சாதனைப் பெண்கள் வரிசையில், முன்னிலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர் முனைவர் நா.நளினிதேவி ஆவார். இவர் மிகச் சிறந்த ஆய்வறிஞர். படைப்பிலக்கிய வித்தகர். பெண்ணியத்தையும் பெரியாரியத்தையும் தன்னிரு விழிகளாகப் போற்றி வருகிற பேரறிஞர். எழுபதைக் கடந்த நிலையிலும் இருபதிற்கே உரிய இளமை வேகத்தோடு இவர் இலக்கிய வெளியில் இடையறாது இயங்கி வருவது பாராட்டுக்குரியது.
‘தமிழே நீ ஓர் பூக்காடு நான் அதிலோர் தும்பி’ எனும் தமிழ்ப்பற்று மிக்க பாரதிதாசனைப் போன்று தமிழுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கி வருகிறார் முனைவர் நா.நளினிதேவி அவர்கள்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 1945ஆம் ஆண்டு சூன் திங்கள் 26ஆம் நாள் நாகரத்தினம்-சுப்புலெட்சுமி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். உடன் பிறந்தோர் இருவர். தங்கையும் தம்பியும். இவரது துணைவர் வiலாற்றுப் பேராசிரியர்.வே.மாணிக்கம் அவர்கள். வரலாறு தொடர்பான ஆய்வு நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியிருக்கிறார்
1962 முதல் 1968 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் புகுமுக வகுப்பு தொடங்கி முதுகலை வரை பயின்றுள்ளார். மதுரை பல்கலைக்கழகத்தின் முதல் முதுகலை பட்டதாரிகளுள் ஒருவரான இவருக்கு வாய்த்த பேராசிரியர்கள் அ.சிதம்பரநாத செட்டியார், அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மொ.துரையரங்கனார், விசயவேணுகோபால் முதலான தமிழ் ஆளுமைகளிடம் தமிழ் கற்றதால் இவருக்குள் இருந்த தமிழ்ப்பற்று ஆழமாக வேரூன்றிச் செழுமைப் பெற்றது.
கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு எழுச்சியில் கலந்து கொண்டு சிறை சென்றார். ஈழத்தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட இவர் 1980இல் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1969இல் அருள்மிகு மீனாட்சி அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியேற்ற இவர் சேலம், திருப்பூர், நாமக்கல், புதுக்கோட்டை எனப் பல அரசு கல்லூரிகளில் பணியாற்றி 2004இல் பணி நிறைவு பெற்றார்.
தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கெனத் தனி பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதை உணர்த்தும் முறையில் செயல்பட்டதால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டார்.
முத்தமிழ் விழாவை அனைத்துறையினரும் பங்கேற்கும் பொதுவிழாவாக நடத்தினார். கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் இவரது தமிழ்ப்பணியைப் போற்றினர். புதுக்கோட்டை தமிழ் இலக்கியப் பேரவை இவரைப் ‘புதுக்கோட்டையின் புகழ்மாமணி’ களுள் ஒருவர் எனச் சிறப்பித்து ‘தமிழ்த்தென்றல்’ எனும் விருதளித்து மரியாதை செய்தது.
ஊடக ஒளியை நாடாது இவர் படைத்துள்ள நூல்கள் இதுவரை பதின்மூன்று ஆகும். இவை அனைத்தும் முற்றிலும் புதிய பார்வையில், தமிழ் ஆய்வை முன்னெடுத்துச் செல்பவை.
மார்க்ச்சியத் தமிழறிஞர் கோவை ஞானி, பேராசிரியர்கள் ப.மருதநாயகம், முத்துச்சண்முகம், நாச்சிமுத்து முதலியோரால் பெரிதும் பாராட்டப்பட்டவர் நளினிதேவி.
கல்லூரியில் பணிபுரியும் காலத்திலேயே ‘இராஜம் கிருஷ்ணனின் புதினங்களில் சமுதாய மாற்றம்’ (1991)பற்றியும், சு.சமுத்திரத்தின் ‘சிறுகதை இயக்கம்’ (1998) பற்றியும் ஆய்வுநூல் வெளியிட்டார். பெண்ணிய விடுதலையே சமன்மைச் சமுதாயத்துக்கு வழிவகுக்கும் என்பதை இராஜம் கிருஷ்ணன் புதினங்கள் தெளிவாக்கியுள்ளது. பெண்விடுதலை என்ற பெயரில் குடும்பங்களின் சீரழிவும், சிதைவும் சமன்மை ஆகாது என்ற கருத்து ராஜம் கிருஷ்ணன் புதினங்களின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
சு.சமுத்திரத்தின் படைப்பாற்றல் உலகநோக்கு, வாய்மை வேட்கை, நீதி வேண்டல், அநீதி கண்டு ஆத்திரம், சிறுமை கண்டு சீற்றம், சிக்கல்களுக்குத் தீர்வு எனச் சமுதாய மாற்றங்களைக் கூறுகின்றது.
