அன்று கல்லூரியின 'பெயார்வெல் டே'. நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தனர். எல்லோர் கையிலும் ஒரு 'ஆட்டோகிராப்' இருந்தது. ஒரே படபடப்புடன் காணப்பட்டாள் சைந்தவி. அவளின் கண்களோ ஆகாஷைத் தேடியது. ஆகாஷ் சைந்தவிக்கு ரொம்ப நெருக்கமானவன். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையில் ரொம்ப பெரிய இடைவெளி இருக்கும். ஆகாஷை தூரத்தில பார்த்தாளே சைந்தவி குஷியாகிவிடுவாள். கூடவே பதற்றமும் தொற்றிக் கொள்ளும். ஒரே கல்லூரி என்ற படியால் ஆகாஷும் சைந்தவியும் அதிகம் சந்தித்திருக்கி;றார்கள். பேசியும் இருக்கிறார்கள். எல்லாமே சாதாரன பேச்சுக்கள். கல்லூரி தொடங்குவது பற்றி... பாடத்திற்கு வர முடியாமை பற்றி... பாடக் குறிப்புகளை கை மாற்றிக் கொள்வது பற்றி... நண்பர்களின் சுகவீனம் பற்றி.. இப்படி நிறைய 'பற்றி' கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள். சைந்தவிக்கு, ஆகாஷ் மீது நிறையவே நேசம் இருந்தது. இது சக மாணவர்கள் இவர்களிருவரையும் இணைத்துப் பேசியதால் உண்டானதாக இருக்கலாம். இன்னொரு புறம் இவர்களிருவருக்குள்ளும் அது இல்லாமல் எப்படி சக மாணவர்கள் இணைத்துப் பேச முடியும் என்ற கேள்வியும் நியாயமானது. நெருப்பில்லாமல் புகையுமா என்ன? ஆகாஷும் சைந்தவியுடன் விஷேடமாகவே பழகுவான். மெல்லிய புன்னகை, காருண்யப் பார்வை, அமைதியான பேச்சு என அவனது ஒவ்வொரு நகர்வும் சைந்தவிக்குள் காதலை நங்கூரமிட்டு உட்கார வைத்திருந்தது. இவர்கள் இருவரும் தங்கள் நேசத்தைச் சொல்லவில்லையாயினும் இவர்களது கண்கள் சந்திக்கும் போதெல்லாம் காதல் மொழியில்தான் பேசிக் கொண்டன. கண்களுக்கு இருக்கும் நேர்மை பெரும்பாலும் உதடுகளுக்கிருந்ததில்லை.
ஆம் சைந்தவி உறுதியாகவே நம்பினாள். ஆகாஷும் தன்னைக் நேசிக்கின்றான் என்பதை. 'நான்தான் பொம்புள.. தயங்குறன். அவருக்கென்ன எங்கிட்ட தைரியமாச் சொல்லலாமே' என்ற கோபம் ஆகாஷ் மீது சைந்தவிக்கு இல்லாமலில்லை. பலமுறை சைந்தவி தன் காதலைச் சொல்ல முயற்சித்து தோற்றுமிருக்கின்றாள். சூழ்நிலைகள் இவளைத் தடுத்தது என்பதிலும் பார்க்க, ஆகாஷ் நிஜமாகவே சைந்தவியைக் காதலிக்கிறானா? இல்லையா? என்ற சந்தேகமும் பயமும்தான் சைந்தவியைத் தடுத்தது. அந்த பயமும், சந்தேகமும் இந்த 'பெயார்வெல் டே' தினத்திலும் அவளுக்குள் இல்லாமலில்லை. தூரத்தில் ஆகாஷ் வருவதைப் பார்த்துவிட்டாள் சைந்தவி. சந்தோசமும், பதற்றமும் இரட்டைக் குழந்தை போல் தொற்றிக் கொண்டது அவளது உள்ளத்துள். ஆகாஷ் வெகு தூரத்தில் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டும், 'ஆட்டோகிராப்' இல் எழுதிக் கொண்டும் இருந்தான்.அவன் கண்களோ சைந்தவியை அடிக்கடி பார்த்த வண்ணமிருந்தன. பின்னர் ஆகாஷ் சைந்தவியை நோக்கி வரலானான். இடையில் நண்பர்களோடு பேசிச் சிரித்த போதும் அவன் கண்களும், மனசும் சைந்தவியைச் சுற்றி வட்டமிடுவதை சைந்தவியும் அவதானித்தாள். அவள் மனம் பூரித்தது. ஆகாஷை நோக்கி மெலிதாகப் புன்னகைத்தாள். எங்கே தான் புன்னகைப்பது தொலைவிலிருக்கும் ஆகாஷக்குப் புரியாமல் போய்விடுமோ என்ற கலக்கம் மேலோங்க செயற்கையாகவே தன் அழகிய உதடுகளை அகல விரித்துச் சிரிக்கலானாள் சைந்தவி. பாவம் அவள். இன்று இறுதி நாள் எப்படியாவது தன் விருப்பத்தை சொல்லிவிட வேண்டும் என்ற வேட்கை அவளுக்குள் தகித்தது.
