக உள்ள மற்ற ஆணியில் சுடு குழாயைப் பொறுக்க வைத்துவிட்டால்.. துவக்கு எடுப்பாகத் தோற்றமளித்துக்கொண்டிருக்கும். அறையின் ஜன்னல் திறந்திருந்தால் வெளிவிறாந்தையில் நின்றே துவக்கைக் காணலாம்.
விளையாட வரும் நண்பர்களைக் கூட்டிவந்து, அவன் ஜன்னலூடாகத் துவக்கைக் காட்டுவான். வகுப்பிலுள்ள சக மாணவர்களையும் இதற்காகவென்றே விளையாட வருமாறு வீட்டுக்கு அழைத்து வருவான். அவர்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய… ‘அட அது உண்மைதான்!’ எனப் பார்த்திருப்பார்கள். வீட்டிலிருக்கும் துவக்கைப் பற்றி அவன் நண்பர்களிடம் பல கதைகளை அளந்திருக்கிறான். இலக்குத் தவறாமல் சரியாகச் சுடும் லாவகம் பற்றி விளக்கமளித்திருக்கிறான். ‘இந்தப் பெரிய துவக்கை எப்படி நீ தூக்குவாய்?’ எனப் பிரமிப்புடன் அவர்கள் கேட்பார்கள். ‘அது அப்படித்தான்..!’ எனச் சமாளித்துவிடுவான். எப்படிச் சுடுவது என அப்பா தனது நண்பர்களுக்கு விளக்கும்போது கவனித்திருக்கிறான். ‘விசையைத் தட்டி வெடி தீரும்போது ஒரு எதிர்த் தாக்கம் இருக்கும். அப்போது கை தழும்பி இலக்குத் தவற வாய்ப்புண்டு. அதனால் துவக்கின் பிடிப் பகுதியை வாகாக தோள்மூட்டில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்’ என அப்பா தன் நண்பர்களுக்குக் கொடுத்த பயிற்சியை எல்லாம் அவன் தனது நண்பர்களுக்கு எடுத்துவிடுவான்.
இதனால் அவனுக்கு நண்பர்களிடையே ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தது. வகுப்பிலும் சரி… விளையாடும்போதும் சரி, அவன்தான் லீடர். அவன் இட்டதுதான் சட்டம். விளையாடும்போது கன்னை பிரித்தால், அவனது பக்கம் சேர்ந்துகொள்ளத்தான் யாரும் விரும்பினார்கள். அவ்வளவு ஏன்.., ஆசிரியர்களிடமிருந்துகூட அவனுக்கு அடி விழுவதில்லை! அதற்கெல்லாம் அந்தத் துவக்கின் மகிமைதான் காரணம் என அவன் நம்பியிருந்தான்.
ஒரு வகையிற் பார்த்தால், அவன் கெட்டிக்கார மாணவனாகவும் இருந்தான். ஆசிரியர்கள் அவன்மேற் கொண்டிருந்த அன்புக்கு அதுவும் ஒரு காரணம். ஆறாம் வகுப்பு மாணவர்கள், கொடுத்த கணக்கைச் செய்யமுடியாது திணறினால்… கணக்குப் பாடம் எடுக்கும் கனகசபாபதி வாத்தியார் ஆள் விட்டு நாலாம் வகுப்பிலிருந்து அவனை அழைத்துவரச் சொல்வார். கரும்பலகையில் கணக்கை எழுதிவிட்டு, “சிவகுரு.. இந்தக் கணக்கை இவங்களுக்குச் செய்து காட்டு!” என்பார். அப்பாவின் பெயரைக் குறிப்பிட்டுத்தான் எப்போதும் அவர் அவனை அழைப்பது வழக்கம். அந்த அளவிற்குத் துவக்கு அப்பாவுக்கு விலாசம் கொடுத்திருந்தது!
