இதமான கடற்காற்று…. ஆர்ப்பரிக்கும் கடல்… அந்தக்காற்றை சுவாசித்தவாறும் கடலோசையை கேட்டவாறும் மாலையில் சூரிய அஸ்த்தமனத்தின் அற்புதக்காட்சியை ரசித்தவாறும் தனது தாத்தா, பாட்டி, தாய், தந்தை, அக்கா, தங்கை, தம்பிமாருடன் மனிதநேயத்துடனும் எண்ணற்ற கனவுகளுடனும் வாழ்ந்து வளர்ந்த இளைஞன், அந்தக்கடற்கரையோர நகரத்தில் தமிழ் சார்ந்த பல பணிகளில் ஊர்மக்களுடன் இணைந்திருந்தான். தனது ஆரம்பக்கல்விக்கு துணையாக நின்ற பாடசாலையிலும் அதற்கு வித்திட்ட வெகுஜன அமைப்பான இந்து இளைஞர் மன்றத்திலும் இயல், இசை, நாடகத்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக நின்றான். பாடசாலை பழைய மாணவர் மன்றத்தை உருவாக்குவதிலும் அதன் ஊடாக மாணவரிடையே ஊக்குவிப்பு போட்டிகளை நடத்துவதிலும் உறுப்பினர்களுடன் இணைந்திருந்தான். இவ்வாறு இலங்கையின் மேற்கே தமிழ் அலைகள் ஆர்ப்பரிக்க, அதில் தன்னாற்றலால் நீச்சலிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆச்சரியப்படத்தக்கது அல்ல. உள்ளார்ந்த படைப்பிலக்கவாதி எங்கிருந்தாலும் அப்படித்தானிருப்பான். அவனுக்கு எழுத்தின்மீதும் வாசிப்பின் மீதும் பற்றுதல் அதிகம். பெற்றவர்களின் கனவு வேறுவிதமாக இருக்க அவனோ தனது கனவை வேறுவிதமாக வளர்த்து நனவாக்கிக்கொள்ள முயன்றான். அவனது உழைப்பு வீண்போகவில்லை. தான் நேசித்த கடல் மாந்தர்கள் பற்றிய கதைகளையே முதலில் எழுதி முதல் தொகுப்பிற்கு தேசிய சாகித்திய விருதையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டான்.
தனது ஊரின் பிரதேச நிருபராகி, பிரபல தினசரியில் ஒப்புநோக்காளனாக ஊதியம்தரும் தொழிலை ஆரம்பித்து பின்னர் அங்கேயே பத்திரிகையாளன் நியமனமும் பெற்றுக்கொண்டான். படைப்பிலக்கியவாதி பத்திரிகையாளனாக பரிமாணம் பெற்றால், அது இலக்கியத்துக்கு நல்வரவாகிவிடும். வாராந்தம் இலக்கியப்பலகணி எழுதியவாறும் கலை, திரைப்பட விமர்சனங்கள் படைத்தவாறும் வளர்ந்து ரஸஞானி, ரிஷ்யசிருங்கர் முதலான புனைபெயர்களையும் பெற்றுக்கொண்டான். எந்தவேலையையும் அர்ப்பணிப்புணர்வுடன் செய்துமுடிக்கும் திறன் படைத்த அவனிடம் போர்காலச்செய்திகளை திரட்டி எழுதும் பணி ஒப்படைக்கப்பட்டபோதும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு ஆசிரியபீடத்தின் நன்மதிப்பை பெற்றான். போர்க்காலத்தில் உண்மைச்செய்திகளை தருவதில் முன்னின்ற அவன் பணியாற்றிய நிறுவனம், நடுநிலையுடன் இயங்கவேண்டிய தேவை இருந்தது. இனவிடுதலைவேண்டி ஆயுதப்போராட்டம் மறுபுறம் அதனை அடக்கமுனையும் அரசின் நடவடிக்கைகள் மறுபுறம். இவை இரண்டுக்கும் நடுவே சிக்கித்தவித்தது மக்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு உண்மையை சொல்லவேண்டிய பத்திரிகைகளும்தான்.ஒரு போர் நடவடிக்கை செய்தி எழுதியதற்காக அரசின் அழுத்தம் அவன் பணியாற்றிய பத்திரிகைக்கு வந்தபோது ஒரு பலிக்கடாவாக அந்தச் செய்தியை நிரூபிக்க அவன் களத்திற்கு செல்லநேர்ந்தது.
