கடந்த சில நாட்களாக முகநூலில் , இணையத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த துன்பம் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் பெயர் எழில்வேந்தன் கோணேஸ்வரி . முன்னாள் விடுதலைப்புலிப் போராளி. இவரது சகோதரர்களும் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி மரணித்தவர்கள்., இவரது கணவரும் முன்னாள் புலிகள் இயக்கத்துப் போராளி. அவர் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களிலொருவர். புலிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் இவரது சகோதரர் ஒருவர் அழகரட்ணம் என்பவருக்கு ரூபா 28 இலட்சம் பணம் கொடுத்து வாங்கிய காணியில் இவர் வாழ்ந்து வருகின்றார். ஆனால் அக்காணி அக்காலத்தில் முறையாக அரச காணிப்பதிவேட்டில் பதியப்படவில்லை. இவ்விதமான சூழலில் வாழ்ந்துவரும் இவர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். செஞ்சோலையில் வாழ்ந்து வந்தவர். வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விட்டது இவருக்கு.
தற்போது இவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? இவர் வீடு அழிக்கப்பட்டு , தாக்கப்பட்டு மருத்துவ மனையிலிருக்கின்றார். காரணம்? இவர் குடியிருக்கும் காணி சட்டரீதியாக இவருடையது அல்ல. ஆனால் இக்காணிக்கு இவரது சகோதரர் அன்று ரூபா 28 இலட்சம் கொடுத்ததாக இவர் குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கைநெற் இணையத்தளச் செய்தின்படி இவருக்கு ஏற்பட்ட நிலைமைக்குக் காரணம்:
இவர் சில வருடங்களுக்கு முன்னர் உதவி கேட்டு சிறீதரன் பா.உறுப்பினரிடம் சென்றிருக்கின்றார். அவர் வேழமாலிகிதன் என்பவரை இவரது இருப்பிடம் சென்று இவரது நிலையை அறிந்து வரச் சொல்லியிருக்கின்றார். அவ்விதம் சென்று இவரது நிலையை அறிந்து கொண்ட வேழமாலிகிதன் தான் சிறீதரனிடம் இவரது நிலையை எடுத்தியம்புவதாகக் கூறியுள்ளார். ஆனால் அன்றிரவே பத்து மணியளவில் இவரை அழைத்து தங்கச்சி உணவுக்கு என்ன செய்தீர்கள்? தான் கொத்துரொட்டி வாங்கி வருவதாகக் கூறுகின்றார். இவரது கூற்றுப்படி (இலங்கைநெற் தளத்தில் வெளியான செய்தியின்படி) இவர் அவ்விதம் வேழமாலிகிதன் இரவில் அழைத்துக் கொத்துரொட்டி கொண்டு வருவதாகக் கூறியதையிட்டுச் சந்தேகம் அடைகின்றார். வேழமாலிகிதன் தவறான எண்ணத்தில்தான் அச்சமயம் அழைத்ததாக இவர் எண்ணுகின்றார். அதன் விளைவாக அயலவரிடம் அது பற்றிக் கூறி பாதுகாப்புக் கேட்கின்றார். இதனால் தன் பெயருக்குக் களங்கமேற்படுத்திய இவரின் மேல் ஆத்திரம் கொண்ட வேழமாலிகிதன் அன்றிலிருந்து இன்றுவரை இவருக்குத் தொல்லைகள் கொடுக்கின்றார். காணியின் முன்னாள் உறுப்பினர் அழகரட்ணத்துடன் தொடர்புகொண்டு இக்காணி இப்போது ஒரு கோடி வரையில் செல்லுமென்று கூறிச் சட்டத்தின் துணையுடன் இவரைக் கலைக்கின்றார். இருந்த வீட்டையும் சிதைத்து விடுகின்றார்.
