சந்திரனுக்கு அன்று ஜாதகத்தில் ‘புது மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும்’ என எழுதியிருக்க வேண்டும்.சில கிரகங்கள் உச்சத்தில் ...இருந்திருக்கலாம். “கோட்டை கட்டி விடாதே தம்பி,அவை அனுபவங்கள் மட்டும் தான்,அனுபவிக்கிறது இல்லை !”அவனுடைய ராசி அவனுக்கு தெரியாதா, என்ன நக்கலாக ஒரு 'உட்குரல்'?சிரித்துக் கொண்டான். விடிந்தும் விடியாத பனிக்காலைப் பொழுதில் (சிறிது இருட்டாக இருந்தது), காலை 7.00 மணி போல ரேடியோ ஓடரைப் பெற்றவன், காரின் டிக்கி திறந்திருப்பது போல தோன்ற, இறங்கிப் போனான். அந்த இருட்டில் நிலத்தில் ஒரு ‘10 டொலர் பிளாஸ்டிக் தாள்’ கிடக்கிறது தெரிந்தது. அந்த 'கெண்டக்கி சிக்கின் ஃபாஸ்ட்பூட்' கடையின் பார்க்கிங் பகுதியிலே காலையிலே எல்லா டாக்சிகளும் அடையிறது வழக்கம். அதிக பனி பொழிந்து கொண்டு இருந்தாலும் '7.00 மணிக்குப் பிறகு பார்க் பண்ணக் கூடாது'என்ற நகரசபையின் வீதிப் பலகையைக் காட்டி காவலர்கள் அபராத டிக்கற்றுக்களைத் தந்து அரியண்டம் தருவார்கள்.இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வதால் நகர அரசுக்கு நிறைய செலவுகள் ஏற்படுகின்றன. அந்த துண்டு விழுகைகளை சீராக்குவதற்காக இரக்கமற்ற முறையில் காவலர்களைக் கடமையைச் செய்ய வைக்கிறார்கள். அதற்காக, அம்புகளாக, ரொபோவாகவா நடக்க வேண்டும்! நடக்கிறார்களே.
"மனிதத்தனத்துடன் வேலை செய்"என்ற காந்தியத்தை கடைப்பிடியா விட்டால் இவர்களுக்கு மரியாதை ஏற்படப் போவதில்லை.
நகரசபையின் 'பைலோக்க'ளை விட வெளியில், நல்ல 'பைலோக்'கள் இருக்கின்றன தான். ஒரு நாடு நல்ல 'பைலோக்க'ளை எடுத்தாலே நல்ல பேர் நிலவும். இல்லை எனில் "சோ சோ!" தான்.
ஜனநாயக முறைப்படி நகரத்திற்கு பொலிஸ், மாகாணத்திற்குப் பொலிஸ், தேசத்திற்கு … என இங்கே இருப்பது போல தானே நாமும் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழீழ மாகாணத்திற்கு … பிறிம்பான பொலிஸ் சேவையை வழங்க கோரினோம் .இதனாலேயே, இங்கே ஒவ்வொரு நகரத்திலும் குற்றங்களை வெகுவாக குறைக்கவும், ஜனநாயக உரிமைகளை மக்கள் அனுபவிக்கவும் முடிகிறது. கிடைக்கிற பட்சத்தில், எங்க மக்களும் தலை நிமிர்ந்து வாழ முடியுமே! ஜனநாயகத்தை கட்டமைக்க முக்கியமான,மற்றும் காணி,கடல்,கல்வி உரிமைகளும் (இதோடு பிணைந்திருப்பவை தான் வேலை வாய்ப்புகளும்)கிடைக்கிற பட்சத்தில்...இன்று மகிந்தா,சொல்கிறாரே,"வடக்கு வளர்கிறது;கிழக்கு ஒளிர்கிறது!",அது உண்மையிலேயே நடக்கலாம்.
