[அக்டோப்ர் 22, 2011] இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று சனிக்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்புடைய விடயங்கள்திமுக பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா முதல், திமுக எம்.பி. கனிமொழி வரை 17 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிரிமினல் சதித்திட்டம், நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுதவிர, இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 409-ன்படி, கிரிமினல் நம்பிக்கை மோசடிப் பிரிவின் கீழும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்கீழ் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும்.
குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இனி இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 11-ம் தேதி துவங்கும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ராசாவுடன், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே. சந்தோலியா, ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள், ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீதும் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கலைஞர் தொலைக்காட்சிக்கு குசேகான் ரியால்டி மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் மூலமாக, டைனமிக்ஸ் ரியால்டி நிறுவனம் வழங்கிய 200 கோடி ரூபாய், நியாயமான வர்த்தகப் பரிவர்த்தனை இல்லை என்றும், மதிப்புமிக்க ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு கைமாறாகவே அத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் குற்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.நீதிமன்றச் சூழலில் பெரும் பரபரப்பு இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதை ஒட்டி, நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள், திமுக ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் காலை 10 மணிக்கு முன்னதாகவே பெருமளவில் கூடியிருந்தார்கள். வழக்கத்துக்கு மாறாக, கூடுதலாக போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். ஆனால், வழக்கம்போல 10 மணிக்குத் திறக்கப்பட வேண்டிய நீதிமன்ற அறை திறக்கப்படாமலே இருந்தது. 11 மணி ஆகியும் திறக்கப்படாததால், ஒருவிதமான பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துவிட்டு, திமுக தலைவர் கருணாநிதி, தனது மகள் கனிமொழியைப் பார்க்க நேரடியாக நீதிமன்றத்துக்கு வருவதாக தகவல் கிடைத்ததும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் தான் அப்போது வந்தார். சோனியாவின் வீட்டிலிருந்து நேரடியாக நீதிமன்றத்துக்கு அதே வாகனத்தில் வந்து, ராசாத்தி அம்மாளை இறக்கிவிட்டு, நீதிமன்றத்துக்குள் வராமல் கருணாநிதி தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார்.
ராசாத்தி அம்மாள் வந்த பிறகு, 11.45 மணிக்கு நீதிமன்ற அறை திறக்கப்பட்டது. அதையடுத்து, பெரும் கூட்டம் முந்தியடித்துக் கொண்டு உள்ளே சென்றது. அதுவரை, லாக்கப் அறையில் வைக்கப்பட்டிருந்த ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும், அப்போதுதான் உள்ளே அழைத்து வரப்பட்டார்கள். முதலில் நீதிமன்ற அறைக்குள் இருக்க வேண்டிய அவர்கள், போலீசாரின் கடும் முயற்சிக்குப் பிறகே உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்கள். அத்துடன், கடும் கூட்டத்தால், சிறையில் இருந்து கொண்டுவரப்பட்டதற்கான வாரண்ட் புத்தகங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள்.
நீதிபதி ஓ.பி. சைனி, குற்றங்களைப் பதிவு செய்தபோது, ராசாவின் வழக்கறிஞர் நீதிபதியிடம் ஆவேசமாகப் பேசினார். அது அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இன்னொரு புறம், கனிமொழி மீது 409-வது பிரிவு உண்டா இல்லையா என்று வழக்கறிஞர்களுக்கிடையிலேயே பெரும் குழப்பம் ஏற்பட்டது. அப்போது கனிமொழியின் அருகில் அமர்ந்திருந்த அவரது தாயார் ஏதும் புரியாமல் பார்க்க, அவருக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் கனிமொழி
http://www.bbc.co.uk/tamil/india/2011/10/111022_2gchargesframed.shtml