அண்மையில் பிராம்டன் மேயர் பற்றிக் பிரவுண் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்தபோது இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை பற்றி சில வார்த்தைகளை உதிர்த்தார். யாராவது அதனை மறுத்தால் இலங்கைக்குச் செல்லலாம் என்னும் கருத்துப்பட அவ்வார்த்தைகளை உதிர்த்திருந்தார். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவு என்ப்து மிகப்பெரிய சோகம் துயரம். மானுட அழிவு. தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஓர் இனப்படுகொலையாகவே கருதுகின்றார்கள். பற்றிக் பிறவுண் போன்ற் அரசியல்வாதிகள் தம் அரசியல் நலன்களுக்காக அதனைப் பாவிக்கின்றார்கள். ஆனால் ஏன் சர்வதேச அரங்கில் இதனை ஓர் இனப்படுகொலையாக இதுவரையில் ஏற்கச்செய்ய முடியவில்லை என்றொரு கேள்வி எழுகிறது. ஏன்? ஏன் ஐக்கிய நாடுகள் சபையில் முள்ளிவாய்க்கால் அழிவை ஓர் இனப்படுகொலையாக அங்கீகரிக்கச் செய்ய முடியாமல் இருக்கிறது?
இதற்கு முதலில் ஐக்கியநாடுகள் சபையின் இனப்படுகொலை பற்றிய 1948 சரத்து என்ன் கூறுகின்றது என்பதைப் பார்க்க வேண்டும்? அது கூறுகிறது - தேசிய, இன, மத. மொழி ரீதியாக மக்களை, அவர்களை முழுமையாக அல்லது பகுதியாக அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டு கொன்றால், உள, உடல் மீது வன்முறையினைச் செலுத்தினால், அழிக்கும் வகையில் வேண்டுமென்றே சூழலை உருவாக்கினால். குழந்தைகள் பிறப்பதைத் தடுத்தால், குழ்ந்தைகளைப் பலவந்தமாகக் கடத்தினால் அது இனப்படுகொலை. இவ்விதம் அச்சரத்து இனப்படுகொலைக்கான வரைவிலக்கணத்தைக் கூறுகின்றது.
இனப்படுகொலை என்பதை நிரூபிப்பதற்கு எதிரான மிகப்பெரிய சவால
இலங்கை அரசாங்கம் 'நடைபெற்றது இனப்படுகொலையல்ல. அது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்ட ஒரு புரட்சி அமைப்பை ஒடுக்குவதற்காக, அடக்குவதற்காக நடைபெற்ற போர். போரில் அழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. நாங்கள் தமிழர்களுக்கு எதிராக மட்டும் இவ்விதம் போரை மேற்கொள்ளவில்லை. தெற்கில் சிங்கள்ப் பயங்கரவாதிகள் ஆயுதங்களைக் கைகளில் ஏந்தியபோதும் அவர்களையும் இவ்விதமே அடக்கினோம். ஆனால் போர்களில் இவ்விதம் அழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. எமது போர் பயங்கரவாதத்திற்கெதிரான சட்டரீதியான ஒரு யுத்தம். தமிழ் மக்களுக்கெதிராக நாம் இனப்படுகொலை செய்யவில்லை. தமிழ்ப்பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் யுத்தம் புரிந்தோம்.
