“வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார்.

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -இதை அவர் நூறாவது தடவையாகச் சொல்கிறார் என்று சொல்லலாம். அம்மா அதற்குக் காது கொடுத்தமாதிரித் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்திருந்த என்னிடம் “எழும்படி…போ!… அடுப்பை மூட்டு!” என்றாள். தம்பி அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பால்மா கரைப்பதற்குச் சுடுத்தண்ணீர் தேவை. அதற்காகத்தான் அடுப்பை மூட்டச் சொன்னாள். நான் எவ்வளவு முயன்றும் அடுப்பு மூளாது புகைந்து கொண்டிருந்தது. அம்மா என் காதை பிடித்துத் திருகி இழுத்தாள். “இஞ்சாலை விட்டிட்டுப் போ!.. ஏழு வயசாகுது இன்னும் அடுப்படி வேலை செய்யத் தெரியாது!” எனத் திட்டினாள். பிறகு தானே அடுப்பை மூட்டப் போனாள். ஷெல் அடிச்சத்தம் கேட்க, விறாந்தையில் இருந்த தம்பி வீரிட்டுக் குளறினான். அம்மா விறாந்தைக்கு ஓடினாள். இரவு முழுவதும் யாரும் உறங்கவில்லை. ஆமி மூவ் பண்ணி வருகிறதாம் சனங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் ஆரவாரம் ரோட்டில். குண்டுச்சத்தங்கள்.. அப்பா ரோட்டுக்கு ஓடுவதும் வீட்டுக்கு வருவதுமாக ஒரு நிலையின்றித் தவித்துக்கொண்டிருந்தார். “எல்லாச் சனங்களும் வெளிக்கிட்டிட்டுதுகள். நாங்கள் மட்டும் இருக்கிறம்…. வெளிக்கிடுங்கோ போவம்!” என அடிக்கடி சொன்னார்.

 

அம்மா கிளம்புவதாக இல்லை. வீட்டை விட்டுப் போவதனால் அப்புவை என்ன செய்வதென அம்மா யோசிக்கிறாள். அப்புவால் சரியாக நடக்கமுடியாது. கால் ஒரு பக்கம் இழுக்கும். ரொய்லட் போன்ற தேவைகளுக்கே தாங்கிக்கொண்டுதான் போகவேண்டும். மற்றப்படி படுத்த படுக்கைதான். அல்லது எழுப்பி இருத்திவிட்டால் எதிலாவது சாய்ந்துகொண்டு சற்று நேரம் இருப்பார். அப்பு இரவெல்லாம் இருமிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு குண்டுச் சத்தத்தையும் தொடர்ந்து அப்புவின் இருமல் சத்தமும் கேட்கும். அப்புவுக்கும் பயம். அதனால்தான் இப்படி இருமுவதுபோல எதையாவது செய்து சமாளிக்கிறார்.

அப்பா முற்றத்தில் நின்று கத்திக்கொண்டிருந்தார். அம்மா வெளிக்கிடாமற் கடத்துவது தனக்காகதான் என்று அப்புக்குத் தெரியும். “என்னைப் பற்றி யோசியாமல் போங்கோம்மா!” என இடையொருதரம் சொன்னார். அப்படிச் சொன்னாலும் அம்மா தன்னை விட்டு போகமாட்டாள். என்பது அப்புவுக்குத் தெரியும்.

அம்மா அப்புவின் மூத்த மகள். அப்புக்கு ஆறு பிள்ளைகள். அம்மா மட்டும் பெண்பிள்ளை. மற்றவர்கள் எல்லாம் கன வருடங்களுக்கு முன்னரே வெளிநாடுகளுக்குப் போய் ‘அகதி அந்தஸ்து’ பெற்றுவிட்டார்கள் . பிரான்சிலிருந்தும் கனடா,ஜெர்மன்  போன்ற நாடுகளிலிருந்தும் இடையிடையே கடிதங்கள் வருவதுண்டு. சில சமயம் பணமும் வரும். கனடாவில் இருக்கும் மாமா அப்புவை அங்கு வந்து சேர்ந்துவிடும்படி முன்னர் எழுதினவராம். அப்பு மறுத்துவிட்டார். தான் பிறந்து வளர்ந்த இந்த இடத்தையும் சனங்களையும்  விட்டு ஓரிடமும் போகமாட்டன் என்று சொல்லிவிட்டாராம்.  அப்புக்கு அம்மாமேற்தான் பாசம் அதிகம். தன்னை விட்டு அவர் எங்கும் போகமாட்டார் என அம்மா சொல்வாள்.

“புனிதா!… வெளிக்கிடும் போவம்!.. பிள்ளையளையும் வைச்சுக்கொண்டு கடைசி நேரத்திலை அந்தரப்படப் போறீர்..” அப்பா மன்றாடாத குறையாக அம்மாவிடம் சொன்னார்.

அப்போது விடிந்துகொண்டிருந்தது. எனினும் இருள் விலகவில்லை. காக்கை குருவிகள் கத்தின. இரவு குண்டுச்சத்தங்கள் அவற்றையும் குழப்பியிருக்கிறது. காகங்கள் கத்துவதும் பறந்து கொப்பு மாறி இருக்கும் ஓசைகளும் இரவிரவாகக் கேட்டுக்கொண்டிருந்தன. நாய்கள் இடைவிடாது குரைத்து ஊளையிட்டன.

நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் இருக்க முயன்றேன். ஷெல் அடிச் சத்தம் கேட்டதும் அது எங்கே வந்து விழப்போகிறதோ எனப் பயம் பற்றிக்கொள்ளும். கண்களை மூடிக்கொள்வேன். அடித்த ஷெல் எங்காவது விழுந்து வெடித்த சத்தம் கேட்டபிறகுதான் நிம்மதி. ஆனாலும் அது எங்கே விழுந்து யாருக்குச் சேதமோ என்றொரு கவலை உள்ளே இருக்கும்.

ஷெல்கள் கிட்டகிட்ட விழுந்து வெடிக்கும் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. “கிட்ட வந்துவிட்டாங்கள்போல..” என அப்பா சொன்னார். இன்னொரு ஷெல் மிக அண்மையாக விழுந்து வெடிக்க நிலமெல்லாம் அதிர்ந்தது. அப்பா ரொய்லட்டுக்கு ஒடினார். அவருக்கு இது ஒரு வியாதி. ஷெல் அடிச் சத்தம் கேட்டால் வயிற்றைக் கலக்கிக்கொண்டு வருமாம்! அப்பா ஓடுகிற ஓட்டத்தைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்தது. வாயைக் கையினால் பொத்தினேன். “என்னடி சிரிப்பு?” என அம்மா முழுசிப் பார்த்தாள். அடுத்த ஷெல் இன்னும் கிட்ட விழுந்தும் எனக்கு ஒண்ணுக்குப் போனது. நிக்கர் நனைந்து இருந்த இடத்தில் ஈரம் கசிந்தது. அதை மறைக்க கால்களைப் பரத்தி  உட்கார முயன்றேன்.

