அந்தத் தமிழர், காலை ஒன்பதிற்குப் படுக்கையை விட்டெழுந்து கழிவறைக்குச் சென்று தன் சலம் பாய்ச்சிய பின், வழக்கம் போல் அன்று சவரம் செய்வதிலிருந்து தப்பலாமா எனக் கண்ணாடியில் பார்த்தார். ஒரு மில்லிமீற்றர் நீளத்தில் அவரின் நாடியிலிருந்து கீழே தூங்கிய நரை வளர்த்தி, கோதுமை-மா இடியப்பம் பிழியும் போது வரும் வெள்ளைப் புழு-வால் போல் தோன்றிற்று. அதை இன்னும் ஒருநாள் இருக்க விடமுடியுமென முடிவெடுத்த மறுகணம், வளரும் புழுக்களுக்கும் தான் போட்டிருந்த சட்டையின் கழுத்து-வெட்டுக்கும் மத்தியில், நெஞ்சின் மேற்பக்கம் ஒரு பெரிய கரிய இலையான் போல் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டு இருப்பதைக் கண்டார். சாவகாசமாக அதை நுள்ளிப் பிடுங்கிக் கண்ணால் பார்த்து, நுகர்ந்தும் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்த வாசனைகளில் ஒன்று! நல்லதான எதையும் எறிந்து வீணாக்க மாட்டாதார், அதைத் தன் வாயினுள் போட்டு நாக்கில் வைத்துத் துழாவித் தாலாட்டி அன்புடன் மெல்லமாகக் கடித்து அதை மிகமிகச் சுவைத்து உண்டார். அதன் பின்னர் பல்விளக்கி முகம் கழுவித் தன் காலை உணவைத் தயாரிக்கக் குசினிக்குச் சென்று ஓரத்தில் இருந்த சிற்றலை மின்னடுப்பின் கதவைத் திறந்து எதையோ உள்வைத்தார்.
சென்ற இரவு இருவர் கொண்டுவந்து அளவளாவிச் சென்றபின் அவர் மகிழ்ந்து உண்டு, அதே பிளாஸ்ரிக் இயத்தில் மூடிக் குளிர்ப் பெட்டியுள் கவனமாகச் சேமித்து வைத்த மிச்சம் அரைப் பங்கு மாட்டிறைச்சிக் கொத்து றொட்டியைச் சூடாக்கி, வழக்கம் போல் ஒரு வாழைப்பழம், தன் நீரிழிவுக் குளிசைகள் முதலியவற்றுடன் ஆறு சக்கரீன் வில்லைகளால் இனிப்பூட்டிய கறுத்தக் கோப்பியுடன் அருந்திக் கொண்டே இணைய வலையில் தன் காலைநேர 10-20 ஈமெயில்களைப் பார்த்து உரிய நடவடிக்கைகளை எடுத்து விட்டு, தொலைக் காட்சியில் எஞ்சியிருந்த ஆங்கிலச் சிரிப்புத் தொடர்நிகழ்ச்சிகளைப் பதினொன்று வரை பார்த்து மகிழ்ந்து ரசித்து விட்டுத் தனது புதிதாகத் தொடங்கிய வாழ்க்கைத் திட்டத்தை அன்றின் 24 மணிகளைப் பொறுத்த வரை தொடர்ந்து நடத்த முனைந்தார். முதலில் ஒருகிளாசு பச்சைத் தண்ணீருடன் தன் படுக்கையில் ஏறிக் கால்களை நீட்டியவாறு தலை அணைகளில் சொகுசாகச் சாய்ந்து அமர்ந்து இரவு நடந்த மூன்று மணித்தியாலச் சம்பாசணைகள்-சம்பவங்களைக் கண்களை மூடியவாறு மேல்வாரியாக மீளாய்ந்து மகிழ்ந்தார்:-
'ஐயா, ஏழுமணிக்கு வரச் சொன்னியள். சரியாய் வந்திட்டம், உங்கடை கொள்கையை மீறாமல்!'
'ஓம் தெரியுது. மிக்க நல்லம். ஏழு ஆசனங்கள் இருக்குது. வசதியாய் எதிலையும் இருங்கோ.'
'வழக்கத்துக்கு மாறாய் நாங்கள் வீட்டிலை சாப்பிட்டிட்டு உங்களுக்கும் கொண்டு வந்தம் ஐயா.'
