அவள் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தாள். வீடு அடர்ந்த இருளில் மூழ்கிப் போயிருந்தது. அவளது கணவன் கடைத் திண்ணையிலிருந்து இன்னும் திரும்பி வரவில்லை. அவன் வரும்வரைக்கும் கதவைத் திறந்து வைக்க மறந்து போனது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் மனதுக்குள் ஒரு முறை திட்டித் தீர்த்தாள். அவளது அன்றாட வேலைகளுக்கு முடிவேதுமற்றதாயிருந்தது. விறகு சேகரித்து வருவது, தண்ணீர் கொண்டு வருவது, மில்லுக்கு தானியங்களைக் கொண்டு சென்று, அரைத்துக் கொண்டு வந்து சமைப்பது, ஐந்து பிள்ளைகளையும் பராமரிப்பது என அவளது கணவனது வேலைகளுக்கும் மேலதிகமாக அவளால் செய்ய வேண்டியிருந்தது. அவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவன் எவ்வாறான மனிதனொருவன்? இல்லாவிட்டால் கணவனொருவன்? அவனுக்கு கடைத்திண்ணை வீட்டைப் போல ஆகிவிட்டிருந்தது. அவன் தனது பகல் முழுவதையும், இரவில் பெரும்பகுதியையும் கடைத் திண்ணையில்தான் கழிக்கிறான். வீட்டுக்கு வருவதென்பது உறங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டும்தான். அவள் அவனை மறந்துவிட முயற்சித்தாள். ஆனாலும் இரவில் கனவுகளுக்கிடையில் அவன் அவளது மனதில் வந்து ஓய்ந்திருந்தான்.
அவள் மனதில் மிகப் பெரும் வேதனையொன்றை உணர்ந்தாள். அவன், அவளது கணவன். அவளது ஐந்து பிள்ளைகளினதும் தந்தை. அதனால் அவனை மிரட்டும் விதமாக கதைப்பதற்கு தேவையான சக்தியை அவளுக்குள்ளால் தோற்றுவித்துக் கொள்ள முடியாது. அவன் வீட்டுக்கு வந்து ஓரிடத்தில் அமர்வதற்கும் முன்னால் அவளை அழைத்தான்.
"அடியேய்..பாண் எங்கே? "
அவள் கதவை அவசரமாகப் பார்த்தபடி பதிலளித்தாள்.
"ஏன் இரவுச் சாப்பாடு கடைத் திண்ணையில் கிடைக்காதோ? "
அவளது கோபம் கண்களில் மின்னுவதை அவன் கண்டான்.
"நான் கேட்டது... எங்க இரவுச் சாப்பாடுன்னு? "
"ஏன் நான்தான் சொன்னேனே... இரவுச் சாப்பாடு கடைத் திண்ணையில் இருக்கும்"
அவளது கோபப் பேச்சை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன், அவளது கூந்தலைப் பிடித்திழுத்து, ஒரு அறை அறைந்து பின்னால் தள்ளிவிட்டான். அவள் அழுதபடியே நிலத்தில் வீழ்ந்தாள்.
"என்னைக் கொல்லுங்க.... கொல்லுங்க என்னை. உங்க கூட வாழ்றது எனக்கு வேணாம்னு ஆயிடுச்சு. என்னால இன்னும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. பிள்ளைங்களோட பொறுப்பையும் நீங்க என் முதுகுல ஏத்திட்டீங்க. இன்னும் உங்களோட பாரத்தையும் நான் சுமக்கணும்னா சொல்றீங்க? "
அவள் நிலத்தில் அமர்ந்து அழுதுகொண்டே புலம்பத் தொடங்கினாள்.
"மனுஷங்க வயல்கள்ல, தோட்டங்கள்ல வேலை செய்றாங்க. ஆனா நீங்க கடைத் திண்ணைகளெல்லாம் சுற்றிப் பார்த்து சும்மா ஊர் சுத்திட்டு வர்ரீங்க. என் கண்ணுக்குத் தெரியாம நீங்க அங்கேயே இருந்துக்கிடறது உங்களுக்கு ஏலாதா? பிள்ளைங்களுக்கு சாப்பிடக் கொடுக்காத தகப்பனொருத்தன் அவங்களுக்குத் தேவல்ல."
அவள் கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டு திரும்பவும் பேச்சைத் தொடர்ந்தாள்.
