முகப்பு
ஒரு மொழிக்கு மொழித்தூய்மை குறித்த சிந்தனை எப்போது வரும்? பிறமொழித்தாக்கம் ஏற்படும்போது தானே! அஃது இராண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியருக்குத் தோன்றிற்று. தோன்றியதின் காரணம் அவர்கால மொழிச்சூழல் எனலாம். அவர் காலத்தில் வடக்கேயிருந்து வந்த சொற்கள் உட்புக முனைந்தன; முனைந்துகொண்டிருந்தன. இதனையறிந்த அவர் அதனை விடுக்க வேண்டும் என எண்ணினார். அது மட்டுமின்றி தம் காலத்திற்குப் பிறகும் பிறமொழித்தாக்கம் விரிந்து நிற்கும் எனவும் அறிந்திருந்தார் போலும். ஆதலின் மொழிக்கான தூய்மைக்கொள்கையை மொழிந்துள்ளார். இக்கொள்கை தமிழ் மொழியை மட்டுமே எண்ணி மொழிந்ததாகத் தெரியவில்லை. திராவிடமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வனவற்றிற்கும் அந்நிலை ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்தது போல் தோன்றுகிறது. அச்சிந்தனை அனைத்துத் திராவிட இலக்கண அறிஞர்களிடமும் காண முடிகின்றது.
தொல்காப்பியர் வித்திட்டது மொழித்தூய்மைக் கொள்கை. இச்சிந்தனை தெலுங்கு மொழிக்குரிய முதல் இலக்கணநூல் (ஆந்திர சப்த சிந்தாமணி) முதற்கொண்டே காணப்படுகின்றது. அச்சிந்தனை கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாலவியாகரணத்தில் விரிந்த நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுட்டிக்காட்டுவது இக்கட்டுரையின் தலையாய நோக்கம்.
தொல்காப்பியரின் மொழித்தூய்மைக் கொள்கை
வடசொல் கிளவி வடவெழுத் தொரீஇ (தொல்.சொல்.எச்.5)
என்பது தொல்காப்பியரின் மொழித்தூய்மைக் கொள்கை. இக்கொள்கை வடசொற்களைக் கடன்வாங்கும்போது வடமொழிக்கே உரிய எழுத்துக்களை நீக்கி விட்டு தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை இட்டுப் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. இக்கருத்தை உள்வாங்கிய மரபிலக்கணங்கள் தத்தம் காலத்து வழங்கிய வடசொற்களில் உள்ள வட எழுத்தை நீக்கி தமிழ் எழுத்துக்களை இடும் தன்மைகளைப் பதிவு செய்துள்ளன.
பாலவியாகரண மொழித்தூய்மைக் கொள்கையும் தொல்காப்பியத்தாக்கமும்
சின்னயசூரியின் பிறப்பும் பணிச்சூழலும் தமிழகமாக அமைந்தது. இவரின் இலக்கணப் படைப்பு பாலவியாகரணம். அன்று தொல்காப்பியர் வித்திட்ட அவ் விதையைச்(மொழித்தூய்மை) சின்னயசூரி அறிந்திருக்க வேண்டும். அதனாலேயே தம் தாய்மொழியாகிய தெலுங்கையும் தூய தெலுங்காக மீட்டெடுக்க எண்ணினார்போலும். மீட்டெடுக்கக் கூடிய வழிமுறைகளையும் பதிவு செய்துள்ளார். அப்பதிவில் கற்பாருக்குத் தெலுங்கு மொழிக்குரிய சொற்கள் இவை, வடமொழிக்குரிய சொற்கள் இவை என இனங்கண்டறிந்து விளக்கியுள்ளார். இஃது அவரின் முதல்படலம்(பரிச்சேதம்) முதற்கொண்டே காணலாகின்றது.