கரும்பலகையில் அவன் கணக்கைப் போட்டு விடையை எழுதியதும், “கை தட்டுங்கோடா..!” என கனகசபாபதி வாத்தியார் உற்சாகமூட்டுவார். வகுப்பு மாணவர்கள் எல்லோரும் கை தட்டுவார்கள். இவ்வாறு பெரிய வகுப்பு மாணவர்களிடையேயும் அவனது பிரபல்யம் பரவியது. அந்தக் கதைகளை அப்பாவிடம் வந்து கூறினால் மகிழ்ந்து போவார்…
“அப்பிடித்தான்… நல்லாய்ப் படிச்சு பெரிய இன்ஜினியராய் வரவேணும்..!” என அப்பா ஊக்கப்படுத்துவார்.
அப்பா அப்படி மகிழ்ந்து இலகுவாக இருக்கும் சந்தர்ப்பங்களில், “துவக்குச் சுடப் பழக்கிவிடுறீங்களா..?” என்று கேட்கலாமா எனத் தோன்றும். சுடும்போது எதிர்த்தாக்கம் இருக்கும் என்று அப்பா சொல்லியிருக்கிறார். அது தன்னையே தள்ளி விழுத்திவிடுமோ தெரியவில்லை. அப்படியானால் இன்னும் வளர்ந்தபின்தான் அந்தத் துவக்கைத் தூக்கலாம். ஆனால் ஒருபோதும் அப்பாவிடம் அதுபற்றிக் கேட்டதில்லை.
அப்பா கண்டிப்பானவர். காலையில் நேரத்துக்கு எழும்பவேண்டும். அந்த விடிகாலையிலேயே கண் தூங்காமற் படிக்கவேண்டும். பிறகு பாடசாலைக்குப் போவதற்கு முதல் தோட்டத்திற்குத் தண்ணீர் விடவும்வேண்டும். பழக்க வழக்கங்கள் சரியாக இருக்கவேண்டும். இவை கொஞ்சமும் பிசகக்கூடாது. பாடசாலைத் தவணைப் பரீட்சையில் பின் தங்கினாற்கூட, ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு விளாசல்தான்! பூவரசங் கதியாலில் தடியை இழுத்துப் பிடுங்கினால், அது தும்பாகப் போகும்வரை அடிதான்! அம்மா அழுது மன்றாடினாலும் விடமாட்டார். அதனாற்தானோ என்னவோ அவன் எப்போதும் வகுப்பில் முதல் மாணவனாகவே வந்துகொண்டிருந்தான். பாவம், அண்ணன்தான் வேண்டிக்கட்டுவான். இதெல்லாம் அப்பாவிடம் இயல்பாகவே ஒரு பயம் ஏற்படக் காரணமாயிருந்தது. ஏதாவது தேவையென்றால் அம்மாமூலம்தான் தூது அனுப்பிக் கேட்கமுடியும். அம்மாவிடம் கூறினால், “அந்தத் துவக்கை உன்னாலை தூக்கவே ஏலாதேடா..!” எனச் சிரித்து மழுப்பிவிடுவாள்.
சில நாட்களில் அப்பா தனது நண்பர்களுடன் வேட்டைக்குப் போவார். அப்போது தன்னையும் கூட்டிப் போகமாட்டாரா என அவனுக்கு ஆவலாயிருக்கும். துவக்கு அப்பாவின் காரில் முன் இருக்கையில் மேல் நோக்கியவாறு சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். போவோர் வருவோர் எல்லோருக்கும் அது கண்களிற் படும். இரவில் சாமத்திலோ, அடுத்த நாட் காலையிலோ திரும்ப வரும்போது அப்பா ஏதாவது மிருகங்களைச் சுட்டுக்கொண்டு வந்திருப்பார். அதைக் கட்டித் தூக்கித் தோலுரித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்குமாக, இறைச்சி பங்கு போடப்படும்.
