[பதிவுகளில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தச் சிறுகதையும் மீள் பிரசுரமாகின்றது. - பதிவுகள்-]
தொடையில் ஓங்கி ஒரு அடி..!
வலியில் , வஹாப் - என் தம்பி - எழுப்பிய சத்தம் மனதை அறுத்தது. இது வலி என்றோ அது எந்த இடத்திலென்றோ அல்லது அடித்தது தன் லாத்தாதான் என்றோ அவன் உணர்வானா ? பார்வை , எப்போதும் வானத்தை மறைக்கும் முற்றத்துப் பந்தலின் ஏதாவது ஒரு மூங்கிலில் பட்டு நிதானமில்லாமல் அலைய, எச்சில் வடிகிற கோணல் வாயில் மொய்க்கும் ஈக்களை விரட்டத் தெம்பில்லாத தன் திருகிய கைகைளைத் தொட்டியில் அடித்துக் கொண்டு இருப்பவன் அவன். தொட்டியின் கம்பிகளைச் சுற்றிப் பிணைந்துள்ள அவன் சூம்பிப் போன கால்களுக்கு என்ன தெரியுமோ அதுதான் அவன் மூளைக்கும் தெரியும். மூளை இருக்கிறதா ? உடலின் எந்த பாகங்களுக்கும் வித்யாஸம் தெரியாத ஒரு பிறவியை குழந்தையென்று சொல்வது பொருந்துமா ? இப்போது அவன் பேண்டிருக்கும் மலத்தின் நாற்றம் கூட அவனுக்குத் தெரியவில்லையே...
நாற்றமெல்லாம் நமக்குத்தான்.
எல்லோரும் தாழ்வாரத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது குபீரென்று கிளம்பும். அது ஒன்றுமில்லை என்பதுபோல பாவனை காட்டுவார்கள் பெரியவர்கள். அவர்களில் ஒருவர் பிசுக்கி விட்டிருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறதே... இல்லை, இது வஹாப் செய்த வேலையேதான். தொள தொளவென்று தொங்கும் அரை நிஜாரின் வழியே தொடைப் பக்கத்தில் புடைத்துக் கொண்டு மலம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது...வயிறு சரியில்லாத சமயங்களில் சத்தத்துடன் பிய்த்துக் கொண்டு தொட்டியின் இடுக்களின் வழியே தாழ்வாரத்தில் ஊற்றும்.
சுத்தம் செய்ய தாழ்வாரத்துத் தொட்டிதான் வசதி. வஹாபின் கழிவுகள் எல்லாம் முற்றத்தில் பாய்ந்து அப்படியே அதன் ஓரத்தில் இருக்கும் சாராக்குழியின் வழியாக தெருவுக்கு ஓடிவிடும். டெட்டால் வாசம் வீட்டில் மணத்தாலே வஹாபு வெளிக்கிப் போயிருக்கிறான் என்று அர்த்தம். லாத்தாதான் கொஞ்சமும் அருவருப்பு படாமல் கழுவும். நாற்றமே தெரியாது லாத்தாவுக்கு. சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அவனோடு மாக்குவலி போட்டுக் கழுவிய உம்மா , தூக்கிச் சுமக்க முடியவில்லை என்று பொறுப்பை இப்போது லாத்தாவிடம் ஒப்படைத்து விட்டார்கள். கழுவுவதாவது பரவாயில்லை, வஹாபின் சாமானைப் பிடித்து ஒரு கிளாஸில் விட்டு அவனை ஒண்ணுக்குப் பேய வைப்பதற்கு கனியாப்பிள்ளையான என் லாத்தாவை தொழத்தான் வேண்டும்.
'நான் செய்றேனே லாத்தா..' என்று உதவிக்குப் போனால் 'அவன் எனக்குத்தான் அடங்குவான்டா' என்பாள் லாத்தா. அதுவும் உண்மைதான். அவளது கையின் வலிமை அவனுக்குத்தான் தெரியும். உம்மாவிடமிருந்து வந்த வலிமை.
அவர்களைத் தப்பும் சொல்ல முடியுமா? திடீர் திடீர் என்று வரும் ஜூரத்தின் உச்சத்தில் வெட்டு வந்து அடங்கிய பிறகு இரண்டு மூன்று நாளைக்கு வஹாபின் பிடிவாதம் தாங்காது. எதையும் வாயில் வைக்காத பிடிவாதம். நன்றாக இருக்கும்போது கொடுப்பதே ஆடிக் கொண்டேயிருக்கும் கோணவாயின் உள்ளே போகாமல் பாதி சட்டையில் சிந்துகிறது... இப்போதோ , பேச்சும் வராமல் 'வ்வாஆ ஆ..' என்று கத்திக் கொண்டே உடம்பை அஷ்ட கோணாலாய் புழுவென வளைப்பதில் , உணவென்ற பெயரில் கொடுக்கும் பிசைந்த இட்லியும் உணர்வூட்டக் கொடுக்கப்படும் மருந்துகளும் தொட்டிக்குத்தான் போகிறது.
வஹாப் பிறந்த இரண்டு வருடத்திற்குப் பிறகு இந்த தொட்டிதான் அவன் வீடு என்று சொல்ல வேண்டும். பலவீனமான உத்தரத்தில் தொங்கும் வீடு. எப்போது அறுந்து விழும் என்று யாருக்கும் தெரியாது..
இந்தத் தொட்டிக்கு வரும் முன்பு அவன் இருந்த துணித் தொட்டில் அழகு - அவனைப் போலவே. கூட்டுப் புருவம் வைத்துக் கொண்டு , கொழுகொழுவென்று...'உம்மாட சீன புக்கான் மூக்கும் வாப்பாட தலையும்!' என்று கிண்டல் செய்யப்பட்டாலும் பார்க்க அம்சமாகத்தான் இருந்தான் - 'ஒங்க வூட்டு புள்ளையிலுவளுக்கு சிக்லாவை ரெண்டு பக்கமும் கவுத்து வச்சாப் போல ஒரு கன்னம்..!' என்ற குடும்ப அடையாளத்தோடு.