'அது பறவாயில்லை. ஆனால், இங்கை வரும் நேரமெல்லாம் சாப்பாடு கொண்டரத்தான் வேணும் என்று இல்லை. நீங்கள் எப்பவும் அறிவித்து விட்டுச் சும்மா வரலாம். நாங்கள் இலக்கியத்தோடு குடும்ப விசயங்களையும் ஒழிவுமறைவின்றிக் கதைப்பம். என்னைப்பற்றி நல்லாய் தெரியும் தானே!'
'ஓம் ஐயா. அதுதானே, எங்கடை பெற்றோர் போன பிறகு உங்களையும் அம்மாவையும் எங்கள் தாய்-தகப்பன் மாதிரி நாங்களாய் வரித்துத் தத்தெடுத்துப் பேணிக் கொண்டும் வாறம். மற்றது, அம்மா உங்களை எவ்வளவு கரிசனமாய்ச் சாப்பாடு தந்து மெலியாமல்ப் பார்த்தவ. நாங்களும் இங்கை எத்தினை தரம் சாப்பிட்டிருக்கிறம். அதுதான் நாங்களும் ஏதும் உணவு கொண்டுவாறது.'
'சரி, சரி. எல்லாத்துக்கும் நன்றி. முக்கியமாய் ஒவ்வொரு முறையும் எனக்கு அமிர்தம் போன்ற வெண்காயப் பொரியல், தவறாமல் தருகிறீர்கள். ஆனால் வழக்கமாய் நீங்களும் நாங்களும் தொடாத மாட்டிறைச்சியை ஏன் இன்று நினைச்சியள்? நான் சாப்பிடுறது தான்... ஆனால் சும்மா கேட்கிறன்...'
'அது ஐயா, நீங்களும் போனகிழமை வந்த, எங்கடை மகனின்ரை கலியாணத்துக்கு அடுத்த நாள் நாங்கள் எங்கடை ஊர் ஆக்களை பஸ் ஒண்டு பிடிச்சுக் கடல்ப் பக்கம் கூட்டிக் கொண்டு போய்த் திரும்பேக்கை இரவுக்கு ஆட்டிறைச்சி தேடினம். போன ஊரிலை அது அன்று கிடைக்கேல்லை. அது தான் பன்றியிலும் பார்க்க மாடு சுத்தம் எண்டு மாட்டிறைச்சி வேண்டினது. நாம் சாப்பிட வேணுமே?! அதுசரி ஐயா, எங்கடை கலியாண வீடு எப்பிடி? உங்களை அதைக் கேக்கவும் தான் வந்தம்!'
'சுருக்கமாயச் சொன்னால், எல்லா லண்டன் தமிழ்க் கலியாணங்களையும் போலவே நடந்துது. உங்கடை குடும்பம், இனத்தார், பெண்ணின் குடும்பம் எல்லாரும் ஒத்துழைத்து மிகவும் சிரமப்பட்டு விஷயம் முடிஞ்சுட்டுது. இனி ஏன் முடிஞ்சதுகளைக் கிண்டுவான்? எனக்கு எல்லாமே சந்தோசம். பின்னேரம் நடந்த விருந்துகளும் நடனங்களும் மிகவும் திறம். உங்கள் மகனும் இங்கிலீசிலை தங்கு தடை இல்லாமல் 15 நிமிடம் கடுதாசிக் குறிப்பு ஒண்டும் பார்க்காமல் நன்றாய்ப் பேசினார். எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. நீங்கள் இருவரும் எப்பிடியோ கெட்டிக்காறர் தான்!'
'தாங்க்ஸ் ஐயா. இவருக்கு எண்டால் மனம் சரியில்லை. ஐஞ்சு மணிக்கு ஆக்களை வரவேற்க நிற்க வேண்டிய நாங்களே கார்த் திறப்பை எங்கேயோ வைச்சதாலை சுணங்கி ஏழரைக்குத் தான் வந்து சேர்ந்தம். நீங்களோ சொன்னமாதிரி ஏழுக்குப் போட்டியள். பிறகு, கொஞ்சமாய்க் குடிச்சுட்டு அது சமிக்க, நல்லாய்த் திறமாக டான்சும் ஆடிப் போட்டு பத்துக்கு வெளிக்கிட்டுப் போட்டியள். கடைசி விருந்தும் சாப்பிடேல்லை. அதுக்கும் சேர்த்துத் தான் வெண்காயப் பொரியலுடன் இன்று உங்களுக்குச் சாப்பாடோடை வந்தம். ஆனால், அன்று சுணங்கினதுக்கு என்னைத் தான் ஏசுறார்.'
