[ யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஜீவநதி' சஞ்சிகையின் கனடாச் சிறப்பிதழில் வெளிவந்த சிறுகதை. புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பமொன்றின் வீடு வாங்கிய அனுபவத்தை விபரிக்கும் கதையிது. ]
என் பெயர் கனகசபை. நான் ஒரு ஈழத்துத் தமிழ் அகதி. கனடாக் குடிமகன். கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து அகதியாகக் கனடா வந்து கடந்த இருபது வருடங்களாகக் கன்டாவின் முக்கிய நகரான டொராண்டோவில் மனைவி, குழந்தைகளென்று வசித்து வருகின்றேன். நான் எனது வீடு வாங்கிய அனுபவத்தை உங்களுடன் இப்பொழுது பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இதில் நான் உங்களது அபிப்பிராயத்தைக் கேட்கப்போவதில்லை. ஆனால் மனப்பாரத்தை இறக்கி வைத்தால் ஓரளவுக்கு ஆறுதல்தானே. அதுதான் கூறலாமென்று நினைக்கின்றேன். மக்கள் ஊரில் அகதிகளாக அலைகின்றார்கள். சொந்த மண்ணிழந்து வாழ்கின்றார்கள். இந்த நிலையில் 'இவர் பெரிய மசிரு. வீடு வாங்கின கதையினைக் கூற வந்திட்டாராக்குமென்று' நினைக்கிறீர்கள் போலை. இருந்தாலும் என் கதையினைக் கூறாவிட்டால் என் மண்டையே வெடித்துவிடும் போலையிருப்பதால் அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அது தவிர என் அனுபவம் ஒரு சிலருக்குப் படிப்பினையாகவிருக்குமல்லவா? என் வீடு வாங்கிய அனுபவத்தை மட்டும் வைத்து வீடு வாங்குவதுபற்றி ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம். என் அனுபவம் இது. மேலே படியுங்கள்.
1. அன்று....
செல் போன் 'ரிங்'காரமிட்டது. அழைத்தது இந்திரகுமார். 'ரியல் எஸ்டேட்' முகவராகத் 'டொராண்டோவில்' பணிபுரியும் ஆயிரக்கணக்கானவர்களிலொருவன். சென்றமுறை நண்பன் கந்தரட்னத்தின் இல்லத்தில் சந்தித்திருந்தேன். கந்தரட்னம் என்னுடன்தான் கனடா வந்தவன். இன்று வீடும், வாசலுமென்று பொருளியல்ரீதியில் மிகவும் உச்சநிலையிலிருப்பவன். முதலீடுகள் மூலம் பணத்தைப் பெருக்குவதில் வல்லவன். செல்வத்தின் உச்சநிலையில் இருந்தபோதும் நட்பை இன்னும் மதிப்பவன். இலங்கையில் படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்து தொடரும் நட்பு. அவ்வப்போது சந்தித்துக்கொள்வதுண்டு. இயற்கை, அறிவியல், அரசியல், தத்துவம், இறையியலென்று அனைத்து விடயங்களையும் பற்றிக் கதைப்பதில் ஆர்வமுண்டு. வானியல் பற்றியும் மிகவும் ஆர்வமுள்ளவன். அதற்காக இரவுச் சுடர்களைத் தெளிவாகப் பார்க்கும் வகையிலான தொலைக்காட்டியொன்றையும் அண்மையில் வாங்கி வைத்திருந்தான். வானம் தெளிவாக இருக்கும் சமயங்களில் இரவுச்சுடர்களை, தண்நிலவுப் பெண்ணை அத்தொலைகாட்டியினூடு பார்ப்பதுண்டு. அவ்விதமாக ஒருநாள் பார்ப்பதற்காக அவனில்லத்திற்கு வந்தபோதுதான் எனக்கும் இந்திரகுமாருக்குமிடையிலான முதற்சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது அவன் என்னைப் பற்றி விசாரிப்பதில் ஆர்வம் காட்டினான்.
"அண்ணை, எங்கை இருக்கிறீங்கள்? 'மார்க்கத்'திலையா"
எதற்கெடுத்தாலும் 'அண்ணை' போட்டுக் கதைப்பது எம்மவர் பலரின் பழக்கம்.
