[சென்ற வருடம் கிருஷாங்கினியிடம் வாங்கிய கட்டுரை (பதில்கள்) என்னிடமே தங்கி விட்டன. அவற்றையும் கிருஷாங்கினியின் கவிதைகளையும் சேர்த்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் பரப்பில் தனது கவிதை, கதை கட்டுரைகள் மூலமும், சதுரம் என்ற தனது பதிப்பகத்தின் வாயிலாகவும் ஆர்வத்தோடு பங்களித்துவரும் கிருஷாங்கினி குறித்த முடிந்த அளவு அகல்விரிவான கட்டுரை ஒன்றை அனுப்ப விரும்பி இந்த நீள்கட்டுரைத் தொகுப்பினைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியுள்ளேன் - லதா ராமகிருஷ்ணன் -]
கவிஞர் கிருஷாங்கினி : சிறு குறிப்பு
இயற்பெயர் பிருந்தா. 25.8.1947 அன்று பிறந்தவர்.நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் முனைப்பாகப் பங்காற்றிவருகிறார். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் குறித்த , சமூக அவலங்கள் குறித்த கட்டுரைகள், எழுதியுள்ளார். ஓவியம், நடனம், பிறவேறு நுண்கலைகள் குறித்து நூல்கள் எழுதியுள்ளார். கானல் சதுரம் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. கவிதை கையெழுத்தில் என்ற தலைப்பில் வெளியான இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு கையெழுத்துப்பிரதி வடிவில் கோட்டோவியங்களுடன் அமைந்து உருவமும் உள்ளடக்கமுமாய் தனிக் கவனம் பெற்றது.கவனத்தை ஈர்த்தது. கவிஞர் கிருஷாங்கினி பல்வேறு தேசிய அளவிலான, மாநில அளவிலான இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். 2002 – 04 ஆண்டுகளில் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார் ஸீனியர் ஃபெல்லோஷிப் பெற்று 50களுக்குப் பிறகு நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் எழுத்தாளர்களால் கையாளப்பட்ட கருத்தோட்டங்கள், கருப்பொருள்கள், அணுகுமுறை குறித்த ஆய்வுத்தாள் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார்.[‘The Ideas, Topics and Approach adopted by Women Writers in Modern Poetry written after the 50s.’]
சமகாலப் புள்ளிகள் என்ற தலைப்பிலான இவருடைய சிறுகதைத் தொகுப்புக்கு 2002இல் தமிழக அரசின் இரண்டாவது பரிசுக்குரிய நூலாக விருது வழங்கப்ப்ட்டது.ment. தேவமகள் அறக்கட்டளை வழங்கிவரும் கவிச்சிறகு விருது பெற்றவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் தனது கணவரோடு சென்னை, சிட்லப்பாக்கத்தில் வசித்துவருகிறார். கவிஞர் கிருஷாங்கினியின் மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எவ்வளவோ நிகழ்வுகள், செய்திகள், எண்ணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நமக்குள் சென்றுகொண்டும், நம்மிலிருந்து வெளிவந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால், சில நொடிகள் மட்டும் நம்முள் இறங்கிவிடுகின்றன. எங்கோ சென்று தங்கியும் விடுகிறது. ஏன்? காரணம் தெரியாமலேயே. எல்லோருக்கும் ஒரே நிகழ்வுதான் உள்சென்று குமா என்றால், கிடையாது. அப்படி நிகழ்ந்தது எனில், யூனிஃபார்ம் போட்ட பள்ளிமாணவர்களைப் போன்று சீருடை அணிந்து ஒன்றுபோல் அல்லவா எல்லோர் கவிதைகளும் திகழவேண்டும்? வெவ்வேறு நொடிகள், வெவ்வேறு மனங்களில் புகுந்துவிடுகின்றன. அப்படித்தான் தோன்றுகிறது.
நான் ஏற்கனவே என் எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டிருப்பது போல, சில சமயம் நான் இயற்கையாகவும், சில சமயம் வெறும் பெண்ணாகவும் வாழ்பவளாய், சில ச்மாயம் எங்கும் நிறைந்து காற்றைப் போலக் காணப்படுபவளாகவும், சில சமயம் காற்றைப் போலவே கண்ணுக்குத் தெரியாமல், உருவமற்று எங்கேயும் இல்லாதவளாகவும் கூட ஆகிவிடுகிறேன். எனவே, எனக்கென எந்த வரையறையையும் வகுத்துக் கொள்வதில்லை. அப்படியே
எதிர்ப்படும் நொடிகளில் கரைகிறேன். அதில் சிலவற்றை கவிதையாக்க முயன்று பார்க்கிறேன். சில சமயம் மன நெகிழ்வை, பல சமயங்களில் கையாலாகாத்தனத்தை கவிதையாக்கித் தீர்த்துக்கொள்கிறேன். குழந்தைகள் விளையாடும்போது ஒரே மண்ணை நீரூற்றிப் பிசைந்து பலவிதமான தின்பண்டங்களாக உருமாற்றி பரிமாறுகிறாற்ப் போல.
ஒவ்வொருவரின் முகச்சாயலைப் போன்றே அவரவரின் ‘நடை’ச் சாயலும் தனித்தனி. ஒரு கவிதை கைவழியாக சொற்களாக உருவாக்கப்படுகிறது. எனவே, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட சொற்களே கீழிறங்குகின்றன. மறுபடியும் படித்துப்பார்க்கும் பொழுது, அல்லது ஏதோ ஒரு மூலையில் தூக்கி எறிந்துவிட்டு எடுத்துப்பார்க்கும் பொழுது, சில சொற்களை மாற்றலாமா? இன்னனும் நயமும் பொருளும் கவிதைக்கு மேம்படுமோ என்று தோன்றும். பல சமயம் கைவிட்டுப் போன காற்றாடி போல அலைக்கழிக்கும். பல சமயம் முதலில் போட்ட சொற்களே ஏறக்குறிஅய சரியாயிருக்கிறது என்று மறுபடியும் அதே சொற்களைப் போடுவதும் உண்டு. (நான் எழுதியவற்றைத் திரும்பத்திரும்பப் படித்துத் திருத்திக்கொண்டேயிருக்க மாட்டேன். அது படிக்கப் படிக்கப் பிடிக்காமல் போய்விடும்.)
உரைநடை என்பது நமக்கு சற்றே தளர்ந்த, அல்லது நீளமான கயிறு கொண்டு கட்டப்பட்ட சொற்குவியல் எனத் தென்படும். ஆனால், கவிதை மிகக் குறுகிய வடிவில் ஆழப் பொருள் கொண்டு, வெட்டி எறிஎது, வெட்டி எறிந்து _ இடைப்பட்ட சொற்களை _ உருவாக்குவதாய் இருக்கிறது. இந்தச் சொற்குவியலும் கூடநான் பிறந்த, வளர்ந்த, சார்ந்த, இடம், பாரம்பரியம், சுற்றுச்சூழல் ஆகியவற்றால் என் காதுகளால் ஏற்கெனவே கேட்டுப் பழக்கப்பட்டு என்னுள் படிந்து இருக்கும் சொற்களாகத் தான் இருக்கும். இன்னமும் பல புதிய சொற்களைத் திரும்பத்திரும்ப மனதிற்குள் உச்சரித்து, உபயோகித்துப் பழகிப்பழகி அதை எனதாக்கிய பின்னரே படைப்பில் உபயோகிக்க முடிகிறது. கல்வியும், அதனால் பெற்ற அறிவும் இன்னமும் பல சொற்களை நமக்கு வழங்கலாம்.
ஒரு மரம் எப்போது காய்க்கத் தொடங்கும் என்பது நமக்குப் புரிகிறதா? பிறப்பு, ஒரு இறப்பு எப்போது நிகழும் என்று நமக்குப் புரிகிறதா? இவையெல்லாம் இயற்கையின் நிகழ்வுகள். எனவே அவை புதிர் எனலாம். ஆனால் வாழ்க்கையையும் இயற்கையையும் எழுதும் கவிதை புரியவில்லை என்றால் என்ன செய்வது? புரியாமல் போனால் ஒதுக்கிவிடு என்றோ, படிக்க வேண்டாம் என்றோ சொல்லிவிடலாமா? நாம் எழுதுவது இன்னொருவருக்காக மட்டும் அல்ல என்ற நிலை. இன்னொருவருக்காகவும் தான் கலைகள் என்று சொல்லப்படுவதனால், அந்தப் புரிதலை வரவாக்க நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளலாம். எழுத்தாளரும் வாசிப்பாளரும் இணைந்து, வாழிப்பனுபவம் கொஞ்சம் தெளிவடையச் செய்யலாம். சிறிதளவேனும் மெனக்கெடலும், உழைப்பும் இல்லாமல் எதுவும் புரிதல் சாத்யமல்ல. எல்லாச் சொற்களும் புரியத்தான் வேண்டும் என்றால், கவிதைக்கு பதில் தொடர்ந்து அகராதி படிக்கலாம். அதிலும் ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட, சில சமயம் ஐந்துவகை பொருள் கூட கொடுக்கப்பட்டு இருக்கலாம். அப்போது அகராதியும் கூட குழப்பமும் இருண்மையும் நிறைந்ததாய்த் தோன்றலாம். சொற்கள் சில சமயம் அகராதியில் வினைச்சொல்லுக்கு வேறாகவும், பெயர்ச்சொல்லுக்கு வேறாகவும் (படி) மாறுபடலாம். முழுக் கவிதைக்கும் சொற்களைப் பிரித்து அகராதியின் பொருள் கூறினால் மட்டும் நமக்கு அது புரியுமா?
