புகலிட இலக்கியம் என்றால் என்ன? புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன? இவற்றிற்கிடையே வேறுபாடு இருக்கும் என்பதை பலர் சிந்திப்பதே இல்லை. அவற்றிடையே மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. அரசியல் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் படைப்பதே 'புகலிட இலக்கியம்' (Diasporic literature) எனலாம். தொழில் நிமித்தமான ஈழத்தமிழர் புலப்பெயர்வு செய்தோர் எழுதுவது புலம்பெயர் இலக்கியம் (Expatriate literature) இந்த வேறுபாட்டை முதலில் தெளிபடுத்திய பின் "புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு" என்ற தனது நினைவுப் பேருரையின் முக்கிய பகுதிக்குள் நுழைகிறார் செ.யோகராசா.பருத்தித்துறை வேலாயும் மகாவித்தியாலய ஸ்தாபகரான அமரர் உயர்திரு.வை. வேலாயுதம்பிள்ளை அவர்களின் முன்னோடிப் பணியை கெளரவப்படுத்தப்படும் நிகழ்வான 'நிறுவனர் தின நினைவுப் பேருரை' சென்ற 07.08.2011 ஞாயிறு மாலை கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. அந்த உரை சிறு கைநூல் நூலாக அன்று வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டமில்லாமல் அரிய பணிகளைச் செய்பவர்கள் தமிழ் இலக்கிய உலகில் குறைவு என்றே சொல்ல வேண்டும். வெற்றுத் தகர டப்பாக்களின் காதை செவிடுபட வைக்கும் ஓசைகளின் மத்தியில் மெளனமாக ஆழமான ஆய்வுப் பணிகளை செய்கிறவர்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம். இவர்களிடையே வித்தியாசமான ஒருவர்தான் செ.யோகராசா. தப்பு!! பேராசிரியர் செ.யோகராசா என்று சொல்ல வேண்டும். தமிழ்ப் பேராசிரியரான அவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும் பணிபுரிகிறார். 200 கட்டுரைகள், 50 ஆய்வுக் கட்டுரைகள், 8 நூல்கள், 6 தொகுப்பு நூல்கள் என இவரது தமிழ் இலக்கியப் பணி பலமானது.
புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு என்ற இந்த நூல் நிறையத் தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இந்த நூலின் உள்ளடக்கம் அதனைத் தெளிவுபடுத்தும். முன்னணி எழுத்தாளர்களை மட்டுமின்றி இளம் தலைமுறையினர் பலரையும் தேடிக் கண்டுபிடித்துத் தகவல் தந்த அவரது பணி பாராட்டத்தக்கது.
புலம்பெயர் இலக்கியமும் புகலிட இலக்கியமும் சிறுகதைத் துறையில், கவிதைத்துறையில், மொழிபெயர்புத் துறையில், கட்டுரைத் துறையில், நாடகத்துறையில், ஓவியத்துறையில், ஒலபரப்புத் துறையில், சஞ்சிகைத் துறையில், நூல் வெளியீட்டுத்துறையில் மதிப்பீடு ஆகிய தலைப்புகளில் அவரது ஆய்வுத் தகவல்கள் கட்டுரையாகப் பரிணமிக்கின்றன. கரவெட்டியைச் சேர்ந்த இவர் இளமைக் காலத்தில் கருணை யோகன் என்ற புனை பெயரில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார். 'ஈழத்து நவீன கவிதை புதிய உள்ளடக்கங்கள்- புதிய தரவுகள்- புதிய போக்குகள்' என்ற தனது நூலிற்காக தேசிய சாகித்திய விருது 2007ல் பெற்றுள்ளார். 'பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை - பிரதேச சாகித்திய விருது 2007; ஈழத்து நாவல் வளர்ச்சியும் வளமும்- பிரதேச சாகித்திய விருது 2008; பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது முழமையான ஆய்வு அல்ல என.செ.யோ ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். காரணம் பூரணமான தகவல்களைப் பெற முடியவில்லை என்ற அவரது ஆதங்கமாக இருக்கலாம்.
புகலிட இலக்கியம் மற்றும் புலம்பெயர் இலக்கியம் படைப்போரும், அதில் ஆர்வமுள்ளோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. தவறுப்பட்ட படைப்பாளிகள் பற்றிய தகவலறிந்தோர் செங்கல்லடியில் உள்ள கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்துறையிலுள்ள நூலாசிரியருடன் தொடர்பு கொள்ளலாம் என நம்புகிறேன்.
Muruganandan Muttiah Kathiravetpillai <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.