"ஸ்கார்பரோவிலைதான்"
"இன்னும் ஸ்கார்பரோவிலையா?"
இந்திரகுமாரின் குரலில் வியப்பு சிறிது தொனித்தது.
"ஓமோம். அதுதான் குழந்தைகளின்ற் படிப்புக்கெல்லாம் நல்ல வசதி" என்றேன்.
இந்திரகுமார்: "இப்பதானே எங்கடை ஆக்கள் எல்லாரும் ஸ்கார்பரோவிலையிருந்து வீட்டை வித்திட்டு, மார்க்கம் , பிராம்டன், ஏஜக்ஸ் என்று மூவ் பண்ணுகினம். மூவ் பண்ண வேண்டியதுதானே"
இவ்விதம் இந்திரகுமார் கூறுவதை அருகில் நண்பனின் மனைவியுடன் உரையாடிக்கொண்டிருந்த என் தர்மபத்தினி கேட்டுக்கொண்டிருந்தவள் இடையில் புகுந்தாள்: "நல்லாச் சொல்லுங்கள். இவருடைய மண்டையிலை ஏறுகிறமாதிரிச் சொல்லுங்கள். எல்லாரும் வீடு, வாசலென்று இருக்கேக்கை இந்த மனுசனுக்கு இதைப்பற்றி ஒன்றுமே கவலையில்லை. கனடாவுக்கு வந்ததிலை இருந்து இன்னமும் அபார்ட்மென்ட்டுக்குள்ளை வாழ்வேண்டுமென்றிருக்கு"
இந்திரகுமாருக்கு நல்லதொரு பிடி கிடைத்துவிட்டது. உற்சாகமுற்றான். அத்துடன் அந்த உற்சாகம் குரலில் தொனிக்கக் கூறினான்: "அண்ணை, அக்கா சொல்லுறதும் சரிதானே. இன்னமும் அபார்ட்ட்மென்டிலையா இருக்கிறியள். என்னைக் கேட்டால் நீங்கள் வீணாக 'ரென்ட்' கட்டுறியள். கட்டுகிற 'ரென்ட்'டுக்குப் பதிலாக இன்னும் கொஞ்சம் சேர்த்து, இப்ப கிடைக்கிற மோட்கேஜிற்கு ஒரு வீட்டையே வாங்கிப் போட்டிங்களென்றால் விலைக்கு விலை. 'சேவிங்க்'சுக்கு சேவிங்ஸ்."
"அப்படிச் சோல்லுங்கோ. நீங்கள் சொல்லியாவது இந்த மனுசன் கேட்கிறாரா என்று பார்ப்போம்" இது என்னவள்.
அன்றிரவு நண்பனின் வீட்டிலிருந்து வந்ததிலிருந்து ஆரம்பித்த என் மனைவியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. இந்தச் சமயத்தில்தான் இந்திரகுமாரின் இந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.
"அண்ணை, என்ன பிஸியோ"
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. பெரிதாக வேலையெதுவுமிருக்கவில்லை.
"அப்படியொன்றும் பெரிய பிசி இல்லை. என்ன விசயம்?"
"அண்ணை, எனக்கு ஒரு அரை மணித்தியாலம் காணும். மார்க்கமும், டொராண்டோவும் சந்திக்கிற இடத்திலை, ஸ்கார்பரோவிலை நல்லதொரு வீடு நல்ல விலைக்கு வந்திருக்கு. உங்களுக்குப் பிடிச்சுதென்றால் அமுக்கிப் போடலாம். என்ன சொல்லுறியள்?"
இதற்கிடையில் மோப்பம் பிடித்துக்கொண்டு என் மனைவி வந்துவிட்டாள்: "என்னங்கள், யாரது போனிலை?"
"அன்றைக்குச் சந்தித்தமே அந்த ரியல் எஸ்டேட் ஏஜன்ட்தான்"
இனி இவள் இதற்கொரு முடிவு காணாமல் விடமாட்டாளென்று பட்டது. முகவனிடம் "வீட்டைப்பற்றி என்னுடைய மனுசியுடன் கதையும். அவவுக்குத்தான் இதுபற்றி நல்லா விளங்கும்" என்று கூறிவிட்டு மனுசியிடம் போனைக் கொடுத்தேன்.