“என்னடி இது?” அம்மா ஓங்கி ஒரு அறை போட்டாள். “நீ இன்னும் குழந்தை என்ற நினைப்பே?...இன்னும் பழக்க வழக்கம் தெரியாதே?”

முதுகை எந்தக் கையால் தடவுவது என வளம் வராது இரு பக்கமும்  நெளிந்தேன். “ஏனம்மா பிள்ளைக்கு அடிச்சினீ?” என அப்பு மனவருத்தப்பட்டார். தம்பி அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பசிக்கிறது. “பிள்ளையை வச்சிரடி!” எனத் தம்பியைத் தந்துவிட்டு அம்மா மீண்டும் குசினிக்குப் போனாள். அடுப்பை மூட்ட முயற்சிக்க ஷெல் அடி. வீடு ஒரு முறை குலுங்கி விழுந்தது போலிருந்தது. அடுப்பை அந்தப்படியே விட்டுவிட்டு பால்போய்ச்சியில் தண்ணீரை விட்டுக்கொண்டு வந்து தம்பிக்கு கொடுத்தாள் அம்மா. தம்பி ஆவலுடன் வாயை வைத்து உறிஞ்சிவிட்டு டக்கெனப் போச்சியைத் தள்ளினான். அடம்பிடித்துக் குளறினான். அம்மா தம்பிக்கு அடி போட்டாள். எனக்கும் அழுகை வந்தது.

“என்னை ஒருக்கால் பிடிச்சு விடம்மா!” அப்பு அம்மாவை அழைத்தார். அப்புவுக்கும் ரொய்லட்டுக்குப் போகவேண்டி வந்துவிட்டது. குண்டுச்சத்தத்தைக் கேட்டு வயிற்றைக் கலக்கும் வியாதி அப்புக்கும் உண்டு. “கொஞ்சம் பொறு அப்பு… அவர் போயிட்டார்… வரட்டும்” என அம்மா சொன்னாள். அப்பு இருமலை வெளிப்படுத்தி நிலைமையை சமாளிக்க முயன்றார்.

அப்புவின் அலுவல்களைக் கவனிப்பதற்கு தனியே அம்மாவுக்கு மேலதிக நேரம் தேவைப்படும். அப்பா சில வேளைகளில் அம்மாவுடன் இதுப்பற்றிச் சினப்பதுண்டு. ராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்படப்போகிறது என செய்திகள் அடிப்பட்டபோது அப்பா அலுத்துக்கொள்வார். “ஒரு அவசரமெண்டு… வீட்டால வெளிக்கிட்டு ஓடவேண்டி வந்தால் இந்த மனுசனை என்ன செய்யிறது?” அம்மா அதற்கு பதில் சொல்ல மாட்டாள். அப்படி ஒரு அவல நிலைமை வரக்கூடாது.. அல்லது வராது என நினைத்திருக்கலாம். அம்மா சொல்வாள்..  “அப்பு ஒருத்தருக்கும் பாரமில்லாதிருந்தவர். பிள்ளைகளை எல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட பிறகும்  தானே உழைத்து சாப்பிட்டவர். மேசன் வேலை செய்தவர். திடகாத்திரமான தேகம்.. எழுபது வயசு வரை வாட்ட சாட்டமாக இருந்தவராம். பிறகு அவருக்கு இயலாமற் போய்விட்டது.”

இந்த வீடுகூட அப்பு கட்டியதுதானாம். அவரே பிளான் போட்டு ஒவ்வொரு கல்லாகத் தன் கையால் அடுக்கிக்  கட்டிய வீடு எனச் சொல்லிப் பெருமைப்படுவாராம். எப்போதாவது அம்மா சொல்கிற இந்தக் கதைகள் நினைவில் வந்ததும் எனக்குக் கவலையாயிருந்தது. அப்பு நடக்ககூடியவராயிருந்தபோது என்னைத் தூக்கிக்கொண்டு உலாத்துகிற நாட்கள் நினைவுக்கு வந்தது. துள்ளித் துள்ளி ஆட்டம் காட்டுவார். இப்போது இயலாமற் கிடப்பவரை எப்படிக் கைவிட்டுப் போவது என அம்மா  தவிப்பது எனக்கும் புரியவே செய்தது.

பொம்பர்கள் வானத்தில் வட்டமிட்டன. தம்பி விழிகள் பிதுங்க ‘அம்மா…அம்மா’ என ஒருவிதப் பயக்குரலுடன் தன் தலைமேல் சின்னக்கைகள் இரண்டையும் வைத்தான். இந்த ஒரு வயது பாலகனையும் பொம்பர்கள் இங்கு கலக்கிவைத்திருக்கின்றன. குண்டு தலைமேல் விழாமல் தன் கைகளால் தடுக்கலாம் என அது நினைக்கிறது. நான் ஓடிப்போய்த் தம்பியைத் தூக்கினேன். “பயப்படாதேயுங்கோ… குண்டு இஞ்சை விழாது..” என்றேன். ஆனால் எனக்கும் பயம். பொம்பர்கள் வானத்தில் வட்டமிடுவதை நிமிர்ந்து பார்த்தால் அது எங்கள் வீட்டை சுற்றியே வருவதுபோலிருக்கும். அவை குண்டுகளை வீசுவதற்காக குத்திப் பதியும் போது இங்கேதான் விழப்போவது போல நெஞ்சு உறையும். இரவுகளில் என்றால் விமானம் எந்தத் திக்கில் வருகின்றதென்றே தெரியாது. வீட்டுக்கு மேலாக வருவதுபோல அந்தக் கோர ஓசை கேட்கும். லாந்தர் வெளிச்சத்தை அம்மா அணைக்கும் அவசரத்தைப் பார்க்கத் திகில் பரவும். எந்த நேரமும் குண்டு விழுமோ எனத் தலை கூசும்.

ஒரு நாள் ஸ்கூல் நேரத்தில் இரைச்சல்  கேட்டது. ‘எல்லாரும்  விழுந்து படுங்கோ..!’ என ரீச்சேர்ஸ் சொல்லிமுடிக்க முதலே குண்டு விழுந்தது. பெரிய மலைகளே இடிந்து விழுவது போன்ற குண்டுச் சத்தம் குலைநடுங்க வைத்தது. ஸ்கூலுக்குள்ளேயே குண்டு விழுந்தது போலப் பிரமை. கனகரத்தினம் மிஸ் கூட பயத்தில் குளறினார்.  நான் நடுங்கினேன். எனக்கு அன்றைக்குக் காய்ச்சல் வந்தது. காய்ச்சலின் அகோரத்தில் புசத்தக்கூடத் தொடங்கினேன் என்று பிறகு அம்மா சொன்னாள்.