அர்ப்பணிப்பு இயல்பு அவன் கூடவே பிறந்தது. ஆதாரங்களுடன் வந்தபோதுதான் அவனுக்கு ஒரு கசப்பான உண்மை தெரிந்தது. அந்தச்செய்தியை ஆதாரத்துடன் எடுத்துவருவதற்காக அவன் அனுப்பப்பட்டது, சுகவீன விடுப்பில்தான் என்பது. செய்தி சேகரிக்கும் களத்தில் அவனது உயிருக்கு ஏதும் நேர்ந்திருந்தாலும் அதற்கு நிறுவனம் பொறுப்பில்லை. அந்த சுகவீன விடுப்பின் தாற்பரியம் அவனுக்கு புரிந்தபோதும் அவன் அந்தத்தொழிலை வெறுக்கவில்லை. அந்த அனுபவத்தையும் புன்னகையுடனேயே ஏற்றுக் கொண்டான்.
அர்ப்பணிப்புக்குக்கிட்டிய சன்மானம்தான் என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்வதைத்தவிர அவனுக்கு வேறு வழிகிடைக்கவில்லை. ஊர்ப்பொதுப்பணிகள், பத்திரிகைத்தொழில் அதனால் பின்தொடரும் கண்காணிப்பு….பலநாட்கள் யோசித்தான். வேட்டைக்காரர்கள் பெருகினால், புள்ளிமான்கள் எங்காவது தப்பிச்செல்லத்தானே வேண்டும். அவனது எதிர்காலம் கேள்விக்குறியானது. அதனை ஆச்சரியக்குறியாக்கிப்பார்க்க விரும்பினான். கடலோரத்தில் வாழ்ந்து கடல் கடக்க விரும்பாதிருந்த அவனை விதி கடல்கடந்து விரட்டியது. அதனால் கடல்சூழ்ந்;;த கண்டத்துள் தஞ்சமடைந்தான். ஏற்கனவே இந்தப்பத்தியில் குறிப்பிட்டதுபோன்று உள்ளார்ந்த ஒரு படைப்பிலக்கியவாதி, பத்திரிகையாளன் எங்கு சென்றாலும் தனது இயல்புகளை மாற்றிக்கொள்ளமாட்டான் என்பதற்கு அவனும் முன்னுதாரணமானான். விட்டகுறை தொட்ட குறையாக அவுஸ்திரேலியாவிலும் அவன் தமிழ்ப்பணி தொடர்ந்தான். இவ்வாறு தொடர்ந்து இயங்கி கடந்த ஜூலை 13 ஆம் திகதி 62 வயதை பூர்த்திசெய்துள்ளவர்தான் இங்கு நான் குறிப்பிடும் முருகபூபதி.
