அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சன் அவர்கள் யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயரான செல்லன் கந்தையா அவர்களுடன் நடாத்திய நேர்காணலிது. இது பற்றி முகநூலில் காரசாரமாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் வெளிவந்திருப்பதால் இதற்கொரு முக்கியத்துவமுண்டு. இந்த நேர்காணல் பல விடயங்களை வெளிக்காட்டியுள்ளது. அவை:
* யாழ் முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் அரசியல் குருக்கள் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர்கள். உடுப்பிட்டி எம்.பி. சிவசிதம்பரம் பல வழிகளில் அவருக்கு உதவியுள்ளார். தனது பதவியைப்பாவித்து 3000 ரூபா கடனெடுத்துக் கொடுத்து உதவியுள்ளார். தமிழர் கூட்டணித் தலைவர்கள் பலர் தந்தை செல்வா, அமிர்தலிங்கமுட்படப் பலர் அவரது திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். தந்தை செல்வாவின் கையாள் என்று சொல்லக்கூடிய ஒருவர்தான் இவரது அண்ணர் தேவராசன். ஆலாலசுந்தரம், ஆனந்தசங்கரி போன்றவர்கள் எல்லோரும் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தந்தை செல்வாவின் ஈமக்கிரியைகளின்போது அவரது தலைமாட்டிலிருந்து விசிறிக்கொண்டிருந்தவர் இவரே. இவையெல்லாம் எவ்வளவுதூரம் அவர் கூட்டணியின் தீவிர ஆதரவாளராக இருந்திருக்கின்றார் என்பதைப் புலப்படுத்துகின்றன. அதுதான் கூட்டணித்தலைவர்கள் இவரிடம் காட்டிய நெருக்கத்துக்கு மிக முக்கிய காரணமாக எனக்குத்தோன்றுகின்றது.
* சிறுபான்மைதமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் பலரும் இவருக்குத் தெரிந்தவர்கள். ஆனால் அதிகம் பழகியதில்லை. அவ்வப்போது சந்தித்துள்ளார்கள். ஆனால் இவரது அரசியலில் அவர்களது பாதிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
* மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர், பெரிதாக வாசிப்புப் பழக்கமற்ற ஒருவர் , தொழிலாளியாக யாழ் மாநகரசபையில் சேர்ந்து வளர்ந்திருக்கின்றார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு யாழ் மேயராகவும் உயர்ந்திருக்கின்றார். ஆனால் அவ்விதம்
மேயரான பின்னரும் கூட இவர் நடந்தும் , இளைஞர்களின் உந்துருளிகளிலும் வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர் மாநகரசபை உறுப்பினர்கள் இவருக்கு வாகனம் வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி ,இலங்கை அரசிடமிருந்து வாகனமொன்றினைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள். அவ்வாகனத்தையும் இவரே நேரில் சென்று பெற்று யாழ்ப்பாணம் கொண்டு வந்திருக்கின்றார்.
* தான் அரசியலில் சேர்ந்ததுக்குக் காரணம் சிற்பான்மைத்தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்றுதான். யாழ் நூலகத்திறப்பு விழா நின்று போனதற்குக் காரணம் தான் அந்நிகழ்வில் பங்கு பற்றக் கூடாது என்பதற்காகத்தான். தன் பெயர் கல்வெட்டில் வரக்கூடாதுதான் என்பதற்காகத்தான். ஆனந்தசங்கரி அங்கு வருகின்றார் என்பதற்காகவல்ல என்று திடமாக நம்புகின்றார். ஆனால் அதுதான் உண்மையா இல்லையா என்பது வேறு விடயம். அது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நின்று விடப்போவதில்லை. ஆனால் முன்னாள் மேயர் அவர்கள் அவ்விதமே நம்புகின்றார். அவரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இந்நேர்காணல் இன்னுமொன்றையும் எடுத்துக்காட்டுகின்றது. சிறுபான்மைத்தமிழர்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக சிறுபான்மைத்தமிழரைப்பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அமைப்புகளுடனிணைந்து செயற்படவில்லை. அவர்களில் பலர்
கூட்டணியையே ஆதரித்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு பானையின் பதத்தை வெளிப்படுத்தும் ஒரு சோறு இந்நேர்காணல்.