ஆனால், சாபம் போல , எங்க நாட்டிலோ மாகாணவரசுக்கு ‘பொலிஸ் சேவையை வழங்க சிறிலங்காவரசுக்கு இஸ்டமில்லை .அது நாடு முழுதையும் ஒரு மாகாணவரசாகவே கருதி குறுக்கி ஆள்கிறது. பொலிஸின் அவசியம் அதற்கு புரியவே இல்லை போல படுகிறது. ‘பொலிஸ்’ என்றால் சண்டித்தனதிற்குப் பாவிக்கிற ‘வேலைகாரப்படை’ என நினைக்கிறது. கொடுத்தால், அது மத்தியிட தயவில்லாமலேயே தானே இயங்கும் என அஞ்சுகிறது. இயங்கிட்டுப் போகட்டுமே! தனிநாடாக இல்லாமல் ஐக்கிய நாட்டில் ஒரு மாகாணமாக (இணந்த) இருக்கிறதே, அது போதும் தானே!,ஒவ்வொரு மாகாணமும் ஒன்றை ஒன்று பார்த்து போட்டி போட்டுக் கொண்டு வளருமே.ஒரு காலத்தில் 'தன்னிறைவான நாடாக' இருந்தது என்கிறார்கள். அது மீள ஏற்படுமே, நல்லது தானே!
இன்று,'புத்த நாடு'என்ற வண்டை மூளையில் புக விட்டு,அதன் பாதிப்பால் கிட்டத்தட்ட பையித்தியக்கார நிலையிற்குப் போய் விட்ட அவர்கள் என்று தெளிவார்களோ?
ஆனால், இங்கேயும் என்ன நடக்கிறது???! ‘இக்கரைக்கு அக்கரைப் பச்சை’ போல , இங்கேயும் பொலிஸ்க்கும் ,மக்களுக்கும் நிலவ வேண்டிய நேச உறவுகள் சிதைய கடமையை புரிந்து, வெறுப்பேற்றுகிறார்களே. இந்த மாதிரியான பொலிஸ் சேவைக்கா மாய்ந்து மாய்ந்து போராடுகிறோம். லஞ்ச லாவண்ய சக்திகள் ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமே நல்ல விசயமாக கிடக்க குற்றங்கள் குறைந்திருந்தாலும், இவர்களின் கடமை புரிதலே ஒரு வகையான குற்றம் ..போல தெரிகிறதே!
சக ஓட்டியர் பத்திரிகை நிருபர் போல சொல்லக் கேட்டிருக்கிறான்,"பொலிஸ் என்றால் என்ன என்று நினைக்கிறாய்?அது ஒரு' ஃபோஸ்'!, பதவிகளில் இருக்கிறவர்கள் எப்பவும் அட்டகாசமாக இருக்கவே விரும்புவார்கள். இதற்கு, எல்லா அரசினரும்...அதிகாரத்தை பிரயோகிக்க அளவுக்கு மேலேயே அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள், உண்மையிலே ...குற்றம் புரிகிற போது கூட சில சலுகைகளைக் கொடுத்து..தண்டிக்காது விட்டு விடுகிறார்கள். இதில்,வட்டம், மாகாணம், மத்தி.. எல்லோருமே சேர்ந்து கூட்டாக ‘செல்லப் பிள்ளை’யாக கருதுவதால் இவர்களுக்கும் 'தலைக்கனம்' கூடி விட்டது. பனிப்புயலிலும் அதிகாரம் பறக்கிறது
சாதாரணவர்கள் புரிகிற போது அளிக்கப் படுற தண்டனை இவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. வேலையிலே, அல்லது சாதாரணமாக இறந்தாலோ, “உங்களுடைய விடுதலை இயக்கங்களிலே” நடக்கிற மாதிரியான மரியாதை வேறு கிடைக்கிறது"என்று நக்கலும் அடித்தார்கள்.
இன்றைய, ஜனநாயக முறையிலே கூட சட்டதிற்கு முன்னால் எல்லாரும் சமமாக ...கருதப்படுவதில்லை தான்.சிறிலங்காவே பெரிய உதாரணமாக இருக்கையில் என்னத்தைச் சொல்றது.வாய்யை மூடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.’ஏதோ பிழை செய்திருக்கிறேன்,அது தான் கடவுள் இப்படி தண்டிக்கிறார்'என வழக்கம் போல சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியது தான்.