சிறு வயதில் பல பாடல்கள் தமிழ்ப்பாடத்தில் இப்படித் தரப்பட்டிருக்கும். தனித்தனியாய் பொருள் விளங்கும் எனக்கு, ஆனால் எதற்காக இந்தச் சொற்கள் என்று புரியாமலும் திணறுவேன். பழந்தமிழில் இருண்மை இருந்ததில்லையா? சொற்களுக்கு மீறியும், சொற்களின் இடையிலும், சொற்களின் அடி ஆழத்திலும், சொற்களை உபயோகிக்கும் படைப்பாளியின் எண்ண ஓட்டத்திலும், உடன் இருப்போரின் வாழ்க்கையிலும் என கொஞ்சம் கொஞ்சம் கலந்து புரிந்துகொள்ளலாம். அப்படி முற்பட்டால் கவிதை மட்டுமல்ல, அரசியல் நட்பு, துரோகம் என உலகின் அனைத்தும் நமக்குப் புரிய வரும். வரலாம்
எந்தப் பத்திரிகையும் கேட்டதற்காக எழுதித்தரும் பழக்கம் என்னிடம் இல்லை. ஏற்கெனவே எழுதிவைத்திருக்கும் கவிதைகள் அனைத்தும் சுடச்சுட விற்பனையாவதில்லை. விற்பனைக்காக எழுதவும் இல்லை. என்னிடம் அப்படியே இருக்கும். என் கவிதையை அப்படியே பிரசுரிப்பார்கள் என்ற உத்தரவாதம் இருந்தால் கேட்டதற்கு அனுப்பிவைப்பேன்.
[கிருஷாங்கினியின் முகநூலிலிருந்து]
படிக்கவில்லை என்று பிரசுரிக்கவில்லையெனில் என் கைவசம் ஒரு கவிதை லாபம். மற்றுமொரு முறை கேட்டால் மறுப்பேன். என் கவிதை பிரசுரமாகாவிட்டால் அந்தப் பத்திரிகைக்கும் குறை ஏதும் வராது. எனக்கும் எந்த பாதிப்பும் உண்டாகாது.(இலக்கிய இதழ்களில் கூட சில சமயம் வரிகள் வெட்டப்பட்டுவிடுகின்றன.)
புதுச்சட்டை மீது மோகம் வைக்கும் குழந்தையைப் போன்றுதான் என் மனம். புதிதாக ஒரு கவிதை அல்லது சில கவிதைகள் என்று அது பிடித்திருக்கிறார்ப்போல் தோன்றும். சில நாட்களில் அதிலிருந்து மனம் விடுபட்டுவிடும். இப்பொழுதெல்லாம் நான் ஒரு பொருள் குறித்து பல கவிதைகள் எழுதி கொத்தாக ஆக்கிவைக்கிறேன். உடல், குப்பை, கிரிக்கெட், மருத்துவமனை, எதைப் பற்றியும். ஒரு கருப்பொருள் ஒரே கவிதைக்குள் அடக்க முடியும் என்று தோன்றுவதில்லை. ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருள். அதன் மீது விழும் ஒளி மற்றும் இருள் சார்ந்து மாறுபடும். எனவே சுற்றி இருந்து அஹ்டே பொருளை வரைபவர்களின் பார்வைக்கேற்ப அது நியாயமாக மாறும். அதுபோல நான் அந்த ஒற்றைப்பொருள் மீது நிறைய ஒளியையும் நிழலையும் பாய்ச்சி தள்ளி நின்று சொற்களால் வடிவமைக்கிறேன். அதில் அந்தந்த நாளில் என்னுடைய மனநிலையின் சோகம், கோபம், சந்தோஷம் என அன்றைய நாளின் தூக்கலான உணர்ச்சியையும் முன்னர் அந்த நிகழ்வு நடந்த நாளின் காலத்தையும் (மழை, வெய்யில், சப்தம், நிசப்தம்) சேர்த்து கவிதையாக் குகிறேன். எழுதிப் பார்க்கும் முயற்சியாளனாகத்தான் என்னை நான் கருதிக்கொண்டு இருக்கிறேன்.
எனக்குப் பிடித்த கவிஞர்கள் ந.பிச்சமூர்த்தி, நகுலன் தொடங்கி ஸ்ரீநேசன், கோசின்ரா, வெயில் வரை. வாழ்க்கையின் பதிவையும், அதில் நேர்மையையும், சிறிதளவே சொற்களை யும் கொஞ்சம் ஏன் என்ற கேள்வியையும், இடையிடையே சற்றே வெற்றிடத்தையும் உள்ளடக்கிய கவிதைகள் பிடித்தமானவை.
கவிதைக்கான வெளியும் வரவேற்பும் இப்போது அதிகரித்திருக்கிறது என்று நான் ஒப்புக் கொண்டால், இருண்மை என்ற சொல்லுக்கே இடமிருந்திருக்காது. கவிதை பரவலாக்கப்பட் டிருக்கிறது எனலாம். அதில் ஆழமும் குறைந்திருக்கிறது. நவீன கவிதைகளில் நாட்டம் கொண்டு உருவான பல கவிஞர்கள் வயிற்றுப்பிழைப்புக்கென வெகு ஜன இதழ்களில் ஆங்காங்கே நடப்பட்டு பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் ஒரு சில பக்கங்களை மட்டுமே வெகு ஜன இதழ்களில் தக்கவைத்துக்கொள்ள இயலுகிறது. அதிலும் சில சமரசங்களுடன். எனவே, அட்டையில் (நடிகை) பெண்ணையோ, பிபக்க அட்டையில் பட்டுப்புடவை நகை அணிந்த பெண்ணின் விளம்பரத்தையோ, அசட்டுத்தனமான ஜோக்குகளையோ, உண்மையான படைப்பாளியை இழிவு செய்யும் விதமான பதிவு களையோ நிச்சயமாக நீக்கவோ, மறுக்கவோ இயலாது. இதுபோன்ற பெரும் பக்கங்களுக்கு இடையில் சிக்கிய சில பக்கங்கள் என நவீன இலக்கியமும் அச்சேறுகிறது. நிறுவனத்தினர் அதற்கு மட்டும் இடம் ஒதுக்கித் தர சம்மதிக்கிறார்கள். நவீனம் இல்லாத வெகு ஜன இலக்கியம் இப்போது சாத்யம் இல்லை. எனவே நவீனம் போன்ற போலிகளும் சில சமயம் நவீனமும் அச்சேறுகின்றன. ’நான் சார்ந்த சில கொள்கைகள் மட்டும்’ என இவைகளிலும் சமரசம் உண்டு. வெகு ஜன சினிமாக்களில் விமர்சனங்களும் பக்கம் பக்கமாக வெளியாகின் றன. இதுதான் தற்கால நிலை. இது நான் கருதுவது.
முதலில் நான் ஒரு உயிர். பின் தான் நான் பெண். பின் முதியவள், பின் குடும்பத்துள் இருக்கும் ஒரு முதியவள், பின் இந்த மதத்தைச் சார்ந்தவள், இன்ன சாதியைச் சார்ந்தவள், இந்தப் பொருளாதாரத்தைச் சார்ந்தவள் என அடுக்கடுக்காக என்னாலும் உணரப்படுகிறது. மற்றவர்களாலும் உணர்த்தப்படுகிறது. பெண் சில நிகழ்வுகளை எழுதித்தான் ஆக வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால் 50களில் என் அம்மா பேசிய அடிப்படைப் பெண்ணியம், நேற்று என்னால் பேசப்பட்ட அடிப்படைப் பெண்ணியம், இன்றும் பேசப்படுகிறது. அடுத்த தலைமுறையும் அதைத்தான் பேசவேண்டி வருமா? இதுபோன்ற சூழலுக்குத் தள்ளப்படும் போது ஒரு எல்.கே.ஜி ஆசிரியர், தான் முதிர்ந்துவிட்டாலும் கற்றுக்கொடுக்கும் பாடம் அதுவாகவே இருப்பதைப் போன்று என்னுள் ஒரு பெரும் சலிப்பை உண்டாக்குகிறது. பெண்ணை மதிக்க வேண்டும், அவளை வெறும் உடலாய் பார்க்கலாகாது. கைம்மை, விவாகரத்து என இன்னமும் பலதும் தவறாகவே பார்க்கப்படுகிறது; பார்க்கப்பட்டுக்கொண்டி ருக்கிறது.
