அச்சுப் போன்ற தமிழை அடக்கமாக உச்சரித்து, நகைச்சுவை ததும்ப தமிழை ஈழமண்வாசனையுடன் சுவைக்கத்தந்தவர் புலவர் அமுது. லண்டனில் ‘மூதறிஞர்’பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டு சரித்திர வரலாறாகிய புலவர் அமுது, ஈழத்தின் பாரம்பரிய பண்டித மரபையும் பல்கலைக்கழகத்தின் நவீன இலக்கிய மரபையும் இணைத்த ஒரு பாலமாகத் திகழ்ந்தவர். இத்தகைய ஒரு பெரிய தமிழ் அறிஞரை நான் அவருடைய இளைய மகள் ஜெயமதியுடன் இளவாலைக் கன்னியர் மடத்தில் சிறுமியாகப் படித்த காலம் தொட்டே அறிந்திருந்தேன். எமது பாடசாலையின் அனைத்து முக்கியமான வைபவங்களிலும் வெள்ளை வேட்டி சால்வையோடு மெல்லிய உயர்ந்த இந்த அறிவுச்சுடரின் தலை பளபளக்க, கழுத்தை பூ மாலைகள் அலங்கரிக்க, முதல் வரிசையில் இருந்ததைப பார்த்திருக்கிறேன். லண்டனில் ஆண்டுதோறும் இடம்பெறும் இளவாலைக் கன்னியர் மடத்தின் பழைய மாணவிகளின் ஒன்றுகூடலின்போதுதான் இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
லண்டனில் நடைபெறும் அநேகமான தமிழ் இலக்கியக் கூட்டங்களில் நகைச்சுவையோடு இயல்பாகவும், வாகாகவும் தகவல்களைக் கலந்து தனிநடம் புரியும் இவரின் பேச்சில் லயித்திருக்கிறேன். இத்தகையதொரு தமிழ்மேதை பேசிய பல கலை, இலக்கியக் கூட்டங்களில் நானும் சிறு பேச்சாளியாக பங்குபற்றியிருக்கிறேன் என்று எண்ணும்போது தற்போது மிகுந்த பெருமை தருகின்ற விடயமாகின்றது.
‘அடைக்கலமுத்து மாஸ்டர் கண்டிப்பானவர்’ என்றுதான் அறிந்திருந்தேன். ஆனால் லண்டனில் கவிஞர் கந்தையா இராஜமனோகரன் தலைமை தாங்கிய ஒரு இலக்கியவிழாவில் செவாலியர் அமுதுப்புலவரோடு நானும் சேர்ந்து சென்று பேசவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவ்வேளை அவரது இல்லத்திற்கு நான் சென்றபோது அவரின் அறிவு கலந்த அன்பான பேச்சும், பாசம் மிகுந்த உபசரிப்;பும் என் தந்தையின் (அகஸ்தியர்) ஸ்தானத்தை உணர்த்தி நின்றது.
லண்டனில் 2005 ம் ஆண்டு ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டின்போது அவர் வந்து சிறப்புரை வழங்கியதை நான் பெரும் பாக்கிமாகக் கருதுகின்றேன். 2008 ம் ஆண்டிலும் எனது தந்தை எஸ். அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற நூல் வெளியீட்டின்போதுஇ தனக்கு சமூகமளிக்கமுடியாத சூழ்நிலையில் தனது மகள் திருமதி. ஜெயமதி செல்வராஜா மூலம் வாழ்த்துச் செய்தியை வழங்கியமை என்றும் என் நெஞ்சில் அகலாத ஒன்று.
2006 ம் ஆண்டில் திரு. நடாமோகன் மேற்பார்வையில் இயங்கும் லண்டன் தமிழ் வானொலியில் நான் தயாரித்து வழங்கும்; ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியின் ஐம்பதாவது சிறப்பு நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக புலவர் அமுதை நான் கண்ட நேர்காணல் வானொலி நேயர்களால் மிகுந்த பாராட்டைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவருடைய மேடைப்பேச்சாலும்சரிஇ வானொலி மற்றும் பத்திரிகை நேர்காணல்கள் ஆனாலும்சரி தனது மனைவி பிள்ளைகளை நினைவிருத்திப் பேசி தனது குடும்பப் பாசத்தை வெளிப்படுத்தியமையையும் கேட்டிருக்கிருக்கிறேன். குறிப்பாக Rev.Dr .சந்திரகாந்தன், Dr. வசந்தகுமார் ஆகிய அவரது அன்பு மகன்மார்களை இலக்கிய மேடைகளில் எல்லாம் பெருமையுடன் பேசுவதுண்டு.
ஈழத்து மண்ணின் மனக்குமுறல்கள் அவரின் இதயத்தை எரித்துக்கொண்டே இருந்தது.