'அப்பிடி இல்லை ஐயா, மற்றவையின்ரை கலியாணங்களிலை வீட்டை வந்து பிழையள் பிடிச்சுக் கதைக்கிற நாங்கள். எங்கடை கலியாணத்தைச் சரியாய் நேரத்துக்கு நடத்தாட்டி?... உங்கடை இரண்டு பிள்ளையளுக்கு எப்பிடி எல்லாம் நீங்கள் ஒரு நிமிடம் பிந்தாமல் நடத்தி முடிச்சியள்!
தம்பி, கலியாணத்தைச் செய்து பார், வீட்டைக் கட்டிப் பார், என்று எங்கள் சான்றோர் சும்மாவே சொல்லி வைத்தார்கள்? எனக்கு இது இரண்டிலும் வேண்டிய அனுபவம் இருக்குது. திட்டமிட்ட படி நேரத்துக்கு ஐயர்மார் நடத்திற தமிழ்ச் சைவக் கலியாணங்களை நான் இங்கை காணவே இல்லை. ஆனால் கலியாணச் சிரமங்களையும் பின்வருத்தங்களையும் மிகமிகக் குறைக்க வழி முறையள் எத்தினையோ இருக்குது, தம்பி. ஒருநாளைக்கு நான் அவற்றை விவரித்து எழுதவும் முடியும்.'
'அதையும், எல்லாருக்கும் திருப்தியாய் கூட்டங்களை நடத்துவது எப்பிடி, இன்றைய எலியுக-ஓட்ட உலகில் தொல்லைகள் இன்றி நிம்மதியாய் வாழ்வது எப்பிடி, எண்டும்எழுதி வெளியிடுங்கோ ஐயா!'
'அப்பிடி எத்தனையோ எண்ணங்கள், ஆசைகள் எனக்கு இருந்தது தான், தம்பி. ஆனால் எங்கடை அம்மா போன பின் எனது வாழ்க்கையும் மனமும் பெருமளவு மாறீட்டுது தம்பி. ஒன்றிலும் ஆசை எண்டு இல்லை. நான் இனி ஏன் இருப்பான்? ஏன் எதையும் சாதிப்பான்? என்று கூட யோசிக்கிறன். என் பகுத்தறிவு, எதையும் இருட்டாக நோக்காமல் பிரகாசமாகப் பார்க்கவேணும், என்று ஒரு பக்கம் என்னை நச்சரிக்குது. இருந்தாலும் இலங்கை அரசியல் விட்டு வைத்த ஓரளவு என் நம்பிக்கையையும் அம்மாவின்ரை சடுதி மறைவு அழிச்சுப் போட்டுது, வேறொன்றுமே எனக்கு வேண்டாம் போல! கடைசியில், துறவறம் பூணவும் சமயத்துள் மாளவும் என் இயல்பு விடாமல், மகிழ்வறம் எனும் வாழ்க்கை முறையை என்னளவில் நிறுவி, அதையே பின் பற்றி வாழவும் முடிவு செய்துள்ளேன்.'
'உது ஓரளவு விளங்குது ஐயா. ஆனால் இன்னும் கொஞ்சமாவது விவரமாய்ச் சொல்லுங்களேன்!'
'அதிலை சொல்ல அதிகம் இல்லைத் தம்பி. நான் தொடங்கி உள்ள மகிழ்வறத்தில், பெரிய ஆசையளைத் துறந்து, மற்றையோருக்கு மனதிலும் தீங்கு நினையாமல், நாளாந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு, என் பிள்ளைகள் கேட்கும் போதே ஆலோசனைகள், உதவிகள் செய்து கொண்டு, எனைத் தேடிவரும் நண்பரைப் பேணிக்கொண்டு, நாளாந்தம் மனத் துன்பத்தைத் தவிர்க்க, எனக்கு மகிழ்வுதரும், செலவு இல்லாத எல்லாச் சிறுசிறு ஆசைகளையும் தெண்டித்து நிறைவேற்றி, பசிக்கும் நேரம் மட்டும் உண்டு, உடம்பு கேட்கும் நேரமெல்லாம் உறங்கி, தேகத்தையும் சுகாதா ரத்தையும் பேணி, வருங்காலத்தைப் பற்றி அலட்டாமல் மகிழ்வுடன் தரிப்பது தான் என் மகிழ்வறம்.'
'ஐயையோ! அப்ப உங்கடை இலக்கியப் பணிகளை அப்பிடியே கைவிடவே ஐயா போறியள்?'