அப்பு அம்மாவை மீண்டும் கூப்பிட்டார். “என்னை ஒருக்கால் பிடிச்சுக்கொண்டுபோய் விடம்மா!” ரொய்லட் கதவு திறக்கப்படும்போது ‘கீச்’ என சத்தம் கேட்கும். அப்பா எப்போது வெளியே வருவார் என அப்பு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே கிடந்திருக்கிறார். அம்மா போய் அப்புவைக் கைத்தாங்கலாகப் பிடிக்க அப்பு முக்கிக்கொண்டு எழும்ப முயற்சித்தார்.

வீடு குலுங்கி அதிர்ந்தது. ஷெல் மிகக் கிட்ட விழுந்திருக்கிறது. சுவரில் மாட்டப்பட்டிருந்த சில படங்கள்  விழுந்து கண்ணாடிகள் உடைந்தன. ஷெல் வெடித்து விசிறப்பட்ட துகள்கள் தென்னம் பிள்ளைகளின்  குருத்துக்களைச் சீவி விழுத்தின. வாழைமரமொன்று குறுக்காக வெட்டப்பட்டுப் பச்சைக்குலையுடன் விழுந்தது.“வெளிக்கிடுங்கோ…. புனிதா! இனியும் நிண்டால் எல்லாரும் ஒண்டாய்ப் போய்ச் சேரவேண்டியதுதான்.” சொல்லிக்கொண்டே அப்பா ரொய்லட்டிலிருந்து ஓடிவந்தார்.

“என்னை விடம்மா!.. என்னைப்பற்றி யோசியாமல் பிள்ளையளைக் கொண்டு நீங்கள் ஓடுங்கோ!” என அப்பு சொல்ல, தாங்கித் தூக்கிய கைகளை விட்டு அம்மா அழுதாள் “அப்பு..!”

“நான் கிழவன் தானே என்னை என்ன செய்யப்போறாங்கள்… நீங்கள் ஓடுங்கோ!”

அம்மா பரபரத்து அறைக்குள் ஓடினாள். கையில் பட்டவற்றை எடுத்தாள். ஒரு கூடையில் பால்மா, பால்போச்சி, தண்ணீர் போன்றவற்றை எடுத்து வைத்தாள். அரிக்கன் லாம்பைத்  தூக்கி என் கையில் தந்தாள். இன்னொரு கையில் ‘பாய்க்’ நிறைய உடுத்துணிகளையோ எதையோ போட்டுத் தந்தாள். நான் அவசரமாக எனது புத்தகங்களை எடுத்து அதற்குள் திணித்தேன். பாய்க் பாரமாயிருந்தது. அப்பாவும் சில பொருட்களை எடுத்துக்கொண்டார். அம்மா குசினியிலிருந்து தண்ணீர்ப் பானையை எடுத்துக் கொண்டு ஓடிவந்து அப்புவின் பக்கத்தில் வைத்தாள். தம்பியை ஒரு கையிலும் மறுகையில் கூடையையும் சுமந்தாள்.

வெளியே ஓடினோம். கேற்றடியில் நின்று அம்மா வீட்டைத் திரும்பிப் பார்த்து விம்மலெடுத்து உடைந்து அழுதாள். அம்மா அப்புவை நினைத்துக்கொண்டு அழுகிறாளா அல்லது வீட்டை விட்டு இப்படி வெளியேறி ஓடவேண்டி நேர்ந்ததையிட்டு அழுகிறாளா என எனக்குப் புரியவில்லை. நானும் அழுதேன்.

அம்மாவின் தம்பிகளான எனது மாமன்மார் இந்த உலகின் ஒவ்வொரு திக்கிலும் போய் வாழ்கிறார்கள். ஆனால் அம்மா சொல்வது நினைவு வருகிறது. இந்த ஊரையும் கிட்ட உள்ள கோவில்களையும் தவிர வேறு எங்குமே போனதில்லையாம். அதை அம்மா பெருமையாகவே சொல்வாள். இப்போது அம்மா அதை நினைத்துத்தான் அழுகிறாளோ என்றுகூட நினைத்தேன்.

“சரி…சரி… அழுகையை விட்டிட்டு வாங்கோ!” என அப்பா விரைவுபடுத்தினார். ஒழுங்கையில் நடந்து வந்து ரோட்டுக்கு ஏறியதும் அம்மா, “என்ரை அம்மாளாச்சி..!” என்றாள். ரோட்டில் போய்க்கொண்டிருக்கிற சனங்களைப் பார்த்துத்தான் இப்படிப் பிரமித்தாள். ரோட்டில் சனங்கள் முண்டியடித்துக்கொண்டு போனார்கள்.

இவ்ளவு நெருக்கமான சனங்களை நல்லூர் திருவிழா நேரத்தில்… அதிலும் விசேட திருவிழா நாட்களிற்தான் பார்த்திருக்கிறேன். ‘சாமி வெளிக்கிட முதல் போயிடவேணும்’  என அம்மா ஓட்டமும் நடையுமாகக் கூட்டிப்போவாள். கோயிலை அண்மித்தும் சனங்களின் நெரிசலுள் விரைவாக நடக்க முடியாமல் இருக்கும். மெல்ல மெல்ல ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு நடக்கவேண்டும். ஆனால் அதில் ஒரு குதூகலமும்  பரவசமும் இருக்கும். நாங்கள் கோயிலை அடைய முதலே சுவாமி வெளிக்கிட்டு வீதி வலம் வரத் தொடங்கியிருப்பார். அம்மா ‘அரோகரா..!’ எனக் கை கூப்புவாள். அப்பா என்னைத் தன் தோள்மீது தூக்கிக் காட்டுவார். அருள் பாலிப்பதற்காக இவ்வளவு சனக்கூட்டத்துக்குள்ளும் ஆடி ஆடி வருகிற கடவுளை வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருப்பேன்.

இப்போது அந்தப் பரவசம் இல்லை. அவலம். ஓடிப் போக முடியாததால் முட்டி மோதிக்கொண்டு நடந்தார்கள். சின்னஞ்சிறுவர்களும் எதையாவது சுமந்துகொண்டு போனார்கள், என்னைப் போல! சிலர் வீட்டு நாய்கள் அவர்களுடன் ஓடியும் நடந்தும் போயின. வயதான அப்பு ஆச்சிகளும் குனிந்து தள்ளாட்டத்துடன், ஓடிப் போக முடியாததால் முட்டி மோதிக்கொண்டு நடந்தார்கள். அப்புவையும் கொண்டுவந்திருக்கலாமோ என நினைத்தேன். ஒருவர் காலில் ஒருவர் கால் மிதிபட்டது. எல்லோர் முகத்திலும் சோகம். தெரிந்தவர்கள் கண்டாலும் பேசவில்லை. எல்லோரும் எங்கே போகிறார்கள்? நாங்கள் எங்கே போகிறோம்? அம்மாவிடம் கேட்டேன்

“அம்மா நாங்கள் எங்க போறம்?”