" என்னால கொடுக்க முடிஞ்சவரைதான் நான் பிள்ளைங்களுக்கு சாப்பிடக் கொடுக்குறேன். ஆனாலும் அவங்க வயிறு நிறையுறதில்ல. அதனால அவங்க பசியோடயே தூங்குறாங்க. இந்த வீட்டுல எல்லோருமே, எப்பவுமே பசியோடுதான் இருக்காங்க. "
அவள் தலையை உயர்த்தி அவனது முகத்தைக் கூர்மையாகப் பார்த்தாள்.
" இது என்னோட விதி.... நான் கல்யாணம் கட்டாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்."
அவன் அவளைத் திரும்பவும் ஒரு முறை அடித்துவிட்டு, அவளது பார்வையிலிருந்தும் வீட்டிலிருந்தும் வெளியேறினான்.
அவனிடம் நேருக்கு நேராகக் கதைப்பதற்கு இந்தளவு சக்தி கிடைத்ததெப்படி என அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவன் போன பிறகு அவளுக்குச் சற்று அலுப்பாகவும் இருந்தது. அவனிடம் தான் கடுமையாகக் கதைத்துவிட்டோமென்றும் அவளுக்குத் தோன்றியது. அவள் கதைத்த விதம் அவனது ஆண்மைக்குப் பொருத்தமற்றது என்றும் அவள் எண்ணினாள். பிள்ளைகளைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் அவள் மேல் சுமத்தியுள்ளமைக்கு உண்மையிலேயே அவன் தன் மீதே வருத்தப்படவேண்டும். அவனைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புருத்திய அவளது பெற்றோரும் அவளது நினைவில் தோன்றினர்.
அவளால் தொடர்ந்தும் தூங்க இயலவில்லை. எழுந்து கொண்ட அவள் முகத்தைக் கழுவிக் கொண்டாள். இரவு நேரம் எவ்வளவு தூரம் கடந்து போயிருக்கிறதென அவளுக்குத் தெரியவில்லை. அவளது பிள்ளைகளின் தேவைக்காக ஒலிவ் எண்ணெய் எடுத்துவர, அவள் விடிகாலையிலேயே கிளம்பிச் செல்ல வேண்டியிருந்தது. அதற்காக மிக நீண்ட தொலைவுக்குச் செல்ல வேண்டியதில்லையெனினும், செல்ல வேண்டிய பாதை மிகக் கடினமானது.
அவள் திரும்பவும் கட்டிலருகே போய் அவளது மூத்த பிள்ளையின் தோள்களை அசைத்து அவனை எழுப்பினாள்.
"மகன், எழுந்திரு..எழுந்திரு மகன்."
மகன், கண்களைக் கசக்கிக் கொண்டே விழித்தான். தன்னை எழுப்பியது ஏனென அவனுக்குத் தெரியும். அவளது கணவன் இப்பொழுது போய்விட்டிருந்தான். மற்றப் பிள்ளைகளைத் தனியே விட்டுவிட்டு வீதியிலிறங்குவது எவ்வாறு? அவள் வீட்டின் கதவைத் திறந்து வீதியை நோக்கினாள். தெருவின் முனையில் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அது அவளது கணவன்தானென அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமாக இருந்தது. அவன் இன்னும் முழுதாக விட்டுப் போய்விடவில்லை. அவள் மூத்த பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.
இரு புறமும் கள்ளிச் செடிகள் எல்லையாகவிருந்த பாதை வழியே அவள் மகனுடன் நடந்தாள். அவளது பிள்ளை பின்னால் திரும்பிப் பார்த்தான். அவன் கொஞ்சம் நின்று இன்னும் தனது தந்தை நிலத்தில் அமர்ந்திருக்கிறாரா என்று பார்த்தான். அவள் அவனைத் தன்னருகில் இழுத்துக் கொண்டாள்.
"வா..என் கூடப் போறதுக்கு. "
பிள்ளை அவளோடு இணைந்துகொண்டான்.
"நீ பயந்துட்டியா?"
" இல்ல"
" பிறகு?"
" ஏன் உம்மா வாப்பா கூடப் போகல்ல?"
" வாப்பா வீட்டைப் பார்த்துக்க இருக்குறார் "
" எங்களிட்ட கள்ளன் வந்து கொண்டு போறதுக்கு எதுவுமில்லையே."