பணிநிறைவிற்குப் பிறகும் ஒயாது தமிழியல் ஆய்வில் ஈடுபட்டார். இவரது ஆக்கத்தில் வெளிவந்த ‘தமிழ்இலக்கியம் மரபும் புதுமையும்’, படைப்பிலக்கியப் பார்வையில் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூல்கள் தமிழ்இலக்கிய ஆய்வுலகில் குறிப்பிடத்தக்கவை.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘உண்டாலம்ம இவ்வுலகம்’, ‘உண்பது நாழி’ ‘உடுப்பவை இரண்டே’ முதலிய பேரறங்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றன. இத்தகைய அறஉணர்வு காலந்தோறும் எல்லாத் தமிழிலக்கியங்களிலும் நீரோட்டாமாய் நிலவுகின்றன. இந்தத் தமிழ் மரபு, புதுமைகளையும் பெற்றுத் திகழ்கிறது. இத்தகைய ஆய்வு கருத்தை முன்வைத்து எழுதப்பெற்றது ‘மரபும் புதுமையும்’ (2008) என்ற நூல். இன்றைய சூழலில் தமிழைக்காத்து வளர்க்கும் பொறுப்பில் தமிழியல் ஆய்வாளர்களுக்கு இந்த நூல் ஒரு கைவிளக்காகும்
‘படைப்பியல் நோக்கில் தமிழிலக்கிய வரலாறு’ (2012) என்பது இவரது தலைசிறந்த ஆய்வுநூல். வழக்கமான தமிழிலக்கிய வரலாறு போல் அல்லாமல் தமிழ்ப்படைப்பிலக்கிய வரலாறாக இந்தநூல் திகழ்கிறது. தமிழகத்தில் மூன்று சங்கங்கள் இருந்தன என்ற கருத்தில் இவருக்கு உடன்பாடில்லை. ஆகவே சங்கஇலக்கியம் என்பதை இயற்கைநெறி இலக்கியம் என்று குறிப்பிடுகிறார். படைப்பிலக்கியத்தை முன்வைத்து எழுதப்பட்ட தலைசிறந்த நூலாக இந்த நூல் திகழ்கிறது. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் மருதநாயகம் இந்த நூல் உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று பாராட்டியுள்ளார்.
பெண்ணியப்பார்வையாகவும், விளிம்புநிலை மக்கள் பார்வையாகவும், படைப்பிலக்கியப் பார்வையாகவும் விரிகின்ற நா.நளினிதேவியின் தமிழ் இலக்கிய வரலாறு இதுவரை வெளிவந்துள்ள தமிழ்இலக்கிய வரலாறுகளிலிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்பதோடு, இனி இலக்கிய வரலாறுகள் தமிழில் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதற்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறது என்கிறார் மருதநாயகம்.
ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொவின் (எஸ்.பொன்னுத்துரை) அனைத்துப் படைப்புகளையும் உள்ளடக்கிய நூல் - ‘இலக்கியப் போராளி எஸ்.பொ – படைப்பும் பன்முகப் பார்வையும்’ - எஸ்.பொ படைப்புகளில் ஈழமும், ஈழத்தமிழர் வாழ்க்கையுமே அடங்கியுள்ளன என்றாலும் அவை மனிதம் பற்றியவை என்ற வகையில் தமிழ் மண்ணின் பொதுச்சொத்து என்கிறார் நளினிதேவி. எஸ்.பொ., என்ற ஒதுக்கப்பட்ட மனிதனின் ‘வரலாற்றில் வாழ்தல்’ நூல் வழியே வரலாற்றில் வாழும் மாமனிதராய் எஸ்.பொ இமாலய வெற்றியைப் பெற்றுவிட்டார் என்பதாக இவரது ஆய்வு அமைகிறது.
‘ஞானியின் கவிதைக்கொள்கை’ (2016) - இந்நூல், ஞானியின் கவிதை இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலிருந்து ஞானியின் கவிதைக்கோட்பாட்டை எடுத்து விளக்குகிறது.
‘நெஞ்சக்கதவை மெல்ல திறந்து’ - தமிழ்ப் பேராசிரியரின் உண்மைக் கதை (2016) - என்ற நூல் நளினிதேவியின் தமிழுணர்வும் வாழ்வியல் சிக்கலும் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் புதினம் .
‘புறநானூறு – தமிழரின் பேரிலக்கியம்’(2017) என்ற நூலில் புறநானூறு பண்டைய தமிழரின் வாழ்வியல் நெறிகளை மட்டும் விளக்குவதன்று இக்காலத்திற்கும் வரும்காலத்திற்கும் மட்டுமன்று எக்காலத்திலும் வாழும் மக்களின் வாழ்க்கைக்குப் பொருந்தக் கூடிய மக்கள் இலக்கியமாகும். புறநானூற்றில் தமிழ்ச்சிந்தனை, பொதுமைப் பண்பு, வாழ்க்கை நிலையாமை, கற்பனை கலவாத மனிதத்தன்மை போன்ற சிறப்புகள் பிற இலக்கியங்களில் காணமுடியாதவை. எனவே புறநானூறே தமிழரின் மூலப் பேரிலக்கியம் என்பதை விளக்கியுள்ளார்.
