இலங்கைத் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கை ஏற்படும் வரையில் தமிழர்கள் மத்தியில் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ், ஏனைய தேசியக் கட்சிகள் எனப் பல கட்சிகள் தேர்தல்களைச் சந்தித்து வந்தன. தனிநாட்டுக் கோரிக்கையடுத்து தமிழ்கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒன்றுபட்டுத் தேர்தல்களைச் சந்தித்து வந்தன. தற்போது மீண்டும் தனித்தனிக் கட்சிகளாகத் தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. இது தவிர்க்க முடியாத நிகழ்வு. நாட்டில் மீண்டுமொரு தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியதாக மாறினால் ஒழிய இந்நிலை மாறப்போவதில்லை.
அதே சமயம் தமிழ்க் கட்சிகள் பலவும் தம் தனித்துவத்தை இழக்காமல், தம் வாக்கு வங்கிகளுக்கேற்பத் தொகுதிகளைப் பிரித்து கூட்டணி வைத்துக்கொண்டால் (தமிழகத்தில் கட்சிகள் செய்வதைப்போல்) நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பெரு வெற்றி அடையும் சாத்தியமுண்டு.
இவ்விதம் பல கட்சிகள் இருப்பதை நான் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. ஜனநாயகச் சூழலில் இதனை ஆரோக்கியமாகவே பார்க்கின்றேன். எல்லாக் கட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் தம் செயற்பாடுகளை, நோக்கங்களைக் கூறுவதற்குப் பூரண உரிமையும், வசதிகளும் உள்ளன. இவற்றைப்பயன்படுத்தி மக்களைத் தம் பக்கம் திரும்ப வைப்பதில்தான் அவற்றின் திறமை தங்கியுள்ளது.
வடக்கி, கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ்பெண்கள் பலரும் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வென்ற தமிழ் வேட்பாளர்கள் மட்டுமல்ல சிங்கள வேட்பாளர்கள் பலரும் புதியவர்கள், இளையவர்கள்.
இனிவரும் தேர்தல்கள் கட்சியின் செயற்பாடுகளே எதிர்கால வெற்றியினைத் தீர்மானிக்கும். அநுர குமார திசாநாயக்க சிறுபான்மையினத்தவரின் பிரச்சினைகள் பலவற்றைத் திறமையாகத் தீர்த்து வைத்தால் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கு மிகுந்த சவாலைக்கொடுக்கும் கட்சியாகப் பரிணாமம் அடையும், தற்போது கூட அதன் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் அநுர அலையும், தமிழ்க் கட்சிகளின் பிளவுகளுமே. தமிழ்க் கட்சிகள் தொகுதிகளைப் பங்கிட்டுக் கூட்டணி வைத்திருந்தால் அதிக இடங்களை அக்கூட்டணியே பெற்றிருக்கும்.
அதே சமயம் தேசிய மக்கள் சக்தி தன் தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து தவறினால், சிறுபான்மையினத்தவரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது போனால், தமிழ்ப்பகுதிகளில் அதன் செல்வாக்கு சரியும்.
தமிழ்க் கட்சிகள் தற்போது சிந்திக்க வேண்டுவது கட்சிகளின் தனித்துவத்தை இழந்த கூட்டமைப்பை அல்ல. மாறாக அவற்றின் வாக்கு வங்கிக்கேற்பத் தொகுதிகளைப் பங்கிடும் கூட்டணியைப் பற்றியே. நடந்து முடிந்த தேர்தல்களில் இருந்து கட்சிகளின் தனித்தனிச் செல்வாக்கு தெரியும். இதற்கேற்பத் தொகுதிகளைக் கட்சிகள் தமக்கிடையில் பங்கிடலாம். இதன் மூலம் தேர்தல்களைக் கூட்டாகச் சந்திக்கலாம். சந்திக்கையில் அதிக வாக்குகளைப் பெறலாம்.