முன்னுரை
தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை. கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி. 1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.
வண்ணதாசனும் இயற்கையும்
சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார். ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழினி பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1
தலைவன் தலைவி ஆகியோரின் மனவுணர்வினைக் கருப்பொருட்கள் மீது ஏற்றி, அவற்றின் பின்னணியில் பாத்திரங்களின் ஆழ்மனப்பதிவைச் சங்க இலக்கியங்கள் அழகாக விளக்கின. இறையனாரின் குறுந்தொகைக் கவிதை
“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது, கண்டது மொழிமோ.
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே“2
“மயில் போன்ற அழகான பற்களுடைய அப்பெண்ணின் கூந்தலை விட அதிக வாசனையுள்ள பூ உள்ளதா? என்ற தலைவனின் கேள்வி, அழகிய இறக்கை உடைய வண்டினை நோக்கியே அமைகிறது. வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு மானுட வளர்ச்சிச் சிந்தனையோடு அமைகின்றன. “நான் இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டதெல்லாம் அதன் பிரமாண்டமும் மௌனமும் மட்டுமே“3 என்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் கருத்து வண்ணதாசனுக்குப் பொருந்துகிறது. கவிஞர் அறிவுமதியின் “கடைசி மழைத்துளி“ கவிதைத் தொகுதிக்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரை சுற்றுச்சூழல் சார்ந்த அவரது கருத்தியலை முன்வைக்கிறது. படைப்பாளியுடன் ஆய்வாளர். நிகழ்த்திய நேர் காணலில் “ரொம்பச் சமீபகாலக் கடிதங்களில்“ நான் என்னை ஒரு தாவரமாக உணர்கிறேன் என்றே பதிவு செய்துள்ளேன்“4 என்று வண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப்பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, பெய்தலும் ஓய்தலும் ஒளியிலே தெரிவது ஆகிய பத்து சிறுகதைத் தொகுதிகளிலும் வண்ணதாசனின் இயற்கை சார்ந்த பதிவுகளாகவே அமைகின்றன. வற்றாத ஜீவ நதி தாமிரபரணி, வெட்டப்படும் மரங்கள் அதிகாலைகளை அழகாக்கும் பூக்கள், வானில் சுதந்திரமாய் பறக்கும் பறவைகள், அடிக்கடிக் கனவில் வரும் யானைகள் இவைகளே வண்ணதாசன் சிறுகதைகளை அழகு செய்வன.
“வெளியேற்றம்“ சிறுகதையில் வீட்டுவேலை செய்ய வந்த சிறுமி யாரோ அங்கிருந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு வருந்துகிறாள். அவளது துடிப்பை வண்ணதாசன், “இது வெட்டப்பட்டு முறிய முறிய அவளுக்குள் இருந்து பறவைகளின் சப்தம் “சலார்“ என்று ஒரே சமயத்தில் வேட்டுக்கு அதிர்ந்து இறக்கையடித்துப் புறப்பட்டு, ஆனால் முடியாமல் முட்டுவது போலத் தோன்றியது”5 என்கிறார்.
வண்ணார்பேட்டையில் தாமிரபரணியின் வட்டப் பாறையை, முங்கிப் படுத்திருக்கும் யானையின் முதுகோடு ஆசிரியர் ஒப்புமைப்படுத்துகிறார்.
“யானை முங்கிப்படுத்திருப்பது மாதிரி வட்டப்பாறை இருந்தது“6 தாத்தாவின் முகத்தை விளக்க
“பசலிக்கொடி மாதிரி குளிர்ச்சியாக இருந்தது தாத்தா முகம்“7 என்றும் “டம்ளருக்குள் ஒரு புழுவைப்போலச் சேமியா கிடந்தது“8 சத்தமில்லாமல் ஓடுகிற நதியின் கரையில் நிற்கிற மாதிரி இரைச்சல் ஏதுமற்ற அலுவலகத்தில் நின்றான்”9 என்று பல உவமைகளைக் கையாண்டுள்ளார்.
