தகவம் சிறுகதை பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். பல மாத உழைப்பிக்கிற்கு பின்னர் இன்று தகவம் குழவினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். தகவம் அமைப்பானது இலங்கையில் சிறுகதை வளர்ச்சியை உக்குவிப்பதை நோக்கமாகக் 1975 களில் உதயமானது. தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, தமிழ்ச் சிறுகதைகளை நூலாக வெளியிடுவது போன்ற நோக்கங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை அதன் பணிகளைத் தொடர்கிறது. நாட்டு நிலமைகள் காரணமாக இடையிடையே தொய்வுகள் எற்பட்டபோதும் தனது பணியினை இயன்றவரை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது. இலங்கையில் ஏராளமான தினசரிகள், சஞ்சிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிற்றிதழ்களும் வருகின்றன். இவற்றையெல்லாம் தேடி எடுத்து அவற்றில் கடந்த இரு வருடங்களாக வந்த சிறுகதைகளைப் படித்து, மதிப்பீடு செய்து, தேர்வு செய்வது இலேசான விடயம் அல்ல. கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு செய்யப்பட்ட மதிப்Pடு இது. வசந்தியும் தயாபரனும் முழு முயற்சி செய்து தேடி எடுத்த சில நூறு சிறுகதைகள் இவை. கண்ணில் படாது தப்பியிருக்கச் சாத்தியங்கள் இல்லை. இருந்தபோதும் எங்காவது தவறு நேர்ந்திருக்கக் கூடும என்பதை மறுக்க முடியாது.
முழுக்கதைகளும் வாசிக்கப்பட்டு அவற்றில் ஓரளவு நல்ல கதைகள் முதல் கட்டத்தில் வடிகட்டி எடுக்கப்பட்டன. இரண்டு வருடத்தில் சுமார் 400 சிறுகதைகள் வெளிவந்திருக்கும். அவற்றில் ஒவ்வொரு காலண்டிற்கும் சுமார் 10 கதைகள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டன. இவை மீண்டும் தீவிர பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. கதையின் கரு, சித்தரிப்பு முறைமை, கலைத்துவ வெளிப்பாடு, மொழி நடை, ஒட்டுமொத்த தாக்கம் போன்ற அம்சங்கள் புள்ளிகள் இடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் பெற்ற புள்ளிகளுக்கு எற்ப படைப்புகள் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்கள் அளிக்கபட்டன.
இருந்தபோதும் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதை தகவம் கவனத்தில் கொள்கிறது. இதன் காரணமாக சாஹித்திய பரிசு பெற்றவர்கள், வேறு பல போட்டிகளில் பரிசுகள் பெற்றவர்கள், தகவத்தில் முன்பு பரிசுகள் பெற்றவர்கள் எனத் தேசிய ரீதியாக அங்கீகாரம் பெற்று, தங்களை எழுத்துலகில் நிலை பெறச் செய்தவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதைத் தவிர்க்கிறது. அவர்கள் சிறப்புப் பராட்டு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை அமரர் இராசையா மாஸ்டர் காலம் முதல் பின்பற்றப்படுகிறது
உதாரணம் சொல்வதானால் இம்முறை 'மாறுதல்' என்ற சிறுதைக்காக சிறப்புப் பாராட்டுப் பெறும் தேவமுகுந்தனைச் சொல்லலாம். இளம் எழுத்தாளர் என்றபோதும் தனது எழுத்தாளுமையை சிறுகதை உலகில் பதித்து பரவலான பாராட்டுப் பெற்றவர் தேவமுகுந்தன். ஆரம்பக் காலத்திலேயே தகவம் அவருக்கு பரிசு அளித்து கௌரவித்திருக்கிறது. 2008ம் ஆண்டு இவர் எழுதிய 'வழிகாட்டிகள'; சிறுகதைக்கு தகவம் பரிசளித்திருக்கிறது. சாஹித்திய பரிசு, வடக்கு மாகாண சபையின் பரிசு, செம்பியன் செல்வன் ஞாபகார்த்த பரிசு, அவுஸ்திரேலிய தமிழ் கலை இலகிய சங்கப் பரிசு எனப் பல. இவ்வாறு அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர் என்பதால் அவருக்கு பரிசு கொடுக்கபப்படாது சிறப்புப் பாராட்டை தகவம் வழங்கியுள்ளது.