அதனாலே இங்கே, இருக்கிற டாக்சிகள் காலைவேளைகளில் அங்காங்கே கிடக்கிற பார்க்கிங் பகுதிகளில் அடைந்து விடுகின்றன. அந்த டாக்சி ஓட்டியரிர் எவரோ ஒருவர் தான் தவற விட்டிருக்க வேண்டும். அல்லது எதிர்த்தாற் போல தான் பஸ் நிறுத்தம் ஒன்றும் கிடக்கிறது. கடைசி நேரத்தில் விழுந்தடித்துக் கொண்டு வருகிற பயணியர் ஒருவரும் கூட பார்க்கிங் பகுதியைக் கடக்கிற அவசரத்தில் தவற விட்டிருக்கலாம்.அல்லது விசமத்திற்கு யாரோ ஒருவர் அதை போட்டு விட்டு தூரத்தில் நின்று கமராவுடன் கவனித்துக் கொண்டும் கூட இருக்கலாம். அட்வான்ஸான நாடு அட்வான்ஸான குற்றத்தையும் கொண்டு தான் கிடக்கிறது.
'யூ டியூப்' பில் போட்டு ரசிக்கிறவர்கள் கூட்டம் … கூடிக் கொண்டு போகிறதாக ஒரு தரவும் கூறுகிறது .
நல்ல குணங்களுடைய இவர்களிடம் கிடக்கிற கெட்ட குணங்களின் ஆழங்களை சமயத்தில் அள விடவே முடியாது போய் விடுகிறது. அங்கே, ஒரு மகிந்தாவைத் தான் நாம் பார்க்கலாம். இங்கே என்றால்… ஆயிரம் பேரைப் பார்க்கலாம் என்றால் பாருங்களேன் . இவர்களின் ஆன்மீகச் சிந்தனைகளின் ‘முள்’ சைபரை எட்டிக் கொண்டிருப்பதாலே இந்த விளைவுகள் எனவும் படுகிறது.
இங்கத்தைய அரசு காந்தியத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை, அல்லது பின்பற்றப் பயப்படுகிறது . விஞ்ஞானத்தில் மட்டுமே நாட்டம் கொண்டதாய் இருக்கிறது. தொண்ணூறு வயதுடைய கிழவன் ஒருத்தனை, அவன் ஐம்பது வயதில் புரிந்த குற்றம் தெரிய வந்தால் சிறையிலே தான் போடுவார்கள். புரோகிராம் மாறாது. இவ்வளவு காலமும் கண்டு பிடியாத கையாலாகாதனம் ,ஒரு வயதிற்குப் பிறகு தண்டனை அளிக்கக் கூடாது என்ற எல்லை எல்லாம் கடைபிடிக்கப் படுவதில்லை.
இந்தியாவிலே, சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களுக்கு மன்னிப்பு வழங்கினர் வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் கலக்க வைத்தார்கள் .அதெல்லாம் இங்கே எதிர் பார்க்க முடியாது. சிறிலங்காவரசைப் போல ஒற்றைப் போக்கை தான் எதிர் பார்க்க முடியும்.
அதோடு இங்கத்தையவர், இயல்பான சமூக அசைவுகளை ' வேறு 'பைலோ'க்களா'க்கி விட்டிருக்கிறார்கள். அது ஒரு விதத்தில் நல்லது என்றாலும் இன்னொரு விதத்தில், இயல்பாக இருப்பதை கையில் தடியுடன் ஆசிரியர் போல ஒருவர் வந்து "நீ அப்படி செய்,இப்படி நட.."என்றால் மக்கள் கடைபிடிக்கிறதையே விட்டு விடுவது போன்றதாகிக் கிடக்கின்றன. அதனாலே மக்களிடம் சமூக உணர்ச்சிகள் குறைகிறதாகப் படுகிறது. அரசாங்க ஸ்தாபனங்களே யூனியனின் வேலைகளைச் செய்கின்றன.எனவே மக்களின் போராட்டங்கள்.. எழ வாய்ப்பில்லை போன்ற நிலை.