தலை மட்டும் நிற்காமல் ஆடிக் கொண்டே இருந்தது. எப்போதும் அது அவனது மார்பின் துணையைத் தேடியது. 'நரம்புக் கோளாறு; சரி செய்து விடலாம்' என்றுதான் ஜமால் டாக்டர் சொன்னார். என்னென்னமோ மருந்து மாத்திரைகள். தலை போகட்டும், போலியோ வந்து போன பிறகு நிற்க முடியவில்லையே என்று காலுக்கு எல்லா வகை வைத்தியமும் பார்த்தார்கள். கடைசியில் காசு செலவு இல்லாத , மன்ணில் புதைத்து வைக்கும் மருத்துவமே சரியென்று கண்டார்கள்.
வஹாபின் இடுப்பு அளவுக்கு வாசலில் குழி தோண்டப்பட்டது. வேலைக்காரன் நாவப்பாதான் கூடவே இருப்பான். பெண்கள் வாசலுக்கு வர முடியாது. உம்மாவும் லாத்தாவும் கண்ணீரோடு ஜன்னலில் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஓரிரு மணி நேரம்தான். நான் கடைக்கு ஏதாவது சாமான் எடுக்க வீட்டுப் பக்கம் வரும்போது சமயத்தில் பார்ப்பதுண்டு. என்னைப் பார்த்ததும் வஹாபுக்கு அப்போதெல்லாம் புன்சிரிப்பு வரும். புரிந்து கொண்டதன் அடையாளமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மண்ணின் கீழுள்ள அவன் கால்களைப் பற்றியும் புரிந்திருப்பானா ?
'இந்தோ அந்தோ' என்று நம்பிக்கையாய் எதிர்பார்த்து அது பொய்த்துப் போனதும் தொட்டிலோடு அடக்கி விட்டார்கள். நானா செளதி போகும்போதெல்லாம் கூட இப்போதுள்ள அளவு மோசமில்லை. ஒரு பெரும் ஜூரத்தில் காலும் கையும் முறுக்கிக் கொண்டு கண் மேலே பார்க்க ஆரம்பித்து விட்டது. 'எப்படி இருக்கிறான் வஹாபு?' என்று நானாவிடமிருந்து கடிதம் வரும்போதெல்லாம் சமாளிப்பாக பதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். வாப்பாவிடமிருந்து சரியாக பணம் காசு வராத நிலையில் அவரும் கோபித்துக் கொண்டால் என்னாவது ? பயந்து, நேர்ந்து கொண்டு தர்ஹாக்களுக்கு போவதைக் கூட மறைத்தார்கள். கடைசியில் நானாவுக்கு விஷயம் தெரிய வந்தபோது அவர் ஒன்றும் கோபித்துக் கொள்ளாதது எனக்கு ஆச்சரியம். நம்பிக்கையால் குணமானால் நல்லதுதான் என்று எழுதி விட்டார். வஹாபுக்கு காசு செலவு பண்ணத் தயங்கித்தான் இந்த மழுப்பல் என்று வீட்டில் பேச்சு வந்தது. வஹாபை ஏதோ ஒரு மரக்கட்டையை பார்க்கிற மாதிரி பார்க்கும் அஸ்மா மச்சியை நினைக்கும்போது அது உண்மையாக இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
நானாவின் மகன், 'வகாபு சின்னாப்பா' என்று பிரியத்தோடு தொடப்போகும்போது ' 'ஏ' இக்கிம். போவாதே..' என்று அதட்டும் மச்சியை எனக்கு பிடிக்கவில்லை. 'சூ.சு' என்று ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கிறேன் அவர்களுக்கு . அர்த்தம் என்னைத்தவிர யாருக்கும் தெரியாது. மச்சியைப் பிடிக்காதே தவிர நானாவின் மகன் அனீஸை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னைப் போலவே ரஜினி பிரியன். ரஜினி சண்டை போட்டால் 'என் லை·ப்லெ இந்த மாதிரி சண்டை பாத்ததில்லை ' என்பான் அந்த மூணு வயது வால்! வீட்டிற்கு வரும் சமயங்களில் கடைத் தெருவுக்கு கூட்டிப் போய் ஏதாவது வாங்கிக் கொடுத்து அவனை சந்தோஷப் படுத்தலாம் என்றால் மகனை இலேசில் வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்கிறது மச்சி...
எங்கள் வீடு முழுக்க மல நாற்றமாம்!
மச்சியின் அலட்சியத்தைக் கழுவாத நானாவையும் இப்போதெல்லாம் பிடிக்கத்தான் இல்லை. தவிர , இவரால் அல்லவா லாத்தாவும் நானும் படிக்க முடியாமல் போனது! நானாவின் படிப்பால் வாப்பாவுக்குக் கடன் சுமை. அவர்களால் செலவுக்குச் சரியாக அனுப்ப முடியாமல் போனதில் நான் காலேஜ் போக முடியாமல் காடம்படி ITயில் காக்கிச் சட்டையோடு பொருமினேன். லாத்தா , வயசுக்கு வரும் வரை -குடும்பத்தின் எதிர்ப்போடு- படித்தாள். 'நம்ம சமூகத்துலெ பொம்பளைப் புள்ளைங்க படிச்சாச்சான் தன்னோட புள்ளைங்களை சபர் செய்ண்டு பேயா விரட்டாது' எனும் வாப்பாதான் அவளுக்கு ஆதரவு. புரியாத புத்தகங்களையெல்லாம் புரிந்த மாதிரி பந்தாவாக படிக்கும் நானாவும் ஆதரவுதான். ஆனால் அப்போது அவர் செளதி போயிருக்கவில்லை. 'பயணம் போவாத பண்டி' எப்படி ஆதரவு கொடுக்க முடியும் ? காலேஜ் படிப்பை முடித்து விட்டு தர்ஹாலைனிலுள்ள சிங்கப்பூர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வேலை விஷயத்தில் நானும் அவரும் ஒன்றானது அந்த சமயத்தில் எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் படிச்சவன் பயணம் போவட்டும் என்று அவருக்கு மட்டும் உம்மா பல தர்ஹாக்களுக்கும் நேர்ந்து கொண்டிருந்ததில் அந்தப் பெருமை தொலைந்தது. ஒரே நேரத்தில் எனக்கும் நானாவுக்கும் நேர்ந்தால் அவுலியாவுக்கு பிடிக்காது போலும். 'நீ நேந்துக்கிறதுனாலேதான் எனக்கு விசா கிடைக்க மாட்டெங்குது' என்று நானா கோபப்படுவார்.