ஆனால், நான் பெண்ணியம் சார்ந்த எழுத்துக்கள் மட்டுமே எழுதுவேன் என்று என்னை ஒரு கட்டுக்குள் அடைப்பது கிடையாது. சூரியனுக்குக் கீழே இருக்கும், உலகின் மேற்பரப்பில் இருக்கும் அனைத்தையும் எழுத எனக்குத் தோன்றிய போது, தோன்றிய விதம் எழுத எனக்கு முழு உரிமை உண்டு. என்ன எழுத வேண்டும், எப்போது எழுத வேண்டும் என்று யாரும் சொல்வது எனக்குத் தேவையற்றது. பெண்ணியம் மட்டுமே எழுதுவேன் என்ற சூளுரையோ, பெண்ணியம் என்றால் காத தூரம் ஓடுவேன் என்ற அடமோ இரண்டுமே எனக்கு ஒவ்வாதது.
கலைகளிலுமே பெண்களின் பங்களிப்பு குறைவுதான். பெண் பாடகர்களுக்கு பக்கவாத்யம் வாசிக்க மாட்டேன் என்று சொல்லி அவமானப்படுத்திய பல பிரபல வித்வான்கள் அன்றும் உண்டு. பெண்களுக்கு பக்கவாத்யம் வாசித்துவிட்டதாலேயே ஆண்களால் ஒதுக்கப்பட்ட பக்கவாத்யக்காரர்களும் உண்டு.
90களுக்குப் பிறகுதான் பெண்கள் எழுதவந்தனர் என்பதும், பெண்ணியம் பேசுகின்றனர் என்பதும், பெண்மொழி என்பது ஒரு சிலரின் கவிதைகளில் மட்டுமே இருப்பதாகக் கூறுவதும் அபத்தம். பெண்மொழி என்பதை உருவாக்கும் பணியில் இப்போதிருப்பவர்களும் பங்காற்றியிருக்கின்றனர். அவ்வளவே. இவர்களாலும் தனியான பெண் மொழியையோ, பெண் உரையாடலையோ சாத்யமாக்க முடியவில்லை. அதற்கு இன்னமும் நிறையப் பாடுபட வேண்டியுள்ளது. 70, 80களில் பெண்களால் எழுதப்பட்ட பெண்ணியம் சார்ந்த கவிதைகளும், சாராத கவிதைகளும் உள்ளன. பெண் உடலைப் பற்றிப் பேசும் கவிதைகள் முன்னமே இருந்தன. பெண் உடல் கொண்டாட்டம் என்பதும் உரைநடையில் 70களில் படைக்கப்பட்டுள்ளன(அம்பை, ரோஹிணி போன்றவர்களால்). பெண் காமமும், ஆண் உடல் நிராகரிப்பும், தன்னுடல் கொண்டாட்டமும் சமீபத்தில் உருவாயின. ஆனால், அவை மேலை நாடுகளில் நீண்ட காலத்திற்கு முன்னமே பேசப்பட்ட கருப்பொருள்கள் தான். தமிழில் சமீபத்தில் அவற்றின் சாயல் கொண்டு உருவாயின.
ஆனால் இந்தக் கவிதைகளுக்கான எதிர்வினை என்பது மிக மோசமானதாக, மலினப்படுத்துவதாகவும், ‘ஒழுக்கம் சிதையும்’ என்ற பரப்புரையும் தேவைக்கு அதிகமாக எழுந்தன. அதுவே பெண் உடல் மொழி பற்றி கூடுதல் கவனம் ஏற்படக் காரணமாகியது. பெண் உடல் மொழி என்பது ஒரு புதிய கதவு சிறிதே திறந்தது. அது பீறிட்டுக் கிளம்பி தற்போது சற்றே அடங்கிவிட்டதென என்ணுகிறேன். ஒரு பெண் ஆண் உடலை நிராகரிப்பது, சுயபால் காமம், பெண் காமம் என எழுதப்பட்ட கவிதைகள் ஒரு சில தரப்பு உடல்களை மட்டுமே பதிவு செய்தன எனலாம். விளம்பரப் படத்தில் இடம்பெறும் பெண்களைப் போன்றோ, ஊடகங்களில் தொகுத்து வழங்கும், செய்தி வாசிக்கும் பெண்களைப் போன்றோ அழகும், மினுமினுப்பும் மட்டுமே நிறைந்ததல்ல உலகம். இளமையிலேயே மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகி முலைகள் நீக்கப்பட்ட பெண்கள், பருவம் எய்தாமல் வெற்று உடலாக நிராகரிக்கப்பட்ட பெண்கள், குழந்தைப் பருவத்தில் வல்லுறவுக்கு ஆளாகி பதின்ம வயதில் மனநிலை குலைந்த பெண்கள், மாதவிடாய் நின்றபின் உபயோகமாகாது என இழிவுக்கு ஆளான பெண்கச்ள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆடையற்றுத் திரியும் பெண்கள், உடல் மட்டுமே வளர்ந்து மனவளர்ச்சி குன்றிய பெண்கள், முதிர்ந்து நோயுற்று, ஆதரவற்ரு வாழ வழியின்றி பிச்சை எடுத்து எங்கெல்லாமோ அலைந்து திரியும் பெண்கள்(ஆண்களும் கூட) என்று இன்னமும் இன்னமும் பல பிரிவில் நாம் உணராத பெண் உடல்கள் பல உள்ளன. (நான் இவற்றில் சிலவற்றை கதைகளிலும், கவிதைகளிலும் உணர, உணர்த்தத் தலைப்பட்டதுண்டு). இந்த உடல்களையும் நாம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. (போரில் கிழிக்கப்பட்டவை, சாதீய மதக் கலவரத்தில் கிழிக்கப்பட்டவை இருக்கின்றன).
எல்லோருடைய எழுத்துகளும் விமர்சனத்திற்குட்பட்ட வையே. எழுத்து அச்சேறி வாசிப்புக்கு உட்பட்ட பின் அது பொதுத்தளத்திற்குள் சென்றுவிடுகிறது. எனவே எல்லோருடைய எழுத்துகளும் விமர்சனத்திற்குட்பட்டது தான். கூட்டமும் குழுவுமாக இணைந்து பாராட்டிக் கொடிபிடிப்பதா, கூட்டமும் குழுவுமாக இணைந்து போட்டு மிதிப்பதோ இரண்டுமே அனாவசியம். கவிதை தரத்தின் அடிப்படையில் நிலைத்து நின்றால் சரி. நிற்காமல் போனாலும் ஏதும் உலகிற்கு பாதிப்பில்லை என்று நினைப்பவள் நான். கவிதைகளால் உலகம் உய்விக்கப்பட்டது என்பதும் கிடையாது. கவிதைகளால் பேரழிவை உண்டாக்க முடியும் என்பதும் கிடையாது. அந்தந்தத் தருணத்தில் கவிதை, கவிதை மட்டும்தான் என்று நினைப்பவள் நான்.
சாதீய ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள், யுத்தகாலத்தின் பாதிப்புக்காளானவர்கள், சிறுபான்மையினர், பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளவர்கள், வெளிநாடுகளில் வாழ் மக்கள் என எல்லோரும் அவரவர்க்கான வாழ்க்கைப் பதிவை தேவையெனக் கருதி எழுதுகிறார்கள். அதுபோலவே பெண்களும். இப்போது பெண்கள் நிறைய எழுத வருகின்றனர் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. ஓரளவு வரத் துவங்கி இருக்கின்றனர். (கடந்த தலைமுறை எழுத்தாளரான சுகந்தி சுப்ரமணியத்துக்கு எந்த அளவு கவனம் கொடுக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை) இன்று ஓரளவுக்குப் பெண்கள் எழுதவந்தாலும் கூட தொடர்ந்து இயங்குவது என்பது பலருக்குத் தடைப்பட்டுவிடுகிறது. இது ஆண்களுக்கும் கூடத்தான்.
இப்போது பெண்களின் கவிதை அதிகம் பேசப்படுவது ஆண்களுக்கு இழைக்கும் அநீதியாக எப்படி ஆக முடியும்? கவிதையில் பெண்கள் என்ற பிரிவு பேசப்படுகிறது. அதுவும் ஒரு சிலரை மட்டுமே திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள்.( தயவு செய்து இதை பொறாமை என மலினப்படுத்த வேண்டாம்). அவர்களின் முழுப் படைப்பைப்படிக்காமல், உள்வாங்கிக்கொள் ளாமலும் கூட ஏதோ சடங்கு போல பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன.
ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, சிவகாமி, அம்பை, பாமா இன்னும் பலர் தொடர்ந்து சிறுகதையும் நாவலும் எழுதிக்கொண்டு இருக்கின்றனர். சிறுகதைகளில் பெண்கள் பங்கு, நாவலில் பெண்கள் பங்கு என குறிப்பிடும்போது, உச்சரிக்கப்படும் பெயர்கள் பொதுப்பட்டி யலில் கவனக்குறைவாகவோ அல்லது வேண்டுமென்றோ இணைக்கப்படாமல் போகிறது. சிறுகதையின் வரலாறு குறித்துப் பேசும்போதும் புதுமைப்பித்தன் முதல் வாமு.கோமு வரை சொல்லப்படுகிறது. அவர்களிடம் தனிப்பட்ட முறையில் சென்று கேட்கும் பொழுது ‘பதிவில் விடுபட்டுவிட்டது என்கிறார்கள். ஆனால், அதே கட்டுரை அச்சேறும்போதும் விடுபடல் தொடர்கிறது.