“பேசாமல் வாயைப் பொத்திக்கொண்டு வாடி..!”

நடந்தோம்.. நடந்தோம். நடந்துகொண்டேயிருந்தோம். சில வயதானவர்கள் தெரு ஓரங்களில் இயக்கமில்லாமல் கிடந்தார்கள். அப்பு வந்திருந்தாலும் இந்தக் கதிதான். “அங்க வீட்டில … அப்பு என்ன பாடோ..!”  என அம்மா முணுமுணுத்தாள். நான் தூக்கி வந்த பாய்க்கின் பிடி அறுந்துபோனது. இடுப்போடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு நடந்தேன். நழுவி நழுவிப் போனது. இழுத்திழுத்துப் பிடித்தேன். தோள்மூட்டு வலித்தது. வியர்வை உடல் முழுவதும் கசிந்தது. தலை சுற்றுவது போலிருந்தது. தண்ணீர்த் தாகத்தை இதற்குமேலும் தாங்க முடியாமலிருந்தது.

“அம்மா… தண்ணீர்”

“பேசாமல் வாடி!.. பிறகு குடிக்கலாம். என்னடா இது.. நிலமை தெரியாத பிள்ளையாயிருக்கு..!”

அப்பா ஒன்றும் பேசாமல் நடந்துகொண்டிருந்தார். வேறு நேரமாயிருந்தால் எனக்காகப் பரிந்திருப்பார். குழந்தைகள் அழும் குரல்கள் கேட்டுக்கொண்டேயிருந்தன. யார் யாரோ எல்லாம் “அம்மாளே!” “பிள்ளையாரே!” “முருகா!” எனத் தங்கள் தங்கள் தெய்வங்களைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஷெல் அடிச் சத்தங்களும் கேட்டுக்கொண்டேயிருந்தன. ஒரு கட்டத்தில் முன்னோக்கிச் சென்ற கூட்டம் திரும்ப இடித்துக்கொண்டு வரும் நெருக்கம் ஏற்பட்டது. “ஆமி! ஆமி..!” எனச் சத்தம் போட்டார்கள். ஒருவர்மேல் ஒருவர் இடித்துக் கொண்டு விழுந்தார்கள். திரும்பி  ஓட முயன்றார்கள். அது முடியாமல் ஸ்தம்பித்து நின்றார்கள். அம்மாவின் முகத்தை மிரட்சியுடன் பார்த்தேன். மெல்ல மெல்லச் செய்தி வந்தது… ரோட்டுக்கு அண்மையாக ஷெல் விழுந்ததாம். சிலர் செத்தும் போய்விட்டார்களாம்.

“இதில கொஞ்சநேரம் இருந்திட்டுப்போவம்..” என ஒரு மரத்தடிக்குக் கூட்டிப்போனார் அப்பா. அவருக்கு வயிற்றைக் கலக்குகிறதோ என நினைத்தேன். ரொய்லட்டுக்குப் போகவேண்டி வந்தால் இந்த நேரம் என்ன செய்வாரோ எனக் கவலைப்பட்டேன்.

“அம்மா தண்ணி!” என்றேன். போத்தலிலிருந்த தண்ணீரைக் கிண்ணத்தில் ஊற்றித் தந்தாள். மொட மொடவெனக் குடித்தேன். அம்மாவின் தோளில் உறங்கிப்போயிருந்த தம்பியும் விழித்து “தண்ணி!...தண்ணி!” எனக் கையை நீட்டினான். கொடுத்ததும் ஆவலுடன் குடித்தான். அம்மாவும் குடித்தாள். அம்மாவுக்கும் தண்ணீர் விடாய்த்திருக்கிறது. “உங்களுக்கும் வேணுமா?” என அப்பாவிடம் கேட்டாள். என்னைப் பார்த்துத் தலையைத் தடவிவிட்டுத் தன்னோடு அணைத்தாள். அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். அம்மா அழுதால் எனக்கும் அழுகை வரும்.

“புனிதா என்ன இது? ஊரோடை ஒத்ததுதானே எல்லாருக்கும்? நீங்க இப்பிடி அழுதால் பிள்ளையெல்லே பயப்பிடுவாள்..” அப்பா அம்மாவைத் தேற்றினார். “வாங்கோ போவம்!” என்றார். நடக்கத் தொடங்கினோம்.

“ரோட்டிலை… ஷெல் வந்து விழுகுது!” எனச் சனங்கள் பதட்டப்பட்டார்கள். ஷெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் பலர் விழுந்து படுத்தார்கள். உருட்டிக்கொண்டு வந்த சைக்கிள்கள் ஆட்களுக்குமேல் சரிந்தன. அடித்த ஷெல் எங்காவது விழுந்து வெடித்த சத்தம் கேட்டபிறகு எழுந்து நடந்தார்கள். இந்த பக்கம் போவதா அந்த பக்கம் போவதா எனத் திணறல் ஏற்பட்டது. “கடவுளே இந்த அநியாயத்தைக் கேட்க ஆருமில்லையா?” என யாரோ கத்தினார்கள்.

சில உடல்கள் குறுக்கும் நெடுக்குமாகக் கிடந்தன. சனங்கள் அவற்றை விலத்தி நடக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ஒரு உடல் துடித்துக்கொண்டிருந்தது. இரத்தம், சதைத்துண்டுகள்.. எனக்குக் கிறுதி வருவது போலிருந்தது. அம்மா என்னை அணைத்து முகத்தைத் திருப்பி தன் நெஞ்சினுள் புதைத்துக்கொண்டு நடந்தாள். அம்மாவின் கையிலிருந்த கூடைக்கம்பி என் முதுகில் கீறியது. தூர வந்துவிட்டாலும் என் கண்களிலிருந்து அந்தக் காட்சி மறைய மறுத்தது. அப்படி அநாதரவாக செத்துக்கிடப்பவர்களை நினைத்து வருந்தினேன். இறந்துபோனவர்களுடன் யாராவது கூட வரவில்லையோ… என யோசித்தேன். அந்த இடத்தில் யாரும் நின்று அழுதுகுளறவில்லை. கூடவந்தவர்கள் எல்லாரும் இறந்திருக்கலாம்.. அல்லது குண்டு பட்டு இறந்தவரை விட்டு மற்றவர்கள் போயிருக்கலாம். நின்று என்ன செய்வது? ஷெல் எந்தப் பக்கத்திலிருந்து எப்படி வந்து விழுகிறது என்றே தெரியவில்லை. விடியப்புறமாக நடக்கத்தொடங்கிய நாங்கள் மத்தியானமாகியும் நடந்துகொண்டேயிருந்தோம். இரண்டு மூன்று ரோட்டுக்கள் சந்திக்கும் இடத்தில் இன்னும் நெருக்கம் அதிகரித்தது. ஒரு கீலோமீட்டர் தூரத்தை கடக்கவே ஒரு மணித்தியாலத்துக்கு மேல் பிடித்தது. நான் களைத்துப்போனேன். நா வரண்டு போனது. தண்ணீர்த் தாகம் வாட்டிக்கொண்டிருந்தது. அம்மாவிடம் கேட்கவில்லை. ஏசுவாவோ என பயம் ஒரு பக்கம். கேட்டாலும் அம்மாவால் என்ன செய்யமுடியும்? வெறும் போத்தல்தான் கூடையில் இருந்தது.