நானா பெரிய அவுலியா எதிரி. ஒருமுறை , ஏதோ ஒரு வீட்டுக் கல்யாணத்துக்காக எழுபதடிபாவா அடங்கியுள்ள ஊர்ப் பக்கம் போய் , பாவாவின் கபுருக்கு பக்கத்தில் இருந்த மிக உயரமான பனை மரத்தைப் பார்த்து விட்டு ' பாவா , ஜட்டியை காயப் போடுறதுக்கா இது?' என்று கேட்டு அடி வாங்கியவர் ! இப்போது மட்டும் எப்படி மாறினார்? அந்தப் பனைமரம் அங்கேயேதான் அப்படியே இருக்கிறது.
வஹாபைக் கூட்டிக் கொண்டு ஒரு பாவாவின் தர்ஹாவுக்குப் போகும்போது நானும் உடன் போயிருந்தேன். நாய்பாவா தர்ஹா. கூத்தானூர் குளத்துப் பக்கம் இருக்கிறது. வாலையில் இரண்டு நாள் இருந்தோம். வஹாபைப் போல எத்தனையோ பேர்... யாருக்கும் குணமான மாதிரி தெரியவில்லை. ·பாத்திஹா ஓதுபவர்கள்தான் திடகாத்திரமாக இருந்தார்கள். பாவாவோடு அலைந்த நாய்கள் இப்போது வருவதில்லையாம். பாவா உயிரோடு இருக்கும்போது வஹாபைக் கொண்டு போயிருக்க வேண்டும்.
நாய்பாவாவை நான் பார்த்ததில்லை. வீட்டில் அவர்களின் ஒரு பழைய ·போட்டோ மட்டும் இருக்கிறது பூச்சி அரித்துப் போய் . பாவா இன்னும் நாயோடு இருக்கிறார்கள் என்பது சேச்சிமாவின் நம்பிக்கை. சேச்சிமா என் பாட்டியா. 'நம்புனா எல்லாம் குணமாவும்' என்பார்கள். 'அப்படிண்டா அல்லாவை நம்ப வேண்டியதுதானே ?' என்று நானா கேட்பார் எகத்தாளமாக. படித்தவர் இல்லையா ? 'அல்லாதான் அவுலியாவை நம்பச் சொல்றான்' என்று வாதம் பண்ணும் சேச்சிமாவிடம் நானாவின் விஞ்ஞான விளக்கம் எல்லாம் செல்லுபடியாகாது. 'போடா போடா பொக்கப் பயலே' என்று புறமொதுக்கிவிடும். அந்த நாய்பாவாவின் ஹந்தூரி ரொம்ப விசேஷம். ஊரே ஒற்றுமையாகத் திரண்டு , மத பேதம் பார்க்காமல் , வரும் பக்தர்கள் அனைவருக்கும் சோறு போடுவது பெரிய விஷயம். தண்டவாளத்தை ஒட்டிய திடலில் நடக்கும் விருந்து. தான் போகாமல் இருந்தாலும் யாரிடமாவது சொல்லி அந்த சீராணியின் ஒரு பருக்கையையாவது , 'அஹட சோத்துக்கு ஒரு தனி மணம்..' என்று வாயில் வைக்கும் வரை சேச்சிமாவுக்கும் தூக்கமே வராது. இதை அவர்கள் சொல்லும்போது 'சோ', 'சூ'வாக ஒலிப்பதில் மற்ற பெண்களுக்கும் தூக்கம் வராது!
நாய்பாவா என்றால் சேச்சிமாவுக்கு அவ்வளவு பிரியம். ஒருசமயம் பெரிதாகச் சிரித்துக் கொண்டே சேச்சிமாவை தன் மடியில் இறுக்கிக் கொண்டு கொஞ்ச நேரம் இருந்தார்களாம் பாவா. இது பாட்டிமார்கள் பிஸாதில் இடம்பெறும்போது 'பாவாட வப்பாட்டியா இக்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே..!' என்று சேச்சிமா சொல்லி எல்லோர் வாயையும் அடைத்து விடும். சேச்சிமாவின் மூத்த பையனான சேத்த காக்காவை பாவா அல்லவா நடக்க வைத்தார்களாம்..! 'ஒங்க ஊருலே ஒரு புலியை வச்சிக்கிட்டு இங்கே ஏண்டி வந்தே கச்சடா சிறுக்கி' என்று சேச்சிமாவை திட்டியபடி சேத்த காக்காவின் தொடையில் ஓங்கி ஒரு அடி - இப்போது வஹாபுக்கு லாத்தாவும் உம்மாவும் செய்கிற மாதிரி. இது தொந்தரவின் விளைவு. அதுவோ உயிர் மேல் உள்ள கருணை. நாய்களுக்குக் கருணை காட்டியவர்கள் மனிதர்களுக்கு காட்ட மாட்டார்களா?
'அடிச்ச அடிலெ புள்ளெ சுருண்டுட்டான்.. 'போ ஊருக்கு திரும்பி'ண்டாஹா. வந்த மூணே நாளுலெ நடக்க ஆரம்பிச்சிட்டான்..!' என்றார்கள் சேச்சிமா வியப்புடன். சேத்த காக்கா நடப்பதற்குப் பெயர் நடையா ? கோணல் மாணலாகப் புதையும் கால்களின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ்வைக் கேலி செய்வது போல இருக்கிறது. வேகமாக வீசிப்போகும் கைகளோ - காற்றோடு கூடிக்கொண்டேயிருந்து - குத்தும் ஊரின் கேலி அணுக்களை விலக்கி விலக்கிக் கொண்டு.... ஆனாலும் உயிர் நடப்பதென்பது அழகு.
