[எஸ் அகஸ்தியர் அவர்களின் நினைவையொட்டி (29.08.1926 -- 08.12.1995) அவரது ‘மானிட தரிசனங்கள்’ என்ற விவரணச் சித்திரத்திலிருந்து தரிசனம் 23 ஐத் தருகின்றோம். 'பதிவுகள்' இதழுக்கு அனுப்பியவர் அவரது மகள்: நவஜோதி யோகரட்ணம் - பதிவுகள் ]
லெக்ஷனெண்டா தமிழருக்க தமிழர்தான் போட்டியெண்டில்லை.
அந்த நசல் வந்து முடிஞ்சாலும் தமிழருக்கு, ‘நான்
உயர்ந்தவன், நீதாழ்ந்தவ’னெண்ட போட்டி பொறாமை
பெருமைதான் முதிசச் சொத்து. வீண் பெருமை பேசி
அநியாயமாக அழியிறதுக்கும் பந்தயம் கட்டுவினம்.
இவேதான், தமிழர் ஒற்றுமையா இருக்கவேணு’மெண்டு சும்மா
ஓயாமல் கத்துறது. இந்தப் புலுடா சிங்களச் சனத்துக்கும்
வடிவாத் தெரியும்.
யாழ்ப்பாண நகரசபைக் கோபுர முகப்பு வாசலை மருவிய வெட்டை மைதானம் சன நெருக்கடிக்குள் திமிலோகப்பட்டது. வட மாகாணக் கனதனவான்கள், அப்புக்காத்து புரக்கிராசியார், பேர்போன டாக்குத்தர்மாரும், நொத்தாரிஸ், உடையார், மணியம், விதானைமாரும், இந்திய ஆமை வாய்க்குள் அபின் திணித்துக் கடத்தல் வியாபாரம் செய்கிற பெரும் புள்ளிகள், நகைக் கடைக்காறர்கள், சம்மாட்டிமார், கத்தோலிக்கச் சுவாமிமார் என்று தங்கள் தங்கள் சீவியத்துக்காகத் தவம் செய்ய வந்தவர்களாட்டம் மேடையைச் சூழ்ந்து ஓர் அரண்மனை ஏவலாளர்கள்போல் புட்டுவங்களில் வீற்றிருந்தனர்.
முடங்கிய யாழ்குடா வேதக்காறருக்குள் கியாதி பெற்ற கலாநிதி பூந்தான் யோசேப்பு, நாரந்தனைச் செல்லையா, செம்பன் கமலப்பு, பாஷையூர் அருளானந்தம், நடிக கலாமணி சிலுவைராசா ஆகிய பெரும் நடிகர்களின் நாட்டுக்கூத்தைப் பார்க்க அள்ளுப்பட்டு வந்த சனம்போல் சபை சல்லாபித்துக்கொண்டிருந்ததை, நாங்களும் குசாலாக இருந்து முழுக் கிருத்தியங்களையும் வெகு நுட்பமாக ‘நோட்’ பண்ணக்கொண்டிருந்தோம்.
கழுத்தில் விழுந்த மாலைகளைக் கழற்றி மேசையில் குவிக்கவே மந்திரி ஜீச்சி அப்புக்காத்து ‘நல்லாக் களைச்சு’ப் போனார். பெரிய மந்திரி சேனநாயக்கா பக்கம் அவரோடு அடிக்கடி குசு குசு’த்து ஏதோ பறைய, இடைக்கிடை பெரிய மந்திரி தேகங் குலுங்கச் சிரித்த அடங்காச் சிரிப்பில், நாங்களும் மனசார மனிசர்களாக ஆனந்த பரவசம் கண்டவர்கள்சாடை குதூகலித்திருந்தோம். ஆயினும், எங்களை ஆரும் மனிசர் கணக்காய் மருந்துக்கும் மதித்ததாகத் தெரியவில்லை. ஆனால், பொலிஸ் றாலாமிகள் எங்களையே வெருட்டுவதுபோல் எங்களில் ‘நோட்டம்’ விட்டுக்கொண்டிருந்தனர்.