“ஆராவது தண்ணி இருந்தால் தாங்கோ… குழந்தைக்கு!” என யாரோ ஒரு அம்மா கேட்டாள். குழந்தைகள் அழுது வீரிட்டார்கள். தண்ணீர் என்ற சொல்லைக் கேட்டதும் “அம்மா தண்ணி..!” “அம்மா தண்ணி..!” என வேறு சிறுவர்களின் குரல்களும் எழுந்தன. எல்லோரும் செய்வதறியாது தாகத்தை அடக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என நினைத்தேன்.

“பிள்ளை…. துடிச்சுத் துடிச்சுக் குளறுகிறது. ஆராவது தண்ணி வச்சிருந்தால் தாங்கோ.. போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும்..!” மீண்டும் அந்த அம்மாவின் குரல் மன்றாடியது.

எனக்கும் தாகம் தாங்கமுடியாமல் இருந்தது. வாயைத் திறந்து காற்றை இழுத்தேன். எச்சிலைச் சுரந்து விழுங்கினேன். “தண்ணீர்…தண்ணீர்..” - குரல் தொண்டையிலிருந்து வெளிப்பட்டது. “தண்ணீர்…தண்ணீர்..” என்ற குரல்கள் ஆங்காங்கே எங்கும் எழுந்தன.

வானம் இருண்டுகொண்டு வந்தது. ஓரிரு துளிகள் விழுந்தன. அண்ணார்ந்து பார்த்தேன். கண்களையே பொய்பிப்பதுபோல மழை கொட்டத்தொடங்கியது. அடித்து ஊற்றியது. நாக்கை நீட்டி முகத்தில் வழிந்த தண்ணீரைச் சுவைத்தேன். வாயினால் உறிஞ்சினேன்.

எல்லோரையும் மழை தெப்பமாக நனைத்தது. சிலர் குழந்தைகளுக்குக் குடையை விரித்துப் பிடித்தார்கள். குடைக்கம்பியால் வழிந்த தண்ணீரை பாத்திரத்தில் ஏந்திக் குடித்தார்கள். நாங்களும் குடைகொண்டுவந்திருக்கலாமே என்று நினைத்தேன். அட, எங்கள் வீட்டில் குடைதான் இல்லையே!
அம்மா பாய்க்கில் இருந்து அப்பாவின் சாரம் ஒன்றை எடுத்து என் தலையில் போர்த்துவிட்டிருந்தாள்.. மழையில் நனையாமல் இருக்க! சாரம் முற்றாகத் தோய்ந்து தண்ணீர் உடலில் வழிந்தது. அம்மா அதைப் பிழிந்து தண்ணீரைக் கிண்ணத்தில் எடுத்துத் தந்தாள். குடித்தேன்… அப்பாடா, உயிரே மீண்டு வந்தது போலிருந்தது. அநேகமாக எல்லாரும் அவ்வாறு துணிகளை நனையவிட்டு தண்ணீரைப் பிழிந்து குடித்தார்கள். மழை அடங்க ரொம்ப நேரமானது. பொழுது பட்டுக்கொண்டிருந்தது. ஷெல் அடிச் சத்தங்கள் கூடின.

“இனிப் பயமில்லை… இந்தப்பக்கம் ஷெல் வாராது!” என அப்பா தைரியப்படுத்தினார். “இன்னும் கொஞ்சத் தூரம்தான்.. மாணிக்கம் மாமா வீட்டை போயிடலாம்..!” உடைகள் நனைந்து உடலோடு ஒட்டியிருந்ததால் காற்று வீசியபோது குளிர் அடித்தது. பாய்க் நனைந்துபோனதால் பாரம் இன்னும் கூடியது. லாந்தரையும் பாய்க்கையும் கை மாற்றி மாற்றி நடந்தேன். கை மூட்டுக்கள் கழன்று விடும் போன்ற உணர்வு.

மாணிக்கம் மாமா வீட்டுக்குப் போய்ச் சேர இருண்டு நேரமாகிவிட்டது. அங்கு ஏற்கனவே நிறையப்பேர்  வந்திருந்தார்கள். அந்த மாமி சுடச் சுடக் கோப்பி தந்தாள். “உடுப்பை மாத்துங்கோ!... ஐயோ பிள்ளையளெல்லாம் நனைஞ்சுபோய் வந்திருக்கு..” எனத் தன் பிள்ளைகளின் சட்டைகளைத் தந்தாள். அம்மாவுக்கு உடுக்கச் சேலை கொடுத்தாள். இரவிரவாகச் சமைத்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டார்கள்.

பிள்ளைகள் கனபேர் படுத்திருந்த அறைக்குள் அம்மா என்னையும் படுக்கவிட்டாள். எனக்குக் கால்கள் உளைந்தன. உடலெல்லாம் அடித்து முறித்துப் போட்டதுபோல இருந்தது. கூதல் விறைத்து நடுக்கமெடுத்தது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் கனவுக்கும் நினைவுக்கும் இடையே ஒரு மயக்கநிலை இருப்பதுபோலக் குழப்பமாய் இருந்தது – நாங்கள் ஓட ஓட விமானங்கள் குண்டு போடுகின்றன… விமானங்கள் நொறுங்கி விழுகின்றன. அப்பு, ‘பிள்ளை! பிள்ளை!’ எனக் கத்துகிறார் – காய்ச்சல் அடிக்கத் தொடங்கியது. “அம்மா! அம்மா!...” என அனுங்கினேன். அம்மா வந்து என் உடம்பைத் தொட்டுப் பார்த்தாள். “என்னம்மா செய்யுது?” எனக்  கேட்டாள். “தம்பிக்கும் காய்ச்சல் காயுது!” என்றாள்.