அவர்களுக்கிடையிலான தொலைபேசி உரையாடல் மேலும் சிறிது நேரம் தொடர்ந்தது.
இந்திரகுமார் (ரியல் எஸ்டேட் முகவன்): "அக்கா, இப்பத்தான் அண்ணையிடம் கூறிக்கொண்டிருந்தன். நல்ல விலைக்கு, நல்ல லொகேசனிலை வீடொன்று விலைக்கு வந்திருக்கு.வீட்டுச் சொந்தக்காரன் அமெரிக்காவுக்கு மூவ் பண்ணுகிறானாம். அதுதான் குறைந்த விலைக்கு வித்துப்போட வேண்டுமென்று நிக்கிறான். என்ன சொல்லுறியள்? போய்ப்பார்ப்பமே. இப்ப உங்களுக்கு டைம் இருந்தால் இப்பவே போய்ப்பார்க்கலாம். அக்கா, அண்ணையுடன் கதைச்சுப் போட்டுச் சொல்லுறியளே. நான் லைனிலை நிற்கிறன்"
இதைக்கேட்டு விட்டு என்னிடம் திரும்பிய என் மனைவி "ஏஜன்ட் சொல்லுறார் நல்ல விலைக்கு வீடொன்று வந்திருக்காம். போய்த்தான் பார்ப்பமே. என்ன சொல்லுறியள்?"
இனி என்ன சொல்ல இருக்கு. இவள் அந்த வீட்டைப் போய்ப் பார்க்காமல் இனி நித்திரை கொள்ளவே போக மாட்டாள். அவளுடைய பிடிவாதம் அப்படி. அவளுடைய பிடிவாதத்தை என் சொந்த அனுபவத்திலை நன்கு அறிந்தவன். எங்களது திருமணம் கூட ஒருவகையான காதல் திருமணம்தான். முதலிலை அவள்தான் எனக்குக் கடிதம் போட்டாள். காதல் கடிதம். "என்னைப் பார்த்த முதல் நாளிலேயே என்னைப் பிடித்துவிட்டதென்று" எழுதியிருந்தாள். "எல்லாம் பருவக்கோளாறு" என்று பதிலெழுதினேன்."இல்லை உண்மைக் காதல். காதல் காதல் காதல் போயில் சாதல் சாதல் சாதல்' என்று பாரதியைத் துணைக்கழைத்துப் பதிலளித்திருந்தாள். "நாடிருக்கிற நிலையிலை என்னாலை எப்ப கல்யாணம் செய்ய முடியுமென்று தெரியவில்லை. வெளிநாடு வந்து இப்பத்தான் ஒரு வருசம். இன்னும் இங்கை எனக்குப் பேப்பரும் கிடைக்கவில்லை. அது கிடைத்தபிறகுதான் ஸ்பான்சரே பண்ணலாம்" என்று மீண்டும் பதிலளித்தேன். "எத்தனை வருசமென்றாலும் சரி. வாழ்ந்தால் உங்களோடுதான்" என்றாள். சொன்னவள் எட்டு வருடங்களாகக் காத்திருந்தாள். இந்திய அமைதிப்படையும் வந்து நாட்டை விட்டும் போனபிறுகுதான் அவளை ஸ்பான்சர் செய்ய முடிந்தது. அதன்பிறகு தன்னந்தனியாக டொராண்டோ வந்திறங்கினாள். அப்படி வந்தவள் அவ்வப்போது எமக்கிடையில் வரும் வாக்குவாதங்களின்போது 'நீங்கள் இப்படி பொறுப்பில்லாமலிருப்பவரென்று தெரிந்திருந்தால் இப்படி வந்து மாட்டுப்பட்டிருக்க மாட்டேனே" என்று புலம்புகின்றாள். அதற்கு நான் கூறுவது:" பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறத்தான் வேண்டும். இது நீயாக வந்து விழுந்த வாழ்க்கை."