'இலக்கியத்தை விட மாட்டன். அது எனக்கு மகிழ்வைத் தரும் விசயம். எனது தட்டு வீட்டிலை இன்று இருக்கும் நூல்களை வாசிக்கவே பல ஆண்டுகள் வேணும். அது என் மகிழ்வறத்தில் ஓர் முக்கிய பங்கை வகிக்கும். ஆனால் முன் போல பெரிய திட்டங்கள் ஒன்றுமே இல்லாமல்!...'
'நான் உங்கள் மகிழ்வறத்தைப் பற்றிக் கூடவிளங்கிக் கொள்ளக் கேட்கிறன். குறை நினைக்க வேண்டாம். அது ஒரு original concept உம் terminology யும். நல்லாயிருக்குது. Necessity is the Mother of Invention என்று சொல்லுவார்கள். உங்கள் இன்றைய மனோநிலையுடன்... தொடர்ந்து... வாழ்ந்து கொண்டிருக்க உகந்த philosophy ஒன்றை உருவாக்கிக் கொண்டு வாழ்கிறீர்கள். இதில் உள்ள விசேடமான அம்சங்கள் சிலவற்றை விளக்கிச் சொல்ல முடியுமா ஐயா, தயவு செய்து.'
'சரி, சரி. நாம் ஒவ்வொருவரும் ஒரே பொது-இனக் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தாலும், வெவ்வேறு ஆளுமைகளுடனும் தனித்துவமான விருப்பு வெறுப்புகளுடனும் வளர்ந்து உருவாகி உள்ளோம். சிறுவயதில் எம்மை மகிழ்வித்த சில வாழ்க்கை அம்சங்களைப் பின்னர் சமுதாயத்தின் பார்வைக்குப் பயந்து துறந்து, எம் மகிழ்வு மட்டத்தைக் குறையவிட்டுத் துக்கத்துடன் வாழ்கின்றோம். ஏன் அப்பிடி, எமக்கு நாங்களே மகிழ்வை மறுத்துத் தன்னம்பிக்கையையும் இழந்து குறுகி, குனிந்து, முறுகி, வறண்டு வாழவேணும்? ஒரு நல்ல உதாரணம்: நீங்கள் எனக்கு இன்று கொண்டு வந்த வெண்காயப் பொரியல்! இதைநான் எம்அம்மாவுக்கு முன்சொல்லி, அவ எனக்குத் தொடர்ந்து தாராளமாக அதைச் செய்து தருவதுண்டு. நீங்கள் அதை அவவிடமிருந்து கேட்டு வைத்து இப்போ எனக்குச் செய்து கொண்டு வந்து தருகிறீர்கள். அது ஒரு செலவு குறைந்த, மகிழ்வற அம்சம். எம்மை மகிழ்விக்கிறது. இன்னொன்று, சிறுவயதில் நாம் கொறித்து மகிழ்ந்த கடலை வகை. அளவுடன் நாளாந்தம் உண்டால் அவை சுகாதாரத்துக்கும் பற்களின் உறுதிக்கும் உதவும். மற்றது, சீனி பாவிப்பதை என் நீரிழிவு வருமுன்னர் இலங்கையிலேயே விட்டிட்டன், அன்று வளரும் பருவத்து, எம் பிள்ளைகளுக்கு ஊட்ட! ஆனால் இனிப்பாய் மகிழ்வுதரும் சக்கரீனை அன்றிருந்தே பாவிக்கிறேன். கறுத்தக்கோப்பிக்கு ஆறு-வில்லை, பால்கோப்பிக்குப் பத்து, என்றஅளவில் போட்டுமகிழ்கிறேன். ஒரு காலத்தில் பட்டாள அதிகாரியாக ஒவ்வொரு இரவும் 10-12 அளவு சாராயம் அருந்தி நாம் மகிழ்ந்தோம். இன்று 1-2-3 ஷினாப்ஸ், சீனியற்ற கோலாவுடன் கலந்து உறிஞ்சி, ஒரு மணி வரை கண்களை மூடிச் சிந்தனை செய்து மகிழ்கிறேன். மேலும், சிறுவனாகப் படுக்கையில் முழங்கால்களில் குந்தித் தலையணையில் சிரத்தை வைத்துச் சிலநிமிடங்கள் உறங்கி ஆறுதல் அடைவேன். அதை இன்று மறுமலர்ப்பித்துச் செய்து மகிழ்கிறேன். காலை-மாலை, 12 தேவாரங்களை உரத்துப் படித்தும் மகிழ்கிறேன்... .... ...'