அயலட்டையில் உள்ளவர்களெல்லாம் அப்பாவிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனையென்றால் தீர்வு காண்பதற்கு அப்பாவிடம்தான் வருவார்கள். தூர இடங்களிலிருக்கும் நண்பர்கள்கூட அப்பாவைத் தேடி வருவார்கள். அவரது பேச்சை மறு பேச்சின்றிக் கேட்பதற்கு யாரும் தயாராக இருந்தார்கள். காதல் பிரச்சனைகள் கல்யாணப் பிரச்சனைகளைக்கூட அப்பா தீர்த்து வைத்திருக்கிறார். சீதனப் பிரச்சனையில் இழுபடும் திருமணங்களுக்குப் பண உதவியும் செய்வார். வீட்டில் கண்டிப்பானவரென்றாலும், வெளியில் அட்டகாசமாகச் சிரித்துப் பேசிக் காரியங்களைச் சாதிப்பதில் சமர்த்தர். யாராவது குடிமனைகளுக்கிடையில் அல்லது சாதிப் பிரச்சனைகளில் சண்டை சச்சரவு ஏற்பட்டாலும், அந்த வட்டாரத்து விதானையார்கூட அப்பாவைத்தான் கூட்டிப்போவார். சில இடங்களுக்குப் போனால் திரும்ப வர இரவாகிவிடும். ஊரிலுள்ள சண்டியர்களெல்லாம் அப்பாவுக்கு மடக்கம்! சில விசர் நாய்களைச் சுட்டுத் தள்ளும் வேண்டுகோளும் அப்பாவுக்கு வரும். ஆனால் அப்பா ஒருபோதும் மனிதர்களைச் சுட்டதில்லை.
சில வேளைகளில் அப்பா அவனையும் அண்ணனையும் வேட்டைக்கென்று கூட்டிப்போவதுண்டுதான். ஆனால் பெரிய அடர்ந்த காடுகளையும் காட்டு மிருகங்களையும் காணலாம் என்ற எதிர்பார்ப்புடன் போகமுடியாது! “காடுகளுக்குள்ள உங்களைக் கூட்டிக்கொண்டு போகேலாது… ஒரு தடைவ நாங்களே வழி தவறி அலைஞ்சு திரிஞ்சனாங்கள்.” என அப்பா ஞாயமும் சொல்வார்.
பாடசாலை விடுமுறை நாட்கள் அல்லது சில சனி ஞாயிறுகளில் சும்மா வேடிக்கை காட்டுவதற்காக, சிறியதும் பெரியதுமான பற்றைகள் நிறைந்த தரவை வெளிகள்.. போன்ற இடங்களுக்குத்தான் கூட்டிப்போவார். அவனுக்கு பெரிய மிருகங்களை, துவக்கு எப்படிச் சுட்டு விழுத்துகிறது என்று பார்க்க ஆசை! ஆனால் பற்றைகளுக்குள்ளிருக்கும் முயல்கள் அல்லது ஏதாவது நீர்ப் பறவைகள்தான் அம்பிடும். எவ்வளவு உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் பறவைகளைக்கூட கண் இமைக்கும் நேரத்தில் சுட்டு விழுத்திவிடுகிறது துவக்கு! வெடி வைத்தபின், அப்பா துவக்கை மடக்கித் திறந்து தட்டிவிட்டதும்… தோட்டா வெறும் கோதாக வெளியே விழும். ஒரு விளையாட்டுப் பொருளைப்போலத் தோன்றும் அந்தச் சிறிய சிவந்த உருளையை அவன் எடுத்துச் சேர்த்துக்கொள்வான். புகை மணத்துடன் அதன் வாய் திறந்திருக்கும். அதனுள்ளிருந்து அவ்வளவு விசையுடன் சென்று பறவையைத் தாக்கியது என்ன என்று பார்க்கவேண்டுமென மனம் குருகுருக்கும்.
