உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் ஆறறிவுள்ள மனிதனுக்கு மிக முக்கியமாக வேண்டப்படுவது மனிதனால் வகுக்கப்பட்ட மனித நேயமாகும். மனித நேயம் என்பது 'மனித உலக வாழ்க்கை இயல்', 'மனித இனநலக் கோட்பாடு', 'மனிதப் பொதுமைநல இயல்', 'மனித இனப் பொதுச்சமய அமைதி', 'மனித இன இயற் பண்பாய்வுத் துறை' என்றும் பொருள்படும். மனித நேயத்துக்குரிய ஒழுக்கத் தத்துவ முறைகளை மனிதன் சிந்திப்பதாலும், வரலாறுகளைப் படிப்பதாலும், தன்னிடமுள்ள அனுபவத்தாலும் பெற்றுக் கொள்கின்றான். இதைக் கருத்திற் கொண்ட ஆன்றோரும், சான்றோரும் அன்பு, பண்பு, சத்தியம், உண்மை, தர்மம், நேர்மை போன்ற அறநெறிகளைத் தமது இலக்கியங்களிலும், நீதிநெறி நூல்களிலும், சமய நூல்களிலும் எழுதி வருகின்றனர். மக்கள் இவற்றைப் படித்துத் தாமும் இவ்வறநெறிகளை உள்வாங்கித் தமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கின்றனர். இதனால் மக்களும் மனித நேயமுள்ளவர்களாகி அவ்வழி நின்று செயல்படுவதனால் மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வைக் காண்கின்றனர். மனித நேயம் மக்கள் மத்தியில் மிளிர்வதால் அவர்கள் மக்களையும், மற்றைய ஐயறிவுடைய உயிரினங்களையும் கட்டிக்காப்பாற்றிப் பேணி வருவதும் தெளிவாகின்றது.
கடவுள் நம்பிக்கையோ அல்லது மத நம்பிக்கையோ இல்லாமல் மனித இனம் அறநெறிகளையும், நன்நெறிகளையும் கிரகிக்கும் தன்மை உள்ளவர்களென்று அறிவியலார் விடாப்பிடியாயுள்ளனர். மேலும் அவர்கள், மனித நேயம் என்பது அறிவியலும;அறிவார்வமும் சேர்ந்த உண்மைத் தேடலாகும் என்றும் கூறுகின்றனர். இன்னும், 1930-ஆம் ஆண்டிலிருந்து சமயஞ் சாராத மனித நேயம் (Secular Humanism ) என்ற சொற்பதத்தையும் பாவித்து வருகின்றனர். இனி இவை பற்றி மனித இன இயற்பண்பாய்வாளர் (Humanist) கூறும் கருத்துக்களையும் காண்போம்.
1.இயல்நிலை கடந்த மனித இனம் என்று ஒன்றும் இல்லை.
2.மூலப் பொருளான பிரபஞ்சம் ஒன்றுதான் நிலையானது.
3.பிரபஞ்சம் பற்றி அறிவியல் ஒன்றுதான் நம்பிக்கையான தகவலைத் தரும்.
4.நாம் இந்த வாழ்க்கையில் மட்டும்தான் வாழலாம். இந்த வாழ்வை விட வேறு வாழ்க்கை இல்லை. மறுபிறப்பு என்று
ஒன்றும் இல்லை.
5.மத நம்பிக்கை இல்லாமல் நாம் ஒழுக்கவியலுடன் வாழ முடியும்.
இந்நிலையில் சங்ககால நூல்கள், சங்கமருவிய கால நூல்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், திருமந்திரம், நீதிநெறி நூல்கள், அறநெறி நூல்கள் போன்றவை மனித நேயம் பற்றி எவ்வாறு கூறியுள்ளன என்பதை இங்கு நிரல் படுத்திப் பார்ப்போம்.