வண்ணதாசன் சிறுகதைகளைச் செறிவாக்கப் பயன்படுத்தும் உவமைகளில் இயற்கை சார்ந்த உவமைகள் (34 சதவீதம்) முதலிடம் பிடிப்பதாக இவ்வாய்வாளர் தம் முனைவர்; தம் முனைவர் பட்ட ஆய்வேட்டில் நிறுவியுள்ளார்.
“சூரியன் அருகில் பறக்கிறவர்கள்“ கதையில் சூரியனுக்கு அருகே பறக்க ஆசைப்பட்டு எரிந்து போகிற “இக்காரஸ்“ எனும் கிரேக்கத் தொன்மத்தைப் படைத்துள்ளார்.
தாமிரபரணி, வண்ணதாசன் சிறுகதைகளின் மையப் புள்ளியாகத் திகழ்கிறது. “பெய்தலும் ஓய்தலும்“ கதைத் தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையில் “நதியும் மணலற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை அது தன் நீர்மையை மணலால் உச்சரித்துக் கொண்டு வந்தது. அள்ளப்பட்ட மணல், கலக்கிற சாயக் கழிவுகளில் மீன்கள் மூச்சுத் திணறுகின்றன. நீந்துகிற மீன்களையல்ல, அதிகாலையில் இறந்து ஒதுங்கியிருக்கிற மீன்களைப் பற்றியே இந்தத் தினத்துக் கவிதை இருக்க முடியும்.“10 மண்ணள்ளும் அசுர எந்திரங்களால் மொட்டையடிக்கப்படும் தாமிரபரணியின் தற்கால நிலையைப் படைப்பாளி வேதனையோடு பதிவு செய்துள்ளார்.
புறவுலகின் அதிர்வுகள் அவரது அக உலகை உலுக்கும்போது அதைப் படைப்பாக மாற்றுகிறார். 1984 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின், நாட்டில் நடைபெற்ற இனக்கலவரத்தில் இறந்துபோனோரின் சடலங்களை ஒப்புமைப்படுத்துகிறார். “பெயர் தெரியாமல் ஒரு பறவை“ கதையில், பெயர் தெரியாமல் இறந்து கிடக்கும் பறவையை வண்ணதாசன் இவ்வாறு வர்ணிக்கிறார்.
நாட்டில் நடைபெற்ற துயரமான சம்பவத்தைப் பறவையோடு இணைத்து வண்ணதாசன் சிறுகதையாகப் படைத்தார். “குழந்தைகளை மனிதர்களையெல்லாம் அடித்து இரவோடிரவாக இப்படி வாசல்களில் நிர்த்தாட்சண்யமின்றி எறிந்து போகிற சமீபத்திய இனக்கலவரங்கள் ஞாபகம் வந்தது. வயலில் அகோரமாய்ச் செத்துக் கிடக்கிற கிழவி, வரிசையாக வயிறூதிக் கிடத்தப்பட்டிருக்கிற சிசுக்களின் வரிசையை அதிகப்படுத்தி ஒருத்தன் கைகளில் ஏந்திவருகிற இன்னொரு மல்லாந்த குழந்தையின் ஊதின வயிற்றுத் தொப்புழ், இறந்து கிடக்கிற தன் குழந்தையின் உடலைக்கண்டு, அதனருகே உட்கார்ந்து அழுகிற தகப்பனின் கிழிந்த முகம், அப்படிக் கிழிந்த நிலையில் ஒரு கைத்துப்போன சிரிப்புப் போலப் புகைப்படத்தில் பதிவாயிருப்பது எல்லாம் கலந்து அந்த ஒற்றைப் பறவையாகக் குப்புறக் கிடந்தது”11
கல்யாண்ஜி கவிதைகளில் “இயற்கை“ சித்திரிப்பு
திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி மாணவராகப் பயின்றபோது சீட்டுக்கவிகள் எழுதிய டி.எஸ். கல்யாண சுந்தரம் என்கிற வண்ணதாசன், கவிதைகளை கல்யாண்ஜி எனும் புனைப்பெயரில் எழுதியுள்ளார். மொழியின் சுருக்கெழுத்தாகக் கல்யாண்ஜி கவிதைகள் படைக்கிறார்.