இன்றைக்குக் கொண்டாடப்படும் சூடாமணியை எந்தெந்த இலக்கியப் பத்திரிகைகள் பதிவு செய்தன என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். பட்டியலில் இடம்பெறவும், தனஹ்டு நூல்களின் எண்ணிக்கையை நினைவில் வைத்துக்கொள்ளவும் பலர் எழுதுவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் பட்டியல் என்பது இடுவோர் சார்ந்தது என்பது எக்காலத்திலும் உண்டு.
இவை அனைத்தும் ஆண்களுக்கும் நேரிடுகிறது என்பது உண்மை. ஆனால், பெண்களின் வெளிச்சத்தால் ஆண்கள் மங்கிவிடுவார்கள்; அது அநீதி என்பதெல்லாம் அர்த்தமற்றது. ஆண்களும் பெண்களும் சூரியனும் சந்திரனுமா என்ன?
கவிதைக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு என்று, நான் இரண்டையும் வேறுவேறாகக் கருதவில்லை. கவிதையிலிருந்து வாழ்வியலும் வாழ்வியலிலிருந்து கவிதையும் உண்டாகிறது. வாழ்க்கை, கவிதை இரண்டிலும் தெளிவும் நேர்மையும் இருக்க வேண்டும்.
கவிதை எழுதும் பெண் என்ற அளவில் என் சமூக வெளியும் கவிதை வெளியும் எப்படி விரிவடைந்திருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை. கவிதை எழுதினாலும், எழுதாவிட்டாலும், எழுத்தறிவு இல்லாத பெண்ணாயினும் ஆஅணாயினும் அனுபவமு, வயதும் நிறையப் படிப்பினைகளைக் கொடுக்கிறது. எனவே எல்;லோருடைய அனுபவ வெளியும் விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது _ அவரவர் கைக்கொள்ளளவிற்கு ஏற்ப அள்ளும் நீரென.
கவிஞர்கள் என்றில்லை. யாருக்கும் சுயவிமர்சனம் அவ்வளவு எளிதில் வசப்படாது. தன்னிலிருந்து விலகி தன்னைப் பார்த்து நிறை குறைகளைக் காணும் துணிவும் மனப்பக்குவமும் முதலில் வரவேண்டும்.
சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவருக்கென ஒரு அரசியல் உண்டு. தனக்கு சரி என்று பட்டதைச் சொல்லவும், சரியில்லாதவற்றை எதிர்க்கவும் கடமை உள்ளது. அதைக் கவிதிஅயாகவோ, கவிதையுடன் களத்தில் இறங்கியோ கூட போராடலாம். எல்லா நிகழ்வுகளுக்கும் என்னை இணைத்துக்கொண்டு பெருங்குரல் எழுப்புவது எனக்கு சாத்யமல்ல. எல்லாவற்றிலிருந்தும் தப்பிப்பதும் சாத்யம் இல்லைதான். என் கவிதைகளில் சமூகம் சார்ந்த பல விஷயங்களைப் பற்றிப் பதிவு செய்யும்போது பதுங்கிக்கொள்வதாகவே கருதுகிறேன். கவிதை எழுதி மட்டுமே ஆற்றாமையைத் தீர்த்துக்கொள்ள என்று எழுதுகிறேனோ என்று கூடத் தோன்றும். அது கூடச் செய்யவில்லை என்றால் இன்னமும் உறுத்தல் அதிகமாகிறது. தாங்க முடியாதவற்றைப் பார்க்க இயலாமல் கண்களை மூடிக்கொள்வதைப் போல.
இன்றைய நாட்களில் தொலைக்காட்சிகளில் அந்நியச் சரக்கு மொழிபாற்றம் செய்யப்பட்டு மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டு இருக்கிறது. அதுபோன்ற குழந்தைகளின் சானல்களும், நிகழ்ச்சிகளும் இல்லாவிட்டால் பெரியவர்களுக்கு இணையாக திரை சார்ந்த பேச்சுக்களிலும் பாட்டு ஆட்டங்களிலும் குலுங்கல்களிலும் குழந்தைகள் திறமையை வளர்த்துக்கொண்டு இருக்கின்றன. மூட நம்பிக்கை ஒரு பக்கம் அழிக்கப்பட்டுக்கொண்டு வருவதாகச் சொல்லும் நேரம் பறக்கும் மனிதனும், பத்து வயது பாலியல் முத்தங்களும் பரிமாறப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
கிருஷாங்கினியின் கவிதைகள் சில…
வலியுற்றும் வலியற்றும்.
- க்ருஷாங்கினி -
01-
வலி நிரம்பிய பைகளாக
படி ஏறி வருகின்றனர் மக்கள்.
ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்
முதியோர்களும் மற்றும் இளைஞர்களுமாக
மருத்துவ மனை எப்போதும் முனகல்களாலும்,
அலறல்களாலும், வலிகளாலும்
நிரம்பி வழிகின்றன.
கூட்டத்தாலும் கூட.
நோயுடன் நோய்தாங்கியவரும்,
தாங்கியவர்களைத் தாங்கியவர்களும் என
வெளிப் பார்வையாளர்களால்
முற்றம் எப்போதும் நிரம்பி வழிகிறது.
நிரம்பி வழியும் மருத்துவ மனைகளில்
நோயுற்றவர்களை விட ஆரோக்கியமானவர்களே
அதிகம் காணப்படுகின்றனர்.
பார்வையாளர்களாக, உடன் வந்தவர்களாக
மருத்துவராக, பணிப்பெண்களாக
செவிலியராக கணினி முன்
சீட்டெழுதுபவராக
கணக்கெழுதுபவராக
அரோக்கியமானவர்களால் சூழப்பட்ட நோய்கள்
சற்றே
பீதி அடைகின்றன.
அனைவரும் இணைந்து போராடுகின்றனர்
நோயகற்றவும், தடுக்கவுமாக
மரணத்தை அருகில் அமர்த்தி இருப்பவர்களுமாக
முற்றம் நிறைந்து நெளிகிறது.
நோய், போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிறது.
மெல்ல வெளியேறிச் செல்ல எத்தனிக்கிறது.
ஆனாலும்,
வசதி கருதி இருப்பிடத்திலேயே
தங்கிக் கொள்கிறது
கட்டாயமாக விரட்டி அடிக்கப்பட்ட
நோய்க் கிருமிகளோ -எனில்
காலம் பார்த்துக் காத்துக்கிடக்கின்றன
மருத்துவ மனையின்
வெளியில், தெருவில், சாப்பாட்டில்,
சாக்கடையில், இருமலில், மூத்திரத்தில்
மலத்தில், சளியில்.
வரிசையாய் நிற்கும் வாகனத்தின்
இடையிடையே ஆள் தேடி அலைகின்றன
கிருமிகள்.
தாக்குதல் அறியாப் பலரும் தன்னுடன்
எடுத்துச் செல்கின்றனர் சில கிருமிகளையாவது.
வளர்ப்பு மிருகமென அது விஸ்வரூபம்
எடுக்குமா? அல்லது யாசிப்போன் என
விரட்டி அடிக்கப்படுமா?
2
உடலெங்கும் சீழ் வடிகிறது
வெட்டுண்ட ரப்பர் மரமென
தண்டு மரம் என ஆங்காங்கே
வெள்ளை திரவம் மேலிருந்து கீழாய்.
கீறிவிட கீறிவிட, இன்னமும்
விரைவாய்க் கீழிறங்கி வருகிறது.
வழிகிறது, துர் நாற்றத்துடன்.
நோயுற்றவன் எண்ணுகிறான்,
உடல் ஒரு நோய்க் கிடங்கென்று.
‘ஊத்த சரீரம்'
பட்டினத்தாரும் பலரும் சொன்னது
சரியென்று எண்ண....
தொடர முடியாத வலி பட்டினத்தாரைப்
பறந்தோடச் செய்கிறது.
நிரம்பித் தளும்பும் வலியை
எந்த துவாரத்தின் வழியே வெளியேற்ற?
துவாரங்களால் விரும்பப்பட்ட இவ்வுடல்
துவாரங்களால் நிரம்பப்பட்ட இவ்வுடல்
துவாரமின்றித் தவிக்கிறது.
வலியை வெளியேற்ற இயலாமல்
மயங்கிச் சரிகிறது உடல்.
நீலச்சுழல் ஒளிர் விளக்கு தலையில்
சுழல, நீளமாக
விட்டு விட்டு குழல் ஒலியிட்டு
வலி நிறைந்த உடல் பைகளைக் கடத்திக்
கொண்டு செல்லுகிறது-வாகனம்
தன் சக்கரங்களின் ஊடாக
மருத்துவ மனைக்கு
இறப்போ, பிறப்போ இன்ன பிறவோ
வலி அடைத்த பைகள் கிடத்தி
இருக்கிறது உள்ளே, ஆரோக்கியத்தின்
உறவுகளுடன் கூட.
