சிறுகதைக்கான வரைவிலக்கணம் எதையும் கணித்தபடி தற்போதைய சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை.முன்னரெல்லாம் அகிலன்,கல்கி தொடங்கிசாண்டில்யன்,கோவி மணிசேகரன் என விரிந்து அசோகமித்திரன்,மௌனி எனப் பரந்து தளம் விரிந்தே செல்கிறது.இன்று பலர் சிறுகதைக்குள் வந்துவிட்டனர்.கல்வி,கணினியியல் வசதி என வாய்ப்புக்கள் கைக்குள் வர வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கையிலும் அப்படியே. சிறுகதைகளின் முன்னோடிகளின் தொடர்ச்சியாக பலர் வந்துவிட்டனர். அன்று தொடங்கி இன்று வரை பலரும் தம்மை சிறுகதைகளின் மூலம் அடையாளப்படுத்தி நிற்கின்றனர். சிறுகதைகள் தனியாகவும், நூலாகவும் பரிசில்களைப் பெற்றுவிடுகின்ற அளவுக்கு வளர்ந்து வருகின்றன என்றே சொல்லலாம். இன மோதல்களில் சிதறுண்ட மக்கள் பல நாடுகளில் வாழும் நிலையில் வாழ்வின் சோகம்,யுத்த நோவுகள்,குடும்ப சிதைவுகள்,ஒன்றினைவுகள் எல்லாம் இன்னும் கைகளுக்குள் வராத சூழலில் பலர் எழுத்தை தம் வடிகாலாக்கினர். பழையவர்களுடன் புதியவர்களும் இணைந்துகொண்டனர். இதற்கு புலம்பெயர் சூழலில் வானொலிகளின், தொலைக்காட்சிகளின், அச்சு ஊடகங்களின் வருகை பலரையும் உள்வாங்கும் களமாகவும் ஆகிவிட்ட நிலையில் சிறுகதைகள் எழுதும் பலரையும் உருவாக்கிவிட்டிருந்தது. இலகுவாக வாசிக்கும் சூழலும், இங்குள்ள கல்வி,நண்பர்களின் தொடர்பு கதை வடித்தல் அவர்களை ஓரளவு ஆசுவாசப்படுத்தவும் செய்வதை மறுக்கமுடியாது.
புதிய சிந்தனைகளை வரவேற்கும் சிறுசஞ்சிகைகளின் வருகையும் நம்பிக்கை ஊட்டுவனவாகவே அமைந்தன.கூடவே, முகநூலின்,இனையத் தளங்களின் வருகையும் பலரின் எழுத்தை சுவைக்கும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்தன. படிமுறை வளர்ச்சி,பிற இலக்கியங்களை வாசிக்கும் பன்முக ஆற்றலும் அவர்களுக்குள் மாற்றங்களையும் ஏற்படுத்தியது. புலம்பெயர் சூழலில் ஆண் படைப்பாளர்களுக்கு ஈடாக பெண் எழுத்தாளர்களும் தொடர்ச்சியாகவே எழுதி வருகின்றமையும்,சிலரின் கதைகள் நூலாகவும் வெளி வந்து தம்மை அடையாளப்படுத்தி சிறுகதை வரலாற்றில் பதிவு செய்து நிற்கின்றனர்.
வருடாந்தம் புலம்பெயர் நாடுகளில் பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்படும் பெண்கள் சந்திப்பும் பல பெண் படைப்பாளர்களை அடையாளப்படுத்தி நிற்கின்றது.