வஹாப் நடக்க முடியாது. கனவில் வந்தாலும் தொட்டியில்தான் சுருண்டிருப்பான். வேகமாக ஓடிவந்த நாயின் இரைப்பும் காளையின் சீற்றமும் கலந்த ஒரு சப்தம் வெளியாகிக் கொண்டிருக்கும். வீட்டுக் குழந்தைகளை யார் அடித்தாலும் வெளிப்படும் மாறாத உறுமல்...
உம்மா , 'கொடுத்தவன் நேராக்குவான்..' என்று இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ' நீ மச்சானுக்கு அளவுக்கு மீறி கொடுத்ததனாலதான் கோணலாச்சு ' என்று மாமி சொல்லும் உம்மாவிடம். 'கொடுத்தது' என்று சொல்லும்போது குரலில் ஒரு குஷி. 'வாங்குன பொறவு வயித்துக்கு மாத்திரை போட்டா வர்றது வயிறெரியிற மாதிரிதான் வரும்' என்று 'வ'னாவிலேயே வாரவும் செய்யும். மாமியும் நானா வைத்திருக்கும் புத்தகங்களை படிப்பார்களோ என்னவோ... நானா படிக்கும் புத்தகங்கள் எல்லாம் அவரது பரு வெடித்த முகம் மாதிரிதான் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். அவரது நண்பர்களோ..எல்லாம் லூசுகள்! தன் அத்தை பெண்ணிடம் 'பூந்து பொறப்பட' ஆசைப்பட்ட சிவகுரு என்ற லூசு , 'சுகாதாரம் மட்டுமல்ல. நல்ல்லா செய்யலாம்' என்ற நானாவின் பேச்சைக் கேட்டு சின்னத்து செய்து கொண்டு தன் வீட்டுக்குள் பூற முடியாமல் எங்கள் வீட்டிலேயே கொஞ்சநாள் கிடந்தது.
அந்த லூசுகள் படிக்கும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் பெயரெல்லாம் 'ஸ்கி', 'ஸ்கி' என்று முடியும். அல்லது அப்படிப்பட்ட பெயரைப் பார்த்துத்தான் படிக்கிறதோ என்னவோ.... 'தமில்லெ யாருமே இல்லையாண்ணே? என்று ஒரு லூசிடம் கேட்டதற்கு 'ஒனக்கு இது போதும்' என்று வண்ண நிலவன் என்பவரின் கதை ஒன்றை படிக்கக் கொடுத்து 'திருந்துடா!' என்று வேறு சொன்னது. என்ன திமிர் பாருங்கள் ! தலைப்பு, எஸ்தரோ புஸ்தரோ.. கதை சொன்ன விதம் புதுமையாகவும் எனக்குப் பிடித்தும் இருந்ததுதான். ஆனால் கதை என்றால் குடும்பப்பத்திரிக்கை 'அல்லி'யில் வருவது போல பிரச்சனையில்லாததாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டாமா ? 'அல்லி..அலஹான பொம்பளை. ஆனா பின்னாலெ செய்யத்தான்
லாயக்கு!' என்று நானா கிண்டல் செய்வதை விடுங்கள், அந்தக் கதை என்னை ரொம்பவும் பயமுறுத்தியது. பஞ்சம் பிழைக்க வெளியூர் போகும் குடும்பத்தின் பொம்பளை ஒருத்தி , சாகக் கிடக்கும் கிழவியை கழுத்தை நெறித்து கொன்று போடும் பயங்கரம்... அதைப் படித்து ரொம்ப நாள் உம்மாவும் வஹாபைச் சாக அடித்து விடுவார்கள் தொந்தரவு தாங்காமல் என்று மிகவும் பயந்தேன். மழை சீசனில் வஹாபைத் தொட்டிலோடு நடுவூட்டு அறையில் போடுவார்கள் . தொட்டியிலிருந்து தனியே பிரித்து தூக்கி எடுத்து வைப்பது சிரமம் என்றுதான் இப்படி. தவிர தரையின் சில்லிப்பு ஏறி அவனுக்கு வெட்டு வந்து விடும் என்றும். முற்றத்தில் படுக்கும் நான் , அறையிலிருந்து காலையில் உம்மா வெளி வரும்போதே வஹாபின் மவுத் செய்தியைச் சொல்லி விடுவார்களோ என்று அவர்களின் முகத்தையே 'உர்...'ரென்று பார்ப்பேன்.
இதுவரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அவ்வளவு பெரிய பஞ்சத்தில் எங்களை வாப்பாவும் நானாவும் வைக்காததுதான் காரணம். பஞ்சம் இல்லாவிட்டால் என்ன, 'மொட்டைப் பூலான்களைக் கருவறுப்போம்' என்று வெளிப்படையாகவே வெறுப்பைக் கரைத்து எழுதி , பழைய பஸ் ஸ்டாண்ட் சுவரில் - பக்கத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷனைக் கண்டு கொள்ளாமல் அல்லது அவர்களின் ஆசியோடு - துணிச்சலாக வைப்பவர்களால் அந்த நிலைமை வந்து விடுமாம் - மூட்டிவிடுகின்றன சில அரசியல் கட்சிகள். செம்படபுரத்திற்கும் பெருமாவீதிக்கும் இடையே , கிடுக்கிப் பிடியில் அல்லவா எங்கள் தெருக்கள் மாட்டி இருக்கின்றன! உண்மையில் , ஆட்டுவதா நீட்டுவதா என்று அடித்துக்கொண்டிருக்கும் இந்த கட்சிகளுக்கிடையில்தான் நாங்கள் மாட்டிக்கொண்டிருப்பது தெரியாமல் பயம்...உம்மாவோ லாத்தாவோ தப்பி ஓடினால் அந்தக் கதையில் வரும் சம்பவம்போல நடந்தும் விடலாம்தான்...