" உன்னோட தம்பி தங்கச்சிகளப் பார்த்துக்க வாப்பா நிக்குறார்"
" அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது."
" யாருக்குத் தெரியும்?"
" எனக்கும் அவங்க கூட இருக்க இருந்துச்சு. "
பிள்ளையின் பதில் அவளுக்கு வேதனையைத் தந்தது. அவள் பிள்ளையின் ஒரு கையைப் பிடித்தவாறு வேறொரு வீதியில் திரும்பி நேராகச் சென்றாள். பிள்ளை திரும்பவும் பேச்சைத் தொடங்கினான்.
" எங்க வாப்பா ஏன் தொழிலொண்ணு செய்றாரில்ல?"
" அவருக்கு வேலையொண்ணும் கிடைக்கல."
அவளுக்கு தன் பிள்ளையின் முன்பு, கணவனின் குறைகளை மறைக்க வேண்டிய தேவையிருந்தது. எனினும் பிள்ளை தொடர்ந்தும் கேள்வி கேட்கத் தொடங்கினான்.
" அப்படின்னா எங்க அக்கம்பக்கத்து வீட்டிலுள்ளவங்க வயல்கள்ல வேலை தேடிக்கிறதெப்படி? "
அவள் பதிலளிக்காமல் மௌனமானதோடு, அவளது கணவனின் உறுதியான கைகால்கள் அவளுக்கு ஞாபகத்தில் வந்தன. அவனுக்கு வேலை செய்யத் தேவையொன்றிருந்தால், வேலையொன்றைத் தேடிக் கொள்வது கடினமல்ல. சிறு பிள்ளை தாயின் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.
" நான் வளர்ந்த பிறகு உம்மாவுக்கு உதவி செய்றேன்."
அவளுக்கு அவளது கணவன் நினைவில் வந்தான். 'அவர் திரும்பவும் கடைத் திண்ணைக்குப் போகாதிருப்பின் தூங்கிக் கொண்டிருப்பார். இல்லாவிட்டால் எனது வார்த்தைகளுக்கு கோபப்பட்டு என்னைத் தாக்குவதற்கு தயாராக இருப்பார். அவருக்கு எனது வார்த்தைகள் இலகுவில் மறந்துவிடாது.'
அவர்கள் நிலவொளியினூடே முன்னேறிச் சென்றார்கள். மகன், ஆகாயத்தில் ஒளிரும் நிலவினைப் பார்த்தான். அவனுக்கு இரவுகளில் உலவும் ஆவிகள் நினைவுக்கு வந்தன. அவன் ஆவிகள் குறித்து உம்மாவிடம் கேட்டான்.
"மயானம் பக்கத்துல இருக்குறதால நீ பயந்துட்டியா ராசா?" உம்மா கேட்டாள்.
மகன் அமைதியானான்.
" ஆனா ஆம்பளப் பிள்ளைங்க ஆவிகளுக்குப் பயப்படுவதில்லையே"
உம்மா சொன்னாள்.
அவன் எதுவும் சொல்லாமல் முன்னால் பார்த்தான். நிலவொளியில் ஒலிவ் மரங்களில் அசையும் இலைகள் ஆவிகளைப் போலத் தென்பட்டது.
"உம்மா, நாங்க திரும்பிப் போயிடலாம்".
அவள் சற்று நின்றாள்.
"நாங்க இன்னும் முன்னே போகணும்."
" பூதங்கள் எங்களத் தின்னுடும்."
" வறுமைதான் எங்க பூதம் ராசா."
"எனக்குன்னா முன்னே போறதுக்கு கால்கள்ல சீவனில்ல."
"நாங்க திரும்பிப் போனா, நாளைக்குக் காலைல ஒலிவ் எண்ணெய் இல்ல மகன்."
"நாங்க இப்படியே போனா மௌத்தாகிடுவோம்மா. எங்களுக்கு எண்ணெய் வேணாம்."
"போகலாம் என்கூட வா."
"என் முடியெல்லாம் சிலிர்க்குதும்மா."
"என் பின்னாடியே சேர்ந்து போகலாம்."
"என் காது ரெண்டும் அடைச்சிட்டுது."
"ஆம்பளை மாதிரி இரு மகன். ஆண்டவன் நம்ம கூட இருக்கிறான்."