அப்பா வீட்டிலில்லாத ஒரு தருணத்தில் அந்தக் கள்ள வேலையைத் தொடங்கினான். அண்ணனையும் அதற்குக் கூட்டுச் சேர்த்துக்கொண்டான். அப்படியானாற்தான் விஷயம் வெளியே கசியாமற் தப்பிக்கொள்ளலாம். தோட்டாக்கள் போட்டுவைக்கும் பெட்டியிலிருந்து ஒரு தோட்டாவை எடுத்துக்கொண்டு கோடிப்பக்கம் போனான். பக்குவமாக அதன் வாய்ப் பகுதியை நீக்கித் திறந்து பார்த்தபோது.. சிறிய குண்டுகளாக இருந்தன. அதன் பிறகுதான் பயம் பிடித்துக்கொண்டது. அதை என்ன செய்வது? திரும்பவும் உள்ளே குண்டுகளைப் போட்டு, பக்ட் பண்ணி ஏற்தனவே இருந்தமாதிரி ஒரு அசுகையும் தெரியாமல் வைத்துவிடுவோமா? ஆனால் சரியாக பக்ட் பண்ணாவிட்டால் அந்த வித்தியாசத்திலேயே அப்பாவிடம் பிடிபட நேரிடும். அல்லது அதைத் துவக்கிலே போட்டுச் சுடும்போது, அது சரியாக வெடிக்காமல் அப்பாவுக்கு ஏதாவது ஆபத்து நேரிடவும்கூடும். செய்வதறியாது அண்ணனிடம் கேட்டான், “என்னடா.. செய்வம்?”
“எனக்குத் தெரியாது.. நீதானே உடைச்சது..!” – அண்ணன் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.
அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. குண்டுகளைத் திரும்பவும் தோட்டாவிற்குள் போட்டு நிரப்பி.. அடைத்து அப்படியே நிலத்தைத் தோண்டிப் புதைத்துவிட்டான். அண்ணனை ஒருமாதிரி வளைத்து.. யாருக்கும் சொல்லவேண்டாமென்று தடுத்துவிடலாமென்றுதான் நினைத்தான். ஆனால் அண்ணன் அரச தரப்புச் சாட்சியாக மாறி அம்மாவுடன் சம்பவ இடத்திற்கே வந்து சேர்ந்தான்!
அம்மா பதறிப்போனாள். ‘அது நிலத்துக்குள்ள கிடந்து… ஆராவது தெரியாமல் மிதிச்சிட்டால் வெடிச்சிடுமோ தெரியாது..!’ எனப் பயந்தாள்.
“அப்பிடியொண்டும் வெடிக்காதம்மா.. சும்மா பயப்பிடாதையுங்கோ..!” என அம்மாவைச் சமாதானப்படுத்தினான்.
ஆனால் அம்மா பயத்தில், அப்பா வந்ததும் விஷயத்தைக் கூறிவிட்டாள். அப்பாவிடமிருந்து விளாசல்தான் கிடைக்கப்போகிறது என அவனுக்கு மூத்திரமே போகும் போலிருந்தது! அப்பா அடிக்கவுமில்லை.. ஏசவுமில்லை!
“நல்ல காலம்..! அது வெடிச்சிருந்தால்.. என்ன நடந்திருக்கும்..?” என எச்சரிக்கை மட்டும் செய்தார்.
உண்மையில் தனக்கு அன்றைக்கு நல்ல காலம்தான்.., அதுதான் அப்பாவிடமிருந்து அடி விழவில்லை என நினைத்துக்கொண்டான். தோட்டாவைத் திரும்பவும் தோண்டி எடுத்து.. கொஞ்சம் சரி செய்து.. வானத்தை நோக்கிச் சுட்டு அதை செயலிளக்கச் செய்தார் அப்பா. சில நாட்களில் அப்பா துவக்கை அதன் இருப்பிடத்திலிருந்து எடுத்து சேவீஸ் பண்ணுவார். குழாய் வேறு, பிடி வேறாகப் பாட்ஸ் பாட்ஸாகக் கழற்றித் துப்புரவு செய்து, எண்ணெயிட்டுத் துடைத்து வைப்பதுண்டு. அப்போதெல்லாம் அவன் அப்பாவுடன் கூட இருந்து உதவி செய்வான். தையல் மெசினின் வீல்களுக்குப் பாவிக்கும் எண்ணெயை அப்பாவிடம் எடுத்துக் கொடுப்பது.. கழற்றப்பட்ட துவக்கின் பகுதிகளை பொலிஷ் செய்வது போன்ற தொட்டாட்டு வேலைகளைச் செய்வான். அவ்வேளைகளில் துவக்கின் ஸ்பரிசம் அவனுக்கு ஒருவித பரவசப்படுத்தை ஏற்படுத்தும்!
அந்தத் துவக்கு தனக்கே என்றாவது சொந்தமாகுமா..?