வள்ளுவரின் காமத்துப்பாலை கதைவடிவில் உருவாக்கி ‘காதல் வள்ளுவன்’ (2018) என்ற நாடக இலக்கியம் படைத்துள்ளார். மனித இனத்தின் உயிர்ப்பாகவும் உவப்பாகவும் உலவும் இன்பமே காதல். அன்பு / காதல் அறத்தை அழுகுபட, கவித்துவ நனிச் சொட்டச் சொட்ட அழகு தமிழில் யாத்துள்ளார். இன்பத்துப்பால் அதிகாரங்களை காட்சியியலாக உரைவடிவில் இவர் தீட்டியிருக்கும் இந்தக் ‘காதல் வள்ளுவன்’ நூலை வெளியிட்டுபேசிய கவிஞர் ஈரோடு தமிழன்பன், வள்ளுவனின் கற்பனை நுட்பத்தையும் கவிதைத் திட்பத்தையும் முழுமையாக எடுத்துகாட்டும் நூல் இது என்று பாராட்டியதோடு ‘நவீன ஒளவை’ என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்.
கருத்துச் சுதந்திரம் கழுத்தறுக்கப்படுகிற இக்காலத்தில் எழுந்திருக்கிற எரிதழல் போன்ற கவிதைகள் அடங்கிய தொகுப்பு ‘என் விளக்கில் உன் இருள்’ (2018) தமிழியமும், பெண்ணியமும், சமூக அக்கறையும் இவரது கவிதைகளில் ஆழமாக வெளிப்படுகின்றன. ‘பெண்ணுக்கு இல்லை சமநிலை எனில் அது மண்ணுக்கும் இல்லை’ என்கிறார் எழுத்தாளர்கள் தாக்கப்படுகின்ற இக்காலத்தில் அவர்கள் மறைந்தாலும் எழுத்துகளின் வழியே மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்சு பறவைகள் என்கிறார்.
இவரது பெண்ணியப் பார்வை தனிச்சிறப்பானது. பெண்கள் அழகுப் பதுமைகள் அல்லர். ஆணின் காமஉணர்வுக்குப் பலியாகும் பேதைகளும் அல்லர். ஆணைப்போலப் பெண்ணும் ஒரு மனிதன் / மனுசி காதல் உணர்வு ஆணுக்கு மட்டும் உரியதன்று. பெண்ணுக்கும் உரியது. அதைச் சுதந்திரமாக வெளியிடும் உரிமையும் பெண்ணுக்கு உண்டு. இயற்கையான பாலியல் விடுதலையே பெண் விடுதலைக்குச் சரியான தீர்வு என்ற பெண்ணிய நோக்கிலான நூல் அண்மையில் வெளிவரும்.
கல்லூரிப் பேராசிரியர், தமிழாய்வாளர், எழுத்தாளர், படைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பெண்ணியலாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முகத்திறன் மிக்க இவரது படைப்புகள் அனைத்தும் தனித்தமிழில் எழுதப்பட்டுள்ளன. இவருடைய தனித்தமிழ் நடை நம் மரியாதைக்குரியது என்கிறார் மார்க்சியத் தமிழறிஞர் கோவை ஞானி.
பாராட்டுகள், விருதுகள் என்பனவற்றை இவர் என்றும் விரும்புவதில்லை. ஓய்வூதியத்தின் ஒருபகுதியை ஏழை எளிய மாணவியரின் கல்வி நலன்களுக்கு எனச் செலவிட்டு - தன்னலம் கருதாது வாழும் இவர், முதுமையிலும் இளமை உணர்வோடுச் செயல்படுகிறார். அறுவைச் சிகிச்சை ஒன்றில் செவித்திறனை இழந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் தனி ஓர் இயக்கமாகச் இயங்குவதை மறைந்த பெரியரியலாளர் சங்கமித்ரா உட்பட பலரும் பாராட்டுகின்றனர். முடிந்தவரை தமிழுக்குப் பணி செய்யவேண்டும் என்பதே இவரது பெரு விருப்பம். தமிழுக்குப் பல்வேறு ஆக்கங்களைத் தந்துள்ள இவரது தமிழ்ப்பணி போற்றுதற்குரியது. முனைவர் நளினிதேவியை தமிழ் இலக்கிய உலகம் முழுதாய் இனம்கண்டு, கொண்டாட வேண்டும் என்பதே பலரின் விழைவாகும்.
jothi meena <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>