வீடு விற்பனை முகவன் 'ஓடு மீன் ஓடி , உறு மீன் வரும்வரையில் வாடி நிற்கும் கொக்கா'க, பொறுமையாகத் தொலைபேசியில் காத்திருந்தான். மனைவி என்னிடம் போனைத் தந்தாள். நான் காத்திருந்த வீடு விற்பனை முகவனிடம் கூறினேன்: "தம்பி. அப்ப வாருமென். போய்த்தான் பார்ப்பமே"
அடுத்த அரை மணித்தியால நேரத்தில் அந்த முகவன் எனது இருப்பிடத்திலிருந்தான்.
அவனே எங்களைத் தனது காரில் விற்பனைக்காகவிருந்த அந்த வீட்டைக் காட்டுவதற்குக் கூட்டிச் சென்றான். மார்க்கம் நகருக்கும், டொராண்டோ நகரும் சந்திக்கும் ஸ்டீல் சாலையும், மார்க்கம் சாலையும் சந்திக்குமிடத்தில் இருந்த , நான்கு பெரிய அறைகளைக்கொண்ட வீடு. அந்த விலையில் அப்படியொரு வீட்டைப் பார்ப்பது அவ்வள்வு சுலபமல்ல. அந்த வீட்டைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து என் மனைவி எப்படியாவது அந்த வீட்டை வாங்கிவிடவேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றாள். அவளுக்குத் துணையாக அந்த வீடு விற்பனை முகவனும் ஒத்தூதினான்.
இறுதியில் அந்த வீட்டை வாங்குவதற்கு முடிவு செய்தோம். அதற்கு முன் சில நிபந்தனைகளை விதித்தேன். வீடு வாங்குவதென்றால் மோட்கேஜ் கட்ட வசதியில்லையென்று 'பேஸ்மென்ட்'டை வாடகைக்கு விடுவதில்லை. 'பிரைவசி' இல்லையென்றால் வீடு வாங்கி என்ன பிரயோசனம். ஐந்து வருடங்கள் மட்டும்தான் வீட்டை வைத்திருப்பது. அதற்குப் பிறகு விற்றுவிட வேண்டும். அதன் பின் இலாபத்தில் விற்றால் இன்னுமொரு வீடு வாங்குவதுபற்றி யோசிக்கலாம். இல்லையென்றால் மீண்டும் அபார்ட்மென்ட் சென்றுவிட வேண்டியதுதான். வீட்டை வாங்கிவிட்டு இருபத்தைந்து வருடங்கள் மாட்டைப்போல் உழைத்துக் கட்டிவிடுவதற்குள், குழந்தைகள் படித்து முடித்து நல்ல வேலையுமெடுத்து விடுவார்கள். அதற்குள் எங்களது காலம் முடிந்துவிடும். இதற்கெல்லாம் ஓமென்றால் நான் வீடு வாங்கத் தயாரென்றேன். மனைவியும் உடனடியாகவே அதற்குச் சம்மதித்தாள். ஒருமாதிரி இருவருமாகச் சேர்த்து வைத்திருந்த ஐம்பதினாயிரம் டொலர்களை முற்பணமாகப் போட்டு (வீட்டு விலையில் அது பதினைந்து சதவீதம் வரையில் வந்தது) வீட்டை வாங்கிக் குடிபுகுந்தோம்.
2. இடையில் ....
ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. இந்த ஐந்து வருடங்களும் மாடு மாதிரி உழைத்தோம். மாதாமாதம் மோட்கேஜ் கட்டினோம். மேலதிகமாக ஒவ்வொரு வருடமும் மோட்கேஜ் கட்டி முடிப்பதாகத்தான் முதலில் திட்டம் போட்டிருந்தோம். ஆனால் மாதச் செலவுக்களுக்கே வரும் சம்பளம் போதுமானதாகவிருக்கவில்லை. அபார்ட்மென்டில் இருந்தபொழுது மாத வாடகை ஆயிரம் டொலர்கள். ஆனால் வீட்டு மாதச் செலவுகளோ... மோட்கேஜ் இரண்டாயிரம் டாலர்கள். மேலதிகமாக தண்ணீர் வரி, மின்சாரம், இயற்கை வாயு என்று ஐநூறு டாலர்களுக்குக் குறையாது. இரண்டாயிரத்து ஐநூறு டாலர்கள். தவிர வீட்டுச் செலவுகள், கார்ச் செலவு, கார் காப்புறுதிச் செலவு , வீட்டுக் காப்புறுதிச் செலவு அது இதென்று இன்னும் ஆயிரத்தைந்நூறு டொலர்களுக்குக் குறையாது. நாலாயிரம் டொலர்கள் வரையில் மாதச் செலவு வரும். அபார்ட்மென்டிலிருந்தால் ஆயிரம் டொலர்கள் வாடகை, இன்னும் ஆயிரத்தி இருநூறு வரையில்தான் செலவு. மொத்தம் இரண்டாயிரத்தி இருநூறு டாலர்கள். வீட்டில் இருந்ததற்காக மாதம் ஆயிரத்தி எண்ணூறென்று ஐந்துவருடங்கள் கட்டிய தொகையினைப் பார்த்தால்.. வருடத்திற்கு இருபத்தியோராயிரம்படி பார்த்தாலும், ஐந்து வருடங்களுக்கு நூறாயிரம் டாலர்களைத் தாண்டி விட்டிருந்தது. அப்பார்ட்மென்டிலிருந்திருந்தால் அந்தக் காசு மிச்சம். வைத்திருந்த முதலும் மிச்சம். இது தவிர 'பேஸ்மென்ட்', கூரை, 'டிரைவ் வே'யென்று மேலுமொரு முப்பதினாயிரம் டாலர்கள் செலவு. அதனையும் சேர்க்க வேண்டும்.இதற்கிடையில் அவ்வப்போது வீட்டுச் செலவுகளுக்குக் கஷ்ட்டமாகவிருக்கும்போது கடனட்டைகளிலிருந்து வேறு கடனெடுத்து, ஒழுங்காகக் குறித்த தவணைக்குள் கட்டாமல் , 'கிறடிட் ரேட்டிங்'வேறு பழுதாகிவிட்டிருந்தது. இதற்கிடையில் கிறடிட் கார்ட் கொம்பனியொன்று அவன் அடிக்கடி தாமதமாக மாதாந்தக் கட்டுப்பணம் கட்டவே , உயர்நீதிமன்றத்திற்குச் சென்று அறிவித்தலொன்றை அனுப்பியிருந்தது. அப்பொழுது என்ன செய்யலாமென்று ஒரு யோசனை எழுந்தது. தமிழர்களால் வெளியிடப்படும் வர்த்தக் கையேடுகளிலொன்றில் திரு. சு.க.வின் விபரங்களைப் பெற்றுக்கொண்டேன். சுப்பிரமணியம் கந்தையாவின் சுருக்கம்தானது. அவர் தான் கடன் பிரச்சினைகளால் வாடுவோரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் வல்லவரென்று அறிவித்திருந்தார். அவருடன் தொடர்புகொண்டபொழுது மனைவியையும் அழைத்துக்கொண்டு, அந்த நீதிமன்றக் கடிதத்தையும் கொண்டுவரும்படி கூறியிருந்தார். ஒரு நாள் அவருடன் சந்திப்பதற்கு போனில் ஏற்பாடு செய்துவிட்டு அவருடைய காரியாலயத்திற்குச் சென்றோம். திரு. சு.க எங்களைக் கண்டதும் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே வந்து கதவைத் திறந்து வரவேற்றார். அப்பொழுது கூட கைகளில் தடித்த சட்டப்புத்தகமொன்றினை வைத்திருந்தார். ஊரில் பத்தாம் வகுப்பு வரையில் படித்திருந்தவர், இங்கு வந்ததும் கடன் ஆலோசகராகப் பணியாற்றத் தொடங்கியிருந்தார். எங்களிடமிருந்து நீதிமன்றக் கடிதத்தினை எடுத்து வாசித்தார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். அவருடனான எமது உரையாடலின் விபரம் வருமாறு:
நான்: "எப்படியும் இதற்கொரு நல்லதொரு வழியை நீங்கள்தான் செய்ய வேண்டும்?"