மற்ற நாடுகளின் அரசியல் பிரச்சனைக்கான ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன .அதன் காரணமாக சமூகப் பழகல்கள் அருகி கிடக்கின்றன .நல்ல விசயங்களிலும் கூட ‘கெட்ட விளைவுகள் கிடக்கின்றன’ என்பது சரி தான்! அதனால், இங்கிருப்பவர்களிடம் இருக்கிற ‘வக்கிரங்கள்’ நம்மவர்களை விட வளர்ந்தே கிடக்கின்றன . நல்ல விசயம்,நூலைழை வித்தியாசத்திலே தான் கெட்ட விசயத்திலிருந்து பிரிபட்டுக் கிடக்கிறதோ?அங்காலே போனால்,நல்லது!,இங்காலே வந்தால் கெட்டதா? சிறிலங்கா நினைத்தால் ஒரே வினாடியில் கூட நல்ல நாடாக மாறி விட முடியும். அதற்கு ஸ்மார்ட்ட்டான தலைவர்கள் வேண்டும். தலையைச் சுற்றுகிறது. வெளிநாடுகளில் நல்ல வாழ்க்கை என்பது ஒரு மாயை போலவும் தோன்றுகிறது? தனக்கு பையித்தியம் பிடிக்காத குறை தான். தனிய காரில் ஓடிக் கொண்டிருந்தவன், வாய் விட்டுச் சிரித்தான்.
இந்த 10 $ டொலரை சந்திரனே எடுக்க வேண்டும்'என்று எழுதியிருந்திருக்கிறது. யாருமே இல்லையா என அங்க இங்க பார்த்து எடுத்து பொக்கற்றில் வைத்தவன். இனி அந்த தாள் அவனுடையது தான் . அவனிஸ்டம்படி செலவு செய்யலாம். அந்த தாளை நானே எடுத்துக் கொள்வதற்கு எத்தனை தூரம் அலம்ப வேண்டியிருக்கிறதே. “புதிய வானம்.புதிய பூமி.எங்கும் பனிமழை பொழிகிறது” பாட்டும் வருகிறது.
அதை அவன் தனக்கென வைத்திருப்பதிற்கு ‘பிறிம்பாக'வும் ஒரு நியாயம்’ இருப்பதாகக் கண்டு பிடித்தான். கொஞ்சநாளாய் அவன் ஓடுற கார் திருத்திறதுக்கென கராஜ்ஜில் நிற்கிறது. பிழைப்பிலே துண்டு விழுகிறது. எனவே கிடைக்கிற காரை அரைநாள், ஒருநாள் என கராஜ்காரன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
கணனி மூளை போல, கடவுளும் (ஒரு சக்தி ) உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்' என்ற வேதாந்த நினைப்பும் அவனுக்கும் கொஞ்சநாளாய் ஏற்பட்டு விட்டிருந்தது.கடவுளே ‘காரை’ பிழைக்க வைத்திருக்கிறார்.அந்த நேரத்தில் விளையாடுகிறார்.அதற்கிடையில் இழப்பிற்கு நட்ட ஈடு கொடுக்க இப்படியும் போட்டிருக்கிறார். அப்படி நினைப்பதில் ஒரு சந்தோசம் இருந்தது.ஆனால்,அவனுள்ளே இருக்கிற இன்னொருத்தனுக்கு 'அது சரியாப் படவில்லை'."இது உன்னுடைய பணம் இல்லை,நீ ..வைத்திருக்க முடியாது.யாரும் பிச்சைக்காரனுக்கு... போட்டு விடு" வில்லன் போல இவனொருத்தன், என எரிச்சலே வந்தது. ஆனால்,அவன் அதிலே திடமாக நின்று... 'வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது 'போல ஏதோ …அலட்சியமாக கதை அளக்கத் தொடங்கினான் .