அவுஸ்திரேலியா ஒரு குடியேற்ற நாடு என்றபோதிலும், இங்கு நிரந்தர குடியுரிமை, தற்காலிக குடியுரிமை, அகதி அந்தஸ்து…முதலான தரங்களில் வாழும் மக்கள் மாத்தியில் தனக்கும் சுலபமாக அதில் ஏதோ ஒன்று கிடைத்துவிடும் என்றே அவர் நம்பினார். ஆனால் அதில் எதைப்பெறுவது என்பதில் நீடித்த தாமதங்களுக்கு மத்தியிலும் தனது உள்ளார்ந்த இயல்பை நடைமுறைப்படுத்தியவாறே குடும்பத்தை பிரிந்து வந்த ர்ழஅந ளுiஉம துயரத்தை போக்கிக்கொள்ளத்துடித்தார். சட்டத்தரணி ரவீந்திரன் அவருக்கு சட்டஆலோசகராக மட்டுமன்றி, சகோதரனாகவும் உறவாடினார். அதனால் அண்ணன் ஒருவர் தனக்கு இல்லை என்ற குறையை இந்த புலம்பெயர்வாழ்வு போக்கிவிட்டது என்று நிம்மதிப்பெருமூச்சு விட்டார் முருகபூபதி. தன்னைப்போன்று வந்தவர்கள் பலருக்கும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக நண்பர்கள் சிலருடன் இணைந்து தமிழ் அகதிகள் கழகத்தை தொடக்கினார். குறிப்பிட்ட அகதிகள் கழகம் தொடர்ச்சியாக மேற்கொண்ட பணிகளினால் இந்நாட்டில் தஞ்சமடைந்த பலருக்கு இங்கு குடியுரிமை கிடைத்தது. இக்கழகத்திற்கென ஒரு வரலாறு உண்டு.
விலங்கினை ஒத்தவன் மனிதன். தனது தேவைகளையும் முதன்மைப்படுத்துவான் விலங்கினைப்போன்று. அவர்களில் சில மனிதர்களே விதிவிலக்காக தம்மோடு மற்றவர்கள் வாழ்வு பற்றியும் சிந்திப்பார்கள். அந்தச்சில மனிதர்களில் முருகபூபதியும் ஒருவர். அவருக்கான நிரந்தரவதிவிட உரிமை தாமதித்துக்கொண்டிருந்தபோதிலும் குடும்பத்தை தொலைவில் விட்டுவிட்டுவந்த துயரம் ஒருபுறம் இருந்தபோதிலும் தாயகம் குறித்தும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் பற்றியுமே அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார். அகதிகள் கழகம், போரினால் பாதிக்கப்பட்ட தாயக மாணவர்களுக்கான கல்வி நிதியம் கலை, இலக்கிய வளர்ச்சிக்காக தமிழர் ஒன்றியம் முதலானவற்றை அவர் உருவாக்க பாடுபட்டபோதும் இந்நாட்டில் வதிவிட உரிமையற்றவராகவே அவர் வாழ்ந்தார்.
கலையும் இலக்கியமும்தான் ஒரு இனத்தின் கண்கள் என்பது அவரது தாரக மந்திரமாக துலங்கிற்று. தாயகத்தில் அவர் மேற்கொண்ட பணிகளையே இங்கும் எடுத்துவந்தார். இலங்கையில் கலைமகள் விழாக்கள் ஊடாக இளம்பாலகர்களுக்கு வித்தியாரம்பம் செய்து வைத்து ஏடுதொடக்கும் மரபை இந்த புகலிட நாட்டிலும் அறிமுகப்படுத்தினார். அத்துடன் நாவன்மைப்போட்டிகளையும் உருவாக்கினார். ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை அவர் அயர்ச்சியின்றி நடத்துவது எமக்கெல்லாம் முன்மாதிரியானது.
குடும்பத்தை பிரிந்திருக்கும் சோகத்தை மறந்துவிட அவர் நாடிச்சென்றது சமூகப்பணிகள்தான் என்பதை அவதானித்திருக்கின்றோம். வந்த புதிதில் அவரது நண்பர்கள் தொடங்கிய மக்கள்குரல் என்ற கையெழுத்து இதழில் இணைந்தார். பின்னர் அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் மாத இதழான அவுஸ்திரேலிய முரசுவின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். டொக்டர் நடேசன் நீண்டகாலம் நடத்திய உதயம் இருமொழி மாத இதழில் இலக்கியப்பகுதிகளை எழுதினார். சமூகப்பணியாளர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பத்தி எழுத்துக்கள், நூல் மதிப்புரைகள், இலக்கிய கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள் என அவரது எழுத்துக்கள் வராத உதயம் இதழே இல்லை என்று சொல்லத்தக்கதாக நிறைய ஆக்கங்களை பதிவுசெய்தார்.
