ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 16 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (29. 08.1926 – 08.12.1995) பாரீஸ் தமிழர் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் வளர்ச்சிப் பணியில் நாம் அதிக அக்கறை கொண்டிருந்த காலங்களில், எமது கல்வி நிறுவனத்தோடு அதிக அக்கறை கொண்டவராக அறிமுகமானவரே திரு.எஸ்.அகஸ்தியர் அவர்கள். ஆரம்பகால ஆண்டுவிழா, மலர் வெளியீட்டுகளிலும் ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து எமது வளர்ச்சிப் பாதையில் துணை நின்றார். மனித நேயத்தை நேசித்து அதற்காக வாழ்ந்து மறைந்துவிட்ட ஒரு இலக்கியவாதியின் காலத்தில் அவரது புலம்பெயர் வாழ்வில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம் என்பதை இங்கு பெருமையோடு நினைவுகூர்ந்து மதிப்பளிக்கு முகமாகவே அவரைப்பற்றிய நிகழ்வுகளைத் தருகின்றேன்.
ஈழத்து இலக்கிய ஆக்கத்தின் பாரம்பரியத்தையும் தோற்றத்தையும், வளர்ச்சியைப் பார்க்கும்போது அகஸ்தியரும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் பின்னிப் பிணைந்திருப்பதை அறிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது. வர்க்க பேதமற்ற ஒப்பில்லா சமுதாயத்தைப் படைக்க மனிதப் பெருங்குடி நடாத்தும் போராட்;டத்தையும், அதில் தோன்றும் புதிய சமுதாய அமைப்பைப் பிரதிபலிக்கும் சோஷலிஸ்ட்ட யதார்த்த வாதத் தத்துவத்தோடு 1946 ல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றிவிக்கப்பட்டபோது, தன் இளம் வயதின் கருத்தியல்களை அதில் பிரதிபலிக்கும் நோக்குடன் இணைந்து கொண்டு செயலாற்றினார்.
1956 ஆம் ஆண்டுக் காலங்களில் இச்சங்கத்தினால் கொண்டுவரப்பட்ட ஈழத்;திலக்கியம் ‘மண்வாசனை’ என்னும் கோஷங்கள் காரணமாகத் தேசிய இலக்கியம் என்னும் கோட்பாடு தோன்றலாயிற்று. இதன் காரணமாக தமிழிலக்கியப் பரப்பினது பொதுவான பண்புகளையும், பாரம்பரியங்களையும் கையேற்றுத் தமதாக்கிக் கொள்ளவும், நமது மக்களின் வாழ்வோடும், வாழ்க்கைப் பிரச்சனைகளோடும், நமது தேசத்தோடும், தேசப் பிரச்சனைகளோடும் ஒன்றுபட்ட ஈழத்தின் மரபுவழி வரும் எமது தேசிய இலக்கியத்தை உருவாக்க வேண்டும் என்ற எழுச்சி, ஈழத்து இலக்கியப் பரப்பிலே ஒரு வரலாற்றுத் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த இலக்கிய வரலாற்றுக் காலத்தின் அவசியத்தை உணர்ந்து மானிட நேயத்தை நேசிக்கும் எழுத்தாளராக புடம்போட்டுக் கிளர்ந்தெழுந்த ஒரு இலக்கிவாதிதான் திரு.அகஸ்தியர் ஆவார்.
இலக்கியம் மூலம் தாம் எண்ணித் துணிந்த தேசப்பணியொன்றினைச் செய்வதாகவே அவர் கருதிச் செயற்பட்டார். தனது இறுதி மூச்சு உள்ளவரை உயர்ந்த மனித வர்க்கத்துக்கான இலக்கியம் படைப்பதையே விரும்பினார். தேசிய ஒருமைப்பாடு தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தைப் பேண வேண்டும் என்ற நோக்கோடு மண்வாசனை கமழும் பல் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதினார். இதில் முக்கியமான சிறப்பு என்னவெனில் தனது இலக்கியப் படைப்புக்களில் ஈழத்தில் உள்ள பல கிராமங்களின் பேச்சு வழக்கினையும், யாழ்ப்பாண மக்களின் பேச்சு வழக்கினையும், மலையக முஸ்லீம் மக்களின் பேச்சு வழக்கினையும் சுவாரஸ்யத்துடன் எழுதுவதும், இந்தப் பேச்சுத் தமிழுக்குச் சரியான எழுத்துருவம் கொடுத்திருப்பதும் அவரது தனிக்கலை. அல்லது அவருக்குக் கிடைத்த ஒரு கொடை என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாது தனது ஆக்க இலக்கியங்களின் கருப்பொருளாக அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் மீட்சியை சமுதாயப் பார்வையுடனும், பரிசுத்த நேசிப்புடனும் நோக்கினார். அதற்காகவே வாழ்நாள் முழுதும் பேனைiயைத் தூக்கிய போராளியானார்.
அதைவிட “மக்களிடையே வேரூன்றியுள்ள வேண்டாத மூட நம்பிக்ககைகள், ஒருவனை ஒருவன் ஏமாற்றிப் பிழைக்கும் கயமைத்தனங்கள், சமுதாய அமைப்பில் தோன்றும் ‘தீடீர்’ பிரமுகர்களின் போலித்தனங்கள், மக்களின் எதிரிகளை மக்களுக்கு இனங்காட்டி அவர்களுக்கு விழப்புணர்வு ஊட்டுவது எனது படைப்புக்களின் உள்ளடக்கம்” என்று ‘அகஸ்தியர் பதிவுகள்’ என்னும் வெளியீட்டில் அவரே குறிப்பிட்டுள்ளார்.