“உன்னுடைய 'ரிஃபிரெஸ் கோர்ஸிலே' பாடம் எடுத்த சேகர் ஆசிரியர் ...ஞாபகம் இருக்கிறதா?” நக்கலாக கேட்பது போலவும் இருந்தது.
அந்த சிம்பிளான மனிதர் நினைப்பில் வந்தார். இந்திய அடியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் 'பேர்'தமிழ்ப் பேரல்லவா!அவர், சொன்னது இது தான்.'பணத்திலே எப்பவும் ஃபோகஸ் பண்ணாதீர்கள் .அது உங்க கைகளில் இருக்கப் போவது ஒரு எல்லைக்குட்பட்டது தான் .எப்படியும் அது வேற ஒருவன் கைக்கே போய் விடப் போகிறது. அதற்கு அடித்து பிடித்துக் கொண்டிருக்கிறது …சரியில்லை! இருக்கிற போதே அதை மற்றவர்களுக்குக் கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள் "பணத்தை, வழுக்கிக் கொண்டிருக்கிற. பாம்பைப் போல , அதன், உரித்துக் கொண்டு போகிற சட்டையைப் போல நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “என்று வேறு வேடிக்கையாக குறிப்பிட்டார்.
வாழ்க்கையில் மாற்றங்கள் வேணும் தான். அதற்கு பணத்திலே மயங்காதே என்கிறாரே.
இங்கே, சேர்ச்சோட இழுபடுற மக்களிடம் அந்த மாதிரியான ஒரு நடை முறை நிலவுகிறது தான் . அதிலே ,சேர்ச்சிற்கு கட்டாயமாக சந்தாப் போல கொஞ்ச பணத்தைக் கொடுத்து விட வேண்டும் என்றதில்,'கட்டாயம்' என்பது நெருடவே செய்கிறது.ஊரிலே விளையாட்டுக் குழுவிற்கு நாம் ‘சந்தா ‘கொடுக்கவில்லையா? அப்ப , சரி, பிழை ...தெரியவில்லை தான் .சேர்ச்சும் ,அம்மக்களின் சுக,துக்கங்களில் பங்கு பெறுகிறது தான்.
சேவைக்கு முன்னால் பணத்தின் மதிப்பு குறையுது தான்!
இங்கே ,பொலிஸ் அபராத டிக்கற்றாக தண்டும் பணத்திற்கு முன்னால் இந்த 10 டொலர் ஒரு சுண்டங்காய்!
அவனோடு வாதாட அலுப்படைந்து விட்ட சந்திரன் “சரி ,போட்டு விடுகிறேனப்பா!"என்று உள் மனிதனுக்கு கடைசியாக மறுமொழி சொன்னான்.
எதிர்ப்பட்ட, ‘டிம் ஹோற்றன் கோப்பிக் கடைக்கு’ முன்னால் நின்றவனிடம் காரை நிறுத்தி விட்டு, இறங்கி போனான். அவனுடைய பணத்திற்காக காத்திருந்ததுது போல .. அந்த வெற்று கோப்பிக் கப்பும் வெறுமையாகக் கிடந்தது. சந்திரனுக்கு பயம் பிடித்துக் கொண்டு விட்டது. முதலில் போட்டு விட்டே மறுவேலை பார்த்தான் . நிம்மதியாய் இருந்தது. அவன்,"பிசினஸ் நல்லாய் நடக்கும், நன்றி"என்று சொல்றதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் , கோப்பி ஒன்றை வாங்கிக் கொண்டு காரில் வந்து ஏறினான்.