யுத்தக் காலகட்டத்தில் பெரும்பாலான த்மிழர்கள் பாதுகாப்பாக இருந்தது தென்னிலங்கையில்தான். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்தான். போர்க்காலம் முழுவதும் யாழ்ப்பாணம் உட்பட கிழக்கில் எல்லாம் தமிழர்கள் ஆண்டுதோறும் ஆலயத்திருவிழாக்களைக் கொண்டாடினார்கள். பாடசாலைகளில் விழாக்கள் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அரசு ஊழியர்களுக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் ப்குதிகளில் இருந்தவர்கள் உட்பட ஊதியம் வழங்க்கொண்டுதானிருந்தோம். புகலிடத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஊர் வந்து சென்று கொண்டுதானிருந்தார்கள். தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுகொண்டுதானிருந்தார்கள். தமிழர்கள் நாடெங்கும் காணிகளை வாங்குகின்றார்கள். வர்த்தகம் செய்கின்றார்கள். தமிழ் அமைப்புகள் பல எம்முடன் இணைந்து இயங்கிக்கொண்டுதானிருந்தன. இங்கு நடந்தது இனப்படுகொலையல்ல. பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டரீதியான போர். போர்க்குற்றங்கள் சில நடைபெற்றிருக்கின்றன. போர்க்குற்றங்கள் எம் மத்தியில் மட்டுமல்ல போராட்டக் குழுக்கள் மத்தியிலும் நடைபெற்றுள்ளன, இவை பற்றி முறையாக ஆதார்ங்களைத் திரட்டி நாமே விசாரிப்போம்.' இவ்விதம் தன் எதிர்வாதத்தை முன் வைக்கும்.
பெரும்பாலான உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கெதிரான போரை ஆதரிக்கின்றன. அதனால் இலங்கை அரசின் இவ்வாதத்தை எதிர்த்து, சட்டரீதியாக நடைபெற்றது, நடைபெறுவது இனப்படுகொலை என நிரூபிப்பதில் மிகுந்த சட்டரீதியான சவால்களும், சிக்கல்களும் உள்ளன.
இவை தவிர ஏனைய முக்கிய சவால்களாக இருப்பவை எவை?
1. ஆதாரங்களைச் சேகரிப்பதிலுள்ள தடைகள். நீதியான சர்வதேச விசாரணை முக்கியம். ஆனால் அதை இலங்கை அனுமதிக்கவில்லை. போர்க்குற்றம் புரிந்த படையினர் பற்றிய ஆதாரங்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள், மனிதப்புதைகுழிகள், சாட்சிகள் - இவற்றைச் சேகரிப்பதில் பெரும் சவால்கள் உள்ளன. மேலும் இவை போர்க்குற்றஙகள். அடிப்படை இனப்படுகொலை என்பதை நிரூபிக்க வேண்டும்.
2. உலகின் பலம் பொருந்திய நாடுகள் தம் தேசிய நலன்களுககாக இலங்கை அரசை ஐ.நா.சபை போன்ற அமைப்புகளில் தீர்மானங்கள் எடுக்கப்படுமிடத்துப் பாதுகாக்கின்றன. கொண்டு வரப்படும் தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதில் விரைவான செயற்பாடுகள் இல்லை.
3. இலங்கை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற்றத்தின் உறுப்பினர் இல்லை. இந்நிலையில் ஐ.நா.சபை மூலமே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவ்விதம் எடுப்பதற்கும் மேலே குறிப்பிட்டவாறு சவால்கள் உள்ளன.
மேலும் இனப்படுகொலை என்று நிரூபிக்கப்பட்ட படுகொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. யூதர்கள் மீதான அழிப்பு, ருவாண்டா, பொஸ்னியா போன்ற படுகொலைகளே இதுவரையில் இனப்படுகொலைகளாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஆதாரங்கள், சாட்சிகள், தடையற்ற நீதி விசாரணைகள் மூலமே நிரூபிக்கப்பட்டன.
இலங்கை அரசாங்கம் புரிந்த யுத்தக் குற்றங்களைச் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்குரிய நீதி கிடைக்க வேண்டுமென்பதையும் அது ஏற்றுக்கொண்டுள்ளது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்குப் பொறுப்புக் கூறல் அவசியம் என்பதையும் அது ஏற்றுக்கொண்டுள்ளது. யுத்தக்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அது தற்போதுள்ள் சூழலில் மிகவும் அவசியம்.
இதுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. 2009, 2012, 2013, 2014, 2015, 2017 , 2019, 2021, 2022 , 2023 ஆகிய ஆண்டுகளில் அவை நிறைவேற்றப்பட்டன. ஆயினும் இன்னும் ஆமை வேகத்திலேயே முன்னேற்றம் ஊர்ந்துகொண்டிருக்கின்றது.