எனக்குத் தெரிந்தவரை சுமதிரூபன்,சந்தரவதனா,சந்திரா ரவீந்திரன்,பவானி ஆழ்வாப்பிள்ளை போன்றோரின் நூல்கள் வெளிவந்தும் உள்ளன.இன்னும் வந்தும் இருக்கலாம்.வரவும் உள்ளதாக தகவலும் உண்டு. பரவலாக பல பெண் எழுத்தாளர்களின் கதைகள் வாசிக்கக் கிடைத்தாலும் நூலாக வருகையில் ஒடுமொத்த விமர்சனக்களை வைக்கவும் உதவும். லண்டனிலிருந்து ஆய்வாளராகவும், தமிழாசிரியராகவும்,செய்தி வாசிப்பாளராகவும்,சிறுகதை எழுதுபவராகவும் நம்மிடையே கவனிப்புக்குள்ளாகிறார். இணையங்களில் எழுதிவரும் இவரின் தமிழரின் வரலாறு சார்ந்த ஆய்வு நூலை வெளியிடவுமுள்ளார்.அண்மையில் அவரின் சிறுகதைகள் சிலதை வாசிக்கக் கிடைத்தது.
'நீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ ‘என்கிற கதை புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கதை தான்.தனியாக வாழும் ஒருவனுக்கு அவனது தாய் பெண் பார்த்து அனுப்புகிறாள்.அப் பெண் ஏஜண்ட் ஊடாக வருகையில் இத்தாலியில் தாண்ட கப்பலுடன் மூழ்கிப்போகிறாள்.பின் அனுப்பப்படும் பெண் முன்னால் வந்து நின்று ஆயிரம் கற்பனைகளை அவனுள் ஏற்படுத்த அதுவும் நனவாகிவிடுகிறது.அவள் இன்னொருவனுடன் சொல்லாமேயே சென்றுவிடுகிறான்.செல்வன் என்கிற பாத்திரம் மூலம் கதை சொல்லப்படுகிறது.அவனின் தாய்,தங்கை,எழிலி என்கிற பாத்திரங்களூடாக கதை நகர்த்தபட்டிருக்கிறது. செல்வனின் எதிர்பார்ப்பு,குடும்பத்தாருக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்கிற சராசரி மனிதனின் மன உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கிறார். ஆரவாரமில்லாத கதை நகர்வு.கதையாக சொல்லாமல் ஒரு வாழ்வியல் அனுபவத்தைச் சொல்கிற இவரின் கதை சொல்லும் பாங்கு விரும்பத்தக்கது. தமிழர்களிடையே காணப்படும், சாதகம், கிரகங்கள், பெண்பார்க்கும் படலங்கள் இன்னும் வாழ்வியல் மாற்றங்களிடையேயும் மறைந்துவிடவில்லை என்பதை இவரின் கதை சொல்லிச் செல்கிறது.
'பெண்' என்கிற கதை முகநூல் நண்பரை நம்பி மோசம் போகும் மது என்கிற பெண்ணின் சோகம் சொல்லப்படுகிறது.விரும்பித் திருமணம் செய்யும் கபிலன்,மதுவுக்கு குழந்தையும் கிடைக்கிறது.வீட்டில் குழந்தை,வீட்டுவேலை,கணவன் குடும்பம் என்றிருந்தவளுக்கு கணினி வாய்ப்புக்கிடைக்க அதன் முலம் முகநூலில் அரட்டை அடிக்கும் பழக்கத்தில் அறிமுகமாகும் கரனின் நட்பு அவளின் வாழ்வை திசை திருப்பிவிடுகிறது.பின் கரனிடமிருந்து கிடைத்த ஏமாற்றம் கபிலனை,அவன் மூலம் கிடைத்த மகிழ்ச்சி,குழந்தை மனதில் வந்து போக அவனிடம் வந்து சேர்கிறதான கதை நமது அன்றாட வாழ்வில் வந்து போகிற பாத்திரங்கள் தான்.கதை லாவகமாக நகர்த்தப்பட்டிருக்கிறது.அதிக வர்ணனைகள் அற்ற கதை சொல்லும் பாங்கு சில சமயம் சுவாரஸ்யம் குன்றிவிடவும் வாய்ப்புண்டு. பாத்திரங்கள் இன்னும் ஆழமாக உருவாக்கப்பட்டிருகலாமோ என நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு கதைகளிலும் புலம்பெயர் வாழ்வின் கதைகள்,சோகங்கள்,நோவுகள் சொல்லப்படுகின்றன.அனுபவம் என்பது இருவகை..தன் அனுபவம்.இன்னொன்று பிறரது ஞாபகம்.கதாசிரியருக்கும் இவ்வனுபவம் நிறையவே இருக்கிறதாக கதை மூலம் உணரப்படுகிறது. ஏஜண்டு மூலம் அனுப்படுகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் படுகின்ற அவலங்கள் யாவரும் அனுபவித்தே வந்துள்ளனர்.இன்னும் அவுஸ்திரேலியா,இத்தாலியக் கடலுள் மூழ்கி போகிற உயிர்கள்தான் எத்தனை...அவன் அல்லது அவள் வருவதை எதிர்பார்த்து வலிக்கின்ற மனதுகள் தான் எத்தனை?எத்தனை??