இவற்றைத் தவிர மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கவும் செய்கிறது. தெளிவத்தை ஜோசப், எஸ்.எல்.எம் ஹனீபா, இன்று கோகிலா மகேந்திரன் எனப் பலர் இவ்வாறு சிறுகதைத் துறைக்கு அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்ட்டுள்ளார்கள். இதைத் தவிர மறைந்த எழுத்தளரான அமரர்.சி.வி.வேலுப்பிள்ளை பற்றிய நினைவுரை நடைபெற்றதும் அத்தகைய அங்கீகாரத்தில் அடங்கும்.
இருந்தபோதும் புதிய எழுத்தாளர்களை இனங் கண்டு அவர்களுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பதையே தகவம் தனது முக்கிய பணியாகக் கருத்துகிறது. அதன் மூலமே ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பானவையாக, உலக அங்கீகாரம் பெறத்தக்கவையாக வளர முடியும். சினிமா, சீரியல் நாடகம், கணனி, ஐபோன் என வேறு வழிகளில் மூழ்கிக் கிடப்பவர்களை சிறுகதையின் பக்கம் திருப்ப முடியுமாயின் அதுவே மகத்தான பணியாக இருக்கும்.
திருமதி இந்திராணி புஸ்பராஜா எனக்குப் புதிய படைப்பாளி. இம்முறை தனது படைப்பு ஒன்றிற்காக முதல் முறையாக பரிசு பெறுகிறார். செங்கதிர் சஞ்சிகையில் அவர் எழுதிய 'கற்பெனப்படுவது' என்ற சிறுகதை 2012ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு பரிசு பெறுகிறது. அது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பரவலாக அறியப்படாத அவர் தனக்குப் பரிசு கிடைத்தமை பற்றி அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்து ஊக்கம் பெற்றிருக்கிறார். இதை அவருடன் தொலைபேசியில் கதைத்தபோது தான் உணர்ந்ததாக வசந்தி தயாபரன் கூறினார். தகவம் தனது குறிக்கோளை எட்டிவிட்டது என என்னால் உணர முடிந்தது.
அதேபோல வல்வை நெற்கொழுதாசன், கிரிஸ்டி முருகுப்பிள்ளை, எஸ்அரசரத்தினம் போன்றவர்களும் அண்மைக் காலத்தியே எமது வாசிப்புப் பரப்பில் வந்திருக்கிறார்கள். இவர்கள் பரிசு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. 'ரகசியத்தின் நாக்குகள்' என்ற தனது கவிதைத் தொகுதி மூலம் அண்மையில் வாசகர்கள் பார்வையை தன் பக்கம் இழுத்தவர் நெற்கொழுதாசன். வேளிநாட்டில் வசிக்கும் வல்வை ஊர் படைப்பாளி அவர்.
அதே நேரம் ஏற்கனவே சிறுகதைப் படைப்புலகில் ஏற்னவே தமது இருப்பை புலப்படுத்தியிருக்கும் சிவனு மனோகரன், ராணி சீதரன், முருகேசு இரவீந்திரன், இராஜேஸ் கண்ணன், சமரபாகு சீனா உதயகுமார், கே;.எஸ்.சுதாகர், கிண்ணியா சபருள்ளா, ஆகியோரும் தலா ஒவ்வொரு பரிசு பெற்றுள்ளார்கள.
இருந்தபோதும் சிலர் பல பரிசுகள் பெறுவதையும் அவதானிக்க முடிகிறது. உதாரணமாக வி.ஜீவகுமாரன் 4 பரிசுகளையும். தாட்சாயணி 2 பரிசுகளையும். சமரபாகு சீனா உதயகுமார் 2 பரிசுகளையும் பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது. இது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அவ் அவ் காலாண்டுகளில் தேர்ந்தெடுக்கக் கூடிய சிறந்த கதைகளை எழுதியிருந்தமையால் அவ்வாறு நேர்ந்தது. இவர்களுள் மேலை நாட்டில் வசிக்கும் நம்மவரான வி.ஜீவகுமாரன் அதிகமாக எழுதுவது மட்டுமின்றி கவனித்து வாசிக்கப்பட வேண்டியவராகவும் இருக்கிறார்
சிறுகதைகளைப் பொறுத்தவரையில் ஜீவகுமாரனின் வித்தியாசமான எமக்கு அந்நியமான புலத்தைச் சேர்ந்தவை. சூழல் வேறு, பிரச்சனைகள் வேறு, அத்துடன் கலாசார முரண்பாடுகளில் சிக்கித்தவிக்கும் மாந்தர்கள் பற்றிவை என்பதால் ரசிக்க முடிகிறது. நிறைய எழுதுகிறார். சிலவேளைகளில் ஒவ்வொரு மாதமும். ஆயினும் சலிப்புத்தட்டாமல் வாசிக்க முடிகிறது.