“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க
நவகவிதை“12
என்று கவிதைக்குப் பாரதி வகுத்த இலக்கணம் கல்யாண்ஜி கவிதைகளுக்குப் பொருந்துகிறது.
கல்யாண்ஜியின் கவிதைகள் ஆழமான சிந்தனைத்தளத்தில் சொற்சித்திரங்களாகக் கட்டமைப்பட்டுள்ளன. அழகியல் தன்மை மிகுந்தனவாக, இயற்கையைக் கொண்டாடும் தன்மையுடையனவாக அமைகின்றன. தாமிரபரணி மண்ணை விட்டுப் பிரிந்த பிரிவின் வருத்தமும், இயற்கை மீதான தாக்குதல் குறித்த வருத்தமும் அவரது கவிதைகளில் பதிவாகியுள்ளன.
“செப்பறைத் தேரிலும்
படியும்
சிமெண்ட் ஆலைப்புழுதி“13
என்று எழுதும் கல்யாண்ஜி, சிமெண்ட் ஆலையால் திருநெல்வேலி படும் பாட்டினைப் பதிவு செய்துள்ளார். இயற்கையின் மீது கல்யாண்ஜி தொடக்ககாலம் முதலே பாசம் கொண்டிருந்தார். அது காலப்போக்கில் வளர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அக்கறையாக மாறியது. வண்ணதாசன் 1966ஆம் ஆண்டு வ.உ.சி. கல்லூரியின் வணிகவியல் மாணவராகப் பயின்றபோது எழுதிய “அந்தி மனம்“ எனும் இயற்கை சார்ந்த கவிதையை ஆய்வாளர் தன் ஆய்வேட்டில் பதிவு செய்துள்ளார்.
“அழகுக் கவிதை செய அட்சரங்கள் கோர்த்தது போல்
அந்திக் கரைவானில் அஞ்சனத்தைக் குழம்பாக்கி
அள்ளிப் பரப்பி அங்கிங்கே விட்டெறிந்து
புள்ளி சேர்த்துப் புனைகின்ற கோலமென
வெள்ளிப் பிழம்பாய் வீசுகதிர் பாய்ந்துவரக்
கொள்ளி நுனியாகக் குருதிச் சிவப்பாக
பள்ளிச் சிறுபையன் பட்ட பிரம்படியால்
உள்ளங்கைச் செம்மை உருவேற்கும் ஒன்றாக
வானம் இருந்ததுகான்! வார்ப்பழகு கொண்டதுகான்!
மோனத்துள் நான், அழகில் மூழ்கியது பித்து மனம்!“14
அறுபதுகள் முதலே கல்யாண்ஜி அழகியல் கவிஞராக இயற்கைக் கவிஞராகத் திகழ்ந்ததை அறிய முடிகிறது. புலரி, கல்யாண்ஜி கவிதைகள், முன்பின், அந்நியமற்ற நதி, நிலா பார்த்தல், உறக்கமற்ற மழைத்துளி, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள், இன்னொரு கேலிச் சித்திரம் ஆகிய கல்யாண்ஜியின் எட்டுத் தொகுதிகளிலும் இயற்கை சார்ந்த அவரது மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைக் காணமுடிகிறது.