இந்த நாட்டில் வௌ;வேறு மாநிலங்களில் சிதறி வாழ்ந்த படைப்பிலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் கலைஞர்களையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைக்க அயராது பாடுபட்டு, எழுத்தாளர் விழா இயக்கத்தையே தோற்றுவித்தார். அதன் பரிணாமம்தான் இலங்கையில் 2011 இல் அவர் முன்னின்று நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு.
இந்தக் கடின உழைப்பிற்கெல்லாம் அவர் செலவிட்டநேரம் பெறுமதியானது. அதனால அவர் இழந்ததும் அதிகம். இழப்;புகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயங்குவதுதான் அவரது இயல்பு.
இத்தனை பணிகளுக்கும் மத்தியில் அவர் சிகரமாக உயர்ந்திருப்பது அவர் 1988 இல் உருவாக்கிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற பெருவிருட்சத்தின் பணிகளில்தான். சிறுதுளி பெருவெள்ளம்போன்று அந்த அமைப்பு தொடங்கியது. போருக்காக பலரும் ஆயுதங்களுக்கு பணம் சேகரித்துக்கொண்டிருந்தபோது இவர், அமைதியாக… அழிவற்ற செல்வம் கல்விக்காக தெருத்தெருவாக அலைந்து போரில் பாதிக்கப்பட்ட எம்மின சிறார்களுக்காக புத்தகம், கல்வி உபகரணம் வாங்குவதற்கு அன்பர்களின் வீட்டு வாசற்படிகளில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்.
தான் உருவாக்கிய கலை, இலக்கிய இயக்கத்திற்கு, கலையும் இலக்கியமும்தான் இனத்தின் கண்கள் என்று ஒரு தாரக மந்திரத்தை சிருட்டித்ததுபோன்று, கல்வி சார்ந்த சமூகப்பணிக்கு தாரகமந்திரமாக மகாகவி பாரதியின் வரிகளை எம்மவர் மத்தியில் பரப்பினார்.
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்
இந்த வரிகளே என்போன்றவர்களையும் அந்த அமைப்பின்பால் ஈர்க்கச்செய்தது எனலாம். எனது தந்தையார் செல்லத்துரை அவர்கள் ஒரு ஓவியர் என அறிந்து அவரை அணுகினார். கல்வி நிதியத்திற்கு ஒரு இலட்சினை வேண்டும் என்றார். ஐயாவும் நோக்கத்தை புரிந்துகொண்டு, அவுஸ்திரேலியாவின் தேசிய உயிரினம் கங்காரு தனது கரத்தில் ஒரு புத்தகத்தை ஏந்தியவாறு நிற்கும் ஓவியத்தை வரைந்துகொடுத்தார். அந்த இலட்சினையே இன்றுவரையில் நிதியத்தை அலங்கரிக்கின்றது.
முருகபூபதி இவ்வாறு சமூகப்பணிகளை மேற்கொண்டவாறே தான் உளமாற நேசிக்கும் இலக்கியம் சார்ந்த பணிகளையும் விட்டுவைக்கமாட்டார். ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது என நினைக்கின்றேன். அவர் தனது தனிப்பட்ட வாழ்வில் பேரதிர்ச்சியை சந்தித்த காலப்பகுதி. அவருக்கு நெருக்கமான பலரும் கலங்கிப்போயிருந்தோம். அந்த இழப்பின் துயரத்தினை அவர் சாதுரியமாக கடந்தார். தனது பிள்ளைகளின் பொறுப்புவாய்ந்த தந்தையாக வாழ்ந்தவாறு நிதானமாக நகர்ந்தார். அக்காலப்பகுதியில்தான் அவர் இலக்கியப்பிரவேசம் செய்து 25 ஆண்டுகளை நிறைவுசெய்திருந்தார். இளம்பராயத்தில் அவரது பாட்டியார் அவருக்கு சொல்லிக்கொடுத்த கதைகள் சிலவற்றை தனக்கே உரித்த பாணியில் பாட்டி சொன்ன கதைகள் என்ற தலைப்பில் தொகுத்திருந்தார். இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவில் குறிப்பிட்ட நூல்தான் வெளியாகும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் முருகபூபதி அந்த நூலை வெளியிடும் விழாவாக மாத்திரம் குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தாமல் பலருக்கும் முன்மாதிரியான காலம்கடந்தும் பேசத்தக்க நிகழ்வாக மாற்றி அமைத்தார்.