மாறாக தாட்சணியின் படைப்புகள் எமக்குப் பரிச்சயமான புலத்தில் நடப்பவையாகும். ஆயினும் அவை வெறும் கதைகள் அல்ல பாத்திரங்களின் உணர்வுகள் ஊடாக நகர்த்தப்படுபவை. கூர்மையான அவதானிப்பும் ஆழமான நடையும் அவரது சிறப்பு.
சீனா உதயகுமாரும் எமக்குப் பரிச்சமான சூழலில் எழுதினாலும் சற்று வித்தியாசமாக எழுதுகிறார். அடிக்கடி படிக்கக் கிடைத்தாலும் சற்று வித்தியாசமாக எழுதுகிறார். ராஜேஸ் கண்ணனும் அவ்வாறே. மரணவீட்டில் சுன்னப் பாட்டு எமது பாரம்பரிய வழக்கம் எவ்வாறு இன்று மறைந்தழிந்து போகிறது என்பதை உணர்வு பூர்வமான படைப்பாகத் தனது பரிசுக் கதையில் தந்திருந்தார்
மிகக் குறைவாக எழுதுபவர் சித்தாந்தன். கவிஞனான அவரது 'நூறாயிரம் நுண்துளைகளால்..' கதை மிகவும் வித்தியாசமானது. கலைமுகத்தில் வெளியான அப் படைப்பு ஒரு படைப்பாளி பற்றிப் பேசுகிறது. அதன் கருவை விட அது சொல்லப்பட்ட விதம் அற்புதமானது. வழமையான இலங்கைப் சிறுகதை படைப்பாக்க முறையில் இருந்து மாறுபட்டு, கவித்துவமமான நடையில் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் கூற முடியுமானாலும் கால அவகாசம் இல்லாததால் மற்றைய படைப்புகள் பற்றி பேசவில்லை.
பரிசு பெற்ற 21 கதைகளில் 10 சிறுகதைகள் ஞானம் சஞ்சிகையிலும், நான்கு சிறுகதைகள் ஞாயிறு தினக்குரலிலும் வெளியாகியுள்ளன. கலைமுகம,; வீரகேசரி ஆகியவற்றில் தலா இரண்டு பரிசு பெற்ற சிறுகதைகள் வெளியாகியுள்ளன. ஜீவநதி, சுடரொளி, செங்கதிர், ஆகியவற்றில் தலா ஒவ்வொரு பரிசு பெற்ற சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
இவற்றையெல்லாம் இங்கு கூறுவதற்குக் காரணம் தகவம் பரிசுகள் படைப்புகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகின்றனவே ஒழிய யார் எழுதினார, எதில் எழுதினார்; ஆகியவற்றை நோக்காகக் கொண்டு அல்ல என்பதை வலியுறுத்தவே.
இதன் காரணமாகவே பொருத்தமான பரிசு பெறக் கூடிய சிறந்த சிறுகதைகள் கிடைக்காத காரணத்தால் 2012 காலாண்டில் இரண்டு பரிசுகளும் 2013ல் ஒரு பரிசும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும் சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் சிறப்பாக இருப்பதும் வேறு சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் சொல்லும்படியாக இல்லாதிருப்பதையும் உணரக் கூடியதாக இருக்கிறது. சில விமர்சகர்கள் இதைச் சுட்டிக் காட்டவும் செய்கிறார்கள்.
இதற்குக் காரணம் என்ன? பத்திரிகைகளில் வெளியாகும் அனைத்து சிறுகதைகளின் தரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் அற்புதமாக இருக்க ஏனைய காலாண்டுகளில் அவை சாதாரண தரத்தில் இருந்தால் இது பரிசுத் தேர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அமரர் இராசையா அவர்கள் தகவம் பரிசளிப்பு சிறுகைத் தொகுப்பிற்கான முன்னுரையில் இதை 'மதிப்பீட்டு விழு' எனச் விளக்குவதை அவதானிக்க முடிகிறது.