எப்போதும் யாழ்ப்பாணத்தை வாட்டி எடுத்தச் சுருட்டி வைத்துச் சுகம் விசாரிக்கும் கிறுதாச் சண்டியர் பட்டாளங்களை அந்த வட்டாரத்தில் அப்போது காணவில்லை. ‘அவேயும் வந்திருக்கலாம்தானே’ என்று சலித்தது என் மனம். கூத்துக்குள்ளே கோமாளியாக எங்கேயும் சஞ்சரிக்கும் இந்தப் ‘புண்ணயசீலர்’களைக் காணாமல் என் மனசு ஆசுவாசப்பட்டதை நினைக்க எனக்கே விநோதமாகத் தெரிந்தது.
இந்த மன அரிப்பை நான் காக்கொத்து ரத்தினம் காதில் போட்டேன்.
அவன் நமட்டிச் சிரித்துவிட்டு, ‘அவெ கப்பம் வேண்டுற கடையளெல்லாம் இண்டைக்கு இந்த கூட்டத்துக்காகப் பூட்டியிருக்கும். அதோட இஞ்ச அஞ்சடுக்கில சந்திக்குச் சந்தி பொலிஸ் நிக்குது. அதுதான் அந்த மனுக்கள் தலைமறைவாயிட்டினம். இதுதான் சங்கதி’ என்றான்.
‘லெக்ஷன் கூட்டங்களுக்கு அள்ளுப்பட்டு வராத பொலிசு, வரவேற்புக் கூட்டத்துக்கு ஏன் இப்படிப் பட்டாளமாக வருவான்?’ என்று எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது.
இதை நிவர்த்தி செய்ய, ‘விஷயம் தெரிஞ்ச பெரிய ஆக்கள் ஆரும் நிற்கினமா?’ என்று எட்டிப் பார்த்தேன்.
சாம் சபாபதிப் புரக்கிராசியார் பள்ளங்காட்டுக் கடவைக்குள் கள்ளமாக வந்து ‘தொடுப்பு’ வைத்திருக்கிற குருசு மதவடி முத்தனின் மகள் பெற்ற சற்புத்திரனான ‘வெட்டிரும்பு’ சண்முகம், தகப்பனைப் போலவே மூக்கை அடிக்கடி உராய்ந்துகொண்டு ‘சிகரட்’ புகைத்துத் தள்ளிக்கொண்டிருந்தான்.
அவனிடம் இந்த விஷயத்தைத் துழாவினால், தகப்பன் ‘நீதிவான்களை புரட்டி எடுக்கிற புரக்கிராசியாக இருக்கிறவர்’ என்ற கெம்பரில் ‘சிலவேளை என்னைக் கொண்டுபோய் கோடு கச்சேரி பொலிசில மாட்டிக்கீட்டி விடுவானோ?’ என்ற நிர்க்கதியான பயமும் சாடையாக வந்தது. நானும் சுத்தத் தமிழ் பொடியனானபடியால் பயத்தைக் காட்டிக்கொள்ளாமல் கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான்.
‘லெக்ஷனெண்டா தமிழருக்க தமிர்தான் போட்டியெண்டில்லை. அந்த நசல் வந்து முடிஞ்சாலும் தமிழருக்கு ‘நான் உயர்ந்தவன். நீ தாழ்ந்தவ’னெண்ட போட்டி பொறாமை, பெருமைதான் முதிசச் சொத்து. வீண் பெருமை பேசி அநியாயமாக அழியிறதுக்கும் பந்தயம் கட்டுவினம். இவேதான், ‘தமிழர் ஒற்றுமையா இருக்கவேணு’மெண்டு சும்மா ஓயாமல் கத்துறது. இந்தப் புலுடா சிங்களச் சனத்துக்கும் வடிவாத் தெரியும். அதாலதான் தமிழருக்க வலு சுளுவாகச் சிங்களப் பொலிசும் காவலுக்கு வந்து நிக்குது. தமிழர் நினைக்கிறமாதிரி அவங்கள் மோட்டுச் சிங்களவரில்லை. ஆனபடியாத்தான் ஜே.எஸ்.ஸி படிச்ச பெரிய மந்திரி, சீமையில படிச்சுப் ‘பாஸ்’ பண்ணின இந்தப் பெரிய ‘கிறிமினல்’ அப்புக்காத்துவைக் கைக்குள்ள போட்டிருக்கிறார்’
சண்முகம் வெட்டிரும்பு காய்ச்சுகிற வெறும் பேயன்போல இருந்தாலும், ஆள் கொஞ்சம் விஷகாறன்போல் தெரிந்தான். ‘எங்கள் விடுதலைப் பட்டாளக் கூட்டத்தில் இவனையும் செர்த்துக்கொள்வமோ?’ என்று எனக்கு ஒரு யோசினை உதித்தது.
