"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". (குறள் 391)
எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் இரண்டாயிரம் ஆண்டுகளாக மாபெறும் ஏமாற்றத்தின் மனித இயலாமையின் மொத்த வடிவமாக விளங்கி வருவது இக்குறள். மனிதனைச் சுயச்சார்போடு சமூக இணைவோடு மனித வளத்தோடு வாழ்விக்க சமூக அமைப்புகள் முயன்ற அனைத்து முயற்சிகளும் நிறைவடையாத ஓவியமாக நிற்பதைக் காணலாம்.
இந்தியாவில் முதல் தேசிய கல்விக் கொள்கை பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் 1968 இல் கொண்டு வரப்பட்டது. பிறகு இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை பிரதமர் ராஜிவ் காந்தி ஆட்சியில் நீண்ட போராட்டங்களுக்குப் பின் 1986 இல் கொண்டு வரப்பட்டது. பின்னர் நரசிம்மராவ் காலத்தில் 1992 இல் பல திருத்தங்கள் செய்யப்பட்டது. உலக அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த 1990க்கு பிறகு இந்தியாவிலும் அதன் தாக்கம் பிரதிபலித்தது. உலகமயம். தனியார்மயம், தாராளமயம், என்ற கொள்கை உலகத்தின் அமைப்பு முறையில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. கல்வி சேவைத் துறையில் இருந்து வணிகத் துறைக்குத் தனது பார்வையைச் செலுத்தத் தொடங்கியது. இதன் பிறகு பெரும் பாய்ச்சலாக இந்தியா முழுவதும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும் மூலதனத்தில் கல்வியை வழங்க முற்பட்டன. பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் பரவலாக்கப்பட்டது. அரசு தனது கல்விப் பணியின் பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு தனியாரின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தியது. உயர் கல்வியின் கட்டுப்பாடுகள் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டன. பாடத்திட்டம் தயாரித்தல், தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல், கல்லூரிக்கு அனுமதி வழங்குதல் என்று தனது செயல்பாட்டின் மூலம் பொருளாதாரப் பலத்தைப் பெற்றுக் கொண்டது. இது மாபெரும் ஊழலுக்கு வித்திட்டது. பல்கலைக்கழகங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக மாற்றம் பெற்றன. 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பொறியியல், கலை அறிவியல், மருத்துவம் ஆகியவை தனியாரின் உள்ளங்கைக்குள் சென்று விட்டன. பெரும் லாபம் ஈட்டும் தொழிலாகக் கல்வி மாற்றப்பட்டது. கல்வியின் செயல்பாடு பரவலாக்கப்பட்டதோடு எளிமையாக்கபட்டது.
அந்த வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையின் எதிர்ப்பார்ப்புகளும் செயல்பாடுகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இஸ்ரோவின் தலைவராக இருந்த கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 32 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டவை ராமர் கோவிலும் புதிய கல்விக் கொள்கையும் தான்.
இந்தக் தேர்தல் அறிக்கை பல ஜனநாயகவாதிகளைத் தூங்க விடாமல் தவிக்கச் செய்தது. அவர்களின் கனவில் சமஸ்கிருத அசுரனின் வடிவம் பயத்தை உருவாக்கி வந்தது. அவர்களின் ஓயாத ஓலத்தின் மூலம் இன்று மும்மொழிக் கொள்கை சற்று ஆசுவாசத்தை அனைவருக்கும் அளித்துள்ளது. மேலும் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவமும் பேணப்பட்டுள்ளது. இம் மாறுபாடுகள் உலகலாவிய சிந்தனையின் தாக்கத்தில் ஏற்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.
பாரதிய ஜனதா கட்சி தனது ஆட்சியில் அமைச்சரவை செயலராக இருந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இப்புதிய தேசிய கல்விக் கொள்கை இன்று (29.07.2020) நடைமுறைக்கு வந்துள்ளது.