ஊனமுற்ற ஊர்பாட்டுக்கு ஊர். அதோடு ஓடிக்கொண்டே நம் ஊனங்களை நாமே சரிசெய்துகொள்ள வேண்டும். 'லகத் கkhலக்னல் இன்ஸான ·பி அஹ்ஸனி தக்ரீம்' என்கிறது இறைமறை. நம்பிக்கையின் அர்த்தம் : நிச்சயமாக அல்லாஹ் மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்துள்ளான். அத்தியின்மீதும் ஜெய்த்தூனின்(olive) மீதும் சத்தியமாக!
வஹாப் விஷயத்தில் உம்மா செய்வார்களோ இல்லையோ, இல்யாஸ் மாமா செய்து விடுவார் போலிருந்தது. மாமா அதிகம் படித்தவர் அல்ல. ஆனால் விஷய ஞானம் உண்டு. நிறைய பத்திரிக்கைகள் படிப்பார். euthanasia என்று ஒன்று இருக்கிறது என்று அவர்தான் அடிக்கடி சொல்வார். தவிர வஹாப் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டான் என்று அவன் பிறக்கும்போதே டாக்டர் அவரிடம் சொன்னாராம். அதிக பட்சம் 16 வருஷம் என்றாராம் . இப்போது வஹாபுக்கு பதினேழு நடக்கிறது. நாள் குறித்த டாக்டர் உயிரோடு இல்லை!
எல்லோருக்கும் நல்ல பெயரைக் கொடுக்க , நக்கரித்துக்கூடப் போகத் தெரியாத வஹாப் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் போலும். ஆனால் அவனுக்குத் தன்னையே தெரியாதே... சின்னம்மா மகன் மஹதி அப்படித்தான் ஹொத்துவா பள்ளி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான். என்னை விட ஒரு வயதுதான் சிறியவன். பார்க்க சேட் வீட்டு பிள்ளை மாதிரி இருப்பான். வெடிப்பாகப் பேசுவான். நாலு வருடங்களுக்கு முன் மூளைக் காய்ச்சலில் மாட்டி காது சுத்தமாகக் கேட்காமல் போய் விட்டது. சென்னையில் வைத்து நிறைய செலவு செய்தும் பலனில்லாமல் போனதில் வெறுத்து விட்டது அவனுக்கு. வெறுக்க வைத்து விட்டார்கள் என்பேன். தான் சொல்வது மற்றவர்களுக்கு சரியாகக் கேட்காது என்று அவனாகவே ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொண்டு ரொம்பவும் சத்தமாக இழுத்து இழுத்து பேசுவதைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்களே...! சிரிப்பவர்கள், தாங்கள் சொல்வது மஹதிக்கு கேட்காது என்பதற்காக கையை அதிகமாக அசைத்தும் முகத்தின் தசைகளையெல்லாம் ஒரே சமயத்தில் இயக்கியும் பதிலுக்கு விளக்குவதில் அவனுக்கு வேறு ஏதோ ஒன்று விளங்கி விட்டது...முதல் முறை , வீட்டுக் கிணற்றில் விழுந்து தப்பித்துக் கொண்டான். இரண்டாம் முறைதான் பள்ளிக் கிணறு. துல்லியம். தொழுகை நடக்கும்போது 'யா அல்லாஹ்..' என்று வெளியில் ஒரு குரல் கிளம்பி அடுத்து 'தொளக்...' என்ற நீரின் பெரும் சப்தமும் வெளியில் கேட்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் மின்விசிறி நின்று போனால் மட்டும் புழுங்கி விடும்!
'அல்லா ஜல்ல ஜலாலஹ¥த்தஆலா தந்த உசிரை மனுசன் அவனா போக்கிக்குறதுக்கு உரிமை கிடையாது. தற்கொலை செய்றவங்க எப்படி அதை செஞ்சாங்களோ அதே மாதிரிதான் நரகத்துலெ இருப்பாங்கண்டு நாயஹம் சொல்லியிருக்குகின்றா¡ர்கள் ' என்று கொஞ்ச நாள் , கேட்டவர்களின் உயிரையெல்லாம் இறுக்கினார்கள் பbயானில். நரகத்தில் பள்ளிக் கிணறும் இருக்குமா ? என்னதான் அங்கே இல்லை ? அங்கே இல்லாதது பbயான் மட்டும்தான்.
நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்- குர்ஆனில் வரும் வசனம்...
'ஹாலந்து கோர்ட்லெ வேதனை தாங்காத நோயாளிக்கு சாக அனுமதி கொடுத்திருக்காங்க !' என்று இல்யாஸ் மாமா வேதம் ஓதினார் வாயாலெ சாபுவிடம். எதாவது நாம் வினோதமாகச் சொன்னால் ,'உங்க வாயாலெ சொல்லாதீங்க..' என்று ஒரு விதமான ராகத்தில் சொல்வதால் சாபுவுக்கு அந்த பெயர்.
'ஏடா கூடமா எதையாவது சொல்லாதீங்க... சாக கெடக்கும்போது ஹராமான பொருளைக் கூட சாப்புட நம்ம மார்க்கம் அனுமதிக்குது - உசிரு பொழைக்கிறதுக்கு. ஆனா சாவுறதுக்காக எதைச் செய்யவும் நமக்கு அனுமதி கொடுக்கலே ரப்புல் ஆலமீன்' என்று பதில் சொன்னார் சாபு.
'சாவு ! உங்களுக்கு என்னா தெரியும் ? எந்த கேள்வியும் கேக்காம அல்லாட பாதையிலெ போர் செய்யுங்கண்டு எங்களை சாவ சொல்லிட்டு நீங்க போவ மாட்டீங்க! ' - மாமா ஆழம் பார்த்தார்.
'அடடே..தப்பா புரிஞ்சிக்கிட்டிங்களே..!. அந்த சின்ன ஜிஹாத் - ஜிஹாதுல் அஸ்கர்- முடிஞ்சி போச்சி. ஜிஹாதுல் அக்பர் - மனசோட போராட்டம் நடத்தி ஜெயிக்கிற பெருசு- தான் இப்ப வேணும்டு சொல்றோம். அப்படி ஜெயிச்சவங்கதான் சிராத்துல் முஸ்தகீன் பாலத்தைக் கடக்க முடியும்'
'நான் ஏன் அந்த பாலத்தை கடக்குறேன் ? அடுத்த பக்கம் போவாம கீழே குதிச்சிடுவேன் !'