இப்போது இல்லாவிட்டாலும் தான் வளர்ந்தபிறகாவது, அப்பா அந்தத் துவக்கைத் தனக்குத் தரக்கூடும் என்றே நினைத்துக்கொள்வான். ஆனால், அப்பா அதைத் தனக்குத் தருவாரா அல்லது அண்ணனுக்குத்தான் கொடுப்பாரா என்றும் தெரியவில்லை. அண்ணன் தன்னைவிட மூத்தவனாகையால் தனக்கு முதல் பெரியவனாகிவிடுவான். அவனுக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று தோன்றும். ஒருவேளை அண்ணனிடம் கேட்டால்.. தனக்காக விட்டுத்தந்துவிடுவான் எனத் தனக்குத் தானே சமாதானமும் அடைந்துகொள்வான். தோட்டாவைக் கண்டதுமே அண்ணன் அந்த ஓட்டம் ஓடுகிறான். அண்ணனாவது… துவக்கை எடுத்துச் சுடுவதாவது!
நாட்டில் ஏதாவது குழப்பநிலை ஏற்பட்டால் அல்லது அப்படியான சாத்தியம் தென்பட்டால், துவக்குச் சொந்தக்காரர்கள் எல்லோரும் பொலிஸ் நிலையத்தில் துவக்குகளை ஒப்படைக்கவேண்டுமென அறிவித்தல் கொடுப்பார்கள். அப்பா அதற்காக வீட்டிலிருந்து துவக்கைக் கொண்டுபோகும்போது அவனுக்குக் கவலையாக இருக்கும்.
துவக்கு வைத்திருப்பவர்கள் கலவரத்தில் அவற்றை ஈடுபடுத்தாமல் கட்டுப்படுத்துவதற்காக அல்லது கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸ்காரர்களிடம் போதுமான துவக்குகள் இல்லாத காரணத்தால் பெற்றுக்கொள்கிறார்களாக இருக்கும் என யோசித்திருக்கிறான். அப்போதெல்லாம் பொலிஸ்காரர்கள் சுடுவது குறைவு! ஜீப் வாகனங்களில் துவக்குகளைச் சும்மா நிறுத்திப் பிடித்துக்கொண்டு வீதிவலம் போவார்கள். வெறுங்கையுடன் உள்ள மக்களெல்லாம் அந்தக் காட்சிகளைப் பார்த்தே அடங்கிப்போய்விடுவார்கள் என்பது அவர்களது எண்ணமாயிருக்கலாம். அவனுக்கு அதெல்லாம் பெரிய விஷயமேயல்ல!
துவக்கைப் பொலிஸ் நிலையத்திற் கொடுத்தால் அதைத் திரும்பத் தருவார்களா என்ற கவலையே மேலோங்கி நிற்கும். அல்லது பொலிஸ்காரர்களின் அவதானமில்லாத கடுமையான பாவனையில் துவக்கு பழுதடைந்தும் போகலாம். ஒருவேளை திரும்பத் தரும்போது மாறுபட்டு வேறொரு துவக்குக் கிடைக்கவும்கூடும். இவ்வாறான சந்தேகங்கள் அவனுக்குத் தோன்றிக்கொண்டேயிருக்கும். எனினும் அதையெல்லாம் அப்பாவிடம் கேட்கமுடியாது. பாடசாலை விட்டு வந்ததும், சுவரில் அதன் இருப்பிடத்தைப் போய்ப் பார்ப்பான். எப்போது துவக்குக் கிடைக்கும் என்ற கேள்வி அவனை விட்டுப் போகாது.
துவக்கு திரும்ப வரும்போது ஜெயிலுக்குப் போய் வந்ததுபோல சோபை இழந்துபோயிருக்கும். தூசி படிந்தும் கீறல்கள் விழுந்துமிருக்கும். உடனேயே அதைத் துடைத்துத் துப்பரவு செய்து எண்ணெயிட்டு வைக்கும் வேலை தொடங்கிவிடும். சில தடவைகள் துவக்கு அப்படிப் போய் வந்ததில் அவனுக்கு அது பழக்கமாகப்போய்விட்டது. பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. கொடுத்தால், சில வேளைகளில் ஐந்து ஆறு மாதங்களின் பின்னராவது திரும்பக் கிடைக்கிறது.
அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தான். ஆனால் பின்னர் ஒரு தடவை வீட்டை விட்டுப் போன துவக்கு, திரும்ப வரவேயில்லை! அப்போது நாட்டில் கலவரமோ குழப்பங்களோ ஏற்பட்ட காலமும் அல்ல! இன்றைக்கு வரும் நாளைக்கு வரும் என அவன் பார்த்துப் பார்த்திருந்து ஏமாந்துபோனான். துவக்கிற்கு என்ன கதி நடந்திருக்கும் என நினைத்து நினைத்து மாய்ந்துபோனான். துவக்கு பற்றிய நினைவுகள் அடங்கிப்போக மறுத்தன.
அம்மாவிடம்தான் அவ்வப்போது கேட்பான், “அப்பாவிட்டைக் கேளுங்கோ… துவக்கு எங்கையென்று..!”
அம்மாவுக்குச் சரியான பதில் சொல்லத் தெரியவில்லை. அம்மா அதுபற்றி அப்பாவிடம் கேட்கவுமில்லை. உண்மையைச் சொல்வதானால் அம்மாவுக்கு அதைப்பற்றிய கவலையே இல்லை என அவனுக்கு அம்மாவின் மீது கோபம்கூட ஏற்பட்டது.
“அப்பாவுக்கு உழைப்பில்லை.. கஷ்டப்படுறார்..! துவக்கை ஒருவேளை வித்திருப்பார்.. அதைப்பற்றிக் கேட்கக்கூடாது… கவலைப்படுவார்.. பாவம்!” – அம்மா அவனைச் சமாதானப்படுத்தினாள்.
அந்தக் கவலை அவனையும் பற்றிக்கொண்டது. அந்த நாட்களில் அப்பா கஷ்ட நிலையிற்தான் இருந்தார். அன்றன்றாடம் வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பதற்கே முடியாமலிருந்தார். அவனும் அண்ணன் தம்பிமார்களும் மேல் வகுப்புகளுக்கு வந்துகொண்டிருந்தார்கள். படிப்புச் செலவுகளையும் சரிக்கட்டவேண்டியிருந்தது. எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்தாலும், முன்னர் இருந்த உற்சாகமும் அட்டகாசமும் அவரிடம் குறைந்துதானிருந்தன. நண்பர்களும் அவரைத் தேடி வருவது குறைவு! அப்பா அவர்களிடமிருந்து தானாக ஒதுங்கிக்கொண்டாரா அல்லது அவரிடமிருந்து சுவறுவதற்கு எதுவுமில்லாமற் போனதும் நண்பர்கள் எல்லாரும் விலகிக்கொண்டார்களா என அவனுக்குப் புதிராயிருந்தது.
துவக்கு அப்பாவிடமிருந்த பலத்தையும் உற்சாகத்தையும் கொண்டுபோய்விட்டது என்றே அவனுக்குத் தோன்றியது. அவர் அதை விற்றிருக்கக்கூடாது. அவன் இப்போது சிறுவனல்ல. உயர்வகுப்பு மாணவன். நல்லவை கெட்டவைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவநிலை அவனுக்கு வந்திருந்தது. துவக்கை விற்றுச் சீவிக்கவேண்டிய நிலைமை அப்பாவுக்கு வந்ததே எனக் கவலையடைந்தான். அவர் அந்தத் துவக்கை எவ்வளவு விரும்பியிருந்தார் என்பது அவனுக்குத்தான் தெரியும்! அப்பாவுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றவேண்டும். ‘ரேக் இற் ஈஸி.. அப்பா.. !’ என்று சொல்லவேண்டும்.