✓ நடைமுறையில் இருந்து வரும் 10 +2 என்ற முறை மாற்றப்பட்டு 5+ 3 + 3 + 4 என்ற அமைப்பைப் பெறுகிறது.
✓ 5 ஆம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
✓ 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படுகிறது. தற்போது 3 1/2 வயது இருந்து வருகிறது.
✓ 6 ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை மற்றும் தொழிற்
பயிற்சி பாடங்கள்.
✓ 8 ஆம் வகுப்பு வரையிருந்த கட்டாயக் கல்வி 12 ஆம் வகுப்பு வரை மாற்றப்பட்டுள்ளது.
✓ இணைவுப் பெற்ற கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாகவும் பிறகு பல்கலைக்கழகமாகவும் மாற்றப்படும்.
✓ ஒருங்கிணைந்த நான்காண்டு கல்வியியல் B.Ed படிப்பு வழங்கப்படும். (B.A, B.Ed ., B.Sc,B.Ed).
✓ உயர் கல்வியில் மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் ஓரிரு ஆண்டுகள் விடுப்பு எடுத்துக் கொண்டு கல்வியைத் தொடரலாம்.
✓ மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறும். (NTA)
✓ உயர் கல்வியில் சேருவோரின் சதவீதம் 26.3% யில் இருந்து 50% ஆக 2035 ஆம் ஆண்டுக்குள் உயர்த்துதல்.
✓ நாட்டின் மொத்த உற்பத்தியில் 6% கல்வி நிதி ஒதுக்குதல்.
✓ சிறப்பு கல்வி மண்டலங்கள்
✓ எம் ஃபில் படிப்பு நிறுத்தம்
✓ வெளிநாடுகளில் இந்தியக் கல்வி நிறுவனங்களின் கல்வி வளாகங்களைத் தொடங்குதல்.
✓IIT,IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக பல்துறை மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகங்கள் (MERU) அமைக்கப்படும்.
மேலும் இவற்றை நடைமுறைப்படுத்த பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை,
# ஒற்றை ஒழுங்கு முறை ஆணையம்
# தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வி வளர்ச்சி)
# மாதிரி பொது பல்கலைக்கழகம்
# சர்வதேச மாணவர் அலுவலகம்
# மத்திய கல்வி அமைச்சகம்
# இந்திய உயர் கல்வி கவுன்சில் (மாணவர் சேர்க்கை)
# தேசிய தேர்வுகள் முகமை (NTA) (நுழைவுத் தேர்வு)
இவ்வாறு 2019 ஆம் ஆண்டு பொது மக்களின் கருத்துக் கேட்பு பொது தளத்தில் 2 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டன. (குறிப்பாக மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படும் செயல்பாடு பற்றி) இப்போது பல மாறுதல்களுடன் இக்கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது சுட்டுரையில் " நீண்ட நாட்களாக மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, லட்சக்கணக்கானோரின வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். கல்வி நமது தேசத்தை ஒளி நிறைந்ததாகவும் வளம் மிகுந்ததாகவும் மாற்றட்டும். புரியன கற்றல், புதிய ஆராய்ச்சி. புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த சகாப்தத்தில் புதிய கல்விக் கொள்கை, இந்தியாவை அறிவுசார் மையமாக மாற்றும்" என்று கூறியுள்ளார்.
