- தகவல் உதவி - விக்கிபீடியாமூலம் (சிங்களமொழியில்) - தர்மசிறி பண்டாரநாயக்கவின் 'ஏகா அதிபதி' நாடகத்தின் ஒரு பகுதி.\தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -
நீ காண்டாமிருகம் போன்ற ஒரு மிருகமென உன்னைப் பார்த்த நாளிலேயே நினைத்துக் கொண்டேன். பால் குடித்து வளர்ந்தாலும் அது மிகப் பயங்கரமான மிருகம். ஆனால் அதன் கொம்பு உடையும் நாளில், அதன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும் என்பது அதற்குத் தெரியாது. இந்தக் கொஞ்ச நாளாக நீ என்ன செய்தாய்?'
' நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் போலச் செய்தேன்'
' நாட்டின் உயிரைக் காப்பாற்றவென்று நீ முன்வந்த நாளிலிருந்து போகத்தொடங்கியது எனது ஊர்'
' நீங்கள் என் மீது குற்றம் சுமத்தினாலும், நாட்டு மக்கள் என் பக்கம்தான் சார்ந்திருக்கிறார்கள்.'
' அழிவு ஆயுதங்களைக் காட்டினால் அந்த சார்பு நிலையை இல்லாமலாக்க முடியும்'
' ஆனால் அழிவு ஆயுதங்களால் செய்ய முடியாதவற்றைத்தான் நான் செய்திருக்கிறேன்'
'ஆயுதங்களால் செய்ய முடியாதென்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆயுதத்தை நெஞ்சில் வைத்து எந்தவொரு மனிதனிடமிருந்தும் என்னால் வேலை வாங்க முடியும்'
' வேலை செய்யும் மனிதனின் நெஞ்சில் ஆயுதத்தை வைத்தவுடன் அது வெகுண்டெழத் தொடங்கிவிடும். வேலை செய்யும் மனிதன், தன் உடலைப் பாவிப்பதற்கு எப்பொழுதும் அவனது மூளை நிதானமாக இருக்க வேண்டும்'
' மூளை? அதன் அழகைப் பார்த்திருக்கலாமடா எல்லோருடைய மூளையும் வெளியே அமைந்திருந்தால். இருப்பவன் யார், இல்லாவன் யார் என்பதைக் கண்ட உடனேயே என்னால் சட்டென்று பிடித்திருக்க முடியும்'
' மூளை வெளியே இல்லாது போனாலும், இன்று மனிதனுக்கு வெளியே இருப்பவைகளை வைத்து ஒரு தீர்மானத்தில் இறங்கமுடியாது. நானும் உங்களிடமொரு கேள்வி கேட்கிறேன். என்னைச் சிறைப்படுத்துவதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் சேவை என்ன?'
'கடமையாயிருந்தாலும் அதை அளவுக்கதிமாகச் செய்ய முற்படும் எவனாக இருந்தாலும், அவனைப் பற்றிக் கொஞ்சம் தேடிப் பார்ப்பது என்பது சந்தேகம் நிறைந்த ஒரு நிர்வாகியின் புத்திசாலித்தனமான வேலை'
' நான் எந் நேரத்திலும் செத்துப் போகத் தயார், செய்ய வேண்டிய சில கடமைகளைச் செய்து முடித்ததன் பின்னர்'
' தண்ணீர் நின்று விடும்போது, இன்னும் இரண்டு மாதம் கடந்தால், நீ இங்கிருப்பாயா என்ன?'
' நான் அந்த எதிர்பார்ப்போடு வேலை செய்யவில்லை'
' எதிர்பார்ப்பொன்றும் இல்லாமல் வேலையில் இறங்குபவனுக்கு, வேலையில் முன்னேற்றம் காணும்போது, தலையால் ஒளிக்கதிர்களைப் பரப்பிட எண்ணத்தோன்றும். ஒருநாளும் நினைக்கவில்லையல்லவா நீ சாவதற்கு?'
' பிறந்ததிலிருந்தே செத்துக் கொண்டு வாழ்ந்ததால், புதிதாக மரணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமொன்றும் எனக்கிருக்கவில்லை'
' உன்னைப் போல ட்ரான்ஸிஸ்டர்கள் மூலமாக வேலை செய்த வீரர்கள் உலக வரலாற்றிலும் இருக்கிறார்கள். நீ திடீரென இறந்துவிட்டால், சகோதர மக்கள் ஒன்றாக மோதி மோதி அழுவார்கள். அவர்களது கண்ணீரெல்லாம் சேர்ந்து, திரும்ப வெள்ளப் பிரளயமொன்றை ஏற்படுத்தக் கூடும். சும்மா நாங்கள் அதைப் பரீட்சித்துப் பார்ப்போமா?