திரு. சு.க: "இதற்கு நல்லதொரு வழி 'வாடிக்கையாளருக்கான பிரேரணை' (Consumer Proposal)). இது சட்டரீதியிலான வழி."
இவ்விதம் கூறியவர் வாடிக்கையாளுருக்கான பிரேரணை பற்றி விபரித்தார். இதற்காக 'ட்ரஸ்டிகள்' இருக்கிறார்கள். அவர்களே இப்பிரேரணயைத் தயாரிப்பார்கள். அதன் பிறகு ஐந்து வருடங்கள் உங்கள் கடனில் குறிப்பிட்ட தொகையினைச் செலுத்த வேண்டும். அவ்வளவுதான். அதன்பிறகு நீங்கள் உங்கள் கடன்பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்' என்றார்.
நான்: "இருவரும் ஒரே நேரத்தில் செய்யாமல் ஒருவர் முதலில் செய்யலாமா?"
திரு. சு.க: "முதலிலை உங்களுடைய வைப் செய்யட்டும். அதன்பிறகு இப்பொழுது ஆரம்பிக்கப்பட்ட இக்கடன் மீதான சட்டநடவடிக்கை நிறுத்தப்பட்டு விடும். அதன் பிறகு உங்களுக்கு அவர்கள் இன்னுமொரு நோட்டிஸ் இதுபோல் அனுப்புவார்கள். அப்பொழுது நீங்களும் வேண்டுமானால் உங்களுக்கும் வாடிக்கையாளர் பிரேரணை செய்யலாம்"
இறுதியில் அவர் கூறியதுபோலவே மனைவிக்கு மட்டும் முதலில் வாடிக்கையாளர் பிரேரணையினைச் செய்தோம். அவருக்கும் எழுநூறு டாலர்கள் கொடுத்தோம். அதன்பிறகு நான் கிறடிக் கார்ட் நிறுவனத்திடமிருந்து எனக்கு வரவேண்டிய கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் வந்ததோ இன்னுமொரு நீதிமன்றக் கடிதமல்ல. வந்த கடிதம் எமது வீட்டின் மேல் லீன் போடப்பட்ட விடயத்தைக் கூறிய கடிதம். அத்துடன் கிறடிக் கார்ட் நிறுவனம் முழுக் கடனையும் என்னைப் போடும்படி நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பு வேறு பெற்றிருந்தது. அதன்மூலம்தான் அவர்களால் வீட்டின்மேல் லீனைப் போட முடிந்தது. 'பாவி போன இடமெல்லாம் பள்ளமும் திட்டி என்று ஆச்சி அடிக்கடி கூறுவதுண்டு. என் விடயத்தில் அது மிகவும் சரிதான் போலையிருக்குது.'
கடன் அலோசகர் திரு. சு.க.வின் ஆலோசனையின் விளைவு. மனைவி கட்ட வேண்டிய கடனுக்கு வாடிக்கையாளர் பிரேரணை செய்யதிருக்கும் நிலையில், அதே கடன் முழுவதையும் அக்கடனின் ஒரு பங்குதாரர் நானென்ற முறையில் நான் கட்டும்படி நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்புப் பெற்று, அதன் மூலம் வீட்டிற்கும் சொத்தில் பங்குரிமையினை , 'லீன்' , பதிவு செய்திருந்தார்கள். 'கிறடிட்கார்ட்' நிறுவனத்தினர். உண்மையில் முதலில் எமக்கு வந்திருந்த நீதிமன்றக் கடிதத்தில் இருபது நாட்களுக்குள் அதற்கு எதிரான என் எதிர்வாதத்தினைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். திரு சு.க.வின் ஆலோசனையின்படி நான் கிறடிக் கார்ட் நிறுவனத்தினமிருந்து இன்னுமொரு கடிதத்தினை எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் ஏற்கனவே அனுப்பியிருந்த கடிதத்திற்கு நான் எதிர்வாதத்தினைக் குறித்த காலகட்டத்தில் சமர்ப்பிக்காத காரணத்தைக் காட்டி அந்தத் தவறுக்கான தீர்ப்பினைப் பெற்றிருக்கின்றார்கள். எழுநூறு டாலர்களை எம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் ஆலோசகரான திரு. சு.கவின் ஆலோசனையின் விளைவு இந்நிலையினை எமக்கு ஏற்படுத்தியிருந்தது. அவர் ஒருபோதுமே மனைவிக்கு மட்டும் வாடிக்கையாளர் பிரேரணையினைச் சமர்ப்பித்திருக்கக்கூடாது. இருவரையும் ஒன்றாகச் செய்யும்படி கூறியிருக்க வேண்டும். இல்லாதுவிடத்து இருபது நாட்களுக்குள் இருவரையும் எதிர்த்தரப்பு வாதத்தினைச் சமர்ப்பித்திருக்க ஆலோசனை கூறியிருக்க வேண்டும். ஆனால் அவரோ தனது கட்டணத்தையும் , ட்ரஸ்டியின் கட்டணத்தையும் எடுப்பதில் மட்டுமே குறியாயிருந்ததன் விளைவுதான் எமக்கு இந்த நிலையினை ஏற்படுத்தி விட்டிருந்தது.