பெரு நகரங்களில், பெரிய தெருக்களில்
மட்டுமல்ல --
எல்லா வீதிகளிலும் அலறி அலறி
பயணிக்கிறது -தெருவின் மீதும்
விபத்தில்-வீட்டின் உள்ளும் வெளியிலும்,
ஏதேதோ இடங்களில் வலியின்
அலறலும், முனகலும் -நிறைந்து, உறைந்து
வலி நீங்குமா? உயிர் நீங்குமா?
பயணிக்கிறது வாகனம், வாகனங்கள்
எப்போதும், எங்கெங்கும்.
3-
மதுக் கடைகளிலும், மருத்துவ மனைகளிலும்
நிறைந்திருக்கிறது பெருங்கூட்டம்-எப்போதும்.
மக்கள் கூட்டம்.
மருத்துவமனைகளிலோ ஆண்கள்,
பெண்கள், அனைத்து வயதிலும்
குழந்தைகளும் கூட.
உடலுக்குள்ளும் வெளியேயும் நெரிசலில்
சிக்கித் தவிக்கிறார்கள்.
மதுக்கடைகளிலோ
பல பருவத்தினர் ஆண்களே
அநேகமாக.
மருத்துவ மனைகளில் வலிப்பைகளாக
உடல்கள் , வலிகளின் இடையே
நீந்தி, நீந்திக் கடக்கின்றன.
மதுக்கடைகளோ எனில் மிதக்கும் உடல்கள்,
மின்னி மின்னி மறையும் ஒளிகளில்
வலி மறந்து பயணிக்கிறார்கள்
மக்கள்.
மதுக்கடைகளிருந்து மறந்த
வலிகளிகளிலிருந்தும் மீண்டு
வயிறு வீங்கி வலி நிறைந்து
மருத்துவ மனை நோக்கி
வருகிறார்கள் குடிமக்கள்-
என்றாவது ஒரு நாள்
கண்டிப்பாக.
உற்றாரும், உறவினரும்
மீட்டெடுக்க.
மருத்துவ மனைகளிலிருந்தும் -மதுக்
கடைகளுக்கு சென்று மீள்கின்றன,
உடல்கள்.
முன்னொரு நாள் உடல் என்றிருந்த
ரத்தமும், உடைந்த பாகங்களுமாக
அந்த இறந்தகாலப் பெட்டகத்தினை
அடுக்கிப் பேணி பாதுகாக்கும்
ஒரு சிலர்?
மருத்துவ மனைகளில் கழிவு
நீர்த் தொட்டிகளையும்,
அடைத்த சாக்கடைக் குழிகளையும், அள்ளி எறிய
ரத்தமும், பிரசவ அறையின் வெளியேறிய
பனிக்குடக் கழிவுகளையும்
மாதவிடாய்ப் பஞ்சுகளையும், மலத்தையும்,
மூதிரத்தையும், சீழ் வடியும் நாற்ற கட்டுத்
துணிகளையும் பிசுபிசுக்கும் அள்ளிய கைகளை
மறக்க ஒரு சிலரேனும் சென்று
திரும்பலாம், உடலால் மதுக்கடைகளுக்கு
மிதக்க நினைவுகள் மறக்க.
4-
எல்லோரும் குறுக்கும் நெடுக்குமாகக்
கடந்து கொண்டிருக்கிறார்கள்.
நோயுற்றவர்களைத் தாங்கிக் கொண்டும்,
நோயற்றவர்களைத் தாண்டிக் கொண்டும்
இடையில் அறையை நோக்கி
செலுத்தப்படும் ஒரு படுக்கை,
சக்கரங்களின் மேல் கிடத்தி
கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு வலி நிறைந்த பை.
வலி நிறைந்த அந்த உடலிலிருந்து
அவ்வப்போது விசிறி எறியப்படுகிறது-சுற்றிலும்
பெருங்குரல்-கைதூக்கி-கைதூக்கி
அக்குரல் தடித்த பிசுபிசுத்த வெள்ளைக் கயிறென
மருத்துவ மனையின் சுவரெங்கும்
அறைந்து நீளமாக அப்பிக் கொள்கிறது.
சிலந்தி வலையென அந்தக் கயிறோ யார் கண்களுக்கும்
காதுகளுக்கும் எட்டாத அந்த ஒட்டும் ஒலிக்கயிற்றை
எல்லோரும் கடந்து கடந்து செல்கின்றனர்.
கைகளால் விலக்கி விலக்கி நோயுற்றவர்கள் வலியுடனும்,
நோயற்றவர்கள் அரோக்கியத்துடனும்.
அசையாது நிலையாக அந்த ஒலிக் கயிறு
அந்தரத்திலும் வலையென எழும்பி
சிக்கவைக்க முயல்கிறது.
கடக்கும் உடல்கள் சிக்காமல் ஊடுருவிச்
செல்கின்றன,
உலகமெங்கும்
உடல்கள், உடல்கள்...
5
வயதான வலி நிறைந்த பை ஒன்று
நெஞ்சைத் தடவியபடி-கண்களில்
மிரட்சியுடன் கட்டுண்டு கிடக்கிறது,
பயத்தில், சக்கர நாற்காலியில்.
ஓட்டி வரும் ஒருவருடன் இன்னமும் சிலருமாக ஒரு சிறு
கூட்டம் உள் நுழைய எத்தனிக்கிறது.
மருத்துவ மனையில்,
மருத்துவர் அறைக்குள்
காத்திருக்கும் பல வலிகள்
பலவிதம்,
வயதான உடலில் வலியுடன்
பயம் மீறுகிறது.
அலறத்தொடங்க ஆயத்தம் செய்கிறது உடல்.
பார்த்துப் பழகிப் போன ஓசைகள்
இவை, யாரையும் அசைக்கவில்லை.
உள் செல்ல சிறு கூட்டமும் உடன் செல்ல
நோய்ப் பைக்கும், உடன் ஒரு உடலுக்கும் மட்டுமே அனுமதி
மற்றவை மறுக்கப்படுகின்றன.
சற்றே விலகி இரும்
முறை வந்தபின்
உள் நுழைகிறது, வலியற்றும்
வலியுற்றும் இரு உடல்கள்.
இளைஞர் ஒருவன்
மிடுக்கான தோற்றத்தில்-சற்றே
தயங்கிய
நடையில், நல்ல தரமான உடையில்
காலணிகளும், கழுத்தில் கட்டப்பட்ட டையுடனும்.
உடன் ஒரு நண்பனுடனும், மருத்துவ மனையின்
உள் நுழைகிறார்கள், இந்த-சிறு
கூட்டத்துடன் இன்னமும் பலருடன்
இணைந்து காத்திருக்கிறார்கள்,
மருத்துவ மனையில், மருத்துவர் அறை வாயிலில்.
முறை வரும் வரை விளையாட்டு, அலுவலகம்,
வீடு, படித்தது, பிடிக்காதது
விரிவாக எல்லாவற்றையும்
பேச எண்ணினாலும் அவ்வப்போது -வலி
முகத்தில் சிறு சுழிப்பு
தெறிப்பு சட்டை பட்டன்கள் சற்றே
தளர்த்திவிடப்படுகின்றன.
எங்கும் நிறைந்திருக்கும்
காற்றை இன்னமும் கொஞ்சம்
உள்ளிழுக்கும் முயற்சியில்
ஆனாலும் கூட.
வயோதிக வலி நிறைந்த உடல் மருத்துவர் அறையில்
சிறு கூட்டமோ எதிர்பார்ப்பும் தவிப்புமாக
ஏதுமில்லை. வெற்று பயம். கொஞ்சம் வலியுடன் இணைந்தே.
ஆசுவாசம் வலிப் பையின் முகத்தில்
ஏமாற்றம் சிறு கூட்டத்தில்.
அடுத்து செல்ல வேண்டியது
ஷூவும் டையும் அணிந்த இளைஞன்
தன் நண்பனுடன் உள்நுழைய,
சில மணித்துளிகளில்
பரபரப்பு தொற்றிக் கொள்கிறது,
மருத்துவமனையில்
-மருத்துவர் அறையில்
செவிலியரும், மற்றவர்களும்
எல்லா பட்டன்களையும்
அவிழ்த்து விட்டு-நெஞ்சை நீவிக்
கொடுத்து, அழைத்துச் செல்கின்றனர்-சக்கர நாற்காலியில்
உடன் செல்லும் நண்பன் முகத்தில் கலவரம்.
யார் யாருக்கு சொல்ல வேண்டும்?
எந்த எந்த தொலைபேசி எண்கள்
மிக முக்கியமானவை?
ஏது அறியேனே? என் செய்வேன்?
வலியுடன் சேர்ந்த வேதனையும்
பயமும் அப்பிக் கொள்கிறது .