மேலும் 2003 ஆம் ஆண்டு 'டெய்லி மிரரு'க்குக்கொடுத்த பேட்டியில் முன்னாள் மேயர் தங்களைத்திறக்க விடாமல் தடுத்ததற்கு தன் சமூகப் பின்னணிதான் காரணமென்று கூறியிருக்கின்றார். இதுவரையில் அவர் யாழ் நூலகத்துக்குள் காலடியெடுத்து வைக்கவில்லையென்றும் கூறுகின்றார். அதற்குக் காரணம் தன் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியென்று குறிப்பிடுகின்றார். தன் சமூகத்தைக் கேலி செய்யும் தினக்குரல் கேலிச்சித்திரத்துக்கும் காரணம் தான் பிறந்த சமூக அமைப்புதான் காரணமென்பதையும் ஏற்றுக்கொள்கின்றார். மேலும் தனக்குப்பின் பதவியேற்ற மாநகரசபை நிர்வாகம் தன் பெயர் அடங்கிய கல்வெட்டைப் அங்கு பதித்ததாகவும், தற்போதுள்ள மாநகரசபை அதனை நீக்கி விட்டதாகவும் குறிப்பிடுகின்றார். இதற்குத் தற்போதுள்ள மாநகரசபை நிர்வாகம் பதில் கூற வேண்டும். முன்னாள் மேயரின் மனத்தில் தன் காலத்தில் நூலகம் திறக்கப்படாதென்பதற்கான காரணம் தன் சமூகப் பின்னணிதான் என்பதுதான் உறுதியாகவுள்ளது. இல்லாவிட்டால் அவர் இப்போது நூலகத்துச் செல்லலாமே. என்னைப்பொறுத்தவரையில் அவரது பெயர் அடங்கிய கல்வெட்டைத் தற்போதுள்ள மாநகரசபை நிர்வாகம் நீக்கியதும் தவறானது. அரசியலுக்கு அப்பால் சிறுபான்மைத்தமிழ்ச் சமூகமொன்றினைச் சேர்ந்த மேயர் ஒருவர் என்னும் அடிப்படையில் அதனை நீக்காமல் விட்டிருக்கலாமென்றே தோன்றுகின்றது.
இந்நேர்காணலை எழுத்தாளர் பெளசரும் முகநூலில் பகிர்ந்திருந்தார். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் ப.ஶ்ரீரங்கன் "இதைக் கூர்மைபடுத்தி நம்மைப் பிளந்தவர்கள்,தற்போது தமிழ்பேசும் வட மாகாண மக்களைப் பிளந்து ,நம்மை மேலும்
சிதறடிக்க எடுக்கும் ஆயுதம் 'சாதியப்பாகுபாடு—சாதிய ஒடுக்குமுறை' என்ற மிகப் பயங்கரமான சூழ்ச்சிமிக்க ஆயுதமாகும்" என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே பிரதேச வேறுபாடுகளைக் காரணமாக வைத்து, வடக்கு,கிழக்காகப்பிளந்தவர்கள் இப்போது , வட மாகாணத்து மக்களைச் சாதி ரீதியாகப் பிளக்கப்போகின்றார்கள் என்று ஶ்ரீரங்கன் அச்சப்பட்டிருந்தார்.
இந்தியாவிலுள்ளதைப்போல் இலங்கையில் சிறுபான்மைத்தமிழரின் பிரச்சினைகள் கடுமையாக இல்லாவிட்டாலும் இன்னும் உள்ளது. அந்தப்பிளவுகள் அவ்வப்போது வெளியே தெரியத்தான் செய்கின்றன. அதன் ஒரு விளைவுதான் ஆலயத்தேரை இராணுவத்தினர் இழுத்தது.
இவ்வகையான தீண்டாமைப்பிளவுகளைக்காட்டி ஏனையோர் பிளவுபடுத்தாமலிருக்க வேண்டுமென்றால், இவ்விதமான பிரச்சினை நம்மவர் மத்தியிலிருந்து முற்றாகக் களையப்பட வேண்டும். அதற்கு ஒவ்வொரு முறையும் சிறுபான்மைத்தமிழருக்கு அநீதி இழைக்கப்படுவதற்கெதிராக அனைத்துத் தமிழ் மக்களும் குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும். அவ்விதம் செய்வதோடு நின்று விடாமல் தீண்டாமைக்கெதிராக அரசியல்ரீதியில் கடுமையான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்விதம்
செய்தால் அனைவரும் ஒன்று என்று எண்ணும் நிலை வரும். இல்லாவிட்டால் இருக்கும் பிளவுகளை மேலும் பிளவுபடுத்த எதிரான அரசியல் சக்திகள் நிச்சயம் முயற்சி செய்யும்.
இங்கு எதிர்வினையாற்றுபவர்கள் தர்க்கப்பண்புடன் அவற்றையாற்றுவார்கள் என்று நம்புகின்றேன். இப்பதிவு நண்பர்களுக்கிடையிலானது. எதிரிகளுக்கிடையானதல்ல.
முனைவர் செல்லத்துரை சுதர்சன் முன்னாள் மேயருடன் நடாத்திய நேர்காணல்: https://www.youtube.com/watch?v=qdHyALlJA2w&feature=youtu.be&fbclid=IwAR20p8OuVj8zJXZuHZlKZNAWKWaIw8TSzhEkEPdYNMgQtVOoyi53Vy2R0uQ