வீட்டைக் காட்டி கடன் பெற்று ஏனைய கடன்களையும் அடைக்கலாமென்று பார்த்தால், வீட்டின்மீதிருந்த 'லீன்' காரணமாக இரண்டாவது மோட்கேஜ் எடுப்பதென்றால் அதற்கும் சேர்த்து எடுக்க வேண்டும். வட்டியும் கிறடிட் ரேட்டிங் பழுதாகியிருந்த காரணத்தால் மிகவும் அதிகம். மாதாமாதம் முதலாவது மோட்கேஜுடன் இரண்டாவது மோட்கேஜின் வட்டியும் சேர்ந்தால்.. பிரச்சினை இன்னும் அதிகமாகிவிடும். இதற்கிடையில் பங்குச் சநதையில் நான் போட்டு வைத்திருந்த சேமிப்புப் பணம், அந்தப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான 'நோட்டல்' திவாலாகிவிடவே, கரைந்து மறைந்து போனது. இவ்விதமானதொரு சூழலில் வீட்டை விற்றபொழுது வீடு விற்பனை முகவர்களுக்கான செலவு, கிறடிட் கார்ட் செலவு அது இதென்று எல்லாச் செலவுகளும் போக, போட்ட காசுடன், மேலுல் சில ஆயிரங்கள்தாம் மிஞ்சின. இதற்குப் பேசாமல் அபார்ட்மென்டிலேயே இருந்து தொலைத்திருக்கலாமென்ற ஞானோதயம் அப்பொழுதுதான் ஏற்பட்டது. இதற்கிடையில் இயற்கை வாயு மாதாந்த கட்டணம் கட்டுவதற்குக் காலதாமதமாகும் சமயங்களில் என்பிரிட்ஜ் நிறுவனத்தினர் வாயுவை நிறுத்தி விடுவார்கள். மீண்டும் பணம் கட்டி, வாயு கிடைக்கும் மட்டும் ஊரிலை இருந்த மாதிரி தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குளிக்க , முகம் கழுவப் பாவிக்க வேண்டியதுதான். சீயென்று போய் விடும். இந்த ஐந்து வருடங்களில் வீட்டுச் செலவுகளுக்காகவே உழைத்ததில் கண்ட பலன். ஒரு நாளாவது ஓய்வாக இருந்ததில்லை. குழந்தைகளுடன் சுற்றுலா அது இதென்று போனதில்லை. நண்பர்களுடன் கதைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. வேலை! வேலை! வேலை. மோட்கேஜ் , மின்சாரம், நீர்வரி, இயற்கை வாயு , வீட்டுக் காப்புறுதி, கார்க் காப்புறுதி அது இதென்று மாதாந்த 'பில்'களைக் கட்டுவதே வாழ்க்கையாகவிருந்தது. இப்படியொரு வாழ்க்கைக்காக வீடு தேவைதானா? வீடு தேவைதான். அதுவே வாழ்வின் அடிப்படை இயல்புகளையெல்லாம் இல்லாதொழித்து விடுகின்றதென்றால்... என்ன வாழ்க்கையென்று பட்டது. அப்பொழுதுதான் வீட்டை விற்பதற்கு முடிவு செய்தோம். கனவுகளுடன் வாங்கிய வீட்டினை விற்பதற்கு முடிவு செய்தோம்.