தொல்காப்பியம்:- ஏழு திணைகளான கைக்கிளை, முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பெருந்திணை ஆகியவற்றை வகுத்து, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நிலம் ஒதுக்காது, மற்றைய ஐந்திணைகளுக்கும் நிலம் ஒதுக்கி, அந்த ஐவகை நிலம் சார்ந்தோருக்கு இன்ப உணர்வினைக் கொடுக்கின்ற பெரும்பொழுது, சிறுபொழுது காட்டி, அத்திணைகளில் ஒரு தலைக் காமம், இருத்தல், புணர்தல், பிரிதல், ஊடல், இரங்கல், பொருந்தாக் காமம் ஆகியவை கூறி, களவொழுக்கம், கற்பொழுக்கம், கைக்கிளை, பெருந்திணை, கரணம் (சடங்கு முறை), தலைவன் தலைவி உடன்போக்கிற் செல்லல், பகற் குறி, இரவுக் குறி ஆகியவைகளை அமைத்து, களவொழுக்கச் சொல் கூறுதற்கு உரியவரான பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி ஆகிய அறுவகையோர், கற்பிற் கூற்று நிகழ்த்தற்கு உரியவரான பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிஞர், கண்டோர், மேற் கூறிய அறுவர் ஆகிய பன்னிருவர்களை நியமித்து, தமிழ் மக்கள் அனைவரையும் சாதி பேதம் காட்டாது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வகுப்பினராக அமைத்து, தலைவன் தலைவியரை இவ்வேழு நிலங்களிலும் பவனிவரச் செய்து, தமிழர் வாழ்வியலை மேம்படுத்திய மாபெரும் மேதையான தொல்காப்பியனார் இற்றைக்கு மூவாயிரம் (3,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றித் தாம் யாத்த தொல்காப்பியம் எனும் பெருநூலைத் தந்துள்ளார். அவர் காட்டிய மனித நேயம் நம்மனைவரையும் ஈர்த்து நெகிழ வைக்கின்றது. இதனால் அவர் அன்றும், இன்றும், என்றும் நம்முடன் வாழ்கின்றார்.
இதிகாசங்கள்:- இதிகாசங்களான மகாபாரதம், கம்பராமாயணம், அதன் பின்னான பண்டைய மன்னர்களின் போர் நிகழ்வுகளில் குழந்தைகள், பெண்கள், முதியோர் ஆகியோரைப் பாதுகாத்து வந்துள்ளனர். அவர்கள் குடிமனையில்லாத வெளிப் பிரதேசங்களில்தான் போர் புரிந்தனர். சூரிய வெளிச்சம் உள்ள நேரத்தில் மட்டும்தான் போர் நடைபெற்றன. இரவில் போர் செய்யாத காலம் அது. உதாரணத்துக்குப் பாரத, இராமாயணப் போர்களைக் கூறலாம். முரசு கொட்டி அறிவித்து யுத்தம் புரிந்தனர். பிறமுதுகு காட்டி ஓடும் எதிரியைக்கூடக் கொல்லமாட்டாத அறநெறி யுத்தம் நடாத்தினர். அதனால் அவர்கள் இன்றும் நம் மத்தியில் மனித நேயம் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.
புறநானூறு:- 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'தீதும் நன்றும் பிறர்தர வாரா', 'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாளிய நிலனே', 'எத்துணை ஆயினும் ஈதல் நன்றே', 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்', 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே', ;வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்', 'நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்', என்று சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றுக் கூற்றுக்கள் எம்மை அறநெறி வழியில் ஆற்றுப்படுத்தி நிற்கின்றன.
திருக்குறள்:- முப்பாலான அறம், பொருள், இன்பம் கூறும் திருக்குறளில் 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்', 'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு', 'செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்', 'நன்றி மறப்பது நன்றன்று', 'செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை', 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்', 'வறியார்க்கொன்று ஈவதே ஈகை', 'உண்ணாமை வேண்டும் புலால்', 'உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்', 'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' போன்ற அரிய அறநெறிகள் கூறி மக்களைத் தெளிவுபடுத்தி, மனித நேயர்களாக்கிய பெருமை திருவள்ளுவரைச் சார்ந்ததாகும்.
திருமந்திரம்:- ஆகமப் பொருளைத் தமிழிற் கூறும் முதல் நூலான திருமந்திரத்தை அருளிப் பாடியவர் திருமூலர் ஆவார். 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர்', 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே', 'உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்', 'உள்ளம் பெருங்கோயில்', 'ஊனுடம்பு ஆலயம்' என்று கூறி உடம்பின் மாண்பை மேன்னிலைப்படுத்திய முதல் ஞானி இவராவார். 'பூசை செய்வதற்குப் பூவும் நீரும் போதும், புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு, இறைவற்கு ஒரு பச்சிலை' என்று கூறி ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளார். இன்னும் 'ஆசை அறுமின்கள், ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள், ஆசைப் படப்பட துன்பங்கள் வரும், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே' என்று கூறி மக்களை அறநெறியில் ஆற்றுப்படுத்துகின்றார்.