இலங்கை தாயகத்திலும் புகலிட நாடான அவுஸ்திரேலியாவிலும் கலை, இலக்கியத்திற்கு தொண்டாற்றிய நான்கு மூத்ததலைமுறையினரை பாராட்டி கௌரவிக்கும் வைபவமாக நடத்திக்காண்பித்தார். படைப்பாளி எஸ்.பொ., ஓவியர் கே.ரி. செல்லத்துரை, கவிஞர் அம்பி, நாட்டுக்கூத்துக்கலைஞர் அண்ணாவியார் இளையபத்மநாதன் ஆகிய நால்வரைப்பற்றிய ஆக்கங்களுடன் மலர்ந்த நம்மவர் மலரையும் வெளியிட்டு, அவர்களை பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டி கௌரவித்து உபசரித்தார். அந்த விழாவுக்கு தலைமைதாங்க சிட்னியிலிருந்து எழுத்தாளர் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜாவை அழைத்திருந்தார். பல பணிகளுக்கு தொடக்கப்புள்ளியாக இயங்கிய முருகபூபதி அவுஸ்திரேலியாவில் வாழும்காலத்திலேயே ஒருவரின் சேவைகளை பாராட்டி கௌரவிக்க வேண்டும் என்ற மரபையும் உருவாக்கினார்.
இலங்கையில் நீண்டகாலம் வெளியாகும் மல்லிகை, மற்றும் ஞானம், ஜீவநதி முதலான மாத இதழ்கள் அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டதென்றால் அதற்கெல்லாம் பின்னணியில் இயங்கிய தொண்டன் முருகபூபதிதான். பல நல்ல விதைகளை இவ்வாறு விதைத்தமையாலும் சில நல்ல பாதைகளை வகுத்ததாலும் சிறந்த பிரஜைக்கான விருது, மகத்தான சமூகப்பணியாளருக்கான அரசு சார்பு விருதுகள் உட்பட சில பொது அமைப்புகளினதும் விருதுகளையும் பெற்றுக்கொண்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் இலங்கை மாணவர் கல்வி நிதியமும் இணைந்து அவரது மணிவிழாவை அமைதியாக கொண்டாடினோம்.
இதுவரையில் சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் 18 நூல்களை எழுதியிருக்கும் முருகபூபதியின் சிறுகதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில நூல்கள் மற்றும் மலர்களின் தொகுப்பாசிரியராகவும் இயங்கியிருக்கிறார். இனம், மொழி, மதம் யாவற்றையும் கடந்து அனைவரையும் சகோதர வாஞ்சையுடன் அணைத்து, இணைத்து தன்னோடு அழைத்துச்செல்லும் முருகபூபதி கடந்துவந்த பாதைகளில் கல்லும் முள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம். அவற்றைக்கடப்பதற்கு அவர் அடிக்கடி சொல்லும் ஆன்மபலம் என்றும் துணையாக இருந்திருக்கும் எனவும் நம்புகின்றோம். தனது அருமை மனைவி மாலதியுடன் அவர் பயணம் தொடரட்டும் என்று அவரது 62 ஆவது பிறந்ததினத்தில் வாழ்த்துக்கூறுகின்றேன். (அவர் பிறந்த திகதி 13-07-1951)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.