'220 என்ற டாக்சி நிறுத்த நிலையத்தில்' கொண்டு போய் மூன்றாவது காராய் நிறுத்தினான். அவனுக்குப் பின்னால் ஒரு டாக்சி வந்து நின்றது. நூலகத்தில் எடுத்திருந்த சாண்டிலயலின் நாவலை எடுத்து ... தொடர்ச்சியை வாசிக்க தொடங்கினான். திங்கள் கிழமை தொடங்கியவன் அரைவாசிப் பக்கங்களை கடந்து விட்டிருக்கிறான். எப்ப முடிப்பான் என்று அவனுக்கு தெரியாது. அவன் இப்படி பல புத்தகங்களை வாசிச்சுத் தள்ளியிருக்கிறான். விடுதலை சம்பந்தமான நிறைய புத்தகங்களை வாசிக்க முடிந்தது. ஊரோடு அவனை ஒட்டி வைத்திருப்பவை இப்படியான நேரங்களில் வாசிக்கிற இந்த புத்தகங்கள் தானே! தொலை தூரத்தில் சிறுபுள்ளியாய் இருக்கும் ஊரிலே எப்ப கால் வைப்பேனோ? என்ற ஏக்கமும் அவனை சில சமயம் வாட்டி வதைக்கிறது. இப்படியான பிரிவிற்கும்… ஏதாவது நோக்கம் இருக்குமோ? அவர் திருவிளையாடலை யாரால் புரிந்து கொள்ள முடியும்.
அவனின் காரின் பின்பக்க பம்பரில் சிறிது பெயின்ற் பெயர்ந்திருந்தது.பொலிஸை விட 'டாக்சி கண்காணிப்பாளர்கள்' என்ற இன்னொரு கூட்டமும் இருக்கிறது. அவர்களும் இந்த அபராத டிக்கற்றுக்கள் தருவார்கள். ஆனால், பொலிஸைப் போல பேர்வழிகள் இல்லை. திருத்தல் வேலைகள் இருந்தால், அவர்கள் சொல்கிற நாட்களுக்குள் திருத்தி, காட்டி விட வேண்டும். கொஞ்சம் நண்பர்கள் போன்றவர்கள். நகரசபைக்கு பணத்தை பறித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிற ஜென்மங்கள் இல்லை.
அவன் எப்பவும் உசார் பேர்வழி தான். நாவலில் மூழ்கியதால், எல்லா கார்களுக்கும் முன்னால் கண்காணிப்பாளர் காரை நிறுத்தியதை கவனிக்க தவறி விட்டான். கவனித்த போது, தன்னுடைய காரை எடுக்க முடியாது சிக்குப்பட்டிருப்பதைக் கண்டான். பின்னால் இருந்தவன் நெருக்கமாக வேறு நிறுத்தி விட்டிருந்தான்.
அவன் நினைத்த மாதிரியே அவனுடைய முறை வந்த போது காரை சுற்றி பார்த்து விட்டு "எத்தனை நாளிலே பம்பரை திருத்துவாய்?"எனக் கேட்டார்.
"ஒரு கிழமையாவது வேணும்"என்று இழுக்க அப்படியே எழுதி ,"திருத்திப் போட்டு எனக்கு போன் பண்ணு"என்று வெள்ளை டிக்கற் ஒன்றை எழுதிக் கொடுத்தான்.
காட்டா விட்டால் அபராத டிக்கற்றாக தபாலில் அனுப்பி விடுவான். இது கராஜ் காரனின் பிரச்சனை. அந்த 10 டொலர் தாளை தானே வைத்திருக்க முதலில் நினைத்தான் இல்லையா?அதற்கு வழங்கப்படுகிற சிறு தண்டனை போல தோன்றியது
மாறுதலாக சிலவேளை, 'இந்த குளிரிலும் நிற்கிறானே'என்று அவனே மனமிரங்கி பிச்சைக்காரனுக்கு சுயமாக 5 டொலர் போட்டிருக்கிறான். அப்படியான சமயங்களில், கடவுள் கூரை பொத்திக் கொண்டு தருவது போல, வீதியிலே போய்க் கொண்டிருக்கிறவர்கள் யாரோ சிலர், அவனுடைய காரை வலிய கூப்பிட்டு "மிசிசாகவிற்கு விடு, ஹமில்ற்றனுக்கு விடு" ஏறி விட்டிருக்கிறார்கள்.