தகவத்தின் பரிசு வழங்கும் இந்தச் செயற்பாட்டால் கிடைக்கப் போகும் பெறுபேறுகள் எவை?
வந்த படைப்புகள் பற்றிய பொது மதிப்பீட்டைச் செய்ய முடியும். அவற்றில் இருந்து சில அவதானங்களை மேற்கொள்ள முடியும். அதன் தொடர்ச்சியாக சிறுகதை இலக்கியம் வளரச்சியடைவதை நோக்கமாகக் கொண்டு செய்ய வேண்டியவற்றைச் சிந்திக்க வேண்டும்.
இலங்கைச் சிறுகதைகளின் தோற்றம் 30களில் ஆரம்பிக்கிறது. பல்வேறு ஆளுமைகள் வருகிறார்கள்
60களில் நவீனத்தன்மையுடைய சிறுகதைகள். பன்முக பரிமாணத்துடன் எழுதப்பட்டன.
இப்பொழுது பெரும்பாலும் ஒற்றைப் பரிமாணக்க கதைகள் பெரும்பாலானவை யுத்தத்தைப் பேசுபவை மற்றவை வறுமையைப் பேசுபவை. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை கொண்டு வருவது குறைவு.
இன்றைய பல புதிய எழுத்தாளர்களுக்கு கடந்தகாலப் படைப்புகளுடனான பரிச்சயம் குறைவு. தானும் தன்னைச் சுற்றிய 4 பேருடைய படைப்புகள் தவிர்ந்த பரந்த வாசிப்பு அதிகம் இல்லை. எமது இலங்கையர்கோனையும் சம்பந்தனைப் பற்றியும் தெரியாது. தமிழக்கத்தின் புதுமைப்பித்தனையும் மௌனியையும். லாசாராவையும் ஜெயகாந்தனையும் படித்தது கிடையாது.
இதனால் சிறுகதை ஆக்கம் பற்றிய பரந்த அறிவும் பரந்துபட்ட அனுபவமும் குறைவு. அவுஸ்திரேலியாவிலிருந்து ஆ.சி.காந்தராஜாவும் கனடாவிலிருந்து அ.முத்துலிங்கமும் உலகம் சுற்றியதால் தங்களுக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவங்களை தமிழில் சிறுகதைகள் ஊடாகத் தருவதும் நாங்கள் அவர்களது எழுத்துக்களை ஆர்வத்தோடு படிப்பதற்கு காரணமாகின்றன.
ஆ.சி.காந்தராஜா தனது தாவரவியல் அறிவைக் கொண்டு மாம்பழத்தை பற்றி எழுதும் போது அங்கு சீனா ஆபிரிக்கா என பல கண்டங்களைத் தாண்டும் ஆச்சரியமான அனுபவங்களைத் தருகிறார். மிருக வைத்தியரான நடேசன் சிறுகதை நாவல் போன்ற தனது படைப்புகளில் தனது துறை சார்ந்த அனுபவங்களையும் ஆங்காங்கே கலந்து தந்து ஆர்வமாகப் படிக்க வைக்கிறார். இருந்தபோதும் பல புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஈழத்துடனான தங்கள் பழைய நினைவுகளைவிட்டு விலக முடியாது திணறுகிறார்கள்.
அத்துடன் இலக்கியம், சமூகவியல், உளவியல் என பரந்தும் கூர்ந்தும் பல படைப்பாளிகளால் பார்க்க முடியாதுள்ளது. சிறுகதை என்பது வெறுமனே கதை சொல்வது அல்ல என்பதைப் பலரும் புரிந்து nhகள்வதில்லை. புதிய மொழி புதிய கரு புதிய நடை என தமக்கென ஒன்றை உருவாக்க பலராலும் முடியாதிருக்கிறது.
அச்சுப் பதிவிலிருந்து இணையத்தில் வாசிக்கும் பழக்கமாக மாறியதும் மற்றொரு காரணம். நிறையக் கிடைப்பதால் எதை வாசிப்பது எதை விடுவது என்பது புரியாமல் பலரும் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஊடகம் பெறுமதிமிக்கது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால் உலக இலக்கிய அறிவை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளதை மறக்கக் கூடாது.