படுக்கை கொணர்ந்து கிடத்தி
செலுத்துகிறார்கள் உடலை
சக்கரத்தின் மீதாக
மருத்துவ மனையில், மருத்துவர் அறையிலிருந்து
மருத்துவ மனையில்
மருத்துவரின் அறையில்
மருத்துவ சீட்டுடனும் கூட-பயமும்
பயமின்மையும் பதட்டமும். ஏமாற்றமும்
சேர்த்தே விநியோகிக்கப்படுகிறது.
வயதின் எண்ணிக்கை எப்போதும்
எல்லா உயிர்க்கும் ஒன்றே போல
கூடிக் கொண்டே செல்கிறது.
ஏற்கனெவே கணக்கிட்டு வைத்திருக்கும்
காலங்களுக்கு ஏற்ப
மாதத்திலும், வருடத்திலுமாக
நம் அறிவுக்கு எட்டியபடி-ஆனால்
மரணம் மட்டும் வரிசையின் கதியை உடைத்து
காற்றைப் போல தன் விருப்பத்திற்கு
தேர்ந்தெடுக்கிறது உடல்களை.
நானோ எப்போதும் போல எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
கையறு நிலையில்.
வீட்டு வன்முறையும், விபத்துக்களும்
யுத்தமும், சாதி-மதக்கலவரங்களும்
ஆணவமும், ஆசையும், இயற்கைப்
பேரழிவுகளும் கூட
வலியற்ற உடல்களை வலியுற்ற உடல்களாக,
வெற்று உடல்களாக மாற்றத் தயாராகிவிடுகின்றன.
அப்போது மருத்துவமனைகள்
நிரம்பி வழிகின்றன-போதிய
மருத்துவரும், மருந்துகளும் அற்று.
நோயற்ற நல் உடல்கள் வலியற்ற
திட உடல்கள் வலி நிறைந்து ஓலமிடும்
நோயுற்ற உடல்களாக மாற்றப்படுகின்றன,
வலிந்து ஒரே நேரத்தில்.
வலி நிறைந்த கூச்சல்களும், துர் நாற்றங்களும்
நிரம்பி வழிகின்றன,
காற்றைக் கிழித்துக் கொண்டு
எல்லா திசைகளிலும்.
PAINFUL AND PAINLESS
1.
As pain filled air bags
People come climbing the stairs
With men, women, children,
With groans, screams and pains
Ever overcrowded.
The corridors and verandas
are always filled with
patients and those who bring them
holding, carrying and those holding those
holding the diseased….
Those who have come as visitors,
those accompanying the ailing
Nurses, sitting in front of the computer
and writing prescriptions, Accounts
_ so the diseases surrounded as they are
by the healthy ones
turn a little frightened.
In the overflowing hospitals
All join hands and fight
to drive away the diseases
and to prevent their onslaught.
With these lot and those
having death seated next to them
the corridor sways
filled up to the core.
Fearing the intense protest,
ailments attempt to depart.
Yet, for comfort’s sake
It stays on.
The viruses chased away
Wait for time opportune.
Outside the hospital,
In the street, food
gutters, cough, urine, excretion, phlem
in between the vehicles standing in rows_
they keep looking for prospective persons.
Unaware of the impending attack, people in
large numbers
carry on them at least several viruses.
Will they grow as pet animals
in demonic proportions? or
driven away as beggars?
2.
Puzz oozing all over the body.
As felled Rubber tree as ‘Thandu Maram’
White liquid here and there
Flowing downward.
With each clinical scratch
It streams down in haste.
Seeps and spreads.
The patient ponders:
The human body is but a warehouse of diseases
True what Saint Pattinathaar and many others
had observed _ “Rotten body’ , So muses he.
The pain proving unbearable
Chases Patinathaar away.
Through which hole to release
This brimming pain?
This body so desired by holes
This body so full of holes
Suffers acutely for want of a whole
Unable to release the pain
The body swoons falling to the ground.
Blue revolving light so bright on top, going round and round
Sounding horn, elongated, every now and then,
With pain-filled air-bags lying inside
The vehicle carries them all
Upon its wheels to the hospitals.
Death, birth or something else
The pain-filled air-bags
Lie inside, in the company of their healthy kith and kin.
Not just the big cities, along the highways
But through all streets and lanes the vehicle
go screaming.
On the street too – in an accident,
inside and outside the home,
in different corners, different places
The wails and screams of pain and its groan
Brimming frozen…
Oh, will there be relief from pain?
Or will the very life take leave?
Ambulance is on the move for ever.
Always; everywhere….
3.
Huge crowds inside wine shops, hospitals – ever so.
In hospitals, however, men and women of all ages; even children-
Caught jam-packed within and without
Suffering acutely.
But, in the wine outlets
It is men alone mostly – very young, young,
Old, too old….
In hospitals human bodies
as bags full of ailments. swimming amidst
the sea of pains.
But, in bars bodies are afloat
Amidst flickering spells of light
People journey
Blissfully forgetting the pain.
Even from hospitals human bodies
Visit the wine shops
And safely return.
Are there a few
Who preserve so safely
That casket of the past
With blood and broken organs
That was once befitting
The term body….?
It bangs against the
Entire stretch of the
Hospital wall as thick
Sticky white rope
And stays glued.
As spider-web the rope
Sticks on unseen unheard
Oh, everyone goes past the sticky string of sound.
The ailing ones pushing them aside in pain
to make way and the healthy ones, so firmly.
The string of sound firm,
Unshaken
Rising above as a web
Attempts to entrap.
The bodies moving past
Elude its clasp and pierce through
Bodies everywhere….
All over the world
Bodies…bodies…
A pain-filled bag
Is being thrown off
Out of that body- all around.
Wail unbearable rising, oh! rising_
those from the placenta in the delivery room.
Sanitary napkins, shit, urine
And stinking bandage-clothes
And the hands that had to collect
All that and more…..
4.
Everyone is moving fast
Criss-crossing,
Holding the ailing ones
and going past those healthy
in between a stretcher being pushed towards a room
is lying atop the wheels.
An elderly pain-filled air-bag
Lies there, eyes blinking
Hands on its chest
Fear-filled, huddled in a wheel-chair.
With the person pushing it
some more pursuing
A crowd tries to get in.
In the hospital, inside the doctor’s cabin
pains innumerable lie in wait.
In an aged body competing with pain
proves unbearable.
The body gets ready to scream.
Familiar sounds; noises.
They don’t stir anyone there.
With the ailing one entering inside
And the small crowd too
Attempt to accompany
The ailing and just one more body alone
Are allowed inside.
The rest were denied permission.
Just wait for a while.
When their turn comes
The pain-filled and the painless
Bodies step in.
A young young man there
Handsome looking
His walk little hesitant,
Clothed in classic attires
With shoes and tie in tact,
Along with his friend
Enter the hospital.
And they wait for their turn
In the company of the small crowd
And many others.
In the hospital, at the
Entrance of the doctor’s cabin,
Till their turn comes
Sports, office, home,
Books read, things disliked
_ so though wished to talk at length
Everything,
With pain pricking every now and then,
Their faces twist
The shirt buttons are loosened a little
In an effort to inhale
Some more air that is everywhere.
Yet,
The aged, pain-filled body
Inside the doctor’s cabin
The small crowd restive in anticipation.
Nothing. Mere fear. With pain accompanying
Relief on the countenance of the Pain-filled bag.
Disappointment comes to prevail
In the small crowd.
5.
Next to go is the young man
Wearing shoe and tie.
Getting inside with his friend,
In a few minutes the place turned chaotic
in the hospital, inside the doctor’s cabin
The nurses and others releasing all buttons,
pressing the heaving chest
Takes him in a wheel chair
In the face of the friend accompanying
Fear widespread…
Whom all to tell? Which ones are important?
Telephone numbers?
Oh, I know nothing… what to do now?
Coupled with pain, fear and anguish
Grip him
Bringing the stretcher
they push ahead the body
upon the wheels in the hospital
from the doctor’s cabin.
In the hospital, in doctor’s cabin
Along with prescription – fear,
Fearlessness, agitation, disappointment
Are also being offered.
The number of years of our age
Keeps increasing equally for one and all.
According to one’s time, calculated beforehand
In months and years
As our intelligence can decipher – but
Death alone, disrupting this alignment destined
Just like air, chooses bodies as suits
Its whims and fancies.
I, as usual, remain
Observing everything
In utter helplessness.
Domestic violence, accidents, wars, communal riots
Arrogance, haughtiness, avarice,
Natural calamities are all set to
Turn pain-free bodies into pain-filled ones.
Empty; lifeless;
Then, hospitals become overcrowded.
With doctors and medicines proving scarce
Hale and healthy bodies, free of disease
Are converted into ailing ones – forcibly, simultaneously.
Screams filled with pain
And stinking smells, swell
Piercing the air
Everywhere.
(English Translation : Latha Ramakrishnan)
'கவிதை கையெழுத்தில் ' கிருஷாங்கினியின் கவிதைத்தொகுப்புவித்தியாசமாக உருவான விதம்
கவிதைகள் எனது, கையெழுத்து கணவருடையது.
