பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோ 2014ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோடியானோவின் "தொலைந்த மனிதன் (Missing Person)' நாவல் இப்பரிசினைப் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, நாஸிக்களின் ஆக்ரமிப்பு வன்முறையால் பிரான்ஸ் அடைந்த துயரங்களைக் குறித்த விரிவான ஆய்வுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் பேட்ரிக் மோடியானோ., பிரெஞ்சு நாட்டை ஜெர்மனியின் நாஸிப் படைகள் இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம்வெளிப்படுத்தி யுள்ளார்.. அன்னிய ஆக்கிரமிப்பின் பிடியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மோடியானோவின் எழுத்துகள் அச்சு அசலாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன .அதன்மூலம், யாரும் புரிந்து கொள்ள முடியாத உலகுக்கு மனித உணர்வுகளை இட்டுச் செல்லும் கலை நயத்துக்காக மோடியானோவிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று ஸ்விடனில் இருக்கும் நோபல் பரிசு தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் பிரஞ்சு படைப்பாளிகளின் வரிசையில் மோடியானோ 11 ஆவது நபராக இடம் பெறுகிறார்.
யூதர்களின் துயரங்கள், நாஜிக்களின் கொடுமை, சமூக அடையாள இழப்பு ஆகியவையே பெரும்பாலும் இவரது நாவல்களின் கருப்பொருள்களாக அமைந்துள்ளன. ஜெர்மனியின் ஆளுகையின் கீழிருந்த பிரான்ஸைப் பற்றி அதிகம் பேசுவதாகவும் அடையாளம், நினைவுகள் மற்றும் குற்ற உணர்ச்சி போன்றவற்றுக்கு இவரது படைப்புலகம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. தனது ஞாபகசக்தியை இழக்கும் ஒரு துப்பறியும் நிபுணரைப் பற்றிய கதை இது.
கடந்த 1978ஆம் ஆண்டு எழுதிய ‘மிஸ்ஸிங் பெர்சன்’ என்ற நாவலுக்காக ப்ரிக்ஸ் கோன்கோர்ட் பரிசை பெற்றார் மோடியானோ. இதுவரை பிரெஞ்சு மொழியில் நாற்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார்.. இவரது பல படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள போதிலும், பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே மோடியானோ பரவலாக அறியப்படாத ஒரு படைப்பாளியாகவே இருந்திருக்கிறார். 2012ல் சிறந்த ஐரோப்பிய இலக்கியத்திற்கான ஆஸ்திரிய அரசின் விருதைப் பெற்றார்.
1968-இல் வெளியான இவரது "லா பேலஸ் டீ லெடோல்லே' என்ற பிரெஞ்சு நாவல், யூதப் படுகொலைகள் குறித்த மிக முக்கியமான பதிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மோடியானாவின் "ரிங் ஆஃப் ரோட்ஸ்',( Ring of Roads) "வில்லா டிரைஸ்ட் (Villa Triste )', "தி டிரேஸ் ஆஃப் மாலிஸ்'( A Trace of Malice) "ஹனிமூன்(' Honeymoon) உள்ளிட்ட பல நாவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து இரு மாதங்களான பிறகு, மேற்கு பாரிசில் உள்ள ஒரு புறநகர் பகுதியில் 30 ஜுலை1945 இல் பேட்ரிக் மோடியானோ பிறந்தார். இவரது தந்தை, யூத மதத்தைச் சேர்ந்த இத்தாலியர். இவரது தாய் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நடிகை.தற்போது மோடியானோவிற்கு 69 வயது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.