எமது சிறுகதை இலக்கியம் வளராதிருப்பதற்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் இல்லாதிருப்பது முக்கிய காரணமாகிறது.
எழுதுவது சிலர். அதைப் பற்றி விமர்சிப்பதும் அந்த ஒரு சிலரே என்ற சூழலில் ஒருவருக்கு ஒருவர் முதுகு சொறியும் விமர்சனமே இங்கு இருக்கிறது. மாறாக ஒருவர் கறாராக விமர்சித்தால் அதைத் தனிப்பட்ட தாக்குதல் என்ற ரீதியிலேயே படைப்பாளிகள் அணுகுகிறார்கள். பேராசிரியர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியும் விஞ்ஞான ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் படைப்புகளை அலச வழிகாட்டித் தந்தார்கள். ஆனால் அதிலிருந்து மேலெழுந்து கலைத்துவமான படைப்புகளுக்கு வழிகாட்டும் விமர்சகர்கள் எழவில்லை என்றே சொல்ல வேண்டும். மு.பொ., தளையசிங்கம் ஆகியோர் புதிய அணுகுமறையைக் காட்டியபோதும் அது பரவலாகக் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆரோக்கியமான நல்ல விமர்சனங்கள் இல்லாததால் வாசிக்கத் தூண்டும் ஆர்வம் எழுவதில்லை. நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் நல்ல படைப்புகளை கோடி காட்டுகிறார் என்பது உண்மை. பலரும் அவற்றால் பயன்பெறுகிறோம். ஆனால் அக்குவேறு ஆணி வேறு பிரித்து விரிவாக எழுதுவதில்லை என்பதால் அவற்றின் ஆழத்தை பலராலும் கண்டுகொள்ள முடிவதில்லை.
எம்மிடையே தேடல் உள்ள எழுத்தாளர்கள் இல்லை என்பதற்கு இங்கு முழுநேர எழுத்தளார் என எவருமே இல்லை என்பது முக்கிய காரணமாகும். ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் தங்கள் படைப்புகளுக்காக நேரடி அனுபவங்களைப் பெறப் பயணப்படுவதுபோல எம் எழுத்தாளர்களால் முடியாது. குறுகிய வாசக எல்லையைக் கொண்ட எமது எழுத்தாளர்கள் எழுத்தை முழுநேர வேலையாகக் கொள்வது பொருளாராத ரீதியாகச் சாதிதியமற்றது. ஏனெனில் இங்கு பலரும் தங்கள் தொழிற் கடமைகளுக்கு அப்பால் எழுத்தை ஒரு பொழுதுபோக்காகவே கொள்ள முடிகிறது.
தங்கள் படைப்பை செழுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இங்கு எவருக்கும் கிடையாது. நான் ஒரே முறையில் தட்டச்சில் எழுதுவேன் எனப் பீற்றிக்கொள்பவர்கள் தான் இங்கு உண்டு. எழுத வேண்டும். ஆறப் போட்டு திரும்ப வாசித்து மீள எழுத வேண்டும் என்ற உணர்வு வளரவில்லை. நேரமின்மை காரணம் என்று சொல்வார்கள். மற்றவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு திருத்தும் பண்பு இங்கு கிடையாது. புளக்கில் எழுதும்போது கூட பிரசுரிக்க முன்னர் அபிப்பிராயம் கேட்பதற்கான வசதியைத் தருகிறார்கள். அனால் யாரும் அதைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.
செய்ய வேண்டியவை
வாசிப்புப் பழக்கத்தை அதிலும் முக்கியமாக சிறுகதை வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
வாசிப்பை இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும்! பாடசாலை மட்டத்தில் மாணவர்களிடையே சிறுகதை வாசிப்பு எழுத்து பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்த வேண்டும்!
படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அச்சு ஊடகத்திற்கு அப்பால் கணனி மற்றும் ஊடகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வித்துவான் வேலன், று.ஆ.ளு சாமுவல் போன்ற எனது ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர்களை உதாரணமாக கொள்கிறேன்.
இங்கு நான் பேசியவை பொதுவாக தகவத்தின் கருத்தாக இருக்கிறது.
ஆயினும் எழுத்து மற்றும் உரை வடிவம் என்னது. எனவே இதில் சர்ச்சைக்குரிய விடயங்கள் ஏதாவது இருக்குமாயின் அதற்கான தார்மீகப் பொறுப்பு என்னுடையது
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.