விடிய, ஆட்கள் அங்குமிங்கும் போய் திரிவதும், கதைப்பதும் எனக்கு ஒரு கனவு போலவே பட்டது. நான் படுக்கையை விட்டு எழவில்லை. காய்ச்சல் கூடியிருந்தது. “அம்மாளாச்சி… இந்தச் சூடு சுடுகுதே!” என அம்மா சொல்ல பக்கத்திலிருந்த தம்பி குனிந்த தன் வாயால் என் உடம்பில் ஊதினான். அப்படி ஊதி சூட்டைத் தணிவிக்கலாம் என அந்தக் குஞ்சு நினைக்கிறது. மூட்டு மூட்டாக உழைந்தது. புரண்டு புரண்டு அனுங்கிக்கொண்டிருந்தேன். “டொக்கடரிட்டைக் கொண்டு போங்கோ!” என அந்த வீட்டு மாமி சொன்னார். கிட்டடியில் ஒரு டொக்கடர் இருக்கிறாராம். அப்பா என்னைச் சைக்கிளில் வைத்துக்கொண்டு போனார். அங்கு ஏற்கனவே எக்கச்சக்கமான சனம். எங்கள் முறை வரும்வரை என்னால் நிற்க முடியாதென அழுதேன். தலை பாரமாய் இருந்தது. படுக்க வேண்டும் போலிருந்தது. “வாங்கோ போவோம்!” என அப்பாவை அரிக்கத் தொடங்னேன். அப்பா என்னைத் திரும்பக் கூட்டிவந்தார். தானே போய் மருந்து வாங்கி வருவதாக மீண்டும் போனார். “டொக்டர்மாரிட்டையும் மருந்து இல்லை.. பாமசிகளிலையும் இல்லை..” என்றவாறு வந்தார். பனடோலும் கடைகளில் தட்டுப்பாடாம்.

இரவு காய்ச்சல் அதிகரித்தது. கை கால்கள் உதறலெடுத்தன. வீட்டு மாமி ஒரு கம்பிளித் துணியைக் கொண்டுவந்து போர்த்துவிட்டார். அம்மா பக்கத்திலிருந்து நெற்றியைப் பிடித்து தலையைத் தடவிக்கொண்டிருந்தாள். துணியைத் தண்ணீரில் நனைத்து நெற்றியில் ஒற்றியெடுத்தாள். “தம்பிக்கு காய்ச்சல் சுகமா?” என அம்மாவிடம் கேட்டேன்.

ஏதேதோ கைமருந்துகள் செய்து தந்தார்கள். “அம்மாளாச்சி என்ர பிள்ளையளைச் சுகமாக்கி எழுப்பிவிடு..!” என நேர்ந்து அம்மா சேலைத் தலைப்பில் காசு முடிந்து வைத்தாள். எங்களுக்குச் சுகம் வந்துவிட்டால் அம்மா அம்மன் கோயிலுக்குப் பொங்கிப் படைப்பாளாம்! அதைக் கேட்க எனக்கு உற்சாகமாய் இருந்தது. அம்மன் கோயில் எங்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ளது. அப்படியானால் நாங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போவது பற்றி அம்மாவுக்கே நம்பிக்கையாய் இருக்கிறது! வீட்டை நினைத்தால் எனக்குச் சோகமாய் இருந்தது. வீட்டிலுள்ள ஒவ்வொரு மரங்களும்… தென்னம்பிள்ளை, மா, கொய்யா, ஜம்பு, நாவல்… எல்லாம் நினைவு வந்தன. அந்த மரங்களின் நிழலில் இனி எப்போது விளையாடுவேன்? பொதுவாக இரண்டொரு நாளில் வீடு திரும்பி விடலாம் என்றுதான் எல்லோரும் கதைத்துக் கொண்டார்கள். முன்னரும் சில பகுதிகளில் இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த மக்கள், சில நாட்களில் இராணுவம் போன பிறகு வீடுகளுக்குத் திரும்பப் போனார்கள் என்று கதைத்துக் கொண்டார்கள். ஆனால் இப்போது நாலைந்து நாட்களாகியும் சண்டையின் உக்கிரம் குறைந்தபாடில்லை என்றுதான் செய்திகள் வந்துகொண்டிருந்தன. எனக்குக் காய்ச்சல் குறையத் தொடங்கியது. இந்த வீட்டில் வந்து நின்ற வேறு சிறுவர்களுடன் விளையாடினேன். அம்மா, இன்ன இன்னார் எங்களுக்குச் சொந்தம் என அறிமுகப்படுத்தினாள். இப்படி சொந்தக்காரர்களைப் பார்ப்பதும், ஒன்றாகச் சேர்ந்து சமைத்துச் சாப்பிடுவதும் சந்தோஷம்தான். ஆனால் எல்லோரும் ஒரு சோகமான கட்டத்தில் சந்தித்திருக்கின்றோம். அதனால் கவலையே மிஞ்சியிருந்தது. இனி என்ன நடக்குமோ எனப் பயந்துபோய் அவருக்கவராகப் பேசிக்கொண்டார்கள்.

“அப்பு என்ன பாடோ தெரியாது” என அம்மா சொல்லிச் சொல்லிக் கவலைப்பட்டாள். அம்மா ஒருபோதும் சரியாகச் சாப்பிடவுமில்லை. சாப்பிடும் நேரங்களிலெல்லாம் “பாவம்! அப்பு சாப்பிடாமல் கிடக்கும்..” என்பாள். அதைக் கேட்டால் எனக்கும் சாப்பிட மனம் வராது. வரும்போது அப்புவுக்குக் கிட்ட வைத்துவிட்டு வந்த பானைத் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு ஏழெட்டு நாட்கள் உயிர் வாழ முடியுமா என நினைத்துப் பார்த்தேன். சரியாகத் தெரியவில்லை.

ரோட்டுப்பக்கம் போன அப்பா, ஒரு புதிய செய்தியுடன் வந்தார் – எங்கள் பகுதியில் ஆமி இல்லையாம். சிலபேர் போய்.. தேவையான பொருட்களை எடுத்து வருகிறார்களாம். “போய்… அப்புவைக் கொண்டு வருவோம்!” என அப்பா சொன்னார். என் நெஞ்சு குளிர்ந்தது. கடவுளே! அப்புவைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டால் பெரிய புண்ணியம் என நினைத்தேன். ஆனால் இன்னொரு பிரச்சனை.. அப்புவை இங்கு கொண்டுவந்து எப்படி வைத்திருப்பது? இங்கு ஏற்கனவே ஆட்கள் நிரம்பி வழிகிறார்கள். இரவில் படுக்க இடமில்லை. ஆம்பிளைகள் வெளியே தாவரத்தில் படுப்பார்கள். மழை பெய்தால் எழும்பி குந்திக்கொண்டிருப்பார்கள். காலை ரொய்லட்டுக்குப் போக ஒரே கியு! அப்புவைக் தாங்கிக்கொண்டுபோய் ரொய்லட் அலுவல்களை முடித்துவர ஒரு மணித்தியாலமாவது வேண்டும். இப்போது நாங்கள் இருக்கிற இந்தப் பகுதிக்கும் ராணுவ நடவடிக்கை அடுத்த கட்டமாக நடக்கப்போகிறது என்றும் செய்திகள் அடிபடுகின்றன. அப்போது ஓடவேண்டி வந்தால் அப்புவை என்ன செய்வது?