உண்மையில் வேழமாலிகிதன் தவறான எண்ணத்தில்தான் அன்று இரவு கொத்துரொட்டியுடன் வருவதாக அழைத்தாரா என்பது தெரியாது. இவர் அவ்விதமே நினைத்து அவர் மேல் களங்கம் ஏற்படுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தால் வேழமாலிகிதன் இவ்விதம் நடந்துகொண்டாரா என்பதும் தெரியாது. உண்மையில் வேழமாலிகிதன் இவருக்கு உதவுவதற்காகக் கூட அழைத்திருக்கலாம். இவரது நிலைகண்டு வருந்திக்கூட அவ்விதம் அழைத்திருக்கலாம். இவ்விடயத்தில் சரியான உண்மை, பொய் விரிவான விசாரணையில்லாமல் தெரிய வராது. ஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பால் முக்கியமான விடயம்: இப்பெண் தனித்துக் குழந்தைகளுடன் வாழ்க்கையில் போராடி வருமொரு பெண்.ஏற்கனவே மக்களுக்காகப் போராடியவர் இன்று தனித்து ஆதரவற்ற நிலையில் குழந்தைகளுடன் வாழ்க்கைச் சவால்களையெதிர்த்துப் போராடி வருகின்ற ஒருவர். உண்மையில் இவர் வேழமாலிகிதன் எண்ணம் உண்மையாகவிருந்திருக்கும் பட்சத்தில் இவர் தவறாக எண்ணி அவர் மேல் களங்கமேற்படுத்தியிருந்தால் கூட வேழமாலிகிதன் இவ்விதம் ஆத்திரப்பட்டுச் செயற்பட்டிருக்கக் கூடாது. இவருக்கு உதவி செய்வதுதான் அவரது எண்ணமாகவிருந்திருக்கும் பட்சத்தில் இவர் அவ்விதம் சந்தேகிப்பதற்குரிய நியாயத்தினைக் கவனத்திலெடுத்து இவருக்கு உதவியிருக்க வேண்டும். ஏற்கனவே ரூபா 28 இலட்சம் கொடுக்கப்பட்ட இவர் வாழும் காணியை முறையாகப் பதிவு செய்ய இவருக்கு உதவியிருக்க வேண்டும். இவரது காணியின் மதிப்பு இன்று ஒரு கோடியென்றால் இவரது அண்ணன் அன்று இக்காணிக்குக் கொடுத்த ரூபா 28 இலட்சத்தின் மதிப்பும் இன்று ஒரு கோடிதான். அன்று ரூபா 28 இலட்சம் பணத்தை இக்காணிக்கு வாங்கியவர் இன்று இக்காணியை மீண்டும் வாங்க விரும்பினால் இவருக்கு ஒரு கோடி கொடுத்துத்தான் வாங்க வேண்டும். அதுதான் நியாயம்., நீதி. இந்நிலையில் தனித்துக் குழந்தைகளுடன் போராடும் இப்பெண்ணை இவ்விதம் வதைத்திருக்கக் கூடாது.
நிலைமை இவ்விதம் ஆன நிலையில் கிளிநொச்சி பா.உ. சிறீதரன் இவ்விடயத்தில் தலையிட்டு இவரது நிலைமைக்கு ஒரு நல்ல தீர்வினைக் கொண்டு வருவாரென்று எதிர்பார்ப்போம். எனக்கு ஆச்சரியமான விடயமென்னவென்றால் .. சமூக ஊடகங்களில் பெண்களின் உரிமைகளுக்காக அடிக்கடி குரல் கொடுக்கும் எவருமே இப்பெண் விடயத்தைக் கவனிக்கவில்லையே. ஏன் என்பதுதான். மனித உரிமைகளுக்காக பொங்கியெழும் பல்வேறு அமைப்புகளையும் சார்ந்த நண்பர்களில் சிலரைத்தவிர வேறெவருமே இப்பெண்ணுக்காகக் குரல் கொடுக்கவில்லையே ஏன் என்பதுதான். உரிமைக்காக உணர்ச்சியுடன் பொங்குபவர்களால் உண்மைக்காகக் குரல்கொடுக்க முடியாதிருப்பதுதான் விந்தையிலும் விந்தை. ஒரு தாய் குழந்தைகளுடன் தனித்து வாழ்க்கைச் சவால்களை எதிர்நோக்கியிருக்கும் இச்சமயத்தில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமலிருக்கலாமல்லவா.
யாழ்தீபம் இணையத்தளம் இலங்கைநெற் தளத்தில் நவம்பர் 22, 2018 வெளியான செய்தியினை மீள்பிரசுரம் செய்துள்ளது. அதற்கான இணைப்பை இங்கு தருகின்றேன்: https://www.yarldeepam.com/news/39871.html