அப்பாவின் கடுமையும் கண்டிப்பும் வீட்டிற்கூட அற்றுப்போனது! அது அவனுக்கு மிகுந்த கவலையை அளித்தது. பொருளாதார நெருக்கடிதான் அப்பாவை இந்த நிலைமைக்குத் தள்ளியிருக்கிறது…, விரைவில் படித்து ஆளாகி, அப்பாவைக் கதிரையில் இருத்தி உழைத்துக் கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொள்வான். விரைவில் என்றால்… அதற்கு ஒரு காலம் வேண்டாமா..? கடவுளே, அதுவரை அப்பாவின் நிலைமை இன்னும் மோசமாகிவிடக்கூடாது! கஷ்டநிலைமை சொல்லாமலே வந்து மனிதனைத் தள்ளி விழுத்திவிடுகிறது! அதைத் தாங்கும் சக்தி அப்பாவுக்கு இருக்கவேண்டுமே எனப் பிரார்த்தித்துக்கொள்வான். நிற்கும்போதும்.. நடக்கும்போதும்.. அப்பாவைக் காணும்போதும்.. கவலையும் பிரார்த்தனையும் மனதிற்குள் தோன்றிவிடும். அப்பாவின் சோகமெல்லாம் தனக்குள்ளும் தொற்றிக்கொண்டதுபோல உணர்ந்தான்.
வளர்ந்தவனாகிவிட்டாலும் சிறு பராயத்து நினைவுகள் அவ்வப்போது வந்து ஊசியைப்போலக் குற்றும். அந்தத் துவக்கின் நினைவில் மனது விம்மும். அதைத் தொட்டுத் துடைத்து நெஞ்சோடு அணைத்துத் தூக்கிச் செல்லும் நினைவுகள் வந்து ஒத்தடமும் கொடுக்கும். அப்பாவின் துவக்கு இப்போது யாருடைய கையில் இருக்கிறதோ என ஒருவித ஏக்க உணர்வும் படரும்.
அந்த நாட்கள் போயே போய்விட்டன!
ஒரு நாள் அவன் ஊரை விட்டும் அப்பாவை விட்டும் பிரிய நேர்ந்தது. மேற் படிப்பு, தொழில் வாய்ப்பு எனக் காலம் அவனை வேறு வேறு இடங்களுக்குக் கொண்டுபோனது. நாட்டுக்குள் விதவிதமான துவக்குகள் வந்து சேர்ந்தன. எங்கும் துவக்குகள்.. எவரிடமும் துவக்குகள்… அவை எல்லா வல்லமையும் கொண்டவையாயிருந்தன! ஜீப் வாகனங்களிற் போவோரும், துவக்குகளைச் சும்மா வடிவு காட்டுவதற்காக மட்டும் கொண்டு செல்வதில்லை! வேட்டையாடுதல் நாட்டுக்குள்ளே அமோகமாக நடந்தேறியது! எங்கும் மனிதர்களே வேட்டையாடப்பட்டார்கள்! மனித இறைச்சிகளை அவரவராகப் பங்கு போட்டுக்கொண்டார்கள்! அப்போதெல்லாம் அவனுக்கு, சிறுவயதில் தான் அப்பாவின் துவக்குமீது ஒரு கவர்ச்சியுடன் கொண்டிருந்த பிரமை நினைவில் மேலேழுந்து வரும். எனினம் அது ஒரு பாதகமற்ற துவக்கு என்றே அவன் கருதினான். யாரையும் துன்புறுத்தாமல் சுவரில் மாட்டப்பட்டு எப்போதும் ஓய்வுநிலையில் இருந்த துவக்கு அது! ஊரிலுள்ள தம்பியவர்களின் பாதுகாப்புப் பற்றி அப்பா கவலைப்பட்டு, அவனுக்கு அடிக்கடி வற்புறத்திக்கொண்டிருந்தார்…
“தம்பியவங்களையும் எங்கையாவது கொண்டுபோய்ச் சேர்த்துவிடு!... தப்பியொட்டி இருக்கட்டும்!”
அவனைப் போலவே தம்பியவர்களும், அப்பாவையும் அம்மாவையும் விட்டு ஒவ்வொரு திக்குகளாகப் பிரிந்து போயினர். ஊரை விட்டு எங்கு போனாலும், ஒரு நாளைக்கு அவன் ஊரோடு வந்து மணமுடித்துக்கொண்டு தங்களோடு இருப்பான் என அப்பா நம்பியிருந்திருக்கலாம். அதற்கு அவன் சம்மதிக்காது தனது காதல் விடயத்தை வெளிப்படுத்தியபோது அப்பா ஒதுங்கிக்கொண்டார்…
“உன்ரை விருப்பப்படி போய் செய்துகொண்டு.. எங்கையாவது இரு..!”