லண்டனில் புலவர் அமுதுவுக்கு லண்டன்வாழ் தமிழ் அறிஞர்களால் வழங்கிய ‘மூதறிஞர்’ பட்டமளிப்பையும், அவரது தொன்னூறாவது அகவையையும் முன்னிட்டு மிகப் பெரியளவில் பாராட்டுவிழா இடம்பெற்றவேளை, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவேண்டுமென என்னை அவர் மேடைக்கு அழைத்ததை பெரும் பேறாகக் கருதுகின்றேன். அவ்வேளை ஜிரிவி தொலைக்காட்சியில் விசேட சந்திப்பொன்றை நான் அவருடன்; மெற்கோள்ளவேண்டுமெனக் கேட்டபோது, உடல்நிலை காரணமாக மறுத்துவிட்டார். மீண்டும் ‘சண்றைஸ் கிஸ்மத்’ வானொலியில் தொலைபேசி மூலம் நான் அவருடன் மேற்கொண்ட நேர்காணல் அவரை மிகப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதை நானறிவேன்.
பண்டிதர் கணபதிப்பிள்ளை, பண்டிதர் மகாலிங்கசிவம், இளமுருகனார் போன்றவர்களிடம் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் போன்ற வகுப்புக்களை மேற்கொண்ட புலவர் அமுது, பேராசிரியர் செல்வநாயகம் போன்ற இலக்கண மரபுகளை முறையாக அறிந்த சான்றோர்களிடம் தன்னைப் புடம்போட்டு தமிழ் அறிஞர்கள் வரிசையில் பதிவாகியவர். புலம் பெயர்ந்து லண்டனில் வாழ்ந்த காலங்களில் தன் தாய்நாட்டின் அவல நிலை கண்டு துவண்டவர். வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகம் கொடுத்தவர். புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களின் பெருமூச்சுக்களையும்இ அவலம் தோய்ந்த பார்வைகளையும் காலத்தின் காவியமாகப் பார்த்து வெம்பியதை நான் அவதானித்திருக்கிறேன்.
கனடாவில் பேராசிரியர் ஒருவரால் மறு பிரசுரம் செய்யப்பட்ட கல்லடி வேலனின் ‘யாழ்ப்பாண வைபர கௌவுடி’என்ற நூல் குறித்தும், லண்டனில் அச்சிடப்பட்ட ‘ஆறுமுகநாவலரின் இலக்கணச் சுருக்கம்’ தெளிவுரையோடு வெளிவந்தமை, மட்டக்களப்பில் வி.சி.கந்தையாப்பிள்ளை எழுதிய வரலாற்று நூல், ‘திருக்குறள் விளக்கமும் நூலும்’ அமெரிக்காவில் பல சான்றோர்களின் கருத்துச் செழிப்புடன் அழகிய நூலாக வெளிவந்திருப்பது, ‘இலங்கையில் சிறந்த தமிழ் சான்றோர்களை’த் தொகுத்து வித்துவான் செபரத்தினம் வெளியிட்டிருப்பது - இத்தகைய நூல்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் துணை புரியும் என … இப்படியாக மங்கி மறைந்துபோன நூல்கள் எத்தனையோ பிரசுரம் கண்டுள்ளன போன்ற பல தகவல்களை என்னுடன் அவர் இறுதியாகக் கலந்துரையாடியிருந்தார். இன்னும் இதுபோன்ற தமிழ்நூல்கள் எழுத்துருவம் பெறவேண்டும் என்ற அவரின் தமிழ்தாகமும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது.
பத்திரிகைக்கு அவருடனான நேர்காணலை எழுதும் நோக்குடன் தொலைபேசி மூலம் எனது பேச்சு அவரோடு தொடர்ந்தது… அவரது பேச்சில்; இழைப்பு தென்பட்டாலும் குரலில் கம்பீரம் தெரிந்தது. ஆனால் அதன்பின்னர் எனது தொலைபேசி அழைப்புக்கு பதில் வரவில்லை… அவர் லண்டன் ‘நோர்த்விக் பார்க் வைத்தியசாலையில்’ அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும், மிகுந்த சோகத்துடன் என் துணைவருடன் சென்று பார்வையிட்டேன்.
பண்டித மரபை அடியுற்றி விரிந்த ஆலவிருட்சத்தை இருண்ட வானம் வந்து இடைமறித்து, இழுத்துச் சென்றது ஒரு சோக வரலாறானது. இதயம் மிகவும் கனத்துக்கொண்டது. அவரின் இறுதி ஆசையை நான் நிறைவேற்றவில்லையே என்று உண்மையில் என் நெஞ்சம் விம்மியது. இருந்தும் அவருடைய நேர்காணலை நானே நிறைவு செய்திருந்தேன். அவரின் இறுதித் தமிழ் தாகத்தை அவருடைய அந்த இறுதியான நேர்காணல் புலப்படுத்தி நின்றது.
தமிழ் சான்றோர்கள் வரிசையில் மறக்கமுடியாத இடத்தைப் பிடித்துவிட்ட ‘புலவர் அமுது’ நம் மத்தியில் நிலைத்து வாழ்வார் என்பது திண்ணம். வாழ்க அவர் புகழ்! வளர்க அவர் தம் நல்ல நோக்கங்கள்!
31. 1. 2011.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.