1- நகர்ப்புறங்களில் பெரும்பாலும் நாம் வசிக்கும் இடங்கள் ஒரு பெரிய சதுரத்தில் உட்கட்டங்களாக, சிறு சதுரங்களை உள் அடக்கியதாக இருக்கிறது.
பெரும்பாலும் அறைகளின் இடையில் படிகள் கிடையாது. வாசலில் ஏறி வர படிக்கட்டுக்கள் இருக்காது. அடுக்ககங்களில் மாடிப்படிக்கட்டு ஏற வேண்டிய தேவையும் இருக்காது. மின்தூக்கிகள் இருக்கும். மின்தூக்கிக்குள் செல்லவும் கால்களுக்கு படிகள் தடையாக இருக்காது. சமதளம் எங்கும். தனிவீடுகளில் சில வாசல் படிகளும், பின் புறத்தில் செல்ல சில படிக்கட்டுகளும் இருக்கலாம்.
கடைகளுக்கோ மருத்துவமனைகளுக்கோ, கலியாண மண்டபங்களுக்கோ, கோவில்களுக்கோ செல்லும் போது அங்கு இருக்கும் அரை, ஒரு அங்குல மேடுகளில் ஏறக்குறைய எல்லோருமே தடுக்கிக் கொண்டு சிறிய அதிர்ச்சிக்கும் ஆளாவார்கள்.
கிராமங்களில் இன்னமும் வீடுகள் ஏற்ற இறக்கங்களுடன் இருப்பதைக் காணலாம்.
சிறு சதுரத்தை உள்ளடக்கிய குடிசைக்கும் கூட ஓரிரு படிகளும், சில மேடு பள்ளங்களும் அறையைப் பிரித்தெடுக்கும் விதமாக இருக்கும்.
நாங்கள் கும்பகோணத்தில் வாழ்ந்த, நூறாண்டுகளைக் கடந்த வீடு பலவகையில் உள்புறம் மாற்றங்களை உள்ளடக்கியது. சில படிகள். சிறு திண்ணை, பெரிய திண்ணை, சில படிகள், சில இறக்கங்கள், குறுகிய வழி, பரந்த வெளி, வானம் உள்ளே தெரியும் படியான திறந்த முற்றம், கிணற்றடி, அதன் பின், அதன் பின் என்று எதிர்பாராதபடி, எல்லாக் கோணங்களையும் உள்ளடக்கி இருக்கும். வாழ்க்கையைப் போலவே ஏற்றமும், இறக்கமும், கதவுகளற்ற ஆர்ச்சும், கம்பிகளுக்கிடையே திறந்த தெருவும், விரிந்தும், குறுகியும் இருக்கும்.
2. மொழி என்பது தோன்றி அது ஒரு வரையறைக்குள் வகுக்கப்பட்டு, மென்மேலும் செறிவு பெற இலக்கணம் போன்ற கட்டுகளையும் கொண்டதாக முழுமை பெற்று புழக்கத்தில் இருக்கிறது. எல்லோரும் எல்லோரிடமும் முழு சொற்றொடர்களாக எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட காலம் தற்போது சிறிது சிறிதாக மறைந்து கொண்டு வருகிறது. மொழி குறுஞ் செய்திகளாகவும், மின் அஞ்சலாகவும் வடிவெடுத்து இருக்கிறது. உச்சரிப்பைக் கொண்டே சொற்களும் வாக்கியங்களும் கையாளப்படத்தொடங்கியும் விட்டது. இன்னமும் இது தமிழுக்குள் நுழையவில்லை
எனினும் ஆங்கிலத்தில் B 4 U என்று படிக்கும் பொழுது அதன் பொருள் உணரப்பட்டாலும் கூட, எல்லா எழுத்துக்களையும் உபயோகப்படுத்தி முழுமையாக எழுதுவது, அதுவும் கையினால் எழுதுவது என்பது தேவையற்றது என்ற எண்ணமும் இளைஞர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. பள்ளிக் கல்லூரித் தேர்வுகளும், அதை எழுதும் மாணவர்களும் இன்னமும் கைகளால் எழுதும் முறைக்குள் அடங்கியவர்களாக இருக்கிறார்கள். பணிக்கான தேர்வு எழுதுபவர்களும் இருக்கிறார்கள். படிக்கும் பருவத்தில் எழுத்து வேலை இருக்கிறது. அதுவும் இல்லாவிட்டால் கைகளால் எழுதுவதற்கு தேவை இன்னமும் இல்லாமல் போயிருக்கும்.
கடித இலக்கியம், எழுதி வைத்த எழுத்துக்களின் மூலம் வரலாறு என்பது உலகில் எல்லா மொழிகளிலும் ஒரு பொக்கிஷமாக கண்டெடுக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன.
கையெழுத்துக்கு ஒரு முதன்மை கொடுத்து கவிதை நூல் ஒன்றைக் கொணரலாம் என்று நானும் என் கணவர் நாகராஜனும் முடிவு செய்தோம். ஏற்கனெவே பலராலும் கையாளப்பட்ட உத்திதான் இது என்றாலும் கூட, அதை அச்சேற்றி நூலாக்க முனைந்தோம்.
கவிதைகளைத் தேர்ந்தெடுத்த பின் அதை வரிசையாய் காகிதத்தில் பதிவு செய்தார் நாகராஜன். அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தவர். கையெழுத்தும் நன்றாக இருக்கும். மொத்தக் கவிதைகளையும் எழுதி, பின் அவற்றை சிறியவை, பெரியவை என்று பகுத்துக் கொண்டோம். பெரிய பெரியதாக தொடர்ந்து இருந்தால் கவிதை வாசிப்பில் சலிப்பேற்படலாம். மறுபடியும் கவிதைகள் சிறுதும் பெரிதுமாக அடுக்கி எழுதி, பின் கவிதைக்கான ஓவியங்கள், கவிதை சாராத உதிரி ஓவியங்கள், பொருள்தராத அழுகு படுத்தும் கோடுகள் என்று வரைந்து கொண்டார். கவிதைகளைப் பிரிக்க சங்கிலி போன்ற தொடர் கோடுகள் வரைந்தார்.
எழுத்துக்கள் மறுபக்கம் உறிஞ்சிவெளியில் தெரியா வண்ணம் தடித்த தாளில் ஒரோரு பக்கத்தையும் இருவருமாக வடிவமைத்தோம். அந்த அந்த வெற்று வெண் பகுதிகளில் கோட்டோவியங்கள் இடம்பெற்றன. ஒரு எழுத்து தவறானாலும் அந்த முழுத் தாளையுமே மறுபடியும் வடிவமைக்க வேண்டிவரும். டெலிட் செய்து மற்றொரு எழுத்தை மேலேற்ற முடியாது. இவ்வாறு, ஒரு ஆண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து பதிவு செய்தோம்.
பின் பக்கங்களைக் கணக்கில் கொண்டு (ஃபாரம்) மறுபடியும் முழுப் பக்கத்திற்குக் கோட்டொவியங்கள் வரைந்து இணைத்துக் கொண்டோம். உள்ளே முழுவதும் கருப்பு வெள்ளையில் இருப்பதால், அட்டையையும் கருப்பு வெள்ளையிலேயே வடிவமைத்தோம். முன் அட்டையில் இருப்பது, பின் அட்டையில் இருப்பது இரண்டுமே நாகராஜன் என்னை வெவ்வேறு பொழுதுகளில் வரைந்த ஓவியங்கள்.
கையெழுத்து மிகவும் சிறிய அளவிலாகி படிக்க முடியாமல் போய்விட்டால், என்ற எண்ணத்தில் நூலின் வடிவத்தையும் 1/4 க்ரவுன் அளவுகொண்டு சற்றே மாறுபட்ட அளவில் உருவாக்கினோம்.
எங்கள் பேராசைக்கு மிகவும் ஒத்துழைத்தார் சேகர் ஆஃசெட் உரிமையாளர். கோட்டொவியங்களும் எழுத்தும் மறுபக்கமும் ஊடுருவித் தெரியா வண்ணம் கெட்டித் தாளில் அச்சடித்துக் கொடுத்தார்.
தற்கால கணனி இதற்கு பெரிதும் உதவியது. அளவை சிறிது படுத்த, பக்கங்களை ஸ்கேன் செய்து அடுக்க என்று. 2007இல் நூலை வெளியிட்டோம்.
(நன்றி: கவிஞர் கிருஷாங்கினியின் முகநூல்)
கவிஞர் கிருஷாங்கினி தன் தாயாரும் மூத்த எழுத்தாளரும் கவிஞருமான பூரணி குறித்து….