பத்துப் பதினைந்து வருடங்களைக் காலம் வலு கெதியாகக் கொண்டுபோனது. எப்போதாவது ஊருக்குப் போய் அப்பா அம்மாவைப் பார்த்து வருவான். நாட்டுநிலைமைகள் மோசமடைந்து.. பாதைத் தடைகள் பயணக் கஷ்டங்கள் எல்லாம் அவனை நிரந்தரமாகவே ஊரிலிருந்து பிரித்துவிட்டது போலிருந்தது. தொலைபேசித் தொடர்பு மட்டும் அவ்வப்போது மகன் என்ற கடமையை ஈடு செய்தது.
“உன்ரை பிள்ளையளைக் கூட்டிக் கொண்டுவந்து காட்டு..!” என அப்பா கேட்டுக்கொண்டிருந்தார்.
பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சேறு சகதிகளுக்குள்ளாகவும் கடலேரியூடாகவும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு பெரும் பயணம் போய் வரும் கஷ்டத்தை எண்ணிக் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தான்.
ஒருநாள் அப்பாவே அவனது வீடு தேடி வந்துவிட்டார்… அந்தத் தள்ளாத வயதில்! எது எப்படியோ அது அவனுக்குப் பெரிய பேறு பெற்றுவிட்ட மகிழ்ச்சியை அளித்தது. பிள்ளைகளுடனும் அவனது மனைவியுடனும் என்றும் யாருடனும் இல்லாத அன்னியோன்யத்துடன் பழகினார். பிள்ளைகளை மடியில் இருத்திக் கதைகள் கேட்பார். அந்தமாதிரித் தங்களை அரவணைத்து அப்பா வளர்த்ததில்லையே என அவனுக்கு ஆச்சரியமாயிருக்கும். ஆறதலாயிருக்கும்போது தனது பழைய நாள் நினைவுகளைக் கதை கதையாகக் கூறுவார்.
பிள்ளைகளைப் பிரிந்திருந்த ஆதங்கத்தை, அந்த நாட்களை நினைவுகூர்வதன்மூலம் ஆறுதலடைகிறாராயிருக்கலாம் என அவன் எண்ணிக்கொள்வான். அப்போதுதான் அந்தக் கதையும் தெரியவந்தது… … அப்பா வழக்கம்போல வேட்டைக்குப் போய் வந்திருக்கிறார். சுட்டுக் கொன்று வந்த கொழுத்த முயலைத் தோலுரித்து வெட்டியபோது… அதன் வயிற்றில் குட்டிகள்..!
“பிள்ளையளுக்கும் சொல்லயில்லை.. தாய்க்கும் சொல்லயில்லை.., நிலத்தைக் கிண்டி அப்பிடியே தாட்டுப்போட்டு.. அண்டைக்கே துவக்கையும் கொண்டுபோய் பொலிஸ் ஸ்டேசனிலை குடுத்திட்டு வந்திட்டன்..!”
மூச்சு நின்றுவிட்டதுபோல அப்பா சற்று நேரம் பேச்சற்று இருந்தார்.
அதைக் கேட்டு அவன் அதிர்ந்துதான்போனான்.
அந்தத் துவக்கின் கதையைக் கூறுவதற்கென்றே வந்தவர்போல, அடுத்தநாட் காலை அப்பா போய்விட்டார்! காலையில் எழுந்து வழக்கம்போலத் தேகப்பயிற்சி செய்து.. உணவருந்திவிட்டு ஓய்வுக் கதிரையிற் சாய்ந்தவர்.. அப்படியே கண்களை மூடி அமைதியடைந்தார்.
(மல்லிகை சஞ்சிகை – 2011, காற்றுவெளி இணைய இதழ் 2012)
பதிவுகள் இதழுக்கு அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.