“பிள்ளையளை இஞ்சை மாமியோட விட்டுட்டு நாங்கள் மாணிக்கத்தோடை போய் அப்புவைக் கொண்டு வருவம்!” என அப்பா சொன்னார். அது எனக்குச் சம்மதம் இல்லை. நானும் கூட வரப்போவதாக அப்பாவிடம் சொன்னேன். அம்மாவையும், அப்பாவையும் போகவிட எனக்குப் பயமாயிருந்தது.. போகிற இடத்தில் ஏதாவது நடந்து விட்டால்?

“கண்டபடி ஷெல் அடி நடக்குது.. வரவேண்டாம்..!” என அப்பா சொன்னார். என்ன சொல்லியும் கேட்க மறுத்தேன். அடம் பிடிக்கிறேனென்று அம்மா முதுகில் ஒன்று வைத்தாள். முதுகை நெளிந்து அழுதேன். அப்பா என்ன நினைத்தாரோ, “சரி!... பிள்ளையும் வரட்டும்!” என்றார். மாணிக்கம் மாமாவும் இன்னொருவரும் கூட வந்தார்கள். மூன்று சைக்கிள்கள். அப்பாவின் சைக்கிளில் அம்மா தம்பியை வைத்துக்கொண்டிருந்தாள். நான் மாணிக்கம் மாமாவின் சைக்கிளில். மற்ற மாமாவின் சைக்கிளில் அப்புவைக் கொண்டுவரலாம் என்று சொன்னார்கள்.

ரோட்டில் சனங்கள்… சனங்கள்! சனக்கூட்டம் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தது. இருக்க இடம் தேடி அலைகிறார்கள் என மாணிக்கம் மாமா சொன்னார். சில தெரிந்தவர்கள் அப்பாவிடம் “எங்கே இருக்கிறீர்கள்?” எனக் கேட்டனர். சைக்கிளை மிதித்தவாறே அப்பா பதில் சொல்லிக்கொண்டு வந்தார். மர நிழல்களிலெல்லாம் பலர் குடியிருந்தனர். சிறு தடிகள் கொண்டு சிறுவர்கள் கட்டி விளையாடும் வீடுபோல… ரோட்டோரமெல்லாம் வீடுகள்! அவற்றில் நிஜமாகவே குடியிருக்கும் சனங்கள். அக்காமார் அம்மாமாரின் சேலைகளை வீட்டு மறைப்புச் சுவராகக் கட்டிவிட்டு அமர்ந்திருந்தார்கள். அவர்கள் பார்வைகள் ரோட்டில் போவோர் வருவோரையே ஏக்கத்துடனும்  சோர்வுடனுடம் நோக்கிக் கொண்டிருந்தன. யாராவது சாப்பாடு போடமாட்டார்களா என யாசிக்கிற பார்வை. “அம்மாளே!... நாங்கள் எவ்வளவோ புண்ணியம் செய்த நாங்கள்..” என அம்மா சொன்னாள்.

வீடு அண்மித்துக்கொண்டு வரும் பகுதியில் சனப்பிழக்கமே இல்லை. தெருவெங்கும் வெறிச்சோடியிருந்தது.. வீடுகளுக்குப் போய் பொருட்களை எடுத்துவரும் ஒருசிலரைத் தவிர. நாய்கள் அலைந்து திரிந்தன. எங்களுக்குப் பின்னே ஓடிவந்தன. சில வீடுகள் ஷெல் விழுந்து உடைந்து கிடந்தன. எங்கள் வீட்டுக்கு என்ன கதியோ என நெஞ்சு அடித்துக்கொண்டது. அவ்வப்போது ஷெல் சத்தங்களும் கேட்டன. ஒருவித பயம்.. பதற்றம். வீட்டை அடைந்தும் சைக்களிலிருந்து குதித்து ஓடினேன்.. “அப்பு.. அப்பு!”

கேற் திறந்து கிடந்தது. என் பின்னே அம்மா ஓடிவந்தாள்.

வீட்டுக்குள் போனால் அப்புவைக் காணவில்லை.

தேடினோம். சாமியறைக் கதவு உதைந்து திறக்கப்பட்டிருந்தது. பிளைவுட் கதவில் சப்பாத்து அடையாளம் பதிந்து கிடந்தது. அலுமாரியில் இருந்த புத்தகங்களும் துணிமணிகளும் நிலத்தில் சிந்தப்பட்டிருந்தன. “இஞ்சை என்ன திரவியம் இருக்குதெண்டு தேடினவங்கள்?” என அம்மா எரிச்சலடைந்தாள். “அப்பு!..அப்பு” எனக் கூப்பிட்டாள். ரொய்லட் பக்கம் போய்ப் பார்த்தோம். காணவேயில்லை! பிறகுதான் கவனித்தோம்.. அப்புவின் படுக்கைக்குப் பக்கத்தில் வைத்திருந்த பானையும் உடைந்திருந்தது! சிந்திய தண்ணீர் காய்ந்திருந்தது! “அம்மாளாச்சி..!” என அம்மா பதறினாள்.  “எங்கையாவது அகதி முகாமுக்குக் கொண்டுபோயிருப்பாங்கள்… பயப்படாதையுங்கோ!” என மாணிக்கம் மாமா சொன்னார். “செஞ்சிலுவைச் சங்கம் மூலம்… அல்லது ஜீ.ஏ மாருக்கூடாக கேட்டு அறியலாம். எங்கயாவது அப்பு  சுகமாயிருப்பார்… கவலைப்படாதையுங்கோ!” என அப்பாவும் சொன்னார். அது எனக்கு நிம்மதியாய் இருந்தது.

“நாயையும் காணயில்லையே!” என்றாள் அம்மா. “கதவு திறந்துதானே கிடந்தது. எங்கையாவது சாப்பாடுள்ள இடத்துக்கு ஓடியிருக்கும்!” என்றார் அப்பா.  மரங்கள் எல்லாம் வாடிப்போயிருந்தன. சூரியகாந்திகள் தலையைக் குனிந்துகொண்டிருந்தன. ரோஜாச் செடிகள் மலர்ச்சியிழந்து சோர்த்து போயிருந்தன. மல்லிகை மொட்டுக்கள் மலராமலே வீழ்ந்திருந்தன.

“மாணிக்கம்!... மரங்களுக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்தியிட்டுப் போவம்!” என்றார் அப்பா.