3. இன்று....
தொடர்மாடிக் கட்டடமொன்றிலுள்ள 'அபார்ட்மென்'டொன்றில் எங்களது வாழ்க்கை மீண்டும் தொடர்கிறது. மனைவி இப்பொழுது என்னுடன் வாக்குவாதப்படும் போதெல்லாம் "கனடாவிலை ஒரு வீட்டை வைத்திருக்கத் தெரியாது. வெட்கக்கேடு. பேசாமல் பேஸ்மனடை யாருக்காவது வாடகைக்குக் கொடுத்திருந்தால் இப்படி வித்திருக்கத்தேவையில்லை. வீடு வாங்கினால் கடைசி மட்டும் வைத்திருக்க வேண்டும். அப்பத்தான் இலாபம் வரும். இப்படி இடையிலேயே வித்தால் எப்படி இலாபம் வரும்?" வீடென்பது ஆறுதலாகக் குடும்பத்தவர்களுடன் மகிழ்ச்சியுடனிருப்பதற்கு. அதனை வேறு பலருடன் பகிர்ந்துகொண்டு வாழுவதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் சரி வராதது. இதனை வீடு வாங்குவதற்கு முன் கூறி , அவள் சம்மதித்துத்தானே வீடு வாங்கவே சம்மதித்திருந்தேன். ஆனாலும் அதனைக் கூறி மேலும் அவள் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை. அப்பொழுதெல்லாம் நான் கூறுவேன்: "வாழ்க்கை இன்னும் முடியவில்லையே. அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தைப் போட வேண்டியதுதான். இந்த முறை நாங்கள் தோற்கவில்லையே. அடுத்த முறை இந்த முறை விட்ட பிழையை விடக் கூடாது. இன்னும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். காசிருந்தால் கூடுதலாக முதல் போட்டு வீடு வாங்கவேண்டும். அதற்கு வழியில்லாவிட்டால் வீட்டை வாங்கி, வாழ்க்கைக்காக வீடென்ற நிலை போய் , வீட்டுக்காக வாழ்க்கை என்று வாழுற வாழ்க்கையை மட்டும் வாழவே கூடாது. நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டியதில்லை. நான் மண்டையைப் போட்டு விட்டால், கொஞ்சமாவது லைவ் இன்சுரன்ஸ் இருக்கு. நீங்களொன்றும் ரோட்டிலை நிற்க மாட்டியள்தானே"
அதற்கவள் கூறுகின்றாள்: "இப்படியே சொல்லிக்கொண்டேயிருங்கள். அதுக்குள்ளை எங்கடை காலம் போய்விடும்."
அவளது கூற்றுக்கு நான் பதிலேதுமிறுக்காமல் மெளனமாயிருக்கிறேன். 'எல்லாரும் போனாற்போலை நானும் போனேன் சாமி மலையென்று' , எல்லாரும் வீடு வாங்கிறார்களென்று நானும் வாங்கினேன். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். உண்மையில் வீட்டின் மோட்கேஜ் போன்றவற்றின் மாதாந்தச் செலவுகளைக் கட்டிப்பார் என்பதன் அர்த்தமோ அதுவென்று சிந்தித்துப் பார்க்கின்றேன். ஆனாலொன்று... இப்பொழுது வாழ்க்கை முன்போல் அமைதியாகச் செல்கின்றது. குழந்தைகளுடன் நேரம் கழிப்பதற்கு, சுற்றுலாக்கள் செல்வதற்கு, தேவையான செலவுகளைச் செய்வதற்கு, நண்பர்களுடன் அவ்வப்போது நேரத்தைக் கழிப்பதற்கென்று நேரமிருக்கிறது. மாதச் செலவுகளை உரிய நேரத்தில் கட்ட வேண்டுமேயென்ற மன அழுத்தம் இல்லை. மேலே ஆகாயம். கீழே பூமி. வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையாக விளங்குகின்றது. அகதிக்கு ஆகாயமே துணையென்று சும்மாவா சொன்னார்கள்.