இந்த ‘ஐடியா’வை நான் கொக்கு டானியலுக்கு சொல்ல, கொக்கன் சொல்கிறான்: ‘இடம் ஏவல் பொருள் அறிஞ்சு கதைக்கத் தெரியாதபடியால்தான் கனபேர் மோட்டுத்தனமாக வில்லங்கத்தில் மாட்டுப்படுகினம். முதல்ல கூட்டத்தைப் பாப்பம். பிரச்சினை இருந்தாப் பேந்து பறைவம்’
கொக்கன் ஒரு சந்தர்ப்பவாதிபோல் கதைக்கிறான். உவனை நம்பேலாது போல கிடக்கு’ என்றான் காக்கொத்து.
ஆனால் கொக்கன் சொல்வதில் நியாயம் இருப்பதுபோல தெரிந்தது. வெள்ளடிச்சேவல் சண்டையும் இடம் ஏவல்; பொருள் தெரியாமல் நடந்த மோட்டுத்தனத்தாலதானே, பந்தயம் பிடித்துக் கோதாவில் இறக்கிய அருமந்த சாவல் இரண்டும் ஒன்றையொன்று வெல்லாமலே ஒரே சாவாய்ச் செத்துத் தொலைத்தன.
மனசு தராசு பிடிக்க, பெரிய மந்திரி சேனநாயக்கா எழுந்து யானை பிளிறுவதுபோல கனைத்துச் சிரித்துக்கொண்டு இங்கிலீசில் சிறு கவிதைபோல பேச்சை ஆரம்பிக்க, சனம் அவர் பேச்சைக் கேட்க முதலே கைகொட்டி ஆரவாரம் செய்த கோலம், ‘எந்த விஷயமும் தெரியாமலே எல்லாம் தெரிந்ததாக இவர்கள் வீணாகக் கரகோஷம் செய்யும் புத்திசாலிகள்’ என்று சொல்லவேண்டும்போல் தோன்றியது.
‘விஷயத்தைவிட வேஷத்துக்கு அடிமையாகும் மொக்குத்தனம் எங்களுக்குள் தலைகாட்டக்கூடாது’ என்ற போதம் அப்போதும் எங்களை உசார்ப்படுத்தியதால், சற்று அடக்கமாகவே இருந்து மந்திரி பேச்சை உன்னிப்பாக அவதானிக்கலானோம்.
யாரோ ஒரு பழைய மரபுக் கவிதைப் பண்டிதர் மொழி பெயர்க்கலானார்:
‘அவர் மாலை இவர் மாலை
எவர் மாலை என் கழுத்தில்
ஏற்றமுற விழுகிறதோ
அவரே என் அரிய நண்பர்.
எவர் மாலை அணிந்தாலும்
எவர்க்கு ‘வோட்’ அளித்தாலும்
ஆர் எவரோ அவரும் நண்பர்
அவர் இவர் என் ஜீ ஜீ என்பேன்’
மந்திரி வாய் ஜீ ஜீ என உதிர்த்தருளும் வேளை உணர்ச்சிவயப்பட்ட ஜனத்திரளின் அகோர இரைச்சல், அரை நிமிஷமாகியும் ஓயவில்லை. ஜீ ஜீ எழந்து கை கூப்பி, ‘மகா ஜனங்களே’ என்று விளிக்க, பண்டிதர் ‘டக்’கென்ற எழுந்து காதில் ஏதோ ஓதியபின், ஜீ.ஜீ., என் அன்பான தமிழ் மக்களே, கொஞ்சம் அமைதியாக இருந்து எங்கள் பெரிய மந்திரியார் பேச்சைக் கேளுங்கோ’ என்று சொல்லிவிட்டுச் சவண்டு அமர்ந்தார்.
6.12.2013.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.