"அதோ பூதமொண்ணு."
"இல்ல..அது வேறேதோ.."
"அது எங்களக் கொன்னுடும்."
"ஒருபோதுமில்ல."
"இல்ல..கொன்னுடும்.."
"உன்னக் காப்பாத்த நான் இருக்கேனே மகன்."
"உம்மா, இப்ப அந்த ஆவி காணாமப் போயிடுச்சு."
சில கணங்களுக்குப் பிறகு சிறு பிள்ளை சொன்னான்.
அவள் சுற்றிப் பார்த்தும் எதுவும் தென்படவில்லை. நிலவொளியில் அசையும் மரமொன்றை, ஆவியொன்றைப் போல தனது மகன் கண்டிருக்கிறான் என்பது அவளுக்குத் தெளிவாகியது.
"அது மகன், கள்ளி மரத்தோட கொப்பொண்ணு நிலா வெளிச்சத்துக்கு தென்படுறது அப்படித்தான்."
" நெசந்தான்."
"நாங்க ஆவின்னு சொல்லி மனசால வீணாப் பயந்துட்டோம்."
"ஆமாம்மா. நாங்க போற தெருவுல வெள்ளி நிறத்துல நிலா வெளிச்சமிருக்கே. "
"அதானே."
"அதனால நாங்க நிலா வெளிச்சத்துல முன்னே போகலாம்."
அவள் இன்னும் முன்னேறிச் சென்றாள். அவளது பிள்ளை அவளைப் பின் தொடர்ந்தான். நிலவொளியால், அவள் செல்லும் பாதை வெள்ளி நிறத்தைக் கொண்டிருந்தது.
அவர்கள் மயானத்தின் அருகிலேயே வந்துவிட்டிருந்தனர். நிலவொளி விழுந்த கல்லறைகள் பளபளத்துக் கொண்டிருந்தன. அவளது கணவனோடு நடத்திக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை விடவும் கல்லறையொன்றின் கீழ் ஓய்வு கொள்ள முடிந்தால் நன்றாக இருக்குமென அவளுக்குத் தோன்றியது. பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத தந்தையொருவன் இருக்கும் அவளது பிள்ளைகள் அவளுக்கு நினைவில் வந்தனர்.
அவள் இன்னும் சில அடிகள் முன்னே எடுத்து வைத்தாள். அவளுக்குப் பின்னே யாரோ அடியெடுத்து வரும் சப்தம் அவளுக்குக் கேட்டது. அவளது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவள் பிள்ளையை தனது அருகில் இழுத்துக் கொண்டாள். பின்னாலே தொடர்ந்து வரும் மனிதன் தன்னைக் கொன்றுவிடக் கூடுமென அவள் உணர்ந்தாள். அவள் அச்சத்தோடு பின்னால் திரும்பிப் பார்த்தாள். பின்னாலிருந்து அவளை நோக்கி வரும் அவளது கணவனை அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமாக இருந்தது. அவள் கோபத்தோடு அவனைப் பார்த்தாள்.
"எங்களக் கல்லறைக்கு அனுப்ப வந்தீங்களா?"
அவனிடமிருந்து பதிலொன்று வரும்வரைக்குமாவது பார்த்திருக்காது அவள் தொடர்ந்தும் அவனை ஏசிக் கொண்டேயிருந்தாள். அவளது திட்டுக்கள் நின்றவுடனேயே அவன் கதைத்தான்.
" தாமதிக்காதே. பிள்ளைங்க தனியே வீட்டிலிருக்காங்க."
அவன் சாந்தமான குரலில் சொன்னான். பிறகு அவளைத் தாண்டிக் கொண்டு முன்னே சென்றான்.
" நான் வேலையொன்றைத் தேடிப் போறேன்."
அவளைத் தாண்டுகையில் அவன் சொன்னான். அந்த இறுதி வார்த்தைகளைக் கேட்டவுடனேயே அவளது கோபம் தணிந்து போனது.
அவனைத் திட்டிய விதம் மனதில் தோன்றும் போதெல்லாம் அவளது இதயம் உருகிப் போவதைப் போல அவள் உணர்ந்தாள். அவளது இதழோரத்தில் மெல்லிய புன்னகையொன்று உதிப்பதை நிலவொளியில் காணக் கூடியதாக இருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.