'அப்ப எங்கடை கலியாண வீட்டிலை நடந்த குறையளைப் பற்றி ஒண்டும் இனிச் சிந்தனை செய்ய வேண்டாம் என்றே சொல்லுறியள் ஐயா? அல்லது அது திறமாய் நடந்தது என்றோ சொல்லுறியள்?'
'தங்கச்சி, நேற்றும் ஒரு தமிழ் இந்துக் கலியாணத்துக்குப் போயிட்டு வந்தநான். நான் தவிர்க்கவே முடியாத, இனத்தார்! லண்டன் பாராளுமன்றத்துக்குக் கிட்ட ஒருபெரிய ஹோட்டலிலை தடல்புடலாய் வைத்தார்கள். ஆனால் எல்லாம் தாமதம். பதினொண்டுக்கும் ஒண்டுக்கும் இடையிலை கலியாணம், மேலும், பத்துக்குச் சிற்றுண்டி தொடங்கும், ஒன்றுக்கு மத்தியானச் சாப்பாடு தருவம், எண்டு எல்லாம் பொன் எழுத்திலை பிரமாதமாய் அடிச்சு அனுப்பிப் போட்டு கலியாண மணமண்டபக் கதவு திறந்தது பதினொண்டரைக்கு. தாலி-கட்டு, முகூர்த்தத்துக்குப் பல நிமிடங்கள் பிந்தி, ஒன்றரைக்கு. சாப்பாடோ இரண்டுக்குப் பிந்தி. நான் வீட்டைவந்தது நாலு மணிக்கு. எழுந்தது ஏழுக்கு. வெளிச்சென்றது ஒன்பதுக்கு. சரியாய் களைத்து வந்து இரண்டு மணித்தியாலம் உடனே நித்திரை கொண்டு ஆற வேண்டி வந்திட்டுது. அதோடை ஒப்பிட்டால் உங்கடை கலியாண ஐயர் திறம். ஆனால்... நேற்று... அங்கை... ஒரு நல்ல அம்சம்: வெண்காயப் பொரியல் மட்டும் மிகப் பிரமாதம், அந்தக் கலியாண வீட்டிலை.'
'சரி, வரப் போறம் ஐயா. கடைசிப் பொடியன் எண்டு, சீட்டும் ஒண்டிரண்டு எடுத்து, மற்ற இரண்டு பிள்ளையளுக்கும் செய்த மாதிரிச் செய்துவிட்டம், அதுக்கும் வஞ்சகம் செய்யாமல்! மற்றப் பிள்ளையளும் ஆயிரமும் மூவாயிரமும் தந்ததுகள். எங்களுக்கும் எட்டோ பத்தோ வரை போட்டுது. நீங்களும், அம்மா இல்லாட்டிலும் கலியாணத்துக்கும், மாலையிலும் வந்ததுக்கு மிக்க நன்றி ஐயா.'
'நீங்கள் எல்லாரும் கொன்ரெயினருக்குள் பயணித்து உயிரைப் பணயம்வைத்து கையில் ஒரு சதமும் இல்லாமல் வந்து, மூண்டு பிள்ளையளையும் படிப்பித்துப் பட்டதாரியளாக்கிக் கலியாணங்களும் முடித்து வைத்து பேரப்பிள்ளையளோடும் சீவிக்கிறியள். அது எவ்வளவு கெட்டித்தனம். அங்கை எம் இலங்கையிலை அதுகள் முடிந்திராது. உங்களைப் பற்றி நான் எவ்வளவோ பெருமையாய்த் தான் நினைக்கிறன். சந்தோசமாய்ப் போய் வாருங்கோ. வேண்டியநேரம் என்னை வந்து பார்க்கலாம். நன்றி.'
கசிந்த கண்களுடன் பாத-நமஸ்காரம் செய்து அவர் விருந்தினர் தங்கள் வீடுதிரும்பி, அறிவித்தனர். எம் மகிழுறவுத் தமிழர் மீழாய்விலிருந்து மகிழ்ந்து வெளியேறி, அந்நாட்களில் வாசித்துக் கொண்டு இருந்த புதுமைப்பித்தன், ஜெயகாந்தனின் சிறுகதைகளின் ஒப்பியல் ஆராய்ச்சி நூலில் இரண்டு அத்தியாயங்களை வாசித்து மகிழ்ந்து, தன் குளிர்ப் பெட்டியிலிருந்து அளவாய் ஏதோ ஐஸ்லன்ட் பொதியுணவைச் சூடாக்கி உண்டபின், ஏழுமட்டும் இணையவலைக்குள், சுழியோடப் புகுந்தார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.