சற்று நேரத்தில் ஆகாஷ் அவளருகில் வந்தான். ஹாய் சைந்தவி! எப்படி இருக்கிறீங்க? ம்...நல்லம். இன்னைக்கு கடைசி நாள் என்ன? ஆ..ஆமா (இருவரும் அமைதி காத்தனர். பின்னர் ஆகாஷ் பேசத் தொடங்கினான்.) மனசுக்கு கஷ்டமா இருக்கு... என்ன...என்ன.. ஆகாஷ் பேசத் தொடங்கு முன் அவ்விடத்தில் சைந்தவியின் நண்பிகள் கூடிவிட்டனர். 'என்ன ஆகாஷ் சைந்தவிக்கு மட்டும்தான் ஆட்டோகிராபா? எங்களுக்கில்லையா?' என்றாள் காயத்ரி... ஆகாஷும் சிரித்தக் கொண்டே எல்லோரது ஆட்டோகிராப் இலும் எழுதத் தொடங்கினான். அவர்களும ஆகாஷின் 'ஆட்டோகிராபில்' இல் எழுதினார்கள். இவர்கள் குறுக்கிட்டது சைந்தவிக்கு கோபமாக இருந்தாலும் ஆகாஷ் தன் விருப்பத்தை சொல்லப் போகிறார் என்ற நம்பிக்கை பிறந்ததனால் உள்ளுர இன்புற்றாள். ஒருவாராக எல்லோரும் விடை பெற்றுச் சென்றனர். ஆகாஷ் சைந்தவியைப் பார்த்து, 'நாம அந்த பூந்தோட்டப் பக்கம் போவோமா' என்று கேட்க, இந்த அழைப்புக்காகவே ஏங்கிக்கொண்டிருந்த சைந்தவி உடனடியாகத் தலையசைத்தாள். இருவரும் அருகிலிருக்கும் பூந்தோட்டம் நோக்கி நடந்து சென்றனர். சைந்தவியின் மனதிற்குள் பல வண்ணப் பட்டாம் பூச்சிகள் பறந்தன. பல கோடி பட்டாசுகள் வெடித்தன.
நடந்து செல்லும் போதே ஆகாஷ் பேசத் தொடங்கினான். மறக்க முடியல்லல்ல... எதை? (பேதையாகக் கேட்டாள் சைந்தவி) இந்தக் 'காலேஜு, நம்ம பிரண்ட்ஸ், இதோ இந்த தோட்டம்... எல்லாத்தையும்.. ஆ...ஆமா... பேஸ்புக், ட்வீட்டர்... இதுவும் இல்லன்னா இன்னமும் கவலையா இருந்திருக்குமில்ல? ஆ...ஆமா... அந்தக் காலத்துல காலேஜ் பிரண்ட்ஸ் எப்படித்தான் இந்த நாள சந்திச்சாங்களோ தெரியல்ல... சைந்தவிக்கு ஆகாஷின் மனம் எதை நோக்கி வருகின்றது எனப் புரிந்தது. ஆனா ஏன் இவ்வளவு சுற்றி வளைக்கனும்னு ஏமாற்றமா இருந்தது. ' காதலில் பெண்கள் சொல்ல வேண்டியதை தங்கள் மௌனத்திற்குள் புதைத்துவிடுகிறார்கள், ஆண்களோ சொல்ல வேண்டியதை விடுத்து ஏலவே புதைக்கப்பட்டவற்றைத் தோண்டிக் கொண்டிருப்பார்கள்.' என்று யாரோ சொன்ன மொழி அவளுக்கு ஞாபகம் வந்தது. பெரும் பதற்றத்துடன் ஆகாஷையே பார்த்துக் கொண்டிருந்தாள் சைந்தவி.. ஆகாஷ் தொடர்ந்து பேசினான். 'என்னப் பொருத்த வரைக்கும் இந்த காலேஜுப் பருவம்தான் வாழ்க்கையிலே முக்கியமான பருவம்னு தோனுது.. ஏன்னா நம்ம லைப்ல முக்கியமான திருப்பம் இங்கதானே ஏற்படுது. நீங்க என்ன நினைக்கிறீங்க?' ஆ...ஆமா... முக்கியமான தீர்மானங்கள் காலேஜ் லைப்ல தான் எடுக்கப்படுது. உண்மையான ஜனநாயகம் எங்கிறத இங்க வச்சுத்தான் நம்ம புரிஞ்சுக்குறம். பள்ளிக்கூடத்துல எதையும் புரிஞ்சுக்கிற பக்கவம் இருக்கிறதில்ல... இங்கதான். வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான கொள்கைகள், நிறையப் பிரச்சினைகள், அதையும் தாண்டிய குழு ஒற்றுமை.. 