1960 ஆம் ஆண்டுகாலங்களில் இலங்கையில் சாதித்தியம் பெருநெருப்பு கொழுந்துவிட்டு எரிந்த காலத்தில் எழுதப்பட்ட “எரிநெருப்பில் இடைபாதையில்லை” என்ற நாவல் ஈழத்தில் எழுந்த முதல் ‘தலித்திய’ நாவல் என்னும் சிறப்பினைப் பெற்றுள்ளது. அவரின் உயிர் பிரிந்த பின்பே இந்நாவல் இந்தச் சிறப்பினைப் பெற்றதால் நான் இந்த நூல் வெளியீட்டப்பற்றிச் சில தகவல்களைக் கூறித்தான் ஆகவேண்டும். சொந்த வாழ்வில் நிகழ்ந்த துன்பங்கள், பெயர்வுகள், இழப்புக்கள் விளைவாக அவர் எழுதியவைகள் பெரும்பாலானவற்றைத் தொலைத்துவிட்ட துர்ப்பாக்கியத்தை நினைத்து அவர் வருந்தாத நாளில்லை.
அப்படித் தொலைந்து திருப்பி எடுக்கப்பட்ட ஆக்கங்களில் ஒன்றுதான் இந்த நாவல் ஆகும். தனது முதிர்ந்த வயதிலும் இந்த நாவலின் பிரதியை பல முறை குழந்தையைப்போல் தடவிக்கொண்டதும் அதனை மீண்டும் கைப்பிரதியாக எழுதித் தரும்படி என்னிடம் கேட்டுக்கொண்டதும் இன்னும்என் நெஞ்சில் பசுமையாக இருப்பதை உணர்கின்றேன். அந்த நாவலின் முன்னுரையில் நன்றியோடு என்னை நினைவு கூர்ந்ததும் என் வழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு வரலாற்று நிகழ்வாகவே கருதுகின்றேன்.
இந்நாவல் பாரீஸ் நகரிலே 1992ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு இலக்கியம் படைக்கப்படும்பொழுது அது அந்தக் காலத்தின் கண்ணாடியாகத் திகழ்கின்றது. இந்த நாவலும் அக்காலத்தின் சமுதாயப் போக்கைத் தழுவியதாகவே வெளிவந்தது. இந்தக் காரணத்துக்காக இந்த நாவல் வெளியீட்டின்போது தாக்கமான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டார். எல்லா கடும் விமர்சனங்களையும் வழமையான புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டபோதும், தனது நாவல் ஏதாவது ஒரு சிறப்பினைப் பெறும் என்ற உள்ளத்திடமும், மனஉறுதியும் அவரின் முகத்தில் இருந்ததை நான் அறிந்துகொண்டேன். அந்த நாவல் வெளியீட்டு விழாவில் அவருடைய நாவலைப்பற்றியும் அவரைப் பற்றியும் கூறுவதற்கு நேரம் காணாமையால் எனக்கு ஐந்து நிமிடங்களே தரப்பட்டது.
சாதியத்தைப்பற்றியதால் அந்த நாவலில் விமர்சனங்கள் அனைத்தும் இலங்கையில் உள்ள இலக்கிய வாதிகளின் இலக்கியத்தரத்திற்கு ஈடானது அல்ல என்ற வாதங்களே அங்கு எழுப்பப்பட்டது. ‘ ஈழத்துப் பேராசிரியர்களான சிவத்தம்பி, கைலாசபதி, சண்முகதாஸ் ஆகியோரின் மாணவியாக கல்விபயின்ற எனக்கு அகஸ்தியரின் இலக்கியங்கள் எந்த வகையிலும் தரம் குறைந்தது அல்ல’ என்று எனக்குக் கிடைத்த சில நிமிடங்களில் எடுத்துரைத்தேன். அவரது பாரியார் நவமணி என்னைத் தழுவி அணைத்து ஆனந்தப்பட்டதும், திரு.அகஸ்தியர் அவர்கள் தனது மகள்போல் என் தலையைத் தடவி தன் அன்பை வெளிக்காட்டியதும் என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வுகள்.
இந்நேரத்தில் அவர் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆதன் பின் மூன்று வருடங்களாக நோயின் காரணமாக தளர்ந்து காணப்பட்டார். இக்காலத்தில்தான் அவர் நீண்டகாலமாக தேடிய “இருளினுள்ளே” என்ற குறுநாவல்கள் அவர் கைக்குக் கிடைத்தது. அதனை மறுபதிப்பு செய்யவேண்டும் என்ற ஆசையுடன் அந்நூலில் காணப்பட்ட தன்தாயின் புகைப்படத்திடம் இறுதி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு அந்நாவலை அணைத்தபடியே வைத்தியசாலைக்குச் சென்றவர் உயிருடன் திரும்பவில்லை.
தனது முதிர்ந்த வயதிலும் மரணப்படுக்கையிலும் சோர்வடையாமல் எழுதி எழுதி உரம்படைத்த கைகள் அவருடையது. இறுதிவரை தனது இலட்சிய வேட்கையை வயிரம் பாய்ந்த எழுத்துக்கள் மூலம் மக்கள் மனங்களில் பதித்து, மறையாவரம் பெற்ற அந்த இலக்கிய மனிதனின் மூச்சு இன்றும் மக்களின் மனங்களிலே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
'பதிவுகளு'க்கு அனுப்பியவர்: நவஜோதி யோகரட்னம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.