சின்னயசூரியின் மொழித்தூய்மைச் சிந்தனையை இரு நிலைகளில் காணலாம். ஒன்று: புதைநிலைச் சிந்தனை. மற்றொன்று: புறநிலைச் சிந்தனை. முன்னது இச்சொல் இவ்வாறாகத் திரிந்து வரும் அல்லது இவ்வெழுத்து இவ்வெழுத்தாகத் திரிந்து வரும் என்பது போல்வனவற்றைச் சார்ந்தது. பின்னது இச்சொற்கள் தூய தெலுங்கிற்கு உரியவை, இவ் எழுத்துக்கள் தூய தெலுங்கிற்கு உரியவை என்பனவற்றைச் சார்ந்தது. புறநிலைச் சிந்தனைகளைக் காட்டுவன: சங்ஞாபரிச்சேதம்: 4,9,10,19,20,21,22, சந்திபரிச்சேதம்: 14, தத்ஸமபரிச்சேதம்: 1-87, ஆச்சிகபரிச்சேதம்: 1-38. இவை தவிர்த்த பிற புறநிலைச் சிந்தனைகளாகக் கொள்ளலாம். இனிப் புறநிலைச் சிந்தனையிலிருந்து சில கருத்துக்கள் வருமாறு:
1. சமசுக்கிருதத்திலிருந்து தெலுங்கிற்கு வந்த எழுத்தக்கள்(சங்.4)
2. அ,ஆ,உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்களுடன் ஒன்றிவரும் ச, ஜ ஒலியுடைய
சொற்கள். (சங்.9).
எ.டு. சିିିலி, சாିப
3. சமசுக்கிருத பிராக்கிருதச் சொற்களுக்கு நிகரான மொழி தத்சமம் (சங்.19).
எ.டு. வித்3யா – வித்3ய.
4. சமசுக்கிருத பிராக்கிருதங்களிலிருந்து பிறந்த மொழி தத்பவம்(சங்.20).
எ.டு. அகாஸ2 – ஆகஸமு
5. திரிலிங்க தேசத்தில் வழங்கக்கூடிய சொற்கள் சமசுக்கிருத பிராக்கிருதத்துடன் எவ்விதத் தொடர்புடையனவுமல்ல (சங்.21).
எ.டு. ஊரு,பேரு,முல்லு
இவற்றுள் மூன்றாவதும் நான்காவதுமாகிய கருத்துக்கள் தொல்காப்பிய ‘வடவெழுத் தொரீஇ’ என்பதன் நேரடிச் சார்புடையவை. எவ்வாறு நேரடிச் சார்புடையவை என எண்ணத்தோன்றும் அதன் காரணத்தைப் பின்வரும் அட்டவணைத் தெளிவுபடுத்தும்.
வடசொல் தமிழாக்கம் தெலுங்காக்கம்
ராம: இராமன் ராமுఁடு3
லக்ஷ்மீ: இலட்சுமி லச்சி
விஷ்ணு: விட்ணு வெந்நுఁடு3
அக்3நி: அக்னி அகி3
வந: வனம் வநமு
ஸ்2ரீ: திரு ஸிரி
அஃதாவது ராம: என்பது வட சொல், அச்சொல்லைத் தமிழர் ராம: என்பதிலுள்ள விஸர்க(:) எனும் எழுத்தை நீக்கி அச்சொல்லின்முன் இகரத்தையும் பின் –ன் எனும் ஒற்றையும்(ஆண்பால் விகுதி) சேர்த்துப் பயன்படுத்துகின்றமையும், அதே சொல்லைத் தெலுங்கர் விஸர்க(:) என்பதை நீக்கி விட்டு உகரத்தையும் டு3 எனும் முதல் வேற்றுமை உருபையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றமையையும் கூறலாம்.
முடிப்பு
இதுவரை விளக்கப்பெற்றவையின் வழி தொல்காப்பியர் கூறிய பிறமொழிச் சொற்களைக் கடன்வாங்கும்போது தம் மொழிக்குரிய எழுத்துக்களை இடுகச் எனும் சிந்தனை தமிழ் மொழிக்கு மட்டுமின்றி தெலுங்கு மொழிக்கும் பொருந்தி வரும் என்பதையும், தொல்காப்பியத்தாக்கம் சின்னயசூரியிடம் காணப்பட்டதையும் அறிய முடிகின்றது எனலாம்.
துணை நின்றவை
தமிழ்
1. தெய்வச்சிலையார்(உரை.),1984, தொல்காப்பியம் சொல்லதிகாரம், தமிழ்ப் பல்கலைக் க்ழகம், தஞ்சாவூர்.
தெலுங்கு
2. பரவஸ்து சின்னயசூரி, 2002, பாலவ்யாகரணமு, பாலசரஸ்வதி புக் டிப்போ, ஹைதராபாத்.
3. புலுசு வேங்கட ரமணய்ய காரி (உரை), 1965, பாலவ்யாகரணமு (லகுடீக ஸஹிதமு), வாவிள்ல ராம்ஸ்வாமி ஸாஸ்த்ரிலு அண்ட் சன்ஸ், மதராசு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.