[முனைவர் மு.வரதராசன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களிவை.] மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட 'டாக்டர்' மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
வாழ்க்கைச் சுருக்கம்
மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் வேலம் என்னும் சிறிய கிராமத்தில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.
மு.வ. வின் இளமை வாழ்வும் தொடக்கக் கல்வியும் வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.
எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார்.
தமிழின் மீதிருந்த பற்றால் 1931 இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காக திருப்பனந்தாள் மடம் ரூ.1000 பரிசளித்தது.
1935 ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.
பேராசிரியராகப் பணி
1939 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். 1944 இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.
1948 இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.
1939 இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945 இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
பின்னர் 1971 இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.
மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார். 1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே.
சாகித்ய அகாதெமி,பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, ஆந்திரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்ததோடு அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.வ. அவர்கள்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
எழுத்துப் பணி
நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், , கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை என 85 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். பெர்னாட்ஷா, திரு.வி.க., காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார்.
இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது.
1944ம் ஆண்டு மு.வ. எழுதிய "செந்தாமரை" நாவலை வெளியிட யாரும் முன்வராததால், அந்நாவலை அவரே வெளியிட்டார்.
மு.வ.எழுதிய நூல்களில் கி.பி. 2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விருதுகள்
மு.வ.வின் அகல்விளக்கு எனும் நாவலுக்கு 'சாகித்திய அகாதெமி' விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன. பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மு.வ.வைப் பற்றி ஆர்.மோகன் முதன் முதலில் "மு.வ.வின் நாவல்கள்" என்ற நூலை 1972ல் எழுதியுள்ளார். மேலும் இரா.மோகன் மு.வ.வைப் பற்றி 5 நூல்கள் எழுதியுள்ளார்.
மு. வரதராசன் நூல்பட்டியல்
மொழியியல்
1.மொழி நூல்
2.மொழியின் கதை
3.எழுத்தின் கதை
4.சொல்லின் கதை
5.மொழி வரலாறு
6.மொழியியற் கட்டுரைகள்
கட்டுரைகள்
1.அறமும் அரசியலும்
2.அரசியல் அலைகள்
3.குருவிப் போர்
4.பெண்மை வாழ்க
5.குழந்தை
6.கல்வி
7.மொழிப் பற்று
8.நாட்டுப் பற்று
9.உலகப் பேரேடு
10.மண்ணின் மதிப்பு
11.நல்வாழ்வு
புதினங்கள்
1.கள்ளோ காவியமோ
2.நெஞ்சில் ஒரு முள்
3.அகல் விளக்கு
4.கரித்துண்டு
5.பெற்ற மனம்
6.செந்தாமரை
7.பாவை
8.அந்த நாள்
9.மலர் விழி
10.அல்லி
11.கயமை
12.மண் குடிசை
13.வாடா மலர்
சிந்தனைக் கதை
1.கி.பி. 2000
2.பழியும் பாவமும்
சிறுகதைகள்
1.விடுதலையா
2.குறட்டை ஒலி
நாடகங்கள்
1.பச்சையப்பர்
2.மனச்சான்று
3.இளங்கோ
4.டாக்டர் அல்லி
5.மூன்று நாடகங்கள்
6.காதல் எங்கே
இலக்கியம்
1.தமிழ் இலக்கிய வரலாறு
2.தமிழ் நெஞ்சம்
3.மணல் வீடு
4.திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்
5.திருக்குறள் தெளிவுரை
6.ஓவச் செய்தி
7.கண்ணகி
8.மாதவி
9.முல்லைத் திணை
10.நெடுந்தொகை விருந்து
11.குறுந்தொகை விருந்து
12.நற்றிணை விருந்து
13.இலக்கிய ஆராய்ச்சி
14.நற்றிணைச் செல்வம்
15.குறுந்தொகைச் செல்வம்
16.நடைவண்டி
17.கொங்குதேர் வாழ்க்கை
18.புலவர் கண்ணீர்
19.இலக்கியத் திறன்
20.இலக்கிய மரபு
21.இளங்கோ அடிகள்
22.இலக்கியக் காட்சிகள்
23.குறள் காட்டும் காதலர்
24.சங்க இலக்கியத்தில் இயற்கை
சிறுவர் இலக்கியம்
1.குழந்தைப் பாட்டுகள்
2.இளைஞர்க்கேற்ற இனிய கதைகள்
3.படியாதவர் படும்பாடு
4.கண்ணுடைய வாழ்வு
கடித இலக்கியம்
1.அன்னைக்கு
2.தம்பிக்கு
3.தங்கைக்கு
4.நண்பர்க்கு
பயண இலக்கியம்
1.யான் கண்ட இலங்கை
இலக்கிய வரலாறு
1.தமிழ் இலக்கிய வரலாறு
வாழ்க்கை வரலாறு
1.அறிஞர் பெர்னாட்ஷா
2.காந்தியண்ணல்
3.கவிஞர் தாகூர்
4.திரு. வி.க.
ஆங்கில நூல்கள்
1.The Treatment of Nature in Sangam Literature
2.Ilango Adigal
பிற
1.சிறுவர் இலக்கண நூல்கள் (3)
2.மொழிபெயர்ப்பு நூல்கள் (2)