'மார்க்கத்துலெ விளையாடக் கூடாது' - வாயாலெ சாபு காதைப் பொத்திக் கொண்டு முடிவாகச் சொன்னார். வாயாலெதான் !
மற்றவர்கள் அவர் முன் அப்படிப் பேச முடியாது. என் வீட்டுக்கு நெருக்கமான சாபு என்பதால் மாமாவுக்குத் துளிர் விடுகிறது. வீட்டில் ஏதாவது ·பாத்திஹாக்கள் நடத்தும் போது வாயாலெ சாபுதான் வருவார். ஊருக்கு ஒரு 'அதாரிட்டி' மாதிரி இருக்கிற சாபு எங்கள் வீட்டுக்கு வருவதில் எங்களுக்கு பெருமைதான்.
வாயாலெ சாபு மேல் எனக்கும் பிரியம் உண்டு. வீட்டுக்கு வந்தால் எப்போதும் வஹாப் அருகில் போய் தொட்டிக் கட்டையில் உரசு உரசி நிரந்தரமாகப் புண்ணாகிப் போயிருக்கிற அவன் நாடியை அன்போடு தடவிக் கொடுப்பவர் அவர். 'அல்லாஹ் ஏன் இப்படி சிலருக்கு வேதனை கொடுக்குறாண்டு தெரியலேயே..' என்று அலுத்துக் கொள்வார். எப்பேர்ப்பட்ட மேதைக்கும் கிடைக்காத பதில் சாபுக்கு மட்டும் கிடைக்கும் முனகலாக : 'ம்... எதுக்கோ கொடுக்குறான்!'
நேற்று வந்த சாபு மறுபடியும் அலுத்துக் கொண்டபோது , 'துஆ செய்யுங்க சாபு..' என்று உம்மா சொன்னார்கள் . தழுதழுத்த குரல்.
'உங்க வாயாலெ அதை சொல்லாதீங்க. மாப்புளெ இந்த தடவை வரும்போது எல்லாம் சரியாப் போயிக்கிம் , இன்ஷா அல்லாஹ். தொட்டியை விட்டு வஹாபுதம்பி இறங்கிடுவாரு பாருங்களேன்..'
'இவனோட தொசங்கட்டி மாளலே..அல்லா கருணை காமிக்கட்டும்..'
'எளியவன் மேலே நீங்களும் காட்டணும். ரெண்டு முழுத் துப்பட்டி சொல்லியிருந்தேன். இதுவரைக்கிம் அனுப்பலே ஒங்க மாப்புளே..'
'எலுதுறேன் சாபு..மறந்திருப்பாஹா வஹாபுட கவலையிலெ...'
'ஆங்.. வஹாபுண்ட ஒடனே ஞாபகம் வருது. சின்னத்து செஞ்சிடுங்க அவனுக்கு'
'ஆவு! ஒங்க வாயாலெ சொல்லாதீங்க சாபு..' - உம்மாவுக்கு கண் கலங்கியது.
நானா இருந்தால் எதாவது சாபுவிடம் கேட்பார். மகனுக்கு சின்னத்து பண்ணும்போது அவன் அழுத அழுகையைப் பார்த்து , 'வுட்டுடுங்க..அவன்ற வாப்பாட மாதிரியே இந்துட்டு போவட்டும்' என்று ஒரு உம்மா சொல்வதாக ஒரு 'தமாஷ்' சிறுகதை எழுதியவர். 'சொர்க்கத்தின் சாவி தொழுகை என்றால் பூட்டு எது?' என்று வித்யாசமாகக் கேட்டவராயிற்றே! ஆனால் அவர்தான் 'அல்லா இக்கிறானா?' என்ற என் கேள்விக்கு 'இக்கிறானா இல்லையாண்ட கேள்வியே இக்கிறதுனாலேதானே வருது! 'உலகில் இல்லதற்கு இல்லை பெயர்'ண்டு தொல்காப்பியம் சொல்லுதுப்பா' என்று , தோல்காப்பியம் மட்டும் தெரிந்திருந்த எனக்குத் தெளிவு தந்தவர். அவருடைய அந்தக் கதையால் நானும் சில விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறேன்.
சின்னத்து, ஆரம்பத்தில் யூதர்களின் பழக்கம்; இன்றும் அது அவர்களுக்கு ·பர்ளும் கூட; ரசூலுல்லாவுக்கு , பிறக்கும்போதே அப்படி பண்ணப்பட்டு இருந்தது; சின்னத்து செய்வதால் ஆண்குறியின் முன்புறமுள்ள 'மாவு' (அழுக்கு ) நீக்கப்பட்டு தொழ ஏதுவாக உடல் சுத்தமாகிறது etc... சில ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் பெண்களுக்கு செய்யப்படும் வக்கிரமான FGM பற்றியும் அறிந்து அதிர்ந்தேன். 'ஒரசுனா ரொம்பக் கேக்கும்டு 'நோனி'லெ பண்ணுனாஹா. உம்அதியா சொல்ற ஹதீஸ் கூட அபுதாவுதுலெ இக்கிது. ஆனால் அது லாயி·ப் ' என்று ஒரு பாத்திரம் சொல்லும் வரிகூட ஞாபகம் இருக்கிறது. விஷயம் எனக்கு முழுக்கப் புரியாவிட்டாலும், தைப்பது போன்ற சித்திரவதைகளையும் சொல்லிச் செல்லும் கதை.
ஆனால் இப்போதைய பிரச்சனையில் நான் என்ன சொல்வது?