இப்படியான அனுபவங்களினால், அவனுக்கு கடவுளோட விளையாட பயமும் இருக்கிறது. இப்பவெல்லாம். அதோட ,‘ 'நம் விடுதலை போராட்டத்தில் போர்த் தர்மங்களை மீறாமல் தொடர்ந்து முயற்சித்தால் கடவுளும் 'தமிழீழ'த்தையும் கிடைக்கச் செய்வார்'என்ற நம்பிக்கையும் துளிர் விடுகிறது.
‘ கார்’, ஓடு ஓடு என ஓடியதால் ஊத்தை ஏறி போய் விட்டிருந்தது.கழுவுவோம் என கொயின் கார்வோஸ் நிலையம் ஒன்றுக்குள் விட்டான்.காரினுள் காலுக்குக் கீழே போடுற 'றபர் மாற்'களை எடுக்கிற போது முன் கார் சீட்டுக்குக் கீழே ஒரு ‘20 டொலர் தாள்’ இருந்து சிரித்தது. மறுபடியும் ஒரு சோதனையா?
இரவுக்கார ஓட்டி தவற விட்டிருக்கிறான்.இவன் நெடுக தவற விடுறவன். சலிப்பாக இருந்தது.
ஒருகணம், அவனுக்கு தெரியவா போகிறது? நானே ..வைத்துக் கொள்வோமா?என்றது குரங்கு மனம் .
ஆசைப்பட்டு விடாதே அப்பனே !உள்ளே உறங்கிறவன், எழும்பி வந்து ,கோர்ட் கேஸ் எல்லாம் நடத்தப் போகிறான்.பதில் சொல்லி மாளாது, வேண்டாம்,காராஜ் காரனிடமே,"இதை நைட் ரைவர் காரிலே தவற விட்டிருக்கிறான்”என்று சொல்லி கொடுத்து விடு” என கெதியிலே முடிவெடுத்துக் கொண்டான்."
கிடைக்கும்,ஆனால், எட்டாத ராசி !” 'தர்மங்களுடன் நடத்தப் படுற போராட்டம் லேசுபட்டதில்லையப்பா'என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
சிறிலங்காவில்,சிங்களவர்கள் எப்பவும் ஃபெயிலாகி விடுகிற சமாச்சாரம்.
நம் மண்ணும் ஒரு காலத்தில் நமக்கு கிடைக்கத் தான் போகிறது .காரைகழுவி வெளியில் கொண்டு வர,ஒரு வயசான பெண்" டாக்சி, டாக்சி"என கையைக் காட்டி மறித்தார்.
நிறுத்தி ஏறிய பிறகு"எங்கே போக வேண்டும்?"கேட்டான். வெஸ்ரன் அன்ட் லோரண்ஸ்"என்றார்.காரை செலுத்தினான். இறங்கி போய் விடுவார் என நினைக்க"வெயிற் பண்ணு"என்று விட்டு பார்மசிக்கடை ஒன்றிற்குள் சென்றவர்,2 நிமிசமும் இருக்காது திரும்பி வந்தவர்,”ரோயல்யோர்க் அன்ட் குயின்ஸ்வேக்கு விடு"என்றார்.பெரிய ரிப்.50 டொலர் மட்டிலே வரப் போகிறது.
இதை கடவுளிட வேலை என்னாமல் என்னவென்பது. நீங்களும் ஹோம்லெஸ் காரருக்கு ஒருக்காய் காசைப் போட தீர்மானித்துப், போட்டுப் பாருங்கள். அல்லது நேர்மையாய் நடவுங்கள்.உங்களுக்கும் விரைவில் கடவுள், ஏதோவொரு வழியில் உதவியோ,அல்லது பணமோ கிடைக்கச் செய்வார் .
அங்கங்கே பெய்கிற மழை நீர் ஓடி ஓடிச் சேர்ந்து குளத்திலோ,கடலிலோ சேர்வது போல இப்படி இப்படி பல தனி மனிதர்களுக்கு ஏற்பட்ட, ஏற்படுற அனுபங்களின் தொகுப்பு தான், இன்று ‘பைபிளாகவும் ,குர்ரானாகவும்,இந்து சமய நூல்களாகவும் ஆகி மதமாகி இருக்குமோ? என்றும் அவனுக்கு தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.