'நினைவு சுடும்' கதை கூட அவலத்தின் இன்னொரு கதைதான். காந்தன் சுசிலா எனும் இர்ண்டு பாத்திரங்களூடாக இன்றைய சமகால அவலத்தைச் சொல்லுகிறார்.ஏஜன்ட் மூலம் மனைவியையும் குழந்தையையும் ஏஜன்ட் முளம் எடுக்கப்போய் இன்னொருவரின் மனைவியாக வருகின்ற பெண் படும் காயங்கள் அழகாகச் சொல்லப்படுகிற கதைYஎ நினைவு சுடும்.ரஸ்யாவிலிருந்து களவாக எல்லையைக் கடக்கின்ற போது சூழல் பிரிக்கபடுகின்ற போது உறவுகளும் பிரிந்து போக காலம் முழுதும் வலியுடன் வாழ்கிற கொடுமை சொல்லப்படுகிறது.இப்படி எத்தனை மனிதர்கள் எல்லையைக் கடக்கின்றனர்.எத்தனை பேர் குடும்பங்களுடன் இணைகிறார்கள்.குடும்ப உறவுச் சிக்கல் எப்படு மாறுபாடடைகிறது.சமூகம் ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ காலம் நமக்கு சொல்லிவைக்கிற பாடம் அனேகம். கதை நேரடியாகவே சொல்கிறது.ஆலாபனைகள் அதிகம் இல்லை. பாத்திரங்களின் உரையாடல்கள் இன்னும் ஆழமாகப் பேசப்பபட்டிருக்கலாம். ஆபத்தானது என்று தெரிந்தே நிகழ்வுகள் எல்லாம் நடந்து கொண்டிருப்பது யதார்த்தமானது.இது தான் விதி என்கிறது அனைவர்க்கும் பொருந்தும்.தமிழர்க்கே மட்டும் உரித்தானது அல்ல. இப்போது தான் சிறுகதைகளில் கை வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.ஆனாலும் சொல்ல வந்ததை சொல்கிறார். உலகில் அவலங்களின் கதை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. முகநூல் நண்பனாகி அவனை மனதுள் விருப்பத்திற்குரியவனாக்கி அவனின் அண்மை தேவைப்பட,அவளுக்கு பல்கலைக்கழகம் சுதந்திர உணர்வுகள் சிறகசைக்க,கை கொடுக்க, ஒரு சந்திப்பின் போது அவனின் சுயரூபம் தெரியவர அவனின் நட்பைத் துண்டிக்க எண்ணியவளுக்கு சிரமங்கள் ஏற்பட இறுதியில் காவல் நிலையம் புறப்படுவதாக'எத்தனை மரங்கள் தாவும்' கதை சொல்கிறது. பெண்ணுக்கு மாத்திரமல்ல,ஆணுக்கும் ஏற்படுகின்ற ஏமாற்றம் பற்றியும் கதைகள் சொல்லுகின்றன. குறைவாவே எழுதும் நிவேதா தொடர்ச்சியான எழுத்து பயிற்சியைக் கொடுக்கலாம். இன்னும் வீச்சான கதைகளை எதிர்காலத்தில் எதிர்பார்த்து இலக்கிய உலகம் காத்திருக்கிறது. சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து நூலாக வருகையில் புதிய பரிமானத்தைப் பெறலாம். வாழ்த்துக்களுடன்,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.