மனிதர்களுக்கு , அவர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள் என்ற ஒரு அடையாளம் மட்டும் போதாதா - 'கடைசி அடையாளம்' வரை என்று எனக்குள் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கும் சிந்தனை வருமாக்கும்! ஒரே ஒரு சந்தேகம், அத்தனை அற்புதமான ஒழுங்கோடு உடலைப்படைத்த நாயன் 'அங்கே' மட்டுமா மறந்து போயிருக்க முடியுமா என்பதுதான். மறந்தானென்றால் அது இறையின் ஊனமல்லவா? ஹ¥ம், என்னை யார் கேட்கிறார்கள்?
எப்போதும் கையில் sharpner வைத்திருப்பவர் மாதிரி மாமா மட்டும் தீர்க்கமாய் சொன்னார் : 'அந்த காலத்துலெ இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் எம்ப்ளது வயசுலெ தனக்குத்தானே சின்னத்து பண்ணிக்கிட்டாஹலாம், தெரியுமா ? பாக்க அலஹ¥ மட்டுமில்லேங்கனி.. சீவுன பென்சில்தான் எழுதும் !'
பேனாவினால் எழுத வேண்டியதுதானே..? ஓ, அப்போதும் மூடியைத் திறக்க வேண்டியிருக்குமோ...?! கடைத்தெருக் கூட்டாளி ஒருவனிடம் சந்தேகம் கேட்டேன். 'டேய்..ஒனக்கு பண்ணியாச்சா இல்லையாண்டே சந்தேஹமா இக்கிது..கடற்கரைக்கி வா!' என்றான் அந்த முட மசுரு முளைத்தவன். 'குஞ்சமா இருந்து தலைப்பாக்கட்டா மாறிய'தைப் பார்க்க அத்தனை ஆர்வம்! நான் போகவில்லை. 'அவுத்துப் பார்த்தா இவனுங்க யாருண்டு தெரிஞ்சிடும்' என்று 'யாருக்கும் தெரியாத' வழி சொல்லும் முனிரத்னஹாசன் படம் , பாதுஷா திரையரங்கத்தில் ஓடக் கூடாது என்று உண்ணாவிரதம் நடத்திய வேறொரு கூட்டாளியிடமும் கேட்டேன். அவனோ கம்ப்யூட்டர் கொஞ்சம் படித்தவன். format செய்ததை unformat செய்ய முடிகிற மாதிரி ஒரு புது டெக்னாலஜியை நாசுவர்கள் கண்டு பிடித்து விட்டால் பிரச்சனை இருக்காது நமக்கு என்றான்.
பஜாரில் இப்போதெல்லாம் படித்தவர்களாகப் போய் விட்டார்கள். எனக்கு அவன் சொன்னது சரியாக விளங்கவில்லை. இப்போது சாபு சொல்வது மட்டும் விளங்குகிறது.
' இப்ப, பொறந்து ஒரு வாரத்துக்குள்ளெ எல்லா ஆம்புளைப் புள்ளைக்கிம் அரபு நாட்டுலெ பண்ணிடுறாஹா.. மவுத்து- ஹயாத் எல்லாத்துக்கும் இக்கிது. இவனும் இப்பவோ அப்பவோண்டு கிடக்குறான்லெ?...' என்றார்
'மொஹத்துலெ பிளேடு பட்டாவே அவனுக்கு கொப்பளம் கொப்பளமா வருதுண்டுதான் தாடி மீசையெல்லாம் வளந்து மிஸ்கீன் மாதிரி இக்கிறான் . இப்ப 'மானி'லேயா ? வெட்டு வந்து பொரக்கணையில்லாம போயிடுவான் சாபு ..டாக்டர் வாணாண்டுக்கிறாரு. வாணாம்.' என்றது லாத்தா தீர்மானமாக.
'எந்த டாக்குடர்ர்ரூ..? ஒண்ணுக்குப் போயிட்டு கழுவாதவனாயிக்கிம்..!'
'கழுவுறவனுவ மட்டும் காசு வாங்காமத்தான் வைத்தியம் பண்ணுறானோ?' - லாத்தா அவரது திமிரை அடித்தாள்.
'முஸ்லீம் பேரை வச்சிட்டு முஸ்லீம் புள்ளையாவே போய் சேருறதுதான் நல்லது..பண்ணிடுங்க உடனே... இது வாஜிபு.! ' என்று தீர்மானமாக உம்மாவிடம் சொல்லி விட்டு ஏதோ அனுமதி வாங்குவது போல 'என்னங்கனி...மஜ்குத்தா பண்ணி காக்காக்கு கொஞ்சம் பிச்சிக் கொடுப்போமா ?' என்று வஹாபிடம் வேறு கேட்டார் வாயாலெசாபு. வாஜிபுதானா? இருக்கலாம்; இல்லை. தீர்மானமாக யாருக்குத் தெரியும்? இல்யாஸ்மாமா பாங்காக் போயிருக்கும் இந்த சமயத்தில் மார்க்கம் தெரிந்தவர் வாயாலெசாபுதான். ஆயிரத்தெட்டு ஹதீஸ் தொகுப்புகளையும் அவரால்தான் புரட்ட முடியும். லாத்தா துடைக்கத் துடைக்க வஹாபின் வாயிலிருந்து தொடர்ந்து வழியும் வாணியைக்கூட கவனிக்கவில்லை சாபு. வஹாப் ஏதோ முனகியதைக் கேட்டு , ' இப்ப பண்ணலேண்டா அப்புறம் நாசுவன் அரிவாளை எடுத்துட்டு வர்ற மாதிரி ஆயிடும்குறாறு வஹாபுதம்பி..' என்று அனைவருக்கும் விளக்கம் சொன்ன சாபு இன்னொன்றும் சொன்னார்.
சாதாரண சமயத்தில் அது சிரிக்கக் கூடியதுதான். அலங்கரிக்கப்பட்ட உரலில் , அசைய முடியாமல் தொடைகள் விரிக்கப்பட்டு , 'தயாராக' உட்கார்ந்திருந்த ஒரு வளர்ந்த பையனின் குறியைப் பார்த்து (குலவை சத்தத்தில் எனக்கெல்லாம் உள்ளே போய்விட்டது அன்று!) ஒரு நாசுவன்...வேண்டாம் , ரொம்பப் பச்சையாக இருக்கும். ஒவ்வொரு சின்னத்துகல்யாணத்தின் போதும் சொல்லப்படும் அந்த 'ஜோக்'கால்தான் எல்லா இளங்காய்களும் பழுக்கின்றன என்று மட்டும் சொல்லி நகர்ந்து விடுகிறேன். இது சிரிக்கும் சமயமல்ல.