'கிரேட்' ஆகாஷ் பேசிக்கிட்டே இருந்தான். ஆகாஷ் மேடையில் இப்படியெல்லாம் அதிகப்பிரசங்கியாகப் பேசும் போதெல்லாம் ஆவலாக் கேட்டுக் கொண்டிருந்த சைந்தவிக்கு இப்போது அதைக் கேட்பதற்கான பொறுமையில்லை. இப்போது அவள் மனம் அறிவையோ, அறிவுரையையோ எதிர்பார்க்கவில்லை. அவனது அன்பைத்தான் எதிர்பார்க்கிறது. 'சைந்தவி உன்ன எனக்குப் புடிச்சிருக்கு' எங்கிற ஒரு வசனத்துக்காக இத்தனை வருஷமா ஏங்கிக் கொண்டிருக்கும் ஜீவன் அவள். வழக்கமா ஆகாஷ் பேசும் போது அவன் கண்களை மட்டும் பார்க்கும் சைந்தவி இப்போது அவன் உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் தன் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு.. ஆகாஷ் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருந்தான். 'நாம் எல்லோரம் ஜனநாயக வாதிகள் தான். ஆனா நம் எல்லோருக்குள்ளும் ஒரு முதலாளித்துவவாதி இருக்கத்தான் செய்கின்றான் இல்லை என்றால் உழைப்பைப் பகிர்ந்து கொள்வது பொல நம்ம படிப்பையும், உணர்வுகளையும் ஒன்றாகவே பகிர்ந்தக்கலாமே 'கொமியுனிஸ்ட்' மாதிரி. நம்ம பெஜ்லயே 4 பேர் 'பெயில்' ஆகிருக்காங்க. அவங்கள ஒன்னா நம்மளக்கு கூட்டிப் போக முடியல்லயே... ஆகாஷ் எதையெதையோவெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். சைந்தவியோ தான் எதிர்பார்ப்பதை இப்போ சொல்வார், அப்போ சொல்வார் னு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து கொண்டேயிருந்தாள். தன் உணர்வுகள் விசும்பிக் கண்ணீர்விடுவதை உணர்ந்து கொண்டாள். தொடர்ந்தும் ஆகாஷையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவனோ, 'கார்ல்மார்க்ஸ சொன்னது போல... 'என தொடர்ந்தும் எதையோ பேச விளைகையில் இவளுக்குள் விம்மி குமுறிக் கொண்டிருந்த பொறுமையோ வெடித்துச் சிதறியது கோபமாகவும், அழுகையாகவும்... 'இதப் பேசத்தானா என்ன இங்கு கூட்டி வந்தீங்க' என்று ஆவேஷமாகவும், சத்தமாகவும் கேட்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது.
தன் பேச்சை நிறுத்திய ஆகாஷ் தன்னை சுதாரித்துக் கொண்டான். அவள் கோபமும், கண்ணீரும் இவனுக்கு பல கதைகள் சொல்லிற்று. அவளைப் பார்த்து பிரம்மித்துப் போய் நின்றான். இப்போது அவனுக்குள் புதைந்திருந்த அது வெளிவர ஆரம்பித்தது. தனது சைந்தவியை அழ வைத்துவிட்டோமே என்று வேதனையுற்றான். ஆழ்ந்த நேசத்தோடு சைந்தவிக்கருகில் சென்றான் ஆகாஷ். சைந்தவி தலையைக் குனிந்தவாறே அழுது கொண்டிருந்தாள். தனது விரல்களால் குனிந்திருந்த சைந்தவியின் கண்ணீர் தோய்ந்த முகத்தில் நாடியைப் பிடித்து மெதுவாக உயர்த்தினான் ஆகாஷ். இருவர் கண்களும் ஒன்றை யொன்று விசாரித்துக் கொண்டன. உரிமையோடும், உவப்போடும், பேரன்போடும் சைந்தவியைப் பார்த்து ஆகாஷ் கேட்டான். 'இத்தனை நாள் ஏன் சொல்லல'... சைந்தவி அழுதவாறே ஆகாசின் நெஞ்சினில் தனது வெட்கித்த முகத்தைப் புதைத்துக் கொண்டாள்... அந்தத் தோட்டத்தின் நிசப்தம் இவர்களுக்குள்ளும் குடி கொண்டது.. அங்கிருந்த பூக்கள் எல்லாம் அவர்கள் இருவரையும் வாழ்த்துவது அவர்களுக்கு நன்றாகவே கேட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.