“நேரடி வானத்தில்
தெரிவதை விடவும்
நிலா அழகாக இருப்பது
கிளைகளின் இடையில்“15
என்று நிலாவைக் கவிஞர் வர்ணிக்கிறார்
“மார்கழி மாத அதிகாலையில் போனால்
பீர்க்கம் பூக்களையும் நட்சத்திரங்களையும்
நாமே எட்டிப் பறித்துக் கொள்ளலாம்.“16
கல்ணாஜி கவிதைகளில் இடம்பெறும் பூக்கள் நிறத்தாலும் மணத்தாலும் தோற்றத்தாலும் உள்ளார்ந்த ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. தமிழர் பண்பாட்டில் அகவாழ்விலும் புறவாழ்விலும் பூக்களே நிறைந்திருக்கின்றன. போர்ச் செய்திகளை அறிவிக்கும் ஊடகமாக வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, ஊழிஞை, நொச்சி போன்ற மலர்களைச் சங்க இலக்கியம் சொல்கிறது. அகப்பாடல்களிலும் பூக்கள் உள்ளுறையும் செய்திகளோடு அழகியல் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. கல்யாண்ஜி கவிதைகள் குறித்து வல்லிக்கண்ணன் கருத்து தெரிவிக்கும்போது, “தொடர்பே இல்லாத பல விஷயங்களைத் தொகுத்து வாழ்க்கையின் யதார்த்தத்தை சித்திரிக்கிற முயற்சிகளாக அவை உள்ளன. மனசின் அலை பாய்தல்களாக அழகுடன் சிதறிக் சிரிக்கும் சொற்சித்திரங்களாகப் பல கவிதைகள் விளங்குகின்றன. சொற்சித்திரங்களாக சிறுகவிதைகள் மிளிர்கின்றன. அவை எல்லாமே அழகை நேசிக்கிற, அன்பை ஆராதிக்கிற, மனிதத்தை மதிக்கிற மென்மையான உள்ளத்தின் இனிய உணர்வு வெளிப்பாடுகளாகும்.“17
முடிவுரை
இலக்கியம் வாழ்க்கையின் கண்ணாடியாக அமைகிறது. ஓர் உயர்ந்த இலக்கை நோக்கி மனிதனை அழைத்துச் செல்கிறது. மானுட வளர்ச்சிக்கான மதிப்பீடுகளைக் காலந்தோறும் வழங்கிக் கொண்டே இருக்கிறது. “நான் எல்லோரையும் ஏற்றுக்கொள்கிறேன். அவரவரின் பலங்களோடும் பலவீனங்களோடும்“ என்று கூறும் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் அன்பிலக்கியங்களாக அமைகின்றன இயற்கையைப் போற்றுதலே மானுட வளர்ச்சியின் முதல்படி என்ற கருத்தியலை வலியுறுத்துகின்றன. யாவற்றையும் இரசிக்கக் கற்றுத் தருகின்றன. கல்யாண்ஜியின் கவிதைகளில் வண்ணதாசனின் கதைகூறும் தன்மையும், வண்ணதாசன் சிறுகதைகளில் கல்யாண்ஜியின் கவிதைத் தன்மையையும் நம்மால் உணர முடிகிறது.
மரங்களை அவர் நேசித்தார்,
“பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொரமொரவென
மரங்கள் எங்கோ சரிய“18
“கூடுமானவரை இயற்கை மனிதர்களைப் பத்திரமான இடத்தில்தான் வைக்கிறது. நாம் எவ்வளவுதான் அவற்றைப் பத்திரக் குறைவான இடத்துக்குக் கொண்டு போனாலும்“19 என்கிறார் வண்ணதாசன் இயற்கையைப் பாதுகாக்கத் துடிக்கும் உயர்ந்த சிந்தனையே வண்ணதாசனின் மானுட வளர்ச்சிச் சிந்தனை.
குறிப்புகள்
1. தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள். 20.
2. குறுந்தொகை, பா.2.
3. எஸ். ராமகிருஷ்ணன், கதாவிலாசம், ப.105.
4. ச. மகாதேவன், வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பி.இ.ப.19.
5. வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.344.
6. மேலது. ப.953.
7. மேலது. ப.918.
8. மேலது. ப.250.
9. மேலது. ப.181.
10. வண்ணதாசன், பெய்தலும் ஓய்தலும், ப.7.
11. வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.358.
12. பாரதியார், பாரதியார் கவிதைகள், ப.28.
13. அறிவுமதி, கடைசி மழைத்துளி, ப.12.
14. ச. மகாதேவன் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு. ப.179.
15. கல்யாண்ஜி, இன்னொரு கேலிச் சித்திரம், ப.59.
16. மேலது, ப.71.
17. கல்யாண்ஜி, உறக்க மற்ற மழைத்துளி, பக.5-6.
18. கல்யாண்ஜி, தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், ப.64.
19. வண்ணதாசன், அகம் புறம், ப.86.
Dr.S.Mahadevan
Head of the Department, Tamil
Sadakathullah Appa College
Tirunelveli-11
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://mahabarathi.blogspot.com/