இலங்கையில் இலக்கியம் பேசி எழுதி வாழ்ந்த ஒருவரை அந்நியதேசத்தில் கொண்டு சென்றுவிட்டால், அது கண்ணைக்கட்டி காட்டில் விட்டதற்கு சமம் என்று சொல்வார்கள். இலங்கையில் அவ்வாறு இதழ்களிலும் வானொலியிலும் தனது பெயரை ஆழமாகப்பதித்திருந்த அருண். விஜயராணி கணவருடன் மத்திய கிழக்கு, இங்கிலாந்து என்று பயணித்து இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபொழுது இங்கும் கண்ணைக்கட்டிய வாழ்க்கைதானோ...? என யோசித்திருப்பார்.
ஆனால், அவர் இங்கு வந்த காலத்தில் இலங்கையிலிருந்து வந்த சிலர் தமது பொதிகளுடன் இலக்கியத்தையும் சுமந்து வந்திருந்தனர். அதனால் விஜயராணிக்கு அவுஸ்திரேலியா நால்வகை பருவகாலங்களைக்கொண்டிருந்தாலும் கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில் வசந்த காலம்தான்.
இலங்கையில், மத்திய கிழக்கில், இங்கிலாந்தில் அவர் வாழ்ந்தபோது செய்ய இயலாமல்போன ஒரு ஆக்கபூர்வமான செயலை அவர் இங்கு செய்தமைக்கு இங்கிருந்த அவருக்கு இங்கிதமான இலக்கியச்சூழல்தான் காரணம். இங்குதான் அவருடைய முதல் கன்னிமுயற்சி கன்னிகாதானங்கள் நூல் வெளியானது.
1989 ஆம் ஆண்டு அவர் இந்த கங்காரு நாட்டுக்குள் வந்தது முதல் 2015 ஆம் ஆண்டு இறுதியில் இங்கிருந்து விடைபெற்றது வரையில், அவர் சுவாசித்தது கலை, இலக்கியக்காற்றைத்தான்.
அவர் இணைந்திருந்த சில கலை, இலக்கிய சமுகச்செயற்பாடுகள் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். அதனால் அதுபற்றி மேலும் சொல்வதைவிடுத்து, அவர் எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் எத்தகைய வகிபாகம் ஏற்றிருந்தார் என்பதை குறிப்பிடலாம்.
" அறிந்ததை பகிர்தல் அறியாததை அறிந்துகொள்ள முயல்தல் " என்ற தாரகமந்திரத்துடன் எமது நண்பர் முருகபூபதி 2001 ஆம் ஆண்டு மெல்பனில் இரண்டு நாட்கள் அடுத்தடுத்து எழுத்தாளர் ஒன்று கூடலை முதல் தடவையாக ஒழுங்கு செய்திருந்தார். அதில் மெல்பன், சிட்னி, கன்பரா மாநிலங்களிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். பின்னர் 2002 இல் சிட்னியிலும் 2003 இல் மெல்பனிலும் நடந்தன. மெல்பனில் மீண்டும் நடந்தபொழுது தமது தந்தையார் ஓவியர் அமரர் கே.ரி. செல்வத்துரை அவர்களின் நினைவாக மாணவர்கள் மத்தியில் ஓவியப்போட்டி நடத்துவதற்கு முன்னின்று உழைத்தார். அதற்கு எமது நண்பர் ஓவியர் ஞானசேகரம் நடுவராக பணியாற்றினார். அவ்வாறே 2004 ஆம் ஆண்டு கன்பராவில் நடந்தபொழுதும் அங்கும் ஓவியப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பின்னாளில் இந்த எழுத்தாளர் ஒன்றுகூடல் ஒரு அமைப்பாக பதிவுசெய்யப்பட்டதும், அதில் இணைந்துகொண்ட ஸ்தாபக உறுப்பினரானார். இதுவரையில் 15 எழுத்தாளர் விழாக்கள் அவுஸ்திரேலியாவில் நடந்துவிட்டன.
2009 ஆம் ஆண்டு மீண்டும் மெல்பனில் நடந்தபொழுது இச்சங்கத்தில் தலைவராக இருந்திருக்கின்றேன். விஜயராணி இறுதியாக 2015 இல் நடந்த விழா தவிர்ந்த ஏனைய அனைத்து விழாக்களிலும் ஆக்கபூர்வமாக இயங்கியவர்.
2010 இல் அவர் தலைவராக இருந்தபொழுதுதான் பத்தாவது எழுத்தாளர் விழா மெல்பனில் நடந்தது. அச்சமயம் சர்வதேச சிறுகதை, கவிதைப்போட்டிகள் இடம்பெற்றன. அத்துடன் பூமராங் என்ற சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.விஜயராணி எப்பொழுதும் பெண்கள் குறித்தே தமது ஆக்கங்களை எழுதிவந்தவர். பெண்களின் குரலாக ஒலித்தவர். அந்தக்குரல் ஓய்ந்திருந்தாலும், அவரின் குரல் இன்றும் அவுஸ்திரேலியா வானொலிக்கலையகங்களில் சேமிப்பாகவே வாழ்கிறது. அவருடைய பெண்ணிய சிந்தனைகள் இதழ்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதனால் அருண். விஜயராணி என்றும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நாம் உணருகின்றோம். ( 31-01-2016 அன்று அவுஸ்திரேலியா மெல்பனில் வெளியிடப்படும் விஜயதாரகை இதழில் இடம்பெறும் கட்டுரை)
அனுப்பியவர்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.