வாளிகளுடன் கிணற்றடிக்குப் போனோம். அங்கே ஒரு கிடங்கெடுத்து எங்கள் நாய் படுத்திருந்தது. எங்களைக் கண்டதும் எழுவதற்கு முயற்சித்தது. அதனால் கால்களை ஊன்றி எழமுடியவில்லை. அதற்கு இயக்கமில்லை. முன்னங்கால்களை அதனால் அசைக்க முடியவில்லை. அனுங்கிய குரலில் அழுதது. நிற்பதற்கு பலமில்லாமல் விழுந்தது. “பாவம்! இவ்வளவு நாளும் சாப்பிடாமல் கிடந்திருக்கும்..” என்றார் அப்பா.
கிணற்றை எட்டிப் பார்த்துவிட்டு “மாணிக்கம்!... இஞ்ச ஓடி வா!” என அவசரப்பட்டார். அம்மா ஓடி வந்து எட்டிப் பார்த்துவிட்டு, “அப்பு!” எனக் குளறினாள். எனக்கு நெஞ்சிடித்தது. கிணற்றை எட்டிப் பார்த்தேன். வெள்ளைத் துணியொன்று மிதப்பது தெரிந்தது. கைகளை அகல விரித்து நீட்டிக்கொண்டு குப்புற ஒரு உடல்.

“அது அப்புதானோ தெரியாது… கத்தாதையுங்கோ!” என அப்பா அதட்டினார். “இஞ்சாலை வாம்மா!” என என் கைகளைப் பிடித்துக்கொண்டு அப்பால் போனார்.

மாணிக்கம் மாமாவும் மற்றவரும் அப்பாவுமாகச் சேர்ந்து அந்த உடலை வெளியில் எடுத்தார்கள். “அது அப்புதான்!” என அப்பா சொன்னார்.

“அடையாளம் தெரியாமல் பழுதாய் போய் கிடக்குது!” என்றார். கீழே கிடத்தி வாழை இலையை வெட்டி மூடினார்கள். அம்மா புலம்பிப் புலம்பி அழத்தொடங்கினாள். எனக்கு அப்புவை பார்க்கவேண்டும் போலிருந்தது. அப்பா விடவில்லை. வளவுக்குள்ளேயே குழி வெட்டினார்கள். அப்பா முதலில் வெட்டிக் களைத்துப்போனதும் மாணிக்கம் மாமாவும் வெட்டினார். அப்பா சப்பாணி கட்டி அமர்ந்து தேவாரம் பாடத் தொடங்கினார். நெடுநேரம் பாடிக்கொண்டிருந்தார். அப்பாவுக்கு இவ்வளவு தேவாரம் தெரியுமா என ஆச்சரியமாய் இருந்தது. அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அப்பா அழுகிறாரா?

“யாரொடு நோவேன்… யார்க்கெடுத்துரைப்பேன்… ஆண்ட நீ அருளில்லையானால்…” என அப்பா பாடியபோது எனக்கும் அழுகை வந்தது.  குழியில் அப்புவை போட்டு மண்ணைப் போட்டு மூடினார்கள். “என்ர.. அப்பு!.. என்ர அப்பு!” என அம்மா நெஞ்சிலடித்து அழுதாள். பொழுதுபடமுதல் போய்விட வேண்டுமென அவசரத்துடன் கிளம்பினோம். கேற்றடிக்குப் போகும்போது திரும்ப அம்மா அழுவாளோ என எனக்குப் பயமாயிருந்தது. ஆனால் அம்மா அழவில்லை. அம்மாவிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. “இனி ஓடவேண்டி வந்தால் அப்புவைப் பற்றி கவலையில்லை!” என்றாள்.

சைக்கிளில் போய்கொண்டிருந்தபோது “அப்பு எப்படி செத்திருப்பார்?” என அப்பா மாணிக்கம் மாமாவுடன் கதைத்துக்கொண்டு வந்தார்.

“சுட்டுப்போட்டு கிணத்தில தூக்கிப் போட்டிருப்பாங்கள்.. தண்ணிப் பானையையும் அவங்கள்தான் உடைச்சிருப்பாங்கள்!” என மாணிக்கம் மாமா சொன்னார்.

“அப்புவுக்கு ஒரு கை சரியாய் வழங்காது… பானையிலிருந்து தண்ணி ஊத்தி எடுக்கேலாமல் உடைஞ்சிருக்கலாம். பிறகு தண்ணி அள்ள கிணத்தடிக்குப் போய் தவறி விழுந்திருக்கலாம்!” என அப்பா அபிப்பிராயப்பட்டார்.

“அப்பு எப்படி அந்தரிச்சுச் செத்துதோ… சாகையுக்கை ஆரை நினைச்சதோ!” என அம்மா கவலைப்பட்டாள்.

அப்பு எப்படிக் கிணற்றடிக்குப் போயிருப்பார் என நினைத்துப் பார்த்தேன். தவழ்ந்தும்… ஊர்ந்தும் போயிருப்பாரோ? தண்ணீர் தாகமெடுத்தால்… தண்ணீரே கிடைக்காவிட்டால்… அந்தக் கொடுமையை நானறிவேன். அப்பு தண்ணீருக்காகக் கிணற்றடிக்குப் போயிருக்கக்கூடியதும் சாத்தியம்தான்.

“மற்றவைகளுக்குப் பாரமாயிராமால் போயிடுவம் என்று அப்பு தானாகத்தான் விழுந்து செத்தாரோ தெரியாது!” என அம்மா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். என் நெஞ்சு ஒரு முறை அதிர்ந்தது. அப்பு தற்கொலை செய்துகொண்ருப்பாரா? அப்பு இறந்து போனதைவிட அவர் எப்படி இறந்திருப்பார் என்ற புதிர்தான் நெஞ்சைப் போட்டு வருத்தியது.

அம்மாவின் கையிலிருந்த தம்பி “அம்மா! அம்மா!” என பயக் குரலுடன் தலைக்குமேல் கைகளை வைத்தான். அப்போது கூர்ந்து நோக்கினோம்.. பொம்பரின் சத்தம் தொலைவிற் கேட்டது.

“மாணிக்கம் சுறுக்காய் மிதி!.. ஒரே வெளியாயிருக்கு!” என்றார் அப்பா. அவர்கள் மூசி மூசி மிதிக்க சைக்கிள்கள் பறந்தன. மரங்கள் இல்லாத வெளியில் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தேன். விமானத்தின் கோர இரைச்சல் அண்மித்துக்கொண்டிருந்தது. “கடவுளே, பிளேன் குண்டு போடக்கூடாது… இந்தச் சண்iடெயல்லாம் கெதியாய் முடிஞ்சிட வேணும்!” என மனதுக்குள் கும்பிட்டுக்கொண்டிருந்தேன்.

குறிப்பு: மல்லிகை - 1998 இதழில் வெளியான சிறுகதையினைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் சுதாராஜ்.
  
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here