' பரீட்சித்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நாங்கள் அழுதாலும் இப்பொழுது கண்ணீர் வருவதில்லை'
' நரம்புகளெல்லாம் இறுக்கமாகக் காய்ந்திருக்கும்'
' காயாமல் இருந்தவை எங்கள் நரம்புகள் மாத்திரம்தான்'
' உங்களது நரம்புகள் காயக் காயத்தான் எனதுடலுக்கு எப்பொழுதும் உயிர் வருகிறது'
' எங்களுக்கு இல்லாமல் போகவென்று ஏதுமில்லை உத்தமமானவரே'
' வாயை மூடு. இன்னொரு நாள், சூரியன் மறையப் போகும் மாலை நேரம், நான் உன்னை சந்திப்பேன். அன்றுதான் நீ என்னைப் பார்க்கும் கடைசி நாள். அதுவரை பிரிவுப் பாடல்களைப் பாடிக் கொண்டிரு. இங்கிருந்து எதிர்காலத்திட்டங்கள் செல்லுபடியற்றதாகிறது. இப்போது குந்தியிருந்தவாறு உன் கடந்தகாலத்தை யோசி. வீர மக்கள் அநேகம்பேர் சிறைச் சாப்பாடு நன்றாகச் சாப்பிட்டிருப்பதால், உனக்கும் அவை கஷ்டமளிக்காது என நினைக்கிறேன். செருப்புக்குப் பொருத்தமாக பாதத்தை வெட்டியிருந்தால் இவை எதுவுமே இல்லைதானே'
ஏகா அதிபதி நாடகம் குறித்து...
தர்மசிறீ பண்டாரநாயக்கவினால் எழுதி, இயக்கப்பட்ட 'ஏகா அதிபதி' மேடை நாடகமானது 1976 இல் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டு, அவ் வருடத்துக்கான சிறந்த நாடக விருது, சிறந்த நடிகருக்கான விருது ஆகிய விருதுகளை உள்ளடக்கிய 8 விருதுகளை சுவீகரித்துக் கொண்டது. அரசியல் சர்வாதிகாரத்தை விபரிப்பதாக உள்ள இந் நாடகம் 1976 முதல் இன்று வரை 1400க்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்டு வெற்றிகண்டுள்ளது.
தர்மசிறீ பண்டாரநாயக்க
தனது கலையுலக வாழ்வை நாடகங்களில், திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் ஆரம்பித்தவரும் திரைப்பட-நாடக நெறியாளராக அறியப்பட்டவருமான தர்மசிறி பண்டாரநாயக்க (Dharmasiri Bandaranayake : Drama & Film Director Script writer Producer) இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் வேவிற்ற என்ற இடத்தில் 06.10.1949 இல் பிறந்தார். இவரது surname நீலப் பெருமாள் (Kalukapuge)
இவர், தானே எழுதி இயக்கிய முதல் நாடகமான ‘ஏகா அதிபதி’ 1976 இலிருந்து இன்று வரை 1400 இற்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்டுள்ளது. பிறமொழியில் அமைந்த நாடகங்களின் சிங்கள வடிவத்தினை அனேக தடவைகள் மேடையெற்றி தேசிய நாடகவிழாவில் சிறந்த நாடக இயக்குனர் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இவரது, இறுதியாக வெளிவந்த திரைப்படமான ‘பவதுக்க’ - பௌத்த நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகள் - யுத்தம் குறித்து, அனைத்துமே விதிப்படி என்ற பௌத்த சித்தாந்தத்தின் மீது கேள்வியை எழுப்பியிருந்தது.
A-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து இதுவரை 4 சிங்களத் திரைப்பட விழாக்களை நண்பர்களின் உதவியுடன் நடாத்தியுள்ளதுடன் அங்கு சிங்களநாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். வட-கிழக்கு கலைஞர்களை, மக்களைச் சந்தித்து தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான நாட்டுக்கூத்து , வில்லுப்பாட்டு, கிராமிய-நாட்டுப்பாடல்கள், இசை, நடனம் இவற்றைப் பார்வையிட்டும் கேட்டும் வியப்படைந்து வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்தில் நாடகத்திற்குரிய மிகவும் வலுவான கூறுகள் (strong theatrical elements) இருப்பதையும் நாட்டார் இசையிலும் நடனத்திலும் வலுமிக்க நாடகத்திற்குரிய உருவங்கள் (strong theatrical images) இருப்பதையும் இனம் கண்டு அவற்றை விடியோ செய்ய ஆரம்பித்தார். பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் நாட்டக்கூத்தையும் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்தான தர்ம யுத்தத்தையும் விவரணப்படமாக்கி ஆங்கில உபதலைப்புக்களுடன் னஎன வடிவில் ஆவணப்படுத்தி தமிழர்கள் செய்திருக்க வேண்டிய ஒரு அரும்பணியை ஆற்றியுள்ளார்.
தர்மசிறி, இந்தியாவில் நடைபெற்ற இராமாயண நாட்டுக்கூத்துத் திருவிழாவிற்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் கேரளா, தமிழ்நாடு சென்று கலைஞர்களுடன் உரையாடி அங்குள்ள கூத்துவகைகளைப் பற்றி அறிந்ததன் வாயிலாக கதகளியையும் சிங்கள நடனத்தையும் இணைத்து இராமயணத்தை சிங்கள மொழியில் தயாரித்துள்ளார்.
சிங்கள நடனவகையிலும் இந்தியாவில் உள்ள நடனவகையிலும் காணப்படும் ஒத்த தன்மைகளை இணைத்து ஆசியாவிற்குரிய பாரம்பரியத்தகை கொண்ட கலை படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.