நரேந்திர மோடி அவர்களின் சிந்தனை எதிர்ப்பார்ப்பும் வள்ளுவரின் சிந்தனை எதிர்ப்பார்ப்பும் நீண்ட நெடிய கனவு நிலைகளாக மட்டுமே இருப்பதை மனித சமூக வாழ்வியல் யதார்த்தம் நமக்கு உணர்த்த தவறுவதில்லை. சமூகத்தில் மனித ஏற்றத்தாழ்வுகள் மிகவும் நிரப்பமுடியாத இடைவெளியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் இக்கல்விக் கொள்கை எந்த வகை மாற்றங்களை உருவாக்கும் என்று ஆழமாகச் சிந்திக்க வேண்டியத் தேவை ஏற்படுகிறது. 1986 யில் உருவாக்கப்பட்ட நோக்கம் மேட்டுக்குடி மக்களின் கனவுகளுக்கு அடிப்படையாகவும் பரந்த உழைக்கும் மக்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்ததைப் போல இக்கல்விக் கொள்கை மாறாமல் இருக்க சில கூறுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூன்று வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புதல் என்பது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய செயலாக உள்ளது. நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சுமையில் இருந்து விடுபடுவதாகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் கீழ் நடுத்தர வர்க்கம், உழைக்கும் மக்கள் இதனைச் செயல்படுத்துவது என்பது நடைமுறை சிக்கல்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதை உணரலாம். மூன்று வயதில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் அடிப்படை கட்டமைப்பு இந்திய கிராமச் சமுகத்தில் பெரும்பாலும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.
மாணவர்களுக்கு காலை உணவும் மதிய உணவும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது சிறந்ததாகும். ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல் சொல்லி மாளாது. உணவு தரமாகவும், உரிய நேரத்தில் வழங்கப்படுதலும், உணவு பரிமாறுதலில் கவனமும் மிகவும் உளவியல் சார்ந்த கூறுகளைக் கொண்டது. இளம் சிறார்களின் மன வளத்தைப் பாதிக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இக் கல்வி முறை நோய்க்கூறு கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கி விடும் ஆபத்து இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு NCERT க்கு வழங்கப்பட்டுள்ளது. NCERT உருவாக்கும் பாடத்திட்டம் உலகிலேயே சிறந்த அறிவார்ந்த பாடத்திட்டமாகவே இருந்தாலும் சமூக பொருளாதார சாதிய மத ஏற்றத்தாழ்வுகள் கொண்ட மேடு பள்ளமான ஒரு சமூகத்தில் இது சமமான விளைவை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. அது மட்டுமல்லாமல் இது அறிவு ஏற்றத் தாழ்வை மேலும் அதிகரிக்க உதவுமே அல்லாமல் சமச்சீர் வளர்ச்சிக்கு வித்திடாது. நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது பல முன் தயாரிப்புகளை எதிர்நோக்கி இருக்கிறது. முதலில் சமூக பொருளாதார ரீதியில் ஒரு பொது நிலை சமூகத்தை நாம் உருவாக்கியிருந்தால் இது போன்ற ஒற்றைத்தன்மை கல்வி முறை பலன் தரக்கூடியதாக இருக்கும். ஆனால் உச்ச வளர்ச்சியும் உச்ச வீழ்ச்சியும் கொண்ட எதிர் எதிர் துருவங்கள் அமைந்துள்ள சமூகத்தில் புதிய கல்விக் கொள்கையின் பாடத்திட்டம் ஒருவருக்கு வரப்பிரசாதமாகவும் மற்றவர்களுக்குச் சாபமாகவும் அமைந்துவிடக் கூடும்.
அரசியல் சமூக பொருளாதார சாதிய மத ஏற்றத்தாழ்கள் சிக்கல்கள் கவனத்தில் கொள்ளப்படாத எந்தப் புதிய கல்விக் கொள்கையும் ஒட்டு மொத்த சமச்சீரான சமூக அறிவுசார் வளர்ச்சிக்கு வித்திட வாய்ப்பே இல்லை. 2020 ஆம் ஆண்டோ, 2047 இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டோ வந்தாலும் எந்த மாற்றமும் இல்லாத ஒரே எதிர்ப்பார்ப்பை முன்வைக்கக் கூடிய விளைவையே ஏற்படுத்தக் கூடும்.
இன்னும் ஐம்பது ஆண்டுகள் சென்ற பிறகும் வள்ளுவனைத் தாண்ட முடியாத சமூகமாகத் தான் நாம் " கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" (குறள் 391) என்று சொல்லிக் கொண்டிருக்க மட்டுமே அதிக வாய்ப்புள்ளது.
- முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ,ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..