பூரணி தோற்றம் 17-10-1913-மறைவு-17-11-2013
1913ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி, ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார், சம்பூரணமென்கிற எழுத்தாளர், பூரணி. அவர்கள் பெற்றோருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். அப்பா ராமசாமி அய்யர், தமிழ் பண்டிதர். பழநியில் 20 ஆண்டுகள் ஆண்கள் பள்ளியை தன் சொந்த பணத்தில் ஆரம்பித்து நடத்திவந்தார். பின் சொத்துக்கள் அழிந்துவிட்ட நிலையில் அந்தப் பள்ளியை அன்னிபெசண்டிடம் ஒப்படைத்து விட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். கணவனின் தமிழைக் கேட்டுக் கேட்டு தமிழ் செய்யுள்களுக்குப் பொருள் கூறும் அளவுக்குப் புலமை பெற்றவர்.
ராமசாமி அய்யர் (1864ல் பிறந்தவர் இவர்) எழுதிய தொல்காப்பியத்திற்கான எளிய உரை எங்கள் வீட்டில் 1964 வரை இருந்தது, அப்போது எனக்கு வயது 14, அந்த சமயம் நாங்கள் கணியூரில் வசித்து வந்தோம், கையெழுத்துப் பிரதியாக இருந்தது. என் அம்மா சம்பூர்ண அம்மாவுக்கோ அதை நூலாகக் கொண்டுவர விருப்பம். அக்காலங்களில் அது பெரியவிஷயம். தாத்தாவை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவரைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ‘மடித்து வைத்த துணி மடி, வீழ்த்துப் போட்ட துணி விழுப்பு' என்பாராம். கோவில்களுக்கு வேண்டிக்கொள்ளுதல் இறைவனிடம் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளுதல் போன்றவை தாத்தா காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிடையாது. பூரணி அம்மாவின் கொள்கைகளும் கருத்துக்களும் இதை ஒட்டியேதான் இருந்தன.
1927ல் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைத் தமிழில் கவிதை எழுத உபயோகித்தார் அம்மா. நாங்கள் ஒன்பது குழந்தைகள் அம்மாவுக்கு. ஓய்வு நேரம் எப்படிக் கிடைத்ததோ தெரியாது. அப்போது ஆரம்பித்த வாசிப்பும், எழுத்துப் பதிவும் இன்று வரை தொடர்கிறது. 85 ஆண்டுகளாக ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளையும் தனக்குத் தோன்றிய வடிவில் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ கண்டவை, கேட்டவை, என பதிவு ச்செய்துள்ளார். நாட்டுப்பற்று, சுதந்திரப் போராட்டம், காந்தி வந்தது, பெண் கல்விக்காக மெனக்கெட்டது, பெண்களுக்காக மாதர் சங்கம் நடத்தியது என்று தொடர்ந்து இயங்கி வந்து கொண்டிருக்கிறார். பாரதி கலைக் கழகத்தில் இணைந்து தனது மகன் கே.வி. ராமசாமியுடன் வீட்டில் கூட்டங்கள் நடத்தியது என, கவிதை பரிசு வாங்கியது என நிறைய நிகழ்வுகள். நவீன இலக்கியவாதிகளாக இருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் பலரையும் அம்மாவுக்குத் தெரியும், அவர்களின் எழுத்துப் பதிவுகளின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக. நேர் பேச்சும் உண்டு.
‘ஸ்பேரோ' (sparrow) அமைப்புக்காக அம்மாவை ‘அம்பை' நேர்காணல் செய்ய வந்திருந்தார். ‘அம்பை' அம்மாவின் பேச்சிலும், எழுத்திலும் ஒரு பொறியைக் கண்டார். தனது நூல் காலச்சுவடு பதிப்பகம் மூலம்தான் முதலில் வர வேண்டும் என்று அம்மா விரும்பினார். ஏற்கனெவே, எஸ்வி.ராமகிருஷ்ணன் மூலம், சுந்தர ராமசாமியைக் கேட்கச் சொல்லியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ‘அம்பை'யின் முயற்சியாலும், முன்னுரையாலும், அம்மாவின் முதல் புத்தகம் (அம்பை அம்மாவின் தன் வரலாறு போடலாம் என்றார். ஆனால் அம்மாவோ தன் கவிதைத்தொகுதி காலச்சுவடு மூலம் வெளிவர வேண்டுமென்று விரும்பினார்.) அவரது 90வது வயதில் -2003ஆம் ஆண்டு- “பூரணி கவிதைகள்” நூல் ‘காலச்சுவடு' வெளியீடாக வந்தது. அம்மாவும் நானும், இன்றுவரை அதை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூல் பரவலான கவனத்தையும், அதற்கான பணத்தையும் ‘காலச்சுவடு' மூலமாக நிறையவே பெற்றுத் தந்தது. (அதுவே ஒரு தவறான புரிதலுக்கும் காரணமாயிற்று மற்ற உறவினருக்கு. இப்படித்தான் நிறைய பணம் கிடைக்கிறது இலக்கியம் மூலமாக என்ற எண்ணமும் ஏற்பட்டுவிட்டது.) அதற்கு முன்னதாகவே நானும், என் கணவர் நாகராஜனும் அச்சிலும், இண்டெர்நெட் குழுமங்களிலும் அம்மாவின் படைப்புக்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.
“பூரணி நினைவலைகள்” (அவரது தன்வரலறு) எங்கள் சதுரம் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தோம். (2005) பின் சில காரணங்களினல், மணிவாசகம் பதிப்பகம் மூலம் அம்மாவின் சிறுகதை தொகுப்பு ‘பூரணி சிறுகதைகள்” (2009) என்னும் தலைப்பில் வெளிவந்தது. அம்மா, தன் பாட்டிகளிடம் கேட்ட சிறுவர் கதைகளையும், தான் வடிவமைத்து தன் குழந்தைகளுக்கும், பெயரர்களுக்கும் சொல்லிய கதைகளையும் இணைத்து என்னிடம் 2008ம் (200 பக்கங்களுக்கு) ஆண்டு நோட்டில் எழுதி கொடுத்தார். அண்மையில் வசந்தா பதிப்பகம் மூலம் அம்மாவின் “செவிவழிக் கதைகள்” நூல் வெளியாகி உள்ளது. அவர் தனது எல்லா படைப்புக்களையும் கால வரிசைப்படி தொகுத்து நோட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளார். 1937ல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சித்தன்' இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘பாரத ஜோதி' இதழ்களிலும் அம்மாவின் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.
அக்கால திருமணப் பாடல்களைத் தன் சொந்த வடிவத்தில் பாட்டுக்களாக இயற்றி, தொடங்கி இருக்கிறார் தன் கவிதை வெளிப்பாட்டை. பின் அதே பாடல்களில் தேசியத்தை கருப்பொருளாக்கினார். 1936-38 களில் மகளிருக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் படித்துக் கொண்டும் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், வாஜ்பேயின் கவிதைத் தொகுதியை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். படித்துவிட்டு, அந்தக் கவிதைகளை மொழிமாற்றம் செய்து கொடுத்தார். வாஜ்பேயின் கவிதைகள் மரபு சார்ந்தவை எனவே அதை மரபுக் கவிதைகளில்தான் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று அழகாக செய்தார். அம்மாவுக்கு மறதி என்பதே கிடையாது. இன்று அவரின் ஒரு நோட்டு தொலைந்துவிட்டது என்று சொன்னால் அந்த நோட்டில் இருந்தவற்றை வரிசை தப்பாது அனைத்துக் கவிதைகளையும் மறுபடியும் எழுதி கொடுத்துவிடுவார். அதனால், தன் படைப்புக்களில் பத்திரிகை ஆசிரியர்கள் சிறு மாற்றம் செய்திருந்தாலும் உடனே சொல்லிவிடுவார். அந்த சொல்லை தான் உபயோகித்ததற்கான காரணத்தையும் கூறுவார். ‘சென்னை சங்கமம்' நிகழ்ச்சி 4ல் தானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டார். மேடையேறி கவிதையும் வாசித்தார்.
2004ம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருதும், 2007ம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் வழங்கிய தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும் பெற்றார். எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனின் இலக்கிய கூட்டமான ‘அக்கறை'யிலும் பங்கு பெற்று பாராட்டையும் பெற்றிருக்கிறார். கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி என்று இலக்கிய இதழ்களில் பலவற்றிலும் இலக்கிய பங்களிப்பு செய்திருக்கிறார். ‘திண்ணை' இன்டெர்நெட் இதழ்களிலும் அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
நாட்டுப் பற்றும், காந்தி மீது மரியாதையும் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் மீது பக்தியும் கொண்டவர். எங்களை விவேகானந்தரின் படத்தின் முன்னால் நின்று ‘பொய் சொல்லவில்லை நான் சொல்வது உண்மைதான்' என்று சொல்லச் சொல்லுவார். பொய் சொல்லியிருந்தால் நாங்கள் திரும்பவும் உண்மையை மட்டுமே கூறுவோம் அந்தப் படங்கள் மீது அவ்வளவு பக்தியும் மரியாதையும் எங்களுக்கு உண்டாக்கி இருந்தார்.
இன்று அதிகாலை 2மணி அளவில் நிறைவாழ்வு வாழ்ந்த ‘பூரணி' என்னும் சம்பூர்ணம் அம்மாள் கைலாயப் பதவி அடைந்தார்.
'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர்: லதா ராமகிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.