சாபு சொன்னபோது , கொல்லை சமையல்கட்டுப் பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த உரல்தான் ஞாபகம் வந்தது. வஹாப் உட்காரப்போகும் சமயத்தில் ஜிகினா பேப்பரெல்லாம் ஒட்டப்பட்டு அலங்காரமாகிவிடும் அது, நெருங்கி வரும் மவுத்தின் அடையாளமாகப் பட்டது. இந்த மவுத்துதான் எத்தனை வடிவங்கள் எடுக்கிறது! உரலில் வைத்துத்தான் செய்வார்களா அல்லது தொட்டியில் வைத்தே கதையை முடித்து விடுவார்களா? வாப்பா , நானா இதற்கு அனுமதிப்பார்களா ? அல்லது 'பிரமிடு' தவிர்க்கும் பெரியாஸ்பத்திரிக்கு போகச்சொல்வார்களா? நேர்த்திக்குறைவை விடுவோம், அங்கே மவுத் வராதென்பதற்கும் என்ன உத்தரவாதம்? கத்தியால் முடியாவிட்டாலும் புத்தியாலாவது அதை வரவழைத்துவிட மாட்டாரா காதர்ஒலி டாக்டர்? எல்லாவற்றுக்கும் முடிவைத் தரத்தானே இந்த மவுத்தும் இருக்கிறது...
'மவுத் என்பதே உயிரை சின்னத்து செய்வதுதான்' என்பார் என் நானா கண்ணைச் சொருகிக் கொண்டே . சமயத்தில் தலைக்கு மேலே மிதக்கும் தன் இரு கண்களை எடுத்துப் பொருத்திக்கொண்டு. என்ன அர்த்தம் இதற்கு ? எனக்கு ரொம்பக் குழப்பமாக இருக்கும்.
வஹாபுக்கு ஒரு குழப்பமும் இல்லை. அற்ப விஷயத்துக்குப் போய் ஜனங்கள் இப்படி பயப்படுகிறார்களே என்று நினைத்திருப்பானோ என்னவோ...
பயங்காட்டும் பெரும் ஒலியை அவன் எழுப்பினான். அது சிரிப்பா , அழுகையா ? யாருக்கும் தெரியாது. அந்தச் சத்தத்தில் வெளியேறிய பீ மட்டும் அனைவரது கண்ணுக்கும் தெரிந்தது. ஒரு புட்டு மொத்தத்திற்குக் கறுத்த புழுவாக நெளிந்தபடி அது அவனது சிறுவார் வழியாக வெளியேறியது. உம்மா உட்பட எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டு கொல்லைக்கு நழுவினார்கள் மெல்ல. ' உம்மாடி.. தாங்கலையே.. எப்பவும் இல்லாத அளவுக்குலெ இக்கிது ' என்று தண்ணீர் எடுத்து வரப்போனாள் லாத்தா. வஹாபின் பக்கத்தில் நின்றிருந்த சாபு , 'அல்லாஹ்வே...பெரிய அல்லூறாவுலெ இக்கிது - ஆலத்தையே பொரட்டிப் போடுற மாதிரி..! ' என்று தொட்டியை வேகமாக தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடினார் பொறுக்க முடியாமல்.
நிலை குலைந்து ஆடும் தொட்டியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
(முற்றும்)
அருஞ்சொற்பொருள்
லாத்தா - அக்கா
மாக்குவலி போடுதல் - மல்லுக்கட்டுதல்
கனியாப்பிள்ளை - ('குமர்' என்று சொல்லப்படும்) கன்னிப்பெண்.
சிக்லா - சிறிய மண்கோப்பை
நானா - அண்ணன்
சபர் - ச·பர். பிரயாணம்
அவுலியா - இறைஞானி
வாலை - தர்ஹாவில் பக்தர்கள் தங்குமிடம்
·பாத்திஹா - இறந்தவர்களுக்காகவும், அவுலியாவை முன்வைத்தும் இறைவனை இறைஞ்சுதல்
சீராணி - பிரார்த்தனைக்குப் பின் பகிர்ந்தளிக்கப்படும் இனிப்பு
பிஸாது - அவதூறு
பbயான் - மார்க்கப் பிரசங்கம்
தொசங்கட்டியடித்தல் - தொடர்ந்து துன்பம் தருதல்
·பர்ளு - அவசியமான கடமை
மவுத்து ஹயாத் - இறப்பும் வாழ்க்கையும்
சிராத்துல் முஸ்தகீன் - (இஸ்லாமிய நம்பிக்கையின்படி) நேரான வழி மற்றும் மறுமை நாளில் சொர்க்கத்து இட்டுச் செல்லும் ஒரு பாலம். வாளைவிடக் கூர்மையாகவும் ரோமத்தை விட மெலிதாகவும் இருக்கும் இதில் நடக்கும் நம்பிக்கையற்றோர் தவறி நரகத்தில் விழுவர்
சின்னத்து - ஆண்குறியின் முன்தோலை அகற்றும் ('கத்னா' என்கிற) மார்க்கச் சடங்கு. நபி (ஸல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் பின்பற்றும் 'சுன்னத்' என்பதன் மரூஉ
நோனி- யோனி
லாயி·ப் - பலவீனமான
மானி - ஆண்குறி
பொரக்கணை - பிரக்ஞை
வாஜிபு - கடமை
மஜ்குத் - மஜ்பூத். சிறப்பாக
அல்லூறு - கொடும் சாக்கடை நாற்றம்
ஆலம் - பிரபஞ்சம்
E-Mail : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி: பதிவுகள் ஏப்ரல் 2005 இதழ் 64