சிலப்பதிகாரம்:- ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான இளங்கோ அடிகள் யாத்த சிலப்பதிகாரம் காட்டும் அறநெறிக் கருத்துகளையும் காண்போம். 'பொய்யுரை அஞ்சுமின்! ஊணூன் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின்! தானம் செய்மின்! தவம் பல தாங்குமின்! செய்ந்நன்றி கொல்லன்மின்! பிறர்மனை அஞ்சுமின்! பிழைஉயிர் ஓம்புமின்! அறமனை காமின்! அல்லவை கடிமின்! கள்ளும், களவும், காமமும், பொய்யும் ஒழிமின்! இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா, செல்லும் தேஎயத்துக்கு உறுதுணை தேடுமின்! என்றவாறு மனிதநேயம் காப்பியத்தின் உயிர்மூச்சாகிறது.
நாலடியார்:- சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களில் ஒன்றான நாலடியார் எனும் நூலில் செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, அறன் வலியுறுத்தல், துறவு, சினம் இன்மை, பிறர்மனை நயவாமை, ஈகை, தீவினை அச்சம், கல்வி, பெரியாரைப் பிழையாமை, நல்லினம் சேர்தல், முயற்சியுடைமை, நட்பியல், கூடா நட்பு, அறிவுடைமை, ஈயாமை, அவையறிதல், பேதைமை, மூடத்தனம், பொது மகளிர் போன்ற விடயங்கள் கூறப்பட்டு, அவை மக்கள் வாழ்வை வளப்படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.
ஆத்திசூடி:- அவ்வையார் பாடிய ஆத்திசூடியில் அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஒளவியம் பேசேல் என்று தமிழில் உள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துக்களையும் முதலடியாக வைத்து ஆத்திசூடி பாடி, அவ்வுயிரெழுத்துகளுக்கு மேலும் புத்துயிர் அளித்து, மக்களுக்கும் நீதிநெறி புகட்டியுள்ளார் பாட்டியார். மேலும் அவர் நன்றி மறவேல், ஊக்கமது கைவிடேல், தந்தை தாய் பேண், இளமையில் கல், பருவத்தே பயிர் செய், அறனை மறவேல், சூது விரும்பேல், ஊருடன் கூடி வாழ் என்று கூறிச் செல்கின்றார்.
கொன்றை வேந்தன்:- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று, எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும், கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை, சீரைத் தேடின் ஏரைத்தேடு, சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல், சூதும் வாதும் வேதனை செய்யும், பிறன் மனை புகாமை அறம் எனத் தகும் – என்ற அவ்வைப் பாட்டியின் பொன்னான நீதிநெறிகள் மக்கள் மத்தியில் இன்றும் உலாவி வருகின்றன.
பாரதியார் கவிதைகள்:- மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்திடுவோம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், சாதிக் கொடுமைகள் வேண்டாம், அன்பு தன்னிற் செழித்திடும் வையம், பொய் சொல்லக் கூடாது பாப்பா, புறம் சொல்லலாகாது பாப்பா, சாதிகள் இல்லையடி பாப்பா, ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள், சூத்திரனுக்கொரு நீதி – தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி – என்று புதிய அறம் பாடியுள்ள பாரதியாUk; ஒரு மறவன்.
முடிவுரை:-
எல்லா நீதி நூல்களும் தருமம் செய், பொய் பேசாதே, தாய் தந்தையரை மதி, கடவுளை வணங்கு, தீயோருடன் சேராதே, சினம் காத்துச் செம்மையாக வாழ், இரக்கம் காட்டு, இன் சொல் பேசு, உயிர்க் கொலை நீங்குமின், பிறர்மனை அஞ்சுமின் போன்ற அடிப்படைத் தத்துவங்களைப் பேசுகின்றன. சாதாரணமாகத் தமிழன் இரங்குமனம் கொண்டவன். எனவே, இவைகள் அனைத்தும் அவர்கள் மனங்களிற் சென்று பரவி நின்று ஆற்றுப்படுத்தி அவர்களை மனித நேயத்துடனும,; அறநெறியுடனும் வாழ வழிவகுத்துள்ளன. இதனால் அவர்களும் மனித உரிமையை மதித்து மனித நேயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதை மீறி நடக்க அவர்களால் முடியவில்லை. ஏனெனில் அவர்கள் மனித நேயத்தில் ஊறி வாழ்ந்து கொண்டிருக்கப் பழக்கப்பட்டவர்களல்லவா! இதை நாமும் மெச்சிப் போற்றி மகிழ்வோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.